உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
27 போரின் சுவடுகள் இக்கரையில் பதியவில்லை. வேதபுரி மன்னர் வந்து சென்ற பிறகு, ஓரளவுக்கு அமைதியாக இருப்பதாகவே பூமகளுக்குத் தோன்றுகிறது. என்றாலும், இதை அமைதிக்கான நிறைவு என்று கொள்வதை விட, ஒரு புயலுக்கு முந்தைய கட்டமோ என்றும் தோன்றுகிறது. கேகய மாதாவின் அனல்பொறிச் சிரிப்பில் உதிர்ந்த எது வேள்வி? எது வேள்வி? என்ற வினா பூமகளுக்கு இரவிலும் பகலிலும், நீரெடுக்கும் போதும், பிள்ளைகள் கொண்டு வரும் கனிகளையும் கிழங்குகளையும் பக்குவம் செய்யும் போதும், தானியங்களை மாவாக்கும் போதும் ஒலிக்கின்றன. திடீரென்று அரண்மனையில் பணிபுரிந்த பிஞ்சுச் சிறுவர் சிறுமிகளை நினைக்கிறாள். கல்திரிகையைக் கட்டி இழுக்கும் தளிர்விரல்களைப் பார்ப்பது போல் தோன்றும். வேள்வி... குஞ்சும் பிஞ்சும் தம் உழைப்பை எந்த வேள்விக்கு நல்குகின்றன... இவள் தானியம் குற்றும் போது, வேடுவர் குடியில் இருந்து பூரு வருகிறது. கொழுவிய கன்னங்கள், ஆறே வேனில் பருவங்கள் தாண்டாத சிறுமி. இடையில் வெறும் இலை மறைவுதான். வேனில் பருவமாயிற்றே? கூந்தல் கற்றை கற்றையாக விழுகிறது. மாநிற மேனி... சிரிப்பு... முன்பற்கள் விழுந்து முளைக்கும் கோலம். ஈறுகள் கறுத்து, வெள்ளையாகப் பற்கள்... இது விடுதலைச் சிரிப்பு; கொத்தாக மீன் கொண்டு வந்து அவந்திகாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சிரிக்கிறது. இந்தச் சிரிப்பு மொழிக்குத் தேவையில்லாத அடையாளம். இவர்கள் பேசும் திருத்தமில்லாத மொழி முதலிலெல்லாம் பூமகளுக்குப் புரியாது. ஆனால் அவள் மைந்தர்கள் அதே மொழியில் தான் வளர்ந்தார்கள். சத்திய முனிவரின் பயிற்சியில் பல்வேறு மொழிகளை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். தானியம் புடைக்கும் பூமகள், தேய்த்த பால் மணியரிசியை அந்தக் குழந்தையிடம் கொடுக்கிறாள். பூரு, சிரித்துக் கொண்டே வாங்கித் தின்னும் அழகை மகிழ்ச்சியைப் பார்க்கிறாள். அப்போது, சிரித்துக் கொண்டே பால்கிழங்குகள் சருகுப்பை நிறையச் சுமந்து கொண்டு வந்து போடுகிறாள், அதன் அன்னை... "தீனியா? எப்போதும் வாய் அரைபடுகிறது! இதுதான் இதற்கு யாகம்..." என்று சொல்லி எச்சில் பதியும் முத்தமொன்று அதன் கன்னத்தில் வைக்கிறாள். பூமகளுக்கு ராதையின் நினைவு வருகிறது. தாய் மக்கள் என்ற இயல்பான கசிவுகள் கூட வறண்டு ஊசிக் குத்தல்களாகும் அரண்மனை உறவுகள்... "வனதேவி! பெரியம்மா, படுத்தே கிடக்கிறாரே? ஏதேனும் கஞ்சி குடித்தாரா?..." பூமகள் உதட்டைப் பிதுக்குகிறாள். இந்த ஆசிரமத்தின் வாயிலில் வரிசையாக அசோக மரங்கள் எழும்பியிருக்கின்றன. இவற்றைச் சிறு பதியன்களாக வைத்த நாட்களைப் பூமகள் அறிவாள். அவள் பிஞ்சுப் பாலகர்கள் கையால் முனிவர் நடச் செய்தார். அந்த மரங்கள் குளிர்ச்சியான இலைகளுடன் இருண்ட மேகம் போல் கவிந்து இடை இடையே செங்கொத்து மலர்களுடன் மிக அழகாக இருக்கின்றன. மரத்தில் பறவைகள் வந்து தங்குகின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கின்றன. வேனிலின் வெம்மையே இல்லை. பின்புறமுள்ள தாமரைக் குளத்தில் நீர் படிகமாகத் தெரிகிறது. கேகயத்து மாதாவுக்குக் குளக்கரையும், தோப்பும் மிகவும் உவப்பாக