அத்தியாயம் - 1

     அடுப்படியை நன்றாகத் துடைத்து, ஒழிந்த பாத்திரங்களை ரேவு, தொட்டி முற்றத்தில் போடுகிறாள். கணவனும் இரண்டு பையன்களும் சாப்பிட்ட எச்சிற் தட்டுகள், குழம்புக் கற்சட்டி, மாவு கரைத்த பாத்திரம், இன்னும் தொட்டுத் தொடாத தம்ளர், கிண்ணம் என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறாள். மணி பத்தடித்து விட்டது. காலையில் நாலரை மணிக்கு எழுந்ததிலிருந்து பத்தடிக்கும் வரையிலும் மூச்சு விட முடியாது.

     அடுப்புக்கு இரண்டு சிலிண்டர் என்று மாற்றுக் கிடையாது. தோசைக்கு அரைக்க ‘கிரைண்டர்’ சாதனம் இல்லை. ஒரு பழைய மிக்ஸி, கிழட்டுத்தனமாக இயங்கும். சமயத்தில் கைவிட்டு விடும். சூடாகும். இல்லையோ ‘கரண்ட்’ என்ற உயிரும் இருக்காது.

     காலையில் பம்படித்துக் கொண்டு வந்து வைத்த தண்ணீர் தீர்ந்து விட்டது. மறுபடியும் சென்று இரண்டு குடம் தண்ணீர் அடித்து வந்து வைக்கிறாள். தோசைக்கு ஊறப் போடுகிறாள்.

     அப்போதுதான் இடைக் கதவைத் திறந்து கொண்டு சுதா வருகிறாள்.

     “ரேவு மாமி ‘அமிர்தம்’ வந்திருக்கு. பார்க்கிறேளா?...” கையில் பழுப்பு நிறத்தாள் பிரிக்காத பத்திரிகை.

     “சாவகாசமாகப் பாருங்கோ! நான் ட்யூட்டிக்குப் போகிறேன். ரகு வந்தால் சாவி கொடுத்திடுங்கள்; ஃபிரிட்ஜில் ஏதானும் வைக்கணும்னா, வச்சுக்குங்கோ...” என்று பத்திரிகை மேல் சாவியை வைக்கிறாள்.

     நீல வாயில் புடவையும், பூப்போட்ட மஞ்சள் ரவிக்கையும் அணிந்து இருக்கிறாள். சிரித்துக் கொண்டே, “நாம எழுதிய லெட்டர் வந்திருக்கு, பாருங்கோ!” என்று ஒரு மெல்லிழையை விசிறி விட்டு விடுவிடென்று இவர்கள் வாசல்வழியே போகிறாள்.

     ரேவு சில கணங்கள் அந்தப் பத்திரிகையையும் சாவிக் கொத்தையும் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். பிறகு உடனே நினைவு வந்தாற்போல் ஈரக்கையைத் துடைத்துக் கொள்கிறாள். ஸ்டூலின் மேல் இருந்த பத்திரிகையை எடுத்து, பழுப்புக் காகித உறையைக் கிழிக்காமல் பத்திரிகையை உருவி எடுக்கிறாள். நவராத்திரி கொலு அட்டையை அலங்கரிக்கிறது. பெரிய கோலம், குத்து விளக்கு, பூரண கலசம், தாம்பூலத் தட்டு, பூ - என்ற எல்லா மங்களங்களும், இது பெண்கள் பத்திரிகை என்று சொல்கிறது.

     ரேவுக்கு வாழ்க்கையில் ஏதேனும் ஓர் ஆறுதல், சுகம் என்றால் இந்தப் பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கும் வாய்ப்புத்தான்.

