27

     கமலி சங்கரமங்கலத்துக்கு வந்ததிலிருந்து அவள் சம்பந்தப்பட்ட அவர் பழகியிருக்கிற மனிதர்களைப் பற்றிய விவரங்களைச் சர்மாவிடமும், ரவியினிடமும், விசாரித்து அறிந்த பின் சாட்சியமாகப் பயன்படக் கூடியவர்கள் எனத்தாம் கருதிய பட்டியல் ஒன்றை முதலில் தயாரித்துக் கொண்டார் வேணு மாமா. சந்திப்பதற்காக அவர்களுக்கெல்லாம் தகவலும் சொல்லியனுப்பினார்.

     சர்மாவிடம் ஏற்கெனவே அவர் சொல்லி அனுப்பியிருந்தபடி கமலி எந்தெந்தக் கோவில்களுக்குத் தரிசனத்துக்குப் போயிருந்தாளோ அந்தந்தக் கோவில்களில் அப்போது சந்நிதியிலிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமாவை வந்து சந்திக்கும்படி ஏற்பாடு ஆகியிருந்தது. அன்று மாலையில் அர்ச்சகர்கள் வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். உடனே வேணு மாமா கமலியைக் கூப்பிட்டு, அர்ச்சகர்கள் வரப்போகிற விவரத்தைச் சொல்லி, "அவாளை நான் இங்கே கூடத்திலே உட்கார வச்சுப் பேசப் போகிறேன். அவாள்ளாம் வர்றப்போ இதே கூடத்தில் காஸட் ரெக்கார்டரை ஆன் பண்ணிட்டு விளக்கு ஏத்தி வைச்சு நீ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கணும். அவா வந்ததும் ரெக்கார்டரை ஆஃப் பண்ணாமே அப்படியே விட்டுட்டு நீ போயிடலாம். அல்லது மௌனமா இங்கேயே இருந்தும் கவனிக்கலாம்" என்றார். கமலியும் அதற்குச் சம்மதித்தாள்.

     அன்று சாயங்காலம் அர்ச்சகர்கள் வேணு மாமாவைத் தேடி வந்தார்கள். வேணு மாமா கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் தரையில் ஓர் உயரமான மணைப் பலகையில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. மாக்கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட மணைப் பலகையின் அடியில் காஸெட் ரெக்கார்டர் 'ஆன்' செய்யப்பட்டு வெளியே அதிகம் தெரியாமல் இயங்கிக் கொண்டிருந்தது.

     "ஓங்கார பூர்விகே தேவி! வீணா புஸ்தக தாரிணீ!
     வேதமாத: நமஸ்துப்யம் அவைதப்யம் ப்ரயச்சமே"

என்று ஸ்லோகத்தைச் சொல்லி முடித்துவிட்டு விளக்கை வணங்கி எழுந்திருந்தாள் கமலி. உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகர்களை வேணு மாமாவும் கமலியும் மரியாதையாக எழுந்து முன் சென்று நின்று வரவேற்றார்கள்.

     அவர்களை ஒவ்வொருவராகப் பிரியத்தோடு பேர் சொல்லி அழைத்து விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அருகே போடப்பட்டிருந்த பெஞ்சியில் அமரச் செய்தார் வேணு மாமா. அவர் கேட்க வேண்டுமென்றே அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்களாகவே கமலியைச் சுட்டிக்காட்டி, "சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருக்கா! சித்தே முன்னே இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கிறதைக் கேட்டப்போ மெய் சிலிர்த்தது. சரஸ்வதி தேவியே இங்கே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. 'இவளுக்கு' எதிராக் கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களையெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி."

     "அப்படி கோவில்லே இந்தக் கமலி என்னதான் பெரிய தப்புப் பண்ணிட்டா? எதுக்காக யார் வந்து உங்களை இப்போ நிர்ப்பந்தப்படுத்தறா?..."

     "தப்பாவது ஒண்ணாவது? அப்படிச் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும். அதைப் போல அபசாரம் வேற இருக்க முடியாது. நிஜத்த அப்படியே சொல்லணுமானா ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களைவிட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்."

