(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 6

     தென்னை ஓலையால் வேயப்பட்ட பெரிய பந்தல். அதற்குப் பக்கவாட்டில் அதே ஓலையால் மறைப்பை ஏற்படுத்தியிருந்தனர். மிகப் பெரிய இடமாக அது பார்ப்பதற்கு இருந்தது.

     மன்னன் இரதம், அதை நெருங்கியதும் நின்றது. அதிலிருந்து இறங்கிய இராசசிம்மனை வரவேற்கப் பந்தலிலிருந்து யவன வணிகன் ஒருவன், குறுந்தாடியுடன் ஓடி வந்தான். அதற்குள் விஜயவர்மனும், மற்ற நகரப் பிரமுகர்களும் அங்கே வந்து சேர்ந்தனர்.

     முப்பது முழ உயரத்தில் மூங்கிற் கொம்பு ஒன்றில், பல்லவ நாட்டுக்குரிய நந்திக் கொடி, கம்பீரமாகக் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அதற்குக் கீழே யவன தேசத்துக் கொடி காற்றில் அசைய, இராசசிம்மன் அதைக் கவனித்துப் புன்முறுவல் செய்தான்.

     முரசங்கள் முழங்கின. துந்துபிகள் எக்காளமிட்டன. யவன வீரர்கள் வேல்களைக் கையில் பிடித்தபடி வரிசையாக நின்றனர். விஜயவர்மனும், மற்றும் நகரப் பிரமுகர்களும் புடை சூழ, மன்னன் பல்லவமல்லனுடன் பந்தலை நோக்கி நடந்தான்.

     “வர வேண்டும்! வரவேண்டும்!” என்று யவன நாட்டுப் பாணியில் குனிந்து மன்னனை வரவேற்றான் அந்த யவன வணிகன். பிறகு மன்னனை அழைத்துக் கொண்டு பந்தலுக்குள் நுழைத்தான். ஆற்று மணல் பரப்பி அதன் மீது புற்களைப் போட்டு வரிசையாகக் கலத்திலிருந்து இறக்கப்பட்ட குதிரைகள் கட்டப்பட்டிருந்தன.

     “மாமன்னர் வருகை உள்ளபடியே எங்களுக்குப் பெருமையைத் தருகின்றது!” என்றான் வணிகன்.

     “ம்... அப்படியா?” என்ற இராசசிம்மன், வரிசையாகக் கட்டியிருந்த புரவிகளைப் பார்வையிட்டான்.

     அப்போது-

     கடைசியில் தனியாகக் கட்டப்பட்டிருந்த வெண் புரவி ஒன்று மன்னன் கவனத்தை ஈர்த்தது. திரும்பி விஜயவர்மனுக்கு அப்புரவியைச் சுட்டிக்காட்ட, அதற்குள் பல்லவமல்லன், “எனக்கு அந்தக் குதிரை வேண்டும்!” என்றான் உற்சாகத்துடன்.

     உடனே யவன வணிகன், “அது உயர்ந்த சாதியைச் சேர்ந்தது மன்னா! தங்களுக்காகவே அதை இங்குக் கொண்டு வந்திருக்கின்றேன்!” என்றான்.

     ‘இது வணிகத் தந்திரமா?’ என்று அவனை உற்று நோக்க, அவன் முறுவல் செய்து நின்றான்.

     இராசசிம்மன், தன் பார்வையை அந்த வெண் புரவியின் மீது ஓட்டிய போது, மற்ற குதிரைகளுக்கில்லாத சிறப்பம்சம் அதிலிருக்கக் கண்டான்.

     விஜயவர்மன் மெல்லிய குரலில் “அருமையான குதிரையாகத்தான் இது இருக்கிறது!” என்றான்.

     புன்முறுவலுடன் இவர்களைக் கவனித்தபடியிருந்த வணிகன், “மன்னா, இடையில் குறுக்கிடுவதற்கு என்னை மன்னியுங்கள்! சமீப காலமாக வந்து இறங்கிய புரவிகளில் இம்மாதிரிப் புரவி வந்ததேயில்லை. தூய வெள்ளை நிறத்தில் இது போன்ற குதிரைகள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவை! அதுமட்டுமல்லாது இது அடிக்கடி தலையசைக்கிறது பாருங்கள்! இம்மாதிரி தலையசைப்பு சாதாரண இனத்தைச் சேர்ந்த புரவிகளுக்கு இருக்காது மன்னா!” என்றான்.

