(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 1

     உலகெலாம் உணர்ந்து அறிதற்கு முடியாதவனும், நிலவுலாவிய நீர் மலி வேணியனும், அலகில்லாத சோதியனும் ஆகிய அந்த அம்மையப்பன் ஈசன் வாசம் செய்கின்ற கயிலாச நாதர் கோயில், புலர் காலை இருளில், மிக அமைதியாக இருந்தது.

     அதன் அற்புத வடிவமைப்பு எளிதில் புலப்படா வண்ணம் வைகரையின் இருள் அதன்மீது படர்ந்திருந்த போதிலும், அந்த வடிவமைப்பின் ஒப்பற்ற அழகைக் காண விரும்பி, வானிலிருந்து விழுந்து கொண்டிருந்த காலைப் பனிமழை அதன் மீதுபட்டு, இத்துணைக் கலைநயம் இதிலிருக்கிறதா என்பது போன்று அதிசயித்து வெண் முத்துக்களாய்த் தன் நீர்த் துளிகளை அரும்பி நின்றது.

     இன்னும் சிறிது நேரத்தில் காலை வரப் போகின்றது என்பதை அறிவிப்பது போன்று பறவைகளின் ‘கீச் கீச்’ என்ற ஒலியும், அப்பகுதியெங்கும் கேட்கலாயிற்று.

     அதற்குப் போட்டியாகத் தூரத்தில் காஞ்சிக் கோட்டையைக் காவல் புரிந்த யவன வீரர்களின் கூவல் ஒலிகள், இடையிடையே எழும்பி ஒலித்தன.

     இருள் விலகி, ஒளி வரப் போகின்றது! அதற்காக மகிழ்கின்றவர் அநேகம்! ஆனால், அந்தக் காலை ஒளி வரக்கூடாது என்பது போலக் கயிலாசநாதர் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் அமைந்திருந்த நந்தி மண்டபத்திற்கு வலப்புறத்திலிருந்த குளத்தின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்திருந்த சாம்பனுக்கு..?

     வரக் கூடாது என்கிற மாதிரி இங்குமங்கும் நிலை கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதே சமயம் அவன் கண்கள், அடிக்கடி கோவிலையொட்டி இடப்பக்கமிருந்த வீதியை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன.

     ஆத்திரமும், ஆவேசமும் அவன் முகத்தில் அடிக்கடி எழ, அடக்க முடியாமல் பற்களைப் பலமாகக் கடக்கென்று கடித்தான்.

     அதிகாலை இருளில் மேலே வந்து புலர் காலை ஒளியைப் பார்க்க விரும்பிப் படிக்கட்டுக்களில் அவனைப் போலத் தவமிருந்த தவளைக் கூட்டத்தில் சில, அவன் ஆத்திரத்துடன் பற்களைக் கடித்ததனால் ஏற்பட்ட ஓசைக்குப் பயந்து, தண்ணீரில் குதித்து நீந்தி மறைந்தன.

     பொழுது விடிந்துவிட்டால் எல்லாக் காரியமும் கெட்டுத் தொலையப் போகின்றது. என்ன செய்வது என்று அவன் மனதில் எழுந்த படபடப்பு பெருமூச்சாக வர, அக்காலைப் பனி மூட்டத்தில் அம்மூச்சு, ஆவியாகி பனிமூட்டத்தோடு சேர்ந்து மறைந்தது அப்போது.

     ‘சட்! இன்னும் என்ன அப்படி?’ என்று சிறிது கோபமாகவே முணுமுணுத்தான் அவன். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலத் தூரத்தில் ‘சலுங் சலுங்’ என்று சலங்கையொலி கேட்டது.

     கோவிலின் அற்புதமான கலை வண்ணத்தைக் கண்டுவிட்ட மகிழ்வில், மலர்ந்து நின்ற பனித்துளிகள் போல, அவன் முகமும் அவ்வோசை கேட்டு மலர்ந்தது.

     எழுந்து நின்றான்.

     தூரத்தில்- காலை ஒளி வந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக மறைந்து கொண்டிருந்த இளம் இருட்டில் பனித் தாரைகள் உண்டாக்கிய மெல்லிய தடையை நீக்கிக் கொண்டு வருவது போன்று, மங்கை ஒருத்தி, ஒயிலாக நடத்து வந்து கொண்டிருந்தாள்.

     சாம்பனுக்கு உற்சாகம் கரை புரண்டது. அவசரம் அவசரமாகக் கைகளை நன்கு தேய்த்துச் சூடேற்றிக் கொண்டான். மேற் போர்வையை விலக்கிப் பரந்த மார்பு தெரிகிற மாதிரி நிமிர்ந்து நின்றான்.

     இப்போது அவள், மிக நெருக்கத்தில் வந்துவிட்டாள். அவள் உடலின் அமைப்பு அந்நேரத்தில் அவனுக்குக் கிளுகிளுப்பைத் தந்தது. என்னமாய் இருக்கிறாள்? கண்களில் மயக்கம் அலைபாயப் பெருமூச்சுவிட்டான்.

