![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 4 மாமல்லபுரம்- கடல் அலைகள் ‘ஹோ’வென்று முழங்கிக் கொண்டிருந்தன. மணிப்புறா மேற்கொண்டு பறப்பதை நிறுத்தி வட்டமடிக்க ஆரம்பித்தது. பிறகு தாழ்வாக இறங்கிப் பசுமைக் காடாய்த் தெரிந்த தென்னந்தோப்புக்குள் புகுந்தது. அதன் நடுவில்- மிகப் பெரிய பள்ளமாக இருந்த இடத்தின் ஓரத்திலுள்ள பனைமரத்தின் உச்சியில் உட்கார்ந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ‘உக்கூர் உக்கூர்’ என்று கத்த ஆரம்பித்தது. அப்பள்ளம் அமைந்திருக்கும் பாணியே அலாதியாக இருந்தது. மிக ஆழமாய் அமைந்த அப்பள்ளத்தின் ஓரத்தில் பாதி மணலிலும் மீதி வெளியிலுமாகத் தெரிந்த ஒரு மண்டபம், அவ்வளவு எளிதில் பார்ப்பவர் கண்ணுக்குப் புலனாகாத வகையில் அமைந்திருந்தது. அதையடுத்து ஒரு மணல் மேடு. அதற்குப் பாதுகாப்புச் சுவர் போல் அதிருக்க, அதையடுத்துள்ள பள்ளத்தில், சுற்றுப் பகுதியில் பெய்த மழை நீரெல்லாம் இறங்கிப் பெரிய தடாகம் போன்றிருந்தது. அசப்பில் பார்த்தால் பள்ளத்தில் நீர் தேங்கியிருப்பதுதான் தெரியுமே தவிர, மண்டபம் இருப்பது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் தெரியாது. பனைமரத்தில் உட்கார்ந்திருந்த மணிப்புறா, மண்டபத்தின் உச்சிக்குப் போய் அமர்ந்து திரும்பவும் ‘உக்கூர், உக்கூர்’ என்று சப்தித்தது. நிசப்தமாயிருந்த அத்தோப்பில், மணிப்புறாவின் கூவல், பள்ளத்தில் எதிரொலித்துத் திரும்பவும் ‘உக்கூர் உக்கூர்’ என்று கேட்டது. மிக வேகமாக வீசிய தென்னங் காற்றினால் அத்தடாகத்தின் நீரில், சிறுசிறு அலைகள் தோன்றி, கரையில் வந்து மோதி, ‘சளக், புளக்’ என்ற சப்தம் எழும்பி மணிப்புறாவின் கூவலுடன் சேர்ந்து கொண்டது. தன் கூவலுக்கு எவ்விதப் பதிலும் தெரியாததால் திரும்பவும் ‘உக்கூர்’ என்று பலமாகக் கத்தியது. இம்முறை அதற்குப் பதில் கிடைத்துவிட்டது. மண்டபத்திலிருந்து ஒரு யௌவன நங்கை வெளியே வந்தாள். அழகும், இளமையும் அவள் மேனியிலிருந்தது. சுழல்கின்ற கரிய விழிகளிலிருந்து அபரிதமான கவர்ச்சி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவளைக் கவனித்துவிட்ட மணிப்புறா படபடவென்று சிறகடித்தது. அவள் தோளின் மேல் போய் உட்கார்ந்தது. தன் மெல்லிய விரல்களால் மணிப்புறாவை எடுத்துத் தடவிக் கொடுத்தாள். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது போல மணிப்புறாவும் உற்சாகத்துடன் கண்களை மூடித் திறந்தது. கழுத்திலிருந்த துணியைச் சாக்கிரதையாகப் பிரித்தெடுத்தாள். துணியில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்ப்பதற்கு அவள் முனைந்த சமயம், பின்னால் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள். பள்ளத்தின் மேற்புறத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனின் பருத்த உடம்பில், பெருத்த வயிறு சிறு மலை போல் தெரிய கழுத்தைச் சுற்றி மண்டையோடுகளால் ஆன மாலையை அணிந்திருந்தான். தலையிலிருந்து முதுகின் நடுப்பகுதி