10 ரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடுவிடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலை மேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும் படி தூண்டியதே வேணு மாமாவும் வசந்தியும் தான். அன்றிரவு இந்த இளம் காதலர்களுக்குச் சுதந்திரமான மகிழ்ச்சியை அளிக்க விரும்பி அவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளிலிருந்தும் வைதிகமான வீட்டின் கெடுபிடிகளிலிருந்தும் அந்த ஓர் இரவிலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கட்டுமே என்று எண்ணித்தான் இதை அவர்கள் செய்திருந்தார்கள். மலை மேல் வேணு மாமாவுக்கே எஸ்டேட் இருந்தாலும் அந்த எஸ்டேட நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் இருந்தது. முப்பது முப்பத்தைந்து மைல் தொலைவில் ஒரு மணி அல்லது ஒன்றரைமணி நேரப் பயணத்தில் செல்கிறாற் போல மிக அருகிலேயே மலையில் இருந்தது நாயுடுவின் எஸ்டேட். அதையும் தவிர நாயுடுவின் எஸ்டேட்டுக்கு நடுவில் இருந்த பங்களாவும் விருந்தினர் விடுதியும் சகல வசதிகளும் உள்ளவையாகவும் பெரியதாகவும் இருந்தன. காரணம், நாயுடு எஸ்டேட்டுக்குள்ளேயே குடும்பத்தோடு வசித்து வந்தார். கீழே கிராமத்தில் வசித்து வந்த காரணத்தால் வேணு மாமா தமது எஸ்டேட்டில் போகிற போது வருகிற போது தங்கிக் கொள்ள ஒரு சிறிய விருந்தினர் விடுதி மட்டுமே கட்டியிருந்தார். அதனால் தான் நாயுடுவின் எஸ்டேட் பங்களாவுக்குக் கமலியும் ரவியும் மற்றவர்களும் அன்றிரவு தங்கச் சென்றிருந்தார்கள். ஒரு காரில் நாயுடு, வேணுமாமா, வசந்தி ஆகியோரும் மற்றொரு காரில் ரவி, கமலி ஆகியோருமாக அவர்கள் சங்கரமங்கலத்திலிருந்து புறப்பட்டிருந்தார்கள். காருக்குள் வீசிய குளிர்ந்த காற்றில் கமலி சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே கண்ணயர்ந்துவிட்டாள். பகலில் நன்றாகத் தூங்கியிருந்ததால் ரவிக்குத்தான் உறக்கம் வரவில்லை. தன் மேலே சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த கமலியின் மேனி நறுமணங்கள் அவன் உள்ளத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்திருந்தன. குடை மல்லிகைப் பூவின் வாசனைக்கும் இளம் பெண்ணின் கூந்தலில் அதை நுகர்வதற்கும் ஏதோ ஒரு கவித்துவம் நிறைந்த இனிய சம்பந்தம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில பூக்களின் வாசனைகள் என்பவை எழுதப்படாத கவிதைகளாயிருந்தன. வார்த்தைகளால் எழுதப்பட்டு விடுகிற கவிதைகளின் அர்த்த வியாபகம் ஓர் எல்லைக்குட்பட்டு விடுகிறது. எழுதப்படாத கவிதைகளின் வார்த்தை வியாபகமும், அர்த்த வியாபகமும் எல்லையற்றவையாக விரிகின்றன. சிறந்த பூக்களின் மனத்தை மயக்கும் சுகந்தங்கள் எல்லாம் எல்லையற்றவையாய் விளங்கின. வாசனைகளுக்கும் ஞாபகங்களுக்கும் மிக நுண்ணிய நெருக்கமான தொடர்பு இருந்தது போல் தோன்றியது. இப்போது இந்தப் பூக்களின் நறுமணம் ரவியை மிகப் பல ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டு சென்று