உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
15 பூமிஜா குடிலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் பிள்ளைகள், இப்போது தளர் நடை நடந்து, பெரியன்னைக்கு ஓயாமல் தொல்லை கொடுக்கிறார்கள். குடிலுக்குள் ஓசைப் படாமல் அவர்கள் குற்றி வைத்த தானியத்தை இரைத்து அதில் நீரோ, சிறுநீரோ பெய்து வைத்திருக்கிறார்கள். பெரியன்னைக்குப் பார்வை துல்லியமாக இல்லை. வேடுவமக்கள் சோமாவோ, மோரியோ அவர்களைத் தூக்கிச் சென்று விடுவார்கள். பெரியன்னைக்கு அந்த வட்டத்திலேயே பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று விருப்பம். பூமகள் இப்போதெல்லாம், ஒரு சாதாரணப் பெண்ணாக, பக்கத்தில் குளத்தில் இருந்து நீர் கொண்டு வருவதும், தானியம் குற்றுவதும், புடைப்பதும், வீட்டுத் தீக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பதும், கன்று காலிகளைப் பேணுவதும், எல்லோருடனும் கூடி வாழ்வதும், பொருந்தி விட்டது. அவளுக்குத் தேவையான தானியங்கள், கனிகள், போதாத நேரங்களில் வேறு உணவு, எல்லாம் கொண்டு வருகிறார்கள். மிதுனபுரியில் இருந்து, நார் ஆடைகளோ, பஞ்சு நூலாடைகளோ வருகின்றன. அவளை 'வனதேவி' என்று தெய்வாம்சம் பொருந்திய தேவியாகப் போற்றுகின்றனர். ஈரம்பட்ட தானியத்தைக் கழுவி, ஒரு முறத்தில் போட்டு வைக்கிறாள். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறது. மழைக்காலத்தின் இறுதி இன்னும் எட்டவில்லை. எப்போது வேண்டுமானாலும் கொட்டலாம். இங்கே சடங்கு செய்து அக்கினி மூட்டுபவர் இல்லை. அடுப்புச் சாம்பற் குவியலில் எப்போதும் நெருப்பைக் காப்பாற்ற வேண்டும். சாணத்தினால் செய்யப்பட்ட எரி முட்டைகள், சருகுகள், சுள்ளிகள் ஆகிய்வற்றை மழை நாட்களில் பாதுகாப்பது மிகக்கடினம். காரியோ, மாரியோ கட்டை கடைந்தோ கல்லில் தீப்பொறி உண்டாக்கியோ அவளுக்கு உதவிகள் செய்வார்கள். இல்லையேல், லூவோ சோமாவோ, அவளுக்கும் அன்னைக்கும் எப்படியோ உணவு தயாரித்துக் கொடுக்கிறார்கள். பூச்சிகள் இழை கொண்டு தவக்கூடு படைக்கும். பின்னர் தவம் கலைய சிறகுடன் வெளிவரும் போது, அந்த இழைகளும் அறுந்து குலையும். அவற்றைப் பிள்ளைகள் சேகரித்து வருவார்கள். பெரியன்னை ஒரு 'தக்ளி'யில் அதைத் திரிப்பாள். அந்த வித்தையைப் பூமகளும் கற்று மிகவும் ஆர்வமுடன் நூல் திரிக்கிறாள். மிதுனபுரிச் சந்தைக்குப் பிள்ளைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள். "அடீ கண்ணம்மா! இப்படி ஒரு துட்டப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாய்! வந்து பார்!" பெரியம்மை முன்பெல்லாம் பேசவே மாட்டாராம்! இப்போது கத்திக் கத்திக் குரல் மிகப் பெரியதாக ஒலிக்கிறது. இந்த முதிய வயசில், அவளுக்கு நடுக்கம் கூட இல்லை. "என்ன ஆயிற்று?" என்று ஓடி வருகிறாள். ஒரு கரும்பறவை, கீழே தீனமாகக் குரல் கொடுத்துத் துடிக்கிறது. இவள் பிள்ளைகள் கையில் ஆளுக்கொரு