உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் - 5 அன்று சுதா வீட்டில் இருக்கிறாள். வீடெல்லாம் ஒட்டடை அடித்துப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். வீட்டு அங்கியை மாட்டிக் கொண்டு சேலைகளுக்குக் கஞ்சி போட்டு மாடியில் கொண்டு உலர்த்துகிறாள். இடைக்கதவைத் திறந்து ரேவு எட்டிப் பார்க்கிறாள். வேம்பு வந்து போனபின், மனசில் ஏதேதோ தாபங்கள் கிளர்ந்துவிட்டன. தன் மனப்புண்களை அவள் யாரிடமும் திறந்து காட்டியதில்லை. அக்கம் பக்கம் தெரிந்தவர்களுக்கு அவள் பிறந்த வீட்டைப் பற்றி, தாயைப் பற்றி எதுவும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறாள். “அம்மா சின்ன வயசிலேயே போயிட்டா. அதனாலேயே எனக்குப் பெரியவளாகு முன்பே, குருசுவாமி சொல்லி, சாஸ்திரப்படி கல்யாணம் பண்ணிட்டா” என்று தான் ரேவு சுதாவிடம் சொல்லி இருக்கிறாள். “என்ன சுதா, இன்னிக்குக் கிளீனிங்கா?” “ஆமாம், ரகு டூர்ல போயிருக்கார். எனக்கு இன்னிக்கு ஆஃப். ஒட்டடை சேர்ந்திட்டது. என்ன மாமி, உங்க பிரதர் போயாச்சா? நீங்க என்ன ரிலாக்ஸ்டா இருக்கீங்க...?” “ஆமாம்...” அவர்கள் பகுதியை எவ்வளவு நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முன்னறை; அடுத்த அகலமான இடம் படுக்கையறையாகவும் சாப்பிடும் அறையாகவும் தடுக்கப்பட்டிருந்தது. பின்னே சமையலறையும், குளியல் அறையும் நவீனமாக மாற்றப்பட்டிருக்கிறது. போன மூன்றாம் வருஷம், சாவித்திரியும் மாமனாரும் வந்த போது, - அந்த இடங்களை வழுவழுப்பான டைல் பதித்துப் புதுப்பித்தார்கள். பிறகுதான் சுதா குடிவந்தாள். முன் அறையில் சோபாக்கள், டி.வி, கச்சிதமாக ஒரு சுவரோவியமாகக் குழந்தைகளும் பூனைக் குட்டிகளுமாகப் படம்... பூங்கொத்து, ஊதுவத்தி கொளுத்தி வைத்த வாசனை... தரையில், வழவழவென்று இவர்கள் ஷீட் ஒட்டி வசதி செய்திருக்கிறார்கள். ராம்ஜி இங்கே தான் படிக்கிறான். அப்படியே நீண்ட சோபாவில் சில நாட்கள் படுத்துத் தூங்கி விடுகிறான்... இதற்கு வாடகை ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள்... “நீங்கள் வீட்டை அழகா வச்சிட்டிருக்கேள். எங்க வீட்டை இப்பல்லாம் என்னால சமாளிக்க முடியல. வேலைக்கு ஆள் இதுவரை வச்சுக்கல. அவருக்குப் பிடிக்காது. ‘நீ என்ன வேலைக்கா போற? வீட்டு வேலை செய்யதுக்கென்ன?’ என்பார்.” “அதெப்படி, நாங்க ஆபீசில செய்யற வேலையை விட பத்து மடங்கு நீங்க சம்பளமில்லாம உழைக்கிறேள். வார லீவு, மாச லீவு எதுவும் கிடையாது. நானும் தண்ணீர் அடிச்சு வைக்க மட்டும் தான் குப்பா பாயை வச்சிட்டிருக்கிறேன். ஏன்னா, உள்ளே அவள் வந்து செய்ய வேலையுமில்லை; எங்களுக்கு நேரமும் சரி வராது. நீங்க எத்தனை வேலை செய்யறீங்க? நிச்சயமா தண்ணீரடிக்க வேணும் ஆள் வச்சுக்கலாம்... பேசாம ஒரு மோட்டார் போட்டுக்கங்களேன்?” “முன்னே வேறொரு இடத்திலே போர் போட்டு மோட்டார் போட்டிருந்தது. அது கெட்டுப் போய், சுத்தமா தண்ணீரும் இல்ல... இப்ப வேற இடத்தில போட்டிருக்கு. மோட்டார் வைக்கல... அவருக்காகத் தோணனும்...” “காப்பி குடிக்கிறேளா மாமி...?” “இப்பவா, மணி பதினொண்ணு. ரெண்டுங்கெட்டான் நேரம்... நீ அன்னிக்குப் பத்திரிகையில் வந்ததைப் பத்திக் கேட்டே... அதைப் பேசலாம்னு வந்தேன்...” “இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டேளே?...” “இல்ல. நவராத்திரி இப்ப. முன்னெல்லாம்னா, ஸ்நானம் பண்ணி லலிதா ஸஹஸ்ரநாமம் வாசிப்பேன். இந்த வருஷம் எனக்கு ஒண்ணும் படிக்கல, இவர் ஊரில இல்ல. பெங்களூரோ எங்கியோ போயிருக்கார். சரஸ்வதி பூசையன்னிக்குத்தான் காலம வரார்?” “ஓ, அதான் ரிலாக்ஸ்டா இருக்கேள். அப்ப காப்பி சாப்பிடலாம், வாங்க...” “இரு, வாசக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு வரேன்!” ரேவு மீண்டும் வரும் போது, சாப்பிடும் மேசையில் மொறு மொறுவென்று அடை வார்த்து வைத்திருக்கிறாள். அதற்கு இசைவாக, ஒரு சாம்பார் சுடச்சுட... “ஐயோ இதென்னம்மா, சுதா காபிதானே சொன்னே?” “நீங்க அடை பண்ணினால், இங்கே வீடெல்லாம் மணக்கும். உங்கள் சாம்பார் தனி டேஸ்ட். ரகு கூடச் சொல்வார். மாமி தாளித்துக் கொட்டினாலே மணக்கிறது. காலையில் காபிப் பொடி ஃபில்டரில் போட்டுக் கொதிநீர் விடும் போது ஒரு மணம்... உங்களுக்குக் கை மணம் அதிகம்...” “சரியாகப் போச்சு போ! நீங்க வீட்டை மட்டும் தான் அநுபவிக்கிறேள்ன்னு நினைச்சேன். இதெல்லாமுமா?” என்று ரேவு சிரிக்கிறாள். “இதில கீரை போட்டிருக்கியா...?” “ஆமாம். அரிசி, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெங்காயம் எல்லாம்... எல்லா சத்தும் சேருது. சாப்பிடுங்கோ மாமி...” இப்படி இவளை யார் உபசரிக்கப் போகிறார்கள்? ரேவு நாற்காலியில் உட்கார்ந்து மேசை (எச்சில் மேசை - எச்சில் தட்டு)யில் அந்தப் பண்டத்தைச் சுவைத்துச் சாப்பிடுகிறாள். கிண்ணத்தில் வெங்காயம் போட்டு சாம்பார். குளிக்காமல் கொள்ளாமல் அவள் பண்ணிய பண்டம். “ருசியா இருக்கா மாமி? உங்களுக்குக் காரம் அதிகமோ? கொஞ்சம் சோம்பு வச்சு அரைச்சேன்...” என்றெல்லாம் சுதா சொல்லிக் கொண்டு இன்னொரு அடையையும் கொண்டு வருகிறாள். “ஐயோ, போதும் சுதா? நானிப்படி அநாசாரமா... நவராத்திரியும் அதுவுமா காலங்காத்தால அடை திண்ணுண்டிருக்கேன்...” ஒரு