உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் - 22 டாக்டர் ரேவதி... சைக்கியாட்ரிஸ்ட்! அவள் வந்தால், இந்தப் பொய் அம்பலமாகிவிடும். இந்தக் கண்டத்தில் இருந்து எப்படித் தப்புவது? இரவெல்லாம் சுறுசுறுப்பாக மனம் யோசிக்கிறது. இவர்கள் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி அம்பலத்துக்குக் கொண்டு வந்து நியாயம் கோர வேண்டும் என்று முனைபவர்கள். அவள் அன்று அப்படிக் கிடந்த போது தூக்கி வந்து, பரிவாக அவளை மறுபிறப்பு என்று சொல்லும்படி உயிரூட்டி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையைப் போலீசிலும் தெரிவித்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இவளால் எல்லா விவரங்களையும் எப்படி வெளியிட முடியும்? ரங்கப்பாவுக்கும் அவளுக்கும் உள்ள ஒட்டுறவை இவர்கள் எப்படி எடை போடுவார்களோ? பத்திரிகைக்காரர்கள் வரவேண்டாம் என்று தடுக்கும் பெரிய டாக்டர், தலைவி, வழக்கு என்று கூறும் போது வெளியிடாமல் மறைப்பது சாத்தியமா?... ரேவு குழம்பிப் போகிறாள். உடல் தேறி, நீண்ட ஆசுபத்திரி அங்கியுடன் மெல்ல வெளியில் தலைநீட்டிப் பார்க்கிறாள். ஆறு அறைகள் கொண்ட சிறு விடுதிதான். பிரசவம் என்று வருபவர்கள் தாம் அதிகம். பிரசவம் சிக்கலானால் இங்கேயே ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க வசதி இருக்கிறது. முக்கியமாக, இது போன்ற ‘பெண் கலைப்பு’ கேஸ்களை துளசிதேவி எடுத்துக் கொண்டு பார்க்கிறாள். ஒரு பெரிய மாதர் சமூக அமைப்பின் ஒரு தூணாகவும் இருக்கிறாள் என்பதும் புரிகிறது. ஒரு வாரத்துக்குப் பிறகு ஒருநாள், ரேவு அறையில் இருந்து தலைநீட்டிப் பார்த்த போது, வராந்தாவில் இரண்டு பெண்மணிகள் பேசுவது கேட்கிறது. “ஆமாம், இதுவரை எந்த கேஸில் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்? சின்னஞ்சிறுசுகளை வெளியில் விடவே பயமா இருக்கு. இப்ப பாருங்க, பத்து நாளைக்கு முன்ன ஒரு கேஸ் வந்து கோடி ரூம்ல இருக்கு. நான் எட்டிப் பார்த்திட்டேன்... மூஞ்சியெல்லாம் குதறி... பெரிய வயசான பொம்பள... பீச்ல போட்டுட்டுப் போயிட்டாங்க. இன்ஸ்பெக்டர் அருணா ரெண்டு நாளா வந்தா பார்த்தேன். ஒரு துப்பும் துலங்கலயாம். அவளுக்கு நெனவே போயிட்டுதாமே? பேர் கூடத் தெரியலியாம்!” ரேவு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு விம்மி விம்மி அழுகிறாள். எத்தனை மூடி வைத்தாலும் மூட முடியுமா? இங்கே ஆயாக்கள், நர்ஸ், வார்ட் பையன் முதல், பொசிந்ததை வெளியே கொண்டு தான் செல்வார்கள். கையிலொரு காசுமில்லை... உடுப்பு