முன்னுரை அன்றாடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், கேட்டும் படித்தும் அறியும் செய்திகள் ஆகியவற்றின் தூண்டலிலேயே இந்தப் புதினம் உருவாகி இருக்கிறது. அந்நாள், ‘மிஸ் மேயோ’ என்ற பெண்மணி இந்திய நாட்டில் ஓர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டாள். இந்திய மக்கள் தன்னாட்சி செய்யத் தகுதியானவர்கள் அல்ல என்று தீர்ப்புக் கூறுவதற்காக பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்ததன் பயனாகவே அந்தப் பெண்மணி அந்த ஆய்வை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த அம்மையார் ஓர் அறிக்கையும் கொடுத்தார். இந்தியப் பெண்களின் குடும்ப, சமூக நிலை அந்த அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டு, வெளிச்சமாக்கப்பட்டிருந்தது. அன்றையச் சிறுமைகள் அடியோடு அகன்றுவிட பெண் புதிய சமுதாயத்தின் உரிமைமிகுந்த பிரஜையாகியிருக்கிறாளா? அரசியல் சாசன உரிமையில் இவள் ஆற்றல் மிகுந்த சமத்துவம் எய்தியிருக்கிறாளா? இந்த வினாக்கள் இன்னும் வினாக்களாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை. அந்நாட்களில் மூன்று வயசிலும் நான்கு வயசிலும் பெண்ணும் பிள்ளையும் திருமண பந்தத்தில் பிணைக்கப் பெற்றார்கள். நான்கு வயசுப் பையனுக்கு ஓர் இரண்டு வயசைப் பிணைத்து, “குழந்தாய், இவள் உன் சொத்து; உன் உரிமை; உனக்குள் இவள் அடக்கம்...” என்று தாரை வார்த்துவிடப் பட்டாள். அவன் பெரியவனாகிப் போய், ‘இவள் கறுப்பு, அழகில்லை’ அல்லது ஏதேனும் காரணம் காட்ட அவசியமில்லாமலே தள்ளிவிடலாம். அல்லது ‘நீ புழுக்கச்சியாய் உழைக்கத்தான் உரிமை பெற்றவள்; மனைவி என்ற உரிமைக்கு - அதாவது பிள்ளை பெற்றுத் தர வேறு ஒருத்தியை உன் முன்னே கொண்டு வைத்துக் கொண்டு உன்னை இகழ்வேன்’ என்றும் வதைக்கலாம். பெண்டாட்டியை அடிப்பது ஒரு குற்றமே இல்லை; இதைப் போய் போலீசில் சொல்வதா என்று இன்றைய ‘காவல்துறையே’ இதைக் குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்நாள் இதைப் பற்றிய உணர்வே இருந்திருக்கவில்லை. என்றாலும், அந்நாளைய நியமங்களில், ‘அவள் ஓர் உடமை’ என்ற நிலையிலும் சில தார்மிக நெறிகள் காப்பாற்றப்பட்டன. அந்த நெறிகளை மீறுவது ‘பாவம்’ என்று கருதும் பயம் இருந்தது. சின்னஞ்சிறு வயசில் திருமண உரிமை வந்தாலும், சாமானியக் குடும்பங்களிலும் அறம் சார்ந்த சில எல்லைக் கோடுகள் காப்பாற்றப்பட்டு வந்தன. கூட்டுக் குடும்பக் கட்டுக்கோப்புகள், அவற்றைக் கலகலக்கச் செய்யவில்லை. இந்நாட்களில், சாதி, மத, இன அடிப்படையில் மனிதரை மனிதர் நசுக்குவதையும் ஒடுக்குவதையும் தட்டிக் கேட்க, மனித உரிமை கோரும் இயக்கங்கள் உலகு தழுவியதாகவே செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படப் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த ‘மனித உரிமைகள்’ என்ற எல்லைக்குள் வராத, அல்லது நினைக்கப்பட்டு, சமுதாயப் பூர்வமாக ஒப்புக் கொள்ளப்படாத இனம், பெண் இனம் என்றால் தவறில்லை. ஏனெனில் அன்றிலிருந்து இன்று வரை