![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
5 நீரில் இருந்து வெளி வந்தவளை, கை பற்றி அழைத்து வருகிறாள் அவந்திகா. 'மன்னர் தோட்டத்தில் வந்து சந்திப்பார் என்றார்கள். இப்போது மாளிகை என்று இவள் சேதி சொல்கிறாள்! என்ன மாயமோ!' அவந்திகா, விரைந்து கூந்தலின் ஈரத்தைப் போக்க மெல்லிய பருத்தித் துண்டினால் துடைத்து எடுக்கிறாள். தூபப்புகை காட்டி, வாசனைகள் ஏற்றிக் கூந்தலைச் சிங்காரம் செய்கிறாள். பின்னல் போட முடியாது. மேலும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் பின்னல் போடலாகாது. நீண்டு அடர்ந்து இடுப்புக்குக் கீழ் வரும் கூந்தலை ஈரம் ஒத்தி வெவ்வேறாக்கி விடுவதே பிரயாசம். பூமகளோ பரபரக்கிறாள். "போதும் அவந்திகா, அப்படியே முடிந்து விடு..." முத்துச்சரங்களைச் சுற்றி ஒருவாறு கூந்தல் அலங்காரம் நிறைவேறுகிறது. "வனதேவியைப் போல் மலர்ச்சரங்களைக் கைகளிலும் கழுத்திலும் சூட்டி விடுகிறேன். கனத்த ஆபரணங்கள் வேண்டாம்!" என்று அவந்திகா மேனியில் மகரந்தப் பொடி தூவி, பட்டாடைக்கு மேல் மலர்ச்சரங்களைத் தொங்க விட்டு அழகு பார்க்கிறாள். அப்போது, பணிப்பெண்கள் செண்பகத் தோட்டத்தின் பக்கம், பட்டுத்துண்டு மூடிய தட்டங்களைச் சுமந்து செல்வதை விமலை பார்த்து விட்டு விரைந்து வருகிறாள். "தேவி! மன்னர் செண்பகத் தோட்டத்துப் பக்கம் தான் செல்கிறார் போல் இருக்கிறது. உணவுப் பொருட்கள், கனி வகைகள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்களே?" "நான் மாளிகைக்கே செல்கிறேன். அங்கே வந்திருக்கிறார் என்று தானே இவள் சொன்னாள்?" பூமகள் விடுவிடென்று கல் பாவிய பாதையில் நடக்கிறாள். மாளிகையின் பின் வாசல் பூம்பந்தலின் கீழ் மன்னர் நிற்கிறார். சற்று எட்ட, ஜலஜை, சாமளி இருவரும் நிற்கின்றனர். சுலபாக் கிழவி மன்னருக்கு வரவேற்பு வாசகம் சொல்லி நடுங்கும் குரலில் பாடுகிறாள். "கோசல குமாரருக்கு மங்களம், குவலய வேந்தருக்கு மங்களம், அரக்கர் குலம் அழித்தவர்க்கு மங்களம், அவனியாளும் மன்னருக்கு மங்களம்..." அவளையும் அருகில் இருத்தி ஆரத்தி எடுத்து, கண்ணேறு கழித்து, அந்தக் கிழவி சடங்கு செய்கிறாள். பூமகளுக்கு இதொன்றுமே உவப்பாக இல்லை. மன்னர் என்றால் இப்படியா? ஓர் அந்தரங்க - நேர்ச்சொல் உரைக்கவும் இடமில்லாத அரண்மனைக் கட்டுப்பாடுகள்!... "தேவி, நீராடப் போயிருந்தாயா?" "அதுதான் தெரிகிறதே?" என்று முகத்தில் சுணக்கம் காட்டுகிறாள். "உங்கள் அரச நெறிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த அவையோடு இருக்கலாம். சொந்த மனைவியுடன் இரண்டு பேச்சுப் பேசக் கூட இவ்வளவு விதிகள் - வரைமுறைகளா?" அவள் உரத்த குரலில் கேட்கவில்லை. தலை குனிகிறாள். மன்னர் அவள் மென் கரத்தைப் பற்றுகிறார்... "இரண்டு மூன்று நாட்களாக எனக்கு இங்கு வர வேண்டும் என்று உள்ளம் விரும்பவும், இயலாதபடி அலுவல்கள். மகாராணி இந்த மன்னரான அடியவனை மன்னிக்க வேண்டும்..." காதோடு சொல்லும் இவ்வார்த்தைகளில் அவள் முகத்தில் வெம்மை