புடவை கூட இல்லை. இந்த அறையில் தூக்குப் போட்டுக் கொள்ளக்கூட வழி இல்லை. தூக்க மாத்திரை அவளுக்குக் கிடைக்குமோ? செத்த பிறகு... யார் மானம் போனால் என்ன, போகாவிட்டால் என்ன? இந்தக் குழப்பத்தில் இருந்தும் சித்திரவதையில் இருந்தும் விடுபட்டுவிடலாம். அப்போது அங்கு... ஏஞ்ஜலாவுடன், சுதா... சுதா வருகிறாள். “ரேவு மாமி! ரேவு மாமி! உங்களுக்கு உங்களுக்கா?...” ரேவுவின் உள்ளத்தில் கடல் பொங்கி அலைக்கிறது. ‘பெண்களால் என்ன செய்யமுடியும், அழுவதைத் தவிர? இவர்கள் உணர்ச்சிப் பிண்டங்கள்’ என்று எந்தக் கதையிலோ யாரோ எழுதிய வரிகள் மின்னுகின்றன. சுதா பரிவுடன் வந்து அவளை அணைத்துக் கொள்கிறாள். ஏஞ்ஜலா கதவைத் தாழிடுகிறாள். “சுதா... சுதா... எனக்குக் கொஞ்சம் தூக்க மாத்திரை மட்டும் கொடுக்கச் சொல்லுங்கோ... வேற ஒண்ணும் வேண்டாம். நான் ஒரேயடியாகத் தூங்கிப் போனால் தான் நிம்மதி...” “...ஷ்... இதுக்கா இத்தனை பாடுபட்டோம்?” “நான் எங்க வீடு முடிஞ்சி பாக்க வந்தேன். ரகுவை மகாராஷ்டிராவுல சாங்லிக்குத் தூக்கிப் போட்டுட்டாங்க. நான் அப்படியும் இப்படியுமா திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டேன். சுருதி பிலானில போய் சேர்ந்துடுத்து. ஆக குடும்பம் ஒவ்வொரு இடமா இருக்கு. நான் வழக்கம் போல் மெட்ராஸ் வந்ததும் என்.கே.ஆர். வீட்டுக்கு ஃபோன் பண்ணினேன். ரிங் போயிட்டே இருந்தது. ரெண்டு நாள் ட்ரை பண்ணிட்டு விசாரிக்கணும்னு போனேன். கே.ஜி.கே. தான் சொன்னார். ஆஸ்பத்திரியில தான் இருக்கார். மூளையில் ப்ளட் க்ளாட் இருக்குங்கறா. தேவலைன்னாலும் ஒரு பக்கம் சுவாதீனம் இல்ல. அவர் கஸின் ஒருத்தி இருக்கா. அமெரிக்காவிலேந்து மகளும் அம்மாவும் வராங்கன்னார்... நான் உங்களைப் பத்தி விசாரிச்சேன்...” “அவ அன்னிக்கே போயிட்டாளாமே? எங்கிட்டக் கூடச் சொல்லல. எட்டு மணிக்குத் தன் சாமானை எடுத்திட்டு ஆட்டோவில போயிட்டாங்கறா. எனக்கு அது விஷயம் சரியாத் தெரியல...ன்னார். ஸம்திங் ஸம்வேர் ராங்னு பட்டுது. நான் ஆஸ்பத்திரிக்குப் பார்க்கலாம்னு போனேன். அவரைப் பார்த்தேன். பழைய என்.கே.ஆரா? எப்படியோ முகம் இருக்கு. பேச்சே வரல. காட்டான் மாதிரி ஒருத்தனும், பெரிய குங்குமப் பொட்டோட ஒரு அம்மாவும், அங்க என்ன பார்க்கவே விடல... இன்னிக்கு வந்திருப்பா, அவர் மிஸஸ்... அப்புறம் இன்னிக்குக் காலம, எனக்கு யதேச்சையா சாலினி இப்படிச் சொன்னா... வந்தா... ஓ, காட்!...” “சுதா... சுதா...! என்னென்னவோ நடந்திட்டது. இங்கேருந்து இப்ப விடுதலை... விடுதலை வேணும்... என் பொருட்டு