5 விசுவேசுவர சர்மாவும், இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள். வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது. அவர்கள் தனியேயும், தங்களுக்குள்ளேயும் பேசிக் கொள்ளும்போது இருவரும் ஒருவரை மற்றொருவர் நீ - நான் - வா - போ என்று உரிமை பாராட்டி ஏக வசனத்தில் பேசிக் கொள்ளுவார்கள். ஆனால் மற்றவர்களிடம் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குறிப்பிட்டுப் பேச நேரும் போதெல்லாம் அவர், இவர் என்று மிகவும் மரியாதையாகத்தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். எதிரெதிரான வாழ்க்கை முறைகளையும், கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் நட்பையும் இழந்து விடாமல் அவர்களால் பழக முடிந்தது. அந்த அதிகாலை வேளையில் அன்று இறைமுடிமணி தன்னைத்தேடி வந்த காரியம் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது சர்மாவுக்கு. வந்தவர் தாமாகச் சொல்லுவதற்கு முன் தானே வலிய அவசரப்பட்டு விசாரிப்பது நன்றாக இராது என்று சர்மா இறைமுடிமணியின் குடும்ப ஷேம லாபங்களை விசாரிக்கலானார். இறைமுடிமணியும் சர்மாவின் குடும்ப ஷேம லாபங்களை விசாரித்தார்... பேச்சு ரவியைப் பற்றி விசாரிப்பதில் வந்து நின்றது. "தம்பிகிட்ட இருந்து லெட்டர் ஏதாச்சும் உண்டா?" "...போட்டுருக்கான்... புறப்பட்டு வரதாக்கூட எழுதியிருக்கான்..." "எப்ப வருதாம்...." "தேதி எழுதலே... சீக்கிரமா வருவான்... வரச் சொல்லிப் பதில் எழுதிப் போட்டிருக்கேன்." மனந்திறந்து பேசுவதற்கும் நம்பிக்கைக்கும் உரிய சிநேகிதனிடம் உண்மை நிலையைச் சொல்லி யோசனை கேட்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது. இருந்தாலும் இறைமுடிமணி தன்னைத் தேடி வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன் தான் எதையும் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று இருந்தார் அவர். இறைமுடிமணி அதிகமாக நேரத்தைக் கடத்தாமலும் சுற்றி வளைக்காமலும் வந்த காரியத்தைச் சொல்லி விட்டார். "வடக்குத் தெரு கோடியிலே இருக்கே ஒரு காலி மனை; அதுலே என் மருமகன் - அதாம்பா... மூத்த மகளோட புருசன் - குருசாமி பலசரக்குக் கடை போடணும்கிறான். விசாரிச்சதிலே அந்த இடம் உன் மடத்துக்குச் சொந்தமானதுன்னு தகவல் தெரிஞ்சுது. முடியுமானா அந்த இடத்தை ஒரு நியாயமான வாடகைக்குப் பேசி விட்டால் நல்லது. இதை உங்கிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..." "அந்த இடத்தை வாடகைக்கு விடலாம்னு நானாத் தீர்மானம் பண்ணிட முடியாது. ஸ்ரீ மடத்துக்கு ஒரு வார்த்தை எழுதிக் கேட்டுண்டு அப்பறமா உனக்குச் சொல்றேன்..." "எழுதப் போறதைக் காலதாமதம் பண்ணாமே கொஞ்சம் சீக்கிரமா எழுதேன்." "இதோ இன்னிக்கே எழுதிடறேம்ப்பா." "அப்ப நான் வரட்டா?" "கொஞ்சம் இரு தேசிகாமணீ? உங்கிட்ட ஒரு யோசனை கேட்கணும்." இறைமுடிமணி புறப்படுவதற்காக எழுந்திருந்தவர் மறுபடி திண்ணையில் உட்கார்ந்தார். குரலைத் தணித்துக் கொண்டு