21

     ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து வந்தவள் என்னும் போது வதந்திகளுக்கு ஒரு வரம்பே இருக்க வழியில்லை. ஒழுங்கும் நியாயமும் கூட இராது. வதந்திகளுக்கும் விவஸ்தை இராது. அந்த வதந்திகளைப் பரப்புகிறவர்களுக்கும் விவஸ்தை இராது. சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும் பிரமாதமான விஷயங்கள் சாதாரணப் படுத்தப்பட்டுக் கொச்சையாக்கப்படுவதும் அந்த வதந்திகளைப் பொறுத்தவரை மிகவும் சகஜம்.

     ரவியும் கமலியும், ஊருக்கு வந்ததிலிருந்து இலைமறைகாயாக அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இறைமுடிமணியின் பகுத்தறிவுப் படிப்பகத்தில் நடந்த கமலியின் சொற்பொழிவும் அந்தச் சொற்பொழிவில் கமலியை அறிமுகப்படுத்திய அவர் 'விசுவேசுவர சர்மாவின் எதிர்கால மருமகள்' என்கிற குறிப்புடன் கமலியைப் பற்றிக் கூறியிருந்ததும் ரவியைக் கொண்டே அவளுக்கு மாலையணிவிக்கச் செய்ததும் இப்போது வதந்திகளை வளர்த்து மிகவும் அதிகப்படுத்தியிருந்தன.

     சர்மாவிடமே பகுத்தறிவுப் படிப்பகச் சொற்பொழிவில் 'அவரது எதிர்கால மருமகள்!' என்று கமலியை இறைமுடிமணி அறிமுகப்படுத்தியது பற்றி இரண்டொருவர் விசாரித்திருந்தனர். ஒளிவு மறைவாகப் பேசுவதோ விஷயங்களைப் பூசி மெழுகுவதோ, ஆஷாடபூதித்தனமோ இறைமுடிமணிக்கு அறவே பிடிக்காதென்பது சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் வக்கீல் நோட்டீஸ்களைப் பற்றியும், இதைப் பற்றியும் இறைமுடிமணியிடமே நேரில் பேச வேண்டுமென்று எண்ணினார் அவர்.

     கமலியையும் ரவியையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு இறைமுடிமணியைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார் சர்மா.

     முதலில் பலசரக்குக் கடைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே அவர் இல்லை. அவருடைய மருமகன் குருசாமிதான் இருந்தான். அவனே விவரமும் சொன்னான்.

     "மாமா விறகுக் கடையிலே இருக்காக. அங்ஙனே போனாப் பார்க்கலாம்."

     பலசரக்குக் கடையில் நல்ல கூட்டம் இருந்தது. சீமாவையரின் துஷ்பிரசாரம் எதுவும் எடுபடவில்லை என்று தெரிந்தது. கலப்படமில்லாமல் விலையும் நியாயமாக வைத்து வியாபாரம் செய்ததால் அந்தக் கடையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. கடைக்குச் சாமான் வாங்க வருகிற ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, யாவரிடமும் காண்பிக்கப்பட்ட மரியாதையும், பண்பாடும், அக்கறையும், அந்தக் கடைக்குத் தனிப் பெருமையை அளித்திருந்தன. இறைமுடிமணி கடைக்கு வைத்திருந்த பெயர், கடையில் மாட்டியிருந்த படம், அவரது தனிப்பட்ட கொள்கைச் சார்புகள் எதுவும் விற்பனையைப் பாதிக்கவில்லை. சர்மாவுக்கே நிலைமை புரிந்தாலும் ஒரு வார்த்தைக்காக "வியாபாரம்லாம் எப்படி இருக்கு குருசாமி?" - என்று அவனையும் கேட்டு வைத்தார்.

     "ரொம்ப நல்லாவே இருக்குங்க" என்று அவனிடமிருந்து பதில் வந்தது. பின்பு அங்கிருந்து இறைமுடிமணியின் விறகுக் கடைக்குப் போனார் அவர்.

     விறகுக் கடைக்கு அவர் போனபோது இரண்டு மூன்று லாரியில் மூங்கில் சவுக்குக் கட்டைகள், கிடுகுக் கீற்று எல்லாம் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.

     "தேசிகாமணீ! நாம தனியாக் கொஞ்சம் பேசணும். இங்கே ரொம்பக் கூட்டமா இருக்கே? ஆத்தங்கரைப் பக்கமாப் போகலாமா?"

     "ஒரு பத்து நிமிஷம் உட்காரேன் விசுவேசுவரன்! லோடு இறக்கிக்கிட்டிருக்காங்க."