     கழுத்தைப் பிடிக்கும் வேலைகள், வீடு நிறைந்த குடும்பத் தொல்லை என்று, வினாத் தெரியாத சிறுமியாக ஒரு புகுந்த வீட்டு இளைய மருமகளுக்குள்ள அழுத்தங்களுடன் உழன்ற நாட்களிலும், இப்படி ஒரு பத்திரிகையைத் திருட்டுத்தனமாகவேனும் பார்த்து விடுவாள். இப்போது, அந்த சம்சார சாகரமில்லை. இந்தச் சொந்த வீட்டின் ஒரு பகுதியில் குடித்தனமாக வந்திருக்கும் சுதா, இவள் மீது அளப்பரிய பரிவு காட்டும் பெண். அவளுக்குப் பிக்குப் பிடுங்கலே இல்லாத குடும்பம். ஒரே பெண், காவேரிக்கரை ஊர் வீட்டில் இருக்கும் தாயாருடன் இருந்து படிக்கிறது. புருஷன் ஏதோ வங்கியில் வேலை செய்கிறான். அவன் தொலைபேசி அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எல்லாப் பத்திரிகைகளும் வாங்குகிறாள். முதலில் ரேவுக்குப் படிக்கக் கிடைப்பது மட்டுமின்றி, சமயம் கிடைக்கும் போது, இந்த வீட்டுத் தவளைக்கு வெளி உலகச் செய்திகளையும் பேசி கொள்ளவும் முடிகிறது.

     ரேவு, பத்திரிகையைப் பிரித்துக் கொண்டு, கூடத்தின் எதிரே உள்ள அறைக்குள் வருகிறாள். புருஷனுமில்லை. பையன்களுமில்லை. இப்போது யாரும் வருபவர்கள் இல்லை என்றாலும், அந்த அளவுப் பாதுகாப்பை நாடுகிறாள். ‘காங்க்ரீட்’ கூரை வராத காலத்தில் போடப்பட்ட மரத்தாங்கலுள்ள கனத்த கூரை. அத்துடன் பழைய சாமான் போடும் பரணும் உள்ள அறை. வாசல் திண்ணையைப் பார்த்த பழைய நாளைய சன்னல்; அங்கிருந்து குறுகலான வாசல் தெருவைப் பார்க்கலாம். முன்பு வெறும் மொட்டையாக இருந்த மூன்றடி அகலத் திண்ணை, வராந்தா போல் மாற்றப்பட்டு, வெளியே ஓர் அழித்தடுப்பும் கதவும் பெற்றிருக்கிறது. பக்கத்தில் உள்ள சிறு சந்தில், தனியாக சுதாவின் பகுதிக்குச் செல்லும் வாசல் இருக்கிறது.

     இந்த அறைக்கே தனியானதொரு வாசனை உண்டு. கதவில்லாத இரண்டு அலமாரிகளிலும், பழுப்பேறிய பழைய பஞ்சாங்கங்கள், பைண்டு செய்த தமிழ் கந்த புராணப் புத்தகம், ஸம்ஸ்கிருத சுலோகங்கள், கொண்ட பூச்சி அரித்த புத்தகங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன. பழைய கால ‘ஸ்டீல்’ டிரங்கு பெட்டிகள், ஒரு அரிசி ட்ரம், பழைய வெண்கலப் பானை, ஆசனப் பலகைகள், கயிற்றில் கோர்த்துக் கட்டி ஆணியில் தொங்க விடப்பட்ட பழைய பாலிகை மண் வளையங்கள் என்று விடாமல் நூற்றாண்டுகளின் மிச்ச சொச்சங்களைக் காப்பாற்றி வரும் ஒரு அறை அது.

     தன் செய்கைகளை அந்தப் பழைமையில் வைத்து மறைப்பது போன்ற ஒரு பொருந்தாமையுடன் பத்திரிகையைப் பிரிக்கிறாள்.

     இந்த மாத பேட்டி நாயகி... நித்ய சுமங்கலி யார்... தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் ஏன் அவசியம் என்ற முக்கியமான அலசல், வீட்டில் குங்குமம் தயாரித்தால், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், அதன் தொழில் நுட்பம் - சினிமா நடிகை ஸ்ரீபர்வதா அரை இலட்சம் கொடுத்து வாங்கிய புடவையின் விவரம், பட்டுச் சேலைகளைப் பாதுகாக்கும் போட்டியில் பரிசு பெற்ற வனிதையர், அந்தப் பரிசுக்காகக் கொடுக்கப்பட்ட பாத்திரக் கூப்பன்களை வாங்கக்கூடிய கடை விவரங்கள்... குப்பாங்குளம் குசலானந்த சுவாமிகளின் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற அறிவுரைகள் எல்லாவற்றையும் தள்ளுகிறாள். டாக்டரைக் கேளுங்கள் பகுதியில் டாக்டர் கஜகௌரியின் யோசனைகள்... பெண்ணின் சமையலில் மணமா, ஆணின் சமையலில் மணமா என்ற பட்டிமன்ற தொகுப்பு படங்களுடன் -

     - இதோ, ஆசிரியர் சகலகலாவல்லியின் - என்னிடம் சொல்லுங்கள், நெஞ்சமர் தோழியரே... பகுதி...

