9 ஸ்ரீ மடத்தின் சங்கரமங்கலத்து முத்திராதிகாரியான விசுவேசுவர சர்மாவின் பொறுப்பில் இருந்த முக்கியப் பணிகளில் ஒன்று மடத்துக்குச் சொந்தமான நிலங்களையும் தோப்புத் துரவுகளையும் அவ்வப்போது குத்தகைக்கு ஒப்படைப்பது. அன்று மாலை மடத்து நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பவர்களின் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்திலோ - இயலாவிட்டால் அடுத்த கூட்டத்திலோ அவ்வருடக் குத்தகைகள் முடிவாக வேண்டும். பெரும்பாலும் ஒவ்வோராண்டும் மேற்கே மலையில் சாரல் பிடிக்கத் தொடங்கும் போது அவ்வூரில் குத்தகைகள் எல்லாம் தொகை பேசி முடிவாகி விடுவது வழக்கம். தன் பிள்ளை ரவி ஊரிலிருந்து வந்ததில் அன்று மாலை குத்தகைதாரர்களின் கூட்டம் இருப்பது அவருக்கு மறந்து போயிருந்தது. ரவியும் கமலியும் அவர்களோடு பார்வதியும் குமாரும் வேணு மாமா வீட்டு விருந்துக்குப் புறப்பட்டுப் போவதற்கு முன் ஸ்ரீ மடம் ஆபீஸ் கிளார்க் வந்து நல்ல வேளையாக அதை ஞாபகப்படுத்தி விட்டுப் போனான். மடத்திலிருந்து அவர் பெயருக்கு அன்று தபாலில் வந்திருந்த நாலைந்து கடிதங்களையும் அப்போது கிளார்க் அவரிடம் கொடுத்திருந்தான். அன்று நிலங்களைக் குத்தகைக்கு எடுப்போர் கூட்டம் இருப்பது ஞாபகம் வந்த பின்பே நாலைந்து விவசாயிகள் பின் தொடரச் சீமாவையர் தெருவில் மிடுக்காக நடந்து போன காட்சி மீண்டும் சர்மாவுக்கு நினைவு வந்தது. இந்தக் கூட்டத்துக்கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பது போல் சீமாவையர் காரியமில்லாமல் தெருவில் ஆள சேர்த்துக் கொண்டு போகமாட்டார் என்றும் புரிந்தது. கிராமங்களில் பெரும்பாலும் இம்மாதிரிக் கூட்டங்கள் இரவு எட்டு மணிக்கு மேல் தொடங்கிப் பத்து மணி பதினொரு மணி வரையில் நடப்பதுண்டு. எல்லா விவசாயிகளும் வந்து கலந்து கொள்ள அந்த நேரம் தான் வசதியாயிருக்கும். சங்கரமங்கலமோ நூற்றுக்கு நூறு சதவீதம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட கிராமம். வான் பொய்த்தாலும் தான் பொய்யாத வளத்தை உடைய ஜீவநதியாகிய அகஸ்திய நதியின் தலைக்கால் பாசனத்தில் அமைந்திருந்ததால் மண்ணில் பொன் கொழித்தது. அதிலும் மடத்து நிலங்கள் எல்லாம் விளைச்சலுக்குப் புகழ் பெற்ற அகஸ்திய நதியின் நல்ல கரைப் பகுதிகளில் இருந்தன. மடத்தின் பிரமாதமான சொத்துக்களாகிய நல்ல நிலங்கள், தோப்புத் துரவுகள், இரண்டு மூன்று பசு மடங்கள், விவாக மண்டபம், வீடுகள், காலி மனைகள் எல்லாம் அந்த ஊரில் தான் இருந்தன. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் வரை ஸ்ரீ மடத்தின் வைதிக விஷயங்களுக்கு மட்டுமே சர்மா பொறுப்பேற்றிருந்தார். நிலம் குத்தகை வருமானம் வீடு விவாக மண்டப வாடகைகள், வரவு செலவு போன்ற லௌகீக ஏற்பாடுகளைச் சீமாவையர்தான் கவனித்து வந்தார். குத்தகைப் பணவரவு செலவுகளில் ஊழலும், கையாடலும் பெருகிய பின், நிறையப் புகார்கள் வரவே பின்னால் அந்தப் பொறுப்பும் சர்மாவுக்கே வந்து சேர்ந்தது. சீமாவையரை விரோதித்துக் கொள்ளச் சர்மா பயந்தார். ஆனாலும் வேறு வழி இல்லை. சுவாமிகளே