20

     தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.

     இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு ஆச்சரியம் அடைந்தாள். இப்படி ஒரு நோட்டீஸ் ரிஜிஸ்தர் தபாலில் வருகிற அளவுக்கு எந்தப் பெரிய குற்றத்தையும் தான் செய்யவில்லையே என்பதுதான் அவளுடைய இந்த ஆச்சரியத்துக்குக் காரணமாய் இருந்தது. படித்து முடித்ததும் அவளே தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தை ரவியிடம் கொடுத்தாள்.

     அவளுக்கு வந்திருந்த கடிதத்தைப் படித்ததனால் அதே போல ஒரு பதிவுத் தபாலில் தந்தைக்கு வந்திருந்த கடிதத்தைப் பற்றியும் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தந்தையிடம் அதைக் கேட்டு வாங்கிப் படிக்கத் தொடங்கினான் ரவி.

     அந்த இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்களும் ஒரே நோக்கத்தோடுதான் அனுப்பப்பட்டிருந்தன. 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து'(எல்லா உலகமக்களும் நன்றாக இருக்கட்டும்). 'சர்வே ஜனா சுகினோ பவந்து'(எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்) என்ற வேண்டுதலோடு தங்கள் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் முடிப்பவர்கள் அடுத்த வீட்டுக்காரன் நன்றாயிருப்பதைக் கூடப் பார்க்கப் பொறாதவர்களாக இருப்பது புரிந்தது.

     'பாதிக்கப்பட்ட' உள்ளூர் ஆஸ்திகப் பெருமக்களின் சார்பாக வக்கீல் நோட்டீஸ்களாக அவை அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

     "ஸ்ரீ மடத்து நிலங்களையும், சொத்துக்களையும், காலி மனைகளையும் ஆஸ்திகர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறவர்கள் வசம் விட்டிருப்பதாலும், மடத்து முத்திராதிகாரியாயிருந்தும், ஆசார அனுஷ்டானங்களுக்கு புறம்பானவர்களோடு பழகுவதும், அப்படிப் பட்டவர்களை வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்வதும், முறையற்ற செயல்களாகப் படுவதாலும் சரியான காரணமும், சமாதானமும் கூறாத பட்சத்தில் சட்ட ரீதியாக ஏன் அவர்மேல் நடவடிக்கை எடுக்கலாகாது?" - என்று சர்மாவைக் கேட்டது அந்த வக்கீல் நோட்டீஸ்.

     'உள்ளூரில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கைக்குரிய கோயில்களில் நுழைந்து கர்ப்பக்கிருஹத்துக்கு மிகச் சமீபம் வரை சென்று தரிசித்துக் கோவிலின் விதிகளையும், ஆகம சுத்தத்தையும் மீறுவதானது மனிதாபிமானிகளாகிய ஆஸ்திகர்களைப் பாதிப்பதனால் பிற மதத்தைச் சேர்ந்தவர்களாகிய கமலியின் மேல் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கலாகாது?' - என்று கமலியின் பெயருக்கு வந்திருந்த நோட்டீஸ் அவளைக் கேட்டது.

     கமலிக்கு வந்திருந்த நோட்டீஸை அப்பா கேட்காமலே அவரிடம் படிப்பதற்கு நீட்டினான் ரவி. அவரும் அதை வாங்கிப் படித்தார். பின்பு இரண்டு கடிதங்களையும் ஒன்றாகச் சேர்த்துத் தம் வசமே வைத்துக் கொண்டார்.

     "நீ ஒண்ணும் கவலைப்பட்டு மனசைக் குழப்பிக்காதேம்மா! எல்லாம் நான் பார்த்துக்கறேன்" - என்று கமலியை நோக்கிச் சர்மாவே சமாதானமும் சொன்னார்.

