6 யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை ஆசீர்வாதம் செய்வது போலத்தான் சர்மாவும் அவளை வாழ்த்தியிருந்தார். சர்மாவின் மனம் ஓர் இனிய திருப்தியில் நிறைந்திருந்தது. கமலி கீழிறங்கி நின்றதும் அவளது அழகிய உடலிலிருந்து பரவிய வசீகரிக்கும் தன்மை வாய்ந்ததொரு செண்ட்டின் நறுமணம் புழுதி படிந்த அந்த ரயில் நிலையத்து பிளாட்பாரம் முழுவதும் பரவியது. பந்துக்கள் உற்றார் உறவினர்களில் யாராவது ஓர் இளம் பெண் திருமணமான புதிதில் வந்து தம்மை வணங்கினால் தயக்கமில்லாமல் என்ன ஆசீர்வாதச் சொற்களை அவர் வாய் முணுமுணுக்குமோ அதே ஆசீர்வாதச் சொற்களைத்தான் இப்போதும் கூறியிருந்தார் அவர். முயன்றால் கூட அவர் வித்தியாசமாக நடந்து கொள்ள முடியாது போலிருந்தது. இது விஷயத்தில் அவர் மனமே அவருக்கு எதிராயிருந்தது. வசந்தியைப் பார்த்ததும் கமலி அப்படியே கட்டித் தழுவிக் கொண்டாள். ரவிக்கு வேணு மாமாவும் கமலிக்கு வசந்தியும் மாலையணிவித்தனர். 'வெல்கம் டூ சங்கரமங்கலம்'... என்று கை குலுக்குவதற்கு முன் வந்த வேணு மாமாவிடம் புன்னகை பூத்த முகத்துடன் "ஹேண்ட் ஷேக்கிங் இஸ் நாட் ஆன் இண்டியன் கஸ்டம்" - என்று கூறிக் கைகூப்பினாள் கமலி. தங்கை பார்வதியையும், தம்பி குமாரையும் ரவி கமலிக்கு அறிமுகப்படுத்தினான். பார்வதியின் முதுகில் பிரியமாகத் தட்டிக் கொடுத்து அவளிடம் தமிழிலேயே பேசினாள் கமலி. குமாரிடம் அன்பாக அவன் படிப்பைப் பற்றி விசாரித்தாள். ரவி எல்லா விவரங்களையும் அவளுக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருந்தானென்று புரிந்தது. எந்த விநாடியிலும் எதற்கும் அவள் குழப்பமடைந்து தடுமாறவில்லை. ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது. வித்தியாசமான நிறத்தில் வித்தியாசமான நடையுடை பாவனைகளோடு யாராவது தென்பட்டால் சிறிய ஊர்களில் ஒவ்வொருவரும் நின்று உற்றுப் பார்ப்பார்கள். இந்தியக் கிராமம் என்பது ஆவல்கள் நிறைந்தது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சமயத்திலும் கூர்ந்து கவனித்துவிட விரும்பும் அக்கறையும் அவகாசமும் உள்ளது. கிராமங்களின் இந்த ஆவலுக்குச் சலிப்பே கிடையாது. சங்கரமங்கலம் இரயில் நிலையத்திலேயே அது தெரிந்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக அந்த இரயில் நிலையத்தில் 'போளி, ஆமவடை', என்று ஒரு சீரான குரலில் கூவி விற்று வரும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன் ஆகியவர்களும் பிறரும் அவர்களைச் சுற்றிக் கூடிய அந்தக் கும்பலில் இருந்தார்கள். அந்தப் பாதையின் வழக்கமான இரயில் பயணி ஒருவர் கண்ணை மூடியபடி இரயிலுக்குள் இருந்தே 'போளி ஆமவடை, போளி ஆமவடை' என்று குரலைக் கேட்டே அது எந்த ஸ்டேஷன் என்று கண்டுபிடித்துவிடுகிற அளவுக்கு ஒரு கால் நூற்றாண்டுக் காலமாக அங்கே ஒன்றிப் போயிருந்தார் சுப்பாராவ். அத்தனை பேர்களுக்கு நடுவே, "என்ன சுப்பாராவ் சௌக்கியந்தானே?" என்று மறக்காமல் ஞாபகமாக ரவி தன்னை நலம் விசாரித்ததில் சுப்பாராவுக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. சுப்பாராவின் வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு அதை வெளிப்படுத்தியது. ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பும்போது வேண்டுமென்றே கமலியும், ரவியும், சர்மாவும் பின்னால் ஒரு காரில் தனியே வரும்படியாகச் செய்துவிட்டு வேணு மாமாவும், வசந்தியும், குமாரையும், பார்வதியையும் தங்களோடு அழைத்துக் கொண்டு முன்னால் புறப்பட்டு மற்றொரு காரில் வீடு திரும்பியிருந்தனர். வசந்தியையும், குமாரையும் பார்வதியையும் இறக்கிவிட்டு விட்டு வேணு மாமா அதே காரில் அப்படியே பூமிநாதபுரம் போய்விட்டார். வீட்டு வாசலில் சாதாரணமான மாக்கோலம் தான் போடப்பட்டிருந்தது. வசந்தி அதைக் கவனித்துவிட்டு, "உள்ளே போய்க் கொஞ்சம் செம்மண் கரைச்சுண்டு வாடி பாரூ! அவசரமா ஒரு செம்மண் கோலம் போடு, அப்புறம் தாம்பாளத்திலே கொஞ்சம் ஆரத்தி கரைச்சுத் திண்ணையிலே தயாரா வச்சுக்கோ... பின்னாடியே அவா கார் வந்துடும். அவாளைத் தெருவிலே காக்க வச்சுடாதே" - என்று பார்வதியைத் துரிதப்படுத்தினாள். ஏதோ வெளியூரில் கலியாணமாகி வீட்டுக்கு வருகிற பெண் மாப்பிள்ளையை வரவேற்கிறவள் போன்ற உற்சாகத்திலும் உல்லாசத்திலும் திளைத்திருந்தாள். காமாட்சி மாமி கோபித்துக் கொண்டுவிடப் போகிறாளோ என்ற பயமும் இருந்தது. வசந்தியின் செயல்களில் எல்லாம் கமலியின் மேலும் ரவியின் மேலும் அவளுக்கு இருந்த அளவு கடந்த பிரியம் தெரிந்தது. அவர்கள் காதலை அவள் மனப் பூர்வமாக விரும்பி ஆதரிப்பதும் தெரிந்தது. பார்வதி அவசர அவசரமாகச் செம்மண் கரைத்துக் கொண்டு வந்தாள். கிழக்கு வெளுக்கிற நேரம். அப்போது கிணற்றடியில் கணீரென்ற இனிய குரலில் ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தாள் காமாட்சி மாமி.
"துளசி ஸ்ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே நமஸ்தே நாரத நுதே நாராயண மந; ப்ரியே" மாமியின் உச்சரிப்பிலிருந்த தெளிவும் துல்லியமும் வசந்தியை மெய் சிலிர்க்க வைத்தன. வீட்டுக் காரியங்கள் நிறைய இருப்பதாகச் சொல்லிய ஒரு காரணம் பொருந்தினாலும் மாமி தான் வற்புறுத்தியும் தங்களோடு காரில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வர மறுத்ததில் வேறு மனத்தாங்கல் ஏதோ இருப்பது போல பட்டது வசந்திக்கு. கல்யாணக் கோலம் போல் பார்வதி செம்மண் பட்டைகளைப் போட்டு நிறுத்தியிருந்தாள். வசந்தி கோலப் பொடிக் கொட்டாங்கச்சியை எடுத்துக் கொண்டு போய் அந்தச் செம்மண் பட்டையைச் சுற்றி வெண்ணிறக் கோடுகளால் அழகுபடுத்தி அலங்கரித்து விட்டுப் படிக் கோலங்களையும் போட்டு முடித்தாள். அவள் கோலத்தை முடித்து விட்டு தலை நிமிரவும் பார்வதி ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்துக் கொண்டு உள்ளேயிருந்து வரவும் சரியாயிருந்தது. சங்கரமங்கலம் ரெயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் வருகிற