இருக்கின்றன. பூருவின் தாய் குந்தி, இன்று பல செய்திகளைப் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். முற்றத்தில் அவற்றைச் செவி மடுத்துக் கொண்டே தனக்குள் சிரித்தவளாய், பூமகள் தானியம் உலர வைக்கையில் பேச்சுக்குரல் கேட்கிறது. அவள் முற்றத்து ஓரம் நடைபாதையிலே காவலர், குடை வருவதைப் பார்க்கிறாள். உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது. அசோக மரத்தடியில் தான் அன்னை இருக்கிறார் போலும்! பேச்சுக் குரல் கேட்கிறது... மெல்லிய இழையைச் சுண்டினால் ஏற்படும் அதிர்வுகள் போல் அதிர்வுகள்... "தாங்கள் யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் தனியே வரலாமா? தங்கள் விருப்பம் இதுவென்பதை அறிவித்திருந்தால் தக்க பாதுகாப்புடன் கூட்டிக் கொண்டு வந்திருப்போமே, தாயே?" இவர்... குரலுக்குரியவர்... இளையவர்... "ஆமாமப்பா! பாதுகாப்பாக வனத்தில் கொண்டு வந்து விடுவதில் அநுபவம் வாய்ந்த பிள்ளையாயிற்றே!... இப்போது என்னைத் தேடி இங்கு வர, உன் தமையன், சக்கரவர்த்தி ஆணையிட்டானா?..." "மன்னிக்க வேண்டும் தாயே! தமையனாரும் இங்கு வந்துள்ளார்; அக்கரையில் இருக்கிறார்..." பூமகளுக்கு உடல் முழுவதும் குப்பென்று வெம்மை பரவுகிறது. கையில் பற்றியுள்ள முறம் நழுவுகிறது. அவர் வந்திருக்கிறாரா? எதற்கு? எதற்கு? வில்லும் அம்புமாய், யாகக்குதிரையை மீட்டுச் சென்று யாகத்தை நிறைவேற்ற வந்திருக்கிறாரா? குலகுரு, குலமில்லாத குரு என்று தர்மசாத்திரங்கள் அனுப்பி வைத்திருக்கின்றனவா? ராணி மாதாவின் வினாக்களை ஏந்த அவள் செவி மடல்கள் சித்தமாகின்றன. "ஏனப்பா? யாகக் குதிரை யாகம் வேண்டாம் என்று அடைக்கலம் புகுந்திருப்பதை அறிந்து அதைப் பற்றிச் செல்ல வந்தீர்களா? அது யாகக் குதிரையுமில்லை; போகக் குதிரையுமில்லை. எந்தப் பொற்பிரதிமை பட்ட மகிஷியையும் அது மகிழ்விக்காது!" "தாயே! தாங்கள் சாந்தமடைய வேண்டும். தமையனார், சக்கரவர்த்தி. க்ஷத்திரிய தர்மம் மீறி எந்தச் செயலையும் செய்யவில்லை. குடிமக்களின் அவநம்பிக்கையை அகற்ற வேண்டியது அரச தருமம்..." "இந்த அரச தருமம் நிறை சூலியை வனத்தில் விட்டு வரச் செய்யும். அத்தகைய அரச தருமத்தில் எங்களுக்கு ஏது இடம்? இந்தத் தரும உரையாற்றத்தான் அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள்?" "மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். தாயே, மன்னரின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். எனக்கென்று தனியான விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை..." பூமகள் அவர்களை மறைவாக நின்று பார்க்குமிடம் தேடி நிற்கிறாள். இளையவன் தான். அந்தக் காலத்து இளமையின் செறிந்த முகம் வாடியிருக்கிறது. முடியும் உடலும் மாசுபடிந்திருக்கின்றன. வில்-அம்பு இல்லாமல் வெறும் மேலாடை போர்த்திய மேனி... கீழ் நோக்கிய பார்வை... சத்திய முனிவர் அங்கு வந்து, தேவியும் மைந்தர்களும் வனத்தில் வாழ்வதைத் தெரிவித்து, அவர்கள் அங்கு இருக்கையில் வெறும் பொற் பிரதிமையை வைத்து வேள்வி செய்வது தருமம் அன்று என்று எடுத்துரைத்தாராம். இது யுகயுகத்துக்கும் சக்கரவர்த்தித் திருமகன் பெயருக்குக் களங்கம் விளைவிக்குமே ஒழிய, புகழ் பரப்பாது