வரை சடைமுடி அழுக்கேறிச் சிக்குப் பிடித்து ஆல விழுது போன்று தொங்கிக் கொண்டிருந்தது. மண்டையோட்டு மாலையுடன் ஒரு மாட்டுக் கொம்பையும் கட்டித் தொங்கவிட்டிருந்தான். கையில் கபாலம் ஒன்றை (பிச்சைப் பாத்திரம்) வைத்திருந்தான். உடலெங்கும் சாம்பல் பூசிப் பார்க்க அருவருப்பான தோற்றத்தில் இருந்தான். ஆனால், அவள் அருவருப்புக் கொள்ளவில்லை. மாறாக, அவளின் செக்கச் சிவந்த இதழ்களிலிருந்து முறுவல் அரும்பியது. இருக்கின்ற அருவருப்புப் போதாதென்று கறுப்பேறிய தன் பற்கள் நன்கு தெரியச் சிரித்து, “என்ன கயல்விழி? சாம்பனிடமிருந்து செய்தியா?” என்றான் கரகரப்பான குரலில். அவள் தலையசைத்து ஆமோதித்தாள். “என்ன செய்தி கயல்விழி?” “இன்னும் படிக்கவில்லை அப்பா?” “அப்படியா! சீக்கிரம் படித்து என்னவென்று சொல்!” - முகத்தில் அளவற்ற ஆர்வம் தெரிந்தது. கயல்விழிகளின் விழிகள், அந்தத் துணியிலிருந்த செய்தியைத் தெரிந்து கொள்ள அதன்மீது பரவிய போது, தொலைவில் குதிரை வரும் ஓசை கேட்டது. சடக்கென்று துணியை இடுப்பில் செருகிக் கொண்டு, மேலே நின்று கொண்டிருந்த தன் தந்தையிடம், “யார் வருவது?” என்று கலவரம் நிறைந்த குரலுடனே கேட்டாள். உடனே அவன் கைகளை அர்த்தசந்திர அமைப்பில் வளைத்துக் கண்ணருகே வைத்துக் குவித்துக் குதிரையின் குளம் பொலி வரும் பக்கம் கவனித்தான். அப்போது- இதுவரை மிகவும் இலேசாய்க் கேட்ட அந்த ஓசை பெரிதாகி அருகில் கேட்பது போலிருந்தது. கூர்ந்து கவனித்த நாகபைரவன் கண்களுக்குத் தென்னந்தோப்பின் குறுகிய வழியில் புரவி ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மணற்சரிவின் கீழே மண்டபத்தின் அருகிலிருந்த கயல்விழியின் செவியிலும் அந்த ஓசை விழ, “யாரப்பா அது?” என்றாள் திரும்பவும். உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த அவன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. மகளின் பக்கத்தில் திரும்பிப் “பல்லவ சக்கரவர்த்தி!” என்றான். உடனே அவள் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. உற்சாகத்துடன் அவள் கால்கள் வேகமாகப் பதிய மேலேறி வந்தாள். நாகபைரவன், “வாழ்க பல்லவர் குலத்திலகம்! வருக வருங்காலப் பல்லவ சக்கரவர்த்தி!” என்று முழக்கம் செய்தான். அவன் முழங்கிய முழக்கம் அத்தோப்பையே அதிர வைப்பது போன்று எதிரொலித்து முழங்க, இருபது வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் புரவியிலிருந்து இறங்கினான். நல்ல உயரமான உடல்! பரந்த அவன் முகத்தில் அரசருக்குரிய கம்பீரம் தவழத்தான் செய்தது. அப்பொழுது மற்றொரு புரவி வரும் ஓசை கேட்டது. அதைக் கேட்ட நாகபைரவன் முகம் சுருங்கிக் கண்கள் இடுங்கிப் புருவங்கள் மேலேற, அதே சமயம், சிறிது கலவரமும் முகத்தில் தோன்ற, ஓசை வரும் பக்கம் திரும்பினான். “வீரசேகரன்தான் வருகிறான்!” என்று இளைஞன் சொல்ல “ஓ, அப்படியா?” என்ற நாகபைரவன் சிரித்துக் கொண்டான். பள்ளத்தின் மேற்பரப்புக்கு வந்த அவளின் விழிகள் அந்த