22 பரம வைதீகரான அப்பா எங்கே கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்காமல் நாசூக்காகத் தட்டிக் கழித்து விடுவாரோ என்று உடன் வந்து அருகே நின்ற ரவி மனத்தில் எண்ணித் தயங்கினான். ஆனால் அப்படி ஏதும் நடந்து விடவில்லை. சர்மா புன்முறுவலோடு பிரசாதம் எடுத்துக் கொண்டார். கமலி கையிலிருந்த தட்டைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அவர் பிரசாதம் எடுத்துக் கொண்ட காட்சியை ரவியால் அப்போது நம்பவே முடியாமல் இருந்தது. "திருப்பணிக்குப் பணம் குடுத்து ரசீது வாங்கினேளா?" "இதோ ரசீது வாங்கியிருகோம்பா" - ரவி கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுத்துக் கமலி பேருக்கு வாங்கியிருந்த ரசீதை எடுத்து அப்பாவிடம் நீட்டினான். "இதோ வந்துடறேன்ப்பா; ஒரு நிமிஷம்" என்று அவருக்கு மறுமொழி கூறிவிட்டு மாடிப்படியேறினான் ரவி. ***** அந்த வினாடியில் சர்மாவின் மனநிலை துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஒரு பரிசுத்தமான பூரண ஞானியின் துணிச்சலுடனும், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வெறுப்பற்ற மகிழ்ச்சியுடனும் இருந்தார் அவர். மாடிக்குப் போன ரவியை எதிர்பார்த்துக் கையில் பஞ்சாங்கத்துடனும் பென்சில் பேப்பருடனும் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல் கீழேயே காத்திருந்தார் அவர். ஏதோ இனம் புரியாமல் ரவிக்கும் மனத்தில் ஒரு குதூகலம் பிறந்திருந்தது. அப்பா தன்னைக் கூப்பிட்டுக் கமலியைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னதும், கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டதும் அதன்பின் உடனே 'உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும், வருகிறாயா?' - என்று தன்னைத் தனியே அழைத்ததும் நல்ல அடையாளங்களாகப் பட்டன அவனுக்கு. அப்பா கொஞ்சமும் தயக்கமின்றிக் கமலியின் கையிலிருந்து கோயில் பிரசாதத்தை வாங்கிக் கொண்ட பெருந்தன்மையை அவளிடமே சொல்லி வியந்துவிட்டு, "இதுவே அம்மாவாயிருந்தா ஒரு ஸீன் கிரியேட் பண்ணியிருப்பா கமலி! என்னதான் இருந்தாலும் அப்பா அப்பாதான்" என்று கூறியபின் கீழே இறங்கித் தந்தையை சந்திக்க வந்தான் ரவி. அவன் படியிறங்கத் தொடங்கியபோது, "உங்கள் அம்மாவும் இப்படி முகமலர்ச்சியோடு என் கையிலிருந்து பிரசாதம் வாங்குகிற நாள் ஒன்று வரும். அதையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று கமலி உற்சாகமாகப் பதில் சொல்லியது அவன் காதில் விழுந்தது. "தோட்டத்துக் கிணற்றடிக்குப் போய்ப் பேசலாமா" என்று கேட்ட ரவிக்கு, "வேண்டாம்! இங்கே மூணாம் மனுஷா யார் இருக்கா இப்போ? திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம் வா" என்று பதில் சொல்லியபடி திண்ணைக்கு அவனை அழைத்துச் சென்றார் சர்மா. அப்பாவின் கையில் பஞ்சாங்கமும் பேப்பர் பென்சிலும் இருப்பதைப் பார்த்து இன்னும் அதிக வியப்பு உண்டாயிற்று ரவிக்கு. எதற்கும் அவரே விஷயத்தை முதலில் சொல்லட்டும் என்று சிறுவனாயிருந்தபோது அதிகாலையில் அவரிடம் படிப்பதற்காக அடக்க ஒடுக்கமாக அதே திண்ணையில் அதே