நினைக்கச் செய்தது. சங்கரமங்கலத்தின் அதிகாலை மெல்லிருளில் இந்தப் பூக்கள் இதழ் விரிந்து மணம் பரப்பும் வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடியில் போய்க் குளிர்ந்த தண்ணீரில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு திண்ணைக்கு வந்து தந்தைக்கு எதிரே அமர்ந்து அமர கோசமும் சப்த மஞ்சரியும், ராமோதந்தமும் வாய் மொழியாகப் பாடம் கேட்டு மனனம் செய்த பிள்ளைப் பருவம் நினைவு வந்தது. அதிகாலை மூன்றரை மணியிலிருந்து ஐந்து மணி வரை இப்படித் தந்தையிடம் வாய்மொழியாகப் பாடம் கேட்டுப் பாடம் கேட்டு மனனம் செய்த படிப்பு அவனுடையது. விடிந்ததும் மற்றப் பிள்ளைகளோடு பள்ளி சென்று முறையான ஆங்கிலப் படிப்பும் தொடர்ந்து நடக்கும். அந்நாளில் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. அந்த வைகறை இருளில் அகல் விளக்கை ஏற்றுவதற்காகும் நேரத்தைக் கூட அவனை வீணாக்க விடமாட்டார் தந்தை. இருளில் அமர்ந்திருந்து கணீரென்ற குரலில் அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்லிக் கற்ற கல்வி அது. 'ராமஹ ராமௌ ராமா; ராமம் ராமௌ ராமான் ராமேண ராமாப்யாம்' - என்று ராம சப்தம் நினைவு வந்தால் கூடவே காலைக் குளிரையும், கிணற்றடியையும் குடை மல்லிகைப் பூ வாசனையையும் நினைவு கூர்வது அவனுக்கு ஒரு பழக்கமாக ஆகி விட்டது. அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்வது ஒரு கணம் தடைப்பட்டாலும் தந்தை அவன் தூங்கிவிட்டானோ என்று காதைப் பிடித்துத் திருகுவார். அந்த இரு குரல்களும் அக்ரகாரத்துத் திண்ணையில் ஒலிக்கத் தொடங்கிய பின்பே சங்கரமங்கலத்தில் பொழுது புலரும். நிகண்டு சப்தம் எல்லாம் முடிந்த பின் ரகுவம்சம் முதல் காவியங்களெல்லாம் இப்படியே தொடர்ந்து கற்ற நாட்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. பணிந்து அடங்கிப் பயந்து கற்று வளர்ந்த சங்கரமங்கலத்துப் பிள்ளைப் பருவம், ஓரளவு விடுபட்ட கல்லூரிப் பருவம், முழுச் சுதந்திரமும் உல்லாசமும் நிறைந்த கட்டுப்பாடில்லாத பாரிஸ் நகர வாழ்வு, கமலியின் காதல் எல்லாமே மிக விரைவாக நிகழ்ந்து நிலைத்து விட்டவைபோல் இப்போது மலைச்சாலையில் வேகமாகப் பயணம் செய்யும் இந்த முன்னிரவில் அவன் மனத்துள் தோன்றின. மலைமேல் ஏறும் போதும் சீறிப் பொங்கி எழுந்து வரும் கடலலைகளை எதிர் கொள்ளும் போதும் எவ்வளவு வயதாகியிருந்தாலும் மனிதன் சிறு குழந்தையாகி விடுவதை ரவி உணர்ந்திருக்கிறான். இந்த இரண்டு இடங்களிலும் திடீரென்று மனிதனுக்கு வயது குறைந்து விடுகிறது. மூப்பு விலகி ஓடி விடுகிறது. தளர்ச்சி, தயக்கம் எல்லாம் பறந்து போய் உடனே உற்சாகம் வந்து விடுகிறது. மலையாயிருந்தாலும் உயரப் பறக்கும் விமானமாயிருந்தாலும் மேலே ஏறும் மாடிப் படியாயிருந்தாலும் - மேலே ஏறிச் செல்கிறோம் என்ற உணர்வே ஓர் உற்சாகம் தான். கார் தரை மட்டத்திலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வந்ததும் காற்றுக் காதை அடைத்தது. குளிர் அதிகமாகவே