அரச குடும்பத்து வாலிபனை உற்று நோக்கின. மிக ஆர்வத்துடன் மணற்சரிவிலிருந்து மேலேறி வந்ததினால் மூச்சு வாங்கியது. அதனால் சிறிது மேலேறி இறங்கிய அவளின் மார்பகங்கள், இளைஞனுக்கு மன்மத ஜாலம் காட்டின. கண்களைத் தாழ்த்திக் கொண்டான். திரும்பவும் அந்தக் காட்சி, அவன் மனக்கண் முன் வந்தது. செவ்வரி ஓடிய கண்கள் தன்னை நோக்க, மேல்பகுதி மூச்சின் வேகத்தினால் குலுங்க, அந்தப் பாரம் தாங்காமல் வேய்த் தோள்களும் மேலேறி இறங்க, அந்தக் காரணத்தினால் அவளின் மணி வயிறு சிறிது உள்ளடங்க, அதன் நடு நாயகமாக இருந்த உந்திச் சுழியும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்வது போன்று பூரித்து நின்றதே...! அந்தப் பூரிப்பில் இருந்த இளமையின் வளத்தை என்னவென்று சொல்வது! உணர்ச்சி வேகத்தினால் அந்த இளைஞனும் பெருமூச்சுவிட்டுக் கயல்விழியைப் பார்த்தான். அகன்ற அவளின் கருவிழிகள், இன்னும் தன்னையே நோக்கிக் கொண்டிருப்பதை அறிந்து, அந்த நோக்கின் வெம்மையைத் தாங்க மாட்டாமல் திரும்பவும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். ஆனால்? அவன் மனம் மீண்டும் அவளைப் பார் என்று சொல்கிறது. அந்தக் கட்டளை மிக இனிமையான கட்டளைதான்! முடியவில்லையே! என்ன செய்வது? “சக்கரவர்த்தி!” - நாகபைரவனின் அழைப்பு அவனை உணர்வு பெறச் செய்தது. “என்ன நாகபைரவா?” - சமாளித்து அவனைப் பார்த்து வினவினான். அந்நேரத்தில் வீரசேகரன் குதிரையை நிறுத்திவிட்டு அருகில் வந்தான். இருவரையும் கவனித்த நாகபைரவன், “சாம்பனிடமிருந்து செய்தி வந்திருக்கிறது!” என்றான். சக்கரவர்த்தி என்று நாகபைரவனால் அழைக்கப்பட்ட இளைஞன், பரபரப்போடு, “என்ன செய்தி அதில் சொல்லப்பட்டிருக்கிறது?” என்றான். “அதை அறிந்து கொள்வதற்குள்தான் நீங்கள் குறுக்கிட்டுவிட்டீர்கள்!” என்றாள் கயல்விழி. “அப்படியா?” என்ற அவ்விளைஞன் “எங்கே அந்தச் செய்தி வந்த ஓலையைக் கொடு பார்க்கலாம்!” என்றான். தன் இடுப்பில் செருகியிருந்த துணியை எடுத்து அவனிடம் தந்தாள். இருவிரல்களும் தொட்டுக் கொண்டன. அந்தத் தீண்டலின் சக்திக்கு இருந்த மகத்துவத்தை என்னவென்று சொல்வது? இரு நெருப்புக் கற்கள் ஒன்றையொன்று உரசிக் கொண்டால் தீ தோன்றும்! அதுபோல இருவர் மனதிலும் காதலெனும் தீ தோன்றிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பறித்துப் போட்ட அல்லித் தண்டாய் கயல்விழி துவண்டாள். அவன், தன்னை மறந்து அந்த ஸ்பரிசந்தின் நுகர்வில் உண்டான ஆனந்தத்தில் திளைத்து நின்றான். “சக்கரவர்த்தி!” என்றான் நாகபைரவன் மறுபடியும். “ஓ!” என்று மென்முறுவலால் தன்னைச் சுதாரித்து, அதில் எழுதியிருந்த செய்தியை மனதிற்குள் படித்தான். கண்கள் சிவந்தன; நாசி உணர்ச்சியால் துடித்தது. பற்கள் கடிக்கப்படும் ஒலி... நாகபைரவன் என்னதோ ஏதோவென்று பயந்து, “என்ன சக்கரவர்த்தி?” என்றான் கலவரத்தோடு. “கிழக்குரங்கு, என் ஜென்மப் பகைவனுடன் மாமல்லைக்குப் புறப்பட்டுவிட்டதாம்!” -அந்தத் துணியைக் கசக்கித் தூர