வழியில் பிரம்மாண்டமான அரசமரம் ஒன்றின் கீழ் புராதனமாக பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பிள்ளையாருக்கு 'வழித்துணை விநாயகர்' என்று பெயர். ஊரிலிருந்து வெளியூருக்குப் போகிறவர்களோ, வெளியூரிலிருந்து ஊர் திரும்புகிறவர்களோ இந்தப் பிள்ளையார் கோவிலில் கும்பிட்டு தேங்காய் விடலைப் போட்டு விட்டுப் போவது நீண்ட கால வழக்கமாகயிருந்தது. சர்மா கூட ஏதோ யோசனையில் மறந்து பேசாமல் இருந்து விட்டார். பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்தவுடன் ரவி ஞாபகமாகக் காரை நிறுத்தச் சொன்னான். காலணிகளைக் காருக்குள்ளேயே கழற்றி விட்டு ரவியும், சர்மாவும் இறங்கிய போது, அதேபோல் செய்தபின் அவர்களைப் பின் தொடர்ந்து கமலியும் கீழே இறங்கினாள். தேங்காய் வாங்கி விடலைப் போட்டு விட்டுப் பிள்ளையாரை கும்பிட்டுப் பிரதட்சிணம் வந்த பின் காருக்குத் திரும்பினார்கள் அவர்கள். அந்தப் பிள்ளையாரின் பெயர், அவ்வூர் வழக்கம், முதலியவற்றை கமலிக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தான் ரவி. ரெவ்லான் இன்டிமெட் வாசனை காரின் உட்பகுதி முழுவதும் கமகமத்துக் கொண்டிருந்தது. அந்தக் கிராமமும் அதன் இயற்கையழகு மிக்க சூழலும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி வியந்து கொண்டு வந்தாள் கமலி. நடுநடுவே ரவி பிரெஞ்சிலோ, ஆங்கிலத்திலோ கேட்பவற்றுக்கு அவன் கேட்ட மொழியிலேயே பதில் கூறினாலும் கமலி கூடியவரை தமிழிலேயே பேச முயன்றாள். ஒரு மொழியைப் புதிதாகக் கற்றுக் கொண்டவர்கள் பேசும், புத்தகத்தில் அச்சடித்தாற் போன்ற சொற்களின் முனைமுறியாத் தன்மை அல்லது உச்சரிப்புக் குறைபாடுகள் சில இருந்தாலும் மொத்தத்தில் அவள் பேசிய தமிழ் நன்றாகவும் புரிந்து கொள்கிறாற் போலவும் இருந்தது. தமிழில் தான் அறிய நேர்ந்த ஒவ்வொரு புதுச் சொல்லையும், சொற்றொடரையும் வியந்து வரவேற்று ஒரு புதுத் தொகையை வருமானமாக ஏற்று வரவு வைப்பது போல மகிழ்ந்தாள் அவள். எந்த ஒரு புது மொழியையும் விரும்பி ஆர்வத்தோடு கற்பவர்களின் மனநிலை அப்படிப்பட்டதுதான். அந்தப் புதிய மொழியில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு புதுச் சொல்லும், புதுத் தகவலும் எதிர்பாராமல் வருகிற ஐசுவரியம் அல்லது புதையலாக இன்பம் அளிக்கும். 'வழித்துணை விநாயகர்' - என்ற பெயர் கமலிக்கு மிக மிகப் பிடித்துப் போயிற்று. அதைச் சொல்லிச் சொல்லி வியந்தாள் அவள். சர்மா கூறினார்: "இந்த ஊர் ஸ்தல் வரலாற்றிலே 'மார்க்க சகாய விநாயகர்'னு தான் இருக்கு! ஜனங்கள் எல்லாம் வழித்துணை விநாயகர்னு சொல்றா" - "பழைய வரலாற்றிலே என்ன பேர் இருந்தாலும் பெருவாரியான மக்கள் வழங்குகிற பெயர்தான் நிலைக்கும். மக்களின் நடை, பாவனை, பேச்சு, மொழியும் விதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் 'லிங்விஸ்டிக்ஸ்' அதாவது மொழியியல் உயிருள்ள சயின்சாக வளர்கிறது. அப்படி முக்கியத்துவம் அளிக்காமல் மொழியின் ஆரம்பகாலச் சட்ட