![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
6 மன்னர் வாக்குக் கொடுத்து விட்டார். மகிழ்ச்சியில் பூமையின் உள்ளம் சிறகடித்துப் பறக்கிறது. ஏதேதோ எண்ணங்களிலும் கற்பனைகளிலும் அவள் அந்த மகிழ்ச்சியை அநுபவிக்கையில் மன்னர் அந்தச் சந்திப்புக்குப் பிறகு மூன்று நாட்களான பின்னரும் மாளிகையில் உணவு கொள்ள வரவில்லை என்பது உறுத்தவில்லை. அதற்குக் காரணம் உண்டு. அவள் தாவர உணவும் தானியப் பண்டங்களையும் உண்ணும் சீமாட்டி; அவரோ க்ஷத்திரியருக்குரிய ராஜச உணவை உண்பவர். கானகத்தில் இருந்த நாட்களில், இருவருக்கும் இந்த உணவுப் பழக்கங்கள் நெருடும். அவரே மான் கறி சமைத்து இலைத் தொன்னையில் வைத்து அவளை உண்ணச் சொல்வார். அவளுக்கு விருப்பம் இருக்காது. பிறகு தேடித் திரிந்து அவளுக்காக மாங்கனி தேங்கனி என்று கொண்டு வருவார். "நீ இந்த உணவில் மிக மெலிந்து போனாய்; தன் மனையாளைப் பாதுகாத்து, அவளுக்கு உணவு தேடிக் கொடுக்கக் கையாலாகதாவன் என்று உன் தந்தை என்னை இகழ்வார், தேவி!" என்பார். "என் தந்தை நிச்சயமாக அப்படிச் சொல்ல மாட்டார். குலம் கோத்திரம் தெரியாத என்னை மனமுவந்து ஏற்றுக் கொண்டீர். 'அந்த நன்றிப் பெருக்கை நீ எப்போதும் காட்ட வேண்டும்' என்று தான் எனக்கு அறிவுரை கூறினார்" என்று சொல்லும் போது நா தழு தழுக்கும். இப்போதும் அந்த அறிவுரையை எண்ணிக் கரைந்தவாறு, முற்றத்தில் வந்திருக்கும் பறவைகளுக்குத் தானிய மணிகளை இறைக்கிறாள். "குலகுரு... சதானந்தர் வருகிறார், தேவி!..." விமலைதான் அறிவிக்கிறாள். வேதபுரித் தந்தையின் குலகுரு... "இங்கே வருகிறாரா?" "பெரிய ராணி மாதாவின் அரண்மனைப் பக்கம் மன்னர், இளையவர், எல்லோருடனும் வந்து கொண்டிருந்தார்..." அவள் மனசில் மெல்லிய சலனங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தவிர்ப்பவள் போல், சிறு சிறு குருவிகள் தானிய மணிகளைக் கொத்தி உண்பதும், விர்ரென்று பூம்பந்தலின் மேல் பறந்து செல்வதும், மூக்குடன் மூக்காய் உரசிச் சரசமாடுவதும் கண்டு அந்தக் காட்சிகளில் ஒன்றியிருக்கிறாள். இங்கு வரும் ஒவ்வொரு பறவை இணையும் இவளுக்குப் பரிச்சயமானது. கழுத்தில் கறுப்புப் புள்ளிகள், பிடரியில் சிவப்புக் கோலம், அடிவயிற்றின் பஞ்சு வெண்மை, பறக்கும் போது பூச்சக்கரம் போல் தெரியும் வண்ணக்கோலம்... அனைத்திலும் மனம் பறி கொடுத்திருக்கிறாள். ஒரு வகையில், இந்தக் கூட்டுச் சிறை அரண்மனைக் கிளிக்கு, வெளியே சென்று வரும் இந்தப் பறவைகளின் தோழமை மிகுந்த ஆறுதல் தருகிறது... இவை எங்கெங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன என்பதை ஆவலுடன் கவனிக்கிறாள். தாயும் தந்தையுமாகச் சிட்டுக் குருவிகள் ஓடி ஓடி உணவு கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும் போது