     கமலிக்கு வந்திருந்த கடிதத்தில் கோவிலில் ஆகம ரீதியான சுத்தி பண்ணுவதற்கான செலவை அவள் ஏற்க வேண்டும் என்று வேறு மிரட்டியிருந்தது. சீமாவையர் நேரில் ஈடுபட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவர் தூண்டிவிட்டுத்தான் இப்படிக் காரியங்கள் நடக்கின்றன என்பதைச் சர்மாவால் வெகு சுலபமாக அநுமானித்துக் கொள்ள முடிந்தது. முன்பு சீமாவையர் மடத்து ஏஜெண்டாக இருந்த காலத்தில் அவர் ஸ்ரீமடத்து நிலங்களை அடைந்திருந்த பினாமி ஆள் ஒருவன் இப்போது நிலங்கள் தனக்கு அடைக்கப்படாத கோபத்தில் இருந்ததைப் பயன்படுத்தி அவன் மூலம் தான் வைக்கோற் படைப்புக்குத் தீவைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்ற இரகசியம் ஏற்கெனவே சர்மா காதுக்கு எட்டியிருந்தது.

     ரவி கேட்டான். "நான் யாராவது வக்கீலிடம் போய்க் கன்ஸல்ட் பண்ணிண்டு வரட்டுமா அப்பா?"

     "வேண்டாம். அவசியமானா அப்புறம் நானே உங்கிட்டச் சொல்றேன். கோர்ட், வக்கீல் இந்த மாதிரி விஷயங்களிலே வேணு மாமா பெரிய விவகாரஸ்தர். முதல்லே நான் இது விஷயமா அவரைப் போய்க் கலந்துக்கறேன்." -

     "செய்யுங்கோ அப்பா! எனக்கும் அதுதான் நல்ல யோசனையாப் படறது."

     இரண்டு கடிதங்களையும் எடுத்துக் கொண்டு வேணு மாமா வீட்டுக்குப் புறப்பட்டார் சர்மா.

     தெருத் திரும்பும்போது வில் வண்டியில் அமர்ந்தபடி சீமாவையர் எங்கோ புறப்பட்டுப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. சர்மா எந்தத் திசையில் நடந்து போய்க் கொண்டிருந்தாரோ அந்தத் திசையிலேயே இவருக்கு முன்பாகச் சிறிது தொலைவில் அந்த வண்டி போய்க் கொண்டிருந்ததனால் வண்டியில் பின்புறம் பார்த்தபடி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த சீமாவையர் சர்மா பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார். உடனே அவர் வண்டியில் இருந்தபடியே உரத்த குரலில் சர்மாவிக் குசலம் விசாரித்தார். சர்மாவும் சிரித்தபடியே மறுமொழி கூறினார்.

     "நீர் ஊரிலே இல்லாத சமயத்திலே படப்புத் தீப்பிடிச்சு எரிஞ்சுதுன்னா. போய்ப் பார்த்து உம்ம பையனிட்ட விசாரிச்சுட்டு வந்தேன். ஏதோ கஷ்டகாலம் போலிருக்கு."

     "....."

     அவர் அப்படி வண்டியில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டு வர தான் பின்னால் அதற்குப் பதில் சொல்லிய படியே தொடர்ந்து நடந்து செல்வதைச் சர்மா விரும்பவில்லை.

     "வரேன்... அப்புறமாப் பார்க்கலாம்" - என்று கூறி விட்டு விரைந்து வண்டியைக் கடந்து அதற்கு முன்னால் நடக்கத் தொடங்கினார் அவர். ஓர் அயோக்கியனுக்குக்கூட நல்லவனைப் போலப் பிறருக்கு முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் பாவனையை விட முடியாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார் அவர். சில சமயங்களில் சுபாவமாகவே நல்லவனாயிருப்பவனை மிஞ்சிவிடும் அளவுக்குப் பாவனையினால் நல்லவராக இருப்பவர்கள் சாதுரியமாக நடித்து அதில் வெற்றியும் பெற்று விடுவதாகக் கூடத் தோன்றியது. -

     பூர்வ ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோ கமலி இந்தியக் கலாசாரம், இந்திய வழிபாட்டு முறை என்றால் அதற்காக மனம் நெகிழ்ந்து உருகுகிறாள். கோவிலுக்கு உள்ளம் மலர்ந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் ஓடுகிறாள்.

     அந்த கலாசாரத்திலேயே அதன் வாரிசாகப் பிறப்பெடுத்திருப்பவராகச் சொல்லிக் கொள்ளும் சீமாவையருக்குச் சீட்டாடவே நேரம் போதவில்லை. அவர் கோயிலுக்குப் போய் வருஷக் கணக்கில் இருக்கும். ஆவலோடு கோவிலுக்குப் போகிறவளுக்கு ஏன் போகிறாய் என்று வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்ப முடிகிறது. இந்த முரண்பாட்டை நினைத்துப் பார்த்த போது சர்மாவின் உள் மனம் கொதித்தது.

     சர்மா தேடிச் சென்றபோது வேணுமாமா எங்கோ புறப்படத் தயாராயிருந்தாற் போல் தோன்றியது.

     "எங்கேயோ கிளம்பிண்டிருக்கேள் போல் இருக்கே...? போயிட்டு அப்புறம் சாவகாசமா வரட்டுமா?"

     "அவசரம் ஒண்ணுமில்லே! வாங்கோ, போஸ்டாபீஸ் வரை போலாம்னு புறப்பட்டேன். இப்போது உடனே போய்த்தான் ஆகணும்கிறதில்லே. அப்புறம் கூடப் போய்க்கலாம். நீங்க உட்காருங்கோ... அதென்ன கையிலே? லெட்டரா?"

     சர்மா உட்கார்ந்தார். வேணுமாமாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அந்தக் கடிதங்களையே அவரிடம் நீட்டினார்.

     "படியுங்கோ... இது விஷயமாகத்தான் உங்ககிட்டப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்! இது ரெண்டும் இப்பத்தான் சித்தே முன்னாடி ரிஜிஸ்டர் தபால்லே வந்தது..."

     "ஒண்ணு கமலி பேருக்கு வந்திருக்காப்லே இருக்கே?"

     "ஆமாம்! அவ பேருக்கு ஒண்ணும் எம் பேருக்கு ஒண்ணுமா வந்திருக்கு..."

     - வேணு மாமா அவற்றை ஒவ்வொன்றாகப் படித்தார்.

     "ஓகோ! விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வந்துடுத்தா. யார் வேலை இதெல்லாம்? வைக்கோல் படப்புக்குத் தீவைச்சு நாசம் பண்ணினது போறாதுன்னு இது வேறயா?"

     "யார்னு நான் சொல்லித்தான் தெரியணுமா? எல்லாம் சீமாவையர் வேலைதான்! என்னமோ ஆத்திரத்திலே, எது எதையோ பண்ணிண்டிருக்கார். என்மேலே தான் ஆத்திரம்; என் வீட்டிலே வந்து தங்கின பாவத்துக்கு அந்த பொண் மேலேயும் இப்படி விரோதம் காண்பிக்கணும்?"

     "இப்போ என்ன பண்றதா இருக்கேள்?"

     "என்ன பண்றதுன்னு உங்க கிட்டக் கலந்து பேசலாம்னு தான் இங்கே புறப்பட்டு வந்தேன்..."

     "வந்த மட்டிலே ரொம்ப சந்தோஷம்! ஆனா இதுக்கு நீரோ கமலியோ பதிலொண்ணும் எழுத வேண்டாம். தூக்கி மூலையிலே எறிஞ்சிட்டுப் பேசாமே இரும். சொல்றேன்."

     "எங்க மேலே ஏன் சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு என்னமோ நோட்டீஸ் விட்ட மாதிரியின்னா அனுப்பிச்சிருக்கா? பதில் எழுதாமே எப்பிடிச் சும்மா இருக்கிறது?"