     "இதுதான் நெஜமானா நீர் இதை அப்படியே கோர்ட்டிலே வந்து சொல்ல வேண்டியதுதானே?"

     "கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில்லே எக்ஸிக்யூடிவ் ஆபீசர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்கறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணணும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பா புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப் படுத்தறா! வேற வழியே இல்லை."

     -இப்படி வருத்தப்பட்ட மூத்தவரான அந்த ஓர் அர்ச்சகரைத் தவிர உடன் வந்திருந்த மற்ற இரு அர்ச்சகர்களிடமும் சில கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வைத்தார் வேணு மாமா. அப்புறம் பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றினார்.

     "நான் உங்களை எல்லாம் வரச் சொன்னது இதைப் பத்திப் பேசறதுக்கில்லே. இவ ஏதோ ரெண்டு மூணு பிராமணாளுக்கு வஸ்திர தானம் பண்ணனும்னா, அதுக்காகத்தான் உங்களை எல்லாம் வரச்சொல்லி அனுப்பினேன்" - என்று கமலியைக் கூப்பிட்டு ஜாடை காட்டினார். மூன்று பெரிய பிளாஸ்டிக் தட்டுகளில் தயாராக வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் எடுத்து வைக்கப்பட்டிருந்த கோடி வேஷ்டி அங்கவஸ்திர செட்டுக்களைக் கமலியே அவர்கள் ஒவ்வொருவருக்காகக் கொடுத்துவிட்டு மிகவும் பவ்யமாகக் குனிந்து அவர்களை வணங்கினாள் அவர்களும் ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் சென்ற பின் விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அடியிலிருந்து காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ரீ வைண்டிங் பட்ட'னை அமுக்கி ரீவைண்ட் செய்து மறுபடி போட்டுப் பார்த்ததில் எல்லாம் கச்சிதமாகப் பதிவாகி இருந்தது. கேஸ் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மற்ற சாட்சிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டார் வேணு மாமா.

*****

     விசாரணை நாள் வந்தது. ஏற்கெனவே தினசரிப் பத்திரிகைகளில் பிரமாதப்படுத்தப்பட்டுத் தடபுடலாகி இருந்ததனால் அன்று சப்-கோர்ட்டில் ஏகக்கூட்டம். சப்-ஜட்ஜ் ஆசனத்தில் வந்து அமர்ந்ததும் விசாரணை தொடங்கிற்று.

     "நீர் உமது வீட்டிலே கமலியை விருந்தினராகத் தங்க வைத்துக் கொண்டதும், அவள் சங்கரமங்கலத்திலும் சுற்றுப் புறத்திலும் உள்ள இந்த ஆலயங்களைத் தரிசிக்க அவளுக்கு உதவி செய்ததும் உண்மைதானா?" என்று சர்மாவை விசாரித்தார் எதிர்தரப்பு வக்கீல். சர்மா உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். கமலி சாட்சி சொல்லுமுன் சத்தியப் பிரமாணத்துக்காக அவர்கள் பைபிளை எடுத்துக் கொடுக்க - அவள் தானே பகவத் கீதையைக் கேட்டு வாங்கிப் பிரமாணத்தைச் செய்துவிட்டுத் தனது சாட்சியத்தைத் தொடங்கினாள்.

     "இந்துக் கோவில்களில் தரிசிக்கப் போனது உண்மைதானா?" என்று கமலியிடம் கேட்கப்பட்டது. கமலி ஒரே வாக்கியத்தில் 'உண்மைதான்' - என்று மறுக்காமல் அதை ஒப்புக் கொண்டுவிட்டாள்.