சர்மாவை அழைத்து, ஊர் நன்மைக்காகவும், ஸ்ரீ மடத்தின் நன்மைக்காகவும் அந்தப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றார். சர்மாவால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. அதற்குப் பின்னால் சர்மாவும் சீமாவையரும் பேசிக் கொள்வது, ஒருவருக்கொருவர் ஷேமலாபம் விசாரித்துக் கொள்வது எல்லாம் பழையபடி தொடர்ந்தாலும் சர்மாவின் மேல் சீமாவையர் உள்ளூற ஒரு வன்மம் வைத்துக் கொண்டு காத்திருந்தார். உள்ளே பகையொடுங்கிய புற மலர்ச்சிகளாலும் புறச் சிரிப்புக்களாலும் அவர் சர்மாவிடம் ஏமாற்றிப் போலியாகப் பழகி வந்தார். ஒரு யோக்கியன் போனால் போகிறதென்று அயோக்கியனைச் சகித்துக் கொள்ளவும் மன்னிக்கவும் கூடத் தயாராக இருப்பான். ஆனால் கடைந்தெடுத்த ஓர் அயோக்கியன் ஒரு போதும் தன் அருகிலுள்ள யோக்கியனைச் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ தயாராக இருக்க மாட்டான். காரணம் யோக்கியதை உள்ளவனை அளவு கோலாகக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் எது அயோக்கியத்தனம் என்பதே கண்டு பிடிக்கப் படுகிறது. ஆகவே அயோக்கியத்தனத்தைக் கண்டு பிடிக்க உதவி செய்கிற ஒவ்வொரு யோக்கியனும் அந்த விதத்தில் அயோக்கியர்களுக்கு இடையூறு ஆகிறான். சீமாவையருக்கு அப்படி ஓர் இடையூறாகச் சங்கரமங்கலத்தில் வாய்த்திருந்தார் விசுவேசுவர சர்மா. யாரையும் எதிரியாகப் பாவிக்காத சாத்துவீக குணம் இயல்பாகவே இருந்ததால் சர்மா - சீமாவையரிடம் கூட மரியாதையாகவும், பண்பாகவும் பழகி வந்தார். வேணுமாமா போன்றவர்கள் சிறிதும் தாட்சண்யமில்லாமல் வெறுத்து ஒதுக்கிய சீமாவையர் போன்றவர்களிடமும் சர்மாவால் வித்தியாசமில்லாமல் பழக முடிந்ததென்றால் கல்வியாலும் ஞானத்தாலும் வெறுப்பும், குரோதமும் என்ன வென்றே அறியாத ஒருவகை மனப்பக்குவம் அவருக்கு வந்திருந்ததுதான் காரணம். சீமாவையர் தெருவில் ஆட்கள் பின் தொடர நடந்து சென்றதைப் பற்றி யோசித்த சர்மா மடத்துக் குமாஸ்தா கொடுத்துவிட்டுச் சென்றிருந்த கடிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். முதல் கடிதமே இறைமுடிமணி அவரிடம் வந்து வாடகைக்குக் கேட்டுவிட்டுப் போயிருந்த வடக்குத் தெருவிலுள்ள மடத்துக்குச் சொந்தமான காலிமனையைப் பற்றியதாக இருந்தது. "ஒழுங்காக வாடகை தரக்கூடிய யோக்கியமான பார்ட்டிக்கு அந்த இடத்தைச் சர்மாவாகப் பார்த்து வாடகைக்கு விட்டு விடலாம்" என்று ஸ்ரீ மடம் மானேஜர் பதில் எழுதியிருந்தார். இரண்டாவது கடிதத்தில் நிலங்களை குத்தகைக்கு அடைக்கும்போது பெரிய பணக்காரர்களிடமும் வசதியுள்ள மிராசுதார்களிடமும் அடைத்து விடாமல் ஸ்ரீ மடத்துக்கு நாணயமாக நடந்து கொள்ளக் கூடிய உழைக்கும் திறனுள்ள ஏழை விவசாயிகளுக்குப் பயன்படுமாறு பகிர்ந்து அடைப்பது நல்லது என்று சுவாமிகளே அபிப்பிராயப்படுவதாகக் கடிதத்தில் எழுதியிருந்தது. சில ஏழைகளின் முகத்தைக் காட்டி அவ்வூர் மிராசுதார்களே பெரும்பாலான நிலங்களிக் குத்தகைக்கு எடுப்பதாக மடத்துக்கு வந்திருந்த புகார்க் கடிதங்கள் இரண்டொன்றும் இணைக்கப்பட்டிருந்தன. அடுத்த