அவற்றின் கூச்சல் இன்ப வாரிதியாகச் செவிகளில் விழுகின்றன. அந்தக் குஞ்சுகள்... இறகு முளைக்காத குஞ்சுகளுக்கு வாயே உடலாக இருப்பது போல் தோன்றுகிறது... இவள் பூம்பந்தலின் மூலையில் இந்த உணவூட்டும் காட்சியில் ஒன்றி இருக்கையில், அவந்திகா வருகிறாள். "தேவி, குலகுரு சதானந்தர் வந்திருக்கிறார்..." பூமை கண்களைத் திருப்பவில்லை. "ஸீமந்த முகூர்த்தம் குறித்துக் கேட்க வந்திருப்பதாகத் தெரிகிறது..." அவள் முகத்தில் வெம்மை பரவுகிறது. "அவந்திகா, ஆண் பறவை அடைக் காக்குமா?" அவந்திகாவின் பார்வை அவளை ஊடுருவுகிறது. "தெரியவில்லையே தேவி, பெண்களே கருவைச் சுமக்கிறார்கள். பறவைகளிலும் பெண் பறவையின் உயிர்ச்சூட்டில் குஞ்சு வெளிவருமாக நினைக்கிறேன்." "மனிதர்களோடு பறவைகளை ஒப்பிட வேண்டாம். பறவைகளை மட்டும் கேட்டேன்." "தெரிகிறது. மனிதர், விலங்கு, பறவை எல்லா உயிர்களிலும் ஆண் - பெண் பிரிவுகள் பொதுவானவைதானே?" "ஊர்வன வெல்லாம் பூமிக்குள் முட்டை வைக்கின்றன. பூமித்தாய் அடைகாத்து உயிர் கொடுக்கிறாள்... இல்லை...?" "தாங்கள் சொல்வது சரிதான் தேவி..." அவளுக்கு அப்போது பெரியம்மா நினைவு வருகிறது. அவள் தளிர்நடை பழகுப் பருவத்தில் அவர் அவளைத் தோளில் ஏற்றிக் கொள்வார். மரம், செடி, கொடிகள் எல்லாவற்றையும் காட்டிக் கதை சொல்வார். ஒரு கதை... பூமி வானில் இருக்கும் நட்சத்திரத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "நீ கீழிறங்கி வர மாட்டாயா?..." என்று கேட்டது. நட்சத்திரத்தால் எப்படி வர முடியும்? அது கீழே வந்தால் பூதலம் பற்றி எரியாதா? ஆனாலும் நட்சத்திரத்துக்கு, பூமித்தாய்க்கு மகளாக அவள் மடியில் தவழ வேண்டும் என்று ஆசை இருந்தது. நட்சத்திரத்தின் கோடானு கோடி அணுத் துகளில் ஒன்று அன்பாய்க் குளிர்ந்து, பூமிக்குள் இறங்கியது. பூமித்தாய் அழகிய பெட்டிக்குள் மெத்தையாய் மாறினாள். அந்தப் பூவை ஏந்தினாள். மூன்றே முக்கால் நாழிகையில் ஓர் அழகிய குழந்தை பெட்டிக்குள் உயிர்த்தது. உன் தந்தை செய்த தவத்தால், நீ அவர் கரத்தில் வந்தாய்... இந்தக் கதை அவளுக்கு அப்போது எவ்வளவு பெருமையாக இருந்தது? இந்தப் பெருமைகளை, 'குலம் கோத்திரம் தெரியாத' என்று சொல்லைப் போட்டு அவரே அழித்து விட்டார்!... அரவம் கேட்கிறது. பணிப்பெண்கள் வரிசைகளுடன் வருகிறார்கள். பூமை, பாதசரம் சிலுங்க, சுதானந்தரை எதிர்கொள்ளச் செல்கிறாள். அவள் கண்கள் வந்திருந்தவர்களில் மன்னரைத் தேடுகிறது. இளையவர்... ஊர்மியின் கணவர் தாம் வணக்கம் தெரிவிக்கிறார். அவள் தந்தையின் குலகுருவுக்குப் பாதங்களைக் கழுவி மலர் தூவி வணங்குகிறாள். உபசரித்து மாளிகைக்குள் அழைத்துச் செல்கிறாள். "குழந்தாய், மங்களம் உண்டாகட்டும்! நலமாக இருக்கிறாயா? தாயாக