ஏறுகிறது. "செண்பகத் தோட்டத்துக்குப் போகலாமா? உனக்குத் தான் அந்தக் குளத்தில் வந்திறங்கும் பறவைகளை அன்னங்களைப் பார்க்க மிகவும் பிடிக்குமே? நாம் மகிழ்ந்த கோதாவரிக் கரைத் தோட்டங்களைப் போல் சரயு ஆறு வரையிலும் தோப்பாக, தோட்டங்களாக அமைத்து விடலாம். அதே மாதிரி பொய்கைகள், யானைக் குட்டிகள்..." "அரச காரியம் பற்றிப் பேதையான எனக்கு எதுவும் தெரியாதுதான்... என்றாலும், தந்தையிடம் அநுபவம் பெற்ற மூத்த அமைச்சர் பிரான், சுமந்திரர் கவனிக்க மாட்டாரா?..." "தேவி, அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றனவே. பதினான்கு ஆண்டுகளில் பத்து மாதங்கள் தானே உன்னை விட்டுப் பிரிந்து இருந்தேன்?..." 'பத்து மாதங்கள் தவிர...' அந்தச் சொல் பொன் ஊசியாகக் குத்துகிறது. அவந்திகா அங்கே நிற்கும் பணிப்பெண்களை குறிப்பாக ஜலஜையை, விரட்டுகிறாள். "இப்போது எதற்கு நீங்கள் மன்னருக்கும் மகாராணிக்கும் இடையில்! அவரவர் வேலையைப் பாருங்கள்!" பூமைக்கு மன்னருடைய கை, தொட்டுணர்வு, குளிர்ச்சியாக இருக்கிறது. வழி நெடுக அவள் எதையும் பார்க்கவில்லை. பேசவுமில்லை. காட்டில் இருந்த அந்தக் காலத்தில், வில்லையும் அம்பையும் சுமந்து திரிந்தீர்கள். இப்போது அரசாங்க காரியம்... ஒரு மனிதராக... சாதாரண மனிதரின் ஆசாபாசங்கள் உங்களிடம் இல்லையோ? மனதுக்குள் மூர்க்கமாக எழும் பாம்புகளைப் போல் இவ்வினாக்கள் சீறுகின்றன. அடங்கு... அடங்கு... அடங்கு மனமே!... அடங்கு! மெல்லிய பட்டுத் தைத்த தோல் காலணிகளை அவள் அணிந்திருக்கிறாள். செண்பகத் தோட்டத்தின் பறவையொலிகள் மிக இனிமையாகக் கேட்கின்றன. ஒரு மகிழ மரம் கிளைகளை வீசிக் கொண்டு, 'நான் இங்கே உங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்து ஆளாக இருக்கிறேன்!' என்று தன் பழம் பெருமையை சாற்றிக் கொண்டு அவர்களை ஆசிர்வதிப்பது போல் மலர்களைச் சொரிகிறது. "என்ன வாசனை? இதற்கு ஏன் செண்பகத் தோட்டம் என்று பெயர்?" என்று வியந்து அதன் அடியிலுள்ள மேடையில் அவள் அமருகிறாள். "அதைப் பற்றி நானும் கேட்டேன். எங்கள் மூதாதையர் ஒரு பெண்ணை விரும்பினாராம். அவர் இந்த மரத்தடியில் தான் அவளைச் சந்திப்பாராம். மகிழ்ந்திருப்பாராம். அவள் கருவுற்று மகப்பேறு பெறாமல் இறந்து போனாளாம். அவள் பெயர் செண்பகவல்லி. அதனால் அவள் பெயரை இந்தத் தோட்டத்துக்கு வைத்து, மேற்கே செண்பக மலர்கள் சொரியும் மரங்களை நட்டாராம்..." "அப்படியானால், இந்த மரத்தடியில்..." என்று சொல்ல வருபவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள். மன்னர் அவள் கையை அழுத்தமாகப் பற்றுகிறார். "பிரியமானவளே, நாம் எப்போதும் போல் அன்னப் பொய்கைக்குப் போவோம். வட்ட வடிவப் படிகளில் அமர்ந்து பறவைகளைப் பார்ப்போம்..." அவர்கள் அங்கே வந்து, சுத்தம் செய்து விரிப்புகள் போடப்பட்ட இருக்கைப் படிகளில் அமர்ந்து கொள்கின்றனர். இதமான மஞ்சள் வெயில் அவர்களுக்குப் பொன் பட்டுப் போர்த்துகிறது. வெள்ளை அன்னங்கள் உலவும் அழகைப் பார்த்துக் கொண்டே, மன்னர் அவள் கரத்தைத் தன் மடியில் வைத்து, அந்தத் தொட்டுணர்வை