இடத்தில் எப்படிப் பவ்யத்தோடு உட்காருவது வழக்கமோ அப்படியே இன்றும் இப்போதும் உட்கார்ந்தான் அவன். "ஏண்டா! உன் மனசிலே என்ன தான் இருக்கு? உனக்கு நான் என்ன பண்ணணும்கிறதை நீ முதல்லே எங்கிட்டச் சொல்லணுமே ஒழிய என்னை மூணாம் மனுஷன் மாதிரி நெனைச்சுண்டு மூணாம் மனுஷனா இருக்கிற தேசிகாமணி கிட்டவும், வேணு மாமா கிட்டவும் முதல்லே சொல்லி அப்புறம் அவா அதை எங் காதுலே போடற மாதிரி விடப்படாது. அது கொஞ்சம் கூட நன்னா இல்லே. இந்தச் சின்ன விஷயத்திலே நீ ஏன் இத்தனை இங்கிதம் இல்லாமே நடந்துக்கணும்னு தான் எனக்குப் புரியலே." இதைக் கேட்டதும் திருடனுக்குத் தேள் கொட்டினது மாதிரி இருந்தது ரவிக்கு. என்ன பதில் சொல்லலாம் என்று அவன் தன் மனத்தில் வார்த்தைகளை யோசித்துத் திரட்டுவதற்கு முன் தந்தையே மேலும் தொடர்ந்தார். "நான் முடிவு பண்ண வேண்டிய சமாச்சாரத்தைப் போயி நீ தேசிகாமணி கிட்டவும் வேணு மாமா கிட்டவும் பிரஸ்தாபிச்சு என்ன பிரயோஜனம்?" "தப்புத்தான் அப்பா! உங்களுக்கு ரொம்பவும் வேண்டியவாளாச்சேன்னு பிரஸ்தாபிச்சேன்." "நான் முடிவு பண்ணியாச்சு! உங்கம்மா முதல் ஊரார் வரை யாருக்கும் என்ன உறவு, எதுக்கு வந்திருக்காள்னு கமலியைப் பற்றி ஓர் உறவும் சொல்லாமே இப்படி மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம வீட்டோட வச்சுண்டு வீண் வதந்திகளையும் ஊர் வம்பையும் அரட்டையையும் பெருக விடறத்துக்குப் பதில் துணிஞ்சு உனக்கும் அவளுக்கும் சாஸ்திரோக்தமாகவே ஒரு கல்யாணத்தைப் பண்ணிடறது எவ்வளவோ தேவலை. முன்னே எப்பவோ ஒரு நாள் வந்த புதிசிலே நீயே எங்கிட்டேக் கேட்டே. அப்போ நான் அதுக்குத் தயங்கினேன். இப்போ நானே அதுக்குத் துணிஞ்சிட்டேன்." ரவிக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. பேசுவது அப்பாதானா என்றே சந்தேகமாயிருந்தது. "அப்பா... நிஜமாவா...?" என்று உற்சாக மேலிட்டுக் கூவினான் ரவி. "பின்னே என்ன? உங்கிட்ட விளையாட்டுப் பேச்சுப் பேசவா வேலைமெனக்கெட்டு இப்போ கூப்பிட்டிருக்கேன்? இந்த மாசக் கடைசியிலே ஒரே ஒரு முகூர்த்தம் தான் மீதமிருக்கு. பெத்தவனோ, பெத்தவளோ இங்கே இல்லாமே யாருடா அவளைத் தாரை வார்த்துக் குடுப்பா?" "கேபிள் குடுத்தா கமலியோட அப்பா அம்மா ரெண்டு பேருமே கூட இங்கே வருவா அப்பா... ஆனா நீங்க சொல்ற முகூர்த்தத்துக்குள்ளே அது முடியாது. வேணு மாமாவை வேணாக் கேட்டுப் பார்க்கலாம்." "ஏண்டா ஏற்கெனவே நீ அவரிட்டப் பேசி முடிவு பண்ணி வச்சாசா? என்னமோ தயாரா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரிச் சொல்றியே?" "இல்லே... கேட்டா ஒத்துப்பார்னு பட்டது. அதான் சொன்னேன்." "சரி! வா, போகலாம். அவரிட்டேயே நேரக் கேட்டுடுவோம்." "நான் எதுக்குப்பா? நீங்க கேட்டாலே ஒத்துப்பார். நானும் அவசியம் உங்க கூட வந்தாகணும்னா வரேன்." "சும்மா கூட வாயேன் போயிட்டு வரலாம். நீ ஒண்ணும் பேசவேண்டாம். கேட்கிறதெல்லாம் நானே அவரிட்டக் கேட்டுக்கறேன்." கூட வருவதற்கு ரவி சற்றே சங்கோஜப்பட்டாற் போலத் தோன்றியது. ஆனாலும் தட்டிச் சொல்லாமல் புறப்பட்டான். அந்த விஷயத்தில் அப்பாவின் திடீர் முடிவும் அவர் காட்டிய