     சொன்னபடி பத்து நிமிஷத்தில் இறைமுடிமணி வந்துவிட்டார். அவரும் சர்மாவும் பேசிக் கொண்டே ஆற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.

     இறைமுடிமணியை ஆற்று மணலில் ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டுச் சர்மா - சந்தியா வந்தனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார். அவர் வருகிறவரை இறைமுடிமணி ஆற்று மணலில் காத்திருக்க வேண்டியதாயிற்று.

     சர்மா வந்ததும் அவரே பேச்சை ஆரம்பித்தார்:

     "எனக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. வேணு மாமாவுக்கும் உனக்கும் தவிர வேறு யாருக்கும் நான் இதைச் சொல்லலே. கமலிக்கும் ரவிக்கும் மட்டும் தெரியும்."

     "எதுக்கு வக்கீல் நோட்டீஸ்? யார் விட்டிருக்கானுவ?"

     "யார்னு சொல்றது? எல்லாம் ஊர் ஜனங்கள் தான். என் நடத்தைகள் மடத்து முத்ராதிகாரிங்கிற பதவிக்கும், வைதிகத்துக்கும் பொருத்தமாயில்லையாம். கமலி இந்து ஆலயங்களுக்குள்ளே கேள்வி முறை இல்லாமத் தரிசனத்துக்குப் போறாளாம்..."

     "உங்கள் ஆளுங்களைப் போலப் பொறாமை புடிச்சவங்க உலகத்துலேயே கிடையாதுப்பா! வரவரக் கோயிலுக்குப் போற ஆளுங்களே கொறைஞ்சி போச்சு. நமக்குப் புடிக்குதோ புடிக்கலியோ அதை நிஜமா நம்பிப் போற ஒருத்தர் ரெண்டு பேரையும் உங்கள் ஆளுங்களே கெடுத்துப் போடுவாங்கன்னு தோணுதுப்பா! அதுக்கு எங்க பிரச்சாரமே கூட வேணாம் போலிருக்கே."

     "சீமாவையர் தான் தூண்டி விட்டு எல்லாக் காரியமும் பண்ணுவார்னு தோண்றது. என்னை நேரே பார்த்துட்டாத் தேனாப் பேசறார், விசாரிக்கிறார். ஆனாப் பின்னாலே பண்றதும் தூண்டி விடறதும் எல்லாம் இப்பிடிக் காரியங்களா இருக்கு."

     "அவன் நாசமாப் போயிருவான். பாம்பு, தேளு, நட்டுவாக்கிலி மாதிரித் திரிஞ்சுக்கிட்டு இந்த ஊரைக் கெடுக்கிறான். எங்கடையை ஒழிச்சிப்பிடறதுன்னு தலை கிழே நின்னு பார்த்தான். முடியலே. ஜனங்க சரக்கு எப்படியிருக்குதுன்னு பார்த்தாங்களே ஒழிய ஆளு யாருன்னு பார்க்கலே." -

     "இப்ப இந்த நோட்டீஸ்லேயும் உனக்குக் கடை வாடகைக்கு விட்டதை ஒரு குத்தமா எழுதியிருக்கா."

     "அப்பிடியா?... உனக்கு இத்தினி தர்ம சங்கடம் என்னாலே வரும்னா நானே இதைக் கேட்டிருக்க மாட்டேனே? வாடகைக்கு யாருக்காவது விடப் போறதை நமக்குத்தான் விடட்டுமேன்னு கேட்டு வச்சேன்."

     "நீ கேட்டதும் தப்பில்லே. நான் விட்டதும் தப்பில்லே தேசிகாமணி! எல்லாம் முறையாத்தான் நடந்திருக்கு. அஹமத் அலி பாய்க்கு விடலாம். உனக்கு விடப் படாதா?"

     "கோவில் குளத்தை வெறுக்கிறவனைவிடக் கோவில் சிலைங்களையே பணங்குடுத்துத் திருடிக் கடத்தி அந்நிய நாட்டுக்கு விற்கிறவங்களே தேவலைன்னு பார்த்தாங்க போலிருக்கு! தவிரவும் பாய் சீமாவையருக்குப் பாட்டில், ஸெண்டு, ஃபாரின் சரக்குங்க, சமயத்திலே கைமாத்து எல்லாம் குடுக்கிறவரு வேற!"

     "அதிருக்கட்டும்! உன்னோட படிப்பகத்துக் கூட்டத்திலே நீ ரவியோட கூட வந்திருக்கிற அந்தப் பெண்ணைப் பத்திச் சொல்றப் போ, ஏதோ 'என் எதிர்கால மருமகள்'னு சொன்னியாமே?"