குற்ற உணர்வுடன் அதைச் சாப்பிட்டு முடிக்கிறாள். “பரவாயில்ல மாமி, தினம்தான் சாப்பாடு... மெதுவா ரெண்டு மணிக்குச் சாப்பிடுங்கோ. நீங்க சாப்பிடவும் காபி ஆறிச் சூடு பதமா இருப்பதற்கும் சரியாக இருக்கும்...” “நீ சாப்பிடலியா? எனக்கு உபசாரம் பண்ணுறே?” என்று கைகழுவப் போகிறாள். “இதோ சாப்பிடப் போறேன்...” ரேவு அவள் முன் உட்கார்ந்து காபியைப் பருகிக் கொண்டே, “சுதா, நான் உபசாரமாகச் சொல்லல. நீ எனக்கு ஒரு தங்கை போல இருக்கே. நான் இவ்வளவு மனசுவிட்டு யாரோடும் பழகினதில்ல...” “அய்யோ, என்ன மாமி இது. ஒரு பெண்ணுக்குப் பெண், புரிஞ்சு பழகலன்னா அப்புறம் என்ன பிரயோசனம்? எனக்குப் படிக்க முடிஞ்சது; வேலை செய்து, சுயச்சார்புடன் இருக்க முடியிது. இதனால மற்ற பேருக்கும் ஒத்தாசையா இருக்கணுமில்லயா? நீங்கள் படும் சிரமம், நான் பாத்துட்டே இருப்பதால கண்ணில் உறுத்துது... நீங்க... அந்த வளப் பார்த்திருக்கேளா மாமி?...” “நான் எதுக்கு அவளப் பார்க்கிறேன்? எனக்கு, சுதா, இந்த வீடு, குரு சாமி, மடம், கோவில், இங்கே வந்து யாரேனும் விசேஷம், பூஜை பண்ணினா, ஒன்பதுகஜம் சுத்திண்டு, பூத்தொடுத்து, பரிமாறி, எதானும் வேலை சொன்னாச் செய்யணும். நமஸ்காரம் பண்ணனும். ஆபீஸ் காரா யாருன்னு கூடத் தெரியாது. நான் இப்படி உங்கிட்ட டிரௌசர் பாக்கெட்ல இருக்கு, டூர் டூர்னு போறார்னு சொன்னப்ப நீதானே, ஆபீஸ் மிச்சூடும் இது தெரியுமாம்னு வந்து சொன்னே? நீயும் சொன்னேன்னு துணிச்சலா இப்படி எழுதிப் போட்டாச்சு. எனக்குப் பயமாயிருக்கு சுதா. இது தெரிஞ்சா அவர் என்னைப் பெல்ட்ட உருவி அடிச்சிக் கழுத்தப் புடிச்சி வெளியே தள்ளிடுவார். இத இப்படியே மறுந்துடுவதுதான் நல்லது. என் தலையெழுத்துப் போல நடக்கட்டும்...” “சே, எனக்கென்னன்னா, அவ்வளவு பெரிய பொஸிஷன்ல இருக்கறவ ஏனிப்பிடி ஒரு கெட்ட பேரை சம்பாதிக்கணும்? சாதாரணமா, ஆம்பிள பாஸ், ஸ்டெனோ பொம்பிளன்னா, மடில வந்து உட்காருடீன்னு சொல்லுவான். இது கேட்டுக் கேட்டு ஊசிப்போன சமாசாரம். ஆனா அது போல ஒரு பெண் தனக்குக் கீழே ஒருத்தனத் தொடர்பு வச்சுப்பாளா?... நீங்க இரு கோடுகள் சினிமா பார்த்திருக்கேளா மாமி? அதுல, அவா ஏற்கெனவே கல்யாணமானவா. ரொம்ப கவுரமா அவ கலெக்டர் நடப்ப. ஆனா ஊரே, ஆபீசே வம்பு பேசும். இங்கே... அப்படியும் தெரியல. எனக்கு இதுல எங்கோ தப்பு இருக்கும்னு படுது... ஆமாம், ரேவு மாமி, நீங்க அவர்கிட்டயே கேட்கலியா? இதென்ன, இதெல்லாம் இருக்கு பான்ட் பாக்கெட்ல, நமக்குத்தான் இதெல்லாம் வேண்டாமேன்னு கேக்கலியா?” “என்னத்தைக் கேட்கறது? எங்கிட்ட எப்ப