ரவியின் கடிதம், தன் பதில் எல்லாவற்றையும் விவரித்துக் கூறினார் சர்மா. பின்பு இறைமுடிமணியிடமே அபிப்பிராயம் கேட்டார். "என் நெருங்கின சிநேகிதன்கிற முறையிலே இதில் உன் யோசனை என்ன தேசிகாமணி?" "உன் மகன் தப்பா எதுவும் பண்ணிடலே. திருமணத்துக்குத் தக்க பருவம் வந்துவிட்ட இளைஞன் ஒருவனுக்கு அவன் பெற்றோர் திருமண ஏற்பாட்டை உரிய காலத்தில் செய்யத் தவறிவிட்டால் அந்த இளைஞன் தானே, தனக்குரிய மணமகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நியாயமானதே என்று அஷ்டாதச தர்ம சாஸ்திரத்தில் ஒன்றாகிய யாக்ஞவல்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே ஞாபகமில்லையா?" "தர்மமா இல்லையான்னு உன்னை நான் கேட்கலே. நடைமுறையில் உள்ள சாத்திய அசாத்தியங்களைப் பற்றித்தான் இப்ப உன்னைக் கேட்கிறேன்." "சாத்தியமா அசாத்தியமான்னு யோசிச்சுத் தயங்கிக்கிட்டிருக்கிறதை விடச் சாத்தியமாகிறாப்பலே செய்துக்க வேண்டியது தான். என்னைப் பொறுத்த வரை இத்தகைய கலப்பு உறவுகளை வரவேற்கிறேன்." - மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இறைமுடிமணி புறப்பட்டுப் போய் விட்டார். சர்மா யோசனை கேட்ட விஷயத்தில் சர்மாவுக்கு எது முடியும் எது முடியாது என்று எண்ணிப் பார்த்து யோசனை சொல்லாமல் ஒரு சுயமரியாதைக்காரர் என்ற முறையில் தன்னுடைய கொள்கைப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி. நாத்திகரான இறைமுடிமணி யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டிப் பேசியது பற்றிச் சர்மா ஒரு சிறிதும் ஆச்சரியப்படாததற்குக் காரணமிருந்தது. இறைமுடிமணி ஓர் ஆச்சரியகரமான மனிதராயிருந்தார். சிறு வயதில் ஒரு சுயமரியாதைப் பிரசங்கத்தில் தாக்கிப் பேசுகின்ற நோக்குடன் ஒரு புராணக் கதையைத் தவறாகவும் சிறிது மாற்றியும் சொல்லியதற்காக 'ஒன்றை அரைகுறையாகவும் தப்பாகவும் தெரிந்து கொள்வது தான் சுயமரியாதைக்காரருக்கு இலட்சணம் போலும்' என்று எதிர்த் தரப்புப் பத்திரிகையில் அவரைத் தாக்கி எழுதியிருந்தார்கள். உடனே ஒரு முரண்டுடன் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இருந்த புராணங்களையும், காப்பியங்களையும், நீதி நூல்களையும், தரும சாஸ்திரங்களையும், தக்கவர்கள் துணையோடு ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கினார் அவர். இறைமுடிமணியின் அந்த நேர்மை பலரைக் கவர்ந்தது. ஒன்றைக் கண்டித்தும், தாக்கியும் பேசுவது என்றால் கூட அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று உணர்ந்த அவரது நாணயம் அவர் சார்ந்திருந்த இயக்கத்துக்கே ஒரு மதிப்பை உண்டாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். இதனால் சங்கரமங்கலத்திலும் சுற்றுப்புறத்து ஊர்களிலும் புராண இதிகாச தர்மசாஸ்திரங்களில் எதிலும் நுணுக்கமான எந்த மூலையில் உள்ள எந்தக் கருத்தை விசாரிப்பது என்றாலும் ஒன்று பரம ஆத்திகராகிய சர்மாவை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது பரம நாத்திகராகிய