18

     கடலலைகள் பொங்கிப் பிரளயம் வருவது போலும், பூங்காக்கள் தீப்பற்றி எரிவது போலும் அந்த அமைதிப் பெட்டகம் கலங்கிப் போகிறது.

     "சம்பூகன் இந்த உலகத்துக்கெல்லாம் உற்றவனாயிற்றே? அவனை அம்புபோட்டுக் கொன்றவர் யாரப்பா?"

     "குருசாமி, நாங்கள் வனதேவிக்கு மங்களம் சொல்லி, ஆற்றோரம் கோரை பிடுங்கிக் கொண்டிருந்தோம். அங்கே சில தானியக் கதிர்களும் இருந்தன. சம்பூகன் அவற்றைக் கொய்வதற்காகக் குனிந்த போது விர்ரென்று கழுத்தில் அந்த அம்பு பாய்ந்து வந்து குத்தியது. உடனே வீழ்ந்து விட்டான். அது அக்கரையில் இருந்துதான் வந்தது சாமி!..."

     "அன்னிக்கு அவங்க, சபதம் வச்சிட்டுப் போகல?... அந்தக் குடுமிக்காரங்க! பிராமண குலமாம். அவங்கதான் மந்திர அம்பை ஏவி இப்படிச் செய்திருக்காங்க... நாங்க நச்சுக் கொட்டை அம்பு செய்யக் கூடாதுன்னு சொன்னீங்க. கேட்டோம். இப்ப, நம்ம பசுவை அவங்க கொண்டு போனதை மீட்டோம். அதுக்கு இப்படி அநியாயம் செய்திருப்பது நியாயமா, குருசாமி!"

     பூமகள் உறைந்து போயிருக்கிறாள். அது நடந்து வெகு நாட்கள் ஆயினவே?

     "இந்தப் பாவத்தை, அவன் தான் செய்திருப்பான்..." என்று முணுமுணுக்கிறார்கள்.

     பழிபாவச் சொல்லுக்கு இடம் தந்துவிட்டீரே! ஒரு குடம் பாலுக்கு ஒரு நஞ்சு போதும் என்பார்கள். உங்கள் சரிதையில் நஞ்சே பரவுவதைத் தடுக்க இயலாதவர்?... நாளை உங்கள் மைந்தர்கள் தேன் பிளிற்றும் மழலையில், 'எங்கள் தந்தை' எப்படி இருப்பார், அவர் எங்கே என்று கேட்காமலிருப்பார்களா? அவர்கள் கேட்கலாகாது, என்று அஞ்சித் தானே நான் வேடப்பிள்ளைகள், அவர்கள் குரு முனிவர் என்று ஆடியும் பாடியும் அவர்கள் 'குலத்' தொழிலை மறக்கச் செய்கிறேன்? இது நீசத்தனம் அன்றோ? நீர் தாடகையைக் கொன்ற வரலாற்றை நான் நம்பவில்லை. எனினும் தர்மம் என்று சொல்லப்பட்ட இனிப்புப் பூச்சை ஏற்றிருந்தேன். எது தர்மம் சுவாமி! அரக்கன் பிறன் மனையாளைக் கவர்ந்தான் என்று இகழ்ந்து, அந்த நகரையே அழித்து சிறை மீட்டதாகச் சொல்லி உங்கள் தர்மத்துக்காக என் மீது மீண்டும் பழி சுமத்தி நாடு கடத்தினீர். இப்போது, இந்தச் சம்பூகன்... யாருக்கும் தீங்கிழைக்காத பாலகன். அவன் உங்கள் எல்லைக்கு வந்தானா? உங்கள் உடமைகளைக் கவர்ந்தானா?...

     பறந்து சென்று, சுமந்தரர் - குலகுரு முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் மன்னன் முன் நியாயம் கேட்க வேண்டுமென்று குருதி கொந்தளிக்கிறது. இதுவரையிலும் பூமித்தாயின் மேனி அவளை உறுத்தியதில்லை. கல்லும் கரைய மென்மையாக வருடும் அடிகளை அவள் உணர்ந்திருக்கிறாள். இப்போதோ, முட்களும் கல்லும் குத்திக் கிழித்து குருதி பொசியும் பரபரப்பில் வருகிறாள். அவளே அவளுக்குப் புதியவளாகி இருக்கிறாள்.