     மன்னன், அதைக் கேட்டு மெல்லத் தலையாட்டிவிட்டு, “இதன் விலை எத்தனை பொன்?” என்றான்.

     வணிகன் பணிவுடனே, “விற்பதற்காகக் கொண்டு வரப்பட்டதல்ல!” என்றான்.

     இராசசிம்மனுக்குத் திகைப்பேற்பட்டது.

     “அப்படியென்றால்..?” என்று வணிகனைப் பார்த்தான்.

     “தங்களுக்கு என் அன்புப் பரிசாக இதைத் தர விரும்புகின்றேன்!”

     “பரிசா, இக்குதிரை நல்ல விலை போகுமே. பரிசு என்று ஏன் நல்ல தொகையை இழக்க விரும்புகின்றாய்?”

     “அன்பிற்கு விலை இல்லை மன்னா!”

     இராசசிம்மன், விஜயவர்மன் பக்கம் திரும்பினான்.

     “பார்த்தாயா விஜயவர்மா! கடல்கடந்து இங்கு வாணிகம் செய்ய வந்திருக்கும் இவருக்கு என் மீது எவ்வளவு அன்பிருக்கிறது பார்த்தியா?” என்று சொல்லி முறுவலித்த போது, “எனக்கு இக்குதிரை வேண்டும்! நான் இதில் சவாரி செய்யப் போகின்றேன்!” என்றான் பல்லவமல்லன்.

     “நல்ல வேடிக்கை! நம் மல்லன் கூட இக்குதிரையில் சவாரி செய்ய விரும்புகின்றான்!” என்று சொல்லி மெல்லச் சிரித்த போது, இராசசிம்மன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறுவன் குதிரையை நோக்கி ஓடினான்.

     “என்ன இது?” என்று வியந்த வேந்தன், “மல்லா நில்! அது புதிய குதிரை. உனக்குப் பழக்கமில்லாதது” என்றான்.

     ஆனால் சிறுவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது மேலும் குதிரையை வேகமாக நெருங்க, “விஜயவர்மா, அவனைத் தடுத்து நிறுத்து” என்றான்.

     விஜயவர்மன், வேகமாகச் சென்று பல்லவமல்லனைத் தடுக்க அவன், “மாட்டேன்! எனக்கு இந்தக் குதிரைதான் வேண்டும்! அதில் சவாரி செய்யப் போகின்றேன்!” என்று உரக்கக் கூவினான்.

     அருகில் வந்த இராசசிம்மன், “என்ன மல்லா விபரீத விளையாட்டு? இது யவன தேசத்துக் குதிரை. மிக உயரம் வாய்ந்தது! அதுவுமல்லாமல் பழக்கப்படாத குதிரை. இதன் மீது சிறுவனான நீ சவாரி செய்ய முடியாது! எங்களைப் போன்ற பெரியவர்களுக்கே இது பழக்கப்பட வேண்டும்” என்றான்.

     கையையும் காலையும் உதறி, “முடியாது. இதில்தான் நான் சவாரி செய்யப் போகின்றேன்!” என்று சிணுங்க ஆரம்பித்தான்.

     “மல்லா, நான் சொல்வதைக் கேள்! அரண்மனையில் நிறையக் குதிரைகள் இருக்கின்றன... அவற்றில் ஒன்று... ஏன் நான்கு குதிரைகள்... விஜயவர்மா, அரண்மனை போய்ச் சேர்ந்ததும் நான்கு குதிரைகளை மல்லனுக்கு ஒதுக்கிவிடு. இப்போது இது வேண்டாம்!” என்றான்.

     ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பல்லவமல்லன், “எனக்கு இந்தக் குதிரைதான் வேண்டும்!” என்றான்.