     "ஆமாம், சொன்னேன்! உள்ளதைச் சொல்றதுக்கு ஏனப்பா எல்லாரும் பயந்து பயந்து சாகறீங்க? கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் அந்தப் பொண்ணைத் தவிர வேறே யாரையும் கட்டிக்கிடப் போறதில்லைன்னு தனியாப் பேசிக்கிட்டிருக்கிறப்பத் தம்பியே எங்கிட்டச் சொல்லிடிச்சு. அந்தப் பெண்ணோ தம்பி மேலேயும் நம்ம நாடு, நம்ம நாட்டுப் பழக்க வழக்கங்கள் எல்லாத்து மேலேயும் உயிரையே வச்சிருக்கு. மூடநம்பிக்கை, மூடப் பழக்க வழக்கங்களைக் கூட ஏன்னுகேக்காமே கடைப்பிடிக்க அது தயாராயிருக்கு. எங்க படிப்பகத்திலே எந்தக் கூட்டத்திலேயும் கடவுள் வாழ்த்து - வெங்காயம் அது இது எல்லாம் கிடையாது. அன்னைக்குக் கூட்டத்திலே திடீர்னு யாரும் எதிர்பாராமே அந்தப் பொண்ணு என்னா செஞ்சிச்சிது தெரியுமா விசுவேசுவரன்? பேச்சைத் தொடங்கறதுக்கு முன்னாடி தானே தன் குரலிலே ஏதோ ஒரு கணபதி ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துப்பிட்டுத் தான் தொடங்கிச்சு.

     "எங்க இயக்க ஆளுங்க ரொம்பப் பேருக்கு அது பிடிச்சிருக்காது. ஆனா அது தமிழிலே பேசின அழகிலே அத்தினி பேரும் அதை மறந்திட்டானுவ. ரெண்டொரு விடாக்கண்டங்க மட்டும் கூட்டம் முடிஞ்சதுமே எங்கிட்ட வந்து கேட்டானுவ. 'அதுனோட நம்பிக்கைப்படி அது கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கு! நம்மையோ படிப்பகத்தையோ அது பாதிக்காது'ன்னு பதில் சொல்லி அவனுகளை அனுப்பிச்சேன். உங்க ஐயமார் குடும்பத்திலேயே கூட இத்தினி நறுவிசாப் பதவாகமா ஒரு படிச்ச பொண்ணு ரவிக்குப் பொருந்தறாப்பல கிடைக்க மாட்டாப்பா. அந்தப் பொண்ணு கமலிக்கு நிறம் மட்டுமில்லே. குணமும் தங்கந்தானப்பா... எனக்கு இதிலே ஒளிவு மறைவு எல்லாம் தெரியாது. நிஜத்தைப் பேசினேன். மறைச்சுப் பேச எனக்குத் தெரியாதுப்பா!"

     "வெளிப்பட வேண்டிய காலத்துக்கு முந்தி வெளிப்படற நிஜங்கள் வதந்தியாயிடும். சில நிஜங்களும் பிரசவிப்பதைப் போலப் பத்து மாதக் காலமோ, அதற்கு மேலோ நிறைந்து பின் வெளிவர வேண்டும். காலத்துக்கு முந்திய பிரசவம் குறைப் பிறவி ஆகியும் விடும் தேசிகாமணீ."

     "சரிதான்! ஆனா ஒரு பொண் பிரசவிக்கப் போறாங்கிறது ஒண்ணும் அத்தினி இரகசியமா இருக்க முடியாதே?" -

     இதைக் கேட்டுச் சர்மா சிரித்தார். இறைமுடிமணியின் வாதம் முரட்டுத்தனமாக இருந்தாலும் அதை எதிர்த்து சர்மா மேலும் விவாதிக்கவில்லை. இறைமுடிமணி தொடர்ந்தார்.

