25 ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது. 'சொல்லாமற் செய்வர் பெரியோர்' - என்பது போல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கேட்காமல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும் பெருந்தன்மையையும் வியந்து கொண்டே சங்கரமங்கலம் திரும்பியிருந்தார்கள் அவர்கள். ரவியும், கமலியும் ஊர் திரும்பிய அதே நாளில் சில மணி நேரம் முன்னதாகவே வசந்தியும் அங்கே பம்பாயிலிருந்து வந்திருந்தாள். சென்னை வரை விமானத்தில் வந்து அப்புறம் இரயில் பயணம் செய்து சங்கரமங்கலத்தை அடைந்ததால் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே அவள் வந்து சேர முடிந்திருந்தது. முதல் வேலையாக வசந்தி சர்மாவின் வீட்டுக்கு வந்து பெட்டி சூட்கேஸ்களுடன் கமலியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டாள். நாலு நாள் கலியாணம் முடிந்து கிருஹப்பிரவேசத்துக்காகப் புகுந்த வீட்டுக்குள் நுழைவது வரை இனிமேல் கமலி வேணு மாமா வீட்டில்தான் இருப்பதென்று முடிவாகியிருந்தது. சர்மா, வேணு மாமா இருவருமே சேர்ந்து செய்த ஏற்பாடு தான் இது. ஸ்ரீ மடத்திலிருந்து ஊருக்குத் திரும்பி வந்ததிலிருந்து ரவி தன் அம்மாவிடம் ஒரு மாறுதலைக் கவனித்து உணர முடிந்தது. அவள் அப்பாவிடமும், அவனிடமும் பேசுவதை அறவே நிறுத்தியிருந்தாள். அவர்களாக வலுவில் போய்ப் பேச முயன்றாலும், பதில் சொல்லாமல் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். "நீ மடத்துக்குப் புறப்பட்டுப்போன மறுநாளிலேர்ந்தே எங்கிட்ட இப்படித்தான் முறைச்சிண்டிருக்கா. வேணு மாமாவும் நாமும் பேசிண்டிருந்ததெல்லாம் எப்படியோ இவ காது வரை எட்டியிருக்கும்னு தோண்றது" என்றார் சர்மா. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரவியும் நினைத்தான். அன்றைக்குச் சாயங்காலமே வசந்தியை அம்மாவிடம் பேசச் சொன்னால் அவள் கோபத்துக்குக் காரணம் என்னவென்று தெளிவாகப் புரிந்துவிடுமென்று சர்மாவும் ரவியும் எண்ணினார்கள். தற்செயலாகவே அன்று மாலை வேணு மாமாவின் பெண் வசந்தி ரவி கமலி கல்யாண விஷயமாகக் காமாட்சியம்மாளிடம் பேசிப் பார்ப்பதென்று ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீ மடத்து மானேஜர் ரவி மூலம் சர்மாவுக்கு எழுதி அனுப்பியிருந்த கடிதத்தில் பெரியவர்கள் இவர்களிடம் எப்படி மிகவும் பிரியமாக நடந்து கொண்டார் என்ற விவரங்களை எல்லாம் விவரித்து விட்டு வேறு சில செய்திகளையும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை அப்படியே காமாட்சியம்மாளுக்குப் படித்துக் காட்டிவிடச் சொல்லலாமா என்று கூட எண்ணினார் சர்மா. தானோ ரவியோ இருவரில் யார் அந்தக் கடிதத்தைப் படித்துச் சொல்ல முயன்றாலும் பொய்யாக இட்டுக்கட்டி ஒரு கடிதத்தை வாசிப்பதாக அவளுக்குச் சந்தேகம் வரும் என்பதால் பார்வதியிடமும் குமாரிடமும் அதைக் கொடுத்தனுப்பினார். "தங்களை நம்பாததோடு அம்மா அதைப் படிக்கத் தொடங்குவதற்குக் கூட விடவில்லை" - என்று திரும்பி வந்து கடிதத்தைக் கொடுத்தார்கள் குமாரும் பார்வதியும். சர்மா தாமே நேரில் போய் மீண்டும் முயற்சி செய்யத் தயங்கினார். கடைசியாக அந்தக் கடிதத்தை வசந்தியிடம் கொடுத்துப் பார்க்க முடிவு செய்தார். ஏற்கனவே ரவியும் கமலியும் ஊரில் இல்லாத போது இந்த