7

     மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, "எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு... குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே... தோ வரேன்" என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.

     உள்ளே அம்மா தயிர்ப்பானையில் மத்தால் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தாள். ஆயர்பாடியில் யசோதை தயிர் கடையும் போது சின்னக் கண்ணன் வெண்ணெய்க்காகத் தன் பிஞ்சுக் கையை நீட்டிக் கொண்டிருப்பது போன்ற வழக்கமான காலண்டர் ஓவியம் ஒன்றிலிருக்கும் யசோதையின் தோற்றத்தைப் போலத்தான் அம்மாவின் தோற்றமும் அப்போது அழகாக இருந்தது.

     "நான் போயிட்டு அப்புறம் வரட்டுமா அம்மா? ஸ்நானம் பண்ணிட்டு வந்தாத்தான் நீ பேசுவியா?"

     "இருடா... வரேன்..."

     "எங்கிட்டே உனக்கென்ன கோபம்?"

     "அதை என்னைக் கேழ்ப்பானேன்? நோக்கே தெரியாதோ?"

     "நான் என்ன பண்ணிட்டேன் அப்படி?"

     "என்னடா பண்ணனும் இன்னம்?"

     அம்மாவுடைய மனஸ்தாபத்தின் கனம் முழுவதும் அந்த 'இன்னம்' என்ற கடைசி வார்த்தையில் இறுகித் திரண்டிருப்பது ரவிக்குப் புரிந்தது. அப்பா கூட ஓரளவு ஒத்து வந்திருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அம்மாதான் கரைக்க முடியாத கருங்கல்லாக இருப்பாளோ என்று பயந்தான் அவன். மனத்தாங்கலும், ஆதங்கமும் தெரியும்போது தான் இதயம் சுருங்கி விடுகிறாற் போல அவளுடைய பதில் வார்த்தைகள் மிகவும் சுருங்கியிருப்பதை ரவி கண்டான். பத்து நிமிஷத்துக்கு மேல் அவன் சமையல் கட்டின் வெளியே காத்து நிற்க வேண்டியிருந்தது.

     அப்புறம் தான் ஒரு வழியாக அம்மா வெளியே வந்தாள். "தள்ளி நின்னுண்டு கையை நீட்டுடா ரவி..." - எங்கே வலது கையில் பிரம்பு அடி விழுமோ என்று கூட சந்தேகமாயிருந்தது ரவிக்கு. ஆனால் நடந்த்தென்னமோ முற்றிலும் வேறானதாயிருந்தது.

     அப்போது தான் கடைந்த பசு வெண்ணெயில் வெல்லச் சர்க்கரையைக் கலந்து, உருட்டி, "சாப்பிடுடா. உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே" - என்று ரவியின் வலது கையை நீட்டச் சொல்லித் தூக்கி இடித்து விடாமல் கவனமாகத் தள்ளி நின்று கொண்டு போட்டாள் அவன் அம்மா.

     எந்த வயதிலும் எந்தச் சூழலிலும் எவர் முன்னிலையிலும் தான் பெற்ற பிள்ளையைச் சுலபமாக மறுபடி பச்சைக் குழந்தையாக மாற்றி விட முடிகிற வித்தையை ஒரு தாயினால் தான் செய்ய முடியும். அறிவு, ஆணவம், புகழ், மேதாகர்வம், மூப்பு முதலிய எல்லாப் போர்வைகளும் கழன்று விழச் செய்து தன் மக்களைத் தன் முன் குழந்தையாக்கி விடும் ஆற்றல் தாய்க்கு இருந்தது.

     எங்கோ கண் காணாத சீமையில் மிகவும் புகழ் பெற்ற புரொஃபஸராக இருக்கும் வயது வந்த தன் மகனை அரை நொடியில் ஆடையணியாத பருவத்து வெள்ளி அரை ஞாணும் தாயத்தும் கட்டிய சிறு பாலகனாக மாற்றி விட்டாள் காமாட்சியம்மாள்.

     தன் அம்மா கொடுத்த சுவையான பசுவெண்ணெயை விழுங்கி விட்டு, "கையை நீட்டுடான்னதும் எங்கே பிரம்படி குடுத்துடப் போறியோன்னு பயந்துட்டேன்ம்மா!" என்றான் ரவி.