     அதில்...

     முதலிலேயே அந்தக் கடிதம்..

.      இவள் எழுதி, சுதா பார்த்து, யோசனையும் திருத்தமும் வழங்கி அனுப்பி வைத்த கடிதம்...

     அன்புள்ள சகோதரி,

     வணக்கம். எனக்குத் திருமணமாகி இருபத்து மூன்று வருடங்கள் ஆகின்றன. என் வயசு முப்பத்தாறு. என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஸ்டெனோவாக இருக்கிறார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவன் ப்ளஸ் 2 படிக்கிறான். அடுத்தவன் ஒன்பதில் நிற்கிறான். அவர் இப்போது, தம் அலுவலக மேலாளராக உள்ள பெண்மணியுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது. இந்த உறவை உறுதி செய்யப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் மிகவும் நொய்ம்மையான இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் கடுமையாகப் பேசவோ சண்டை செய்யவோ நான் விரும்பவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் வைதிகமான ஆசாரமுள்ள குடும்பம் ஏனெனில் இந்த விஷயம், வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்குத் தெரிய வெளியில் அடிபடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் அப்படியே வெளிக்குத் தெரியாமல் இதை ஏற்றுக் கொண்டு விடவும் மனசு ஒப்பவில்லை. எனவே தாங்கள் என் சிக்கலைப் புரிந்து கொண்டு ஒரு நல்ல தீர்வை எனக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்... இப்படிக்கு, தங்கள் அபிமான வாசகி... பாமினி...

     இந்த பெயரையும் சுதாதான் வழங்கினாள்...

     பாமினி...

     குபுக்கென்று செவிகளில் உஷ்ண வாயு திரண்டு அடைக்கிறது.

     எழுதியதை அப்படியே அச்சில் போட்டு விட்டார்கள்.

     பதின்மூன்று வயசில் கல்யாணம்; வைதீகக் குடும்பம் இரண்டு பிள்ளைகள்... புருஷனின் வேலை... கம்பெனி ஸ்டெனோ...

     இதெல்லாம் நிசம்.

     பதில் என்ன எழுதியிருக்கிறாள்?

     “பிரிய நெஞ்சமர் தோழி. உங்களுக்காக வருந்துகிறேன். உங்கள் பிரச்னை சிக்கலானதுதான். பாலியல் உறவு சார்ந்து உங்கள் கணவரை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதை அவசியமாக அறிய வேண்டியதாகிறது. ஒரு குழந்தை வெளியில் விற்கும் தின்பண்டத்தை நாடிப் போகிறது என்றால், தாய் அதற்குத் தேவையான ஊட்டமும் நிறைவும் அளிக்கவில்லை என்பது வெளிப்படை. சகோதரி, அந்த வகையில் நீங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றால் அந்த அதிகாரியையே நீங்கள் தனியே சந்தித்து மனம் விட்டுப் பேசலாமே? மனம் விட்டுப் பேசுவதாலேயே பல பிரச்னைகள் தீர்ந்து விடுமே?...”

     ரேவு புத்தகத்தை மூடுகிறாள்.

     பார்வை எங்கோ ஒன்றிப் போகிறது.

     அந்த அதிகார வருக்கப் பெண்மணியை, அவள் நேரில் சந்திப்பதா? எப்படிச் சந்திப்பது?...

     ஒன்பதாவதுக்கு மேல் எட்டிப் பார்க்க முடியாத ஒரு அதிர்ஷ்டம் கெட்ட பெண். பதின்மூன்று வயசுக்குள் எட்டு முடித்து ஒன்பதுக்கு வந்து என்ன பயன்? குடும்ப மானத்தைக் காப்பாற்ற மல்லிநாதன் என்ற ஒரு பத்தொன்பது வயசுக்காரனுக்கு அடிமையாக வேண்டி இருந்தது.

