(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

முன்னுரை

     உலகெலாம் ஓங்கிப் புகழ்பெற்ற கயிலாசநாதர் கோவில், இன்றைக்கு கி.பி. 1250 ஆண்டுகட்கு முன்பு, பிற்காலப் பல்லவர் ஆட்சி மகோன்னத நிலையில் இருந்த போது கட்டப்பட்டது. கட்டியவன்-இராசசிம்ம பல்லவன். அவன் இறுதிக் காலத்தையும், அவன் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மனைப் பற்றியும், அவனுக்குப் பிறகு பிற்காலப் பல்லவர் ஆட்சியில் புதிய மரபு தோன்றியதைப் பற்றியும் விளக்குவதே இந்நாவல்.

     கதைக்கு அனைவரும் நாயகர்கள்! இது என் தாழ்மையான கருத்து. அதுபோல இந்நாவலில் வருகின்ற ஒவ்வொருவரையும் நான் நாயகர்களாகவே கருதுகின்றேன்.

     சரித்திர நாயகர்களுடன், கற்பனை நாயகர்களை உலவவிட்டுக் கற்பனை வண்ணத்தில் மெருகு ஏற்றப்பெற்ற இந்நாவலைச் சரித்திர நாவல் சோலையில், ஒரு அழகான வண்ண மலராகத் தமிழ் வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

     கதைப் பாத்திரங்களை இயல்பான நிலையில்விட்டு நாவலை முடிப்பது ஒரு சிறந்த உத்தி. பேராசிரியர் கல்கி அவர்கட்கும் இது உடன்பாடு. அம்முறையில் இந்நாவலை நான் முடித்திருக்கின்றேன்.

     இந்நாவல் வெளிவர உதவிய பேரறிஞர், தமிழ்க்காவலர் உயர்திரு லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

இங்ஙனம்,
கௌரிராசன்
சென்னை-56
06.06.1981

கதைச் சுருக்கம்

     இன்றைக்குக் கி பி. 1250 ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலப் பல்லவர் ஆட்சி சிறப்பான முறையில் இருந்த நேரத்தில்... இராசசிம்ம பல்லவன், தன் இறுதிக் காலத்தில், தன் மகன் வயிற்றுப் பேரனான சித்தரமாயன் நடவடிக்கைகளில் மனக் கசப்புக் கொண்டிருந்தான். காரணம்? பல்லவ ஆட்சிக்கு ஊறு நேரும் வகையில், பல்லவ குலத்து எதிரியான பாண்டியனிடம் அவன் நட்புக் கொண்டிருந்தான். அத்துடன் நாட்டில் குழப்பம் விளைவிக்கும் கூட்டத்திடமும் அவனுக்குத் தொடர்பிருந்தது.

     அதனால் சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் வழி வந்த ஆறு வயதுச் சிறுவனான பல்லவமல்லனிடம் அன்பு கொண்டிருந்தான். யவனக் குதிரைகள் மாமல்லையில் வந்திறங்கிய செய்தி கேட்டு, அதை வாங்கும் எண்ணத்துடன் இராசசிம்மன், பல்லவமல்லனுடன் மாமல்லை செல்ல, இதை அறிந்து கொண்ட சித்திர மாயனும் அவனைச் சார்ந்த கும்பலும் ஒரு சதித் திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி சிறுவனைக் கடத்திப் பைரவனுக்குப் பலிதந்து... அதன் மூலம் சித்திரமாயன் ஜென்மப் பகைவனான பல்லவமல்லனை ஒழித்துவிடலாம் என்று முடிவு கட்டுகின்றனர். கலங்களில் இறங்கிய உயர் ஜாதிக் குதிரைகளில், வெள்ளை நிறக் குதிரை வேண்டும் என்று சிறுவன் கேட்க, இராசசிம்மன் ‘சிறுவனான நீ இதன் மீது சவாரி செய்ய முடியாது!’ என்கின்றான். ஆனால் சிறுவன், பிடிவாதத்துடன் அதுதான் வேண்டும் என்று சொல்லப் பலவந்தமாக அவனைத் தேரில் ஏற்றி மல்லை மாளிகைக்குக் கொண்டு சென்றுவிடுகிறான் மன்னன். இதனை மறைவிலிருந்து கவனித்த கயல்விழி - சித்திரமாயன் கூட்டத்தினைச் சேர்ந்தவள்- அதையே காரணமாக்கிச் சிறுவனிடம் அக்குதிரையைத் தருவதாகச் சொல்லி, அரண்மனையிலிருந்து கடத்திவிடுகிறாள். அவனைப் பைரவருக்குப் பலிதரும் கட்டத்தில் விஜயவர்மன் - இராசசிம்மன் மெய்க்காப்பாளன் - குறுக்கிடுகிறான். அச்சமயம் அங்கு நடந்த மோதலில், கள்ளத்தனமாகப் பின்னால் வந்து கயல்விழியால் தாக்கப்பட, விஜயவர்மன், மயக்கமுற்றுக் கீழே சாய்கின்றான். ஆனால் கயல்விழி, விஜயவர்மன் வீரர்களிடம் சிக்க, ஒரு காபாலிகன், அவளின் தந்தைக்கு நண்பன் எனறு சொல்லிக் கயல்விழியைத் தப்பிக்க வைத்துச் சிறுவன் பல்லவமல்லனுடன் மறைந்து விடுகின்றான். (அக்காபாலிகன்தான் பல்லவமல்லனின் தந்தை) மன்னன் இராசசிம்மன் மறைய, அவர் மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன், அரசுகட்டில் ஏறுகின்றான். அவனையும் வஞ்சகக் கூட்டம் கொன்றுவிடுகிறது. அதற்குப் பிறகு யார் என்ற கேள்வி எழ, காஞ்சியின் நகரப் பிரமுகர்கள், அமைச்சர் முதலானோர், சிறுவன் பல்லவமல்லனின் தந்தையான இரணியவர்மனை அரசனாகுமாறு சொல்கின்றனர். அவன் மறுத்துத் தன் புதல்வர் நால்வரில் ஒருவரை அரசனாக்குமாறு கூறுகின்றான். ஆனால் முதல் மூவரும் அரசுப் பொறுப்பேற்க மறுத்துவிடவே, பன்னிரண்டு வயதான பல்லவமல்லன், ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றான். நல்ல நாளில் அவனுக்கு முடிசூடப்படுகிறது. சித்திரமாயன், தன் காதலியை இழந்து பாண்டியனிடம் சரண் புகுகின்றான்.



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19