இறைமுடிமணியை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டி இறைமுடிமணி பேசிவிட்டுப் போனபின்பும் சர்மாவின் மனதுக்குள் நெடுநேரம் வரை அந்த மேற்கோளைப் பற்றிய சிந்தனையே இருந்தது. பின்பு வீட்டுக்குள்ளே போய்க் காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து இறைமுடிமணி கேட்ட காலி மனை விஷயமாக ஸ்ரீமடத்துக்குக் கடிதம் எழுதினார். சீக்கிரம் கிடைக்கச் சொல்லிக் கல்லூரிக்குச் செல்லும் தன் மகன் குமாரிடம் அந்தக் கடிதத்தை உடனே கொடுத்து அனுப்பினார். மனம் என்னவோ இடைவிடாமல் ரவியையும் அவனோடு வரப்போகும் அந்நிய நாட்டு யுவதியையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. "ராணி மங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரிப் பிரைவஸியே இல்லாத உம்ம வீட்டிலே அவாளை எப்பிடித் தங்க வைக்கப் போகிறீர்" - என்று வேணு மாமா கேட்டிருந்த கேள்வியும் கூடவே ஞாபகம் வந்தது. ரவியையும் அவனோடு வருகிற பெண்ணையும் வேணுமாமா வீட்டு மாடியில் தங்க வைப்பது சரியாகவும் பொருத்தமாகவும் இராதென்று அவர் நினைத்தார். சாதாரணமாகவே வம்பு பேசக் கூடிய ஊர் இன்னும் அதிகமாக வம்பு பேசுவதற்குத் தான் அது வழிசெய்யும் என்று அவருக்குத் தோன்றியது. 'குடும்பத்துக்கும் அவனுக்கும் பெரிய மனஸ்தாபமாம்; அதனாலே தான் அப்பா அம்மாவோடு சொந்த வீட்டில் தங்காமல் வேணு மாமா வீட்டில் போய் தங்கியிருக்கிறானாம்' - என்று ஊரிலே உள்ளவர்கள் பேசத் தொடங்கி விடுவார்கள். சர்மாவின் யோசனை சிறிது கலைந்தது. பார்வதி புத்தக அடுக்கும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டிருந்தவள் தெருவாசலில் படியிறங்குமுன் அவரிடம் சொல்லிக் கொண்டு போனாள். அவர் மனத்தினுள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக வீட்டின் உட்புறம் எழுந்து சென்றார். கூடத்திலும், மாடியிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். மாடி ஹாலில் கால் அடியினாலேயே நீள அகலத்தை ஒரு முறை அளந்தார். அப்போது அவருடைய மனைவி காமாட்சி அம்மாள் சமையலறையில் காரியமாக இருந்தாள். அந்த வீட்டில் குளியலறை இணைப்புடன் தனியாக ஓர் அறை கட்டிக் கொள்ள ரவிக்கு எல்லா உரிமையும் இருந்தது. சில ஆண்டுகளாக மாதாமாதம் அவன் அனுப்பியிருந்த பணமேகூட வட்டியுடன் சேர்த்து ஒரு பெருந்தொகையாக பாங்க் கணக்கில் இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இருந்தும்கூட அவன் கைப்படக் கடிதத்தில் 'எனக்கு அந்த வசதி செய்துதர வேண்டும், இந்த வசதி செய்து தர வேண்டும்' என்று எதுவும் அவருக்கு வற்புறுத்தி எழுதவில்லை. ஒரு வேளை அவனே வேணு மாமா வீட்டில் தங்கிக் கொள்கிற எண்ணத்தில் தான் அதெல்லாம் எழுதாமல் இருக்கிறானோ என்று கூட அவருக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. அவனுடைய வருகையைச் சில நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி எழுதவும் இனிமேல் முடியாது. அவர் ஏற்கெனவே வரச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை வேணு மாமாவின் பெண் வசந்தி தபாலில் சேர்த்து விட்டாள். இதுவரை இந்தப் பிரச்னையை அவர் யார் யாரிடம் கலந்தாலோசித்திருந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் ரவியின் மேல் அநுதாபத்தோடு தான் பதில் சொல்லியிருந்தார்கள். 