எறிந்தான். “என்ன?” “ஆமாம்!” இப்போது அவன் முகத்தில் ஆத்திரம்! “பல்லவமல்லன்... பல்லவமல்லன்... கேவலம்.. அந்த ஆறுவயதுப் பையனுக்கு இருக்கிற மரியாதைகூட எனக்கு இல்லை. நான் என்ன பாவம் செய்தேன்? இறைவா. என்னை ஏன் இவ்வுலகில் மனிதனாகப் படைத்தாய்?” என்ற அந்த இளைஞன் கண்கள், அளவற்ற சோகத்திற்கு ஆளாகின. ஆத்திரமும், குரோதமும் மாறி மாறித் தோன்றத் தலைகுனிந்தான் அந்த வாலிபன். அதைக் கவனித்த நாகபைரவன், “கவலைப்படாதீங்க சக்கரவர்த்தி. நாங்கள் இருக்கும் போது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்...? விடுங்கள் அந்தக் கவலையை...?” என்றான். “ஆமாம்; ஏன் வீணாக வருத்தப்படுகிறீர்கள்...?” என்றான் வீரசேகரனும். “பிள்ளைவழிப் பேரன் நான் இருக்க பங்காளி வழிவந்த ஆறு வயதுப் பையனுடன் கொஞ்ச இந்தக் கிழவனுக்கு என்ன புத்தியா மழுங்கிவிட்டது?” என்றான் அந்த இளைஞன். கிழவன் என்று அந்த இளைஞன் அழைத்தது இராசசிம்மனை. பங்காளி வழிவந்த பையன் என்று அவன் குறிப்பிட்டது மாமல்லைக்கு அவனுடன் வந்த சிறுவன் பல்லவமல்லனை. இந்த இளைஞன்தான் இராசசிம்மன் புதல்வனான இரண்டாம் பரமேசுவரவர்மனின் மகன். சித்திரமாயன் என்ற பெயருடையவன். நியாயமாக இராசசிம்மன், சித்திரமாயனிடம்தான் அன்பு செலுத்த வேண்டும். அவன் நடத்தை நாட்டிற்கு விரோதமாக இருந்ததால் இராசசிம்மன், சித்திரமாயனை அறவே வெறுத்து வந்தான். “நன்றாகச் சொன்னீர்கள் சக்கரவர்த்தி. அந்தக் கிழவனுக்கு உண்மையிலேயே புத்திதான் மழுங்கிவிட்டிருக்கிறது. நாளைக்கே ஒரு பெரும்படை இந்தக் காஞ்சியைத் தாக்க வந்தால் இந்த ஆறுவயதுப் பையன் என்ன செய்வான்? வாளெடுத்துப் போர் புரிவானா? அல்லது அந்த வாளைத் தூக்கத்தான் இவனுக்கு சக்தி இருக்கின்றதா?” வீரசேகரன் குறுக்கிட்டான். “நீங்கள் என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்துவிட்டால், மரத்தால் செய்த வாளுடன், இப்பொழுது விளையாட வைத்துக் கொண்டிருக்கிறானே அத்தேர் ஏறிப் பகைவர்களைப் பனங்காயாக சீவி விடமாட்டான்?” அதைக் கேட்டதும் அனைவரும் ‘கொல்’ என்று சிரித்துவிட்டனர். சித்திரமாயன் சிரிப்பு அடங்க நீண்ட நேரம் பிடித்தது. “நன்றாகச் சொன்னாய் வீரசேகரா... நன்றாகச் சொன்னாய்!” என்று திரும்பவும் உரக்கச் சிரிக்கலானான் அவன். அச்சிரிப்பின் ஓசை கேட்டுத் தென்னை மரங்களின் உச்சியில் உட்கார்ந்திருந்த பறவைகள், பயந்து, உயரக் கிளம்பிச் சிறகடித்து மறுபடியும் உட்காருவதற்குப் பாதுகாப்பான இடம் தேடி அங்குமிங்கும் அலைந்தன. அதைக் கவனித்தான் நாகபைரவன். “அதோ பாருங்கள் சக்கரவர்த்தி! இருக்க இடம் தேடி அலைகின்ற பறவைகளை! அதுபோன்று அந்தப் பயல் பல்லவமல்லனும் அலைய வேண்டும். அப்படி அலையச் செய்யும் வரை நாம் ஓயக் கூடாது!” “உண்மை! அவ்விதம் செய்வதுதான் நமக்கும் நல்லது!