     "நடவடிக்கை எடுக்கட்டுமே. அப்ப பாத்துக்கலாம்."

     "'ஆஸ்திகாள் மனம் புண்படறாப்பிலேயோ, ஸ்ரீ மடத்து நெறிமுறைகளுக்குப் புறம்பாகவோ எதுவும் செஞ்சுடலே' ன்னு நானும் எனக்கு இந்து மதத்தின் மேலேயும் இந்து கலாசாரத்தின் மேலேயும் மதிப்பும் பக்தியும் இருக்கு. அந்த மதிபோடேயும், பக்தி சிரத்தையோடயும் தான் நான் கோவிலுக்குப் போறேன்'னு கமலியும் ஆளுக்கொரு பதில் எழுதிப் போட்டுட்டா நல்லதில்லையா?"

     "வீண் வம்புக்காகவும் விரோதத்துக்காகவும் அனுப்பப்பட்டிருக்கிற இந்தக் கடிதாசுகளுக்கு அத்தனை மரியாதை தரவேண்டியது அவசியந்தானா சர்மா? நீரோ, கமலியோ, பதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவா உங்க மேல் நடவடிக்கைன்னு கோர்ட்டுக்குப் போகப் போறதென்னவோ நிச்சயம். நீர் பதில் எழுதறதாலே அது ஒண்ணும் மாறவோ குறையவோ போறதில்லே. பேசாம இரும். மேற்கொண்டு அவா என்ன தான் செய்யறான்னு பார்ப்போம், அப்புறம் நாம் பண்ண முடிஞ்சதைப் பண்ணலாம்."

     "சரி! நீங்களே சொல்றப்போ நான் வேற என்ன பண்றது? பதில் எழுதலே; விட்டுடறேன்."-

     "ஓய்! சர்மா! தைரியமா இரும். உம்மைப் போல ஞானவான்கள் எல்லாம் வெறுமனே பூச்சாண்டி காட்டறவாளுக்குக் கூடப் பயப்படறதாலேதான் மத்தவா குதிரையேற முடியறது. கமலியையும் ரவியையும் இங்கே புறப்பட்டு வரச்சொல்றதுக்கே பயந்தேள். அப்பவும் நானும் என் பொண்ணும் தான் 'வரச் சொல்லி எழுதும்! பயப்படாதேயும்'னு உமக்கு உறுதி சொன்னோம். இப்பவும் நான் சொல்றேன் பயப்படாதேயும் பயமே இல்லாத கெட்டவனைக் கூட மதிச்சுப் பணிந்து விட்டுக் கொடுத்து விடுவதும் பயந்த சுபாவமுள்ள ஒரு நல்லவனைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டேயிருப்பதும் வழக்கமாகிவிட்ட தேசம் இது!"

     "பல சமயங்கள்ளே என்னோட சாத்வீக குணத்தை நீங்க பயம்னு தப்பாப் புரிஞ்சுக்கறேள். நான் நீங்க நினைக்கறது போல அத்தனை பயந்தவன் இல்லே. பயந்தவனா இருந்தாத் துணிஞ்சு பிள்ளையையும் கமலியையும் வரவழைச்சு ஆத்திலேயே தங்க வச்சிண்டிருக்க மாட்டேன். எங்காத்துக்காரியே அதற்குக் கடும் எதிர்ப்பு ஓய்! பயந்தவனா இருந்தா மடத்து இடத்தை இறைமுடிமணிக்கு வாடகை பேசி விட்டிருக்க மாட்டேன். நிலங்களைச் சீமாவையரின் பினாமி ஆட்களுக்குக் குத்தகை அடைக்க மறுத்து நியாயமான விவசாயிகளுக்கு விட்டிருக்க மாட்டேன். என் தைரியத்தை நானே விளம்பரப்படுத்தப்படாது..."

     வேணுமாமா சர்மாவை நிமிர்ந்து பார்த்தார்.