'தனியிடம், குளியலறை இணைப்பு இவற்றை எல்லாம் ரவி கடிதத்தில் எழுதி வேண்டிக் கொண்ட பின்பு தான் செய்ய வேண்டுமா என்ன? அவன் கேட்காவிட்டாலும் நாமாகவே ஏற்பாடு செய்ய வேண்டியது தானே?" - என்று கூட ஒரு சமயம் இவர் மனத்தில் தோன்றியது. 'நாமாவது கொஞ்சம் வளைந்து நெளிந்து கொடுத்து அநுசரித்து போய் விடலாம். ஆசார அனுஷ்டானங்களில் பிடிவாதமுள்ள அவள் பாடுதான் சிரமம். இவளுக்குப் பதில் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பது தான் முடியாத காரியம்' என்று தம் மனைவியைப் பற்றி எண்ணித் தயங்கினார் சர்மா. ரவியும் அவனோடு அந்தப் பிரெஞ்சுப் பெண்ணும் சங்கரமங்கலத்துக்கு வந்து சேருவதற்குள்ளாவது தம் மனைவிக்கு விவரத்தைச் சொல்லியாக வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர். இப்போதே காமாட்சியிடம் அதைச் சொன்னால் அவள் தற்செயலாகவோ அல்லது வாய்தவறியோ பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டியிடம் பிரஸ்தாபிப்பாள். முத்து மீனாட்சிப் பாட்டி உடனே ஊரெல்லாம் தமுக்கடித்தாற்போல் அதைப் பரப்பிவிடுவாள் என்று பயந்தார் அவர். நீண்ட சிந்தனைக்குப்பின் மகன் ஊர் வந்து சேருவதற்குள் செய்யவேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி ஒரு வழியாக அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடைய அந்த வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. பக்கவாட்டில் பசுமாடுகள் தொழுவத்துக்குப்போக ஒரு வாசல் பயன்பட்டு வந்தது. தொழுவத்துக்கு அப்பால் பத்து பன்னிரண்டு தென்னைமரங்கள், நாலைந்து மா, பலா மரங்கள், பூஞ்செடி கொடிகள் அடங்கிய தோட்டமும் ஓர் இறவைக் கிணறும் வீட்டை ஒட்டினாற்போல் இருந்தன. தோட்டத்துக்கும் மாட்டுத் தொழுவத்துக்கும் வேலையாட்கள் வரப்போக அந்தப் பக்கவாட்டிலிருந்த வாசல் பயன்பட்டு வந்தது. வீட்டுத் கொல்லையிலிருந்தே தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் போகலாம் என்றாலும் வெளி ஆட்கள் வரப்போகப் பயன்படுகிற வரையில் தனி வாசல் இருந்தது. இந்த தனி வாசலில் வந்து சேருகிற விதத்தில் மாடியிலிருந்து தோதாகப் படிகள் இருந்தன. மாடியில் மரப்பலகையாலேயே அறை மாதிரித் தடுத்து மேலே ஒரு ஸீலிங் ஃபேனும் போட்டுக் கொடுத்துவிட்டு பக்கத்து ஹாலில் அதை ஒட்டினாற் போலேயே சில நாற்காலிகள், டைனிங் டேபிள்-தேடி வருகிறவர்களைப் பார்க்கிற வசதி எல்லாம் செய்து கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருந்தார் சர்மா. வேறு விதமான தயக்கங்கள், தர்மசங்கடங்கள் எல்லாம் இருந்த போதிலும் மகன் மேல் உயிர் நட்புக்கொண்டு அவனை நம்பி வருகிற ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைச் சாதாரணத் தேவைகளுக்குத் தவித்துக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உறுதியாக நினைத்தார் அவர். 