முகம் கொடுத்துப் பேசறார்? சுதா! ஆசை, கொஞ்சல் அது இதெல்லாம் கதையில் தான் நான் படிக்கிறேன். நாங்க புருஷன் பெண்சாதி. நான் ஒரு பொம்மை. ரெண்டு புள்ளைப் பெத்திருக்கேன்... நான் இவர் வீட்டுக்கு வரச்சே ஆளாகக் கூட இல்ல. கல்யாணம் கோவில்ல நடந்தது. இங்கே கூட்டிண்டு வந்தா. உங்கிட்ட இன்னிக்குச் சொல்றேன். ஆத்துல எல்லாரும் வேற ஒரு இடத்து விசேஷத்துக்குப் போனப்பா, ஆளாகாத பெண்ணை இழுத்து வச்சு மிருகமா நடந்துண்டார். எங்க மாமனாருக்கு அத்தை ஒரு பாட்டி இருந்தா. பட்டப்பகல், புடவையெல்லாம் ரத்தம். ‘பாட்டி... பாட்டி’ன்னு அழுதேன்... பாட்டி, சித்த நாழி ஒண்ணும் பேசல. “குழந்தே, கொட்டில்ல போயிரு. நீ பெரியவளாயிட்டே!”ன்னா. அன்னிக்குப் பூரா அழுதேன். அப்புறமும் அழுதேன். சீ, இதெல்லாம் எப்படிச் சொல்ல, யாரிடம் கொட்டி அழ?” ரேவு இறுகிப் போனவளாக, நிறுத்துகிறாள். சுதா பேசவேயில்லை. “அன்னிக்கு ஒரு புத்தகத்தில் பார்த்தேன். நீ குடுத்தது தான். அதில் பதினெட்டு வயசுக்குக் குறைவான பெண்ணை, சொந்தப் பெண்சாதியாக இருந்தாலும் புருஷன் அவளை அணுகக் கூடாது. அப்படிப் பலவந்தம் செய்தால் அதுவும் கற்பழிப்புதான்னு, அவள் சம்மதம் இல்லாமல் நெருங்குவதே அப்படிப்பட்ட குற்றம்தான்னு போட்டிருந்தது. அப்படிப் பார்த்தா, தினம் தினம் எங்க வீட்டில இதுதான் நடக்கிறது; நடந்தது.” சொல்லுவது என்று தீர்மானித்த பின் எதை விடணும், எதை ஒளிக்கணும்? “சுதா, எனக்கு அந்த ஆபீசர் மேடம் மேல கோபமே இல்லை. ஆனா இந்த ராட்சசன் அவகிட்ட எப்படி இருப்பான்? அவ எப்படி ஏத்துக்கறா?...” சுதாவுக்குச் சிரிப்பு வருகிறது; அடக்கிக் கொள்கிறாள். “ரேவு மாமி, நீங்க பச்சக் குழந்தையாயிருக்கீங்க... எனக்கு யார் மேலேன்னு தெரியாம கோபம் வருது...” “இந்தத் தடிமாடுகளுக்கு எப்படித் தண்டனை கொடுக்கலாம்? மாமி, நீங்ன்க டிவர்ஸுக்குப் போட்டு, விடுதலை வாங்கிண்டு, ஜீவனாம்சமா சம்பளத்தில் ஒரு பாதியும் வாங்கிக்கணும். ஹாயாக வாழணும்...” “வாழறதாவது? வாழாவெட்டிம்பா... அந்தப் பொம்பள பெரிய ஆபீசர்... நான் மட்டி. எனக்கு ஒரெழவும் தெரியாது. எனக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பங்கு போட்டுக்க வந்துட்டான்னு நான் கோபமே படல. இவரைத் திருத்தணும், கூட வாழணும்னு தியாகம் பண்ண எனக்குத் திராணி இல்ல. ராம்ஜி மேல தான் சித்த பாசம். பரீட்சை தேறி, மெடிகல் படிக்கணும்னு தவசு பண்ணுறது குழந்தை. வாழணும்னா அவன் மேல கடுகளவு பாசம் இருப்பதாலதான். நீங்க சொல்றாப்பல விடுதலைன்னு கொடுத்து ஏதோ படியளந்தா கிருஷ்ணா ராமான்னு இருந்துட்டுப் போறேன்... கோர்ட்டு