பெண் உடல் பாரமாக, ஆணுக்கு இன்றியமையாத உரிமை கொண்டாடக் கூடிய ஒரு சாதனமாகவே நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறாள். இதை உணர்வுபூர்வமாக ஒப்புக் கொண்டு, தன்னை ஒருவனுக்கு உரிமையாக்குவதே பிறப்பின் லட்சியம் என்பதே இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருவிலேயே உருவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் ஓர் ஆணுக்கு இவளை உத்திரவாதமாக்கித் தீரும் கற்பு நெறி இவள் தன் உடல் மீது தானே உரிமை கொள்ள இயலாதபடி நெருக்கியிருக்கிறது. இந்திய மரபு, இவளைத் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுந்து, தன் மங்கலச் சின்னங்களான தாலி, பூ, பொட்டு, மெட்டி, வளையல் என்ற உயிரற்ற பொருட்களுக்காக உயிரையே பணயம் வைக்கப் பயன்படுத்தியிருக்கிறது. இவளுடைய அறிவுக்கண் இந்த உருவாக்கல்களில் குருடாக்கப்பட்டிருக்கிறது எனலாம். மருண்ட விழிகள் அழகு; மெல்லிய இடை அழகு; ஒல்கி ஒசிந்து துவண்டு விழும் மென்மை அழகு; அபயம் என்று ஓர் ஆணிடம் தஞ்சம் அடைவது அந்த அழகின் எல்லை என்றெல்லாம் உடலை வைத்தே அவள் சிறப்பிக்கப்படுகிறாள். இந்நாட்களில் அவள் கருப்பைச் செயல்பாடு கூட கொண்ட ஆணையும் தாண்டி, சமுதாய, தேசிய நலனுக்காக, அரசு உரிமைக்கு விட வேண்டியதாகப் பரிணமித்திருக்கிறது. எனவே, திருமணம், இல்லறம் என்ற கூட்டுக்குள்ளும், கூட்டுக்கு வெளியேயும் இந்நாள், எந்தத் தார்மிக உணர்வுகளுக்கும் உட்படுத்தப்பட முடியாத ஆதிக்க சக்திகள், இவளை உடல் ரீதியாகக் குலைப்பது, சர்வ சாதாரண நிகழ்ச்சியாகப் போயிருக்கிறது. இந்த வகையில் சட்டங்கள் இருந்தும், எந்த ஓர் ஆணும் இதற்காகத் தண்டனை பெற்றதாக வரலாறு இல்லை. அவள் விபசாரி; வேசி; அவளைக் குலைப்பதும் களங்கம் செய்வதும் நியாயம் என்று எழுதப்படாத ஒரு நீதி குற்றம் இழைத்தோரைக் காப்பாற்றி விடுவதே கண்கூடாகியிருக்கிறது. சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமரர் வா.ரா. அவர்கள் தம் சுந்தரி என்ற நாவலின் முன்னுரையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். நாவலை எழுதி முடித்து, ஒரு பெரியவரிடம் அதைப் படித்துப் பார்க்கக் கொடுத்தாராம். அவர் படித்துப் பார்த்துவிட்டு, “சந்நியாசி, குரு மடங்களைச் சற்றே கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள். அது உறுத்தலாக இருக்கிறது” என்று கருத்துரை வழங்கினாராம். அதற்கு வா.ரா. அவர்கள், “அப்படியா, ரொம்ப சரி. நன்றாக உறுத்த வேண்டும். அப்படியே இருக்கட்டும்” என்று அச்சுக்குக் கொடுத்தாராம். எண்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்நாள், பெண்ணை உடல், உடல் என்று முடிப்பதில் சமயம் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் மாறிவிடவில்லை. அரசியல் சக்திகளிலிருந்து அனைத்து நிறுவனங்களும் இந்நாள் வணிகமயமாகித் தீர்ந்திருக்கின்றன. நவீன மின்னணு இயல் சாதனங்களின் வலிமையுடன் பெண்ணுடலை வாணிபப் பொருளாக்கித் தீர்த்திருக்கிறது. உடல் வாணிபம் சட்ட விரோதம். ஆனால் அரசுரிமை