     "பிரம்பாலே இல்லேடா, நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு உன்னை உலக்கையாலேயே மொத்தணும் போல இருக்கு." -

     சரிசமமான அளவில் பிரியமும் கோபமும் கலந்த குரலில் இந்தக் கடிந்துரை இருந்தது. இதற்கு ரவி ஏதோ பதில் சொல்லத் தொடங்கிச் சொல்லுவதற்குள் வாசலில் பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டியின் குரல் கேட்டது. பாட்டி காமாட்சியம்மாளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்து விட்டாள். அம்மா உள்ளே சமையல் காரியமாக இருந்ததாலும், பாட்டி தேடி வந்து விட்டதாலும், மாடிக்குப் போகலாம் என்று திரும்பினான் ரவி. ஆனால் பாட்டி பிடித்துக் கொண்டாள்.

     "ரவி தானேடா?... கார்த்தாலே வந்தியா? சௌக்கியமா இருக்கியா"

     "ஆமாம் பாட்டி! சௌக்கியந்தான்." - சொல்லி விட்டு ரவி நழுவ முயன்றான். பாட்டி விடவில்லை. "கண் பார்வை மங்கிப் போச்சு! கிட்ட வாயேண்டா நன்னாப் பார்த்துடறேன்." - என்று வலது கைவிரல்களால் நெற்றியிலிருந்து ஒரு 'சன்ஷேட்' இறங்கின மாதிரி வைத்துப் பார்வைக்கு வசதி செய்துகொண்டு நெருங்கி வந்து ரவியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உற்றுப் பார்த்தாள்.

     "முன்னை விடச் சேப்பாயிருக்கே! குளிர் தேசமோல்லியோ? உடம்பு தானா வெளுப்புக் குடுத்துண்டிருக்கு. என்னடீ காமு! நான் சொல்றது சரிதானேடீ?"-

     தான் முன்னைவிட நிறம் வெளுத்திருக்கிறதைப் பற்றிய விவாதம் அம்மாவுக்கும் பாட்டிக்கும் இடையே நிகழட்டுமென்று மாடிக்குத் திரும்பினான் ரவி. பதினாறு பக்கங்கள் கொண்ட ஆங்கிலத் தினசரியில் முதற் சில பக்கங்களைக் கடந்து தலையங்கப் பக்கத்தில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் அப்பா இலயித்திருந்தார். ரிடையராகிற வயதை நெருங்கும் தந்தைமார்களுக்கும் ஆங்கிலத் தினசரிகளின் ஆசிரியர் கடிதப் பகுதிக்கும் ஏதோ அபூர்வமான தொடர்பு இருக்க வேண்டும் என்று ரவி அடிக்கடி நினைப்பதுண்டு. இந்திய நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் நாள் தவறாமல் சலிப்பின்றி இப்படிப் பகுதிகளுக்கு எழுதுகிறவர்களும், படிப்பவர்களும் பெரும்பாலும் ஒரே வயதினராக இருப்பதை ரவி கவனித்திருக்கிறான். அப்பா, ஆசிரியர் கடிதப் பகுதியில் இலயித்திருப்பதைப் பார்த்து மனதுக்குள் அவன் நகைத்துக் கொண்டான்.

     தற்காலிகமாகப் படிப்பதிலிருந்து தலையை நிமிர்த்தி அப்பா அவனைக் கேட்டார்.

     "என்னடா அவகிட்டப் பேசினியா? என்ன சொல்றா?"

     "பேச ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே பக்கத்தாத்துப் பாட்டி வந்துட்டா. அம்மா எங்கிட்டப் பிரியமாத்தான் பேசறா! அதே சமயத்தில் உள்ளூற ஏதோ கோபமும் சந்தேகமும் இருக்கிற மாதிரிப்படறது அப்பா..."

     "ஆண்கள் நின்று நிதானமா யோசிச்சுப் பார்த்துச் சந்தேகப்படறதா இல்லையான்னு தயங்கிற ஒரு விஷயத்தைக் கூட முன் கூட்டியே மோப்பம் பிடிச்சது போலத் தெரிஞ்சுண்டு நிச்சயமாகச் சந்தேகப்படற சுபாவம் பொம்மனாட்டிகளுக்கு உண்டு."