குச்சியுடன் நிற்கின்றனர். இருவர் கைகளிலும், கள்ளிக்குச்சிகள். அவள் அடுப்புத் தீக்குச் சேமித்து வைத்தது. அந்தப் பறவை, குயில் குஞ்சு போலிருக்கிறது. "பாரடி! இந்தக் குஞ்சு குயில் போல் இருக்கு. காக்கைக் கூட்டில் இருந்தது. காக்கைச் சனியன்கள் குஞ்சு பொரித்து வளர்த்த பிறகு தன் இனமில்லை என்று தள்ளிவிட்டிருக்கு போல. இது தீனமாகக் கத்துது. உன் பிள்ளைகள் ரெண்டும் அதை இன்னும் அடிச்சுக் கொல்லுதுங்க!" என்று குச்சியைப் பிடுங்கி எறிகிறாள். குச்சி போன ஆத்திரத்தில் ஒல்லியான பிள்ளை அவளை அடிக்கக் கை ஓங்குகிறது. ஒல்லிதான் மூத்தது. குண்டு இளையதாம். அதுதான் முதலில் வந்தது. பூமகள் பரபரப்புடன் கூடை போன்ற ஒரு மூங்கில் தட்டைக் கொண்டு வந்து, இலை சருகுகளைப் போட்டு அப்பறவையைப் பக்குவமாக எடுத்து வருகிறாள். தடவிக் கொடுக்கிறாள்; இதம் செய்கிறாள். சிறகொடிந்த நிலையில் தொங்குவது போல் காயம். "பெரியம்மா, நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருங்கள். சம்பூகனைக் கூட்டி வருகிறேன்! அவன் வந்தால் நிச்சயமாகப் பறவையைப் பிழைக்க வைத்து விடுவான்!" "முதலில் இந்த துஷ்டப் பிள்ளைகளின் கையைக் கட்டிப் போடு! க்ஷத்திரிய வித்து... தானாக வருகிறது... கொலைத் தொழில்... அது பரிதாபமாகக் கத்துகிறது. இதுங்க ரெண்டும் மாறி மாறி அடிச்சிச் சிரிச்சுக் கும்மாளி போடுதுங்க! உன் வயிற்றில் போய் இதுங்க பிறந்ததே!" இரண்டு பேரையும் இழுத்து வருகிறாள் பெரியன்னை. இரண்டும் பெருங்குரல் எடுத்து அழுகின்றன. சிறுகுடிலின் பக்கம் முறத்தில் தானியம் உலர வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருங்குரலின் ஓசையில், புல் பறித்துக் கொண்டிருந்த கோமா ஓடி வருகிறாள். பருத்த தனங்கள் அசைய, பிள்ளை பெற்றதன் அடையாளமான வரிகள் தெரிய, மரவுரி நழுவ அவள் "ஏன் புள்ளைய அடிக்கிறீங்க!" என்று வருகிறாள். "சோமா, நீ முதலில் உன் இடுப்புக் கச்சையை ஒழுங்காகக் கட்டு! இந்த வாண்டுகளுக்கு அப்புறம் பரிந்து வா! இது காக்கைக் கூட்டத்துக் குயில்களில்லை. குயில் கூட்டத்துக் காக்கைகள்! உக்காருங்க, இங்கே! எழுந்திருந்தா அடிச்சிடுவேன்!" என்று அதட்டி, ஒரு மரத்தடியில் உட்கார வைக்கிறாள். "சோமா, நல்லவேளை, நீ வந்தாய், போய் எங்கிருந்தாலும் சம்பூகனைக் கூட்டி வா! அவன் தொட்டாலே இந்தப் பறவை எழுந்து விடும்..." "வனதேவிக்கு மேலா? என்ன ஆச்சு, என்ன பறவை?... பறவை சோர்ந்து கிடக்கிறது. அதன் இதயத் துடிப்பைப் பார்க்கும் போதே உணர முடிகிறது." "காக்கா கூட்டுல முட்ட வக்கிற கரும் பறவை. பெரிசான பிறகு நம் இனமில்லன்னு த்ள்ளிவிடும். அதுக்குப் பெரியம்மா ஏன் பிள்ளைங்களைக் கோவிக்கணும்?" "கோவிக்கணுமா? ஆளுக்கொரு குச்சியெடுத்திட்டு அதை அடிச்சி வதைக்கிறாங்க. அது ஈனமாக் கத்துறதப் பார்த்துச் சிரிக்கிதுங்க! அதே போல் இதுங்கள அடிச்சி, அந்த வலி என்னன்னு தெரிய வைக்கணுமில்ல?" சோமா அவர்கள் இருவரையும் இரண்டு இடுப்பிலும் இடுக்கிக் கொண்டு கன்னங்களில் முத்தம் வைக்கிறாள். "புள்ளங்களுக்கு என்ன தெரியும்? அது கத்தறது வேடிக்கையாக இருக்கும்..." பூமகள் விருவிரென்று புதர்கள் கடந்து செல்கிறாள். குயில் கூட்டத்தில் பட்ட காக்கைகளா அவள் பிள்ளைகள்? இங்கு பொருந்தாத பிள்ளைகளா?... எது குயில் கூட்டம், எது காக்கைக் கூட்டம்? குயிலுமில்லை, காக்கையுமில்லை... 'க்ஷத்திரிய வித்து! மேல் குல வித்து!' என்று அவள் இதயத்தில் அடி விழுவது போல் பெரியன்னையின் சுடுமொழி சுடுகின்றது. வாயைக் குவித்துக் கொண்டு "சம்பூகா!" என்று கத்துகிறாள். அன்று துன்பம் அவளைச் சூழ்ந்து கவ்விய போது நந்தசுவாமியை நினைத்த போது வந்தாரே, அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக் கொள்கிறாள். மனதின் ஒரு பக்கம் அந்தப் பறவையின் இதயம் துடிப்பது போல் உணர்வு படிகிறது. "சம்பூகா...! எங்கிருந்தாலும் வா!..." விர்ரென்று ஒரு சாரல் விசிறியடிக்கிறது. உடல் சிலிர்க்கிறது. பறவை அடிப்பட்டதை விட, அந்த இளங்குறுத்துகளின் செய்கை அவளை அதிகமாக நோக வைக்கிறது. 'க்ஷத்திரிய வித்து!... கொலைக்கு நியாயம் கற்பிக்கும் அறிவு இந்த மதலைக்கு வளரும். இப்போது அந்த அறிவு இல்லை...' எங்கிருந்தோ குழலோசை கேட்கிறது. மனசில் தெம்பு தலைதூக்குகிறது. சுரங்கள் புரியாத இசை... ஆம், இது கண் பார்வையில்லாத முடியில் ரோமம் இல்லாத, ஒரு சிறுவன். அவனுக்கு இவள் மாதுலன் என்று பெயர் வைத்திருக்கிறாள். "மாதுலன்! மாதுலா? சம்பூகனைக் கண்டாயா?" "இதோ இருக்கிறேன், வனதேவி?..." "எங்கே?..." புதர்களுக்குள்ளிருந்து வெளிப்படுவது போல் வெளிப்படுகிறார்கள். மாதுலன் ஊதுகிறான். சம்பூகனின் கையில் ஒரு நாய்க்குட்டி... "சம்பூகா? அது நாய்க்குட்டியா?... வாலும் முகமும்..." வால் அடர்ந்தாற் போல் இருக்கிறது. கண்கள் சிறு கங்கு போல் தெரிகின்றன. முகத்தில் ஒரு வித்தியாசம் தெரிகிறது. "இது நாயா?..." "தெரியவில்லை வனதேவி. ஏதோ பிராணி கடித்துக் கழுத்தில் காயம். பச்சிலை போட்டேன். வனதேவி, என்னைக் கூப்பிட்டீர்களே?..." "வா, உனக்கு ஒரு வேலை இருக்கிறது..." அவன் வரும்போது மாதுலன் ஊதிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறான். அந்தப் பிராணி செவிகள் நிலைத்திருக்க அந்த ஓசையைக் கேட்பது போல் இருக்கிறது. அவள் முகமலர்ச்சியுடன் விரைந்து வந்து நீண்ட கொட்டகையில் கூடையில் வைத்த கரும்பறவையைக் காட்டுகிறாள். சம்பூகன் அங்கே அந்த நாய்க்குட்டியை வைத்துவிட்டு, விரைந்து செல்கிறான். அந்த நேரமெல்லாம் மாதுலன் குழலூதிக் கொண்டிருக்கிறான். அப்போது, சோமா இரண்டு குழந்தைகளையும் அங்கே கொண்டு வந்து உட்கார வைக்கிறாள். மாதுலன் ஊதுவதை இரண்டும் அசையாமல் பார்க்கின்றன. பூமகள் மெய்ம்மறந்து போகிறாள். "மாதுலா, இந்தப் பிள்ளைகளின் பக்கம் வந்து ஊதுகிறாயா? எவ்வளவு சுகமாக ஊதுகிறாய்? உன் இதயத்து ஏக்கமல்லவா, இப்படி ஒலிக்கிறது? உயிர்கள் அனைத்தையும் அணைக்கும் ஏக்கமா