திட்டங்களிலேயே நகராமல் நின்று கொண்டிருப்பதனால்தான் கிராமர் - அதாவது இலக்கணம் நாளடைவில் ஒரு பழைய காலத்து மியூஸியம் போல் ஆகிவிடுகிறது" என்றாள் கமலி. இதைக் கேட்டு அந்த பிரெஞ்சு யுவதி இணையற்ற அழகு மட்டுமல்ல; நிறைய விஷய ஞானமுள்ளவளாகவும் இருக்கிறாள் என்று சர்மாவுக்குத் தோன்றியது. சின்ன வயதிலிருந்தே ரவிக்கும் லிங்விஸ்டிக்ஸிலும் - கம்பேரிட்டிவ் லிங்விஸ்டிக்ஸிலும் ஒரு பைத்தியம் உண்டு என்பது அவருக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் சென்ற கார் வீட்டு வாசலில் போய் நின்ற போது நன்றாக விடிந்திருந்தது. கார் வந்து நின்ற ஓசை கேட்டு அக்கம் பக்கத்திலும் எதிர் வரிசை வீடுகளிலும் பலர் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார்கள். காமாட்சி மாமி திண்ணையோரமாக வந்து சற்றே ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்ததை வசந்தி கவனித்தாள். வசந்தி வேண்டியபடி ரவியும், கமலியைக் கைப்பற்றி அழைத்து வந்து செம்மண் கோலத்தில் நின்று கொண்டான். வசந்தியும் பார்வதியும் ஆரத்தி எடுத்தார்கள்.
"மங்களம் மங்களம் ஜெயமங்களம் ஸ்ரீராமச் சந்திரனுக்கு சுபமங்களம் மாதர்கள் மகிழும் மங்கள ஹாரத்தி கோதையர் மகிழும் கற்பூர ஹாரத்தி தங்கத் தாம்பாளத்தில் பஞ்சவர்ணங்கள் போட்டு நல்முத்துக் கமலத்தில் நவரத்தினங்கள் போட்டு சீதை மணாளருக்கு மங்களம் மங்களம் ஸ்ரீராமச் சந்திரனுக்கு மங்களம் சுபமங்களம்..." வசந்திக்கு இவ்வளவு இனிமையான குரல் உண்டு என்பதைக் கமலி அன்றுதான் முதல் முதலாக அறிந்தாள். அதிகாலையின் இதமான மோனத்தைப் பறவைகளின் குரல்கள் மெதுவாகக் கலைத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஆரத்திப் பாட்டு மிகவும் சுகமாக இருந்தது. கோலத்தையும் பாட்டையும் 'லவ்லி' 'லவ்லி' என்று பாராட்டினாள் கமலி. ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்த தன் தாய்க்கு அருகே கமலியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினான் ரவி. சர்மாவை வணங்கியது போலவே காமாட்சியம்மாளையும் கால்களில் குனிந்து வணங்கினாள் கமலி. ஆனால் காமாட்சியம்மாள் அவள் வணங்கும்போது சற்றே பயந்தாற்போலவும், ஒதுங்கினாற் போலவும் விலகி ஒதுங்கி நின்று விட்டாள். கூச்சமா அல்லது கோபமா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. "அப்படியே மாடிக்கு அழைச்சுண்டு போ... நீங்க தங்கிக்கறதுக்கு அங்கே எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கேன்" என்று ரவியிடம் சொன்னார் சர்மா. "ஏற்பாடென்ன வேண்டிக் கிடக்கிறது? இருக்கிற இடத்திலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே? கமலிக்குன்னு தனி சௌகரியம் எதுவும் வேண்டியதில்லே அப்பா!" "யெஸ்! ஐ ஆம் டயர்ட் ஆஃ லக்சுரீஸ்... அண்ட் மணி ஹெட்டெட் லைஃப்" - என்று கமலியும் ரவியோடு சேர்ந்து சொன்னாள். ஆனாலும் சர்மா சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி ரவி - கமலி சம்பந்தப்பட்ட பெட்டிகள், சாமான்கள் எல்லாம் மாடியிலேயே கொண்டுபோய் வைக்கப்பட்டன. முதல் நாளே வசந்தி சொல்லியிருந்ததால் குமார் தன் கல்லூரிக்கும் பார்வதி பள்ளிக்கூடத்துக்கும் அன்று லீவு போட்டிருந்தார்கள். வசந்தியும் கூட இருந்தாள். "சிரமப்பட்டு இதெல்லாம் எதுக்குப் பண்ணினேள் அப்பா? மோட்டார் - ஓவர் ஹெட் டேங்க் - அட்டாச்டு பாத்ரூம் - டைனிங் டேபிள்... இதெல்லாம் வேணும்னு நான் எழுதலியே? கமலி ரொம்ப ஃப்ளெக்ஸிபிள் டைப்... இருக்கிற வசதிக்கு ஏத்தாப்பில எங்கேயும் அட்ஜஸ்ட் பண்ணிக்க அவளால் முடியும்..." "இருந்தாலும் முறை - மரியாதை - நாகரிகம்னு இருக்கே? என்னாலே முடிஞ்சதைப் பண்ணினேன். வேணு மாமாவும் வசந்தியும் கூடச் சில யோசனைகள் சொன்னா." மாடி அறை முகப்பிலே சர்மா புதிதாகச் செய்து போட்டிருந்த நாற்காலிகளில் அப்போது எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். "அப்பா உங்கிட்டச் சொல்லச் சொன்னார் ரவி. பூமிநாதபுரத்திலே ஒரு கலியாண முகூர்த்தத்துக்குப் போயிருக்கார். மத்தியானம் வந்திடுவார். நீ புறப்படறத்துக்கு முன்னே சுரேஷைப் பார்த்தியா? ஏதாவது சொன்னானா?" "பார்க்கலே! ஆனா யுனெஸ்கோ ஆபிஸூக்கு ஃபோன் பண்ணினேன். சுரேஷ் ஜெனீவா போயிருக்கிறதா சொன்னா. திரும்பி வர ஒரு வாரத்துக்கு மேலே ஆகும்னு தெரிஞ்சுது." பார்வதி புதிதாக வாங்கியிருந்த ட்ரேயில் புதிதாக வாங்கியிருந்த பீங்கான் கிண்ணங்களில் காபியோடு வந்தாள். அப்பா சிரமப்பட்டு அந்த வீட்டில் ஒவ்வொன்றாகப் புதிய பண்டங்களைச் சேகரித்திருப்பது ரவிக்குப் புரிந்தது. கோப்பைகள், பீங்கான் கிண்ணங்கள் வழக்கமாக அந்த வீட்டில் இருந்ததில்லை. கண்ணாடி கிளாஸ் கூட அவனுக்குத் தெரிந்து அங்கே உபயோகித்ததில்லை. பித்தளை டவரா, டம்ளர்கள் தான் உபயோகத்தில் இருந்தன. இந்த மாறுதல்கள் தனக்காகவா, கமலிக்காகவா என்று சிந்தித்தான் அவன். கமலயின் வருகை என்னும் நாசூக்கான விஷயம் அப்பாவையும், அந்தப் புராதனமான கிராமத்து வீட்டையும் அதிகமாகப் பாதித்திருப்பது தெரிந்தது. எல்லாரும் காபி அருந்திய பின் வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிப் பார்ப்பதற்காகக் கமலியை வசந்தி அழைத்துக் கொண்டு போனாள். பார்வதியும் காபி டிரேயையும் கிண்ணங்களையும் கொண்டுபோய் வைத்துவிட்டுக் கமலியோடும் - வசந்தியோடும் போய் சேர்ந்து கொண்டாள். குமார் ஏதோ சாமான் வாங்கி வருவதற்காகக் கடைக்குப் போயிருந்தான். மாடியில் அப்பாவும் பிள்ளையும் தனியே விடப்பட்டிருந்தனர். சர்மாதான் முதலில் ரவியிடம் பேசினார்:- "இதென்ன பெரிய அரண்மனையா சுத்திப் பார்க்கிறதுக்கு? அந்தக் காலத்து வீடு.... அவளோ பெரிய கோடீசுவரன் வீட்டுப் பொண்ணுன்னு வசந்தி சொன்னா..." "அரண்மனையோ குடிசையோ என் சம்பந்தப்பட்ட எதிலும் அவளுக்கு அக்கறை உண்டு. இந்தியா, இந்தியக் கலாச்சாரம், இந்தியக் கிராமங்கள், கிராமத்து வாழ்க்கை எல்லாத்திலேயும் கமலிக்குக் கொள்ளை