இருக்கும் உன்னையும், உன் தங்கையரையும் கண்டு வர, ஸீமந்த முகூர்த்தம் பற்றிச் சேதி அறிய உன் தந்தை என்னை அனுப்பி வைத்தார். முகம் வாட்டமாக இருக்கிறதே? உடலும் உள்ளமும் நலமாக இருக்கிறாயா, குழந்தாய்? மன்னருக்கு உன்னைப் பற்றியே கவலை. என்னைக் குறிப்பாக அதற்கே அனுப்பி வைத்தார்... இங்கே அன்னையரின் அரவணைப்பில் மன்னரின் அருகாமையில் நீ இந்த வம்சத்துக்கான மகனைப் பெற்றுப் புகழும் பெருமையும் அடைவாய். உனக்கு இனி ஒரு குறையும் வராது..." "வணக்கத்துடன் வழிபடுகிறேன், குருவே. தங்கள் ஆசிகளே என் பேறு. மன்னரிடம் நான் உதித்த வேதவதியாற்றுக் கரை பூமிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்களைக் கண்டு, சில நாட்கள் தங்கி வர வேண்டும் என்று சொன்னேன். மன்னர் விரைவில் என்னை அங்கெல்லாம் அழைத்துச் சென்று என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக வாக்களித்திருக்கிறார் சுவாமி!" "உன் தந்தை மன்னரிடம் தெரிவிப்பேன். அவர் மகளையும் மருமகனையும் வரவேற்க மிகவும் மகிழ்ச்சி கொள்வார்... உனக்கு அழகிய பட்டாடைகளை, ஆபரணங்களை, ராணி மாதா அனுப்பியுள்ளார். வசந்த விழா வருகிறதல்லவா?" "ஊர்மிளாவும் இளையவரும், சுதாவும், மாண்டவியும் கூட வசந்த விழாவுக்கு அங்கு வருவார்களா குருவே?" கேட்டுக் கொண்டே அடிமைகள் சுமந்து வந்த மரப்பெட்டியை இறக்கிப் பட்டாடைகளையும் முத்துச் சரங்களையும் விதவிதமான காதணிகளையும் பூமகள் பார்க்கிறாள். தாமரையின் இள நீலச் சிவப்பு வண்ணத்தில் சரிகைக் கொடிகள் ஓடும் பட்டாடை மிகமிக மென்மையான துகில்... அவள் கைவிரல்களால் அதைத் தொட்டுப் பார்த்து, "வேதபுரிச் சாலியர் நெய்ததா சுவாமி? மிக மிக அருமை...!" என்று வியக்கிறாள். "ஆமாம்; சீனம், சாவகம், புட்பகம் ஆகிய தொலைநாட்டு வணிகரெல்லாம் நம் வேதபுரிச் சாலியரின் இந்தக் கைநேர்த்தியைக் கண்டு வியக்கின்றனர். இந்த ஆடை, தாயாக இருக்கும் பூமகளுக்கென்று சிறப்பாக நெய்யப்பட்டது. வேதபுரித் திருமகளாக நீ வந்த நாட்களில் இருந்தே அந்த நகருக்கு ஒரு புதிய செழிப்பும் பெருமையும் வந்து விட்டது. திருமகள் மைந்தரைப் பெற்று எடுத்துக் கொண்டு தாயாக அங்கு வரவேண்டும். இது தந்தையின் ஆசை" சிறு முள் விரலில் பட்டாற் போல் முகம் சுருங்கி, உடனே அது சுவடு தெரியாமல் மறைகிறது. "வேதபுரியில் சுரமை, வினதை, எல்லோரும் நலமா சுவாமி? தாயார் எப்படி இருக்கிறார்கள்? நாங்கள் விளையாடும் பூந்தோட்டத்தில், ஒரு பவள மல்லிகை மரம் இருக்குமே? அது இன்னமும் நன்றாக இருக்கிறதா?" அதன் மலர்கள் நள்ளிரவில் பூத்துத் தோட்டமெங்கும் வாசனை பரப்பி, சாளரத்தின் ஊடே வந்து என்னிடம் கொஞ்சும். அந்த மலர்களை நார் கொண்டு நான் கோத்து வைப்பேன். பவளச் சரட்டில் முத்துக் கோத்தாற் போல் கூம்பு கூம்பாக அந்த