உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் - 16 தபால்காரன் மேலே வரமாட்டான். கீழே அவருக்குரிய பெட்டியில் தபாலைப் போட்டு விட்டுப் போய்விடுவான். ரங்கப்பா மதியம் வீடு வரும்போது, தபால்பெட்டியைப் பார்த்துத் தபால்களை எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். அன்று ஏதோ நினைவில் அவர் தபாலைப் பார்க்கவில்லை போலும்! பூட்டு ஒன்று போட்டிருந்தார். அது பழுதாகிவிட்டது. எனவே யார் வேண்டுமானாலும் திறந்து எடுக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மணி அடிக்கிறது. அவள் எழுந்திருக்க முற்படுகிறாள். “நீ இரு...” என்று கையமர்த்திவிட்டு அவர் கையைக் கழுவிக் கொண்டு கதவைத் திறக்கிறார். கீழ்த்தளத்தில் குடியிருக்கும் சம்பூர்ணா, கையில் ஒரு அழைப்பிதழ் போன்ற கடிதத்துடன் நிற்கிறாள். “முன்னெல்லாம் மாமிட்டேந்து தீபாட்டேந்து கடிதாசி வரதான்னு ஒரு நாளைக்கு அஞ்சாறு தடவை போஸ்ட் பாக்ஸை பார்ப்பீங்க. இப்ப... இது வந்து மூணு நாளாக் கிடக்கு. அநாதையாக் கிடக்கேன்னு எடுத்திட்டு வந்தேன்...” என்று குத்தலாக மொழிந்து, பார்வையை நீட்டி, எதிரே ரேவு மேசையின் பக்கம் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நகருகிறாள். அவர் கடிதத்தை மறந்து அவளையே பார்த்துக் கொண்டு நிற்பவர், அவள் அகன்றதும் கதவைச் சாத்தித் தாழிடுகிறார். ரேவுவுக்குக் கடிதம் என்றாலே ஒரு துடிப்பு வந்து விடுகிறது. அது அச்சமா, கவலையா என்று சொல்லத் தெரியாத உணர்வு. உள்ளூற இந்த இடம், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, எந்த நிமிடத்திலும் கவிழ்ந்து விடலாம் என்பது போன்ற பதைபதைப்பு உயிர்க்கிறது. சாப்பாடு ருசிக்கவில்லை. அவர் அலட்சியமாக எறிந்த அந்தத் தபால்... ஓர் அழைப்பிதழ் - கடிதம் ஊஞ்சலின் மேல் இருக்கிறது. “இது... என்ன, இன்விடேஷன்?...” “எடுத்துப் பாருங்களேன்?” “லெட்டர் கூட இருக்காப்பல இருக்கு?...” “நீங்க பார்க்கலாம்...” குமரிக்கோட்ட நாடகக் குழுவினர் நடத்தும் நாடகப் பட்டறை. அதன் துவக்க நாள் - முக்கிய விருந்தினர் புரொபசர் தோழர் என்.கே.ஆர்... என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறது... நான்கு நாட்கள், கன்னியாகுமரியில் நடக்கும் புதுமை நாடக விழா - பல்வேறு குழுக்கள் ‘நிஜ’ நாடகங்களை நடத்துகிறார்கள். கடிதத்தில் விரிவான விவரங்கள் - நான்கு நாட்களும் தங்கி, விரிவுரைகள், விமரிசனங்கள், வகுப்புகள் என்று நிகழ்ச்சி விவரங்களுடன், அவரை நாகர்கோயிலில் சந்திப்பதாகவும், தங்குமிடம் வசதி செய்திருப்பதாகவும். “...