     அவளுக்கு மிகவும் பழக்கமான, நெருக்கமான, ஒன்றி அறியப்பட்ட முகங்கள்; வாசகங்கள்; வாடைகள்... எல்லாமே அந்நியமாகத் தோன்றுகின்றன. மாதுலன்... முடி வழுக்கையான அந்தப் பிள்ளை ஓய்ந்து ஒடிந்து மரத்தோடு சாய்ந்திருக்கிறான். குழல்கள் கீழே உயிர் இழந்த நிலையில் கிடக்கிறது. அவன் அன்னை பொங்கிப் பெரும் குரல் எடுத்து ஓலமிடுகிறாள்.

     சம்பூகன் - பால்வடியும் வதனங்கள் - கண்களை மூடி மென் துயில் கொள்ளும் நிலையில்... அந்த மகிழ மரத்தின் வேர் மீது இலைப்படுக்கையில் வைத்திருக்கிறார்கள். கரிகுழல் கற்றைகள் முன் நெற்றியில் தவழ்கின்றன. சிறு மூக்கு... மென்மையான காதுகள். எலும்பு தெரியும் மார்பகம்... நந்தமுனி திரித்து பட்டு நூலில் கோத்த ஒற்றை உருத்திராக்க மணி.

     பூமகள், தன் நிலை இழந்து 'மகனே' என்று அவன் மீது விழுந்து கதறுகிறாள். அண்டமே குலுங்குவது போல் உயிர்களனைத்தும் துடிக்கின்றன. இந்தத் துடிப்பை, அந்த க்ஷத்திரிய மன்னன், அவள் நாயகன் உணர்ந்திருக்க மாட்டானா? அவன் என்ன கல்லா?

     அப்படி மேற்குலம் மட்டுமே வாழவேண்டும் என்ற ஒரு தர்மம் உண்டா? இந்த உலகில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தர்மம் என்றால், அந்த தர்மம் நிலைக்குமா?...

     நந்தசாமி வருந்தித் துடிக்கும் அவள் தோள்பட்டையை மெல்லத் தொடுகிறார்.

     "குழந்தாய், நீ வருந்தலாகாது. இந்த அநியாயம் நியாயமாகாது."

     "எந்தக் கொலைக்கும் நியாயம் கிடையாது. ஆறறிவு இல்லாத விலங்குகளுக்கு இயற்கை விதித்த கிரமப்படி இரையாகும் உயிர்களுக்கும் ஒரு நியதி இருக்கிறது. பசி இல்லாத போது, எந்த ஒரு விலங்கும் இன்னொரு விலங்குக்கு ஊறு செய்யாது. அதற்காகப் பழியும் வாங்காது... மகளே, தெம்பு கொள்..." சத்தியமுனி அவள் மைந்தர்களை அழைத்துக் கொண்டு வருகிறார். முதியவளும் மெள்ள நடந்து வருகிறாள்.

     தங்கள் தாயின் வருத்தம் கண்ட மதலையர் அவளை மெல்ல வருடி, மழலை சிந்துகின்றனர்...

     "சம்புகனுக்கு என்ன? ஏன் எல்லோரும் அழுகிறார்கள்?" இவள் இரு குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக முத்தமிடுகிறாள்.

     "சம்பூகன் எழுந்திருக்க மாட்டான். கண்மணிகளே... அவன் பூதேவியுடன் ஐக்கியமாவான்..."

     "ஏன்... ஏன்?..."

     "நாங்கள் யாருமே அம்பெய்ய மாட்டோம். குருசாமி யாருமே அம்பு எய்யக் கூடாது என்று சொன்னார். அம்பு போன்ற முள்ளினால் பூமியைத் தான் கிளறுவோம். கரும்பு எங்களை விட உயரமாக வளர்ந்தது. அப்போது சம்பூகன், மாதுலன் குழலூதினால் வனதேவி சந்தோசப்பட்டு நிறைய மாங்கனி, கரும்பு, தேன் எல்லாம் தருவாள் என்றான். நாங்கள் முன்பெல்லாம் ஓணானைப் பிடித்துக் கல் தூக்கச் சொல்வோம்; நத்தைக் கூடுகளை உடைப்போம். அதெல்லாம் ஒன்றுமே செய்வதில்லை. எங்கிருந்து யார் அம்பு போட்டார்கள்? யார்... யார்... யார்..."

