31 பொழுது விடிந்தால் முகூர்த்தம். கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று. இரண்டரை மணிக்குச் சமையற்காரர்கள் கூடத் துண்டை விரித்து அடுப்படியிலேயே தலை சாய்த்து விட்டார்கள். சிறிதும் கலங்காமல் வேணுமாமா சாரங்கபாணி நாயுடுவைக் கூப்பிட்டு, "நீர் என்ன பண்ணுவீரோ தெரியாது நாயுடு! எவனோ கொலைகாரப் பாவி - கிராதகன் இங்கே இந்த அக்கிரமம் பண்ணியிருக்கான். காலம்பர ஆறுமணிக்குள்ளே மறுபடியும் பந்தலை நீர் போட்டாகணும். லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லே. காரியம் நடக்கட்டும்" - என்று உணர்ச்சி மயமாகி உரிமையோடு நாயுடுவுக்கு உத்தரவு போட்டார். "ஆகட்டுங்க...! நானாச்சு" - என்றார் நாயுடு. காலை ஐந்தரை மணிக்குத் தீப்பிடித்த சுவடே தெரியாதபடி, ஜிலுஜிலுவென்று பழைய அலங்காரத்தோடு மறுபடியும் புதுப்பொலிவுடன் விளங்கிற்று அந்த மணப்பந்தல். ***** கமலியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கொண்டு போய்ப் போட்டுக் காண்பிப்பதற்காக மூவி காமிராவில் மாப்பிள்ளை அழைப்பு முதல் அந்தக் கலியாண நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றுவிடாமல் கலர் பிலிமில் படமாக்கப்பட்டது. அதிகாலையிலிருந்து வைதீகச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. வசந்தி கடைசி முயற்சியாக ஒரு முறை போய்க் காமாட்சியம்மாளை அழைத்துப் பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்று முயன்று பார்த்தாள். ஆனால், காமாட்சியம்மாள் எழுந்து நடமாடக் கூட முடியாத நிலைக்குத் தளர்ந்திருந்தாலும், "மாமீ! மனசிலே ஒண்ணும் வச்சிக்காமே வந்து சந்தோஷமாக் கல்யாணத்தை நடத்திக் குடுங்கோ. இது உங்காத்துக் கல்யாணம்" என்று வசந்தி வேண்டியபோது அதற்கு உற்சாகமாகவோ எதிராகவோ இசைவாகவோ பதில் சொல்லாததாலும் வசந்தியே மேற்கொண்டு அதை வற்புறுத்தவில்லை. "எல்லாம் ரொம்ப லட்சணமாகத்தான் இருக்குடி உங்க காரியம்! பிள்ளைக்கு அம்மா இங்கே இப்பிடிக் கிழிச்ச நாராக் கெடக்கறா, நீங்க பாட்டுக்கு அங்கே ஜாம் ஜாம்னு மேளதாளத்தோட கல்யாணத்தை நடத்திண்டிருக்கேளே!" என்று முத்து மீனாட்சிப் பாட்டியும் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மாவும் வசந்தியிடம் குறைப்பட்டு அலுத்துக் கொண்டார்கள். ஆனால் காமாட்சியம்மாள் உற்சாகமாக இல்லையென்றாலும் அப்போது வசந்தியைச் சினந்தோ கடிந்தோ எதுவும் பதில் சொல்லவில்லை. அதே சமயம் காமாட்சியம்மாளின் அந்த பதிலில் எந்த இசைவும் கூடத் தெரியவில்லை. "நான் தான் இப்படிக் கெடக்கிறேனே? எங்கே வரது? எதுக்குப் போறது?" - என்று கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல வார்த்தைகள் தளர்ந்து நலிந்து வெளி வந்தன அவளிடமிருந்து. "தொடங்கறச்சேயே அச்சான்யம் மாதிரி அபசகுனமாக் கல்யாணப் பந்தல்லே நேத்து ராத்திரி தீப்பிடிச்சுடுத்தாமேடீ?" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தாள். வசந்தி அதற்குப் பதில் சொல்லவில்லை. மனிதர்களின் சூழ்ச்சியால் நடைபெறும் காரியங்களுக்கு எல்லாம் அச்சான்யம், அபசகுனம் என்று பெயர் சூட்டிவிடும் பழங்கால மனப்பான்மையை எண்ணி வியந்தாள் வசந்தி. முன்பு சர்மா வீட்டு வைக்கோற் படைப்பில் தீப்பற்றிய போதும் இதே போலத்தான் கமலியின் தலையில் அந்தப்பழி போடப்பட்டது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. காமாட்சியம்மாள் கல்யாணத்துக்கு வருகிற நிலையில் இல்லை என்று தெரிந்ததுமே அவள் அங்கே அதிக நேரம் தங்கவில்லை. ஊர் முறைப்படி மீண்டும் காலையில் வீடுவீடாக நேரில் சென்று அழைக்க வேண்டியவர்களை அழைத்துவிட்டுத் திரும்பினாள். கமலி-ரவி மேலிருந்த சீற்றம் இயற்கையாகவே காமாட்சியம்மாளிடம் இப்போது தணிந்திருக்கிறதா அல்லது உடல் நிலையின் தளர்ச்சி காரணமாகக் குறைந்திருக்கிறதா என்பதை வசந்தியால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. எனினும் கல்யாணத்துக்கு அழைக்கப்போன தன்னிடம் சீறி விழுந்து வசைமாரி பொழியக்கூடும் என்று தான் எதிர்பார்த்ததற்கு மாறாகக் காமாட்சியம்மாள் நிதானமாகவே நடந்து கொண்டது வசந்திக்கு ஆச்சரியத்தை அளித்திருந்தது. திருமணத்தில் எந்தச் சடங்கும் எந்த மந்திரமும் விட்டுப் போகக் கூடாது என்பதில் கமலி அக்கறை காட்டினாள். சர்மாவும், வேணுமாமாவும் கூட அதைப் புரோகிதரிடம் வற்புறுத்தியிருந்தார்கள். "சீக்கிரமா முடியுங்கோ. நாழியாறது" - என்று உள்ளூர் வைதீகக் குடும்பங்களிலேயே சடங்குகளையும் மந்திரங்களையும் தட்டிக் கழித்துவிட்டு விரைவாக முடித்துக் கொண்டு போக விரும்பும் இந்தக் காலத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இதில் இத்தனை அக்கறை காட்டுவது புரோகிதருக்கு வியப்பை அளித்தது. முரண்டும், பொறாமையும் நிறைந்த உள்ளூர் மனிதர்கள் சிலர் தான் வரவில்லையே ஒழியக் கலியாணம் ஜேஜே என்றிருந்தது. கூட்டத்துக்கோ, ஆர்வத்துக்கும் கலகலப்புக்குமோ குறைவில்லை. இறைமுடிமணி மேல் சீமாவையர் போட்டிருந்த பொய் வழக்கு கோர்ட்டில் முடிவாகாமல் இன்னும் இழுபட்டுக் கொண்டிருந்ததனால் - அவர் திருமணத்துக்கு வர முடிந்திருந்தது. நிறையத் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும், பிரமுகர்களும்கூட வந்திருந்தார்கள். "உம்மை சாட்சாத் ஆஞ்சநேயர்னுதான் சொல்லணும் நாயுடு! அநுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த மாதிரி ராத்திரியோட ராத்திரியா எல்லாச் சாமானையும் கொண்டு வந்து எப்படியோ கல்யாணப் பந்தலைப் பழையபடி போட்டு முடிச்சுட்டீர்..." என்று நாயுடுவைப் பாராட்டினார் வேணுமாமா. பெண்மணிகளின் கூட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் வைதீகக் குடும்பத்துப் பெண்களும் உறவுக்காரர்களின் வீட்டுப் பெண்களும் அதிகம் தென்படவில்லை என்றாலும், சற்றே நாகரிகமடைந்த குடும்பத்துப் பெண்களும், உத்தியோக நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவர்களும் வேணு மாமா, சர்மா ஆகியோரின் உறவு வகையினருமான பெண்களும் வித்தியாசம் பாராட்டாமல் அந்த திருமணத்துக்கு இயல்பாக வந்திருந்தார்கள். பாணிக்ரஹணம், ஸப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் முதலிய