     "இதிலே அம்மாவுக்குச் சந்தேகம் வராதபடி நீங்களே எல்லா விவரத்தையும் நேரடியாச் சொல்லியிருக்கலாம். சொல்லாமல் மூடி வைக்கிறதாலேதான் இதெல்லாம் சந்தேகத்துக்கும் மனஸ்தாபத்துக்கும் காரணமாயிடறது அப்பா!"

     "ஒண்ணும் சொல்லாம இருக்கறப்பவே தானா அநுமானம் பண்ணிண்டு இத்தனை கோபப் படறவ... சொல்லியிருந்தா எத்தனை கோபப் படுவாள்னு தெரியலையா உனக்கு? எனக்கே உன் லெட்டரைப் பார்த்ததும் அப்படியே மலைச்சுப் போச்சு. என்ன செய்யறதுன்னே தோணலை! அப்புறம் வேணு மாமாவும் அவர் பொண் வசந்தியும் படிப்படியா என்னைச் சமாதானப்படுத்தினான்னு வச்சுக்கோயேன்."

     "சண்டைன்னும் சமாதானம்னும் பேசறாப்பிலே எந்தத் தப்பும் இப்ப நடந்துடலே அப்பா! நானும் ஒளிவு மறைவா உங்களுக்கு எதையும் எழுதலே. தப்பபிப்ராயம் வரக்கூடாதுன்னுதான் முன் கூட்டியே எல்லாம் எழுதினேன். வேணு மாமாவும், வசந்தியும் பாரிஸூக்கு வந்திருந்தப்பக்கூட அவாகிட்டே நான் எதையும் மறைக்கலே! உங்ககிட்டேயும் அவாளை இதைப் பத்திப் பேசச் சொல்லித்தான் அனுப்பிச்சேன்."

     "நீ சொல்றதெல்லாம் நியாயம்னே வச்சுக்கலாம்டா! இந்த ஊர் எப்படிப்பட்ட ஊர்? இங்கே நமக்கு எப்பிடி எப்படி விரோதிகள்ளாம் இருக்காங்கறது நான் சொல்லித்தான் தெரியணுமா உனக்கு? வைட்டமின் "ஏ" வைட்டமின் "பி"ங்கிற மாதிரி வைட்டமின் "வி" - அதாவது வைட்டமின் வம்புங்கிறது இந்த அகஸ்திய நதிக்கரைக் கிராமங்களுக்கு ஒரு முக்கியமான தேவை. எந்த வைட்டமின் டெஃபிஷியன்ஸியையும் தாங்கிக்க இவாளாலே முடியும். வைட்டமின் 'வி' டெஃபிஷியன்ஸியை ஒருநாள் கூட இவாளாலே தாங்கிக்க முடியாது. புராதன காலத்திலே அதிதிகளையும் வழிப் போக்கர்களையும், பந்து மித்திரர்களையும் வரவேற்கவும், உபசரிக்கவும்தான் கிராமத்து வீடுகளிலே திண்ணைகள் ஏற்பட்டது. ஆனா இப்போ வம்பு பேசறத்துக்கும், புறம் பேசறத்துக்கும், கோள் மூட்டறதுக்கும்தான் அது பிரயோசனப்படறது. இந்த ஊர்லே மூணு தெருவிலேயுமா முந்நூறு திண்ணைகளுக்கு மேலே இருக்குடா! மறந்துடாதே... அந்தத் திண்ணைகளும் ஆற்றங்கரைப் படித்துறைகளும் இன்னும் பலநாள் உன்னைப் பத்தியும் உன்னோட வந்திருக்கிறவளைப் பத்தியுந்தான் பேசிண்டிருக்கும்..."

     "என் வாழ்க்கை எனக்குச் சொந்தமானது அப்பா! அதை இந்த ஊரின் முந்நூறு திண்ணைகளிலும் மூன்று தெருக்களிலும் யாரும் தீர்மானித்து விட முடியாது."

     "சரி! நீ குளிச்சிட்டு வா... வயித்துலே வெறுங் காப்பியோட எவ்வளவு நாழி பசி தாங்கும்? இதெல்லாம் இப்போ பேசி முடிவு காணற விஷயம் இல்லே... அவளையும் குளிக்கச் சொல்லு. சாப்பாடு - பழக்கம் எப்படி? நம்ம சாப்பாடு ஒத்துக்குமோ இல்லையோ?"