இது?" முடியில் ரோமமில்லாத பார்வையற்ற ஒரு சிறுவன்... இவனை அரசகுலத்தவர், முகத்தில் விழிக்கக் கூடாத அபாக்கியவான் என்று இகழ்வார்கள். ஆனால், இவன் வணக்கத்துக்குரியவன். இந்தக் குழலை இவன் வாயில் பொருத்தி, இவனுடைய நெஞ்சின் அலைகளை நாதமாக்கிய பிள்ளை சம்பூகன். அந்தச் சடாமகுட குல குருக்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்த குரு... அவள் கண்கள் பசைக்கின்றன. சம்பூகன் மூலிகை கொண்டு வந்து காயத்தில் வைக்கிறான். மாதுலன் இசை பொழிகிறான். மறுநாளே கரும்பறவை தெம்புடன் தலை நிமிர்த்தி, சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கிறது. அந்த நாய்க்குட்டி, தத்தித் தத்தி, விளையாடுகிறது. ஒடிந்த காலும், கடிபட்ட கழுத்தும் இன்னும் முழுதுமாகத் தேறவில்லை. லூ வருகிறாள். "வனதேவி! இந்தக் குட்டியை இங்கு யார் கொண்டு வந்தார்கள்?..." "ஏனம்மா? சம்பூகன் தான், பாவம் கடிபட்ட இந்தக் குட்டியைக் கொண்டு வந்திருக்கிறான். நாய்தானே இது? இந்தப் பறவை பார், இது கூடப் பறக்க முயற்சி செய்கிறது. மாதுலனின் குழலோசையில் நோயும் துன்பமும் ரணமும் கூடக் குணமாகிறது, லூ!" "அது சரி, ஆனால் இது வெறும் நாயல்ல. ஓநாய். இதற்குக் கருணை காட்டுவது சரியல்ல. இது பெரிசானா பிள்ளைகளைக் கவ்விட்டுப் போகும்! ஏய்! அத்த முதல்ல கொண்டு ஆத்தோடு போட்டுட்டு வா! இல்லாட்டி மூங்கிக் காட்டுக்கு அப்பால் தூக்கி எறி!" பூமகளுக்குத் தன் சிறுமிப் பருவத்தில் அரக்கர் வேறு உருவம் எடுத்துப் பிள்ளைகளைத் தூக்கிச் சென்று தின்பார்கள் என்று கேட்ட செய்தி நினைவில் வருகிறது. அதே அறியாமை, தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தீங்கு வருமோ என்ற அச்சமாக அவள் தெளிவை மறைக்கிறது. "ஆமாம் சம்பூகா! அதனதன் இனம் முதிர்ந்ததும், அதன் வாசனையைக் காட்டும். நாய் தான் நாம் வளர்க்கிறோம். அது நன்றி காட்டுகிறது. மந்தைகளுக்குக் காவலாக இருக்கிறது. இது அப்படியிருந்தால்... இருக்குமா?" "தேவி, கொஞ்சம் வலிமை வந்ததும் அதுவே ஓடி விடும். நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில் இது அண்டி வாழும் மிருகம் அல்ல... " என்று சம்பூகன் முற்றும் உணர்ந்தவனாக உறுதி கூறுகிறான். பிள்ளைகள் மாதுலன் அருகில், இசைக்கு வசப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்கிறார்கள். மாதுலன் தன் கைகளால் அவர்கள் முகத்தை, மேனியை வருடுகிறான். பிறகு, தன் குழலை அவர்கள் வாயில் வைக்கிறான். குழந்தைகள் அரும்புப் பற்களைக் காட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள். பெரியன்னை கட்டியணைத்து முத்தமிடுகிறாள். "நீங்கள் இந்த இடத்தில் இருந்து அன்பால் உலகாள வேண்டும்" என்று ஆசி மொழிகிறாள். சூழலும், வாழ்முறையும், இயல்பை மாற்றுமா? குழந்தைகளின் முரட்டுத் தனத்தை மாற்றுவதில், பெரியன்னை மிகக் கருத்தாக இருக்கிறாள். பூமகளுக்கு இது மிகவும் உகப்பாக இருக்கிறது. தானியத்தை உரலில் இட்டு அவள் மெதுவாகக் குத்துகிறாள். மர உலக்கையின் ஓசை நயத்துக்கேற்ப பிள்ளைகள் கை கொட்டி ஆடும்படி பெரியன்னை பாடுகிறாள்.