மலர்கள் இருக்கும். "ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய்? இதழகற்றிச் சிரிக்க மாட்டாயா?" என்று பேசுவாள். அந்த மரத்தின் பூச்சிறப்பு அது... குலகுரு கண்களில் நீர் மல்க, அவள் உச்சியை வருடி ஆசிர்வதிக்கிறார். "குழந்தாய், அந்த மரமும் உன்னிடம் தன் அன்பைத் தெரிவிக்கிறது. உன்னை உன் மைந்தருடன் வரவேற்கக் காத்திருக்கிறது?" என்று தெரிவிக்கிறார். அவள் மீண்டும் பணிந்து எழுகிறாள். அவர்களைப் பின் தொடர்ந்து தோட்டம் வரையிலும் செல்கிறாள். சற்று முன் வரை நெல்மணிகளைக் கொத்திக் கொண்டு ஆரவாரித்த குருவிகள் இல்லை! பொழுது சாயும் நேரம். புற்றடத்தில் மெல்லடிகள் தோய நடந்து மரமேடைக்கு வருகிறாள். கிளி பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது. "தத்தம்மா?..." என்று கையிலேந்திக் கொஞ்சுகிறாள். "மன்னர்... மன்னர்..." "பொய் சொல்லாதே? மன்னர் எங்கே வருகிறார்? அவர் தாம் வருவதை மறந்து போனாரே? மன்னாதி மன்னர்... அந்தப்புரத்தைக் கண்ணாலும் பார்க்க நேரமில்லை?" அந்தப் பொல்லாத கிளி விர்ரென்று பறந்து சென்று கொடி படர்ந்த புதர் ஒன்றில் அமர்ந்து கொள்கிறது. கொவ்வைக் கனிகளும் இலைகளுமாய் உள்ள சுவர் போன்ற புதர். அவள் எழுந்து செல்கிறாள். கிளியின் மூக்குக்கும் கொவ்வைக் கனிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஒரு கனியைக் கொத்தி உண்ணுகிறது. "தத்தம்மா? நீயும் கோபிக்கிறாயா? நீ பொய் சொல்லவில்லை. வா?" கிளி மறுபடியும் அவள் தோளில் வந்து அமருகிறது. "சரி... மன்னர் எங்கே? பார்த்தாயா?" "மன்னர்... ஜலஜா..." "என்ன உளறல்? ஜலஜாவா?" என்று அவள் அதட்டுகிறாள். "ஆம். நான் பார்த்தேன். ஜலஜா மன்னர்..." "எங்கே? நீ மட்டும் பொய் சொன்னால்...?" அது மெல்லப் பறப்பதும் அவள் தோளில் அமருவதுமாக அழைத்துச் செல்கிறது. இனம் தெரியாத மனவெழுச்சியில் படபடப்பு உண்டாகிறது. செவிகள் குப்பென்று அடைப்பது போல் இருக்கிறது. மல்லிகைப் பந்தலின் பக்கம் ஓர் இளங்கதம்ப மரம் நிற்கிறது. அதன் கிளைகளில் பறவைகள் அவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் காச்மூச்சென்று கத்துகின்றன. கீழெல்லாம் உதிர்ந்த மலர்கள்... பறவை எச்சங்கள்... சருகுகள்... அங்கே சிவப்பாக வெற்றிலைத் தம்பலம் எச்சில்... யாரோ துப்பியிருக்க வேண்டும். சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த இளமரம் புதியது. மல்லிகைப் பந்தல் பழையது... "இங்கே தான்..." "இளவரசரா?..." "மன்னர் உமிழ்ந்தது. அவள் கொண்டு வந்து இங்கே கொட்டினாள்." அந்தக் கிளியைப் பற்றி அதட்டத் துடிக்கிறாள். ஆனால், கிளி அவளுக்கு மிகுந்த நெருக்கம். "தத்தம்மா, மன்னர் உணவுக் கூடத்துக்கு வந்திருக்கிறாரா, பார்?" என்பாள். அது பார்த்து வந்து