     "தாராளமா... இங்கே என்ன கிடைக்குமோ, அதை கமலி சாப்பிட்டுப்பா. நமக்கும் அவாளுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம் அப்பா. எங்கே எப்படி இருக்கணுமோ, அப்பிடி இருக்க அவாளாலே முடியும். 'எங்கேயும் இப்படித்தான் இருப்பேன் - இப்பிடித்தான் இருக்க முடியும் - இதுதான் பிடிக்கும்'னு முரண்டு பண்றதெல்லாம் நம்ம ஜனங்க கிட்டத்தான் அதிகம்...."

     "ஒரேயடியா அப்படிச் சொல்லிட முடியாது. சிலதுலே முரண்டும் வேண்டியதாத்தான் இருக்கு..."

     "தேவையானதுலே முரண்டு இருக்கிறதில்லே. தேவையில்லாததுலே எல்லாம் நம்மகிட்ட முரண்டு இருக்கு". அப்பாவுக்குப் பதில் சொல்லிக் கொண்டே பெட்டிகளை எடுத்துப் பிரித்தான் ரவி.

     "நல்ல ரிஸ்ட் வாட்ச் வேணும்னு பாரு, குமார் ரெண்டு பேருமே தனித் தனியா எனக்கு லெட்டர் போட்டிருந்தா. அவா லெட்டர் போட்டு ஏழெட்டு மாசமாச்சு. எனக்கு மறந்தே போச்சு. கமலிதான் ஞாபகப்படுத்தினா.... அவ சொல்லலேன்னா மறந்தே போயிருக்கும்" - என்று சொல்லிக் கொண்டே இரண்டு அழகான சிறிய அட்டைப் பெட்டிகளை எடுத்து நீட்டினான் ரவி.

     சர்மா அதை வாங்கிப் பார்த்துவிட்டு "நன்னாத்தான் இருக்கு! அவளை விட்டே குழந்தைகள் கிட்டக் குடுக்கச் சொல்றேன்" - என்றார். சிறிது நேரம் ஊர் விவகாரங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சர்மா மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே போனார்.

     அவர் படியிறங்கும்போது ஒரு சிறிய பிரம்புக் கூடை நிறையக் குடைமல்லிகைப் பூவுடன் வசந்தி பின் தொடர எதிரே வந்து கொண்டிருந்தாள் கமலி. ஒரு சிறு குழந்தையின் உற்சாகத்தோடு அவள் அந்தப் பூக்களைக் கொய்து நிரப்பிக் கொண்டு வருவது தெரிந்தது. சர்மா சிரித்தபடி அவர்களைக் கடந்து மேலே நடந்து சென்றார்.

     கமலியை மாடியில் கொண்டு போய் விட்டுவிட்டுத் தான் வீட்டிற்குப் போய்விட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றாள் வசந்தி. வீட்டுக்குப் புறப்படு முன் ஞாபகமாகச் சமையலறை வாசலில் நின்று காமாட்சி மாமியைக் கூப்பிட்டுச் சிரித்துக் கொண்டே, "மாமி! பாயாசம் வையுங்கோ - பிள்ளை ரொம்ப நாளைக்கப்புறம் ஊர் வந்திருக்கிறதைக் கொண்டாட வேண்டாமோ?" என்று சொல்லி விட்டு வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய கொண்டாட்டக் காரணத்தை மனத்தின் உள்ளே நினைத்தவளாகச் சென்றாள் வசந்தி. திரும்பி வந்து மல்லிகைப் பூவைத் தொடுப்பது எப்படி என்று கமலிக்குக் கற்றுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தாள் அவள்.

*****

     விடிந்ததிலிருந்து வெய்யிலே தெரியாமல் சாரல் தூறிக் கொண்டிருந்ததால் அன்று சங்கரமங்கலம் மிக மிக அழகாக இருந்தது. மேற்குப் பக்கம் மலைத் தொடர்கள் மயில் கழுத்து நிற நிலத்தில் பளபளத்தன. மழைக் காலத்தில் மணப்பெண்ணுக்கு வருகிற அழகு போல் மலைகளுக்கு எல்லாம் வரும் பருவ அழகு ஒன்று உண்டு. அப்படி அழகு அந்த மலைகளில் அன்று வந்து கவிந்திருந்தது. காலையில் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து திரும்பியதற்காக மறுபடி ஒரு தடவை ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார் சர்மா.