இன்னும் யாரும் கஷ்டப்படக் கூடாது...” ஏஞ்ஜலா மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு, அவர்களைத் தனியே விட்டுப் போகிறாள். “என்ன ஆச்சும்மா? எப்படி... தனியா போனீங்களா? இல்ல யாரானும் கூட்டிட்டுப் போனாங்களா?” ரேவு உடைய உடைய நடந்தவை அனைத்தையும் கூறுகிறாள். “அந்தக் கடங்காரன் எட்டரை மணிக்கு வந்து கூப்பிடறப்ப எனக்குத் துளி சந்தேகம் தெரியல சுதா! இது... அவா திட்டம். கே.ஜி.கே. ஸார் வந்தன்னிக்கே, அவருக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. நான் சாவி வச்சிருந்தும் குடுக்கலன்னாரே! அவ என்னென்ன பேசினா என்ன? கட்டினவன் நிழல விட்டு வந்ததுக்கு, நான் அணு அணுவாத் தண்டனை அனுபவிக்கிறேன். ஒரு ஆண்பிள்ளை வருஷக்கணக்கில் எங்கெங்கோ அலைஞ்சு மேஞ்சு குற்றவாளியா ஊர் திரும்பினா, அவனைத் திட்டாது.” “சுதா... எனக்கு இங்க யார் முகத்திலும் முழிக்க இஷ்டமில்ல. ஒரே ஒரு நம்பிக்கைதான் இருக்கு. எனக்கு அந்த மலைக்கு மேல போகணும்...” என்று அந்தக் குடும்பம், குழந்தை தன் புகலிடம் என்று கடைசி எண்ணத்தை வெளியிடுகிறாள். “இவா ஆளைத் தேடி, கோர்ட்டு வழக்குன்னா எத்தனை கேவலம்? இதெல்லாம் நடக்கிற காரியமில்ல; எனக்கு இந்த உடம்பு செத்துப் போச்சு. உசிர்... உசிர் இருக்கு. உசிர் ஏன் போகலன்னு தெரியல. அவா என்னைக் கொலை பண்ணாப்பலதான் குலைச்சுப் போட்டிருக்கா. அந்த நினைப்பு வேண்டாம். எனக்குக் கொஞ்சம் பண உதவி பண்ணி, அங்க மலைக்கு அனுப்பி வையுங்கோ. நான் எப்படியானும் உங்க கடனை அடைச்சிடுவேன்!” சுதா விசித்திரமாகப் பார்க்கிறாள். “நர்ஸ் கிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம். என்னை அழைச்சிட்டுப் போறதாச் சொல்லுங்கோ... நான் பிழைச்சிருந்து ரங்கப்பாவும் பிழைச்சு நல்லபடியாய், ஈசுவரனுக்கொப்ப நான் எந்தக் குத்தமும் செய்யாதவன்னு நிரூபிக்கணும். அவர் நல்லபடியா எழுந்திருக்கணும்...” சுதா யோசனை செய்கிறாள். “உங்களைத் தனியே எப்படி அனுப்ப?...” “அதெல்லாம் நீங்க பயப்பட வேண்டாம் எனக்கு வழி, அட்ரஸ் எல்லாம் தெரியும். அந்தக் குழந்தைகள் தங்கமானனவர்கள். சுற்றிலும் மலை, காடு வம்பு சொல்பவர் இல்லை. இப்படிக் குரூரம் பண்ணுபவர்கள் இல்லை. ரேவுமாமின்னு உங்களுக்குத் தெரிஞ்சவ செத்துப் போயிட்டான்னு வச்சுக்குங்கோ. என் உள் மனசு அங்கே தானன் இடம் இடம்னு சொல்லறது. அங்கே அந்த இடமெல்லாம் எனக்கு ஜன்ம ஜன்மமாப் பழக்கமானாப்போல இருக்கு. அன்னிக்கு அந்த ஆட்டோவில் நான் அவரைப் பார்த்துட்டு அப்படியே எந்த