'சர்மாவுக்கு இப்போ செலவு மிச்சம். அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்' - என்று முதல்நாள் வேணு மாமா சொல்லியிருந்த வார்த்தைகள் வேறு சர்மாவின் ரோஷத்தைக் கிளறி விட்டிருந்தன. 'நான் ஏதோ செலவு செய்யறத்துக்குத் தயங்கற மாதிரி அவர் சொல்லிக் காமிச்சுட்டாரே?" - என்று எண்ணி வருந்தினார் சர்மா. அன்று ஏதோ ஒரு வடக்கத்திப் பண்டிகைக்காகத் தபாலாபீஸ் - பாங்கு - எல்லாம் விடுமுறையாயிருந்தன. நினைத்த உடனே கொத்தனாருக்கும் மரவேலை செய்கிற மேஸ்திரிக்கும் சொல்லி அனுப்பினார் சர்மா. பாங்கை எதிர்பார்க்காமல் உடனடிச் செலவுக்குப் போதுமான ரொக்கம் கொஞ்சம் அவர் கையிலிருந்தது. எப்போதோ மலிவாக வருகிறதென்று வாங்கிப் போட்ட தேக்குமரம் வேண்டியமட்டும் வீட்டிலேயே இருந்தது அப்போது வசதியாகப் போயிற்று. அந்த ஊரைச் சுற்றி மலைப் பகுதியில் தேக்குமரம் அதிகம். பிற்பகலில் தச்சனும், கொத்தனாரும் வந்து அளவுகள் எடுப்பதைப் பார்த்த பின்புதான் காமாட்சியம்மாள் மெல்ல அவரை விசாரித்தாள்: "என்ன பண்ணப் போறேள்? கட்டிட வேலைக்காராளும் மர வேலைக்காராளும் வந்திருக்காளே?" "பிள்ளையாண்டான் பாரிஸிலேருந்து வரப் போறானே; அவன் தங்கிக் கொள்ள வசதியா இருக்கட்டுமேன்னு மாடியிலே ஒரு தனி ரூம் போடச் சொல்லியிருக்கேன்" என்று சர்வ ஜாக்கிரதையாக ரவி வருவதாக மட்டும் அவளிடம் சொன்னார் சர்மா. சாயங்காலம் தற்செயலாக அங்கே வந்த வேணுமாமாவும் அந்த ஏற்பாடுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சர்மாவைப் பாராட்டினார். "அடேடே! பரவாயில்லையே! தனியா ஒரு ரூம் போடணும்னு நான் சொன்னப்போ வேண்டா வெறுப்பாகக் கேட்டுண்டீர்! இங்கே வந்து பார்த்தால் ரொம்ப ஜரூரா எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கீரே!" "மனசுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கலையோ செஞ்சு ஆகணுமே?" "அப்படியெல்லாம் சொல்லப்படாது சர்மா. மனசுக்குப் பிடிக்காமப் போறாப்பல இப்ப ஒண்ணும் நடந்துடலே" என்று சொல்லி வேணு மாமா அவரை உற்சாகப்படுத்திவிட்டுப் போனார். பத்து நாட்களுக்குள் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. தனியறை - தங்குவதற்கு வசதிகள் எல்லாம் செய்யப்பட்டாயிற்று. வேணுமாமாவும் அவர் பெண் வசந்தியும் கூட வந்து பார்த்துவிட்டுச் சர்மாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டார்கள். அந்த வேலைகள் முடிந்து வெள்ளையடித்துச் சுத்தம் செய்த தினத்தன்றுதான் ரவியிடமிருந்து அவனும் கமலியும் புறப்பட்டு வருகிற தேதி முதலிய விவரங்கள் பற்றிக் குறிப்பிட்டுக் கடிதமும் வந்திருந்தது. அதிகம் செலவழித்து விமானத் தபால் உறையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தோடு இன்னோர் ஆச்சரியமும் இணைந்திருந்தது. தமிழக முறையில் அழகிய