சொல்லும். கொலு மண்டபத்தில் மன்னர் இருக்கிறாரா, யார் யார் வந்து பார்க்கிறார்கள் என்று வந்து சொல்லும். மன்னர் தனியாக இருந்தால் அது சிறகடித்துப் பறந்து வந்து காதோடு இழையும். அவள் கையிலேந்தி இதம் செய்வாள். அதற்குப் பெருமை பிடிபடாது. சிறகடித்துப் பறந்து வந்து சில நாட்களில் அவள் மடியில் வந்து இறங்கும். உடனே அவள் பற்ற முடியாத உயரத்தில் போய்க் குந்தும். மூக்கை வளைத்து அழகு பார்த்துக் கொள்ளும். சிறகுகள் உப்ப, பூரிப்பது போல் காட்டும். "ஓகோ? மன்னர் உன்னைக் கையிலெடுத்துக் கொஞ்சினாரா? சரி, நீ அங்கேயே இருந்து கொள்! வரவேண்டாம் தத்தம்மா!" என்பாள். "ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது, ராணியம்மா? நானா அவர் தோளிலோ மடியிலோ சென்றமர்ந்தேன்? என் அருமைத் தோழிக்கு நான் தீங்கு செய்வேனா? அவர் தாம் கையை வீசி என்னைப் பற்றினார். எனக்கு ஒரே..." என்று நாணிக்கோணும். "சரி, சரி, இங்கு நீ நாடகம் நடிக்காதே, பிறகு என்ன நடந்தது சொல்?" "நாடகம் நடிக்காதே என்று சொல்லி விட்டுக் கதை கேட்கிறீர்களே? நான் கதையா சொல்கிறேன்?" "சரி இல்லை, பிறகு என்ன நடந்தது?" "என்ன நடந்தது? எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது." "சரி, சொல்ல வேண்டாம், போய் விடு!" "நீ என்னைக் கையில் எடுத்து, கன்னத்தோடு இழைய விடு. அவர் என்ன சொன்னார் என்று சொல்வேன்." "தத்தம்மா, நீ சாகசக்காரி. உன்னை இனி கூட்டில் தான் அடைக்க வேண்டும்." "உக்கும்... கூட்டில் எனக்கு ஏது இடம்? அதுதான் ஏற்கெனவே மன்னர் இருக்கிறாரே?" "நீ ரொம்பப் பொல்லாதவள். உனக்கு வாய் அதிகமாகி விட்டது. மன்னரை நானா கூட்டுக்குள் அடைத்திருக்கிறேன்?" "ஆமாம். இங்கெல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தப்புர விடுதி என்று ஒன்று இருப்பதையே அவர் அறியவில்லையாம். இதற்குள் எந்த மன்னர் பரம்பரையிலும் இப்படி ஒரே பத்தினி என்று இருந்ததில்லையாம்!" "ஓகோ!" என்று கேட்கும் போது பொய்க் கோபம் வந்தாலும் உள்ளத்தில் பெருமை துளும்புமே?... இப்போது? அவள் பறவை எச்சங்கள், அசுத்தங்களைப் பொருட்படுத்தாமல் அங்கு நிற்கிறாள்... கடலலையே ஓய்ந்து விட்டாற் போன்ற அமைதி நிலவுகிறது. கிளியைக் கையில் எடுத்து அதன் மேனியைத் தடவிக் கொடுக்கிறாள். "தத்தம்மா, என்ன நடந்ததென்று சொல்ல மாட்டாயா? ஜலஜா அவரைத் தனிமையில் சந்தித்தாளா, இங்கு? பறவைகள் எச்சமிட்டனவா? அவர் வெற்றிலைத் தம்பலத்தைத் துப்பி விட்டுப் போனாரா?" "முதலில் மன்னர் மட்டுமே இங்கு கவலையுடன் இருந்தார். அவர் கையில் ஓர் அடுக்கு மல்லிகை இருந்தது... ஒவ்வோர் இதழாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்..." பூமையின் உயிர் நரம்பில் முள் குத்தியிட்டாற் போல் துடிப்பு