வண்டியாயினும் ஏறிப் போயிடலாம்னுதான் இருந்தேன். நடுவில் நடந்த பாதகங்களை அழிச்சிட்டு இப்ப போறேன். என்னை எப்படி பரிவா, பாசமா இவா பிழைக்க வச்சிருக்கா?... மறக்கவே மாட்டேன் சுதா...!” “ஏன் துளசிதேவி, ஏஞ்ஜலாவிடம் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க? அவங்க பொறுப்பா ஏத்துக்கிட்டு ஒரு நியாயம் கேட்க இருக்கறப்ப, நான் முடிவு செய்யறது சரியா? நாங்க எதுவும் குழுவாக் கூடித்தானன் தீர்மானிப்போம்...” ரேவு யோசனை செய்கிறாள். “நான் கடமைப்பட்டவதான். ஆனால் நான் களைச்சுப் போனேன். என் புருஷனை எதுத்துப் போராட அன்னிக்குத் துணிவில்லை. இன்னிக்கு இந்த சமூகத்தை எதிர்த்து நியாயம் கேட்கவும் எனக்குச் சக்தியில்லை. கோர்ட்டில் என்ன இழவெல்லாம் கேட்பாங்களோ? அதோட பத்துப்பேரைக் கொண்டு நிறுத்தி, இவனா, இவனான்னு கேட்பாங்க; நான் அந்தச் சம்பவத்தையே நினைவுக்குக் கொண்டுவரக் கூசுறேன். செத்துப் போறேன்; நான் பிழைச்சு இருக்கணும்னா, என்னை நீங்க இப்படியே விட்டுடணும், சுதா எனக்கு ரெண்டு செடி துணி, கையில் கொஞ்சம் ரூபாய் கொடுத்து, ரயில் ஏத்தி விட்டுடுங்கோ. அதுதான் எனக்குப் பெரிய உபகாரம்.” “சரி, நீங்க போற இடத்து அட்ரஸ் சொல்லுங்கோ?” “மிஸஸ் ஜோதிமணி, எஸ்டேட் ஸ்கூல் டீச்சர், முத்தாறு எஸ்டேட், தேன்மலை போஸ்ட்...” சுதா அவளை ஊடுருவப் பார்க்கிறாள். “டாக்டர்கிட்டயும், ஏஞ்ஜலாகிட்டயும் சொல்லாம நான் உங்களை அனுப்புவது சரியில்லை. நியாயமான எதையும் அவர்களிடம் ஏன் மறைக்கணும்? நான் அவர்களிடம் சொல்லி, ஒப்புக் கொள்ளச் செய்கிறேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு யாருமில்லைன்னு நீங்க நினைக்கக்கூடாது. உங்களுக்கு, ஒரு பெரிய நிறுவனமே வாய்க்காலாக இருக்கு. உங்களுக்கு எப்போது என்ன பிரச்சனைன்னாலும் நீங்க எங்களுக்கு எழுதலாம்... சரியா?...” ரேவு தலையாட்டுகிறாள். ஒரு வாரம் செல்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஏஞ்ஜலா அவளுக்கென்று நான்கு சேலைகள், உள்ளாடைகள், ரவிக்கைகள் அடங்கிய பயணப்பை ஒன்று கொண்டு வந்து வைக்கிறாள். “மலைமேல் டீ எஸ்டேட் சூழல் மனசுக்கு ஆறுதலாக இருக்கும் நான் ரெண்டு வருஷம் குன்னூர் பக்கம் மெடிகல் ஆபிசராக இருந்தேன்... நீ எங்களுக்கு இந்தக் கேஸ் விஷயமா துப்புக் கிடைச்சா உதவியாக இருக்கணும். இது உன் தனிப்பட்ட கேஸ் இல்லை. சமூகப் போராட்டம்... போன உடன் எங்களுக்கு விவரம் எழுத வேணும் சரியா?” அவளிடம் அவர்கள் முகவரியிட்ட ஒரு கடிதம் கொடுக்கிறார்கள். ரயிலடியில் சுதாவும் ஏஞ்ஜலாவும் வந்து ஏற்றி விடுகிறார்கள். |