கீர்ட்டு எதுக்கு?” “மாமி விடுதலைன்னு அப்படிப் பேசினால் உங்க பேரில வீணா அவர் பழி சுமத்தலாம். சமூகம் அதைத் தான் ஒத்துக்கும். சட்டப்படி, விடுதலை வாங்கிக்குங்க. அப்பதான் மெயின்டனன்ஸ் கிடைக்கும். எனக்குத் தெரிஞ்ச, குடும்ப கோர்ட் வக்கீல் இருக்காங்க. உங்க கேஸைச் சொல்றேன். எதுக்கு நீங்க இப்படி வதைப்படணும்? அதோட, அவ பொஸிஷன் என்னங்கறதையும் பக்குவமாத் தெரிஞ்சிக்கணும். ரேவு மாமி, எனக்கு உங்களைப் போல் வாய் திறக்காமல் கொடுமைகளைச் சகிக்கும் பெண்களுக்குன்னு எதானும் ‘சர்வீஸ்’ பண்ணணும்ங்கறது. அதுக்காகவே நான் சிநேகிதிங்கற சங்கத்தில் கூட மெம்பராயிருக்கேன். எங்களைப் போல் படிச்சு, வேலை செய்யறவங்க இப்படி மற்ற பெண்களுக்கு உதவனும்னு தான் அந்த சங்கம் செயல்படுது. அதுனால நீங்க பயப்பட வேண்டாம்...” அவள் பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும், ரேவுக்குப் பயமாகவே இருக்கிறது. “சுதா, நான் விடுதலைப் பத்திரமே எழுதிக் குடுத்துடறேன், எதுக்குக் கோர்ட்டு கீர்ட்டுன்னு? அசிங்கம். முதல்ல அவரே என்னைப் பொணம் பெறட்டிடுவார். அடிபடணுமா? பிள்ளைகளுக்கெல்லாம் இந்தச் சண்டை தெரிஞ்சா மானக்கேடு...” சுதா சிறிது நேரம் பேசவில்லை. “ஆல்ரைட் மாமி. நீங்க சொல்றதும் சரிதான். ஆனால் நீங்க நினைக்கிறாப்பல அது சுலபமா ஆயிடாது. முதல்ல, உங்க ‘ஸர்வீஸை’ ஒரு காசு செலவில்லாம இப்படிக் குடும்பம்னு உழைக்க எவ வருவா? அதனால உங்க புருஷன் அப்படி விடச் சம்மதிக்க மாட்டான். மேலும், நீங்க இப்ப சந்தேகப்படும் கள்ள உறவு, நிசம்தானாங்கறதை முதலில் ஊர்ச்சிதம் செய்து கொள்ளணும்.” “அவள் ஒரு பெரிய பதவியில் உள்ளவள். வீணாக ஒரு பெண்ணுக்குப் பெண் சேற்றை வீசி எறியக் கூடாது. நீங்கள் இன்னும் ஒரு வாரம் பத்து நாள் டயம் குடுங்க. நான் இது சம்பந்தமா இன்னும் விசாரிச்சுச் சொல்றேன்...” சுதா ரேவுவின் கையைத் தன் கைக்குள் வைத்து மூடித் தன் அன்பையும் பரிவையும் உணர்த்துகிறாள். அடுத்தநாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை, ரேவுவுக்கு மனப்பாரத்தை இறக்கி வைத்தாற்போல் ஆறுதலாக இருக்கிறது. வீடு துடைத்து, அழகாகக் கோலம் போடுகிறாள். மறுநாள் சரஸ்வதி பூசை. பூசைக்கு வேண்டிய வெள்ளிக் குத்துவிளக்கு, வெள்ளிச் சந்தனப்பேலா, பஞ்ச சாத்திர உத்தரணி, வெற்றிலைத் தட்டு ஆகிய சாமான்கள் ஒரு மரப் பெட்டியில் பரணில் இருக்கின்றன. ராம்ஜியை அன்று மாலை பரண் மீது ஏற்றி, பெட்டியில் இருந்து குத்துவிளக்குகளையும், சந்தனப் பேலா பஞ்சபாத்திர உத்தரணி முதலியவற்றையும் எடுத்துத் தரச் சொல்கிறாள். ராம்ஜி