ஆசை அப்பா!" "உங்கம்மாட்ட நான் முழு விவரமும் சொல்லலே... உன்னோட ரெண்டாவது லெட்டரைப் படிச்சுக் காமிச்சேன். படத்தைப் பார்த்தா. யாரு? தெரிஞ்சவளா? கூடச் சுத்திப் பார்க்க வராளான்னு கேட்டா, ஆமாம்னேன். அதோட சரி... அப்புறம் மேற்கொண்டு அவளும் கேழ்க்கலை... நானும் சொல்லலை." "நீங்க சொல்லாததுதான் தப்பு அப்பா! ஒரு விஷயத்தைப் பூசி மெழுகறதுங்கறதையே பல நூற்றாண்டுகளா நம்ம நாட்டிலே ஒரு கலையா வளர்த்துண்டிருக்கோம். அதனாலேதான் எல்லாத்திலியும் எல்லாக் கெடுதலும் வரது..." "உங்கம்மாகிட்ட மட்டும் இல்லேடா ரவி! யாருகிட்டவுமே நான் எதையும் சொல்லலே. வேணு மாமா, வசந்தி, இவா ரெண்டு பேருக்குத்தான் ஏற்கனெவே எல்லாம் தெரியும். இப்போ புதுசா எனக்குத் தெரியும்." "இது மாதிரி ஊர்லே, ஒரு விஷயத்தை நேராக அறிவிப்பதைவிட வேற எதுவும் செய்யறதிலே பிரயோஜனமில்லேப்பா. அறிவிக்கிறதைவிட அநுமானத்துக்கு விடறதுதான் அபாயகரமானது." "என்னமோடா நீ சொல்றே! எனக்கானா அத்தனை துணிச்சல் வரலே; உங்கம்மாட்டவே சொல்றதுக்கு பயமாயிருக்கு. மத்தவாகிட்ட எப்பிடிச் சொல்றது? உனக்கே தெரியும். நான் சொல்லணும்கிறதில்லே. ஸ்ரீமடத்துப் பொறுப்பு என் கைக்கு வந்ததிலேருந்து ஊர்லே எத்தனை பேரோட விரோதம் ஏற்பட்டிருக்குத் தெரியுமா?" "விரோதத்துக்குப் பயப்படறதாலேயும் தயங்கறதாலேயும் அது போயிடாதுப்பா! ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். நம்மகிட்டத் தப்புத் தண்டா இல்லாத போது நாம் யாருக்குப் பயப்படணும்? எதுக்குப் பயப்படணும்?" "அதெல்லாம் இருக்கட்டுண்டா! அப்புறம் பேசிக்கலாம். நீ முதல்லே உங்கம்மாவைப் பார்த்துவிட்டு வா. அவ உங்கிட்டச் சரியாகவே பேசலை போலிருக்கே... அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் என்னமோ சொன்னியே....? அப்போ அவ 'ரியாக்ஷன்' எப்படி இருந்தது?" "அம்மா, சரியா இல்லே அப்பா! கமலி நமஸ்காரம் பண்ணினப்பவே அவ மூஞ்சியைத் தூக்கி வச்சுண்டு இருந்தா. தெரு வாசல்லே வச்சு அவகிட்ட விவாதம் பண்ண வேண்டாம்னு நானும் அப்போ பேசாம விட்டுட்டேன்..." "செம்மண் கோலம், ஆரத்தி எல்லாம் கூட வேணு மாமா பொண்ணும் நம்ம பாருவுமாத்தான் பண்ணியிருக்கா. காமுவுக்கு இதெல்லாம் பிடிச்சிருக்காது. உன் கல்யாணத்தைப் பத்தி அவ என்னென்னமோ சொப்பனம் கண்டுண்டிருக்கா. தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு நாலு நாள் கல்யாணம், நலுங்கு, மஞ்சள், தேங்காய், ஊஞ்சலோட பண்ணணும்னு அவளுக்கு ஆசை..." "போடா போ! நான் என்னத்தையோ சொன்னா நீ என்னத்தையோ பதில் சொல்றே! வீட்டுக்கு அடங்கின மருமகளாத் தனக்கு அடங்கின கிராமாந்தரத்து மாட்டுப் பெண் ஒண்ணு வரணும்கறது காமுவோட பிரியம்." 