அவசரமும் உண்டாக்கிய சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவனால் முற்றாக மீள முடியவில்லை. அதனால் தெருவில் நடந்து போகிற போது அப்பாவிடம் அவன் எதுவுமே பேசக்கூட இல்லை. வீட்டிலிருந்தபடி இறங்கியதும் நிறைந்த தண்ணீர்க் குடத்தோடு ஒரு சுமங்கலி தெருவில் எதிர்ப்பட்டபோது, "சகுனம் ரொம்ப நன்னா ஆறது" என்றார் சர்மா. வேணு மாமா வீட்டை அவர்கள் அடைந்த போது அவர் திண்ணையிலிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஒரு பெரிய பழுக்காத் தாம்பளம் நிறையப் பழம் - பூ வெற்றிலை பாக்கு - பச்சை ஏலக்காய்க் கொத்து எல்லாம் இருந்தன. வேணு மாமா அப்போது மிக மிக உற்சாகமாயிருந்தார். "வாங்கோ! என்னோட எஸ்டேட் மானேஜர் புதுசா வீடு கட்டிக் கிருகப் பிரவேசம் பண்றானாம். இப்பத்தான் வந்து அதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறான். ஏது... அப்பாவும் பிள்ளையுமா இப்படிச் சேர்ந்து வந்திருக்கேள்... ரவிக்கும் எவனாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கானா?" "அதெல்லாம் ஒண்ணுமில்லே. கோவில் திருப்பணி டொனேஷன் விஷயம் நீங்க சொன்னபடி பண்ணியாச்சு ரவியே கூடப் போயிப் பணத்தைக் குடுத்துக் கமலி பேருக்கு ரசீதும் வாங்கிண்டு வந்துட்டான்." "சபாஷ்! அப்புறம்?" "சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா. இந்த ஊர்க்காராளும், மத்தவாளும் பண்ற புரளியைப் பார்த்துப் பார்த்து நேக்கே தைரியம் வந்தாச்சு... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஓர் ஒத்தாசை செஞ்சாகணும். இது மாதிரி ஒத்தாசையைப் பண்ற துணிச்சல் இந்த ஊர்ல உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறத்துக்கில்லே." கூட்டி முழுங்கித் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னார் சர்மா. இதைக் கேட்டு உடனே பதில் எதுவும் சொல்லாமல் சிறு குழந்தை போல் வயதுக்கு மீறின உற்சாகத்தோடு உள்ளே ஓடிய வேணு மாமா கைப்பிடி நிறையச் சர்க்கரையோடு திரும்ப ஓடிவந்து சர்மாவை வாய் திறக்கச் சொல்லிப் பிடிவாதம் பண்ணி அதைக் கட்டாயமாக அவர் வாயில் போட்டார். உற்சாகம் கரை புரண்டது வேணு மாமாவுக்கு. "இப்பவே வசந்திக்குத் தந்தி கொடுத்தாகணும். நீர் கொஞ்சம் கூடக் கவலைப்படாதேயும், எப்போ கமலியை நான் தாரை வார்த்துக் குடுக்கணும்னு நீரே சொல்றீரோ அப்போ பெண்ணுக்குப் பிறந்த வீடு இதுதான். கல்யாணமும் இந்த வீட்டிலேயே தான் நடக்கணும். லக்கினப் பத்திரிகை, முகூர்த்தக்கால் எல்லாத்துக்கும் உடனே ஏற்பாடு பண்ணிடறேன்." "உம்ம ஆத்துக்காரியை ஒரு வார்த்தை கேட்டுக்க வேண்டாமோ?" "கேட்கணும்கிறதில்லே. 'வசந்தி மாதிரி இவளும் நம்ப பொண்தான். இவளை நாமதான் தாரைவார்த்துக் குடுக்கணும். புதுப் புடவையைக் கட்டிண்டு மணையிலே வந்து என் பக்கத்திலே நில்லு'ன்னா மறு பேச்சுப் பேசாம வந்து நிப்பாள் என் ஆத்துக்காரி. அவளைப் பத்தி நீர் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். உம்மாத்திலே தான் அந்தக் கஷ்டமெல்லாம். உம்ம ஒய்ஃப் இந்தக் கல்யாணத்தை ஒத்துண்டு மணையிலே வந்து நிப்பாளோ, சர்மா?" "அதைப் பத்தி இப்போ நான் நிச்சயமா ஒண்ணும் சொல்றதுக்கில்லே. ஆனா அது சந்தேகம்தான்." "அதனாலே ஒண்ணும் பாதகமில்லே. ஒத்து வராத மனுஷாளுக்காக உலகம் காத்துண்டு நிக்காது. இருபது முப்பது வருஷத்துக்கு முந்தி உம்ம கல்யாணமும் என் கல்யாணமும் நடந்த மாதிரி சாஸ்திரோக்தமா ஒரு சின்ன விஷயம் கூட விட்டுப் போகாமல் நாலு நாள் ஜாம் ஜாம்னு இதை நடத்திப்பிடலாம். நீர் எதுக்கும் கவலைப் படாதீயும். எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடும். நான் பார்த்துக்கறேன். இப்ப நீர் சம்பந்தி. பிள்ளை வீட்டுக்காரன். நீர் வந்திருந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தால் மட்டும் போறும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்." "நான் அப்படி விட்டுட முடியுமா? எல்லாக் கல்யாணமும் போல இல்லியே இது? நானும் சேர்ந்து கவலைப் பட்டாகணுமே? நாலு நாள் முகூர்த்தத்துக்கு வாத்தியார் ஒத்துண்டு வரணும். சீமாவையர் சொல்லி வச்சு மிரட்டித் தடுப்பார். 'இது சாஸ்திர சம்மதமான கல்யாணமில்லே. வரமுடியாது'ன்னு வைதிகாள் அட்டி சொன்னா என்ன பண்ணுவேள்? அப்படி ஏதானும் இடைஞ்சல் வரும்னு தான் தோன்றது, வந்தாலும் பரவாயில்லே. நானே எல்லாம் பண்ணிக்கிறேன். பிருஹஸ்பதி ஸ்தானத்திலே நானே இருந்துடறேன்." "அதுக்கு அவசியம் இருக்காது சர்மா! இன்னிக்கி முக்காவாசிப் புரோகிதாளும் வைதிகாளும் சாஸ்திரத்தையும் மந்திரங்களையும் நல்ல ரேட்டுக்கு வித்திண்டு தான் இருக்கா. கூடப் பத்து ரூபா தட்சிணை தர்றதா இருந்தாச் சீமாவையர் ஆத்திலே பூர்வ காரியங்கள் பண்ணி வைக்கிற அதே வாத்தியாரே வந்து நம்ம கமலியோட கல்யாணத்தை நடத்தி வச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லே." "இந்த ஈரோப்பியன்ஸ் வேடிக்கையான ஜனங்களா இருப்பா போலிருக்கு. இதுக்கெல்லாம் வேணும்னு ஆசைப்பட்டுத் தன்னோட அப்பாகிட்டவே சொல்லி வேண மட்டும் பணம் வாங்கிண்டு வந்திருக்கா அவ. நீங்க சிரமப்படணும்கிறதேயில்லே... அதையே கமலிகிட்டக் கேட்டு எல்லாச் செலவுக்கும் வாங்கிக்கலாம்..." "உளறாதேயும் சர்மா! எனக்கென்ன சிரமம் இதிலே? நான் இதைப் போலப் பத்துக் கல்யாணத்தைச் சொந்தமாக் கையிலேருந்து செலவழிச்சுப் பண்ணி வைப்பேன். அத்தனை சௌகரியத்தைப் பகவான் எனக்குக் கொடுத்திருக்கான்... எனக்கு இன்னும் ஒரு பொண்ணிருந்து அவளுக்குக் கல்யாணம் பண்ண நேர்ந்தா அதுக்கு நான் தானே கையிலேருந்து செலவழிக்கணும்?" "அப்பிடியா? பொண்ணுக்கு அப்பாவைக் கல்யாணத்துக்குச் செலவழிக்கக்கூடாதுன்னு சொல்ற முதல் மாப்பிள்ளையை இப்போதாண்டா பார்க்கிறேன், ரவி" என்று சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கூறினார் வேணு மாமா. சர்மாவோ ரவியோ அப்போது வேணு மாமாவை எதிர்த்து எதுவும் பேசவில்லை. உடனே புறப்பட்டு வரச் சொல்லி பம்பாயிலிருக்கும் தன் மகள் வசந்திக்கு ஓர் அவசரத் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லி ரவியையே தபாலாபீசுக்குப் போகச் சொல்லி அப்போது அனுப்பினார் வேணு மாமா. "கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளையை வேலை வாங்கறேனேன்னு நினைச்சுக்காதே