கார்க் கண்ணாடிகளை உயர்த்தி விட்டான் ரவி. கமலி இவன் மேல் துவளும் ஒரு மெல்லிய இதமான பூமாலையைப் போல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். நிர்த்தாட்சண்யமான கண்டிப்புடன் தந்தை எழுப்பி விட எழுந்திருந்து அந்த அதிகாலைக்கே உரிய சுகமான தூக்கத்தின் கிறக்கத்தோடு நடந்து போய்ப் பூக்களின் மதுரமான வாசனை நிறைந்த தோட்டக் கிணற்றடியில் சில்லென்ற பச்சைத் தண்ணீரின் குளிர்ச்சியில் தள்ளாடும் தூக்கத்தைக் கரைத்துவிட்டுத் தந்தைக்கு முன் பாடம் கேட்க அமர்ந்த வேளைகளில் இந்த அந்நிய நாடு உத்தியோகம், இப்படி ஓர் அழகிய காதல் எதையுமே அன்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் நடந்தவையெல்லாம் - உண்மை என்பதற்கு அடையாளம் போல் கமலி அவன் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். வாசனைகளின் உருவகமாய் உறங்கும் இனிமையின் நிசப்த சங்கீதமாய் நிகழ்ந்தவற்றின் நிலையான சாட்சியாய், இதமான தன்மையும் வெப்பமும் இணைந்த அந்த நளினம் அவன் தோளில் கொடியாய்ப் படந்திருந்தது. இரவு நேரமாக இருந்ததாலும், மலைச் சாலையில் நிறைய 'ஹேர்ப்பின்' வளைவுகள் இருந்ததாலும் பதினொன்றரை மணிக்குத்தான் அவர்கள் மலைமேல் எஸ்டேட் பங்களாவை அடைய முடிந்தது. தரைமட்டத்திலிருந்து உயரம் அதிகமாயிருந்ததால் எஸ்டேட் பகுதியில் குளிர் மிகுதியாயிருந்தது. வேணு மாமாவும் வசந்தியும் நாயுடுவின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்கள். அந்தப் பங்களாவைவிட இன்னும் சிறிது உயரமாக மேட்டுப் பாங்கான இடத்தில் தனியே ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்' இருந்தது. அதன் உச்சிப் பகுதியில் போர்ட்டிகோ வரை போவதற்கும் சுற்றி வளைத்துத் தார் ரோடு போடப்பட்டிருந்தது. ஏதோ தேன் நிலவுக்கு வந்தவர்களைத் தனியே கொண்டு போய் விடுவது போல் கமலியையும் ரவியையும் அங்கே கொண்டு போய் விட்டார் நாயுடு. குளிருக்கு இதமாகப் படுக்கை அறையில் 'ஹீட்டர்' இருந்தது. குளியலறை விளக்குகளுக்கான ஸ்விட்சுகள் இருக்குமிடம் எல்லாவற்றையும் நாயுடுவே, ரவிக்கு அடையாளம் காண்பித்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் பிளாஸ்கில் பாலும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான் ஓர் ஆள். கமலிக்குத் தூக்கம் விழித்திருந்ததால் அவள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். ரவி அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டு மெல்ல அவளைக் கேட்டான். "கமலி! மத்தியானம் நீ ரெஸ்ட் எடுத்துக்கலை போலிருக்கே...