மேலேறி ஒவ்வொன்றாக எடுத்துத் தருகிறான். “சந்தனப்பேலா...?” “இல்லேம்மா...” “என்னடா இல்லேங்கறே? அதுலதான் இருக்கும். சரியாப்பாரு. வரலட்சுமி பூஜை முடிந்து அதுலதானே எடுத்து குடுத்து வச்சது.” ராம்ஜி பெட்டியையே கவிழ்த்துக் காட்டுகிறான். பேலா இல்லை. துணுக்கென்றிருக்கிறது. பரணில் உள்ள பெரும்படிப் பித்தளைப் பாத்திரங்களை - அங்கே இங்கே துணி வைக்கும் மர பீரோவில், எங்குமே சந்தனப்பேலா இல்லை. அழகாக முத்துக் கட்டிய பட்டைக் கிண்ணம். குருகுருவென்று உள்ளத்தில் ரம்பம் அறுப்பது போல் இருக்கிறது. “ஏண்டா பரத்! சந்தனப்பேலாவைக் காணோம்டா. நீ பார்த்தியா?...” அவன் சள்ளென்று விழுகிறான். “என்னம்மா நான்சென்ஸ்? வீட்டில சாமான் காணோம்னா, நானா பொறுப்பாளி? உன் ஆசைத்தம்பி வந்திருந்தானே? எடுத்துண்டு போயிருப்பான்?” ரேவு அவனைப் பளார் என்று அடிக்கிறாள் கன்னத்தில். கை எரிகிறது. சூயிங்கம் அவள் அறைந்த அறையில் வெளி வருகிறது, இவள் மீதே துப்பினாற் போல். “என்னை அடிக்கிறியா? இரு, இரு. அப்பா வந்ததும் சொல்றேன்!” என்று மிரட்டுகிறான். அப்படியே மாடிக்கு ஏறிச் செல்கிறான். என்ன கேவலமான பிழைப்பு! மறுநாள் அவன் வந்ததுமே இந்த விஷயம் பூகம்பமாக வெடிக்கிறது. “ஏண்டி, உன் வீடே திருட்டுக் கும்பல், நீ பெட்டி, வீடு, எதையும் பூட்டாமல் விட்டுட்டு வெளிலே போயிருப்பே. வெட்டிண்டு போயிருப்பான். நீ என் பையனைப் போட்டு அடிக்கிறியா? பஜாரி...?” என்று அவளைத் தன் இடுப்புப் பெல்டைக் கழற்றி அவன் அடிக்கிறான். “போடி, மரியாதையா உள்ளே போய், உன் வேலையைப் பாரு! இனிமே உன் தம்பி, அண்ணன்னு எவனானும் உள்ளே வந்தால் உன்னைத்தான் அடிப்பேன்!...” ரேவு மவுனமாகக் கண்ணீர் விடுகிறாள். திருட்டுக் கும்பல் முத்திரை விழுந்துவிட்டது. வாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டிய முத்திரைகள்... அவளுக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. பூசையாம், பூசை! அவன் குளித்து, உள்ளிருந்து பட்டெடுத்து, பஞ்சகச்ச வேசம் போட்டுக் கொண்டு அந்தப் பழைய ‘புராணப் புத்தகங்களை’ அடுக்கிப் பூசை செய்கிறான். “ஏண்டி, என்ன இந்த வேசம்? மடியா ஒன்பது கஜம் உடுத்தறதில்ல? தேவடியா போல வாயில் புடவையா உடுத்திப்பா? ஏன் ஒரு வடை தட்ட என்ன கேடு? ஏண்டி? நீ என்ன நினச்சிண்டு இப்படி ஆடறே? சாமானையும் தொலைச்சிட்டு, சாகசம் பண்ணுகிற?...” இனியும் இந்த மனசிலும் உடம்பிலும் காயங்கள் சுமக்க முடியுமா? கதவைத் திறந்து கொண்டு சென்று சுதாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட வேண்டும் போல் இருக்கிறது. |