நீங்கள் எனக்குச் சொல்லவேயில்லையே அப்பா?” குரலிலேயே கவலை. “உனக்கு திடீர்னு தெரியணும்னுதான் சொல்லல.” “நீங்க ஊர் போய்த் திரும்ப ஒரு வாரம் ஆகும் இல்ல...?” “மேல ஆகும். போறதுக்கு மட்டும்தான் டிக்கெட் ரிஸர்வ் செஞ்சிருக்கு. வரப்ப, அப்படியே குற்றாலம், பாபநாசம், மதுரைன்னு ஒரு ட்ரிப் அடிச்சிட்டு வரதா உத்தேசம்...” அவள் இப்போதே தான் கட்டிய வீடு நிலைகுலைந்து விட்டதாக நினைத்து விடுகிறாள். கண்களில் வெம்பனி...” “நீங்க... நான் இங்கே தனியாக இருக்கலாம்னு நினைக்கிறீங்களாப்பா?” “அப்படின்னு நான் சொன்னேனா?” “பின்ன... நான் எங்கே போறது?” “எங்கே போகணும்? நீங்களும் என்னோடு வரீங்க. நாடக விழா - பிறகு குற்றாலம், மதுரை எல்லாம் போய் விட்டு வரோம்...!” மகிழ்ச்சியில் கண்ணிதழ்கள் கட்டுப்படுத்த இயலாமல் துடிப்பது போல் இருக்கிறது. சரி, தப்பு, நாலு பேர் பார்வை என்ற எந்தக் குறுக்குக்கோடும் விழவில்லை. தான் கவலையறியாத சிறுமியாக ஊருக்குப் போகும் சந்தோஷத்தை அநுபவிப்பது போல் திளைக்கிறாள். பயணத்துக்கான ஏற்பாடுகள். இவள் நாலே நாலு சேலைகளுடன் உள்ளாடைகளுடனும் இங்கு வந்திருக்கிறாள். புதிதாக இரண்டு கைத்தறிச் சேலைகளும் தேவையான துணிமணிகளும் அவரே கடைக்கு அழைத்துச் சென்று வாங்கிக் கொடுக்கிறார். வித்தியாசமே தெரியவில்லை. உரிமையுடன் பழைய காலணி தேய்ந்து விட்டதென்று புதியது வாங்கிக் கொள்கிறாள். “எனக்குத் தெரியாமலே எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கி எப்படி ஏமாத்தினீங்க?...” “இது ஏமாத்தலா? திடீர் ஸர்ப்ரைஸ். அப்பதான் உங்களுக்குக் கூடுதல் சந்தோஷம் இல்லையா?...?” “ஆமா, நீங்க இப்பல்லாம் முதல்ல போல இல்லாம நீங்க, வாங்கன்னு ஏன் சொல்றீங்க? எனக்கு அது எப்படியோ இருக்கு. இதெல்லாம் பொய் - உனக்கும் இந்த மனிதருக்கும் ஒட்டும் இல்ல, உறவுமில்லன்னு உள் மனசு இடிக்கிறதப்பா?” “அப்படியே எனக்குப் பழக்கமாயிடுத்து ரேவம்மா. சின்னவங்க, பெரியவங்கன்னு இல்ல. தாயம்மா, ஆயா யாராக இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன்.” “உங்க மாமிய? உங்க... தீபாவ?” “சாருவக்கூட பல சமயங்களிலும் நான் ‘இங்கே வரேளாம்மா!’ன்னு பேசித்தான் பழக்கம். தீபாவ அப்படிச் சொல்லலன்னு வச்சுக்குங்க...” “அப்ப, நானும் அப்படி இல்லையா? என்னை நீங்க வேறயா நினைக்கிறீங்கதானே?...” “இல்லம்மா... அப்படி நினைச்சிருந்தா, நான் இங்க உங்கள இருக்கச் சொல்லி இருப்பேனா?...” “எனக்கு என்னமோ, ஒரு சொர்க்கம் கிடைச்சாப்பல இருக்கு. இது எப்படி கைநழுவிப் போயிடுமோன்னும் பயமா இருக்கு. ஒரு பெரிய அலையடிக்கிற சமுத்திரத்து நடுவிலே, இருக்கிறேன். ஆனால் அலையடிக்கும் சமுத்திரம்னு தோணவேயில்ல. பல சமயங்களிலும், இது உண்மையா, கனவான்னு என்னையே கேட்டுப் பார்த்துக்கிறேன்.” “ஏன் அப்படிச் சந்தேகம் வருது? சந்தேகத்தினால், நீ இப்போது உணரும் சந்தோஷமும் போகிறது. சந்தோஷங்கறது, மனசைப் பொறுத்ததுன்னு