அநுபவித்தவாறே, "பிரியமானவளே, உன்னை நான் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். என் கடமையை நான் மறக்கவில்லை. இந்த வம்சத்தின் கொடியை நீ உன்னுள் தாங்குகிறாய். உனக்கு எந்த ஆசை இருந்தாலும் அதை நான் நிறைவேற்ற வேண்டும். அன்புக்கினியவளே, காமரூபத்தில் இருந்து வந்த பட்டு வணிகர்கள் கொண்டு வந்த ஆடைகள் மிக நன்றாக இருந்தன. அன்னையிடம் அனுப்பி உனக்குச் சேர்க்கச் சொன்னேன். உனக்குப் பிடித்ததா?" என்று கேட்கிறார். "உம்..." என்று முத்துதிர்க்கிறாள். மனசுக்குள், இங்கும் நேர்முகப் பரிமாறல் இல்லையா என்ற வினா உயிர்க்கிறது. ஒரு தம்பி, ஒரு வானரன், ஒரு வேடன்... இப்போது அன்னை... அன்னை சொல்லித்தான் இங்கு என் ஆவலைத் தீர்த்து வைக்க வந்திருக்கிறீர்? "என் மீது கோபமா தேவி?" மன்னர் தணிந்து அவள் முகவாயைத் தன் பக்கம் திருப்புகையில் எங்கிருந்தோ அவள் வளர்த்த தத்தம்மா அவள் தோளில் வந்து குந்துகிறது. "மகாராணி! மகாராஜா! மகாராணிக்கு மங்களம்!" அவள் அதைக் கையிலேந்தி இருக்கையில், "மகாராணி! மகாராசாவிடம் கோபிக்கக் கூடாது. மன்னர்... பாவம்" என்று குறும்பு செய்கிறது. அப்போது, ஜலஜை கனிகளையும், உண்ணும் பண்டங்களையும் அவர்கள் அருகில் கொண்டு வைக்கிறாள். தாம்பூலத் தட்டும் வருகிறது. "ஜலஜா... ஜலஜா... பூனைக்கண்ணு..." என்று கிளிப் பேசுகிறது. "சீ!" என்று அவள் விரட்டுகிறாள். மன்னர் அவளை அப்பால் போகும்படி சைகை காட்டுகிறார். அவள் செல்லுமுன் கிளியும் பறந்து செல்கிறது. "இது பொல்லாத கிளி..." "ஏன்?" "நம் இருவருக்கிடையில் குறுக்கிடுகிறதே?" "புத்திசாலிக்கிளி. ஒரு நாள் என் முற்றத்தில் இது அடிபட்டு விழுந்தது. பாலும் பழமும் ஊட்டி வளர்த்து பேசப் பயிற்றுவித்தேன். இது இப்போது சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இல்லாமல் ஏதேதோ சொல்கிறது. எங்கெங்கோ கேட்டவற்றையெல்லாம் கோவையாக அடுக்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறது..." "சொல்லப் போனால் எல்லா உயிர்களுக்கும் அவை அவைக்குரிய மொழிகள் உண்டு. இளைய மாதாவின் தகப்பனாருக்கு அத்துணை மொழிகளும் தெரியுமாம். ஆனால் அவற்றை வெளியில் உரைப்பது அவற்றின் தனி உரிமையில் மனிதர் தலையிடுவது போன்று குற்றமே. அதனால் தான் எல்லோரும் ஒற்றுமையாக அவரவர் தருமத்தைப் பாலித்து வாழ வேண்டும். இல்லையேல் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆன்றோர் எச்சரித்திருக்கிறார்கள்..." அவளுக்கு அவர் பேச்சில் மகிழ்ச்சி தோன்றவில்லை. அவரவர் தருமம் என்றால் என்ன? க்ஷத்திரியனுக்குக் கொல்லும் தருமம், அதுதானே?... என் கையைப் பற்றியிருக்கும் இந்தக் கரம், எளியோரைப் பாதுகாக்கும் ஆதரவுக் கரம் என்று நம்புகிறேன். ஆனால் இது, பெண், விலங்கு, மனிதர் என்று பாகுபாடில்லாமல் கொன்று குவித்திருக்கிறது. அரக்கர்களைக் கொல்லுவது தான் க்ஷத்திரிய தருமம் என்றால், அந்த வன்முறை உயிர் வாழத் தேவையா? என் குலத்துக்கு வரும் இழுக்கைப் போக்கவே