(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 15

     கூடல் மாநகரின், கூட கோபுரங்களின் உச்சியில் பாண்டியனுக்குரிய கயற்கொடி கம்பீரமாக அசைந்து கொண்டிருந்தது. நகரையொட்டி வைகை, ‘வை-கை!’ என்றில்லாமல் சீறிப் பாய்ந்து, பொங்கிப் பூரித்து நுரைகட்டி வேகமாக ஓடி, அக்கூடல் மாநகர் என்னும் மதுரையம்பதியைச் செழிப்பாக்கிக் கொண்டிருந்தது.

     அரண்மனையின் மூன்றாவது அடுக்கு உப்பரிகையின் விசாலமான கூடம். வீரர்களின் காவல் பலமாயிருந்தது. கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. வெளியிலிருந்து கோட்டைக்குள் செல்வோர் தகுந்த அத்தாட்சியின்றி அனுமதிக்கப்படுவதில்லை. கட்டுக்காவல் அம்மாளிகையைச் சுற்றிப் பலமாயிருக்க, அந்த விசாலமான கூடத்தில், பாண்டிய மன்னன் கோச்சடையன் இரணதீரன், அவன் மகன் பராங்குச மாறவர்மன், சித்திரமாயன், நாகபைரவன் ஆகிய நால்வரும் அமர்ந்திருந்தனர். அந்தக் கூடத்தின் நுழைவாயிலில் உருவிய வாளுடன் வீரர்கள் காவல் புரிய, எல்லா ஏற்பாடுகளும் திருப்தியைத்தர, கோச்சடையன் இரணதீரன் அனைவரையும் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினான்.

     “இன்று நாம் இம்மதுரையில் கூடியிருப்பது மிக முக்கிய விஷயம் என்று உங்களுக்குத் தெரியும்! நம் நாட்டைச் சுற்றிப் பல செயல்கள் நடந்துவிட்டன. நமக்குப் பகைவனான பல்லவ நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது! இரண்டாம் பரமேசுவரவர்மன் பட்டத்துக்கு வந்திருக்கிறான். அவர் மகன் நம் ஆதரவை வேண்டி இங்கே இருக்கின்றார். இந்தச் சமயத்தில் நண்பர்களாகிய நாம் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டியது முக்கியமாகிவிட்டது. அநியாயங்களை நாம் என்றுமே எதிர்த்திருக்கிறோம். அந்த அநியாயம் பல்லவ நாட்டில் நிகழ்ந்தால், அடுத்த நாட்டுக்காரராகிய நாம் வெறுமனே கைகட்டிக் கொண்டு சும்மா இருக்க முடியாது! ஏனென்றால் அங்கே தலை தூக்கிய அநியாயம் இங்கே மட்டும் தலை தூக்காதென்று என்ன நிச்சயம்? அதனால் பாதிக்கப்படுவது நாம்தானே! அதனால் நிச்சயம் நாம் பல்லவ நாட்டு உள் விவகாரங்களில் தலையிட வேண்டியிருக்கிறது. ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யவில்லை. சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே! என்று அறத்தையுணர்த்தும் பாடல் இருக்கிறது. இதையெல்லாம் இரண்டாம் பரமேசுவரவர்மன் நிச்சயம் படித்திருப்பார்! காரணம் ‘கல்வியிற் சிறந்த காஞ்சி’ என்று அதற்குச் சிறப்புப் பெயர் உண்டு. பல்கலைக் கழகம், அறிஞர்கள் இப்படிக் குறைவில்லாத அறிவுச் செல்வத்தைப் பெற்ற காஞ்சியின் அரசனான பரமேசுவரவர்மன், தன் மகனை மட்டும் ஒதுக்குவது எந்த நியாயத்தில் சேரும்? அத்தோடு ஒதுக்கியது மட்டுமின்றி, உருப்படாதவன் என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறாரே? அவர் மனம் என்ன கல்லா?” என்று நிறுத்திய பாண்டிய மன்னன், சித்திரமாயனைக் கவனித்தான்.

     சித்திரமாயன் முகம் உற்சாகத்தில் ஆழ்ந்தது. சிறிது நேரம் பேசாமலிருந்துவிட்டு மீண்டும் பாண்டிய அரசன் பேச்சைத் தொடர்ந்தான்.

     “இந்த அநியாயத்தை முறியடித்து இப்போதிருக்கும் மன்னருக்கு அடுத்தபடியாகப் பட்டத்துக்குச் சித்திரமாயனைத் தேர்ந்தெடுக்க நாம் முயல வேண்டும். என்னமோ சிறு பையன் பங்காளி வழி வந்தவன் ஊதினால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து நிற்கமாட்டான். அவனை இளவரசனாக்க முயற்சிப்பதாக நமக்குச் செய்திகள் கிடைத்திருக்கின்றன. அத்துடன் சித்திரமாயன் அவர்கள் பற்றி நாட்டில் நல்லவிதமான எண்ணத்தைப் பரப்பாது, ஒருவித கெட்ட அபிப்ராயத்தை உருவாக்கியிருக்கிறார்கள், நம் நண்பருக்கு வேண்டாதவர்கள். நானும் சாளுக்கிய அரசனான விசயாதித்தனும் அரக்கர்களா என்ன? எங்களுடன் பழகுவதாலேயே சித்திரமாயன் கெட்டுவிட்டதாக ஏன் தப்பான வதந்தியைப் பரப்ப வேண்டும்? எனவே நண்பர்களே! ஆட்சி பீடத்தில் நம் நண்பர் சித்திரமாயன் அவர்களை ஏற்றும்வரை நாம் ஓயக்கூடாது! இதற்காக நாம் அனைவரும் இன்று சபதமெடுப்போம்!” என்றான் பாண்டிய வேந்தன்.