என்றும் அறிவுறுத்தினாராம்... மன்னர் தம் அமைச்சர், குலகுரு ஆகியோரைக் கலந்தாலோசித்த போது, அவர்கள் இந்த யோசனை கூறினார்களாம்... அவன் அந்த யோசனையைப் பற்றி எதுவும் முத்துத் தெறிக்குமுன், கேகயத்து அன்னையின் குரல் அனலில் காய்ந்த வெம்மையுடன் வெளிப்படுகிறது. "என்ன யோசனை? பிள்ளைகள் வயிற்றில் இருக்கும் போது அக்கினிப் பிரவேசம் தகாது; வனத்துக்கு விரட்டினீர்கள். இப்போது ஓர் அக்கினிப் பிரவேசம் செய்து அழைத்துக் கொண்டு அசுவமேதம் புதிதாகச் செய்யலாம் என்றார்களா?" "தாயே, மன்னருக்குத் தேவியைப் பிரிந்திருந்த காலம் சுகமென்று கருதிவிட்டாற் போன்று சொல்லால் சுடுகிறீர்கள். அவர் படும் வேதனை சொல்வதற்கரியது... இப்போது யோசனை நான் சொல்கிறேன். குழந்தைகள் இருவரும் சென்று தந்தையைப் பார்க்க வேண்டும். அவருடைய புண்ணான இதயத்துக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். நான் குழந்தைகளை அழைத்துச் செல்ல அநுமதி தர வேண்டும்..." பூமகள் இதை எதிர்பார்க்கவில்லை. அஜயனும் விஜயனும் அங்குதான் நிற்கிறார்கள். ஆனால் சத்திய முனிவர் இதில் தாம் தலையிடக்கூடாதென்று கருதினாற் போன்று, "மகளே, வந்திருப்பவர் நம் விருந்தினர். அவரை முற்றத்துக்கு அழைத்துச் சென்று, நீரும் இருக்கையும் தந்து உபசரிக்க வேண்டும். பிறகு மாதாவின் யோசனைப் படி செய்யுங்கள்" என்று கூறிவிட்டு நழுவுகிறார். பூமகள் நீர் கொடுக்கிறாள்; அவந்திகா இருக்கையளிக்கிறார். கனிகளும், தாவர உணவுமாகக் கொண்டு வைக்கின்றனர். "தேவிக்கு வணக்கம்" என்று நடுங்கும் குரலில் கூறி இளையவன் அவளை வணங்குகிறான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. கேகய அன்னை, பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொள்கிறாள். "குழந்தைகளே, உங்கள் தந்தை கோசல மாமன்னரைச் சென்று பார்க்கிறீர்களா? அக்கரையில் தங்கி இருக்கிறாராம்! அசுவமேதக் குதிரையை இங்கு அனுப்பியவர். உங்களுக்கு வேறு ஏதேனும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குதிரையை மீட்டு விடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. நீங்கள் க்ஷத்திரியர் தாம். போர் செய்வீர்களா?" "நாநியம்மா, எங்கள் குரு சொற்படி நாங்கள் நடப்போம். இந்தச் சக்கரவர்த்தித் தந்தையை எங்களுக்குத் தெரியாது! எங்களுக்கு குருசாமிதாம் எல்லாமும்!" சத்தியமுனிவர் அங்கு வந்து, "போய் வாருங்கள். பார்த்து விட்டு வாருங்கள்..." என்று விடை கொடுக்கிறார். உடனே எதிர்க்க முடியவில்லை. ஆனால் பூமகளுக்கு மனம் அமைதியிழக்கிறது. பிள்ளைகளை அனுப்பியது சரிதானா? இளையவன் உணவு கொள்ளும் போது கசிந்துருகிக் கண்ணீர் கலங்க, அவர்களை அழைத்து உச்சிமோந்தான். தான் எடுத்த கனிகளைப் பிளந்து அவர்கள் வாயில் ஊட்டிவிட்டுத் தானருந்தினான். அவளுக்கே நெஞ்சு கசிந்தது. ஆனாலும், அவள் ஏமாந்திருக்கிறாள்; பேதை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறாள்... வந்தவர் நேராக இங்கே வர வேண்டியது தானே? அக்கரையில் நின்று கொண்டு இளையவனை அனுப்பி எதற்காக நாடகம் ஆட வேண்டும்? சத்திய முனிவரும் அவருடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறாரா?... நந்தசுவாமியின் இழப்புணர்வு இப்போது குழி