என்ன பண்ணினே? எப்படிப் பொழுது போச்சு? மாடியிலேயும் உன்னைக் காணலியே?.... கீழே போய் அம்மாட்டப் பேசிட்டிருந்தியா?" வசந்தியும் தானுமாகப் போய்க் காமாட்சியம்மாளிடம் அம்மானையாடச் சொல்லி இரசித்ததையும் 'ரெக்கார்ட்' செய்ததையும் ரவியிடம் விவரித்தாள் கமலி. "அம்மா உங்கிட்ட எப்படிப் பழகினா? கோபமில்லாமே சுமுகாமா இருந்தாளா?" "சுமுகமாய் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதே சமயத்திலே கோபமாக இருந்ததாகவும் சொல்றத்துக்கில்லே...." "நீ கொஞ்சம் பொறுமையாயிருந்துதான் அவ மனசை ஜெயிக்கணும். என் அம்மாவின் வயசை ஒத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியத் தாய்மார்களுக்கு நெஞ்சழுத்தம் அதிகம். சுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்." "நம் உறவின் நெருக்கத்தைப் பற்றிய சந்தேகமும் பயமும் இன்னும் உங்கள் அம்மாவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது! நான் கையில்லாத ரவிக்கை அணிந்தது உங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்று வசந்தி வந்து சொன்னாள். நான் உடனே கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொண்டு தான் அம்மாவுக்கு முன்னால் போனேன்." "நீ எதை அணிந்து கொள்ளக் கூடாது எதை அணிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அம்மா கோபித்துக் கவலைப்படுகிறாள் என்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான் கமலி! ஒரு பெண் எப்படி உடுக்க வேண்டும், எங்கே நிற்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் காதலனுடைய தாய் கவனிக்கவும் கண்காணிக்கவும், கவலைப் படவும் கோபித்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டாலே அவள் அந்தப் பெண்ணின் மாமியாராகத் தன்னைக் கருதிக் கொள்ளத் தொடங்கிவிட்டாள் என்று தான் அர்த்தம்." இதைக் கேட்ட கமலி சிரித்தாள். ரவியும் அவளோடு சேர்ந்து வாய்விட்டுச் சிரித்து விட்டான். காமாட்சியம்மாளின் இனிய குரல் பாடும் திறமை, அம்மானையாடும் அழகு எல்லாவற்றையும் வியந்து கூறிவிட்டு, "உங்கள் நாட்டுப் பெண்கள் நுண்கலைக் களஞ்சியங்களாக இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருக்கிறது" என்றாள் கமலி. "ஒரு பெண் தன்னை விட மூத்த இன்னொரு பெண் மேல் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டாளென்றால் இந்தியாவில் அவளுக்கு ஒரு மாமியாரின் மருமகளாவும் தகுதி வந்துவிட்டதென்று அர்த்தம்." அப்போது அவனுடைய பேச்சிலிருந்து ரவி மிகவும் உற்சாகமாக இருக்கிறான் என்று தெரிந்தது. கமலி வேணு மாமா வீட்டு விருந்தில் சந்தித்த சிலர் தன்னிடம் அதிகம் கூச்சப்பட்டு நாணியதையும் வேறு சிலர் சம்பந்தமில்லாதவற்றைப் பேசியதையும், விசாரித்ததையும் பற்றி ரவியிடம் இப்போது குறிப்பிட்டாள். "ஒரு பெண்ணிடம் பலர் முன்னிலையில் அளவுக்கதிகமாக வளைந்து நெளிந்து, கூனிக் குறுகிப் பாவனை செய்யும் ஆண்களிடம் அவர்களைத் தனியே சந்திக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கமலி. தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவையுள்ள போது தேவையான அளவு கூட நாணப்படாத பெண்ணும் சந்தேகத்துக்கிடமானவர்கள். விருந்தில் நீ சந்தித்த பலர் ஸ்பிளிட் பெர்சனாலிட்டிகள். உன்னைப் போல பல ஐரோப்பியர்கள் 'கிருஷ்ணா கான்ஷியஸ்னெஸ்', 'யோகா' 'ஸேக்ரெட் புக்ஸ் ஆஃப் ஈஸ்ட்' என்று கிழக்கே பார்த்து ஏங்குகிறீர்கள்! இங்கே