     யார்... யார்... என்று அந்தக் கானகம் முழுவதும் எதிரொலிப்பது போல் அவளுக்குத் தோன்றுகிறது.

     மௌனமாக நிற்கும் சத்திய முனிவரின் முன் விழுந்து பணிகிறாள்.

     "எந்தையே, இந்தப் பாவம் செய்தவர் யாராக இருந்தாலும், அவரை அவர் செயலாகிய பாவமே தண்டிக்கட்டும்..."

     கண்ணீர் முத்துக்கள் சிதறி அவர் காலடியில் வீழ்கின்றன.

     அவர் அவளை எழுப்புகிறார். "மகளே, வருந்தாதே? இயற்கையை அழிக்கும் செயல்புரியும் எவருக்கும் அதுவே பிறவிப் பிணியாகும். சம்பூகனைக் கொல்வது அவர்கள் அந்தணர்களைக் காப்பாற்றும் தருமத்தில் பட்டது என்பார்கள்."

     "அவன் பிறப்பே, ஏதோ பாவத்தின் பயன் என்று அநாதையாக விட்டார்கள். நாம் அவனை மனிதனாக வாழ வைக்க முயன்றோம்... மூவுலகும் புகழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு முடி மன்னன், இந்தக் குற்றமற்ற சிறுவனை வீழ்த்தியது, ஒரு சிங்கம் ஒரு சிற்றெரும்பைக் கண்டஞ்சி, அதை அறைந்து கொன்றாற் போல் இருக்கிறது... அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வலிமையை விட, இந்தச் சிறுவனின் உயிராற்றல் ஆன்ம வலிமை கண்டஞ்சி, அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். வேதம், கல்வி, மேலாம் அறிவு, ஞானம், எல்லாம் பிறப்பினால் மேற்குலத் தந்தையின் வழி வந்தவருக்கே உரியது என்று தீர்த்துவிட்ட நியாயத்தை நான் உடைக்க முயன்றேன். இது என்னை நோக்கி வந்த அம்பு மகளே..."

     "ஆயுதங்களால் உடலை அழிக்கலாம். ஆனால் இந்தச் சம்பூகன் விதைத்த விதைகள், பேராற்றலாக வளரும். மேலும் மேலும் வேறு உருவங்களில் கிளைத்துச் செழித்து வரும்..."

     "சுவாமி, இந்தத் தத்துவங்கள் எதுவும் எனக்கு அமைதி தரவில்லை."

     "ஆமாம் குழந்தாய், அரசரவைகளில் போக போக்கியங்களைத் துய்த்துக் கொண்டு, பேசுவதற்குத்தான் தத்துவங்கள். இதற்கப்பால் இது, அதற்கப்பால் அது, ஏகம் பிரும்மம், மற்றதெல்லாம் மாயம் என்று பேசுவார்கள்; வாதம் செய்வார்கள்..."

     உடனே பெரியன்னை, துயரம் வெடிக்க, "நிறை சூலியை வனத்துக்கு அனுப்புவார்கள். என்ன தத்துவம் வேண்டிக் கிடக்கிறது?... மகளே, அதை மறந்து விடு. அவர்களுக்கு அச்சம். ஏனெனில் மனசில் ஆசை என்ற கருப்பு இருக்கிறது. ஆசை, சாம்ராச்சிய ஆசை; ஆதிக்க ஆசை. ஆசை இல்லை என்றால் அச்சம் இல்லை. நந்தனைப் பார்; அபூர்வமான பிள்ளை; இந்தச் சம்பூகன் அப்படி வளர்ந்தான். இவர்களை... அழிக்க வேண்டும் என்று குலகுரு, மந்திரம் சொல்வார்; மன்னன் மதிப்பில்லாமல் கேட்பான்! 'தாழ்ந்த குலப்பிள்ளைகள் மந்திரம் சொல்வதா? அந்தி தொழுவதா? சந்தி வந்தனம் செய்வதா?... இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்து, அதைத் தொலைக்க, தவ வாழ்வு வாழ்கிறார்கள். அந்தப் பாவங்கள் நம் குலத்தைத் தொத்திக் கொள்ளும் மன்னவா! நீ இந்த மந்திரம் செபித்து அஸ்திரம் எய்து, அவனை அழி; பிரும்ம குலத்தைக் காப்பாற்று" என்று ஓதியிருப்பான்! பூமகள் அந்த அன்னையின் சுடுசொற்களின் வீரியம் தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

     "எந்தையே, எது தருமம்? எது பாவம்? எது புண்ணியம்? எனக்கு எதுவுமே புரியவில்லை. ஒரு கால் இந்த மைந்தர்களை அவர்களிடம் கொண்டு செல்லவோ இந்த சூழ்ச்சிகள்?"