விஷயம் காதில் விழுந்ததுமே ஹிஸ்டீரியா வந்தது போல் அழுது கதறிக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாள் காமாட்சி அம்மாள். சொல்லக் கூடாததை எல்லாம் சொல்லியிருந்தாள். கேட்கக் கூடாததை எல்லாம் கேட்டிருந்தாள். ரவியிடமும் கமலியிடமும் சொன்னால் அவர்கள் மனம் வீணில் புண்படுமே என்றுதான் அவற்றையெல்லாம் சர்மா அவர்களிடம் சொல்லாமல் மறைத்திருந்தார். காமாட்சியம்மாளுக்கு இரத்தக் கொதிப்பு உண்டு. வீட்டில் அவளைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அபிப்பிராயத்தை இலட்சியமே செய்யாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கல்யாண ஏற்பாடுகள் அவள் உடல் நிலையையும், மன நிலையையும் பெரிய அளவில் பாதித்திருந்தன. குமாரிடம் சொல்லிக் கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கூடத்தில் போட்டு மெத்தென்று விரித்துத் தலைக்கு உயரமாக வைத்து அதில் படுத்துக் கொள்ளச் சொல்லியும் கேட்காமல் வேண்டுமென்றே ஈரத் தரையில் புடவைத் தலைப்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தாள் காமாட்சியம்மாள். சரியான அன்ன ஆகாரமின்றித் தளர்ந்தும் போயிருந்தாள். அன்றைக்குச் சாயங்காலம் வசந்தி காமாட்சியம்மாளிடம் பேச வரும் போதும், தானோ, ரவியோ வீட்டில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார் சர்மா. காமாட்சியம்மாள் ஆத்திரப்பட்டுச் சீறினாலும், எரிந்து விழுந்தாலும் பொறுமையிழந்து விடாமல் அவளிடம் தொடர்ந்து பேசி எடுத்துச் சொல்லி விவாதிக்கும்படி வசந்தியிடம் கூறியிருந்தார் அவர். திட்டமிட்டிருந்தபடி மாலையில் சர்மா ஆற்றங்கரைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். ரவி இறைமுடிமணியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவருடைய கடைக்குப் போனான். குமார் கல்லூரியில் அடுத்தவாரம் வரப்போகிற ஒரு பரீட்சைக்காகத் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். பார்வதி உள்ளே வீட்டுக்காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போது பம்பாயிலிருந்து வந்தாலும் மாமிக்கென்று சில சமயங்களில் அவளே பிரியப்பட்டுச் சொல்லியிருக்கிற பேரீச்சம்பழமும், உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தருவது வசந்தியின் வழக்கம். அதிலும் பக்குவப்படுத்தப்பட்டு மெதுவாக்கப்படாமல் காய்ந்த ருத்ராட்சக் கொட்டைபோல் பேரீட்சை தான் வேண்டும் என்றாள் மாமி. அதுதான் பூஜைக்கு ஆகுமாம். அழகாகப் பாலிதீன் பைகளில் கட்டிய பேரீச்சை, உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்போடு, காமாட்சியம்மாளைச் சந்தித்தாள் வசந்தி. "உங்க உடம்புக்கென்ன மாமீ! நாரா இளைச்சுப் போயிட்டேளே இப்படி?" "வாடீயம்மா! நீ எப்போ ஊர்லேர்ந்து வந்தே!" "காலம்பர வந்தேன் மாமி! மறக்காம உங்க பண்டம்லாம் வாங்கிண்டு வந்திருக்கேன்." - "கலியாணத்துக்காகப் பொறப்பட்டு வந்திருக்கியாக்கும்?"