     "அப்படியானால் வேலை மிகவும் சுலபமாகப் போயிற்று. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவருமே தாங்கள் செய்தவற்றை மறுக்காமல் செய்ததாக அப்படியே ஒப்புக் கொண்டு விட்டார்கள். மேற்கொண்டு விசாரிப்பதற்கு இனி எதுவுமில்லை. கனம் கோர்ட்டாரவர்கள் நியாயம் வழங்கிப் பாதிக்கப்பட்ட கோவில்கள் சுத்தி செய்யப்பட்டுச் சம்ப்ரோட்சணம் நடைபெற வழி செய்து கொடுக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்திருந்தவர்களின் வக்கீல் தம் வாதத்தைத் தொகுத்து முடித்தார்.

     அப்போது வேணு மாமா கமலிக்கும் சர்மாவுக்கும் வக்கீல் என்ற முறையில் எழுந்திருந்து அந்த வாதத்தை ஆட்சேபித்தார். அவர் தரப்பு வாதத்தை அவர் எடுத்துச் சொல்லலாம் என்று சப்-ஜட்ஜ் கூறவே வேணு மாமா மேலும் தொடர்ந்தார்.

     "இதை நான் ஆட்சேபிக்கிறேன். கமலி எந்த அந்நிய மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அவள் பல ஆண்டுகளாக இந்து மதத்தையும் இந்து கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையுமே அனுஷ்டித்து வருகிறாள்."

     வேணு மாமா இவ்வாறு கூறியவுடன் கமலி அந்நிய மதத்தினள் இல்லை என்பதற்கும், இந்துப் பழக்க வழக்கங்களையே அவள் அனுசரித்து வருகிறாள் என்பதற்கும் போதிய சாட்சியங்கள் வேண்டும் என்று எதிர்த் தரப்பு வக்கீல் கேட்டார்.

     சாட்சியங்கள் இப்போதே தயார் என்றும் கோர்ட்டார் விரும்பினால் அவர்களை ஒவ்வொருவராக ஆஜர்படுத்த முடியும் என்றும் வேணு மாமா நீதிபதியை நோக்கிக் கூறினார். நீதிபதி சாட்சியங்களை ஆஜர்ப்படுத்தி நிரூபிக்குமாறு கோரவே முதல் சாட்சியாகச் சங்கரமங்கலம் 'செயிண்ட் ஆண்டனீஸ் சர்ச்' பாதிரியாரை அழைத்தார் வேணு மாமா.

     கமலி என்ற அந்தப் பிரெஞ்சு யுவதியை ஒருநாள் கூடத் தான் சர்ச்சில் பிரேயருக்காக வந்து பார்த்ததில்லை என்றும் மாறாகப் புடவை குங்குமத் திலகத்துடன் பிள்ளையார் கோயில், சிவன் கோயில் வாசல்களில் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் பாதிரியார் சாட்சி சொன்னார். எதிர்த் தரப்பு வக்கீல் பாதிரியாரிடம் ஏதோ குறுக்கு விசாரணைக்கு முயன்றார். ஆனால் அது அப்போது பயனளிக்கவில்லை.

     அடுத்து, ரவி கூண்டிலேறிச் சாட்சி சொன்னான். பிரான்ஸில் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இந்திய இயல் பேராசிரியன் என்ற முறையில் மாணவியாக அவளைச் சந்தித்த நாளிலிருந்து கமலி இந்துக் கலாசாரத்தில் ஈடுபாடுள்ள பெண்ணாய் இருப்பதாக ரவியின் சாட்சியம் விவரித்தது. ரவியைத் தொடர்ந்து சங்கரமங்கலம் இரயில் நிலையத்தில் போளி ஆமவடை விற்கும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன், வழித்துணை விநாயகர் கோயில் பூக்கடைப் பண்டாரம் ஆகியோர் பல மாதங்களுக்கு முன் சங்கரமங்கலத்துக்கு முதல் முதலாகக் கமலி வந்ததிலிருந்து தோற்றத்தாலும் நடை உடை பாவனையாலும், அவள் ஓர் இந்துப் பெண் போலவே நடந்து கொண்டு வருவது தங்களுக்குத் தெரியும் என்று சாட்சியமளித்தார்கள்.

