![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 10 அருகே கடல் அலையின் ஆரவாரம். அத்துடன் நடுவே பெரிய ஆறு ஒன்று அந்தக் கடலில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. நள்ளிரவு நெருங்க இன்னும் ஒரு சாமம்தான் இருக்கிறது என்பது வானத்து விண்மீன்கள் இடம் பெயர்ந்திருந்த நிலையிலிருந்து தெரிந்தது. அச்சமயம், மழை அடர்ந்து பெய்வதும், திடீரென்று நிற்பதும், பிறகு சிறு தூறலாக விழுவதும் இப்படி வேடிக்கை பண்ணிக் கொண்டிருந்தது. இனிமேல் ஓட்டமும் நடையுமாகப் பல்லவமல்லனைச் சுமந்து கொண்டு செல்ல முடியாத நிலையில் அருகே இருந்த தென்னை மரத்தருகில் நின்றாள் கயல்விழி. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. இனி அவளால் வேகமாகப் போக முடியாது. இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. எனவே தோளில் மயக்கத்துடனிருந்த மல்லனைக் கீழே இறக்கினாள். நிதானப்படுத்தி, மூச்சை இயல்பான நிலைக்குவர, அந்த மரத்தின் மீது சாய்ந்த போது தூரத்தில் யாரோ ஓடிவரும் ஒலி, அவள் செவிகளில் வீழ்ந்தது. யார்...? வில்புருவம் மேல்நோக்கி வளையக் கண்கள் அகன்று விரிய விழிகள், அந்தக் கூரிய இருளை ஊடுருவின. யாரென்று தெரியவில்லை. ஹோவென்று கடல் அலையின் ஓசை வேறு அக்காலடியின் ஒலியை அடிக்கடி அழுத்திக் கொண்டிருந்தது. யாரோ வருகிறார்கள் என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகிவிடவே தப்ப வேண்டும் என்ற அவசரத்துடன் பல்லவமல்லனைத் தோளில் சுமந்து கொண்டு அந்த இருளில் மிக வேகமாக ஓடலானாள். ஏற்கனவே ஓடிவந்த களைப்பு அத்துடன் இதயம் தாங்க முடியாத அளவுக்கு மூச்சிரைக்க ஆரம்பிக்கவே, இனிமேல் ஓடுவது பிரயோசனப்படாது என்று நின்றாள். திரும்பவும் பல்லவமல்லனைக் கீழே இறக்கினாள். அப்பொழுது- மிக நெருக்கமாகக் காலடி ஓசை கேட்டது. கைகளை இறுக்கிப் பற்களைச் சினத்துடன் கடித்துத் “தொலைத்து விடுகிறேன் இவர்களை” என்று சொல்லிய போது, அந்த உணர்வைத் தாங்கமாட்டாது அவள் உதடுகள் துடித்தன. நெற்றியில் சதை பிய்ந்திருந்த இடத்திலிருந்து வழிந்திருந்த குருதி கட்டிப் போயிருந்தது. காலடி ஓசையும் இன்னும் மிக அருகில் கேட்கவே கயல்விழி குத்துவாளை எடுத்துக் கொண்டாள். செவிகளைக் கூர்மையாக்கினாள். தன்னைத் துரத்தி வரும் நபர் பலர் அல்ல. ஒருவர் என்பது அவளுக்குப் புலப்பட்டது. பரவாயில்லை... சங்கடப்பட வேண்டியிருக்காது. வருகின்ற ஆளையும் தீர்த்துவிட்டுப் பல்லவமல்லனுடன் மிகச் சுலபமாகத் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த ஓசை வரும் திசை நோக்கிக் கூர்ந்து கவனித்தாள். தட்... தட்... என்று வேகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவனும் ஓடி வருவதற்கு மிகவும் சிரமப்படுவதைக் கயல்விழி எளிதில் புரிந்து கொண்டாள். அவன் களைப்புடன் ஓடி வருகிறான். மூச்சு நின்று பழைய நிதானம் உடலுக்கு வந்து, பிறகு அவன் தன்னைப் பலத்துடன் எதிர்க்க