புடவையணிந்து திலகமிட்டுக் கொண்டு ரவிக்கு அருகில் கமலி அமர்ந்திருக்கிற வண்ணப் புகைப்படம் ஒன்றும் அந்த உறையில் இருக்கக் கண்டார் சர்மா. வருகிற தேதி முதலிய விவரங்களை எழுதிவிட்டு, "இதனுடன் உள்ள படம் இங்கே இந்தியத் தூதரக நண்பர் ஒருவர் எங்களுக்கு அவர் வீட்டில் விருந்தளித்த போது எடுத்த படம். அவர் வீட்டுப் பெண்களே கமலிக்குப் புடவை அணிவித்துப் பொட்டுவைத்து அழகு பார்த்து மகிழ்ந்தார்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்பதாக அந்தப் படத்தைப் பற்றியும் விவரம் குறிப்பிட்டிருந்தான் ரவி. உண்மையில் அந்தப் படத்தில் அந்தக் கோலத்தில் கமலி மிகமிக இலட்சணமாகத் தோன்றினாள். சர்மாவுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துப் போயிற்று. காமாட்சியிடம் விஷயத்தைச் சொல்லி விடுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று அவருக்குப் பட்டது. முன்னுரை, பீடிகை எதுவும் போடாமல், "அடியே உன் பிள்ளை எழுதியிருக்கான்...படிக்கிறேன் கேளு!" என்று இரைந்து படித்துவிட்டு மாடப் பிறையில் வைக்கச் சொல்லி உறைக்குள் இருந்த படத்துடன் சேர்த்தே கடிதத்தைக் காமாட்சி அம்மாளிடம் கொடுத்தார் சர்மா. படத்தை அவள் பார்க்க வேண்டுமென்று எண்ணினார் அவர். படத்தைப் பார்க்க நேர்ந்தால் காமாட்சியம்மாள் உணர்ச்சி வசப்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த அம்மாளிடம் அசாதாரணமான அமைதியே தெரிந்தது. "ஏன்னா! அவன் மட்டும் தனியா வரலை போலிருக்கே?... இன்னும் யாரோ கூட வராங்கிற மாதிரி படிச்சேளே?...." "ஆமாம்!... அது சரி உங்கிட்டக் கொடுத்த அந்தக் கவர்லே ஒரு படம் இருந்துதே;... அதை நீ பார்க்கலியா காமாட்சி?" "இல்லையே? லெட்டரை மட்டும்தான் நீங்க படிச்சேள், கேட்டேன், படம் எங்கே இருக்கு?" சர்மா அந்த உறையை மறுபடி வாங்கி அதிலிருந்த படத்தைத் தனியே எடுத்து அவளிடம் நீட்டினார். காமாட்சியம்மாள் படத்தை வாங்கிப் பார்த்தாள். "இந்தப் பொண் யாரு?" "அதுதான் எழுதியிருக்கானே,... கமலீன்னு... படிச்சேனே நீ கேழ்க்கலியா?" "யாரு இவ?" "ரொம்ப லட்சணமா இல்லை?" "வயசுக்கு வந்து நல்ல கலரும் இருந்து உயரமும் வளர்த்தியுமா வந்தா எந்தப் பொண்ணும் அழகுதான். அழகுக்கு என்ன கொறைச்சல்? இது யாருன்னு சொல்லுங்களேன்...? புடவை பொட்டு எல்லாம் இருந்தாலும் நிறம், பார்வை ஒண்ணும் நம்மூர்ச் சாயல்லே இல்லியே?" "ரவியோட சிநேகிதி... பிரெஞ்சுக்காரி...?" "அவனோட இங்கே கூட வரதா எழுதியிருக்கானே... அது இவ தானே?" "ஆமாம்." "நம்ம தேசம் ஊரு எல்லாம் சுத்திப் பார்க்கறத்துக்காக வராளாக்கும்." "ஆமாம்! அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்." இதற்கு மேல் காமாட்சியம்மாள் அவரிடம் எதுவும் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாள். தனக்கும் கமலிக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டு முன்பு ரவி எழுதிய கடிதத்தை வேணு மாமாவுக்கும் அவர் மகள் வசந்திக்கும் மட்டும் காட்டி