     அடுத்து ஏலக்காய் எஸ்டேட் ஓனர் சாரங்கபாணி நாயுடு சாட்சியளிக்கும்போது கமலி தன்னை முதன் முதலாகச் சந்தித்த சமயத்திலேயே தன்னிடம் அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்து விசாரித்ததையும் தனது எஸ்டேட்டில் அவள் விருந்தாளியாகத் தங்கியிருந்தபோது கவனித்ததையும் வைத்து நடையுடை பாவனை பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகளால் மட்டுமின்றி ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனேயே அவள் இந்து கலாசாரப் பற்றைக் கொண்டிருப்பவள் என அவளைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

     நாயுடுவைக் குறுக்கு விசாரணை செய்த எதிர்த் தரப்பு வக்கீல் "அஷ்டாட்சர மந்திரம் பற்றி அவள் உம்மிடம் விசாரித்ததிலிருந்தே அவளுக்கு அதைப் பற்றி அதற்கு முன்பு ஒன்றுமே தெரியாதென்று கொள்ளலாமல்லவா?" என்று குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினார்.

     "நான் அப்படிச் சொல்லவில்லையே? அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்துவிட்டு எனக்கு அதுபற்றி எந்த அளவு தெரிந்திருக்கிறதென்று அறிவதற்காக என்னை அவள் விசாரித்தாள் என்று தானே சொன்னேன்" - என்றார் நாயுடு. கோர்ட்டில் ஒரு பெரிய சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.

     கமலிக்குப் பரதநாட்டியம் கற்பித்த சிவராஜ நட்டுவனாரும், கர்நாடக சங்கீதம் கற்பித்த பாகவதரும் அவளுக்கு இந்துமதப் பற்றுண்டென்றும், தங்களிடம் அவள் மிகவும் குரு பக்தியோடு நடந்து கொண்டாளென்றும் அவளது பூஜை புனஸ்காரங்களைப் பார்த்து அவளைத் தாங்கள் சாதாரண இந்துக்களைவிடச் சிறந்த இந்துவாக மதித்திருப்பதாகவும் சாட்சியமளித்தார்கள். தத்தம் வீடுகளுக்கு நுழையும்போது வாசல் நடையிலேயே செருப்பைக் கழற்றி விட்டுக் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டபின் பூஜையறைக்கு சென்று வழிபட்ட பின்பே அவள் கற்றுக் கொள்ளத் தொடங்குவது வழக்கம் என்பதையும் அவர்கள் கோர்ட்டில் விவரமாகத் தெரிவித்தார்கள்.

     கடைசியாக இறைமுடிமணி சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட போது சத்தியப் பிரமாணத்தையே 'கடவுள் ஆணையாக' என்று செய்ய மறுத்து 'மனச் சாட்சிக்கு ஒப்ப' என்று தான் பண்ணினார் அவர். உடனே எதிர்த்தரப்பு வக்கீல் "கடவுள் நம்பிக்கையற்ற - மத நம்பிக்கையில்லாத அவரது சாட்சியம் இந்த வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது" - என்று வன்மையாக மறுத்தார்.

     "அவரது சாட்சியத்தைக் கூறட்டும். அதன்பின் அவசியமானால் நீங்கள் அவரைக் குறுக்கு விசாரணை செய்யலாம்" என்று நீதிபதி இடையிட்டுக் கூறவே இறைமுடிமணி சாட்சியத்தைத் தொடர்ந்தார்.

     "இந்து கலாசாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறி மார்தட்டிக் கொள்ளும் ஜாதி இந்துக்களை விட மெய்யான இந்துவாக இருப்பவள் கமலி. என்னைப் போல் ஜாதிமத நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் இல்லாதவர்கள் நடத்தும் பகுத்தறிவுப் படிப்பகத்தில் வந்து பேசும் போது கூட எங்கள் ஆட்சேபணையையும் பொருட்படுத்தாமல் தனக்குத்தானே கடவுள் வாழ்த்துப் பாடிவிட்டுத்தான் அவள் தன் பிரசங்கத்தைத் தொடங்கினாள்" - என்பதாகத் தன் சாட்சியத்தைக் கூறினார் இறைமுடிமணி.