     காலைப் பூஜை என்பது அந்த வீட்டில் முக்கியமானது. சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும். காமாட்சி அம்மாள் சாம்பிராணி தூபக்காலில் உருகிய பொன்னாய் மின்னும் நெருப்பை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். பார்வதி குளித்து உடைமாற்றிக் கொண்டு தோட்டத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய பூக்களைக் கொய்து கொண்டு வந்து வைத்தாள்.

     "பாரு! அண்ணா குளிச்சிருந்தான்னாக் கீழே வரச் சொல்லும்மா!" என்று பார்வதியிடம் பூஜையின் நடுவே சொல்லியனுப்பினார் அவர். பார்வதி மாடிக்குப் போனாள். காமாட்சி அம்மாள் சர்மாவைக் கடிந்து கொண்டாள்.

     "அவனை ஏன் சிரமப்படுத்தறேள்? ரெயில்லே அலுத்துக் களைச்சுப் போய் வந்திருக்கான்... மெல்ல வரட்டுமே?"

     "ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கான். பூஜைக்கு வரட்டுமே!"

     காமாட்சியம்மாள் நைவேத்தியத்தை மூடி எடுத்துக் கொண்டு வருவதற்காக உள்ளே போயிருந்தாள். ரவியும் கமலியும் அவர்களை அழைக்கப் போயிருந்த பார்வதியும் மாடியிலிருந்து வந்தார்கள்.

     ரவி நாலு முழம் வேஷ்டியும் மேலே சட்டையோ பனியனோ போடாமல் ஓர் அங்கவஸ்திரமும் அணிந்திருந்தான். பழைய காலத்துச் சுங்குடிப் புடவை டிசைனில் ஆனால் புதிய நவநாகரிக மஞ்சள் நிற வாயிலில் நீலப் புள்ளிகள் இட்ட மெல்லிய புடவை ஒன்றை அணிந்திருந்தாள் கமலி. நெற்றியில் குங்குமத்திலகம், ஷாம்பு போட்டு நீராடியதால் புஸுபுஸு வென்று கூந்தல். மேலே பொன் நிறத்தில் தோள் பட்டையோடு துடிகிற கையில்லாத 'ரவிக்'கை அணிந்திருந்தாள். உடலை இறுக்கினாற் போலத் தைக்கப்பட்டிருந்த அந்த 'ரவிக்'கையும் அவளுடைய செழிப்பான மேனி நிறத்தையும் கூர்ந்து கவனித்துத் தான் பிரித்தறிய வேண்டியிருந்தது. அந்த உடையில் அந்த வேளையில் நறுமணங்களின் உருவகமாய் ஒரு நளினமான கவிதையாய் பூஜை அறைக்கு முன் வந்து நின்றாள் கமலி.

     அவள் முதலிலேயே குளித்து விட்டு வந்ததால் அவளை டிரஸ் செய்து கொள்ள விட்டு விட்டு ரவி குளியலறைக்குள் போயிருந்தான். அவள் பின் தங்கவிட்டுச் சென்ற மனத்தை மயக்கும் நறுமணங்கள் குளியலறையை முழுமையாக நிறைத்துக் கொண்டிருந்தன. அவள் உபயோகித்த ஷாம்பு, சோப்பு துவட்டிக் கொண்டு போட்டிருந்த டர்க்கி டவல் எல்லாமாகச் சேர்ந்து - காலை வரையில் சுண்ணாம்பு சிமெண்ட் வாடை மட்டுமே நிரம்பியிருந்த புதிதாகக் கட்டப்பட்ட அந்தக் குளியலறையை இப்போது நறுமணங்கள் நிறைந்த கந்தர்வ லோகமாக்கியிருந்தன.