விட்டு இரும்புப் பெட்டியில் ரகசியமாக வைத்துப் பூட்டிய மாதிரி இந்தக் கடிதத்தைச் சர்மா பத்திரப்படுத்தவில்லை. கூடத்தில் உள்ள மாடப்பிறையில் மற்றெல்லாக் கடிதங்களையும் சாதாரணமாகப் போட்டு வைப்பது போல் போட்டு வைத்திருந்தார். சாயங்காலம் கல்லூரியிலிருந்து வந்த பின் குமார், பார்வதி எல்லாருமே அந்தக் கடிதத்தைப் படித்தார்கள். படத்தைப் பார்த்தார்கள். தீக்குச்சியை உரசிச் சுடர் தோன்றி அந்தச் சுடர் விரலைச் சுடுகிற எல்லைக்கு வந்ததும் குச்சியை சுடரோடு அவசர அவசரமாகக் கீழே போட்டு விடுகிற மாதிரிக் குழப்பத்தைத்தான் இனி உண்டாக்கும் என்ற எல்லையை அடைந்துவிட்ட அந்த ரகசியத்தை இப்போது மனத்திலிருந்து உலகுக்காக வெளியேற்றினார் சர்மா. தொடக்கத்தில் அவர் மனத்திலிருந்த விகல்பமும் வெறுப்பும் கூட இப்போது மெல்ல மெல்ல அமுங்கிப் போயிருந்தது. சில ஆயிரம் ரூபாய்களைச் செலவழித்துத் தனியறை - குளியல் வசதி இணைப்பு, வாஷ்பேஸின் - கண்ணாடி, சாப்பாட்டு மேஜை நாற்காலிகள்... எல்லா ஏற்பாடும் அந்தக் கர்நாடகமான பழைய வீட்டில் செய்யப்பட்டிருந்தன. பம்பாயில் இரண்டு தினங்களும் சென்னையில் நான்கு தினங்களும் தங்கிய பின் சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டுச் சங்கரமங்கலம் வருவதாக ரவி எழுதியிருந்தான். முதலில் மெதுவாக நகர்ந்த நாட்கள் அவனும் கமலியும் வருகின்ற தினம் நெருங்க நெருங்க விரைவாக ஓடின. யாரும் பம்பாய்க்கோ, சென்னைக்கோ எதிர்கொண்டு வர வேண்டாம் என்றும் தானே சங்கரமங்கலம் வந்து சேர்ந்து விடுவதாகவும் ரவியே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். "உம்ம வழக்கம்போல இரட்டைமாட்டு வண்டி கட்டிண்டு அவாளை வரவேற்க ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுடாதேயும். என்னோட கார் தவிரவும் பக்கத்து எஸ்டேட்காரரான சாரங்கபாணி நாயுடு கிட்ட இன்னொரு கார் இரவல் கேட்டிருக்கேன். வரவாளை அழைச்சிண்டு வர எல்லாருமே ரெண்டு கார்லே ஸ்டேஷனுக்குப் போகலாம். அன்னிக்கு முகூர்த்த நாள். அவாளை ஸ்டேஷன்லேருந்து அழைச்சிண்டு வந்து விட்டுட்டு எனக்குப் பூமிநாதபுரத்துலே ஒரு கல்யாணத்துக்குப் போகணும்" என்றார் வேணு மாமா. சர்மா சொன்னார்: "நல்ல வேளையாக இந்த மாச முதல் தேதியிலிருந்து ரயில் காலம்பர் அஞ்சே முக்கால் மணிக்கு வரது. முன்னாடி எல்லாம் மூணே முக்கால் மணிக்கோ நாலு மணிக்கோ வந்துண்டிருந்தது. போக வர ரொம்ப அசௌகரியமாயிருந்தது." "மாமி, குமார், பார்வதி எல்லாரும் ஸ்டேஷனுக்கு நம்மோட வராளோல்லியோ?" "குமாரும் பார்வதியும் வரா. அவ தான் வராளோ இல்லியோ, தெரியலே. வெள்ளிக்கிழமை வேறே. அவளுக்கு ஏகப்பட்ட பூஜை புனஸ்காரம்லாம் இருக்கும்." "ஒரு நாளைக்கு அந்தப் பூஜை புனஸ்காரத்தை எல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு வரட்டுமே...? தூர தேசத்திலேருந்து இத்தனை வருஷத்துக்கப்புறம் பிள்ளை வரபோது அம்மா ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்க