இந்தத் தேசத்தில் சிலர் தாழ்வு மனப்பான்மையோடு எல்லாமே மேற்கில் தான் இருக்கிறது என்று மேற்கே பார்த்து ஏங்குகிறார்கள். அதனால் தான் நீங்களும் இவர்களும் சந்திக்கும்போது எதிரெதிர்த் திசையில் ஆர்வங்கள் செல்லுகின்றன. நீ நாயுடுவிடம் விசிஷ்டாத்வைதத்தைப்பற்றி விசாரிக்கிறாய். நாயுடு உன்னிடம் 'விடோ'வைப் பற்றியும், 'மௌலின் ரோஜ்' போல் பாரிஸில் 'ஃப்ளோர் ஷோ நடக்குமிடங்களைப் பற்றியும் விசாரிக்கிறார். "நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நாயுடுவும் அவரைப் போன்றவர்களுமே முழு இந்தியா ஆகிவிட மாட்டார்களே? இதே இந்தியாவில் தானே வேதங்களையும் காவியங்களையும் ஆகமங்களையும் சாஸ்திரங்களையும் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தேவையில்லாமல் மனத்திலேயே பொதிந்து வைத்திருக்கும் உங்கள் தந்தையும், நுண்கலைகளின் இருப்பிடமாக விளங்கும் உங்கள் தாயும் போன்றவர்கள் இருக்கிறார்கள்?" "என் பெற்றோர்களை நீ அதிகமாகப் புகழ்கிறாய் கமலி!" "அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் தான்! அவர்களிடம் இல்லாததை நான் எதுவும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை." சங்கரமங்கலமோ தன் பெற்றோர்களோ கமலியை ஒரு சிறிதும் சலிப்படையச் செய்துவிடவில்லை என்பதை அறிந்து ரவிக்குப் பெருமையாயிருந்தது. பிரெஞ்சுப் பெண்களுக்கே உரிய கவர்ச்சி, ஒழுங்கு, நேர்த்தி, கபடமில்லாமை, தெளிவு, சரசம் - இவையெல்லாவற்றிலும் ஒரு ஸ்மார்ட்னெஸ் இவற்றால்தான் கமலி அவனைக் கவர்ந்திருக்கிறாள். இப்போது தன் பேச்சின் மூலமும் தன்னைப்பற்றிய அவனது கணிப்பை அவள் உறுதிப் படுத்தினாள். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே அன்றிரவு அவர்கள் உறங்கப் போனார்கள். அது மலைப்பகுதியாக இருந்ததனால் காலை ஒன்பது மணிக்கு முன் யாருமே அங்கு எழுந்திருக்கவில்லை. விடிந்திருந்தும் எழுந்திருக்க முடியாதபடி மஞ்சு மூட்டமும் குளிரும் அதிகமாயிருந்தன. காலை பத்து மணிக்குத்தான் ரவியும் கமலியும் எழுந்திருந்தார்கள். பல் விளக்கி, முகம் கழுவிய பின் காப்பி அருந்தியதுமே கீழே ஊர் திரும்பத் தயாரானார்கள் அவர்கள். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் நாயுடு வந்து குறுக்கே நின்றார். "நல்லாயிருக்குதே! மலைக்கு வந்து உடனேயே திரும்புவாங்க? பக்கத்திலே ஓர் அருவி இருக்குது. சுகமாய்ப் போய்க் குளிக்கலாம் அதுக்கப்புறம் பத்து மைலிலே 'எலிஃபெண்ட் வேலி'ன்னு ஒரு பள்ளத்தாக்கு இருக்குது! யானைங்க கூட்டம் கூட்டமா வரும். தூர நின்னு பைனாகுலர்ல பார்க்கலாம். எல்லாம் பார்த்துப் போட்டு மதியத்துக்கு மேலே கீழே திரும்புங்க போதும்!" என்றார் நாயுடு. வேணுமாமாவும் வசந்தியும் கூட அப்படியே செய்யலாம் என்றார்கள். அருவி நீராடுவதில், ஏலக்காய், தேயிலை, காபி எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்ப்பதில், யானைக் கூட்டத்தைக் காண்பதில் கமலியும் அதிகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிந்தது. மலையில் பகல் பதினொரு