     “என்ன இது? தொல்லையாகப் போய்விட்டது!” என்று மன்னன் நிமிர்ந்து பார்க்க, அனவரும் வேந்தனைச் சங்கடத்துடன் கவனித்தனர்.

     அச்சமயம் விஜயவர்மனை விலக்கிக் கொண்டு குதிரையிடம் செல்ல மல்லன் முயற்சி செய்தான்.

     “சொல்வதைக் கேளுங்கள்! அங்கே போகக் கூடாது” என்று விஜயவர்மன் கூற, அதைப் பற்றிக் கவலைப்படாது அவன் போக முயற்சி செய்ய, உடனே இராசசிம்மன், “மல்லனைத் தேருக்கு அழைத்துச் செல்!” என்று விஜயவர்மனுக்குக் கட்டளை இட்டான்.

     அவன், மல்லனை அப்படியே இரு கைகளாலும் தூக்கித் தேருக்கு அழைத்துச் செல்ல, “மாட்டேன்! நான் தேருக்கு போகமாட்டேன்!” என்று கைகால்களை உதறி அடம்பிடிக்க, அதைப் பற்றிக் கவலைப்படாமல் விஜயவர்மன், அவனை அப்படியே மேலுக்குத் தூக்கித் தேரை நோக்கி நடத்தான்.

     தன் முயற்சி தடைப்படும் போலிருக்கவே சிறுவன் ‘ஹோ!’வென்று அழ ஆரம்பித்தான். இராசசிம்மன் குதிரைகளைப் பார்வையிடுவதை நிறுத்திவிட்டுத் தேரை நோக்கி நடந்தான்.

     அரசனையும், மற்றும் திரளாக வந்த நகரப் பிரமுகர்களையும் கவனித்த யவன வணிகன், ‘இன்று தனக்கு நல்ல வேட்டைதான்!’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆனால் எல்லாம் இந்தச் சிறுவன் செய்த அமர்க்களத்தினால் பாழாகிவிட்டது. வருந்தியபடி மன்னனை வழியனுப்பத் தேரை நோக்கிச் சென்றான்.

     தேரில் அவனை ஏற்றுவதற்குள் விஜயவர்மனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அதற்குள் அவன் செய்த அமர்க்களம், அப்பகுதியையே கலக்கிவிட்டது.

     மன்னன் தேரில் அமர்ந்து, “விரைந்து தேர் போகட்டும்!” என்று சாரதிக்குக் கட்டளையிட்டான். இரதம் பறந்தது.

     பின்னால் நகரப் பிரமுகர்கள் தம்தம் புரவியில் அமர்ந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் மன்னர் வருகையில் கலகலப்புக்குள்ளாகிச் சிறுவனின் பிடிவாதத்தால் அமர்க்களப்பட்ட அந்த இடம், இப்போது மிக அமைதியாகி அவ்வப்போது எழுந்த குதிரைகளின் கனைப்பு ஒலியால், அந்த அமைதியில் லேசான சலனம் ஏற்படச் செய்தது.

     மிகச் சோர்வுடன் யவன வணிகன், எல்லாம் பாழாகிவிட்டதே என்ற கவலையுடன், இருக்கையில் வந்து சலிப்புடன் உட்கார்ந்தான்.

     அப்போது-

     அந்தத் தற்காலிகப் பந்தலுக்குப் பின்னாலிருந்த மரத்தினின்று ஒரு உருவம் வெளிப்பட்டது.

     தொலைவில் கேட்டுக் கொண்டிருந்த இரதத்தின் ஒலியும், அதையட்டி வேகமாகச் சென்ற புரவிகளின் ஓசையும் மெல்லத் தேய்ந்து கொண்டிருந்தன. அதையே கவனித்த அவ்வுருவம், “நல்ல சந்தர்ப்பம்! இன்றே முடித்துவிடலாம்!” என்று சொல்ல அதன் கண்களில் குரூரம் மின்னியது.

     அவ்விதம் சென்ற உருவம்தான் பல்லவமல்லனைக் கடத்துவதற்காகப் போய்க் கொண்டிருக்கும் கயல்விழி!



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19