வேண்டாமோ?" "நான் சொல்லிப் பார்க்கிறேன். ஆனா அவ வரது சந்தேகம்னு படறது எனக்கு." "நீர் பேசாம இரும். நான் காலம்பர நாலு மணிக்கு வசந்தியைக் காரிலே அனுப்பி மாமியைச் சரிகட்டறேன்." இவை ரவி சங்கரமங்கலம் வருவதற்கு முந்திய தினத்தன்று இரவு வேணு மாமாவும் சர்மாவும் பேசிக் கொண்டவை. மறுநாள் அதிகாலையில் சர்மா நாலு நாலரை மணிக்கே தயாராகி விட்டார். கிராமத்தில் அங்கங்கே கலியாண முகூர்த்தங்கள் இருந்ததால் நாதஸ்வர இன்னிசையும் வைகறையின் குளிர்ந்த காற்றும் மேற்கே மலையில் சாரல் பிடித்திருந்ததால் பன்னீர் தெளிப்பது போல் பெய்து கொண்டிருந்த பூந்தூற்றலுமாக இருந்தது அந்தக் காலை வேளை. காமாட்சியம்மாளை ரெயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போக வசந்தி காருடன் வந்து முயற்சி செய்தும் பலிக்கவில்லை. "எனக்கென்னடி வேலை அங்கெல்லாம்? நீங்கள்ளாம் போயிட்டு வாங்கோ போறும்! மனுஷா வரபோது வீட்டிலேயும் யாராவது இருந்து வான்னு சொல்லி வரவேற்கணுமோ இல்லியோ, நான் வீட்டிலே இருக்கேன்." வசந்தி மன்றாடியது, வீணாயிற்று. சர்மா, குமார், பார்வதி, வேணு மாமா, வசந்தி ஆகியோர் இரயில் நிலையத்துக்குப் புறப்பட்டார்கள். போகிற வழியில் பண்டாரத்தின் பூக்கடை வாசலில் காரை நிறுத்தி முதல் நாள் தகவல் சொல்லி வைத்திருந்தபடி அவன் கட்டிவைத்திருந்த மல்லிகைப்பூ மாலை இரண்டையும் வாங்கிக் காரில் வைத்துக் கொண்டாள் வசந்தி. அந்த வைகறை வேளையின் குளிர்ச்சியும் மல்லிகைப்பூ வாசனையும், எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்த நாதஸ்வரம், மேள வாத்திய இன்னிசைகளும் சேர்ந்து ஊரே கல்யாண வீடானாற் போன்ற சூழ்நிலையை உருவாக்கியிருந்தன. காரில் போய்க் கொண்டிருந்த போதே வேணு மாமா வசந்தியைக் கேட்டார். "மாமி ஏன் வரமாட்டேன்னுட்டா வசந்தி? ஏதாவது கோபமா?" "தெரியலே! பார்த்தால் சுமுகமாத்தான் பேசற மாதிரிப் படறது அப்பா!... ஆனா... மனசுலே என்னமோ இருக்கு..." "அதெல்லாம் ஒண்ணும் இருக்காதும்மா! பிள்ளை வரான்; பாயசம், பட்சணம்னு விருந்துச் சமையல்லே தீவிரமா இருக்காளோ என்னமோ?" என்று பேச்சை மாற்றினார் வேணு மாமா. இரயில் சரியான நேரத்துக்கு வந்து விட்டது. முதல் வகுப்பில் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரவியும் கமலியும் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியிலிருந்து இறங்கினார்கள். எளிய வாயில் புடவை, ரவிக்கை, குங்குமத் திலகத்துடன் எல்லாருக்கும் கைகூப்பி வணங்கினாள் கமலி. கிழக்கே சூரியோதயமாகிற வேளையில் சங்கரமங்கலம் ரயில் நிலையத்தையொட்டி இருந்த தனவணிக வைசியர் கல்யாண மண்டபத்தில் எந்த முகூர்த்தத்துக்காகவோ கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்தபோது, கமலியும் ரவியும் சங்கரமங்கலம் மண்ணில் கால் வைத்தார்கள். "இவர்தான் என் தந்தை" என்று ரவி சர்மாவை அறிமுகப்படுத்தியதும் அந்தப் பிரெஞ்சு யுவதி செய்த காரியம் சர்மாவை ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|