மணிக்கு மேல்தான் வெய்யில் தெரிந்தது. வெயில் கொஞ்சம் உச்சிக்கு வந்து உறைக்கத் தொடங்கிய பின்பே அவர்கள் அருவியில் நீராடச் சென்றார்கள். அவர்கள் போகிற வழியில் ஜீப்பை நிறுத்தி ஏலக்காய், தேயிலை, காப்பிச் செடிகளைக் காண்பித்துக் கமலிக்கு எல்லா விவரமும் சொல்லி விளக்கினார் நாயுடு. அருவியில் பால் வெள்ளமாகத் தெளிந்த தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு வேகமாக மேலே இருந்து கொட்டும் நீரில் நின்று குளித்தால் தலை வலிக்காதா என்று வசந்தியிடம் கேட்டாள் கமலி. வலிக்காமல் இருப்பதற்காகத் தலையில் நிறையத் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாள் வசந்தி. நிறையத் தேங்காய் எண்ணெயை வழியவிட்டுக் கொண்டு நின்ற வசந்தியைப் பார்த்து "இந்த எண்ணெய் முழுவதும் எப்படி நீங்கும்? குளித்து விட்டுத் திரும்பும் போது முகத்திலெல்லாம் வழியாதா?' என்று சந்தேகப்பட்டுக் கேட்டாள் கமலி. "கவலைப்படாதே! தலை ஷாம்பூ போட்டுக் குளித்த மாதிரி ஆகிவிடும். வா சொல்கிறேன். நீயும் என்ணெய் தேய்த்துக் கொள்" என்று அவள் தலையில் எண்ணெயை வழிய விட்டாள் வசந்தி. கமலி அதைத் தடுக்கவில்லை. "இந்த எண்ணெய் இல்லாமே வெறும் உடம்போட அருவி நீரில் போய் நின்னியோ கழுத்தும், பிடரியும் காதுகளும் அந்த வேகத்திலே ரத்தம் கன்றிச் சிவந்து போயிடும்" என்று எச்சரித்தாள் வசந்தி. முதலில் வேணு மாமா, ரவி, நாயுடு ஆகியோர் அருவி நீராடலை முடித்துக் கரையேறினார்கள். கமலியும் வசந்தியும் விளையாட்டுக் குழந்தைகள் போல அருவி நீரைவிட்டு வெளியேற மனமில்லாமல் நீரில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். நேரமாகவே, ரவியும் வேணு மாமாவும் குரல் கொடுத்தார்கள். பின்பே அவர்கள் கரையேறினார்கள். வசந்தி சொன்னது போல் இப்போது எண்ணெய் முழுவதும் நீங்கித் தன் தலைமயிர் பட்டுப் போல் மென்மையாகவும் மழமழப்புள்ளதாகவும் ஆகியிருப்பதைக் கமலி தொட்டுப் பார்த்து உணர்ந்து வியந்தாள். குளித்துக் கரையேறிய நாயுடுவின் தலையில் எண்ணெயே உபயோகித்த மாதிரித் தெரியவில்லை. அவருடைய வழுக்கைத் தலை தேய்த்த செப்புப் பாத்திரம் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. வேணுமாமா நாயுடுவைக் கேலி பண்ணினார். "என்ன நாயுடுகாரு - தலையிலே ஒண்ணுமே இல்லையே? எல்லாம் சுத்தமாப் போயிடுத்துப் போலிருக்கே!" "வாக்கியம் சரியா அமையலியே மாமா? வேற ஏதோ அர்த்தப்படறாப்பலே இருக்கே? கேட்கிற கேள்வியை எதுக்கும் தெளிவாக் கேட்டுடுங்கோ" என்றான் ரவி. "கோட்டாப் பண்ணாதீங்க. மயிர் உதிர உதிர அத்தனையும் அநுபவ முதிர்ச்சியாக்கும். உங்களுக்கும் நடுவாக வழுக்கை விழத் தொடங்கிடிச்சு. சீக்கிரம் நம்ம கட்சிக்கு வந்திடுவீங்க! ஜாக்கிரதை" என்று பதிலுக்கு வேணுமாமாவைக் கிண்டல் செய்தார் நாயுடு. "நாயுடுகாரு! நல்ல வேளையா நம்ம தேசத்திலே இன்னம் இது ஒண்ணுக்குத்தான் தனியா ஒரு கட்சி இல்லே. போற போக்கைப் பார்த்தால் இதுக்கும் கூட