     நாகபைரவன் கனைத்தான்.

     “பாண்டியச் சக்கரவர்த்தி, இந்தக் கொடுமை எங்கு அடுக்கும் என்று தெரியவில்லை. வீரமும், விவேகமும், அறிவும் பொருந்திய சித்திரமாயன் அவர்களுக்குப் பட்டம் கிடையாதாம்? சிறு பயலை அரசு கட்டில் ஏற்றுவார்களாம்? பல்லவ மன்னருக்குப் புத்தி மழுங்கிவிட்டிருக்கிறது! உங்களைப் போன்ற மன்னர்கள் உதவியால்தான் அவர் பட்டமேற்க வேண்டும்! ஆண்டவன் கருணை இவர் பக்கம் இருப்பதால்தான் நம் போன்றவர்களின் நட்புக் கிடைத்திருக்கிறது!” என்றான்.

     சித்திரமாயன் அதைக் கேட்டு, அங்கிருந்தவர்களை ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னான்:

     “இங்குப் பேசிய பாண்டிய வேந்தர் பேச்சும், நாகபைரவன் வார்த்தைகளும் எனக்கு மகிழ்ச்சியையே தருகின்றன. நான் என்ன சொல்வதென்றே புரியவில்லை. என்னை அரசுகட்டில் ஏற்றுவதற்குப் பாடுபடுவதாக மன்னர் சொன்னார். உண்மையிலேயே அதைக் கேட்டு உளம் மகிழ்ந்தேன்! மிகச் சோர்வுடன் இருந்த எனக்கு இவ்வார்த்தைகள் மன ஆறுதலைத் தந்தன. இதைவிட எனக்கு என்ன வேண்டும்?” என்று உணர்ச்சி மிகுதியால் பேச முடியாமல் மௌனமானான்.

     இறுதியில் பராங்குச மாறவர்மன் கூறிய வார்த்தைகள், மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

     “அரசுகட்டில் ஏற்ற வேண்டும் என்று இங்குப் பேசியவர்கள் சொன்னீர்கள்! எப்போது ஏற்றுவது? நண்பர் சித்திரமாயன் முதுமைப் பிராயம் அடைந்த பிறகா? ஒரு நல்ல மனிதரை இன்னும் ஆட்சியில் அமர வைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு நல்லதாகப்படவில்லை. ஆட்சியைச் சித்திரமாயன் அவர்களிடம் இப்போதே தர ஏன் நாம் முயலக் கூடாது? அதற்குக் குறுக்கே இருப்பவர்களை விண்ணுலகுக்கு அனுப்பிச் சித்திரமாயனை அரசனாக்க இன்றே நாம் முயல வேண்டும்!” என்றான் பாண்டிய இளவரசனான பராங்குச மாறவர்மன்.

     இதை ஆமோதித்தான் நாகபைரவன். பாண்டியனுக்கும் அது சரி என்றே பட்டது.

     “சித்திரமாயனைப் பல்லவ மன்னனாக்க வேண்டுமென்றால் இப்போதிருக்கும் வேந்தன் இரண்டாம் பரமேசுவரவர்மன் அழிக்கப்பட வேண்டும். அதற்கு என்ன செய்வது?”

     “பெரும் படையுடன் சென்று காஞ்சியைத் தாக்கிக் கைப்பற்றிச் சித்திரமாயனிடம் ஆட்சிப் பீடத்தை ஒப்படைக்கலாம்! போரின் முடிவு பல்லவனுக்குச் சாதகமாகிவிட்டால்? விளைவு...? இப்போதிருக்கும் நிலையைவிட மிகவும் மோசமாகப் போய்விடுமே. அதனால் தந்திரமாகக் கொல்வதுதான் உசிதமானது” என்று பாண்டிய வேந்தன் கருத்துச் சொன்னான். அவ்விதம் கருத்துச் சொல்வதால், மகன் என்ற முறையில் சித்திரமாயனுக்கு ஏதாவது மனச் சஞ்சலம் இருந்தால் கூறும்படியும் கூறினான்!

     அதைக் கேட்ட சித்திரமாயன் சொன்ன வார்த்தைகள் அனைவரையும் ஒரு முடிவுக்கு வரச் செய்தன.

     “அவரைத் தந்தை இல்லை என்று என்றோ நான் முடிவுக்கு வந்துவிட்டேன்! என்னை அவர் மகன் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு, நான் மட்டும் எப்படி அவரைத் தந்தை என்று கூற முடியும்? நீங்கள் எடுக்கின்ற எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகின்றேன்! ஒரு பகைவன் அழிவதை யார்தான் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்? அதனால் அவர் கொல்லப்படுவதை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்!” என்றான்.

     “அப்படியென்றால் இதற்கு யார் முயல்வது?”

     “நான் செய்கின்றேன் அந்த வேலையை!” என்றான் நாகபைரவன் உற்சாகத்துடன்.

     “நல்லது! நாகபைரவரிடமே இப்பொறுப்பை விடுவோம்!” என்று பாண்டிய வேந்தன் எழுத்து, “வாருங்கள், பகல் உணவை முடிக்கலாம்!” என்றான்.

     அனைவரும் எழுந்தனர்.



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19