அப்பா! எப்போ சாஸ்திரோக்தமான கல்யாணம்னு முடிவாயாச்சோ அப்புறம் பொண் பிறந்தாத்திலே தான் வந்து இருக்கணும். கமலி இங்கே வந்து தங்கிக்கணும்னா அவளுக்குத் துணை வேணும். அதனாலே வசந்தி உடனே வர வேண்டியதாயிருக்கு. அவ இருந்தாத்தான் இந்தக் கல்யாணம் சோபிக்கும். அதுவும் இந்தக் கல்யாணத்துலே அவளுக்குக் கொள்ளை ஆசை." தந்தியைக் கொடுத்துவிட்டு வரப் புறப்பட்டான் ரவி. "இன்னிக்கு என் மனசு சந்தோஷமா இருக்கறாப்பலே வேறே எந்த நாள்லேயும் இத்தனை சந்தோஷமா இருந்ததில்லே சர்மா! லக்கினப் பத்திரிகை எழுத ஒரு நல்ல நாள் நாழிகை பாருங்கோ." "என் மனசிலே திருப்தியும் இருக்கு தயக்கமும் இருக்கு. இது தவிர்க்க முடியாதது. இதைச் செய்துதான் ஆகணும்கிற நிர்ப்பந்தமும் ஒரு புறம் இருக்க - ஊரார் வாயை மூடி அடைக்கவாவது இதைத் தாமசப்படுத்தறதை விடச் சீக்கிரமே பண்ணிடறது நல்லதுன்னுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். ஆனா இதிலேயும் பல சிரமங்கள் வரும்..." "சிரமம் ஒண்ணும் வராது. நானாச்சு, இதை மங்களகரமா முடிச்சுவைக்க." "நீர் மட்டும் இல்லை. உம்மைப் படைச்ச பிரும்மாவே வந்தாலும் என் ஆத்துக்காரி காமாட்சியை மனசு மாறும்படி பண்ண முடியாது. விஷயம் தெரிஞ்சதும் என்னை அவ பிடுங்கித் தின்னப்போறா." "இதமா எடுத்துச் சொல்லிப் பார்த்துச் சமாதானப் படுத்த முடியாதோ சர்மா? உம்மை விடவா உம்ம ஆத்துக்காரி பெரிய வைதீகம்?" "என்னைவிட வைதீகமோ இல்லியோ, முரண்டு அதிகம். அறிவு, காரண காரியத்துக்குச் செவி சாய்க்கும், முரண்டு எதுக்கும் செவி சாய்க்காது." "ரவியையே விட்டுப் பேசிப் பார்க்கச் சொல்லு மேன்." "யார் சொன்னாலும் அவ கேக்க மாட்டா, அது அவ பிறந்த ஊர் ராசி. தலைப்பை இழுத்து இழுத்துப் போர்த்திண்டு அடக்க ஒடுக்கமா அதிகப் படிப்பில்லாமத் தனக்குக் கட்டுப்படற மாதிரி ஒரு கிராமாந்தரத்து மாட்டுப் பொண்ணைக் கனவு கண்டுண்டிருக்கா அவ." "கல்யாணம் பண்ணிக்கப் போறது அவளா உம்ம பிள்ளையான்னு கேக்கறதுதானே? அவன் வேலை பார்க்கற தேசம், அவனோட படிப்பு - சூழ்நிலை அதுக்கெல்லாம் பாந்தமா ஒரு பொண்ணைப் பார்க்கறதா? நம்ம கட்டுப் பெட்டித்தனம், மடிசஞ்சி மனப்பான்மை இதையெல்லாம் யார் கேக்கறா இப்போ? அதிர்ஷ்டவசமா அவனே அப்பிடி ஒரு நல்ல பொண்ணைத் தேடிண்டுட்டான். இதுக்கு ஏன் நாம குறுக்கே தடையா இருக்கணும்?" "பணிவுக்கும் அடக்கத்துக்கும் கூட கமலிகிட்டக் குறையொண்ணும் இல்லே. இத்தனை அடக்கமாகவும் விநயமாகவும் இன்னிக்கி நம்ம தேசத்துப் பொண்டுகள் இருப்பாளான்னு எனக்கே சந்தேகம் தான்." "நீர் இரண்டு நாள் கொஞ்சம் பொறுமையா இரும் சர்மா! எதுக்கும் வசந்தி வந்துடட்டும், அவளை விட்டு மாமிகிட்டப் பேசிப் பார்க்கச் சொல்லலாம். அநேகமா அவ பிளேன்லேதான் வருவா. இந்தக் கமலியோட கல்யாண விஷயத்திலே அவளாலே ஆவலை அடக்கிக்க முடியாது." "தனக்கா மனசுலே பட்டாலொழியக் காமு இதுக்கு சம்மதிக்கமாட்டா. முரண்டுன்னா அப்படி ஒரு முரண்டு அவளுக்கு." தந்தியைக் கொடுத்துவிட்டு ரவி தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான். துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|