தத்துவவாதிகள் சொல்லுறாங்க. ஆனால் ரேவம்மா, உங்க வாழ்க்கையை நீங்க மனச்சந்தோஷத்தோடு எப்படி கழிச்சிருக்க முடியும்? ஆனால் ஒரு பக்கம் பார்த்தால், தன் சந்தோஷத்தைப் பற்றிய உணர்வே இல்லாமல், ஏதோ ஒரு வீட்டில், உடல் பொருள் ஆவின்னு சொல்லுறாப்போல எல்லாத்தையும் கொடுத்தும் எந்த விதமான பிரதிபலனும் இல்லாதது மட்டுமில்லாமல், அநியாயமாக இம்சிக்கிறவங்க கிட்டேந்து பொறுக்க முடியாமல் வரணும்னா, அங்கே ‘மனநிலை’ எப்படி வர முடியும்? இந்த உடம்புக்கும் மனசுக்கும், எப்படித் தொடர்பு இல்லாம இருக்க முடியும்? நீங்க சந்தேகமில்லாம சந்தோஷமா இருங்கள். இந்தச் சந்தோஷம், அநீதியாகவோ, அநியாயமாகவோ வரல. எந்தத் தப்பும் யாருக்கும் பண்ணல. ரேவம்மா... யாரைப் பத்தியும் எதற்கும் கவலைப்படக்கூடாது...” தாயியிடம் கூறிவிட்டு, பால்காரருக்குச் சொல்லிவிட்டு, கே.ஜி.கே.யிடம் சாவி கொடுத்துவிட்டு, அவர்கள் கிளம்புகிறார்கள். இதற்கு முன் ரேவு இப்படி ஒரு வண்டிப் பிரயாணம் அநுபவித்ததேயில்லை. நெல்லையில் இறங்கி வண்டி மாறி, நாகர்கோவில் வரும்போதே, குமரிகோட்டக் குழுவினர், இளைஞர்கள், ஏழெட்டுப்பேர், இரண்டு பெண்கள் உடபடக் காத்திருக்கிறார்கள். ஓட்டலில் காலையுணவு. ரேவுவுக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது. ஆனால் வந்திருந்த இரண்டு பெண்களும் கல்லூரி மாணவிகள் என்றும், நாடகக் குழுவில் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். “இந்த இலை அடை, எங்கள் ஊர் ஸ்பெஷல் சாப்பிடுங்கள்” என்று சாப்பிட வைக்கிறார்கள். “ஸார், உங்க ரெண்டு பேருக்கும், குமரி ஹோட்டலில் ரூம் போட்டிருக்கு, சரியா...?” என்று ஒட்டு மீசை வைத்துக் கொண்டு ஒல்லியாக இருந்த ஓர் இளைஞர் தெரிவிக்கிறான். “எதுக்கப்பா ஸ்டார் ஓட்டலெல்லாம்? நீங்க தங்கி இருக்கும் ஹால் போதும் எனக்கு. ரேவம்மா, இந்த கர்ள்ஸ் கூட ஃப்ரீயாக இருப்பாங்க. ஏம்மா, ரேவம்மா?” மனசுக்குள் ஆயிரம் தரம் நன்றி செலுத்துகிறாள். ஏதோ ஒரு பெரிய பள்ளிக்கட்டிடத்தில் அவர்கள் அனைவரும் தங்கி இருக்கிறார்கள். பெண்கள் ஐந்தாறு பேர் தனியாக ஒரு விடுதியில் இரண்டு அறைகளில் தங்கியுள்ளனர். பள்ளிச் சுற்றுக்கு அருகில் ஒரு வீடு போல் இருக்கிறது அந்த விடுதி. இரு அறைகளுக்கும் ஒரு பொதுவான குளியலறை வசதி இருக்கிறது. “என் பேர் மாலதி. என் பேர் ஷீலா, நான் தங்கச்சி” என்று அவர்கள் ஒவ்வொருவரும் சிரித்துக் கொண்டு அறிமுகம் செய்து கொள்கிறார்கள். மாலதி, சிவப்பாக, நீண்ட முடியைப் பின்னல் போடாமல் விட்டுக் கொண்டிருக்கிறாள். சந்தனக் கீற்றூம் குங்குமப் பொட்டும், ஜிமிக்கியும் தங்க வளையல்களும் மெல்லிய செயினும் அணிந்து இருக்கிறாள். எம்.