- குரலிலிருந்து மாமி சுபாவமாக அதைக் கேட்கிறாளா எகத்தாளமாகக் கேட்கிறாளா என்பதை வசந்தியால கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. "நான் ஊருக்கு வரத்துக்குத் தனியா காரணம்னு ஒண்ணு வேணுமா மாமி? அடிக்கடி ஊருக்கும் பம்பாய்க்குமா வந்துண்டும் போயிண்டும் தானே இருக்கேன்..." இருவருக்கும் இடையே சிறிது நேரம் எதைப் பேசுவது எப்படி மேற்கொண்டு முறியாமல் சுமுகமாக உரையாடலை வளர்ப்பது என்று தெரியாமல் மௌனம் நிலவியது. சிறிது நேரத்திற்குப் பின் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு குழந்தைக்குப் பழைய கதையைச் சொல்லுவது போல் காமாட்சியம்மாளே ஆரம்பித்தாள்:- "புருஷா அக்னி சந்தானம்னு - ஔபாசனம் பண்ணி - நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலிருந்து வளர்ற துளசியை வளர்த்துப் பூஜை பண்ணிண்டு வரோம். இந்தக் குடும்பத்தோட சௌபாக்கியங்களும், லட்சுமி கடாட்சமும், விருத்தியும் நாங்க பரம்பரையாகச் சரீர சுத்தத்தோடயும் அந்தரங்கச் சுத்தத்தோடயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலேதான்னு எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே, விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது. எத்தனையோ தலைமுறைக்கு முன்னே ராணிமங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராமண சுமங்கலிக்கு தானம் பண்ணனும்னு தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா சொக்கத் தங்கத்திலே பண்ணின சொர்ண விளக்கு ஒண்ணை வச்சுண்டு கிராமம் கிராமமாகத் தேடினாளாம். கடைசியா அந்தச் சொர்ண தீபத்தை இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண் ஒருத்திதான் தானம் வாங்கிண்டாளாம். அன்னிலேர்ந்து இந்தக் குடும்பத்து மாட்டுப் பெண்கள் ஒவ்வொருத்தரா அந்த சொர்ண தீபத்தையும் துளசி பூஜை பண்ற உரிமையையும் முந்தின தலைமுறை பெரியவா கிட்டேருந்து பரம்பரை பரம்பரையா அடைஞ்சிண்டு வரோம். இன்னிக்கும் தை வெள்ளிக்கிழமை தவறாம அந்தத் தங்க விளக்கைத் துளசி மாடத்திலே நான் ஏத்தி வைக்கிறேன்." - இப்படிச் சொல்லியபடியே தன் தலைமாட்டிலிருந்த ஒரு பழைய காலத்து ஒழுகறைப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைத்திருந்த அந்தத் தங்க விளக்கை எடுத்து வசந்தியிடம் காட்டினாள் காமாட்சியம்மாள். "நான் இந்தாத்து மூத்த மாட்டுப் பெண்ணா வந்ததும் எங்க மாமியார் இதை எங்கிட்டக் குடுத்தா..." என்று கூறி ஒரு பெருமூச்சுடன் அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு வசந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் காமாட்சியம்மாள். "ஒண்ணும் கவலைப்படாதீங்கோ மாமி! உங்க மாமியார் உங்ககிட்டக் குடுத்ததைப் போலவே நீங்களும் உங்க மூத்த மாட்டுப் பொண்ணிட்ட இதைக் குடுக்கலாம். அதுக்கு ஒரு கொறையும் வராது..." "குமாருக்குக் கல்யாணமாயி ரெண்டாவது மாட்டுப் பொண்ணாவது இந்தக் குடும்பத்துக்கு ஏத்தவளா வந்தா அவகிட்டக் குடுக்கலாம்?" "ஏன் மாமி! உங்க மூத்த மாட்டுப் பொண்ணுக்கு என்ன கொறை வந்தது?" "போறும்டீ! அவளைப் பத்தியோ ரவியைப் பத்தியோ எங்கிட்டப் பேச்சே எடுக்காதே, என் வயிறு பத்திண்டு எரியறது. நம்ம ஆசாரம் அநுஷ்டானம் எதுவுமே புரியாத யாரோ ஒருத்தியை எந்த தேசத்திலிருந்தோ இழுத்துண்டு வந்துட்டு அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவன் ஒத்தைக் கால்லே நிற்கிறதும், அதுக்கு எல்லாம் தெரிஞ்ச இந்தப் பிராமணனும் தலையாட்டறதும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. எல்லாம் சீரழிஞ்சு குட்டிச் சுவராத்தான் போகப் போறது. அவன் பாட்டுக்கு அவளைக் கட்டிண்டு அடுத்த மாசமே பிளேன்ல