     அவன் நீராடி விட்டு வெளியே வந்த போது கமலி ஏறக்குறைய டிரஸ் செய்து முடித்திருந்தாள். அவள் 'ரவிக்'கை அணிந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். சொல்லி வேறு ஏதாவது கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொள்ள வைக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தான். அது கமலியின் சுதந்திரத்தில் தலையிட்டுத் தான் அநாவசியமாக அவள் மேல் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்குமோ என்று தோன்றியது. செல்வச் செழிப்பில் கவலையில்லாமல் வளர்ந்த அந்தப் பெண் தன்னைக் காதலித்துத் தன்னோடு புறப்பட்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறாள் என்பதற்காகவே அவளை ஒவ்வொன்றிலும் வலித்து நிர்ப்பந்தப்படுத்த அவன் தயாராயில்லை. அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் சொல்வதையெல்லாம் ஏனென்று விசாரிக்காமல் கூட உடனே கடைப்பிடிக்க அவள் தயாராயிருந்தும் அவன் அதைச் சொல்லத் தயங்கினான். ஐரோப்பிய வாழ்க்கையின் தனி நாகரிகம் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. அதே சமயத்தில் சங்கரமங்கலம் போன்ற ஓர் இரண்டுங்கெட்டான் ஊரில் சுவர்ண விக்கிரகம் போன்ற ஓர் இளம்பெண் செழித்த தோள்கள் தெரிய உடையணிந்து நடப்பது எப்படி எதிர்கொள்ளப்படும் என்று தயக்கத்தோடு நினைத்துப் பார்க்கவும் அவனால் முடிந்தது.

     'ஊர் இருக்கட்டும்! இந்த வீட்டில் அம்மாவும் அப்பாவுமே என்ன நினைப்பார்க்ள்?' - என்று எண்ணியது அவன் மனம். அவனைப் பொறுத்தவரையில் இந்தக் கோலத்தில் அப்படியே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போல அத்தனை அழகாயிருந்தாள் கமலி. மனம் தயங்கினாலும் அவளிடம் அதைப்பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை.

     அவளையும் அழைத்துக் கொண்டு கூப்பிடுவதற்கு வந்திருந்த தங்கை பார்வதியோடு பூஜைக்கு வந்திருந்தான் ரவி.

     அம்மாவும் அவன் மேல் பிரியமாயிருக்கிறாள். கமலியோ அவன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். ஆனால் அம்மாவுக்கும் கமலிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறு மோதல் கூட வந்து விடாமல் தடுக்க வேண்டுமே என்று அவனுக்குக் கவலையாயிருந்தது. பூப்போன்ற மனமும், இங்கிதமான குணமும் உள்ள கமலியால் எந்தத் தகராறும் வராது என்பதை அவன் அறிவான். அம்மாவைப் பற்றித்தான் அவனுக்குக் கவலையாக இருந்தது. பால் குடிக்கிற வயதிலிருந்து ஓர் ஆணால் பிரியம் செலுத்தப்படுகிற ஒரே பெண் முதலில் தாய் தான். வயதும் பருவமும் வந்த பின் ஆணின் அந்தரங்க அபிமானமும் பிரியமும் இன்னொரு யுவதியிடம் போகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மகனின் பிரியத்தைக் கவர்ந்து விட்ட அந்தப் புதிய யுவதியின் மேல் தாய்க்கு ஏற்படுகிற இரகசியமான பொறாமை தான் மாமியார் மருமகள் சண்டையின் ஆரம்பமோ என்று எண்ணினான் ரவி. இவ்வளவிற்கும் 'இவள்தான் உன் மருமகள்' என்பதாக அம்மாவிடம் யாரும் இன்னும் அதிகார பூர்வமாகச் சொல்லவில்லை. அம்மாவாகக் கமலியைப் பற்றிச் சந்தேகப்படுகிறாள்; அவ்வளவுதான்.

     நீராடி மடியாடை உடுத்துச் சுத்தமாக இருந்தாலொழிய அந்த வீட்டில் யாரும் பூஜையறைக்குள் நுழையக் கூடாது.

     "முதல்லே இந்த வீட்டுக்குள்ளேயே ஒரு ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தியாகணும் அம்மா" என்று முன்பு தன் கல்லூரிப் படிப்பு நாட்களில் அம்மாவிடம் கேலியாகப் பலமுறை சொல்லியிருக்கிறான் ரவி.