     இதில் எதையும் குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் போயிற்றே என்று எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இறைமுடிமணியின் சாட்சியம் முடிந்தபின் வேணு மாமா தன் வாதத்தை முடித்துக் கூறும்போது மேலும் விவரித்துப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவற்றை அழகாகவும் கோவையாகவும் நிரல்படவும் எடுத்துரைத்து விவாதித்தார் அவர்.

     "இந்து ஆசார அனுஷ்டானங்களுடன் கோவிலின் புனிதத் தன்மைக்கோ சாந்நித்தியத்துக்கோ எந்தப் பாதிப்புமில்லாமல் ஆலயங்களில் தரிசனத்துக்காகச் சென்றிருக்கும் என் கட்சிக்காரரை வம்புக்காக அவதூறு செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு தான் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதே ஒழிய வழக்குத் தொடுத்திருப்பவர்களின் கோரிக்கையில் எந்த நியாயமுமில்லை. சட்ட விரோதம் என்ற பேச்சுக்கே இதில் இடம் கிடையாது. மறுபடி சம்ப்ரோட்சணம் பண்ணிய பின்புதான் சுத்தமாக வேண்டுமென்ற அளவுக்குக் கோவில்களில் இப்போது எந்த சுத்தக் குறைபாடும் நடந்து விடவில்லை என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.

     "தவிர நேற்றும் இன்றும் அதே கோவில்களில் முறைப்படி பூஜை புனஸ்காரம், பொது மக்களின் தரிசனம் எல்லாம் வழக்கம் போல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழக்குத் தொடுத்திருப்பவர்கள் தெரிவித்திருப்பது போல் என் கட்சிக்காரர் சென்று தரிசித்ததால் பாதிப்பு ஏற்பட்டுப் பொது மக்கள் உபயோகத்துக்குப் பயன்படாதபடி இதில் எந்தக் கோவிலும் இழுத்து மூடிப் பூட்டப்பட்டு விடவில்லை என்பதையும் கனம் கோர்ட்டார் கவனிக்க வேண்டும்."

     -இந்த இடத்தில் எதிர்த் தரப்பு வக்கீல் எழுந்திருந்து பலமாக ஆட்சேபிக்க முற்பட்டார், அதை நீதிபதி ஏற்காததால் வேணு மாமாவே தொடர்ந்தார்.

     "மேலும் எனது கட்சிக்காரரை இந்த ஆலயங்களும் இவற்றைச் சேர்ந்தவர்களும் இதன் தர்மகர்த்தாக்களும் பரம ஆஸ்திகராகவும், மரியாதைக்குரிய இந்துவாகவும் சந்தேகத்துக்கிடமில்லாதபடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ இந்த ரசீதே போதிய சாட்சியமாகும். சிவன் கோவிலின் புனருத்தாரணத் திருப்பணிக்கு இந்து ஆஸ்திகர்களிடம் கேட்டு வாங்கும் நன்கொடைக்காக அளிக்கப்படும் இரசீதுகளில் இதுவும் ஒன்று. இதில் இந்த ஆலய தர்மகர்த்தாவின் கையெழுத்துக்கூட இருக்கிறது. வேடிக்கையாகவும் முரண்பாடாகவுமுள்ள ஒரு விஷயம் என்னவென்றால் அதே தர்மகர்த்தா இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்களில் ஒருவராகவுமிருக்கிறார். என் கட்சிக்காரர் ஆலயத்திற்குள்ளேயே நுழையத் தகுதியற்றவர் என இவர்கள் கருதியிருப்பது மெய்யானால் அர்த்த மண்டபம் வரை உள்ளே வர அனுமதித்து ரூபாய் ஐநூறு நன்கொடையும் பெற்றுக்கொண்டு அவளிடம் இந்த ரசீதைக் கொடுத்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த ரசீதில் 'இந்து ஆஸ்திகர்களிடமிருந்து கோயில் திருப்பணிக்காக நன்கொடையாய்ப் பெற்ற தொகைக்கு இரசீது' என்று வேறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பணம் தேவைப்படுகிறபோது மட்டும் இந்து ஆஸ்திகராக ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒருவரைத் தரிசனத்துக்கு வரும்போது மட்டும் அந்நிய மதத்தினர் என்று தவறாகக் கருதி ஒதுக்குவது என்ன நியாயம்? எனது கட்சிக்காரர் தரிசனத்துக்குப் போயிருந்தபோது தான் இந்த நன்கொடையை ஆலயத் திருப்பணிக்கு அளித்திருக்கிறார் என்பதைக் கோர்ட்டாரவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நன்கொடையை வாங்கும்போதோ இதற்காக இரசீது கொடுக்கும்போதோ எனது கட்சிக்காரர் கோவிலுக்குள் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு 'சம்ப்ரோட்சணம்' செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆலய நிர்வாகிகளுக்குத் தோன்றாமல், பின்னால் சிறிது காலம் கழித்து அப்படித் தோன்றியிருப்பதன் உள்நோக்கம் என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை."