திருமணச் சடங்குகளைப் பற்றி ஏற்கெனவே புத்தகங்களில் படித்தும், ரவியிடம் கேட்டும் அறிந்திருந்த கமலி இப்போது ஒவ்வொன்றையும் தன் சொந்த அனுபவமாகவே இரசித்து மகிழ்ந்தாள். அவற்றை அப்போது அவள் அந்தரங்கமாக விரும்பினாள் என்றே சொல்லலாம். "ஏழு அடிகள் என்னோட உடன் நடந்து வந்து விட்ட நீ இனி என் தோழியாகிறாய். நாம் இருவரும் உயிர் நண்பர்களாகி விட்டோம்! உன்னோடு இன்று நான் அடையும் சிநேகிதத்திலிருந்து இனி என்றும் பிரிக்கப்பட்டவனாக மாட்டேன். என்னுடைய சிநேகிதத்திலிருந்து நீயும் பிரிக்கப் பட்டவளாக மாட்டாய். நாம் இருவரும் ஒன்றுபட்டவர்களாவோம். நாம் இனிமேல் செய்யவேண்டிய அனைத்திற்கும் இன்னின்னவற்றை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று ஒன்றாகச் சங்கல்பம் பண்ணிக்கொண்டு நாம் செயற்படுவோம். ஒத்த மனத்தோடு பிரியமுள்ளவர்களாகவும் ஒருவர்க்கொருவர் பிரகாசிப்பவர்களாகவும், நல்லெண்ணம் உடையவர்களாகவும், உணவையும், பலத்தையும் சேர்ந்தே அநுபவிக்கிறவர்களாகவும் வாழ்வோம். எண்ணங்களால் நாம் ஒத்த கருத்துடையவர்களாவோம். விரதங்களையும் நோன்புகளையும், சேர்ந்தே அனுஷ்டிப்போம். நம்முடைய விருப்பங்கள் ஒத்தவையாக இருக்கட்டும். நீ 'ரிக்' வேதம் ஆகவும் நான் 'ஸாம' வேதம் ஆகவும் இருப்போம். நான் விண்ணுலகமாக இருக்கிறேன். நீ பூமியாக இருக்கிறாய். நான் வித்துக்களாகவும் நீ விதைக்கப்படும் நிலமாகவும் இருக்கிறோம்! நான் சிந்தனை! நீ சொல்! என்னுடையவளாக என்னை அனுசரித்தவளாக நீ ஆவாய்! பிள்ளை பேற்றுக்காக, வற்றாத செல்வத்துக்காக இன்சொல்லுக்கு உரியவளே, நீ என்னுடன் வருக." திருமண நாளன்றும், அடுத்த சில நாட்களிலும் குமார், பார்வதி, இருவரும்கூடக் கலியாண வீட்டிலேயே செலவழித்துவிட்டதால், காமாட்சியம்மாள் பெரியம்மாவுடனும், முத்துமீனாட்சிப் பாட்டியுடனும் வீட்டில் தனித்து விடப்பட்டாள். அந்த வீடும் கல்யாணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டுவதைப் போல வாசலில் குலை தள்ளிய வாழைமரங்களும், மாவிலைத் தோரணமும் கட்டப்பட்டிருந்தன. சுவரில் வெள்ளைச் சுண்ணாம்புப் பட்டைகளும், புதிய செம்மண் பட்டைகளும் அடிக்கப்பட்டிருந்தன. வாசலில் செம்மண் கோலம் பெரிதாகப் போடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் உள்ளே மட்டும் நிசப்தம் நிலவியது. சில சமயங்களில் காமாட்சியம்மாளின் இருமல், முனகல் ஒலிகள் மட்டும் கேட்டன. பாட்டியின் பேச்சுக்குரல் இடையிடையே கேட்டது. மற்றபடி வீட்டை ஒரு முறைக்காக மங்கல அடையாளங்களோடு அலங்கரித்துவிட்டு வெளியூரில் நடைபெறும் கலியாணத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தவர்களின் இல்லத்தைப் போலவே அரவமற்றிருந்தது அந்த வீடு. "நலங்கு பஞ்சத் தேங்காய் எல்லாம் ஒரே தடபுடல் படறதாண்டீ காமு! இந்த அக்கம் பக்கத்து ஊர்களிலேயே நலங்கு பாடறதுலே கெட்டிக்காரின்னு பேரெடுத்தவள் நீ! ஆனா உங்காத்துப் பிள்ளை கல்யாணம் நீ போகாமலேயே நடக்கறது" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி காமாட்சியம்மாளிடம் ஆரம்பித்தாள். காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதில் எதுவுமே சொல்லவில்லை. ஆயிரம் அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் வீட்டுத் தகராறுகள் பாட்டி மூலம் ஊர் வம்பாகப் பரவுவதைக் காமாட்சியம்மாள் விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் கழித்து ஆவலை அடக்க முடியாமல் காமாட்சியம்மாளே கலியாணத்தைப் பற்றிப் பாட்டியிடம் ஏதோ விசார்த்தாள். "உங்காத்திலே தங்கியிருந்துதே அந்த வெள்ளைக்காரப் பொண்தானா இதுன்னு நம்பவே முடியலேடீ காமு! அப்பிடி அலங்கரிச்சு நம்ம கல்யாணப் பொண்களை மாதிரி மணையிலே கொண்டு வந்து உட்கார்த்தியிருக்கா" - என்று பாட்டி கூறியதைக் கேட்டு காமாட்சியம்மாளுக்கு உள்ளூறப் போய்ப் பார்க்க வேண்டும்போல ஆசையிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தயங்கிப் பேசாமல் இருந்தாள் காமாட்சியம்மாள். ஆனால் பாட்டி பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். "உள்ளூர் வாத்தியார் ஜம்புநாத சாஸ்திரி இந்தக் கலியாணத்துக்குப் புரோகிதரா இருக்க மாட்டேனுட்டாராம். இன்னிக்கு நிறையப் பணம் கெடைக்கும்னு இதுக்கெல்லாம் வந்து நின்னுட்டேன்னா நாளைக்கி ஊர்லே நாலு பெரிய மனுஷர் நல்லது கெட்டதுக்கு என்னை மதிச்சுக் கூப்பிடமாட்டான்னு ஒதுங்கிட்டாராம். அப்புறம் வேணுகோபாலன் நெறையப் பணம் செலவழிச்சு மெட்ராஸ்லேருந்து யாரோ ஒரு புது வாத்தியாருக்கு ஏற்பாடு பண்ணினானாம். அந்தப் புது வாத்தியார்தான் இப்ப எல்லாம் பண்ணி வைக்கிறாராம். தானங்கள் தட்சிணைகள் வாங்கறதுக்குக்கூட உள்ளூர் வைதீகாள் யாரும் போகல்லையாம். ஆனா வெளியூர்லேருந்து நெறைய வைதீகாள் வந்திருக்காளாம்... என்னதான் கோர்ட்டிலே அந்தப் பிரெஞ்சுப் பொண்ணு நம்ம மனுஷாளை விடச் சுத்தமானவள்னு ஜட்ஜ் தீர்ப்புச் சொல்லிவிட்டாலும், உள்ளூர் வைதிகாள் தயங்கறா. ஆனால் வெளியூர்லேயிருந்து நெறைய வைதிகாளை வரவழைச்சிருக்காளாம்..." "பொண்ணை யார் தாரை வார்த்துக் குடுத்தாளாம்." "இதுவரை நோக்கு அது தெரியாதாடி காமு? வேறெ யாரு! அந்த வேணுகோபாலனும் அவள் ஆத்துக்காரியும்தான் தாரை வார்த்துக் குடுத்தாளாம். அதான் இந்தக் கல்யாணத்துக்காக அவாத்துலே சுமங்கலிப் பிரார்த்தனை கூட நடந்ததுன்னேனே?" இதற்கு மேல் காமாட்சியம்மாளாக யாரிடமும் எதுவும் வலிந்து விசாரிக்கவில்லை. முகூர்த்தம் முடிந்த மறுநாள் பிறபகல் பெரியம்மா அப்போதுதான் தூங்கி விழித்திருந்த காமாட்சியம்மாளிடம் சொன்னாள். "உன்னைப் பார்த்துட்டுப் போறதுக்காக உங்காத்துக்காரரும் அந்த வேணுகோபாலனும் வந்துட்டு போனாடீ காமு! நீ நன்னா அசந்து தூங்கிண்டிருந்ததை அவாளே பார்த்தா, 'எழுப்பட்டுமா'னு கேட்டேன். 'எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்! அப்புறமா வந்து பார்த்துக்கறோம்'னு உன் உடம்பைப் பத்தி விசாரிச்சுட்டுப் பொறப்பட்டுப் போயிட்டா." "இவா வந்து பார்க்கல்லேன்னுதான் இப்போ குறையா? வரலேன்னு இங்கே யார் அழுதாளாம்?" "இவாள்ளாம் வரா - வரலேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ! நீ பத்து மாசம் சொமந்து பெத்த பிள்ளை கல்யாணத்தைப் பண்ணிண்டு 'ஆசீர்வாதம் பண்ணும்மா'ன்னு வந்து நமஸ்காரம் பண்ணினானோடீ? அவனுக்கு எங்கே போச்சுடீ புத்தி?" என்றாள் முத்து மீனாட்சிப் பாட்டி. "வந்தா வரா, வராட்டாப் போறா. யார் வரலேன்னும் இங்கே நான் ஒண்ணும் தவிக்கலே பாட்டீ?" "அப்பிடிச் சொல்லாதே! நீ விரும்பலே விரும்பறேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொறைன்னு ஒன்னு இருக்கோல்லியோ? அவாளாத் தேடிண்டு வந்து உன்னை நமஸ்காரம் பண்ண வேண்டாமோ?" இதைக் கேட்டுக் காமாட்சியம்மாளுக்குக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அழுகையை அடக்க முடியவில்லை. அந்தக் கல்யாணத்தைப் பொருட்படுத்தாதவள் போலவும், புறக்கணித்தாற்போலவும் அவள் பாசாங்கு பண்ணினாலேயொழிய, மனம் என்னவோ அங்கேதான் இருந்தது. ஒவ்வொரு விநாடியும் அங்கே அந்தக் கல்யாண வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் அவள் மனம் சதா கற்பனை செய்து கொண்டிருந்தது. ரவியையும், கமலியையும், வசந்தியையும், சர்மாவையும், கல்யாண வீட்டையும் பற்றியே அவள் உள் மனம் நினைத்து உருகிக் கொண்டிருந்தது. கல்யாண வீட்டைப் பற்றி முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் எதையாவது கூறிய போதெல்லாம் சிரத்தையின்றிக் கேட்பது போல் மேலுக்குக் காட்டிக் கொண்டாளே தவிர அவற்றை உண்மையில் அவள் மிகவும் சிரத்தையோடு கூர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "கிருஹப் பிரவேசம்னு ஒண்ணு உண்டே, அதை என்னிக்கு வச்சிக்கப் போறாளாம் பாட்டீ?" "நான் அதை ஒண்ணும் விசாரிக்கல்லேடீ காமு!" "விசாரியுங்கோ, அன்னிக்கி எல்லாரும் இங்கேதானே வருவா... நாம தடுக்க முடியாதே... அவா வீடு, அவா வாசல், நாம என்ன பண்ண முடியும்?" "அதுவும் அப்படியா சமாசாரம்? எனக்கு அது நெனைவே இல்லையேடீ?" - என்றாள் பெரியம்மா. அன்று மாலையிலேயே முத்துமீனாட்சிப் பாட்டி அந்தத் தகவலை விசாரித்துக் கொண்டு வந்து சொன்னாள்: "பாலிகை கரைச்ச மத்தா நாள் கிருஹப் பிரவேசத்துக்கு ஏத்ததா இருக்காம்டீ காமு! அதனாலே அன்னிக்கிக் காலம்பர ஆறு மணியிலேருந்து ஏழரை மணிக்குள்ள ஒரு முகூர்த்தத்திலே இங்கே கிருஹப் பிரவேசத்துக்காக வராளாம். நீ உடம்பு சௌகரியமில்லாமப் படுத்துண்டுட்டதாலே சமையல் மத்ததுக்கு எல்லாம் அவாலே மனுஷாளை இங்கே முன்கூட்டியே அனுப்பிச்சுடுவான்னு நினைக்கிறேன்" என்று காமாட்சியம்மாள் மனத்தில் வெறுப்பை வளர்க்க நினைத்துப் பேசினாள். "கிருகப் பிரவேசத்துக்கு மட்டும் ஏன் இங்கே தேடிண்டு வரணும்டீ? அதையும் அங்கேயே எங்கேயாவது பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே? சாஸ்திரப்படி புள்ளையாத்திலேதான் பண்ணணும்னு இவாளுக்கு என்னடீ நிர்ப்பந்தம் வந்தது?" என்று கிராமத்திலிருந்து வந்து தங்கியிருந்த பெரியம்மா குறுக்கிட்டுச் சொன்ன போது காமாட்சியம்மாள் அதை அவ்வளவாக வரவேற்கவோ, இரசிக்கவோ இல்லை என்று தெரிந்தது. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|