     செக்கச் சிவந்த அந்த மென்வதனத்தில் வாரிச் செருகியிருந்த சுருண்ட கூந்தல் அசைய, துயிலெழுந்த மயில்போல அவள் காலிலிருந்த பரிபுரம் ‘சலுங் சலுங்’ என்று ஒலிக்க அவனிடம் வந்து சேர்ந்தாள். விழிகள் கயலெனச் சுழன்றன. கூடவே அவன் மனதும் சுழன்றது.

     உடனே அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. ‘சாம்பா! இவள் எழிலைப் பார்ப்பதற்கா இவ்வளவு நேரம் காத்திருந்தாய்? இதுவா உன் இலட்சியம்? உன் வேலையென்ன? அதைக் கவனி முதலில்!’

     சாம்பன் சமாளித்து, “மணிமொழி, என்ன இவ்வளவு நேரம்? நான் நடுநிசிக்கே இங்கே வந்துவிட்டேன்!” என்றான்.

     “நான் என்ன பண்ணட்டும்! இவ்வளவு நேரம் ஆகிவிட்டது!” என்று கலவரத்துடனே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

     ஏற்கனவே கயலெனச் சுழன்ற விழிகளில், இப்போது கலவரமும் சேர்ந்து கொள்ளப் பார்ப்பதற்கு அதுவும் ஒருவித அழகாகத்தான் இருந்தது சாம்பனுக்கு!

     “நான் சீக்கிரம் போக வேண்டும்! அவர் எழுந்துவிடுவார்!” என்றாள் பரபரப்புடன்.

     அவன் ‘ம்’ கொட்டிவிட்டு “முக்கிய செய்தியா?” என்றான்.

     “ஆமாம்!” என்று குனிந்து அவன் செவியருகில் தன் இதழ்களைக் கொண்டு சென்றாள்.

     குனிவினால் அவள் நாசியிலிருந்து எழுந்த இலேசான வெப்பக்காற்று, அவன் செவியில்பட்டு மனதில் கிளுகிளுப்பை உண்டாக்க, ‘இதற்கெல்லாம் மசிந்துவிடக் கூடாது’ என்று கவனமானான் சாம்பன்.

     அவள் சொல்ல வந்ததை இரண்டொரு வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.

     “இவ்வளவுதானா?”

     “ஆமாம், அவர் எழுந்துவிடுவார்; நான் வருகின்றேன்!”

     அவன் பதிலைக்கூட எதிர்ப்பார்க்காமல் திரும்பி, “நான் வருகின்றேன்!” என்று வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

     அந்த அதிகாலைக் குளிரில், அவள் நாசியிலிருந்து வந்த வெப்பக்காற்று, சாம்பன் செவியில்பட்டு அதனால் ஏற்பட்டிருந்த இதம் மனதில் மெல்ல மறைய, அவளையே... அவள் நடந்து செல்வதையே வெறித்து நோக்கினான்.

     அசைந்து, ஒசிந்து, அதனுடன் சல் சல் என்று பரிபுரம் ஒலிக்க அவள் அடியெடுத்துச் சென்றவிதம், சாம்பன் மனத்தில் பெருங் கிளர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது.

     அச்சமயம் உள்ளுணர்வு திரும்பவும் சாம்பனை எச்சரித்தது.

     ‘என்ன, இவள் நடையழகைக் காணவா இங்கு வந்தாய்? உன்னிடம் அவள் சொன்ன செய்தி என்ன? அதை நீ என்ன செய்ய வேண்டும்?’

     சாம்பன், விழிப்புப் பெற்றுச் சீக்கிரம் செயல்பட வேண்டும் என்று, அவனுக்கு எதிர்ப்புறத்திசையில் நுழைந்து வேகமாய் நடக்கலானான்.

     அதே சமயம்-

     சலுங் சலுங் என்ற ஒலியுடன் சீக்கிரம் அவர் எழுவதற்குள் போக வேண்டும் என்ற பரபரப்போடு மணிமொழி நடையை வேகப்படுத்த, அதனால் பரிபுரத்தின் ஒலி அதிகமாகி அமைதியாயிருந்த வீதியில், அவ்வொலி எங்கும் நிரம்பி ஒலிக்க, யாராவது தன்னைக் கவனித்துவிடப் போகிறார்களென்ற அச்சம், அச்சமயம் அவள் மனத்தில் எழுந்தது. உடனே தன் நடையை மட்டுப்படுத்தினாள். ஆனால், அடுத்த நொடியே அவர் எழுந்துவிட்டுத் தன்னைத் தேடினால்..? இந்தக் கேள்வி திரும்பவும் அவள் நடையில் வேகத்தைக் கூட்டியது. இவ்விதம் நடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் அகப்பட்டுக் கொண்டு இதுவரை அழகாய் அளவோடு அசைந்து கொண்டிருந்த பின்னழகின் அசைவில் இப்போது ஒருவிதச் சிதைவு தோன்றியது.

     அந்தப் பரபரப்புடனே வலப்பக்கம் திரும்பி மறைந்தாள் மணிமொழி.



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19