கடிதம் சுற்று வட்டாரத்துப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பகவத்கீதை, திருக்குறள் பகுதிகளில் மனப்பாடப் போட்டி வைத்துப் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்ற சுவாமிகளின் ஆக்ஞையை விவரமாகத் தெரிவித்தது. மடத்திலிருந்து வந்த நான்காவது கடிதத்தில் சமஸ்கிருத வேத பாடசாலை பற்றிய சில விஷயங்களை விசாரித்திருந்தது. மற்றொரு கடிதத்தில் அகஸ்திய நதிக் கரையிலுள்ள கிராமங்களில் ஜீர்ணோத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் பாழடைந்திருக்கும் எல்லாக் கோவில்களைப் பற்றிய விவரங்களையும் உடனே திரட்டி அனுப்புமாறு கோரியிருந்தார் ஸ்ரீ மடம் மேனேஜர். சுவாமிகளின் ஆக்ஞைப்படி அக்கடிதம் எழுதப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதங்களை வீட்டுக்குள் கொண்டு போய் வைத்து விட்டுச் சந்தியா வந்தனத்துக்காக ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார் சர்மா. ஆற்றங்கரையில் சந்தியா வந்தன ஜபதபங்களை முடித்துக் கொண்டு வீடு திரும்புகிற வழியில் தான் இறைமுடிமணியின் விறகுக்கடை இருந்தது. கடையில் கூட்டமில்லை. அநேகமாகக் கடை மூடுகிற நேரமாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. இறைமுடிமணியின் இயக்க சம்பந்தமான ஆட்கள் சிலர் சுற்றி உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கடை வாசலில் விசுவேசுவர சர்மாவைப் பார்த்ததும் இறைமுடிமணியே எழுந்திருந்து எதிர் கொண்டு வந்து விட்டார். "இதுக்குன்னு வரலே தேசிகாமணி! ஆத்தங்கரையிலேருந்து திரும்பிப் போற வழியிலே வந்தேன். நீ வாடகைக்குக் கேட்டியே அந்த வடக்குத் தெரு காலி மனை... அது விஷயமா மடத்திலேருந்து பதில் வந்துடுத்து." "என்னான்னு வந்திருக்கு?" "ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டி யாராயிருந்தாலும் நானாப் பார்த்து வாடகைக்கு விட்டுக்கலாம்னு எழுதியிருக்கா." "நான் ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டீன்னு நீ நம்புறியா இல்லையா?" -இறைமுடி மணி சிரித்தபடியே இப்படிக் கேட்டார். "நம்பிக்கைக்கென்ன கொறைச்சல்? நாளைக்கி வாயேன் பேசி முடிவு பண்ணிப்போம்" என்று சொல்லிய படியே புறப்பட இருந்த சர்மாவிடம் "சரி! நாளைக்கி வரேன் முடிவு பண்ணிக்கலாம். ஒரு நிமிஷம் நில்லு! உங்கிட்ட வேற ஒரு முக்கியமான சமாசாரம் காதிலே போட்டு வைக்கணும்" என்றார் இறைமுடிமணி. "என்ன, சொல்லேன்" என்ற சர்மாவுக்குப் பதில் கூறாமல் கடையின் உட்புறம் உட்கார்ந்திருந்தவர்களின் பக்கம் திரும்பி "இந்தா மலர்க்கொடி, இங்கே வாம்மா" என்று ஒரு பெண்ணை நோக்கிக் குரல் கொடுத்தார் இறைமுடிமணி. கருநிற வாயில் புடவை அணிந்த ஓர் இளம்பெண் எழுந்திருந்து வந்தாள். மாநிறமாயிருந்தாலும் கட்டழகோடிருந்த அந்தப் பெண் அருகே வந்ததும், "இது மலர்க்கொடி! இங்கே புனித அந்தோனியார் ஆரம்பப் பள்ளியிலே டீச்சரா வேலை பார்க்குது. நம்ம இயக்கத்துலே ரொம்ப ஈடுபாடு உள்ள பொண்ணு. பதினெட்டு வருசத்துக்கு முந்தி நம்மூர் ஆற்றங்கரை மைதானத்திலே முதல் சீர்திருத்த