![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
28 பொழுது ஊக்கமும் உற்சாகமுமாகப் புலருகிறது. இலைகளும் துளிர்களும் அசையக் கானகமே எழில் முகம் காட்டுகிறது. விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள் கும்பல் கும்பலாகச் செல்கின்றன. மணவிழாவா? யாருக்கு...? என்று கேட்டுக் கொண்டே வானவனுக்கு நீர்ப் பூசனை செய்கிறாள். சத்தியர் ஒன்றிரண்டு பசுக்களை அவிழ்த்து விட்டுத் துப்புரவு செய்கிறார். நேரம் செல்லச் செல்ல இறுக்கம் மேலிடுகிறது. பெரியம்மா, "கண்ணம்மா!" என்று கூப்பிடும் குரலில் மலர் கொய்து கொண்டிருந்த பூமகள் விரைகிறாள். தூய்மையான நீரால் முகம் துடைத்து, சுத்தம் செய்கிறாள். அவள் இவளையே உற்றுப் பார்க்கிறாள். "கண்ணம்மா? பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டார்களா? உன் மாமி ராஜமாதா இதற்குத்தான் வந்தாளா? கண்ணே! உன்னை, இதற்காகவா தாயின் மடியில் இருந்து பிரித்து மண்ணில் பதித்தேன்? ஏர் முட்டும்; அரசமகளாவாள் என்று கணக்குப் போட்டேன்..." பூமகள் ஒரு கணம் உலக இயக்கமே நின்று விட்டாற் போல் உணருகிறாள். சிப்பி வெடித்து முத்துக்கள் சிதறுகின்றன. "என் வாரிசு... அரச வாரிசு... ஆனால் அரண்மனை மதில்களுக்குள் அரச தர்மம் என்பது, பெண்களின் உரிமைகளைத் தறிக்கும் கொடுவாள் என்பதை உணர்ந்தும்... மதி மயங்கி உன்னை அரச மாளிகையில் சேர்த்தேன்... மேல் வருண தருமங்களில், மண், பொண், பெண் ஆதிக்கங்களே முதன்மையானவை. அங்கே மனித தருமத்துக்கே இடமில்லை... கண்ணே... உன் பிள்ளைகளை அனுப்பாதே!" "போதும்... போதும் அம்மா!" என்று பூமகள் அலறுகிறாள். அந்தக் குரல் சத்திய முனிவரை அங்கு வரச் செய்கிறது. "இந்தக் கானகத்தின் உயிர் இவள். இவள் வனதேவி. இவள் மைந்தர்கள் இந்த வனதேவியின் மைந்தர்கள். அரச வாரிசுகளாகப் போக மாட்டார்கள். அவர்கள் அருந்திய பால்... மனித தருமப் பால், அன்னையே அமைதி கொள்வீர்!" என்று ஆறுதல் அளிக்கிறார். உச்சி கடந்து பொழுது இறக்கும் நேரம், பாதையில் தலைகள், குடை தென்படுகிறது. ஆனால், தாரை, தப்பட்டை, சங்கொலி, ஆரவாரம் எதுவும் இல்லை. அவந்திகா தான் விரைந்து முன்னே வருகிறாள். பூமகளும் சத்திய முனியும் முற்றத்தில் நிற்கின்றனர். கேகய அன்னை அசோக மரத்தின் கீழ்ப் புற்றரையில் அமர்ந்திருக்கிறாள். முதலில் அவளை வணங்குகிறார்கள். "தேவி, மன்னர், இளையவர் இருவரும் வருகிறார்கள்..." பூமகள் சரேலென்று குடிலுக்குள் செல்கிறாள். அவந்திகா, விருந்தினர் உபசரிப்புக்கான நீர், இருக்கைப் பாய்கள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள். "அரசே... அமர வேண்டும்... இங்கே வந்தது பெரும் பாக்கியம்..." குந்தியும் கும்பியும் இறைச்சி பக்குவம் செய்து கொண்டு வரும் மணம் அவள் நாசிக்கு எட்டுகிறது. பிள்ளைகள் இருவரும் வந்து அவள் இருபக்கங்களிலும் நிற்கிறார்கள். வாழை இலைகள் அறுத்துச் செல்கிறான் களி. இதெல்லாம் வெறும் கனவோட்டங்கள். நிகழப் போவது என்ன? இந்த விருந்துபசாரம், சந்திப்பு, பேச்சு வார்த்தைகள், எந்தக் கருத்தை மையமாக்குகின்றன? "முனிவரே, நாங்கள் முடிவு செய்து விட்டோம். பிள்ளைகள் இருவரும், இக்ஷவாகு பரம்பரையின் சந்ததி என்று ஒப்புகிறோம். எங்களுடன் அழைத்துச் செல்ல அநுமதி கொடுக்க வேண்டும்!" இந்தக் குரல் அவள் இதயத்தைக் கீறும் கூர் முள்ளாக ஒலிக்கிறது. முனிவர் கூறுகிறார். "நான் யார் அனுமதி கொடுக்க? உங்கள் பிள்ளைகளை, அவர்கள் தாயைக் கேளுங்கள் அரசே! அவர்களை அழைத்துச் சென்றீர்கள். இரவு தங்க வைத்துக் கொண்டீர்கள்... கேளுங்கள்..." பிள்ளைகள் தாயிடம் வருகிறார்கள். "அன்னையே, இவர் - இந்த மன்னர், எங்கள் தந்தை என்றும் நாங்கள் அவருடன் செல்ல வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆனால், மன்னர் பொற்பிரதிமையை வைத்து எதற்காக யாகம் செய்ய முனைந்தார்? இந்தக் காட்டில் நாம் ஏன் தங்க வேண்டி வந்தது என்பதெல்லாம் புரியவில்லை... நாங்கள் எப்படித் தங்களை விட்டு அங்குச் செல்வோம்..." என்று அஜயன் கேட்கிறான். "மக்களே, மன்னரிடமே இதைக் கேளுங்கள்!" என்று பூமகள் அவர்களுக்குக் கேட்கும் குரலில் கூறுகிறாள். அவர்கள் வெளியே வந்து மன்னரைப் பணிகின்றனர். விஜயன் தான், 'பிசிறில்லாத குரலில்' பேசுகிறான். "மாமன்னரே! நாங்கள் வனதேவியின் மைந்தர்கள். வனமே எங்கள் தாயகம். நாங்கள் ஒரு போதும் தங்களுடன் வந்து வாழச் சம்மதிக்க மாட்டோம். இங்கு நாங்கள் சுதந்திரமானவர்கள்! உழைத்து விளைவைப் பகிர்ந்துண்டு, எல்லோரும் வாழ நாங்களும் இன்பமுடன் வாழ்வோம். உங்கள் குதிரையை நாங்கள் பிடிக்கவில்லை; கட்டவில்லை. அதுவே இந்த எல்லையை விட்டு அகல மறுத்து உங்கள் காவலரை விரட்டியடித்தது. அதன் விளைவாக, எங்கள் கண்ணுக்குக் கண்ணான நந்தசுவாமி மறைந்தார். எனவே எங்கள் அன்னை இசைந்தாலும் நாங்கள் சம்மதியோம். மன்னிக்க வேண்டும் மாமன்னரே!" கரங்கள் குவித்து, அவன் மறுப்பைத் தெரிவிக்க இருவரும் உள்ளே வருகின்றனர். "கண்ணம்மா..." என்ற குரல் வெளிப்பட, பூமகள் திரும்பிப் பார்க்கிறாள். பெரியன்னையின் மூச்சுத் திணறுகிறது; கண்கள் நிலைக்கின்றன. (முற்றும்) வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|