     இப்போதும் எதிர்த்தரப்பு வக்கீல் ஏதோ ஆட்சேபிப்பதற்காகக் குறுக்கிட்டார். ஆனால் நீதிபதி வேணு மாமாவின் பக்கம் பார்த்து 'லெட் ஹிம் கன்டின்யூ' என்று கூறவே எதிர்த்தரப்பு வக்கீல் அமர வேண்டியதாயிற்று.

     வேணு மாமா தம் வாதங்களைத் தொகுத்துரைத்து அந்தத் திருப்பணி ரசீதையும் நீதிபதியின் பார்வைக்கு வைத்துவிட்டு அமர்ந்தார். மறுநாள் வாதங்கள் தொடரும் என்ற அறிவிப்புடன் அன்று அவ்வளவில் கோர்ட் கலைந்தது.

     அந்த வழக்கு விசாரணையைக் கவனிப்பதற்காக பூமிநாதபுரம், சங்கரமங்கலம் கிராமங்களிலிருந்து நிறையப் பொதுமக்கள் கோர்ட்டில் வந்து குழுமியிருந்தனர்.

     கோர்ட் கலைந்து வெளியே வரும்போது பத்திரிகை நிருபர்கள் கமலியைப் புகைப்படமெடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு முந்தினர். வேணு மாமா அந்த வழக்கைக் கொண்டு சென்று எடுத்துரைத்த முறையைப் பல வக்கீல்கள் முன் வந்து பாராட்டினார்கள்.

     எல்லாரையும் போல் ஒரு பார்வையாளராக வந்து கோர்ட்டில் அமர்ந்திருந்த சீமாவையர் அங்கிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருந்தார்.

     "ஏய் விசுவேசுவரன்! பன்றதை எல்லாம் பண்ணிப் போட்டுத் தண்ணிப் பாம்பு ஒண்ணுந் தெரியாத மாதிரி மெல்ல நழுவுது பார்த்தியா?" என்று சர்மாவின் காதருகே நெருங்கி முணுமுணுத்தார் இறைமுடிமணி. சீமாவையரைக் குறிப்பிட்டுப் பேச அவர்கள் இருவரும் தங்களுக்குள் வைத்திருந்த பெயர் 'தண்ணிப் பாம்பு' என்பதாகும். கோர்ட்டிலிருந்து திரும்புகிற வழியில் மார்க்கெட் முகப்பில் வாழை இலை மண்டி அருகே காரை நிறுத்திக் கல்யாணத்திற்காக இலை காய்கறி எல்லாவற்றுக்கும் வேணு மாமா அட்வான்ஸ் கொடுத்தபோது "இப்ப என்ன இதுக்கு அவசரம்? கேஸ் முடியட்டுமே?" - என்று தயக்கத்தோடு இழுத்தார் சர்மா.

     "கேஸைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதியும்" - என்று வேணு மாமா சர்மாவுக்கு உற்சாகமாகப் பதில் கூறினார். அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் சர்மாவையும் மற்றவர்களையும் அப்போது மிகவும் வியப்பில் ஆழ்த்தின.