     "குழம்பாதே, மகளே, நீ உறுதியாக இரு. சத்தியம் என்றுமே பொய்த்ததில்லை. அது கருக்கிருட்டில் மின்னலைப் போல் தன்னை விளக்கிக் காட்டும்!"

     அழுது கொண்டே பிள்ளைகளும் நந்தமுனியும் சம்பூகனுக்கு இறுதிக்கடன் செய்கிறார்கள். வேதவதி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வந்து அவனை நீராட்டி, புதிய நார் ஆடையை அரைக் கச்சையாக்கி, அந்த மகிழ மரத்தடியிலேயே அவனை வைக்கக் குழி தோண்டுகிறார்கள். அந்த இடம் அவனுக்கு விருப்பமான இடம். அங்கே அமர்ந்துதான் குழலிசைப்பான். குழல்களில் துவாபாரம் செய்து ஊதிப் பார்ப்பான். அங்கே அமர்ந்து தான் வாழை நார் தூய்மை செய்து, நூல் நூற்று சுற்றி வைப்பான்...

     வானவனும் இந்தப் பிள்ளைக்கு அஞ்சலி செய்வது போல் அந்தியின் துகில் கொண்டு போர்த்துகிறான். பசுந்துளிர்களையும் மலர்களையும் கொய்து அவன் உடலை மூடுகிறார்கள். அகழ்ந்த குழியில் அவனை இறக்கிய பிறகு அனைவரும் கதறியழுது, மேல் மண்ணைத் தூவுகிறார்கள். சத்தியமுனி தாய் மண்ணைப் புகழ்ந்து பாடுகிறார்.

     "உயிர் கொடுத்த அன்னையே,
     உனைப் போற்றுகிறோம்.
     உயிர் தந்தனை; உண்டி தந்தனை;
     மனம் தந்தனை; அறிவு தந்தனை
     ஒளி ஈந்தனை; உறவு கொண்டனை
     அன்பு தந்தனை; இன்பம் தந்தனை
     இன்னல் தீர்த்தனை; வாழச் செய்தனை
     இதோ உன் மைந்தன்; ஈரேழு வளர்ந்த பாலகன்.
     உன் மடியில் இடுகிறோம்; அவன் துயிலட்டும்.
     உறுத்தாமல், வருத்தாமல் துகில் கொண்டணைப்பாய்,
     தாயே, தயாபதி, உனைப் போற்றுகிறோம்..."

     சங்கம் கொண்டு ஊதுகிறார்கள். சிறுவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

     "அம்மா, சம்புகன் வர மாட்டானா?"

     குழந்தைகளின் கேள்விக்கு விடையளிக்க இயலாமல் அவர்களைத் தழுவிக் கொண்டு பூமகள் கண்ணீர் உகுக்கிறாள்.

     "அஜயா, விஜயா, அதோ பார்!" என்று சத்தியர் சிறுவர்களைப் பற்றிக் கொண்டு வானத்தைக் காட்டுகிறார்.

     வானில் ஒளித்தாரகை ஒன்று மின்னுகிறது.

     "அதோ பார்த்தீர்களா? சம்பூகன் அங்கேயிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பான்!"

     நந்தமுனி குழலை எடுத்து மண்ணைத் தட்டித் துடைத்து, மாதுலனிடம் கொடுக்கிறார்.

     "பையா, குழலூது; சம்பூகன் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பான். இன்னும் இன்னும் இந்தத் தாயிடம் எண்ணில்லாச் சம்பூகர்கள் தோன்றுவார்கள். குழல் ஊது! குழல் ஊது! குழல் ஊது!"

     மாதுலன் குழலை உதடுகளில் பொருத்தி இசைக்கிறான்.

     சோகம் பிரவாகமாக அந்த இசையில் பொங்கி வருகிறது.