அரக்கர் குலமழித்தேன்... இந்தச் சொற்கள் மின்னலாய் தோன்ற, அவள் தன் செம்பஞ்சுக் குழம்பு ஏறிய மலர்க்கரங்களை விடுவித்துக் கொள்கிறாள். அவள் பேசாமல் தலை குனிந்திருக்கும் கோலம் அவருக்கு உவப்பாக இருக்காது. உறுத்தட்டும், உறுத்தட்டும் என்று செவ்விதழ்களைப் பிரிக்காமலே அமர்ந்திருக்கிறாள். தட்டில் இருக்கும் பட்டுத்துண்டை நீக்கியதும், நெய் அப்பத்தின் மணம் நாசியில் ஏறுகிறது. பாலடைக் கட்டி தானிய மாவினால் செய்த உப்புப் பண்டம்... அப்பத் துண்டை விண்டு அவள் வாயருகில் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து ஊடலுக்குத் தன்னைச் சித்தமாக்கிக் கொள்கிறாள். ஆனால் நடந்தது வேறு. ஒரு பாலடைத் துண்டை எடுத்து அவர் குளத்தில் விட்டெறிய, அதை நீர் மட்டத்துக்கு மேல் ஒரு மீன் வந்து கவ்வ முயலுகையில் மேலே பறந்தாற் போல் வந்த ஒரு பறவை அதைக் கவ்வி, அதன் பெட்டைக்குக் கொண்டு செல்ல முங்கி மீனை எடுத்து மேலே போட, அதன் இணை இலாகவமாக அதைப் பற்றிக் கொள்கிறது. மன்னர் கலகலவென்று சிரிக்கிறார். பெண் அன்னம் முன்னே செல்ல, ஆண் தன் சிறகுகளை மெல்ல நீரில் அடித்தாற் போல் அதனுடன் உரசிக் கொண்டு சல்லாபம் செய்கிறது. பெண் குபுக்கென்று நீரில் மூழ்கிச் சிறிது அப்பால் செல்கிறது. மீண்டும் மன்னர் ஒரு பாலடைத் துண்டை தூக்கிப் போட, ஒரு மீன் எழும்பி அது ஒரு வெண் பறவைக்குப் பலியாகிறது. "... இது என்ன உயிர் விளையாட்டு? பாவம்!" "... நீ பேச வேண்டும் என்று தான் சீண்டினேன். தேவிக்கு என் மீது மிகவும் அதிகமான கோபம் என்று தெரிகிறது. நான் என்ன செய்யட்டும்? மீண்டும் நான் நாட்டை விட்டு உன்னிடம் வரவேண்டுமானால், என்னை விட மாட்டார்களே?..." "ஏன் இப்படி உயிர்க் கொலை செய்ய வேண்டும் பாலடையைக் காட்டி?" "அம்மம்ம... நான் அந்த அன்னத்துக்கு உணவல்லவோ அளித்தேன்? சரி, பிரியமானவளே, என்னைத் தண்டித்து விடு!" என்று அவள் செவிகளோடு கூறி அவளைத் தன் மார்பில் இழுத்துச் சார்த்திக் கொள்கிறார். அவள் நாணமுற்ற முகத்தை அந்த மார்பில் பதித்துக் கொள்கிறாள். மன்னரின் நெஞ்சத் துடிப்பை அவளால் உணர முடிகிறது. "அன்புக்கினியவளே, எனக்கு எப்போதும் உன் நினைவுதான். நான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும், அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போதும், இந்தத் துடிப்பு உன் பெயரையே உட்கொண்டு சுவாசிக்கிறது. தேவி, கேள்!..." "அப்படியானால், அன்று 'உனக்காக நான் அரக்கரை வெல்லக் கடல் கடந்து வரவில்லை' என்று சொன்னதெல்லாம்..." வார்த்தைகள் குத்திட்டு நிற்கின்றன. ஆனால் அவர் அந்தச் சொற்களால் அவள் இதயத்தைச் சுட்டு அக்கினி குண்டத்தில் இறக்கினாலும், அவள் அவர் இதயம் நோகும்படியான சொல்லம்புகளை வெளியாக்க மாட்டாள். அவளை வளர்த்த தந்தை கூறினாரே! "மகளே!... தந்தை தாய் தெரியாமல் என் கையில் வந்த உன் அழகுக்கும் குணத்துக்கும் பண்பு நலங்களுக்கும் மேன்மையுடன் உன்னை ஏற்றிப் போற்றிக் காப்பாற்றக் கூடிய அரச குமாரனை எப்படித் தேடுவேன் என்று கவலை