யாராவது ஒரு கட்சி தொடங்கிடுவீங்க போலிருக்கே!" "தொடங்கினா என்ன தப்புன்னேன்?" "தப்பு ஒண்ணுமில்லே எவ்வளவு மொத்தம் பாபுலேஷனா அவ்வளவு பேரும் ஆளுக்கொரு கட்சி தொடங்கிட்டா அப்புறம் ஓட்டுப் போடறதுக்குன்னு தனியா யார் தான் மீதமிருப்பாங்க? ஓரொரு கட்சிக்கும் ஓரொரு வோட்டுத்தான் விழும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு சொல்றாப்ல எல்லோரும் இந்நாட்டுத் தலைவர்னு ஆயிடும். மக்கள்னு தனியா யாரும் மீதமேயிருக்க மாட்டாங்க." அருவி நீரில் குளித்த குஷியில் வேணுமாமாவும் நாயுடுவும் வாலிபர்களாகியிருந்தார்கள். அதனால் பெண்கள் உடை மாற்றிக் கொண்டு வரும்வரை நாயுடுவின் அரசியல் விமர்சனம் தொடர்ந்தது. "பார்க்கப் போனா நம்ம நாட்டு அரசியலும் 'ப்ளாண்டேஷனும்' ஒரே மாதிரி தான் இருக்குதுங்க. பயிரிடறது, அறுவடை செய்யிறது, களையெடுக்கிறது எல்லாம் இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். 'ப்ளாண்டேஷன்' பாஷையிலேதான் அடிக்கடி அரசியலைப் பத்தியே பேசிக்கிறாங்க. யாராவது இளைஞர்கள் முன்னுக்கு வந்தா 'மொளச்சு மூணெலைப் போடறதுக்குள்ளே தலைவனாயிட்டான்' கிறாங்க. 'எலெஷன்ல' செலவழிச்சான். இப்ப 'அறுவடை' பண்ணிட்டான்கிறாங்க. புல்லுருவிகளைக் கட்சியிலேருந்து 'களையெடுத்துட்டோம்'கிறாங்க." "ஏதேது? இதைப் பற்றி ஒரு பெரிய தீஸிஸ் எழுதற அளவு விஷயங்கள் சேகரிச்சு வச்சிருப்பீங்க போலிருக்கே?" என்று சொல்லிச் சிரித்தான் ரவி. "அது மட்டுமில்லீங்க, விவசாயத்திலே எப்படி நெல்லைப் போட்டா மறுபடி நெல்லு முளைக்குதோ அது மாதிரி ஒரு குடும்பத்திலே ஒருத்தர் அரசியல்வாதியா வந்து பதவியோட சுகம் கண்டுட்டா, நம்ம தேசத்திலே அப்புறமா அந்தப் பரம்பரையிலே யாரும் அரசியலையோ பதவிங்களையோ விடறதே இல்லீங்களே?" "எலிஃபண்ட் வேலிக்குப் போகலாம்னீங்களே? நேரமாகலியா நாயுடுகாரு? வேணுமாமா நாயுடுவின் கவனத்தைத் திசை திருப்பினார். கமலியும் வசந்தியும் உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக வந்திருந்தார்கள். மறுபடி ஜீப்பில் புறப்பட்டார்கள் அவர்கள். "உங்க வீட்டிலேருந்து யாரையும் அருவியில் குளிக்கக் கூட்டிண்டு வரலியே நாயுடுகாரு?" என்று ஜீப்பில் போகும்போது நாயுடுவைக் கேட்டார் வேணுமாமா. "யாரு இருக்காங்க கூட்டியாறத்துக்கு? குழந்தைங்கள்ளாம் ஸ்கூல், காலேஜ்னு 'ப்ளெய்ன்'ஸிலே படிச்சுக்கிட்டிருக்குதுங்க. என் மனைவி சீக்காளி. வெந்நீர்ல தான் குளிக்கும். அருவி கிருவி எல்லாம் அதுக்கு ஒத்துக்கிடாது." பத்து பன்னிரண்டு மைல் போனதும் ஒரு வளைவில் திரும்பி நின்றது ஜீப். நூறு நூற்றைப்பதடி கீழே பசும்புல் அடர்ந்த பெரிய பள்ளத்தாக்கும் நீர் நிறைந்த ஓர் ஏரியும் தெரிந்தன. ஏரிக்கரையில் புல் வெளியில் கருங்குன்றுகள் போல் உருவங்கள் அசைவது தெரிந்தது. "அதோ பாருங்க... யானைக் கூட்டம்" என்று பைனாகுலரை உறையிலிருந்து எடுத்துக் கமலியிடம் நீட்டினார் நாயுடு. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|