     “குழந்தே, நீ பாக்கியமாய் வாழ்வாய்; புகுந்த இடத்தில் நீ பிறந்த இடத்தின் பாவக் கறைகளைத் துடைத்து சிரேயஸுடன் இருப்பாய்! வைதிக வித்து, வேத பரம்பரை, சாமானிய இடமில்லை. அதற்குத் தக்கபடி நடந்து கொள்வாய்” என்று, காஷாய குருபீடம் அட்சதைப் போட்டு ஆசீர்வதிக்க அவள் இந்த வீட்டில் அடி வைத்தாள்.

     இவள் இப்படி ஒரு கடிதாசியை முகம் தெரியாமல், முகம் தெரியாதவருக்கு அனுப்பி வைப்பதுதான் சிரேயஸா?

     ‘ச்ரேயஸ்’னா என்ன?

     - ஆபீஸ்... ஆபீஸ்க்கு இவன் போகாத நாளில் இவள் எப்படிப் போய் அவளைப் பார்ப்பாள்?

     சரி, சுதா எப்படியானும் ஃபோன் பேசி, ஏற்பாடு செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்...

     இவள் போய் நிற்கிறாள்...

     அவள் உருவம் பதியவில்லை.

     ஆனால் குரல் மின்னுகிறது.

     “என்ன விஷயம்?”

     “வந்து... வந்து... என்... எங்க வீட்டுக்காரர், மிஸ்டர் மல்லிநாதன்... உங்கள் ஸ்டெனோ...”

     “ஓ, மிஸஸ் மல்லிநாதனா?... ரொம்ப அழகாயிருக்கிறீங்களே? உக்காருங்க... என்ன வேணும்?”

     என்ன வேணும்? எப்படிச் சொல்ல? அவர் பேண்டைத் துவைக்கப் போட்டிருந்தார். பெங்களூர் போயிருந்தீர்கள். ஹைதராபாத் போயிருந்தீர்கள்... பான்டில்... ஓட்டலில் ஒண்ணாய்த் தங்கி இருப்பீர்கள்... பான்ட் பாக்கெட்டில்... இந்தக் கண்ணராவி எல்லாம் இருந்து சாட்சி சொல்றது. எல்லாரும் கசமுசன்னு உங்களைப் பத்திப் பேசுறாங்களாம்... என்று சொல்லலாமா?

     அந்தச் சனியன் பாக்கெட்டை, சுதாவிடம் தான் காட்டினாள். சுதாதான் அது... அது... என்று சொன்னாள்.

     இவளுக்குத்தான் இனிமேல் ஒரு இழவும் தேவையில்லையே? பரத் பிறந்த உடனேயே மூணாம் நாள் ஆபரேஷன் பண்ணிக் கொண்டாளே? ஒருவேளை அதனால் தான் அவன் இப்படிப் போகிறானா? அலைகிறானா?

     சே, அப்படியே நடுவில் விட்டுவிட்டாளே?

     இவள் பேசத் தெரியாமல் மனசு கொட்ட உட்கார்ந்திருந்தால் அவள் என்ன நினைப்பாள்?

     “என்னம்மா? மல்லிநாதனுக்கு சீனியர் கிரேட் கொடுத்தாச்சே? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

     “பையன்கள், பிளஸ்டூ - நைன்த்...”

     “ஓ...வ்! அவ்வளவு பெரிய பையன்கள் இருக்கிறார்களா? உன்னைப் பார்த்தாலும் தெரியவில்லை; அவரைப் பார்த்தாலும் தெரியவில்லை. இப்ப போன மாசம் கல்யாணம் ஆனாப் போல இருக்கிறீர்கள்?... வெல்... இப்ப என்ன வேணும்?”

     “ஓ... ஒண்ணுமில்ல... பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்... இத... இத பாருங்கள்... இது... அவர் பான்ட் பாக்கெட்டில் இருந்தது...”