கொண்டேன். ஆனால் சில விநாடிகளில் அந்தப் பெருங்கவலையைத் தீர்த்து வைத்தாய். வில்லின் கீழ் புகுந்த பறவைக் குஞ்சு வெளியே பறந்து வர இயலாமல் தவித்த போது, அநாயசமாக அதை உன் கருணைக் கரத்தால் தூக்கி, விடுவித்தாய். அந்த வில்லை எடுத்து நாணேற்றுபவனே உனக்கு மணாளன் என்று தீர்மானித்தேன். விசுவாமித்திர மகரிஷி பையன்களைக் கூட்டி வந்தார். சொந்த மகள், வளர்ப்பு மகள், தம்பி மக்கள் எல்லோருக்குமே மணமாலை நாள் கூடிவிட்டது. தாய்-தந்தை குலம் கோத்திரம் தெரியாத உன்னை அயோத்தி மன்னர் ஏற்றுக் கொண்டதே பெருமைக்குரிய செயல். இனி அவர் - உன் மணாளனே, தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லாமுமாகிறார். அவர் இருக்குமிடமே உனக்கு மேலான இடம்..." என்று மொழிந்த உரைகள்... எல்லாம் இவரே... இவர் உடமை, அவள். உடமைப் பொருள்... இப்போது அவள் வயிற்றில் உருவாகியிருக்கும் உயிரும் அவர் உடமை. அவள் நெற்றியை மெல்ல வருடிக் கொண்ட அவர், "பிரியே, உன் முகம் ஏன் வாட்ட முற்றிருக்கிறது?... உடல் நலமில்லையா?" என்று கேட்கிறார். அவள் எதைச் சொல்வாள்? "இல்லையே?" "உன்னைக் காண ஒரு முனி வந்திருந்தாராமே?..." அவள் விருட்டென்று தலை தூக்குகிறாள். "சுவாமி, அவரைத் தாங்கள் பார்த்தீர்களா?" "பார்த்தேன் என்று சொல்லவில்லையே! யாரந்த முனிவர்? அந்தப் பெரியவரை நான் வந்து வணங்கி நிற்பேனே? எனக்கு ஏன் சொல்லி அனுப்பவில்லை? யார் தேவி, அவர்?" "தாங்கள் பார்க்கவில்லை என்றால், அவர் வந்ததை யார் தங்களிடம் தெரிவித்தார்கள்?..." "ஒரு பணிப்பெண்... மூத்த அன்னையின் மாளிகைப் பெண். இப்போது கூட இங்கே நின்றிருந்தாளே? அவள் தான் நான் வரும் போது முனிவர் ஒருவர் வந்திருந்தார் என்று தெரிவித்தாள்..." "ஓ, பணிப்பெண்கள் இது போன்ற செய்திகளைக் கூட மன்னரிடம் தெரிவிப்பார்களா?..." "இல்லை. அன்று நான் கேட்டேன், தேவி நலமாக இருக்கிறாளா என்று. அதற்கு அவள், அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். தோட்டத்து மாமரத்தடியில் ஒரு முனிவர் வந்திருக்கிறார். அவரை உபசரித்துக் கொண்டிருந்தார் என்றாள். எனக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது, கேட்டேன்." "... ஓ... அப்படியா? அவள் பார்த்தாளோ?" என்று அவள் ஆறுதல் கொள்கிறாள். "முனி மக்கள் எவராக இருந்தாலும், வாயில் வழி வருவார்கள். வரவேற்று உபசரிப்பதற்காக நானே வந்து எதிர் கொள்வேன். இவர் யாரோ, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று எண்ணினேன் தேவி..." இந்தப் பேச்சில் என்ன குத்தல்...? இவள் கபட வேடம் தரித்து வந்து கவர்ந்து சென்ற இலங்கை மன்னனை உபசரித்ததைச் சொல்லிக் காட்டுகிறாரோ?... "சுவாமி, இவர் முனியுமல்ல, தாங்கள் நினைக்கும்படியான குலத்தவருமல்ல. பெற்றவர் முகம் அறியாத என்னை என் தந்தை மேழி பிடித்த போது கண்டெடுத்த வனத்தில் சிறுவராக அந்தச் சம்பவத்தைப் பார்த்தாராம். ஒற்றை நாண் யாழ் மீட்டி அற்புதமாகப் பாடுவார். என்னைக் காண வேதபுரி அரண்மனைத் தோட்டத்துக்கு வருவார். பாட்டும் கதையும் சொல்லித் தருவார். மகிழ்ச்சியுடன் அந்த இளமைப் பருவம் கழிந்தது. என்னுடைய குணங்களில் ஏதேனும் நலன்கள் படிந்திருக்கின்றன என்றால், அந்த பிரும்மசாரியின் பழக்கம் தான். அவர் தாம் என்னைக் காண வந்திருந்தார். வேதபுரியில் என் வளர்ப்புத் தந்தையும் இதையே சொல்லி அழைத்திருக்கிறார். 