முன்னுரை 1978 ஜூன் மாதம் முதல் 1979 ஜனவரி மாதம் வரை 'கல்கி' வார இதழில் வெளியான இந்நாவல் இப்போது புத்தக வடிவில் வெளி வருகிறது. தொடராக வெளிவரும் போதும், நிறைந்த போதும், ஏராளமான அன்பர்களின் நுணுக்கமான கவனிப்பையும், பாராட்டையும் பெற்ற இந்நாவலை இப்போது புத்தக வடிவில் தமிழ்ப் புத்தகாலயத்தார் கொண்டு வருகிறார்கள். "பண்பாடு என்பது பரவலாகும் போது வெறும் தேசிய அடையாளப் புள்ளி (National Identity) நீங்கி மானிடம் என்கிற சர்வதேச அடையாளப் புள்ளி (International Identity) வந்து விடுகிறது. சங்கரமங்கலம் என்ற ஒரு சிறிய தமிழ்நாட்டுக் கிராமத்தில் இந்தக் கதை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அல்லது முக்கிய கதாபாத்திரங்கள் அந்தச் சிறிய கிராமத்துக்கு அப்பாலும் - அதைவிடப் பரந்த பெரிய உலகத்தைப் பாதிப்பவர்கள் - பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள்" - என்ற கருத்தை இந்த நாவலின் முடிவுரையில் காண்பீர்கள். அதையே இங்கும் முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். உலகத்தைப் பொறுத்தவரை அழகிய தென்னிந்தியக் கிராமமான சங்கரமங்கலத்தில் விசுவேசுவர சர்மாவின் இல்லத்துத் துளசி மாடத்தில் தொடர்ந்து தீபம் ஏற்றப்படுகிறது என்பது தான் முக்கியம். ஆனால் அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையிலோ அந்த தீபம் எந்தக் கைகளால் யாரால் - ஏற்றப்படுகிறது என்பது மட்டுமே மிகவும் முக்கியம். பூரண ஞானிகளும் விருப்பு வெறுப்பற்ற அறிவாளிகளும் உலகெங்குமுள்ள மனிதர்களை இனம், நிறம், மொழி, வேறுபாடுகளைக் கருதாமல் சமதிருஷ்டியோடு பார்க்கிறார்கள். சமதிருஷ்டியும், சஹ்ருதயமும், பக்குவத்தாலும் பண்பாட்டுக் கனிவு, முதிர்ச்சி ஆகியவற்றாலுமே வருவன. அவை எல்லாருக்கும் எல்லா இடத்திலும் வந்து விடுபவை அல்ல. சர்மாவுக்கும், இறைமுடிமணிக்கும், அறிவாலும் சமதிருஷ்டியாலும் கிடைக்கும் கனிவு, சீமாவையருக்கும் பிறருக்கும் எதனாலும் எப்போதும் கிடைக்கவில்லை என்பதைத்தான் கதை நமக்குச் சொல்லுகிறது. மகாகவி பாரதி கூறுவதைப் போல், "நோக்கும் இடம் எங்கும் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்" என்கிற 'சமதரிசனம்' தான் அறிவின் முடிவான பயன். அத்தகைய சமதரிசனம் விசுவேசுவர சர்மாவுக்கு இருக்கிறது. காமாட்சியம்மாளுக்குக் கூட முடிவில் அந்தச் சமதரிசனம் வரத்தான் செய்கிறது. ஆனால், அந்தச் சமதரிசனமே அவளது முக்தியாகவும் அமைந்து விடுகிறது கதையில். அத்தகைய சமதரிசனமும் மன விசாலமும் ஏற்பட இக்கதை ஒரு சிறிது உதவினாலும் அதற்காக இதை எழுதிய ஆசிரியன் பெருமகிழ்ச்சியடைய முடியும் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நா. பார்த்தசாரதி 'தீபம்' சென்னை - 2 16-2-1979 துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|