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கயல்விழி குறுக்கிட்டு கேட்டாள். “கிழவன் இராசசிம்மன் எதற்காக அந்தப் பையனுடன் மாமல்லைக்கு வரவேண்டும்?” “எதற்காக வந்திருப்பான்? என்னமோ பெரியதாகக் காஞ்சியில் கயிலாசநாதர் ஆலயத்தைக் கட்டிவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டு அதே போலக் கடற்கரையிலும் ஒரு கோவிலைக் கட்டிவிட்டான்! அவனைச் சுற்றி இருக்கிற ‘ஆமாம் சாமிகள், ஆகா, இம்மாதிரி கலையமைப்பே இல்லை... உலகிலேயே இது ஒன்றுதான் அதுபோல இருக்கிறது’ என்று தம் வயிற்று சோற்றுக்காகத் தாளம்போடத் துவங்கிவிட்டனர். இந்த ஜனங்களுக்கும் புத்தியில்லை. ஏன் அந்தக் கிழவன் வயிற்றில் பிறந்து, இப்போது இளவரசுப் பட்டம் கட்டிக் கொண்டிருக்கும் என் தந்தை பரமேசுவரவர்மனுக்கு மட்டும் என்ன கூடை கூடையாகவா புத்தி இருக்கின்றது? தனக்கு இளவரசுப் பட்டம் கிடைத்துவிட்டது. அதனால் தன் மகனை உதாசீனப்படுத்திக் கிழவன் பங்காளிப் பையனைக் கொஞ்சினாலும் கவலை இல்லையென்று, எனக்கு விரோதமாக நாட்டில் நான் உருப்படாதவன் என்று பார்க்கிறவர்களிடத்திலெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறாரே...! இவர் எனக்கு தந்தையா? இப்படி ஈவு இரக்கமற்ற ஒருவருக்கு மகனாகப் பிறக்க நான் என்ன பாவம் செய்தேன்?” என்று அதற்கு மேல் பேச முடியாமல் துயரத்தினால் மௌனமானான் சித்திரமாயன். சிறிது நேரம் அமைதி நிலவிய அந்த இடத்தில் அதை அழிப்பது போல நாகபைரவன் கனைத்துவிட்டு உரக்கப் பேசினான்: “நீங்கள் கவலைப்படாதீர்கள் சக்கரவர்த்தி! நாங்கள் இருக்கிறோம். உங்களை அரசுகட்டில் ஏற்றும்வரை நாங்கள் ஓயப் போவதில்லை! இது சத்தியம்!” என்று இடையில் செருகியிருந்த குறுவாளை எடுத்துத் தன் கையில் சரக்கென்று கீறினான். மறுகணம் கீறின அந்த இடத்திலிருந்து குபுகுபுவென்று இரத்தம் கொப்பளித்தது. “நான் வணங்கும் பைரவர் மீது ஆணை! சக்கரவர்த்தி சித்திரமாயன் அவர்களை அரசுகட்டிலில் ஏற்றும்வரை நான் ஓயப் போவதில்லை! இது சத்தியம்! என் கடமைகளில் இதைத் தலையாய கடமையாகக் கருதுகின்றேன்! அவ்விதம் நான் இக்கடமையில் தவறிவிட்டால், அடுத்த நொடியே என் உயிர் உடலில் இருக்காது! இது சத்தியம்!” என்று தரையில் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்த குருதியைத் தொட்டுத் திலகமாக நெற்றியில் இட்டுக் கொண்டான். அப்போது அவன் கண்கள் நெருப்புருண்டைகள் போல ஜொலித்தன. மெய் சிலிர்க்க வைத்த அந்நிகழ்ச்சியைக் கவனித்த சித்திரமாயன், ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டான். தனக்கு ஒப்பற்ற துணையாக நாகபைரவன் இருக்கின்றான் என்பதை அவன் உணர்ந்த போது, அவன் உதடுகள் அதைப் புன்முறுவலாய்ப் பிரதிபலித்தன. “நாகபைரவா, உன் உண்மையான நட்பை நினைத்து நான் பெருமையடைகின்றேன். இம்மாதிரி நண்பர்கள் இருக்கும் வரை எனக்கு என்ன குறைச்சல்? என் மனம் இன்றுதான் உண்மையிலே அளவற்ற உவகையில் ஆழ்கிறது. அதைத் தாளமாட்டாமல் என் இதயமும் படபடவென்று அடித்துக் கொள்கிறது. ஆகா, இனி எனக்கு என்ன வேண்டும்?” என்று கயல்விழியின் பக்கம் திரும்பினான் சித்திரமாயன். “தந்தைக்குக் குருதி அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது! அதற்கு ஏதாவது மருத்துவம் செய்யேன்!” என்று சொன்னான். கயல்விழி, வேகமாகப் பள்ளத்தில் இறங்கி, மண்டபத்திற்குள் நுழைந்து துணி ஒன்றை எடுத்து வந்தாள். மறுகையில் கறுப்பாக ஒன்று இருந்தது. அதைக் காயப்பட்ட பகுதியில் வைத்துத் துணியால் கட்டுப் போட்டாள். இரத்தம் ஒழுகுவதும் நின்றது. கையை அசைத்துவிட்டு நிமிர்ந்து, “சக்கரவர்த்தி!” என்றான். “என்ன நாகபைரவரே?” அவன் தயங்கி, புன்னகையை உதிர்த்து, “எனக்கு ஒரு வரம் வேண்டும்!” என்றான். “என்ன வரம் பைரவரே?” “ஒன்றுமில்லை, தாங்கள் காஞ்சியில் முடிசூடியதும், தற்போது மெல்ல மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வரும் நான் சார்ந்திருக்கும் மதமான காபாலிக சமயத்தை எங்கும் பரப்பத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!” “இவ்வளவுதானே. நான் என்னமோ ஏதோவென்று நினைத்தேன்! கவலைப்படாதே நாகபைரவரே. அப்படியே செய்கின்றேன்!” என்றான் சித்திரமாயன். நாகபைரவன் முகத்தில் அளவற்ற சந்தோஷமும், மனநிறைவும் பரவி, அந்தக் குரூர முகத்தில் ஒருவித மலர்வு தோன்றியது. “இது போதும் எனக்கு! இதைவிட எனக்கு என்ன வேண்டும்? இந்தக் கபாலிகமதம் எங்கும் பரவி மக்கள் மத்தியில் அளவற்ற செல்வாக்குடன் இருப்பதைப் பார்த்துவிட்டதும் அந்த நிறைவிலேயே கண்களை மூடிவிடுவேன்” என்றான் உருக்கத்தோடு. “கிழவனும், அந்தப் பையன் பல்லவமல்லனும் மாமல்லபுரத்திற்கு வந்திருப்பது நல்ல சந்தர்ப்பம்! அதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்றாள் கயல்விழி. “சந்தர்ப்பமா? எப்படிச் சொல்கிறாய் கயல்விழி?” -சித்திரமாயனின் கேள்வி. “ஆம்! இது நல்ல சந்தர்ப்பமாகவே எனக்குப்படுகிறது.” “எப்படி?” “காஞ்சிக் கோட்டையைவிட மாமல்லை அரண்மனையில் அவ்வளவு பாதுகாப்பிருக்காது! இதைப் பயன்படுத்தி நாம் மல்லனைக் கடத்திவிட வேண்டும்!” சித்திரமாயன் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது. “நல்ல யோசனை... நல்ல யோசனை... யோசனை சொன்ன வாய்க்கு அதிரசம்தான் போட வேண்டும்! நாகபைரவரே... உன் மகள்... இதுவரை அழகிற் சிறந்தவள் என்றுதான் நினைத்திருந்தேன்! அறிவிலும் அவள் சிறந்தே இருக்கிறாள்...” அந்த வார்த்தைகள் கயல்விழியின் முகத்தில் நாணத்தைப் படர வைத்தன. சிவந்த தன் முகத்தைக் கீழே தாழ்த்தினாள். “சக்கரவர்த்தி, அப்படிக் கடத்தப்படும் பல்லவமல்லனை நம் பைரவருக்குப் பலி தந்தால் என்ன? நீண்ட நாளாக என்னிடம் அரச குடும்பத்துப் பலிக்குகைப் பைரவர், அடிக்கடி என் கனவில் வருகிறார். அவரை மகிழ்வித்தது மாதிரியும் இருக்கும். உங்கள் ஜென்மப் பகைவனைத் தொலைத்தது போலவும் இருக்கும்!” சித்திரமாயன், இடி இடியெனச் சிரித்தான் அதைக் கேட்டு. வீரசேகரன் பக்கம் திரும்பி, “என்ன இது? இன்று என் காதில் விழுகின்ற செய்திகள் மகிழ்ச்சி தருகின்றவைகளாக இருக்கின்றனவே! சபாஷ்! அதைச் செய்து முடிக்க