பறிக்கிறது. துயரம் தாளாமல் வெதும்புகிறாள். பெற்றோர், வளர்ப்புத் தந்தை, கணவர் எல்லோரும் அவளைத் தனிமைப் படுத்தினார்கள். இப்போது இந்தப் பிள்ளைகளும் அவளை அந்நியப்படுத்தி விடுமோ?... அவள் குடிலுக்குள் சுருண்டு கிடக்கும் முதியவளிடம் சென்றமருகிறாள். கேகய அன்னை வந்த பிறகு, தன் பொறுப்பை அவளிடம் ஈந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மூலையில் ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறாள். "பெரியம்மா..." என்று எழுப்புகிறாள். விழித்துப் பார்க்க வெகு நேரம் ஆகிறது. "கண்ணம்மாவா? அரண்மனையில் இருந்து எப்போது வந்தாயம்மா?..." "நான் இங்குதான் உங்களுடன் இருக்கிறேன் தாயே... அக்கரையில் மன்னர், என் நாயகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறாராம். அவர் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறாராம். இளையவர் வந்திருந்தார். சத்திய முனிவர் அனுப்பலாம் என்றார்; அழைத்துச் சென்றிருக்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் கவலையாக இருக்கிறது, தாயே!" அவளுக்கு இவள் குரல் கேட்டதாகவே மறுமொழி வரவில்லை. "அம்மா... எனக்கு... ஒரு வேளை பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது..." அன்னை ஓய்ந்து போயிருக்கிறாள். எல்லாத் துடிப்புகளும் ஓய்ந்து இறுதிச் சொட்டுகளில் நிலை பெற்றிருக்கின்றன. அணையும் பொறி... சாம்பல் மூடிவிடாது. "அம்மா... பெரியம்மா, உங்கள் கண்ணம்மா, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!" "எனக்குக் களைப்பாக இருக்கிறது. மகளே, ராணி மாதாவிடம் கேள். உனக்கு ஒன்றும் வராது; உன் பிள்ளைகள் உன்னை விட்டுப் போக மாட்டார்கள்..." பொழுது சாய்ந்து இருள் பரவிவிட்டது. அவர்கள் வரவில்லை. ராணிமாதாவுக்குப் பாலைக் கறந்து கொடுக்கிறாள். அந்தி வந்தனத்துக்குப் பிறகு, வேடுவக்குடி சீடப்பிள்ளைகளுடன் முனிவர் இனிய குரலில் தெய்வங்களைப் போற்றும் பாடல் ஒலியில் சிறிது மன ஆறுதல் கிடைக்கிறது. மாடத்தில் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்துச் செல்கிறாள் குந்தி. பொக்கை வாயுடன் முற்றத்தில் பூரு குதித்தாடுகிறது. நிலவும் நட்சத்திரங்களும் செய்யும் மாயம் தோன்றுகிறது. ஒருகால் இரவு நிலவில் நடந்து வருவார்களோ? என்ன பேதமை...? "ஆமாம் அவந்திகா எங்கே?... அன்னையே, அவந்திகா எங்கே? வேடுவர் குடிக்கு, இறைச்சி பக்குவம் படிக்கப் போய் இரவு தங்குகிறாளா? அவர்கள் குடில்களில் மதுக்குடங்களுக்கும் பஞ்சமிருக்காது..." "இல்லை மகளே, அவள் பிள்ளைகளுடன் சென்றிருக்கிறாள். நாளை பிள்ளைகளை அவளே திரும்ப அழைத்து வருவாள். ஒருமுறை ஏமாற்றப்பட்டது அவளால் மறக்க முடியாத வடுவாகி உறுத்திக் கொண்டிருக்கிறது..." அவந்திகா... நம்பற்குரிய தாய். அரண்மனை, க்ஷத்திரிய குலம், தரும சாத்திரங்கள், எல்லாம் அறிந்தவள். குழந்தைகள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தீவிரமாக நடப்பாள். இந்த ஆறு, வனம், காயும் பரிதி, வளி மண்டலம், இவை எல்லோருக்கும் பொதுவானவை. 'க்ஷத்திரிய' ஆண் வாரிசுகள் என்று உரிமையாக்கிக் கொள்ள முடியாது... பூமகள் ஆறுதல் கொண்டு இரவைக் குழப்பமின்றிக் கழிக்கிறாள். வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|