ஏறிப் பிரான்சுக்குப் போகப் போறான். மாட்டுப் பொண் வரான்னா வீட்டிலே விளக்கேத்தி வைக்க லட்சுமி வரான்னு எங்க நாள்லெ சொல்லுவா...? எங்கேருந்தோ வந்துட்டு அங்கேயே திரும்பிப் புருஷனையும் இழுத்துண்டு போகப் போற யாரோ ஒருத்தி எப்பிடி இந்தாத்து லட்சுமியாக முடியும்டீ?" "மாமீ! நீங்க எதை வேணாச் சொல்லுங்கோ, ஆனா நம்ம ஆசார அனுஷ்டானம் தெரியாதவள்னு மட்டும் கமலியைப் பத்திச் சொல்லாதீங்கோ. நம்ம குடும்பங்களிலே இப்போ வளர்ற இளம் பொண்களைவிடக் கமலி எத்தனையோ சிரேஷ்டமானவள். அவள் தெரிஞ்சிண்டிருக்கிற அத்தனை ஆசார அநுஷ்டானம் இப்போ நம்மளவாளுக்குக் கூடத் தெரியுமாங்கறதே எனக்குச் சந்தேகம் மாமி! அப்பிடியில்லேன்னாப் பெரியவாளே ஸ்ரீ மடத்துக்கு அவளை வரச் சொல்லி அநுக்ரகம் பண்ணுவாளா? அவ பிரெஞ்சிலே மொழி பெயர்த்திருக்கிற ஸௌந்தரிய லஹரியையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும், பஜ கோவிந்தத்தையும் கேட்டுட்டுப் பெரியவாளே ஆசீர்வாதம் பண்ணியிருக்கான்னா அது எத்தனை பெரிய விஷயம்? அதைப் பத்தி ஆச்சரியப்பட்டு ஸ்ரீ மடத்து மானேஜரே உங்காத்து மாமாவுக்குப் பெரிசா ஒரு லெட்டர் போட்டிருக்கார்... படிக்கிறேன்... கேக்கறேளா?" "வேண்டாம்டீ! ஸ்ரீ மடத்து மானேஜருக்கு முந்தின மடம் ஏஜண்டாக இங்கே இருந்த சீமாவையர் மேலே ஏகக் கோபம். சீமாவையர் சங்கரமங்கலம் சம்பந்தப்பட்ட மடத்து ஆஸ்திகளை எல்லாம் ஊழல் மயமாப் பண்ணிப்பிட்டார்னு அவருக்குப் பதிலா இந்தப் பிராமணரைக் கூப்பிட்டு நியமிச்சதே அந்த மானேஜர் தான். அவர் இந்தப் பிராமணருக்கு நெருங்கின சினேகிதம். அவராலே இவரை விட்டுக்குடுத்து எழுத முடியாது. என்னைச் சரிப்படுத்தறதுக்காக இந்தப் பிராமணரே அவரை விட்டு இப்பிடி இங்கே ஒரு கடிதாசு எழுதச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்படறத்துக்கில்லேடீ!" மாமியின் பிடிவாதத்தை எப்படிச் சமாளிப்பதென்று வசந்திக்குப் புரியவில்லை. பிள்ளை அந்தப் பிரெஞ்சுக்காரியை மணந்து கொள்வதன் மூலம் நிரந்தரமாக அவள் அவனைப் பிரான்ஸுக்கே இழுத்துக் கொண்டு போய் விடுவாள் என்ற மனக்குறை மாமியின் சொற்களில் தொனிப்பதைக் கவனித்தாள் வசந்தி. கமலியின் நற்பண்புகளையும் தன்னடக்கத்தையும், கோடீசுவரர்களாகிய தன் பெற்றோரிடமிருந்து அவள் ரவியை நம்பி அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் இணையற்ற எளிமையையும் ஒவ்வொன்றாக மாமியிடம் விவரித்தாள் வசந்தி. நல்ல வேளையாக அதைக் கேட்கவே அப்படியே நிறுத்தி மறுக்காமல் மாமி அப்போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள். "நேக்குத் தெரியும்டீ! நீ, ஒங்கப்பா, எல்லாருமே இந்தக் கலியாணத்துலே உள்கைகள். எல்லாருமாச் சேர்ந்து நேக்கு எதிராச் சதி பண்ணிண்டிருக்கேள்னு நன்னாத் தெரியும். இந்த விஷயத்திலே நீ இப்படித்தான் பேசுவேன்னும் நேக்கு முன்னாலேயே தெரியும்." "தப்பா நான் ஒண்ணும் சொல்லலே மாமி! உள்ளதைத்தான் சொல்றேன். கமலி ரொம்பத் தங்கமான பொண்ணு." "இருக்கட்டுமேடீ. யார் வேண்டாம்னது? தங்க ஊசீன்னா அதுக்காக அதை நாம எடுத்துக் கண்ணைக் குத்திக்கணுமா என்ன?" "உங்க மேலே அவளுக்குத் தேவதா விசுவாசம் மாமி. 