மாநாடு நடந்திச்சே, அப்ப ஒரு வயசுக் குழந்தை இது. ராக்காயின்னு முன்னாடியே வைச்சிருந்த பேரை மாத்தி 'ஐயா' கிட்டக் கொடுத்து வேறே பேரு வையுங்கன்னாங்க. ஐயா அப்பத்தான் இந்தப் பேரை சூட்டினாரு. போகட்டும் அதெல்லாம் பழைய சமாசாரம். இப்போ நான் சொல்ல வந்தது வேற கதை. அந்தி சந்தியிலே ஸ்கூல் விட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்து போறப்ப நடு வழிலே உங்க சீமாவையரு மாந்தோப்பு இருக்கு; அந்த மாந்தோப்பு வழியாத் தான் திரும்பிப்போகுது இது. ஒரு நா - ரெண்டு நா - வழி மறிச்சு வம்பு பண்ணினாராம். இன்னொரு நா கையைப் புடிக்க வந்தாராம். ஓடித் தப்பியிருக்கு. நீ கொஞ்சம் அந்த ஆளைக் கண்டிச்சு வையி... நாங்க இயக்க ரீதியா இதைப் பெரிசு படுத்த முடியும். வேண்டாம்னு பார்க்கிறேன். எதுக்கும் நீ சொல்லிக் கண்டிச்சு வையேன், உன்னாலே முடியும்னா...." "தேசிகாமணீ! அவன் பெரிய துஷ்டன்! நான் சொல்லித் திருந்தறவன் இல்லே. ஊர்ல பெரிய மனுஷன், பணக்காரன். பணமுள்ளவனா இருந்தாலும் குணவானா இருந்தா யோக்கியதை இருக்கும். இன்னிக்குக்கூட சாயரட்சை தெருவிலே நாலு ஆள் சகிதம் ஜரிகை அங்கவஸ்திரம் பளபளக்க மிடுக்கு நடை நடந்து போறப்போ சீமாவையர் என் பிள்ளை ஊர்லேயிருந்து வந்தது பற்றி என்னிடம் விசாரித்தான். நானும் சுமுகமாக இரண்டு வார்த்தை பதில் பேசினேன்." "தம்பி வந்தாச்சா?" "வந்தாச்சு; நாளை வர்றப்போ நீ பார்த்துப் பேசலாம். வீட்டுக்கு வாயேன்." "ஏதோ காதல் பிரச்னைன்னு சொன்னியே, அது என்னாச்சு?" "பிரச்னையும் கூடவே தம்பியோடப் புறப்பட்டு வந்திருக்கு! வந்து பாரேன்." "ஏன் அப்படிச் சொல்றே? அவன் பிரச்னையில் வீணாக நீ தலையிட்டு அதிகாரம் பண்ணாதே..." "தலையிடறதோ அதிகாரம் பண்றதோ எனக்குப் பழக்கமில்லே தேசிகாமணி!" "சரி. நேரே வந்து தம்பிகிட்டப் பேசிக்கிறேன். நீ போ." சர்மா விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இறைமுடிமணியிடம் சீமாவையரைப் பற்றிக் கேள்விப்பட்ட சம்பவம் போலப் பல சம்பவங்கள் பல புகார்கள் பல இடங்களிலிருந்து பல முறை அவர் காதுக்கு எட்டியிருந்தன. தேக்கு மரத்தில் செதுக்கிய சிலை போல் கவர்ச்சியாயிருந்த அந்தப் பெண் மலர்க்கொடியிடம் சீமாவையர் தப்பாக நடந்து கொண்டிருப்பாரா இல்லையா என்று சர்மா ஒரு சிறிதும் சந்தேகப்படவே இல்லை. சீமாவையர் போன்ற கோவில் காளை மேய்வதை ஒத்த தான்தோன்றித் தனமான மேய்ச்சல் குணமும் திமிருமுள்ளவர்கள் சிலரை அவர் அறிவார். அவர்களால் கிராமத்தின் பெயரே கெட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் அவமானப்பட்ட பின்பும் அவர்களுக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இம்மாதிரிக் காரணங்களால் தான் மடத்துப் பொறுப்புக்கள் சீமாவையரிடமிருந்து விரைந்து பறிக்கப்பட்டன. ஆனால் சீமாவையரோ தான் தவறுகள் செய்ததால் தான் அந்தப் பொறுப்புக்கள் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டன என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனக்கு எதிராக விசுவேசுவர சர்மா சதி பண்ணி மடத்து