     பூஜையறையைப் பொறுத்துக் கமலியை அம்மா எப்படி நடத்துவாளோ என்று பயந்தான் அவன். அதனால் கமலிக்காக அவனும் வெளியிலேயே நின்று கொண்டான். கமலியின் கையில்லாத நாகரிக 'ரவிக்'கை அம்மாவும் அப்பாவும் வெறித்து வெறித்துப் பார்த்தார்கள். அம்மா ஒரு தடவை அவன் மட்டுமே கவனிக்கிற சமயத்தில் முகத்தைக் கோணிக் கொண்டு தோள்பட்டையில் இடித்து அழகுகூடக் காட்டினாள். நல்ல வேளையாக அப்போது கமலி பார்வதியின் பக்கம் திரும்பி அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

     ஒரு வழியாக பூஜை முடிந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு பூஜையறைக்கு முன்னாலிருந்து கலைந்தார்கள் அவர்கள். அப்போது வசந்தி திரும்பி வந்து விட்டாள். அப்பாதான் முதலில் அவனிடம் அதைக் கேட்டார்.

     "சாப்பாடு மேலேயே அனுப்பச் சொல்லட்டுமா அல்லது இங்கேயே இலை போட்டுப் பரிமாறலாமா?"

     கமலி எல்லோரோடும் சேர்ந்து இலையிலேயே சாப்பிடத் தயாராக இருந்தாள். பரிமாறுவதில் காமாட்சியம்மாளுக்கு உதவி விட்டு மற்றவர்கள் சாப்பிட்டபின் சாப்பிடவும் கூட அவளுக்கு ஆவலாயிருந்தது. அம்மா கமலியைச் சமையலறைக்குள்ளேயே நுழைய விடாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ரவியும் வசந்தியும் தான் துணிந்து கீழே இலை போட்டுச் சாப்பிடும் திட்டத்தை மாற்றினார்கள்.

     "மாமாவும் மாமியும் இங்கே சாப்பிடட்டும். நீ, கமலி, பார்வதி, குமார் எல்லாருமே நிதானமாகச் சிரிச்சுப் பேசிண்டு மாடியிலேயே சாப்பிடலாம். நான் கூட இன்னிக்கு இங்கேயே 'விருந்து' சாப்பிடப் போகிறேன். பெரியவாளைச் சிரமப் படுத்த வேண்டாம். நாம் எல்லோரும் மாடியிலேயே சாப்பிடுவோம்" என்று நிலைமையை நாசூக்காகச் சமாளித்தாள் வசந்தி. சர்மாவுக்கும் நிலைமை புரிந்தது. அவர் இதற்கு ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை.

     "வசந்தி சொல்றதும் சரிதான். அப்படியே நடக்கட்டும்" என்று சொல்வதைத் தவிரச் சர்மாவாலும் அப்போது வேறெந்த முடிவுக்கும் வர இயலவில்லை. ரவி கமலியை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

     வசந்தியும், குமாரும், பார்வதியும் மாடிக்குச் சமையலறையிலிருந்து பண்டங்களை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் மாடிக்கு வருகிற வரை கிடைத்த தனிமையில் கமலியிடம் ரவி இரண்டொரு விஷயங்களைச் சொல்ல முடிந்தது. கைக்கடிகாரங்களையும் வேறு அன்பளிப்புப் பண்டங்களையும் கமலியே அவள் கைப்படக் குமாரிடமும், பார்வதியிடமும் கொடுக்க வேண்டும் என்பதைச் சொன்னான். நேரடியாக அம்மாவின் முரண்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லாமல், "எது நடந்தாலும் ஈஸியா எடுத்துக்கணும் கமலி! பழைமையான முரண்டுகள் உள்ள கிராமம். பழைய முரண்டு பிடித்த மனிதர்கள். நாகரிகம், மேனர்ஸ் எல்லாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது" என்றான்.

     "நீங்க இப்படித் தனியா எடுத்துச் சொல்லி என்னிடம் வேண்டுகோள் விடுக்கிறது தான் அன் ஈஸியா இருக்கு" என்று சிரித்த படியே மறுமொழி கூறினாள் கமலி.

     கமலி தானும் பரிமாறுவதில் உதவிக்கு வருவதாக முன் வந்து இரண்டு பெரிய அப்பளங்களைக் கீழே போட்டு உடைத்த பின், "நீ பேசாமல் உட்கார்ந்து சாப்பிடு கமலி. பழகினப்புறம் பரிமாறலாம்" என்று அவளை ரவியுடன் உட்காரச் சொன்னாள் வசந்தி. சாப்பிட்டு முடித்த பின் ரவி சிறிது நேரத்தில் அசதி காரணமாகத் தூங்கச் சென்றான்.