'புராதனமான இந்தியப் பெண்மையின் கலாசாரச் சின்னம்'னு உங்களைப் பற்றி அவ எங்கிட்டச் சொல்றது வழக்கம் மாமி..." "அதாவது சுத்தக் கர்நாடகம், மடிசஞ்சீன்னு என்னைக் கேலி பண்றாளா?" "சிவ, சிவ! அப்படியில்லே மாமி! வேடிக்கைக்காகக் கூட அந்த மாதிரி அவளைப் பத்திச் சொல்லாதீங்கோ. உங்களை அவ தேவதையா மதிக்கிறா." "...நேக்கு அவளைக் கட்டோடப் பிடிக்கலைடீ." "நீங்க அப்படிப் பாராமுகமா இருக்கக்கூடாது. மகாலட்சுமி மாதிரி சுமங்கலியா வந்திருந்து மாமாவோட மணையிலே கூட நின்னு கல்யாணத்தை நடத்தித் தரணும். நாங்க பொண்ணாத்துக்காராளா ஏத்துண்டிருக்கோம். நீங்க கட்டாயம் வந்து நடத்தித் தரணும்..." "இந்தத் தட்டுக் கெட்டுப்போன கல்யாணத்துக்குச் சாஸ்திரம், பொண்ணாத்துக்காரா, புள்ளையாத்துக்காராள்னு இதெல்லாம் வேற கேக்கறதாக்கும்?" "மாமி! நீங்க ரொம்பப் பெரியவா... மங்களமான காரியத்தைப் பத்தி உங்க வாயாலே இப்படி வார்த்தை சொல்லப்படாது. உங்களைக் கொறை சொல்ல எனக்கு அத்தனை வயசாகலை!" "புள்ளைக்கு அம்மாவைக் கலந்துக்காமே - அவ சம்மதமே இல்லாமே நடக்கப்போற கல்யாணத்துக்கு - இப்படி வந்து அவளைக் கூப்பிடறது மட்டும் என்ன நியாயம்?" "நீங்க வந்து கூட இருந்து ஆசீர்வாதம் பண்ணாமே இந்தக் கல்யாணம் நிறையாது." "நான் ஏன் வரேன்? நேக்கு மான ரோஷம் இல்லையா என்ன? இந்தப் பிராமணர் என்கிட்ட ஒரு வார்த்தை கூடக் காதிலே போடாம இத்தனை தூரம் ஏற்பாடு பண்ணியிருக்கார். லக்கினப் பத்திரிகை முகூர்த்தக் கால் எல்லாம் கூட ஏற்பாடு பண்ணியாச்சாம். யாரிட்ட வந்து நீ காது குத்தறே? நான் இந்தக் கலியாணத்துப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே. யாரோ ஒருத்தியை எவனோ ஒருத்தன் எங்கேயோ கல்யாணம் பண்ணிண்டா எனக்கென்ன வந்தது?" மாமியின் கோபத்தை மறுபக்கமாகப் புரட்டிப் பார்த்தால் ரவியின் மேல் அவளுக்கு இருந்த பிள்ளைப் பாசம் புரிந்தது. மிகவும் பிரியமான விஷயத்தைப் பற்றி வெறுப்போடு பேசிக் கொண்டிருந்தாள் மாமி. அந்த வெறுப்பிலும், கோபத்திலுமே பிரியத்தின் அளவு தெரியக்கூடிய தொனி மறைந்திருந்தது. வசந்தி சுற்றி வளைத்து விதம் விதமாக முயற்சி செய்து மாமியின் மனத்தை இளக்க முயன்றாள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. சுற்றுப்புறத்து கிராமங்களில் உள்ள ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி வைத்தால் தான் பிள்ளைக்கு ஊரோடு தேசத்தோடு, தாய் தந்தையோடு சம்பந்தமும் தொடர்பும் இருக்க முடியும். கமலி போன்ற ஒரு பிரெஞ்சுப் பெண்ணை மணந்து கொண்டு பிரான்ஸுக்கே போவதால் ரவி நிரந்தரமாகத் தங்களை விட்டே நழுவிப் போய்விடுவானோ என்று இனம் புரியாத அச்சம் ஒன்று மாமியின் உள் மனத்தில் இருப்பது புரிந்தது. அதைத்தான் வசந்தியால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. கடைசி முயற்சியாக மாமியிடம், "கல்யாணம் பழைய முறைப்படி நாலு நாள் நடக்கப் போறது. நலுங்கு, ஊஞ்சல், பாலிகை வளர்க்கறது எல்லாம் நாலு நாளும் உண்டு" என்றாள் வசந்தி. "எத்தனையோ விஷயத்திலே சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாத்தையும் நீங்க மீறியாச்சு! இது ஒண்ணுலே மட்டும் எதுக்குச் சாஸ்திரம்? பேசாம அவா நாட்டு முறைப்படி ரிஜிஸ்டிரார் ஆபீஸிலே போய்ப் பதிவு பண்ணிக்க வேண்டியதுதானே? இல்லேனாச் சர்ச்சிலே போயி மோதிரம் மாத்திக்கலாமே?" என்று கசப்பாக எரிச்சலோடு பதில் சொன்னாள் மாமி. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|