     "அது மட்டுமில்லே விசுவேசுவரன்; இன்னொண்ணையும் தம்பி எங்கிட்டச் சொல்லிச்சு. நடுவிலே ஒருநாச் சாயங்காலம் இப்ப நீயும் நானும் பேசிக்கிட்டிருக்கிற மாதிரி இதே ஆத்தங்கரையிலே தம்பியும் நானும் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப மனசுவிட்டுப் பலதை எங்கிட்டச் சொல்லிச்சு. எல்லா வெள்ளைக்காரப் பொம்பளங்களையும் போலக் காதலிச்சாலே கல்யாணமாயிடிச்சின்னோ, மோதிரம் மாத்திக் கிட்டாக் கல்யாணமாயிடிச்சின்னோ அந்தப் பொண்ணு நினைக்கலியாம். 'இந்த ஊரு முறைப்படி சாஸ்திர சம்மத்தோட ஒரு சடங்குகூட விடாம, நாலுநாள் கல்யாணம் நடத்தணும்னு ஆசைப்படுது'ன்னு தம்பி சொல்லிச்சு! 'என்னப்பா பயித்தியக்காரத் தனமாயிருக்கு? இந்தூர்ல இருக்கறவங்களையே சீர்திருத்தத் திருமணத்துக்கும் பதிவுத் திருமணத்துக்கும் நாங்க தயாராக்கிட்டு வர்றோம். விஞ்ஞானம் வளர்ந்த தேசத்திலேருந்து வர்ற இளம் பொண்ணு ஒண்ணு இப்பிடிப் பத்தாம் பசலித்தனமா ஆசைப்படுதே'ன்னு நான் கூடத் தம்பியைக் கேலி பண்ணினேன்! 'இல்லே! இங்கே புறப்பட்டு வர்றப்பவும் வந்தப்புறமும் அதைக் கமலி வற்புறுத்துது'ன்னு தம்பி சொல்லுது. இந்த விஷயத்தை அது தன் பேரண்ட்ஸ் கிட்டவே சொல்லி அந்த மாதிரிக் கல்யாணத்துக்கு ஆகற செலவுக்குன்னு நெறையப் பணம் வேறே வாங்கிட்டு வந்திருக்குன்னும் தம்பி சொல்லுச்சுப்பா."

     "ஊர் உலகம் ஒரு பக்கம் இருக்கட்டும் தேசிகாமணீ. என் மனைவி காமாட்சி இருக்கறவரை அது நடக்கவே நடக்காதுப்பா."

     "நீதான் அவங்க மனசையும் மாத்தணும். ஒருத்தரோட முரண்டுக்காக மத்தவங்க தாங்க ஆசைப்படற நல்வாழ்வைக் கெடுத்துக்க முடியாது."

     "வக்கீல் நோட்டீஸ் விஷயமா என்ன சொல்றே நீ?"

     "சும்மா மிரட்டறானுவ! கோர்ட்டுக்கு வந்தா ஒரு கை பார்த்துடலாம். நீ தைரியமா இரு. எதுக்கும் பயப்படாதே!" -

     வேணு மாமாவின் யோசனையை நண்பனிடம் கூறினார் சர்மா.

     "நல்ல யோசனைதான்! நோட்டீஸுக்குப் பதில் எழுதாதே. விஷயம் கோர்ட்டுக்கு வரட்டும் பார்க்கலாம்."-

     மேலும் சிறிது நேரம் பொதுவான பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். தம் கடை முகப்பு வந்ததும் இறைமுடிமணி விடைபெற்றார். அப்போது சர்மாவின் மனம் தெளிவாக இருந்தது. நண்பனிடம் மனம்விட்டுப் பேசியதில் கலக்கங்கள் நீங்கியிருந்தன.

     சர்மா வீடு திரும்பியபோது பார்வதி விளக்கு ஏற்றி வைத்துத் தீப நமஸ்காரம் செய்து சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாள். காமாட்சி பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் பேசுவதற்குப் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.

     பார்வதியின் சுலோகம் முடிந்ததும், "பாரு! இங்கே வாம்மா!" - என்று சர்மா மகளைக் கூப்பிட்டார். பார்வதி அவரருகே வந்ததும் அவளைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்று, "ஒரு முக்கியமான விஷயமாப் பூக்கட்டிக் குலுக்கிப் போடறேன். சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு ஒரு பொட்டலம் எடும்மா" - என்றார்.

     பார்வதி அப்பா சொன்னபடியே செய்தாள். அவள் எடுத்துக் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்ததும், சர்மாவின் முகம் மலர்ந்தது.

     "காயா பழமா அப்பா?"

     "பழந்தான் அம்மா!" - பிரித்த பூப்பொட்டலத்தை அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டார் அவர். வாசலில் யாரோ படியேறி வருகிற ஓசை கேட்டது. பார்வதி எட்டிப் பார்த்துவிட்டு, "அண்ணாவும் கமலியும் கோயில்லேருந்து திரும்பி வராப்பா..." என்றாள்.

     பொன்நிற நெற்றியில் வெளேரென்ற விபூதிக் கீற்றும் குங்குமமுமாகக் கமலி சர்மாவுக்கு முன்வந்து, "கோவில் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்" - என்று தட்டில் காகிதங்களில் மடித்து வைத்திருந்த விபூதி, குங்குமம், வில்வத் தளங்களை அவர் முன் நீட்டினாள்.