ஏற்படுகிறது. வலக்கண் துடிக்கிறது; இதழோரங்கள் துடிக்கின்றன. "அப்போதுதான் அவள்... ஜலஜா பூனைக்கண் வந்தது..." பூமை துடிப்புத் தெரியாமலிருக்க வலக்கையால் அந்தக் கண்ணை மூடிக் கொள்கிறாள். அரக்கர் கோன் சிறையில் இருந்து மீண்ட மகிழ்ச்சியில் மன்னரைப் பார்க்கப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் அந்த அரக்கர் குல மூதாட்டி அவளை அருவியில் நீராடச் செய்து, எப்படி எல்லாம் அலங்கரித்தாள்? புத்தாடை கொணர்ந்து அணிவித்தாள், இளம் பச்சை நிறம். அப்போது... இப்படித்தான் இருந்தது. வலக்கண் துடித்தது. "இது ஆனந்தமில்லையடி பெண்ணே, உன் முன் நெருப்புக் குண்டம் இருக்கிறது..." என்று அறிவித்த சூசகம்... கண்களில் நீர் கோக்கிறது. தத்தம்மாவை எடுத்துக் கன்னத்தோடு இழைய விட்டுக் கொள்கிறாள். கண்ணீர்த் துளி அதன் சிறகில் படுகிறது. "மகாராணி, அதெல்லாம் நடக்காது. கூட்டுக் கதவை டொக் டொக் கென்று தட்டினால் திறக்குமா? கூட்டில் இடம் கிடைக்காது. ஆனால்... அது வருத்தமில்லை. அவள் அவதூறு பேசினாள். பூனை... பெற்றவரால் மறுக்கப்பட்டு, குலம் கோத்திரம் அறியாதவளுக்காக மன்னர் வருத்தப்படலாமா? அப்படி உயர்குல மங்கையாக இருந்தால் அரக்கர் வேந்தனுடன் தேரில் சென்று இறங்கும் வரை உயிர் தரித்திருப்பாளா? தாங்கள் பார்க்கும் போது அன்றலர்ந்த மலராக ஆபரணங்கள் சூடி வந்திருப்பாளா? அவள் உயர் குல மங்கையாக இருந்தால் உங்களுடன் கானகம் ஏகி, அங்கும் உங்களுக்கும் இளையவருக்கும் அவளைப் பாதுகாக்கும் பெருஞ்சுமையை வைத்திருப்பாளா? இங்கேயே தங்கி ஊனை ஒடுக்கித் தவமியற்றியிருப்பார்." "'...சுவாமி, தங்களையே நினைத்து ஊனுறக்கம் விட்டுப் பித்தியானேன். தாங்கள் என்னை மறுத்தால் நான் உயிர்த்தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை...' என்று அவர் கால்களில் வீழ்ந்தாள்." பூமகள் நடுநடுங்கிப் போகிறாள். கானகத்தில் மூக்கறுபட்டவள் நினைவு வருகிறது. அந்நாள் இவர்கள் கையில் ஆயுதம் இருந்தது. கூரான கல், வில்... அம்பு... மாளிகையில் ஆயுதம் தரித்த படைகள் இருக்கும்... எனவே அவரே கொடுஞ் செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டாராக இருக்கும். "தத்தம்மா? என்ன நடந்தது?..." "ஒன்றும் நடக்கவில்லை. எழுந்து போய்விட்டார்." "அவள்..." "அவள் புருஷன், அந்தத் துணி வெளுப்பவன் அவளைத் தேடி வந்தான். நையப் புடைத்தான். அவன் துப்பிய எச்சில்..." அமைதி கூடவில்லை. "தத்தம்மா, நீ நல்ல செய்தி கொண்டு வருவாய். இப்போது நீ எனக்குத் தோழியாக இல்லை...!" "இது நல்ல சேதி மகாராணி. மன்னரின் இதயத்தில் உங்களைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை!" கிளி பறந்து செல்கிறது. வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|