ஆயத்தமாவதற்குள் அவனை அதற்குள் எளிதில் வீழ்த்திவிட வேண்டும் என்று முடிவு கட்டிச் சுற்று முற்றும் பார்த்தாள். அருகே புதர் ஒன்று இருந்தது. பல்லவமல்லனுடன் அருகே சென்று மறைந்து கொண்டாள். ஆளை வீழ்த்துவது ஒரு நொடி... அல்லது இரு நொடிக்குள் முடிந்துவிட வேண்டும். அதற்கு மேல் நேரத்தை வீணாக்கக் கூடாது. வீணாக்கப்படுகின்ற ஒவ்வொரு நொடியும் தனக்கு ஆபத்தாக முடியும். தான் மண்டபத்தில் இருக்கும் போது குதிரைகளில் வந்த ஆட்களாக இருக்கலாம். இப்போது தன்னைத் துரத்திவரும் காலடி ஓசை ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை பின்னால் அவர்கள் வரலாம். அதற்குள் இவனை வீழ்த்திவிட வேண்டும் என்று எச்சரிக்கையோடு குத்துவாளைக் கையில் எடுத்துக் கொண்டாள். கார்காலக் காற்றுடன் கடற்காற்றும் சேர்ந்து பலமாக வீசியது. தூறலும் இலேசாய்ப் ‘பொட் பொட்’ என்று தரையில் விழுந்து கொண்டிருந்தது. இருளைக் கிழித்தபடி கேட்டுக் கொண்டிருந்த ஓசைக்குரிய உருவம், கயல்விழியின் கண்களுக்குத் தெரிந்தவுடன், கத்தியை உயர்த்தினாள். ஒருவேளை வீசியெறியும் போது தவறிவிட்டால்? என்ன மடத்தனம்? இந்நேரத்திலா அச்சந்தேகம் முளைக்க வேண்டும்...? வீசுவதில் குறி தவறியதில்லை என்று எனக்குப் பெயர் உண்டு. அந்தப் பெயரைக் கெடுப்பது போன்று இச்சந்தேகம் இப்போதா முளைக்க வேண்டும்? அதற்குள் ஓடி வருபவன் மிகப் பக்கத்தில் வந்துவிடவே, இனிமேல் யோசித்துக் கொண்டு பொழுதை வீணாக்குவது வீண் என்பதை கயல்விழி உணர்ந்தாள். முதலில் கத்தியை வீசிவிடுவோம்! அப்புறம் மற்றது. அப்படிக் கத்தி வீச்சிலிருந்து அவன் தப்பிவிட்டால்...? உடனே அவன் மீது பாய்ந்து ஆளை அதே வேகத்தில் அழுத்தி, தலைகீழாய்ப் புரட்டிக் கீழே வீழ்த்திவிட வேண்டியதுதான் என்று முடிவுகட்டிக் கொண்டு அவள் கத்தியை அவனை நோக்கி வீச முனைந்த போது... ஏன் அவள் கண்கள் வியப்பால் விரிகின்றன? மிக உற்சாகத்துடன் புதரிலிருந்து எழுந்தாள். கத்தி ஒரு மூலையில் வீசியெறியப்பட்டது. உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. இதற்குள் மிக வேகமாக ஓடி வந்தவன் புதரிலிருந்து எழுத்த அவளைக் கவனித்துவிட்டான். யார்? என்று நிதானித்துப் பார்த்து அவனும் வியப்பால் திகைத்து நின்றுவிட்டான். மூச்சினைச் சமப்படுத்தி மிகச் சந்தோஷத்துடன் “கயல்விழி நீயா?” என்றான் சோமன் ஆவலோடு. “ஆம், நானேதான்!” “ஏன் மிக வேகமாக ஓடி வந்தாய்! இன்னும் ஒரு நொடிதான்! அதற்குள் உன்மீது கத்தியை எறிந்திருப்பேன்!” என்றாள். “என் மீதா?” என்று வியப்புடன் அவன் கேட்கக் கயல்விழியும் “ஆம்!” என்றாள். “ஏன் கயல்விழி! இன்னும் என் மீது வெறுப்பா வைத்திருக்கிறாய்?” “இல்லை, என்னைத் துரத்தி வரும் ஆள் நீ என்று நினைக்கவில்லை. மண்டபத்தில் மழைக்காக தங்கிய சமயம் புரவியில் வந்தவர்களில் ஒருவன்தான் என்று தவறாக எண்ணித்தான் அம்முடிவுக்கு வந்தேன்!” “நல்ல முடிவுக்கு வந்தாய்! என் ஆயுள் கெட்டியாக