     "சபாஷ்! இப்போதான் நீ உண்மையான வேதம் படிச்ச பிராமணர்! தைரியமில்லாத ஞானம் சோபிப்பது இல்லை. தப்பாக வேதம் படித்தவனை விட நன்றாகச் சிரைப்பவனே மேல்னு மகாகவி பாரதியார் எதிலியோ எழுதியிருக்கார் ஓய்!"

     சர்மா சொல்லியதை ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பார்த்த போது அவர் பயந்த சுபாவமுள்ளவர் என்று தாமாக அவரது குடுமியையும் விபூதிப் பூச்சையும், பஞ்சகச்ச வேஷ்டியையும் செருக்குத் தெரியாத பவ்யமான நடையையும் பார்த்து நினைத்திருந்ததுதான் தவறோ என்று வேணு மாமாவுக்கே இப்போது தோன்றியது. 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி நினைவு வந்தது அவருக்கு. சிறிது நேரம் யோசனைக்குப் பின், "நீர் பதிலொண்ணும் எழுத வேண்டாம். ஆனா இன்னிக்குச் சாயங்காலமே ரவியிடம் நான் சொன்னேன்னு கமலியைக் கோவிலுக்கு அழைச்சுண்டு போகச் சொல்லும். போயி..." என்று அருகே நெருங்கி மீதி விஷயத்தைச் சர்மாவின் காதருகே குரலைத் தணித்துக் கொண்டு கூறினார் வேணு மாமா.

     "இப்படிச் செய்யறதாலே என்ன பிரயோஜனம்னு புரியலே?"

     "பிரயோஜனம் நிச்சயமா இருக்கு! ரசீது மட்டும் ஞாபகமா வாங்கிக்கச் சொல்லும். மறந்துடாதேயும்! நாளை, நாளன்னிக்கின்னு ஒத்திப் போட்டுடப்படாது. இதை இன்னிக்கே செஞ்சாகணும்..."

     "சரி! நீங்க சொன்னபடியே பண்ணிடச் சொல்றேன். வரட்டுமா?" - என்று சர்மா புறப்பட்டார். வேணு மாமாவும் சர்மாவுக்கு உற்சாகமாக விடை கொடுத்தார்.

     அன்று மாலை சர்மா ரவியையும் கமலியையும் அழைத்து "ஏய் ரவி! இன்னிக்கிக் கமலியை கோவிலுக்கு அழைச்சிண்டு போயிட்டு வா! அதோட அங்கே கோவில் அர்த்த மண்டபத்திலே திருப்பணி நிதி வசூல்னு போர்டு மாட்டிண்டு ஒரு கிளார்க் உட்கார்ந்துண்டிருப்பான். அவனிட்ட இந்த ஐநூறு ரூபாயைக் கமலி கையாலேயே குடுக்கச் சொல்லி நம்ம வீட்டு அட்ரஸ் போட்டு அவ பேருக்கே மறந்துடாமே ஒரு ரசீதும் வாங்கிக்கோ" -

     என்று கூறி ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை அவனிடம் எடுத்து நீட்டினார் சர்மா.

     "திருப்பணி உண்டியல்னு வச்சிருக்காளே; அதிலே பணத்தைப் போட்டுட்டா என்ன? இதற்குப் போயி ரசீது எதுக்குப்பா?"

     "கண்டிப்பா ரசீது வேணும். அதுவும் நான் சொன்னபடி கமலி பேருக்கே வேணும். உண்டியல்லே போடப்பிடாது. நேரே குடுத்தே ரசீது வாங்கிண்டு வந்துடு" - என்று மீண்டும் வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார் சர்மா.

     அப்பா சொல்லியபடியே அன்று ரவி கமலியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனான். கணவனுக்கு அருகே அடக்க ஒடுக்கமாகச் செல்லும் ஓர் இந்துப் பெண் போல் ரவியோடு தேங்காய் பழத்தட்டு ஏந்திக் கோவிலுக்குச் சென்றாள் கமலி.