'மன்னரே, நான் தத்துவம் அறிந்த வித்தகனல்ல; கவி பாடும் குரவனுமல்ல... இந்தக் குழந்தையைப் பார்க்க வந்தேன்; போகிறேன். மன்னர் அவையில் வந்து நிற்க எனக்கு எந்த முகாந்தரமும் இல்லை' என்பார்... இப்போதும் அதையே சொல்லிவிட்டுப் போனார் அரசே!" மன்னர் சில விநாடிகள் வாளாவிருக்கையில் அவள் மேலும் தொடருகிறாள். "சுவாமி, எனக்கு ஓர் ஆசை உண்டு. அதை நிறைவேற்றுவீர்களா?" அவளை மார்போடு அணைத்து கூந்தலை வருடியபடி, "பிரியே, இந்தச் சமயத்தில் நிச்சயமாக உன் ஆசையை நிறைவேற்றுவேன். அந்த முனி வருக்கத்தை அழைத்து, நான் பெருமைப்படுத்துவேன். வேடுவர்களாகவும், அடிமையின் மக்களாகவும் இருந்தவர்கள், ஆன்மானுபவம் பெற்று, வனத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் உபநயனம் செய்து வைக்கும் முனிவர் ஒருவர் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அவர்களை இங்கு அழைத்து உலக நன்மைகளுக்காக பெரிய வேள்வி நடத்த ஏற்பாடு செய்வோம்... சரியா தேவி?" "வேள்வி நடத்துவது, தங்கள் சித்தம். ஆனால் என் ஆசை அதுவல்ல, சுவாமி!" "பின் என்ன ஆசை? தயங்காமல் சொல் தேவி! இந்த அயோத்தி மன்னன், உன் பிரிய நாயகன், உன் கோரிக்கையை நிறைவேற்ற உலகின் எந்த மூலையில் இருக்கும் பொருளாக இருந்தாலும் கொண்டு வருவான். சொல் தேவி!" "உலகில் எந்த மூலைக்கும் தாங்கள் செல்ல வேண்டாம் சுவாமி! நாம் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தோம் ஆனால் நான் உதயமான இடத்தை இன்று வரை தரிசிக்கவில்லை. வேடுவ மக்கள், மன்னருடன் பிறந்தவர் போல் தோழமை காட்டுகிறார்கள். ஆனால் நான் உதயமான இடத்தில் இருந்து ஒரு மூதாட்டி இந்த பிரும்மசாரிச் சிறுவருடன் என்னைக் காண வந்து அன்பைப் பொழிவாள். அந்தக் கானக மக்களிடையே சென்று நான் உறவாடவில்லை. அந்த மூதாட்டி, மார்க்க முனி ஆசிரமத்தில் நெடுங்காலம் இருந்திருக்கிறாராம். என்னை இந்த அவந்திகாவுக்கு மேல் தாய்க்குத் தாயாகச் சீராட்டிக் கதைகள் சொல்லி விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பார். அவர் இப்போது மிகவும் நலிந்து முதுமையில் தளர்ந்து நடக்க முடியாமல் இருக்கிறாராம். அவரைச் சென்று பார்த்து, இந்த அரண்மனை மாளிகையில் என்னுடன் அழைத்து வர ஆசை. ஆனால் அவரும் இந்த நந்த பிரும்மசாரி - முனியைப் போல் அரண்மனைக்குள் வர மாட்டார். என்றாலும், நம் குலக் கொடியை நான் தாங்கியிருக்கும் இந்த நேரத்தில் நாம் இருவரும் சென்று பார்த்து அழைத்தால் வருவார். இதுதான் சுவாமி என் ஆசை!" "பிரியே, நிச்சயமாக உன் ஆசை நிறைவேறும். விரைவில் உன் விருப்பத்தை நான் பூர்த்தி செய்வேன்..." வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|