கை கொட்டு ராசா, கை கொட்டு! காட்டு சனமெல்லாம் கை கொட்டு! வானத்துச் சந்திரன் கை கொட்டு! வண்ணம் குலுங்கக் கை கொட்டு... குழந்தைகள் இருவரில் குண்டுப் பையன் தொந்தி சரியக் குலுங்குகிறான். சதைப் பிடிப்பில்லாதவனோ, எழும்பி எழும்பிக் குதிக்கிறான். பூமியில் சிற்றடி பதிகையிலேயே துள்ளும் அழகு காணக் காணப் பரவசம் அடைகிறாள். "கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில் தங்கத் தொட்டிலில் பஞ்சணையில், பணிப்பெண்கள் கொஞ்சித் தாலாட்டுப் பாட, அரையில் கிண்கிணியும், முடியில் முத்துச்சரமும், கைவளை, கால் சதங்கை குலுங்க, இந்தப் பிள்ளைகள் வளர வேண்டியவர்களாயிற்றே, காட்டு வேடர்களிடையே, இப்படி வளர்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறதா அம்மா?" இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திராத பூமிஜா ஒரு கணம் திகைக்கிறாள். வினோதமான உணர்வுகள் அவள் நெஞ்சுக் குழியில் திரண்டு வருகின்றன. அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. "நீ குழந்தை பெற்ற நாள் காலையில் அவன் இங்கு வந்தான்" பெரியன்னை தக்ளியை உருட்டியவாறு, அவளை நிமிர்ந்து பாராமலே மெதுவாகச் சொல்கிறாள். திடுக்கிட்டவளாகப் பூமகள் அவளை ஏறிட்டு நோக்குகிறாள். அவன் என்றால் யார்? மன்னரா? இளவரசா? அன்று யாரோ படை கொண்டு செல்கிறார், பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள் என்று செய்தி கொண்டு வந்தார்களே? அதெல்லாம் உண்மையா? வினாக்கள் எழும்புகின்றன. ஆனால் அவள் நாவில் உயிர்க்கவில்லை. "அவன் தான், இளைய மைத்துனன், அசுரன் யாரையோ கொல்ல, மகுடாபிஷேகம் செய்து கொண்டு போகும் வழியில், இங்கே பெண்கள் குலவையிட்டு சோபனம் பாடினார்களாம். யாருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டு வந்தான். 'காட்டில் யாருக்கோ குழந்தை பிறந்தால் யாரோ இளவரசனுக்கு என்ன வேலை? போய் வா!' என்றேன்." "'நான் கோசல நாட்டு இளவரசன். இங்கே வனதேவி பிள்ளை பெற்றாள் என்று பாடினார்களே' என்றான். 'எந்த இளவரசனுக்கும் இங்கே ஒரு வேலையுமில்லை, மூக்கை நுழைக்க. இந்தப் பூச்சிக் காட்டுக் குடிமக்கள் நச்சம்பு விடுவார்கள். உங்கள் ஜிரும்பகாஸ்திரங்கள் இங்குப் பலிக்காது. போ. ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடும் என்று எச்சரித்தேன்" என்று அமைதியாகப் பேசும் பெரியன்னையைப் பார்த்த வண்ணம் அவள் சிலையாக நிற்கிறாள். "நீ அப்போது உறக்க மயக்கத்தில் இருந்தாய். அவர்கள் ஏதோ எச்சிலைத் துப்புவது போல் துப்பிய பின், இங்கென்ன வேலை? இப்போது அந்த அரசுப் போகமும் மன்னர் உறவுகளும் நீ துப்பிய எச்சில் கண்ணம்மா?" அவளுக்கு ஏனோ தெரியவில்லை, உடல் நடுங்குகிறது. வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|