ஏ. படித்து விட்டு, நாகர்கோயிலில் ஆசிரியையாக இருக்கிறாளாம். ஷீலா சுருண்ட முடியைச் சேர்த்து ஒரு வளையம் போட்டு இருக்கிக் கொண்டு நுனியில் பம்மென்று விட்டிருக்கிறாள். செவிகளில் வளையங்கள், நெற்றியில் குத்தாக ஒரு சாந்துப் பொட்டு, மேனியில் வேறு அணிமணிகள் இல்லை. தங்கச்சி வயதானவளாக இருக்கிறாள். முன் வரிசைப் பற்கள் இரண்டு தூக்கி இருக்கின்றன. நல்ல உயரம். கிள்ளி எடுக்கச் சதையில்லை. ஷீலா மார்த்தாண்டத்தில் ஏதோ அலுவலகத்தில் வேலை செய்பவள். தங்கச்சி இவர்களைப் போல் படித்தவளில்லை. ஏதோ முந்திரித் தொழிற்சாலையில் முன்பு வேலை செய்தாளாம். இப்போது, முழு நேரமாக நாடக சங்கத்தில் இருக்கிறாளாம். இவளாக அவர்களைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. “நீங்க... புரொபசர் ஸ்டூடண்டா?” “ஆமாம்...” “முன்ன ரெண்டு மூணு தடவைக் காம்புக்கு வந்திருக்கிறார். முன்ன குற்றாலத்தில் வெச்சு நடந்தப்ப வந்தாரில்லை, ஷீலா?” “ஆமாம். போன மூணாம் வருஷம் இவங்க வந்ததில்ல...” “நான் இப்பத்தான் வந்திருக்கேன்...” என்று ரேவு சிரிக்கிறாள். “புரொபஸர் ஸார் சொல்லியிருக்கிறார். உங்களை, கோயில் கடற்குளியல், சுசீந்திரம், எல்லா இடத்துக்கும் கூட்டிக் கொண்டு காட்டச் சொல்லி, நான் உங்க கூட வருவேன்... என்ன?” என்று தங்கச்சி தோழமையுடன் கையைப் பற்றுகிறாள். “...உங்களுக்கெல்லாம் இப்ப ஒரு புரோகிராமும் இல்லையா?” “ஓ, அங்கே பேச்சு, கிளாஸ், டிஸ்கஷன்னு இருக்கும். நாங்கள் ராத்திரிதான். டிராமாவில் பங்கெடுப்போம்...” “என்ன கிளாஸ், என்ன டிஸ்கஷன்...?” ரேவுவுக்கு ஒன்றும் புரியத்தானில்லை. அன்று குளியலறையில் நீராடிப் புத்துணர்வு பெறுகிறாள். வெயிலுமில்லாமல் மழையுமில்லை. கசகசவென்று மக்கள் மொய்க்கும் கடைகள், தெருக்கள், ஊர்திகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடக்கிறார்கள். தங்கச்சி, முன்னெல்லாம் கன்யாகுமரி எவ்வளவு அமைதியாக இருக்கும் என்றும், தன் பாட்டியுடன் சிறுமியாக மணலில் வந்து விளையாடியதையும் சொல்கிறாள். பவுர்ணமி நிலாவில், பால் வெண்மையில் மணல் பரப்பு விரிந்திருக்கும். அவள் பாட்டன் திருவிதாங்கூர் பங்களாவில் காவல்காரனாக இருந்தாராம். பாட்டி பக்கத்தில் சிறு வியாபாரம் செய்ததுண்டாம். காந்தி மண்டபம் வந்தது தெரியும் என்று பழைய கதைகள் சொல்கிறாள். இப்போது கோயில் அருகில் கடைகள், குப்பைகள், நான், பன்றி கூட வருவதைப் பார்த்து சேய், சேய் என்று பரிதவிக்கிறாள். அங்கே... சாராயக்கடையும் கூட இருக்கிறது. இந்திய நாட்டின் பல்வேறு மொழிகள், உடைகள், பலபல வெளிநாட்டு சாமான்களைப் பரப்பி வைத்துக் கொண்டு கூவும் வியாபாரிகள் எதுவுமே ரேவுவுக்கு மனசில் பதியவில்லை. ‘நான் எங்கே வந்திருக்கிறேன்? எதற்காக வந்திருக்கிறேன்? எனக்கும் இவர்களுக்கும் என்ன ஓட்டு? என்ன காரணத்துக்காக இப்படி ஒரு சந்திப்பு...?’ அவள் கண்கள் எதிலும் நிற்காமல் சூனியத்தில் இலயிக்கிறது. விடுதியிலேயே அவர்களுக்குச் சாப்பாடு தயாராகிறது. அங்கேயே சாப்பிடுகிறார்கள். தாழ்ந்த ஓட்டுக் கூரை, மர மேசைகள், கொட்டையான புழுங்கலரிசிச் சோறு, ஒரு குழம்பு - வாழைக்காயோ, சேனையோ ஒரு கூட்டு - மோர்த்தண்ணீர்... “நீங்க நாடகத்தில் நடிப்பீங்களோ?” “இல்லை...” “வேலை செய்யிறீங்களோ, ஸ்கூல்ல, காலேஜில...?” “இல்லை...” “பின்ன...” “இப்பதான் பரீட்சை எழுதப் போறேன்...” “ஓ...!” “கல்யாணம் கழிச்சி... பின்ன படிக்கிறேளோ?...” “ஆமாம்.” ஒரே வரி பதிலில் முடங்கிக் கொள்கிறாள். அவர்களுக்கு இவள் மீது ‘தெரிந்து கொள்ளும்’ ஆர்வம் விழுந்து விட்டது. ஆனால் அவளுக்கோ எதுவும் வேண்டாம் போல் இருக்கிறது. ரங்கப்பாவுடன் புறப்பட்டு வரும் போது எத்தனை சந்தோஷமாக ஆவலாக இருந்தது? அவரும் அவளும் மட்டும் தனியாக, அவர்களைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சூழலில், அந்தத் தோழமை நெருக்கத்தை அநுபவிக்கும் வாய்ப்பு இல்லை. “இப்ப அவங்கல்லாம் என்ன செய்வாங்க? நாமும் போய்ப் பார்க்கலாமே?” என்று கேட்கிறாள். “ஓ, இப்ப சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பாங்க... மூணு மணிக்கு பகல் செஷன் நடக்கும் போகலாம்...” மூன்று மணி வரை அவர்கள் நாடகத்தைப் பற்றிச் சிறு குரலில் பேசிக் கொண்டு கீழே படுத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் ஒரே கட்டில் - படுக்கை, ரேவுவுக்கு.... அவள் அவர்களுடைய ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறாள். அது ஆங்கிலப் புத்தகம். வெய்ட்டிங் ஃபார்... என்று போட்டிருக்கிறது. புரியவில்லை. அதேசமயம், அவர்கள் தன்னை விடப் படித்தவர்கள், மேலானவர்கள் என்ற எண்ணம் அவர்களை அவளிடம் இருந்து பிரிக்கும் மதில் சுவராக எழுகிறது. எப்படியேனும் பறந்து அந்த வீட்டுக்குப் போய்விட மாட்டோமா என்று தோன்றுகிறது. ‘நான் தனியாக இருக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள்’ என்று சொல்லி இருக்கலாமே?... அல்லது... இந்த ரங்கப்பா ஏனிப்படி நடந்து கொள்கிறார்? புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் சூனியத்தில் இலயிக்கிறாள். அவர்கள் இவளை இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அப்படியே தூங்கி விடுகிறார்கள். ஐந்து மணிக்கு எழுந்து முகம் கழுவி, புதுமை செய்து கொள்கிறார்கள். நீலா தேநீருக்குச் சொல்ல, பையன் ஒருவன் கொண்டு வருகிறான். ஐந்தரை மணிக்குப் பள்ளி வளைவுக்குள் செல்கிறார்கள். அங்கே மாடியில் ஒரு ஹாலில் சுமார் நாற்பது ஐம்பது பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு தாடிக்காரர் பேசிக் கொண்டிருக்கிறார். மேடை நாற்காலிகளில் ஒன்றில் ரங்கப்பா