பெற்ற வாணிபத்துக்கு பெண்ணுடல் இன்றியமையாதது. உலகளாவிய இந்த வாணிப உரிமைக்கு, அழகுப் போட்டிகள் ஏராளமான பொருட் செலவில் ஆடம்பரங்களுடன் நடத்தப்படுகின்றன. இந்த அப்பட்டமான வாணிபங்களில் பெண் சின்னாபின்னமாக்கப்படுவதை, எந்த மனித உரிமை இயக்கமும் கேட்க முடிவதில்லை. பல்வேறு நிலைகளில், அவள் உடலும், ஆன்மாவும் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறாள். பெண் கருவைச் சுமக்கும் பெண், அதை அழிப்பதன் வாயிலாகத் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொள்கிறாள். இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் ஒலி சுத்தமாக அமுங்கிவிட்டதா?... பெண் எங்கே போற்றப்படுகிறாளோ, அந்த மண்ணே செழிக்கும்; அவள் பூமி; அவள் ஜனனி; அவள் நதி; அவள் இயற்கை என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்ட ஆதி வாக்கியங்கள் இன்றைய அழிவுகளில் மடிந்து போயினவா? இல்லை. அக்கிரமங்களின் எதிரொலியாகவே, இன்றைய வன்முறைகளும் இயற்கைச் சீர்குலைவுகளும் மனித சமுதாயத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன எனலாம். பெண் வெறும் உடலில்லை. அவள் மகாசக்தி. ஒவ்வொரு பெண் உடலிலும் அந்த உயிர்ச்சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண் மேலாதிக்கம், இறைவன் கருணாநிதி, இடப்பக்கம் பெண்ணுக்கு இடம் கொடுத்தான். அதனால் அவள் அவனுள் அடக்கம் என்று தத்துவம் பேசுகிறது. அவளுடைய உரிமையைப் பறிப்பதற்கு நியாயம் கற்பிக்கிறது. ஆனால் அவள் தன்னை ஒடுக்கும் ஓர் இனத்தை, ஒவ்வொரு கனமும் வயிற்றில் வைத்துக் காத்துப் பேணி, உயிரையும் துரும்பாக்கி வளர்த்தெடுக்கிறாள். அத்தகைய தாய்க்குலம் வளரக்கூடாது என்று அழிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது இன்றைய சமுதாய ஆதிக்கம். எனவே, சீர்குலைவுகளின் உச்சத்தில் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை இன்று தேவையாக இருக்கிறது. ஓ, இது ‘பெண்ணினம் பேசும் குப்பை’ என்று (ஆண்) திறனாய்வாளர் சலித்துப் போய் ஒதுக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் அறிவிலும், திறமையிலும் மேம்பட்டு வரும் பெண் குலம் மேலும் மேலும் தனக்கு எதிராக உருவாக்கப்படும் அறைகூவல்களைச் சமாளிக்க எதிர் நீச்சல் போடும் உரிமைக்குரலை எழுப்பிக் கொண்டு தான் இருப்பாள். மேலும் மேலும் பெண் குலத்தைச் சாதுரியமாக ஒடுக்கி உயிர் குடிக்க முனையும் ஆதிக்க நிறுவனங்கள் இருக்கும் வரையிலும் உரிமைக்குரல் ஒலித்துத்தானாக வேண்டும். ஏனெனில் பெண் மூலாதார சக்தி; அவளுக்கு அழிவென்றால் உலகம் அழியும். இந்தப் படைப்பை வழக்கம் போல் எனது நூல்களை வெளியிட்டு உதவும் ‘தாகம்’ பதிப்பகத்தார் நூலாக்கி வெளியிடுகின்றனர். அதன் உரிமையாளர் திருமதி மீனா, அகிலன் கண்ணன் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகர் முன் இதை வைக்கிறேன். குற்றங்குறை தெரிவித்து, இத்தகைய முயற்சிகளில் ஊக்கத்துடன் ஆதரவு நல்குமாறு வேண்டுகிறேன். நன்றி.
ராஜம் கிருஷ்ணன் 24.7.1996 |