என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் நம் நாகபைரவருக்கு” என்றான் மகிழ்ச்சியுடன். “யார் அந்தப் பயலைக் கடத்துவது?” - வீரசேகரன் கேட்டான். உடனே நாகபைரவன், “நான் கொண்டு வருகின்றேன் அவனை!” என்றான். சித்திரமாயன் மேலும் கீழும் பார்த்து “பைரவரே! இந்தக் கோலத்துடன் நீர் எப்படி அரண்மனைக்குள் நுழைய முடியும்?” என்றான். “நான் எப்படியும் அரண்மனைக்குள் நுழைந்துவிடுவேன்! அதைப் பற்றிக் கவலை வேண்டாம்! நான் திரும்பி அந்தப் பையனுடன்தான் வருவேன்! இல்லையென்றால் என் உடலைத்தான் அவர்கள் சிறைபிடிக்க முடியும்!” சித்திரமாயன் அதை ஏற்றுக் கொள்ளாது பலமாகத் தலையசைத்து, “உங்களிடம் நான் வேறு பெரிய வேலையை எதிர்ப்பார்க்கின்றேன்! நீங்கள் இந்த வேலைக்குப் போவது வீண் என்றுதான் எனக்குப் படுகிறது. தவறிவிட்டால் அப்புறம்...” என்று மேற்கொண்டு பேசாமல், ‘வேறு யார் இந்தக் காரியத்தை நிறைவேற்ற முன் வருகிறீர்கள்!’ என்பது போலச் சுற்று முற்றும் பார்த்தான். கயல்விழி, ஒரு அடி எடுத்து வைத்து முன் வந்து நின்றாள். அவளைக் கவனித்தான் சித்திரமாயன். “நீ இப்பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாயா கயல்விழி?” “ஆம் சக்கரவர்த்தி!” - அவள் பதிலில் உறுதியும் அழுத்தமும் தொனித்தன. சில நொடிகள் மௌனம் சாதித்த சித்திரமாயன் வீரசேகரன் பக்கம் திரும்பினான். “என்ன சக்கரவர்த்தி?” “கயல் விழி...” என்று அவன் வார்த்தையை ஆரம்பிக்கும் முன்பே நாகபைரவன், “சக்கரவர்த்தி, கயல்விழியால் இந்தக் காரியம் சுலபமாக முடியும்! ஏனென்றால் மல்லை அரண்மனையில் அவள் பணிப்பெண்ணாகச் சேர்ந்திருக்கிறாள். அதனால் இந்தக் காரியத்தை அவளால் எந்தவித ஆபத்துமின்றி நிறைவேற்ற முடியும் என்று நினைக்கின்றேன்!” என்றான். சித்திரமாயன், “கயல்விழியிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கிறோம். இன்று இரவு அவள் பல்லவமல்லனைக் கடத்திக் கொண்டு வருவாள். அதற்குப் பிறகு நாளைய இரவு நம் பைரவருக்கு அவனைப் பலி கொடுக்கப் போகிறோம்!” என்றான். நாகபைரவன் கயல்விழியின் அருகில் சென்று, “வெற்றியோடு திரும்பி வா மகளே!” என்று வானத்தைப் பார்த்து, மனதிற்குள் எதையோ முணுமுணுத்துத் தரையிலிருந்து சிறு மணலை எடுத்து அவள் நெற்றியில் பொட்டு வைத்தான். “நான் புறப்படுகிறேன் அப்பா!” என்றாள் கயல்விழி. “சென்று வா மகளே! பல்லவமல்லனுடன் திரும்பு. முடிந்தால் இன்றைய இரவே அவனைப் பலி கொடுத்துவிடுவோம்!” என்றான். தலையசைத்து மரத்தில் கட்டியிருந்த புரவியை அவிழ்த்து அதில் ஏறி உட்கார்ந்தாள். நாகபைரவன் கையசைத்து விடை தந்தான். புரவியை வாரினால் அடித்துக் காலால் இலேசாய் உதைத்தாள். அது தென்னந்தோப்பின் குறுகிய வழியில் வேகமாய் ஓடத் துவங்கியது. சித்திரமாயன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பினான். சில நொடிகள்... மூவரும் மண்டபத்திற்குள் செல்வதற்காக மணற் சரிவில் இறங்கினர். இதுவரை அங்கே உட்கார்ந்திருந்த மணிப்புறா உயரக் கிளம்பி வானத்தில் பறக்கத் துவங்கியது. |