     அழுகை வந்து விடுகிறது, அதை மேசை மீது ஆத்திரத்துடன் போடுகையில்.

     “வாட்...! என்ன நினைச்சிட்டே! தூ! ப்யூன்! இந்தப் பொம்பிளய எல்லாம் யார் உள்ள விட்டது! கெட் அவுட்! புடிச்சு வெளியே தள்ளுங்க!”

     ஒரு கை பனி நீரை வாரி வீசினாற் போல் ரேவு குலுக்கிக் கொள்கிறாள். சீ! என்ன பைத்தியக்காரத்தனம்.

     முகம் தெரியாத ஏதோ அநாமதேயம் - கேள்வி - பதில்.

     சிறிதும் ஒட்டும் உறவுமில்லாமல் ஆயிரமாயிரம் பேர் இந்த அந்தரங்கங்களை மனசில் போட்டுக் கொள்ள...

     ஆனால் நான் இன்றைய பெண்ணின் வாழ்க்கையில் இன்னும் என்ன ஒளிவு மறைவு பாக்கி இருக்கிறது?

     ஒருவேளை அவள் கணவன் இந்தப் பத்திரிகையைப் பார்த்துக் கண்டுபிடித்துவிட்டால்?

     பிள்ளைகள்...?

     அவர்கள் யாரும் இவள் ஆவலோடு படிக்கும் எந்தப் பத்திரிகைகளையும் திருப்பிப் பார்ப்பதில்லை. ராம்ஜி, பரத் இரண்டு பேருமே இங்கிலீஷ் மீடியம் படிக்கிறார்கள்...

     ஓர் ஆறுதல்.

     இது இப்படியே போய்த் தொலையட்டும்.

     ஓ...மணி...? கூடத்தில் உள்ள பழைய நாளைய அடிக்கும் கடிகாரத்தில் மணி பத்தேகாலாகி இருக்கிறது.

     கிரசின், சர்க்கரை வாங்க வேண்டும். அரிசியும் கூட புழுத்தலோ, புழுங்கலோ போடுவான். பார்த்து வாங்க வேண்டும்.

     காலை எட்டரை மணிக்குக் கலத்தில் நல்ல சோறு விழ வேண்டும். இட்லியோ, தோசையோ கட்டித் தர வேண்டும். அது எப்படி வருகிறது, என்ன விலை என்று அவனுக்குத் தெரியுமா? குழந்தைகளுக்கும் தெரியுமோ?

     இரண்டும் ஆண் வருக்கம்... ஒரு பெண் குழந்தை பிறக்கக்கூடாதா?

     அவசர அவசரமாகத் தொட்டி முற்றப் பாத்திரங்களைக் கழுவுகிறாள். பிறகு ரேஷன் கார்டு, பை, கிரசின் கேன் சகிதம் வெளியே வந்து வீட்டைப் பூட்டுகிறாள்.

     வீதியில் எதிரே நாகபூசணி வீட்டு வேலைக்காரி ஒரு பாமாலின் பையுடன் வருகிறாள்.

     “கிரசின் சர்க்கரை ஏதும் இல்லை... பாமாலின் தான் ஒரு கிலோ பாக்கெட் தாரான். கியூ நிக்கிது...”

     அதுவும் அப்படியா?...

     உள்ளே சென்று கிரசின் கேனை வைக்கிறாள்.

     பாமாலின் போடுகிறான் என்றால் சுதாவின் கார்டையும் கேட்டிருக்கலாமே? சாவி இவளிடம் இருந்தாலும், கேட்காமல் புரையில் அவள் வைத்திருக்கும் கார்டை எடுக்கலாமா? கூடாது.

     அப்பளத்தைப் பொரித்துத்தான் போட வேண்டும்.

     பொரித்து டப்பாவில் வைத்துவிட்டால், அப்பாவும் பிள்ளைகளும் இடது கையால் எடுத்து எடுத்துப் போட்டுக் கொண்டு டப்பாவைக் காலி செய்து விடுவார்கள்!

     ரேவு அந்தப் புரட்டாசி வெயிலில் வேகு வேகென்று நடக்கிறாள்.

     பெரிய கியூ வரிசையில் சென்று நிற்கிறாள்.