![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 17 காஞ்சி அரண்மனை. இரண்டாம் பரமேசுவரவர்மன், தான் கட்டப் போகும் விஷ்ணு ஆலயத்தைப் பற்றித் தலைமைச் சிற்பியோடு உரையாடிக் கொண்டிருந்தான். நின்றனை; இருந்தானை; கிடந்தானை - இந்த மூன்று நிலைகளில் திருமால் காட்சியளிக்கும்படி இக்கோவில் அமைய வேண்டும். கயிலாசநாதர் கோவில் சிவனுக்காகக் கட்டப்பட்டது. அம்மாதிரி அமைப்பில் திருமாலுக்கும் ஒரு கோவில் வேண்டும் என்ற முனைப்புடன் பரமேசுவரவர்மன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது- இரணியவர்மன் அவசரமாக உள்ளே வந்தான். “என்ன இரணியவர்மா?” “விஜயவர்மன் திரும்பி வந்திருக்கின்றான்!” “அப்படியா, உடனே வரச் சொல்” என்று தலைமைச் சிற்பியின் பக்கம் திரும்பி, “இன்னும் சிறிது நேரம் கழித்து வாருங்கள்!” என்றான். சிற்பி, “அப்படியே ஆகட்டும் அரசே!” என்று வெளியே வந்தான். மிகுந்த சோர்வுடனும், களைப்புடனும் உடைகள் கசங்கிக் கண்கள் உள்ளே சென்று மன்னன் முன் நின்றான் விஜயவர்மன். “என்ன விஜயவர்மா! இதுவரை எங்கிருந்தாய்?” என்று வினவினான் பரமேசுவரவர்மன். நடந்ததை முழுவதும் தெரிவித்தான் விஜயவர்மன். எல்லாவற்றையும் கேட்ட மன்னன், “முதலில் குளித்து, உணவுண்டு, உடை மாற்றி வா!” என்றான். ஆனால் விஜயவர்மன், சற்றும் எதிர்பாராமல் வாளை உருவி வயிற்றில் பாய்ச்சிக் கொள்ள முயன்றான். இரணியவர்மன் பாய்ந்து சென்று, வாளைப் பிடுங்கிக் கீழே வீசியெறிந்து, “என்ன, என்ன வேலை இது?” என்றான் திகைப்போடு. “இல்லை, என்னைச் சாகவிடுங்கள் மன்னா! என் உயிரைப் போக்கிக் கொள்ள விரும்புகின்றேன்!” என்றான். “நீ ஏன் சாக வேண்டும் விஜயவர்மா? சாகும் அளவுக்கு நீ ஒன்றும் தவறு செய்யவில்லையே?” என்று மன்னன் வினவ, “அரசே, தங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. பல்லவமல்லன் உயிரை நான் மீட்க முடியவில்லை. வாக்குறுதி தவறிய நான், உயிர் வாழ்வது பெரிய தவறல்லவா?” “என்ன வாக்குறுதி?” “தங்கள் தந்தைக்குப் பல்லவமல்லனைப் பகைவரிடமிருந்து மீட்டு வருவதாக நான் வாக்குறுதி தந்திருக்கின்றேன். ஆனால் மல்லன் பகைவர்களால்... அதைச் சொல்லவே என் நா கூசுகிறது... அதனால் என் உயிரை முடித்துக் கொள்ள நான் விரும்புகின்றேன்!” இரணியவர்மன் உரக்கச் சிரித்தான். அச்சிரிப்பினோடு மன்னரின் முறுவலும் சேர்ந்து கொண்டது. “ஏன் சிரிக்கிறீர்கள் அரசே?” “நீ நினைப்பது போல் பல்லவமல்லன் பகைவரிடம் சிக்கிக் கொள்ளவில்லை. உயிரோடு பத்திரமாக நம் பாதுகாப்பில்தான் இருக்கின்றான்!” என்றான் மன்னன். அதைக் கேட்ட விஜயவர்மனுக்கு முகம் மலர்ந்தது. “என்ன சொல்கிறீர்கள் அரசே! மல்லன் உயிரோடு இருக்கின்றானா?” “ஆமாம்! நாட்டின் நன்மைக்காக நாங்கள் இரகசியமாக வைத்திருக்கிறோம்! பல்லவமல்லனைக் காப்பாற்றியேதே நீதான்!” என்றான் இரணியவர்மன் அச்சமயம் குறுக்கிட்டு. “ஒன்றுமே புரியவில்லையே?” “சொல்கின்றேன் கேள்! அந்தத் தென்னந்தோப்பில் நீ தாக்க வருவதற்கு முன்பு நாகபைரவனிடம் ஒரு அம்பு வந்து விழுந்ததே நினைவிருக்கிறதா? அது என்னால் செலுத்தப்பட்டதுதான்! நான் எப்படி அங்கே வந்தேன் என்று கேட்கிறாயா? சிறிது காலமாகவே சித்திரமாயன் போக்குச் சரியில்லாததால் அவனைக் காபாலிக உருவில் நான் பின் தொடர்ந்தேன்! அப்போது தென்னந்தோப்பும்... அதற்கு நடுவில் ஒரு பள்ளமும்... அதில் ஒரு மண்டபமும்... அந்த மண்டபத்திலிருக்கிற நாகபைரவனோடு சித்திரமாயன் தொடர்பு வைத்திருப்பதும் எனக்குத் தெரிய வந்தது. அதனால் அடிக்கடி அதைக் கண்காணித்துக் கொண்டிருந்த போது திடீரென்று நாகபைரவன், பல்லவமல்லனைப் பலி கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்தச் சமயத்தில் நீயும் அங்கே மறைவாக இருப்பது எனக்குத் தெரியாது. ஐந்து பேரையும் ஒருவனால் எப்படிச் சமாளிப்பது என்று சங்கடத்துடன் நான் குழம்பிய போது நம் குதிரை வீரர்கள் நால்வர் புரவியில் வந்ததை அறிந்தேன். அதனால் நாகபைரவனை நோக்கி அம்பு எய்தேன்! அது தவறி அவன் அருகில் விழுந்தது. அதற்குள் நீயும் புதரிலிருந்து வெளிப்பட்டுத் தாக்க முற்பட்டாய். இந்தக் குழப்பத்தில் பல்லவமல்லனை எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கயல்விழியே பல்லவமல்லனைத் தூக்கிக் கொண்டு நான் மறைந்திருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தாள். அவளை மடக்கிக் காபாலிக உருவத்தை நான் அந்த நேரத்தில் நன்கு பயன்படுத்திப் பல்லவமல்லனை வாங்கிக் கொண்டு புரவியில் காஞ்சி வந்துவிட்டேன். உடனே மல்லன் கிடைத்துவிட்டான் என்ற செய்தி பகைவர்களுக்குத் தெரிந்தால் திரும்பவும் பல்லவமல்லனுக்கு ஆபத்து விளைவிக்கப் போகின்றார்கள் என்றுதான், அவனை மறைவாகவே வைத்திருந்தோம்! மன்னர் இராசசிம்மனுக்கும் கிடைத்த செய்தியைத் தெரிவித்து மல்லனையும் அவரிடம் அழைத்துச் சென்றோம். அந்த நிறைவில் அவர் மறுநாள் இயற்கை எய்தினார். நேற்று நீ சித்திரமாயனிடம் வாட்போர் செய்த இடத்தில்கூட நான் இருந்தேன். அங்கு நடந்தவை எல்லாம் எனக்குத் தெரியும்.” என்றான் இரணியவர்மன். “அந்தக் குகை, மிக இரகசியமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததே! அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் விஜயவர்மன். “இங்கே சாம்பன் என்று அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் இருக்கின்றான். அவன் மூலமாகத்தான் இது எனக்குத் தெரிய வந்தது. அவன் பொதுவாகக் குகை என்றுதான் சொன்னான். அவனைச் சிறைபிடித்து அந்த இடத்திற்குப் போகும் வழியை, அவனிடமிருந்து துன்புறுத்தித் தெரிந்து கொண்டேன்!” என்றான். “நன்றாகத்தான் செயல்பட்டிருக்கின்றீர்கள்!” என்றான் விஜயவர்மன். “நன்றாகவா, மிகப் பிரமாதமாக!” என்று பாராட்டிய பரமேசுவரவர்மன், தலைமைச் சிற்பியை அழைத்தார். அவன் வரைபடத்தை விரித்து மன்னருக்கு விளக்க ஆரம்பித்தான். விஜயவர்மனும், இரணியவர்மனும் அதை ஆர்வத்துடன் கவனிக்கலாயினர். |