இருக்கிறார். அவர் தமிழில்தான் பேசுகிறார். ஆனால் என்ன பேசுகிறார் என்று ரேவுவினால் புரிந்து கொள்ள முடியவில்லை மாலதி, நீலா இருவரும் பின்வரிசை இளைஞர்களுடன் பேசப் போகிறார்கள். சற்றைக்கெல்லாம் அவர்கள் எழுந்து வெளியே செல்வதையும் ரேவு பார்க்கிறாள். சமுதாய உற்பத்தி, அமைப்பியல், தனிமைப்படுத்தப்படுதல்... என்றெல்லாம் சொற்கள் வருகின்றன. ரேவுவுக்கு அந்தப் பொருள் விளங்காத போதிலும் ‘தனிமைப் படுத்தப்படுதல்’ என்ற பதம் மட்டும் தன்னையே சுற்றியதாகத் தோன்றுகிறது. கூட்டத்தில் இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர் பேசி முடித்ததும் ஓர் இளைஞன் வந்து கவிதை படிக்கிறான். விழித்தெழு... விழித்தெழு... என்று குதித்துக் கொண்டு கைக் காகிதத்தைப் பார்த்துக் கவிதை படிக்கிறான். அப்போது ரங்கப்பா அவளைப் பார்க்கிறார். புன்னகை செய்கிறார். ஆனால் அவளால் சிரிக்க முடியவில்லை. கோபம் வருகிறது. அவரிடம் கோபம் கொள்ள அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன் கோபம் வருகிறது? இதெல்லாம் ஆராய மனம் தெளிவு காணவில்லை. கோபம் மட்டும் வருகிறது. இப்போதே இந்த இடத்தை விட்டுப் போய்விட்டால் தேவலை என்று தோன்றுகிறது... இது ஏன்? அவள் அந்தக் கோபத்தைக் காண்பிப்பது போல் விருட்டென்று எழுந்து படி இறங்கிக் கீழே வருகிறாள். வளைவை விட்டு வெளியே... இருட்டு வரும் நேரம், ஒளி விளக்குகள் பூத்திருக்கின்றன. ஓரிடத்தில் வட்டமாகச் சிலர் தெரிகின்றனர். அருகில் போய்ப் பார்க்க மனமில்லை. வாசலில் நிற்கிறாள். பஸ் நிறைய மக்களுடன் விளக்கைப் போட்டுக் கொண்டு போகிறது... தான் என்ற உணர்வு கழன்று... எங்கோ புரியாத உலகில் பூச்சி போல் பறப்பதாகத் தோன்றுகிறது... யாருமில்லை. அம்மா, அப்பா, தம்பி, அண்ணன், புருஷன், மாமனார், குருமடம், அக்கம்பக்கம், கடைக்கண்ணி, கல்லுரல், அடுப்பு, குழாய், பத்திரிகை, சுதா, எல்லாப் பந்தங்களும் விடுபட்டுவிட்டன. இதோ இந்த மனிதர், இவரும் விடுபட்டு விட்டார். இவள்... ரேவு... இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சிறு பூச்சி. இதற்கு முகமில்லை. வர்ணமில்லை, எதுவுமில்லை. பூச்சி... ஆம்... பூச்சி... இங்கே நடப்பதெல்லாம் எனக்குச் சொந்தமில்லை... இங்கே நான்... நான் மட்டும் தனி... தோளில் யாரோ கை வைக்கிறார்கள். சிலிர்த்துப் போய்க் குலுங்குகிறாள். “ரேவம்மா என்ன?... ஏனிங்கே உட்கார்ந்திருக்கேம்மா?” அவளுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. முகம்புரியாத இனம்புரியாத உணர்வுகள். “சீ, எதுக்கு இப்ப அழறே? ம், ஷ்... ரேவம்மா, அங்கே நாடகம் போடறாங்க. வா போகலாம்.” ‘வாங்க’ என்று நின்ற சுவர் விழுந்து விட்டது. அவள் கைபற்றி அழைத்துச் செல்கிறார். அந்த வட்டத்தைச் சுற்றிய கும்பலில்... |