     குமாரையும், பார்வதியையும் கூப்பிட்டுக் கடிகாரங்களைக் கொடுத்தாள் கமலி. வசந்திக்கு ஒரு செண்ட் பாட்டிலைக் கொடுத்த போது, "வசந்தீ! நீ மட்டும் தினம் காலையிலே ஒரு கூடை மல்லிகைப்பூத் தரதா எனக்கு உறுதி சொன்னால் நான் பாரீஸ்லேருந்து கொண்டு வந்திருக்கிற அத்தனை வாசனைப் பொருள்களையும் யாருக்காவது கொடுத்து விடலாம் அல்லது தெருவிலே தூக்கு எறிஞ்சுடலாம்" என்றாள் கமலி.

     குடைமல்லிகைப் பூவை நெருக்கமாக ஊசி மூலம் நூலிலும் கோக்கலாம், நாரிலும் தொடுக்கலாம் என்று சொல்லி இரண்டையும் கமலிக்குச் செய்து காட்டினாள் வசந்தி. வசந்தி கையால் நாரில் பூத்தொடுத்த வேகத்தைப் பார்த்து அதிசயித்தாள் கமலி.

     "நாங்கள் இயந்திரமாக்கிவிட்ட எத்தனையோ நுண் கலைகளை இன்னும் இந்தியப் பெண்கள் தங்கள் அழகிய மென்மையான விரல்களின் நுனிகளிலேயே கட்டிக் காத்து வருகிறார்கள். பழைய முறையில் உருவாகி, நவீன நாகரிகங்களால் பாதிக்கப்படாத ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் ஒரு நுண்கலைக் களஞ்சியமாக இருப்பாள் போலத் தோன்றுகிறதே!"

     "காமாட்சி மாமி - அதாவது உன் மாமியார் இன்னும் வேகமாகப் பூத்தொடுப்பாள் கமலி! கோலம் போடறது, பூத்தொடுக்கிறது, பல்லாங்குழி ஆடறது, அம்மானை ஆடறது, சமைக்கிறது இதிலெல்லாம் மாமி எக்ஸ்பர்ட். பாட்டுக் கூட நன்னாப் பாடுவா" என்றாள் வசந்தி.

     "அம்மானை ஆடுவது என்றால் என்ன?" என்று தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேட்டாள் கமலி. அதைக் கமலிக்கு விளக்குவதற்காகப் பார்வதியிடம் சொல்லி வீட்டிலுள்ள அம்மானைக் காய்களை எடுத்து வரச் சொன்னாள் வசந்தி. பித்தளையில் எலுமிச்சம்பழம் பருமனுக்கு உருண்டை உருண்டையாக இருந்த அம்மானைக் காய்களைக் காமாட்சியம்மாளிடம் கேட்டு வாங்கி வந்தாள் பார்வதி. வசந்திக்குக் கைப்பழக்கம் விட்டுப் போயிருந்ததால் அது என்ன விளையாட்டு என்று கமலியிடம் சொல்லி விளக்க மட்டும் முடிந்ததே ஒழியச் செய்தோ, 'டெமான்ஸ்ட்ரேட்' பண்ணியோ காட்ட முடியவில்லை. வசந்தியும் தன்னை அறியாமலே தான் ஒரு நகரவாசியாகி விட்டதை அப்போது அந்தக் கணத்தில் அந்த இயலாமையால் உணர்ந்தாள். அம்மானையில் மிகக் குறைந்த பட்சத் திறமையாகிய மூன்று காய்களை மேலே போட்டுக் காய் எதுவும் கீழே விழாமல் மாற்றி மாற்றி இரு கைகளாலேயும் பிடிப்பது கூட வசந்திக்கு வரவில்லை. 'நீ கொஞ்சம் இருடீ கமலி! மாமியை வந்து 'டெமான்ஸ்ட்ரேட்' பண்ணச் சொல்லிக் கேட்டுப் பார்க்கிறேன். மாமி இதில் கெட்டிக்காரி. ஒரே சமயத்தில் அஞ்சு காய்வரை கூடக் கீழே விழாமல் போட்டுப் பிடிச்சுடுவா" என்று சொல்லி விட்டுக் காமாட்சி மாமியை அழைத்து வரக் கீழே படி இறங்கிப் போனாள் வசந்தி.