நிர்வாகத்தைச் சரிக்கட்டி அவர்கள் தயவில் அதை அடைந்திருப்பதாகவே கற்பனை செய்து கொண்டிருந்தார். "மனிதன் சில வேளைகளில் காமுகனாகவும் இருக்கலாம். ஆனால் எல்லா வேளைகளிலும் காமுகனாகவே திரியும் ஒரு மிருகம் எப்படி மனிதனா இருக்க முடியும்?' என்று பொருள்படும் ஒரு பழைய நீதி ஸ்லோகம் உண்டு. இப்போது அது சர்மாவுக்கு நினைவு வந்தது. சீமாவையர் போன்றவர்கள் மேல் தட்டுக்களில் தோன்றினால் அவர்களைத் திருத்த இறைமுடிமணிகளும் தோன்றத்தான் வேண்டும் என்று இப்போது சர்மாவே கோபமாக நினைத்தார். கோவில் காளைகளை யாராவது பிடித்துப் பவுண்டில் அடைக்கத்தான் வேண்டும் என்றும் தோன்றியது. பொதுவாக சர்மா விளக்கு வைத்த பின் சமைத்த பண்டம் எதுவும் சாப்பிடுவது இல்லை. கறந்த பசுவின் பாலும் இரண்டு வாழைப் பழமுமே அவரது இரவு உணவு. வீடு சென்று அந்த 'இரவு உணவை' முடித்துக் கொண்டு குத்தகைதாரர் கூட்டம் நடக்க இருந்த ஸ்ரீ மடத்தின் 'விவாக மண்டபம்' கட்டிடத்துக்குப் புறப்பட்டார் அவர். கடிதங்களையும் மடத்துக்குக் குத்தகை விவரங்களடங்கிய பெரிய பைண்டு நோட்டுப் புத்தகம் ஒன்றையும் ஒரு மடிசஞ்சிப் பையில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார் அவர். போகிற வழியில் வேணு மாமாவின் வீட்டிலிருந்த கலகலப்பையும் விளக்கொளி அலங்காரத்தையும், வாசலில் நின்ற கார்களையும் பார்த்தால் விருந்து முடிந்து ரவியும் கமலி முதலியவர்களும் வீடு திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேலே கூட ஆகலாம் என்று தோன்றியது. ஸ்ரீ மடம் கல்யாண மண்டபத்துக்கு அருகே தெருவில் திரும்பி அவர் செல்லும் திசைக்கு எதிர்த் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு விவசாயி மேலாடையை இடுப்புக்கு இறக்கியபடி, பணிவாக, "சாமி! குத்தகைக் கூட்டம் இன்னிக்கு இல்லேன்னாங்களே... பெறவு எண்ணைக்கு வரணும்?" என்று வினவினான். "யார் சொன்னா அப்படி? கூட்டம் இன்னிக்குத்தான் நடக்கப் போகுது, வா" என்றார் அவர். "சீமாவையரும் அவரு ஆளுங்களும் இன்னிக்கு இல்லேன்னு சொன்னாக்களே சாமி?" "நீ பேசாம எங்கூட வா சொல்றேன்." சர்மா அந்த விவசாயி பின் தொடரக் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார். வழக்கமாகக் குத்தகைக் கூட்டத்துக்கு வரும் திரளான விவசாயிகள் யாரையும் அப்போது அங்கே காணவில்லை. கல்யாணக் கூடத்தில் சீமாவையரும் அவருடைய கையாட்களாகிய நாலைந்து விவசாயிகளும் மட்டுமே நடுவாக அமர்ந்திருந்தனர். சுற்றுப்புரத்துப் பதினெட்டுக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து ஆர்வத்தோடு குத்தகை கேட்கும் வளமான மடத்து நிலங்களைக் கேட்க அன்று யாருமே வரவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும் இருந்தது. மறவன் தாங்கல், நத்தம்பாடி, ஆனந்தக் கோட்டை, அலங்கார சமுத்திரம் ஆகிய சுற்றுப்புறத்து முக்கியமான ஊர்களிலிருந்தும் கூட யாரையும் காணவில்லை. "வாங்கோ! சர்மாவுக்கு அதிக வேலையில்லே. கொஞ்சம்பேர் தான் வந்திருக்கா. குத்தகை சீக்கிரம் முடிஞ்சிடும்" என்று தம்முடைய பினாமிகளே அவ்வளவு