இருந்ததினால் தப்பினேன்!” என்று அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான் சோமன். கயல்விழி அப்புன்னகையைத்தான் என்றும் ஏற்றதில்லையே! அதனால் அவள் மனதில் தோன்றிய ஐயத்தைக் கேள்வியாக்கி அவனைப் பார்த்துக் கேட்டாள். “வேகமாக, ஏன் ஓடி வந்தாய்? அதைத்தான் சொல்ல வந்தேன்!” என்று அவன் வாயைத் திறப்பதற்கும், புரவிகள் ஓடிவரும் ஒலி கேட்பதற்கும் சரியாக இருந்தது! சோமன் பரபரப்படைந்தான். “கயல்விழி, சீக்கிரம்! அவர்கள் வருகிறார்கள்! அதற்குள் நாம் போய்விட வேண்டும்!” என்றான் வேகத்தோடு. அவள் செவிகளிலும் அந்த ஓசை வீழ்ந்தது. சுறுசுறுப்படைந்து, புதருக்குப் பின் ஓடி, மல்லனைத் தோளில் சாய்த்துக் கொண்டு, சோமனைப் பார்த்து ‘ம்’ கொட்டிவிட்டு ஓடத் துவங்கினாள். காபாலிகனும் வெறிபிடித்த மிருகம் போல அவளைப் பின் தொடர்ந்தான். அந்த இருளில் அவர்கள் இருவரும் மறைவதற்கும், விஜயவர்மன், புரவியுடன் அந்த இடத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது. பின்னால் வந்த வீரன் “சேனாதிபதி!” என்றான் உரக்க. விஜயவர்மன் வேகமாய்ப் புரவியைச் செலுத்திக் கொண்டு வந்ததினால், இவன் கூப்பிட்டது காதில் விழவில்லை. எனவே, அவன் குதிரை வேகமாகச் சென்று கொண்டிருந்தது. வீரனுக்கு அவசரம். மண்டபத்திலிருந்து புறப்பட்ட போதே சரியில்லை. குதிரையை நிறுத்தினான். மறைவான இடத்தை அவன் கண்கள் தேடின. கிட்டத்தில் புதர் ஒன்றைத் தவிர அவனுக்கு வேறு ஒன்றும் புலப்படாததால் வேகமாக அதை நோக்கி ஓடினான். காலில் ‘ணங்’கென்று கடினமான பொருள் மோதியது. “அப்பா!” என்று காலைப் பிடித்துக் கொண்டு குனிந்து அப்பொருளை எடுத்தான். “சேனாதிபதி, சேனாதிபதி!” என்று குரல் கேட்டு, “என்ன?” என்று திரும்பினான் விஜயவர்மன். பெருமூச்சு வாங்க ஓடி வந்த வீரன், முழங்கை அளவுக்கு நீண்டிருந்த குத்துவாளை விஜயவர்மனிடம் தந்தான். வாங்கித் திருப்பிப் பார்த்த அவன் “உன் மீது வீசியெறியப்பட்ட குத்துவாளா?” என்றான். “இல்லை சேனாதிபதி... புதருக்குப் பக்கத்தில் கீழே கிடந்தது.” “எந்தப் புதர்?” அவன் திரும்பி அவ்விடத்தைச் சுட்டிக் காண்பித்தான். விஜயவர்மன், பரபரப்போடு அந்த இடத்தை அடைந்தான். “இந்த இடம்தான் சேனாதிபதி!” கீழே குனிந்து பார்த்தான். சில காலடித் தடங்கள் தவிர மற்றபடி வேறொன்றும் புலப்படவில்லை. அரச மரத்தின் கீழ்ப் பல்லவமல்லனின் குண்டலம், அப்புறம் முன்னங்கால் ஒடிந்து கீழே கிடக்கும் உயர்ந்த ஜாதிக் குதிரை, இங்கே குத்துவாள்... இந்த மூன்றுக்கும் ஏதாவது தொடர்பு... யோசிக்க, யோசிக்க, நிச்சயம் இருப்பது போன்றுதான் அவனுக்குப் புலப்பட்டது. “என்ன சேனாதிபதி?” “இந்தப் பகுதியில்தான் எங்கேயோ பல்லவமல்லன் இருக்கின்றான். நாம் சீக்கிரம் கண்டு பிடித்துவிட வேண்டும். இல்லையென்றால் மல்லன் உயிருக்கு ஆபத்து!” “ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான்.” இருவரும் அந்த இருளில் புரவியைச் செலுத்தினர். |