'பேப்பர்'-என்ற கரகரத்த குரலுடன் தெருத் திண்ணையில் காலைத் தினசரி வந்து விழுகிற சத்தம் கேட்டது. ரவியே படியிறங்கிப் போய்ப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, "நீங்க பேப்பரைப் பார்த்திண்டிருங்கோ அப்பா! நான் போய் அம்மாட்டப் பேச்சுக் குடுத்துப் பார்க்கிறேன்" என்று வீட்டுக் கூடத்துக்குப் போனான். ரவிக்கும் அம்மாவைப் பார்க்கக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவன் போனபோது அம்மா சமையலறையிலே இல்லை. கொல்லைப்பக்கம் அவள் குரல் கேட்டது. அம்மாவின் குரலுக்கு வசந்தி ஏதோ பதில் சொல்லுவதும் அவன் காதில் விழுந்தது. உடனே ரவி கொல்லைப் பக்கம் விரைந்தான். அம்மா எதிரே வந்தாள். ஆனால், அவனைப் பார்க்காதது போல விடுவிடுவென்று நடந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டாள். வசந்திக்கும் அம்மாவுக்கும் என்ன உரையாடல் நடந்திருக்கும் என்றறியும் ஆவலில் ரவி முதலில் கிணற்றடிக்கே சென்றான். துளசி மாடம் இருந்த இடத்தின் அருகே சிறிது தொலைவு விலகினாற் போல் நின்று கமலிக்கு அதைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தி. கமலி ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு நின்றாள். பார்வதியும் பக்கத்தில் இருந்தாள். "அம்மா என்ன சொல்றா வசந்தி?" என்ற கேள்வியோடு அவர்களருமே சென்றான் ரவி. "ஒண்ணுமில்லே! மாமி இப்பத்தான் விளக்கேற்றித் துளசி பூஜை பண்ணி முடிச்சிருக்க. நாங்க ரெண்டு பேரும் குளிக்காமக் கிட்டப் போயித் துளசி மாடத்தைத் தொட்டுடப் போறோமோன்னு பயந்துண்டு வந்து எங்கிட்டச் சொல்லிட்டுப் போறா ரவீ! ஆனா மாமி வந்து சொல்றதுக்கு முன்னாடி கமலியே, "கோலம், குங்குமம், மாடத்தில் எரியும் விளக்கு எல்லாம் பார்த்தால் இப்பத்தான் பூஜை முடிஞ்ச மாதிரி இருக்கு. நீயும் ஸ்நானம் பண்ணின மாதிரி தெரியலே. நானும் ஸ்நானம் பண்ணலே... எதுக்கும் தீட்டு இல்லாமே ஒதுங்கி நின்னு பார்ப்போம்"னு எங்கிட்டச் சொல்லிட்டா. அதையே மாமிகிட்டச் சொன்னேன் நான். 'இந்து மேனர்ஸ் கஸ்டம்ஸ் அண்ட் செரிமனீஸ்'னு ஏதோ புஸ்தகத்திலே கமலி இதெல்லாம் ஏற்கெனவே படிச்சிருக்காளாம்." இதைக் கேட்டு ரவி புன்முறுவல் பூத்தான். கமலியும் அவனை நோக்கிப் புன்னகை செய்தாள். "கமலியைத் தோட்டத்துக்குக் கூட்டிண்டு போ வசந்தி! காலம்பர நீங்க ஸ்டேஷன்ல போட்ட மல்லிகை மாலையின் வாசனையைப் புகழ்ந்து குறைஞ்சது இதுக்குள்ளே நூறு தடவையாவது அவ எங்கிட்டச் சொல்லியிருப்பா. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே மல்லிகை பாரிஸ்லே 'ஜாஸ்மின்'னு ஒரு மெட்ரோ ஸ்டேஷன் இருக்கே அதான். நம்ம தோட்டத்திலே நிஜம் மல்லிகைச் செடியையே பூவோட அவளுக்குக் காமி." ரவி இப்படிக் கூறியதும் அவர்கள் தோட்டத்துப் பக்கமாக நகர்ந்தார்கள். ரவி மீண்டும் வீட்டுக்குள் திரும்பிச் சமையல் கட்டின் வாசலில் அம்மாவின் ஆசார எல்லை, எந்த இடம் வரை தன்னை அநுமதிக்குமோ அந்த இடத்துல நின்று கொண்டு உள்ளே வேலையாக இருந்த அம்மாவின் கவனத்தைக் கவர, "நான் தான் ரவி வந்திருக்கேன்ம்மா-" என்று கொஞ்சம் இரைந்தே குரல் கொடுத்தான். ஆனால் அதற்குப் பதில் எதுவும் இல்லை. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|