நிலைத்தையும் மலிவாகக் குத்தகைக்குப் பிடித்து விடலாம் என்ற பகற்கனவுடன் உற்சாகமாக வரவேற்றார் அங்கு அமர்ந்திருந்த சீமாவையர். சர்மாவுக்கு அவருடைய சூது புரிந்தது. "நீங்க என்னை ரொம்ப ஷமிக்கணும் சீமாவையர்வாள்! ஸ்ரீ மடத்திலிருந்து எனக்கு வந்திருக்கிற ஆக்ஞையிலே பதினெட்டு சுற்றுப்புற கிராமத்து ஜனங்களையும் வச்சுண்டுதான் நெலங்களைக் குத்தகைக்கு விடணும்னு ஸ்பஷ்டமா எழுதியிருக்கு." "அப்போ இங்கே வந்திருக்கிற ரெண்டு மூணு கிராமத்து மனுஷாளை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பறது மட்டும் என்ன முறை?" "இதிலே மான அவமானம் ஒண்ணும் இருக்கிறதா எனக்குத் தோணலை; ஸ்ரீ மடத்து உத்தரவை நான் மீற முடியாது. அதுக்கு நான் கட்டுப்பட்டாகணும்." "எங்க நாளிலே இதெல்லாம் பார்க்கிறதில்லை. நாள் கடத்தாம குத்தகைக்குச் சீக்கிரம் விட்டுடுவோம்." "....." சர்மா இதற்குப் பதில் சொல்லவில்லை. குமாஸ்தாவைக் கூப்பிட்டு, அடுத்த வாரம் இதே கிழமை இதே இடத்தில் இதே நேரத்தில் ஸ்ரீ மடம் குத்தகைக்குக் கூட்டம் கண்டிப்பாக நடக்கும் என்று பதினெட்டு கிராமங்களுக்கும் தண்டோராப் போட்டுச் சொல்லி ஏற்பாடு பண்ணி விடுமாறு கூறிவிட்டு வீடு திரும்பி விட்டார் அவர். அவர் திரும்பிய போது காமாட்சியம்மாள் முத்து மீனாட்சிப் பாட்டியிடம் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். பாட்டியின் விசாரணை கமலியைப் பற்றி இருந்ததைச் சர்மாவே தம் செவிகளால் கேட்டவாறு தான் வீட்டுப் படியேறினார். காமாட்சியம்மாள் பாட்டிக்குக் கமலியைப் பற்றி என்ன சொல்ல இருந்தாளோ தெரியவில்லை. ஆனால் அவள் பதில் சொல்வதற்குள் சர்மா படியேறி வந்து விட்டார். "அவாள்ளாம் இன்னும் வரலையா?" "எவாளைக் கேக்கறேள்?" "பார்ட்டிக்குப் போனவாளைப் பத்தித்தான் கேட்கிறேன்..." "வரலை. இன்னும் நிறைய நாழியாகாதோ? இத்தனை சீக்கிரமா எங்கே வரப்போறா?" சர்மாவைப் பார்த்ததும் பாட்டி எழுந்து போய்ச் சேர்ந்தாள். அரைமணி நேரத்தில் பார்வதியும் குமாரும் மட்டுமே வேணு மாமா வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள். "ஏண்டா? அவாள்ளாம் எங்கே? வரலையா?" "இல்லேப்பா! பார்ட்டியிலே அந்த எஸ்டேட் ஓனர் சாரங்கபாணி நாயுடு வந்திருந்தார். அவர் திடீர்னு பார்ட்டி முடிஞ்சதும் அண்ணாவையும் அவன் கூட வந்திருந்தவாளையும் "வாங்களேன்! மலையிலே நம்ம எஸ்டேட் கெஸ்ட் ஹவுசிலே போய்த் தங்கிட்டுக் கார்த்தாலே திரும்பிடலாம்"னு கூப்பிட்டார். உடனே, 'நைஸ் ஐடியா'ன்னு அண்ணாவும் கமலியும் வேணு மாமாவும் வசந்தியுமா ரெண்டு கார்லே மலைக்குப் பொறப்பட்டுப் போயிட்டா." "யாரு? நாமக்கார நாயுடு தானே?" "அவரே தாம்பா...." குமார் சொல்லியவற்றைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளாத காமாட்சியம்மாள், "ஏன்னா? அவாள்ளாம் எங்கே?" என்று அப்போது தான் சர்மாவைக் கேட்டாள். சர்மா, குமார் தனக்குக் கூறிய அதே பதிலை இன்னும் அதிக வால்யூமுக்கு உயர்த்தி அவளிடம் சற்றே இரைந்து விளக்கிக் கூறினார். துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|