(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 3

     கயிலாசநாதர் கோவில் ஆலய மணி ‘டாண் டாண்’ என்று ஒலிக்க, மன்னன் இராசசிம்மன் அரண்மனையின் முன்பு நின்று கொண்டிருந்த இரதம் புறப்படத் தயாராகியது.

     அரண்மனை வாயிலில் முதலமைச்சர் பிரம்மராயர் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் கடிகையரும், மூலப்பிரகிருதியாரும் இருந்தனர். நிசப்தமாக இருந்த அந்த இடத்தில், ‘டக் டக்’ என்ற பாதரட்சையின் ஒலி எழுந்தது.

     நின்று கொண்டிருந்த அனைவரும் நிமிர்ந்து நின்றனர். ஏனைய அரசு அதிகாரிகள் தங்கள் உடைகளைச் சரிப்படுத்தி நேராக நின்றனர்.

     இதுவரை குதிரைகளைத் தடவியபடி இருந்த இரதசாரதி கண்ணன் அதைத் தட்டிக் கொடுத்துவிட்டு வாயிலை நோக்கியபடி நின்றான்.

     பாதரட்சையின் ஒலி முன் கூடத்தில் கேட்டது. அனைவரும் பரபரப்புக்குள்ளாயினர். சிலர் மூச்சுக்கூட விடவில்லை.

     “மன்னர் வந்துவிட்டார்” என்று கடிகையரில் ஒருவர் பக்கத்திலிருந்தவரிடம் சொன்னார். அவரும் ‘ஆமாம்!’ என்று தலையசைத்துவிட்டு மன்னனை எதிர் நோக்கினார்.

     வீரர்கள் கூடத்திலிருந்து தேர் இருக்கும் இடம் வரை வரிசையாக அணிவகுத்து நின்றனர். ஒரு வீரன் ஓடிவந்து மன்னர் அமரும் இடம், இரதத்தின் கீழ்ப்புறம், பக்கம், அச்சாணி எல்லாவற்றையும் சரிபார்த்தான்.

     முன் கூடத்தில் திரும்பி மன்னன் நின்றான். ஆகா, என்ன கம்பீரம்! வயது கூடியிருந்த போதிலும் நிற்பதில்தான் என்ன மிடுக்கு? முறுக்கிய மீசையுடன் அவன் முகத்தில் நிலவிய அந்த அரச லட்சணத்தை இன்று முழுவதும் பார்த்து கொண்டிருக்கலாம் போலிருக்கிறதே!

     அனைவரும் ஒரு நொடி பிரமித்து நிற்க, மன்னன் கண்கள், யாரையோ எதிர்பார்ப்பது போல இங்குமங்கும் நோக்கின.

     முதலமைச்சர் அருகே வந்து நின்றார். மன்னனை ஏறிட்டு நோக்கினார்.

     உலகப் புகழ் பெற்ற காஞ்சி கயிலாசநாதர் கோயிலை அமைத்தவனும், புகழ் வாய்ந்த மாமல்லைக் கடற்கோவிலை நிர்மானித்தவனும், பகைவர்க்கு இடியேறு போன்றவன் என்று சிறப்புடன் பேசப்பட்டவனுமான இராசசிம்மன், அமைச்சரை நோக்கி, “விஜயவர்மனை அனுப்பிவிட்டீர்களல்லவா?” என்று கேட்டான்.

     “மூன்று நாழிகைக்கு முன்பே அனுப்பிவிட்டேன் மன்னா!”

     “நல்லது!” என்று உட்பக்கம் திரும்பினான். அவன் மனைவி ரங்கபதாகை தோழிகள் புடைசூழ ஆறு வயதுச் சிறுவனுடன் வந்து கொண்டிருந்தாள்.

     சிறுவன் இராசசிம்மனைக் கண்டதும், ரங்கபதாகையின் கையிலிருந்து விடுபட்டு, “தாத்தா!” என்று ஓடி வந்தான்.

     குனிந்து சிறுவனைத் தூக்கிக் கொண்ட மன்னன், “புறப்படலாமா குழந்தாய்!” என்றான்.

     சிறுவன் தலையாட்ட, புன்முறுவல் செய்த மன்னன், தன் மனைவியின் பக்கம் திரும்பி, “தேவி, நான் வரட்டுமா?” என்றான்.

     புன்னகையுடன் தலையசைக்க, மன்னன் தேரை நோக்கி நடந்தான்.

     சிறுவன் பல்லவ மன்னனைத் தேரில் ஏற்றித் தானும் அமர, ரதசாரதி கண்ணன், அரசன் பக்கம் திரும்பினான். அமைச்சர் பிரம்மராயர் அருகில் வந்தார்.

     “இளவரசன் பரமேசுவரவர்மனைக் கோட்டையிலேயே இருக்கச் சொல்லுங்கள். நான் இரு தினங்களில் வந்துவிடுகின்றேன்!” என்றான்.

     அமைச்சர் தலையாட்ட, “இரதம் புறப்படட்டும்!” என்றான் இராசசிம்மன்.

     சுளீர் என்று சாட்டையடி குதிரைகள் மீது விழுந்தது. அவை வில்லிலிருந்து விடுபட்ட அம்பென ஓடத் தொடங்கின.

*****

     இந்தக் கதை நிகழும் காலம் கி.பி 705 ஆம் ஆண்டாகும். இவ்வாண்டில்தான் இராசசிம்மன் ஆட்சி முடிந்து, அவன் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மன் ஆட்சி தொடங்கியது. இவனது ஆட்சி நீண்ட நாட்கள் நடக்கவில்லை. சில ஆண்டுகளே அவன் அரசாண்டான். அதற்குப் பிறகுதான் புகழ் பெற்ற பிற்காலப் பல்லவர் ஆட்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அதன் விளைவு? இதுவரை ஆட்சி செய்த மரபு போய்ப் புதிய மரபு தோன்றியது.

     இராசசிம்மன் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மன் திடீரென இறந்துவிட, முறைப்படி அடுத்து ஆட்சி ஏற வேண்டியவன் அவன் மகனான சித்திரமாயன். ஆனால், பல்லவ ஆட்சிக்கு ஊறுநேரும் வகையில், அவன் பொறுப்பில்லாது பாண்டியரைச் சார்ந்தும், மற்றும் பல்லவ ஆட்சிக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தபடியிருந்த கும்பலிடம் தொடர்பு கொண்டும் இருந்தமையால், அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க அமைச்சர் முதலானோர் விரும்பவில்லை. அதனால் அவர்கள் பிற்காலப் பல்லவருள் முதல்வனான சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் வழிவந்த இரணியவர்மனிடம் இது பற்றி முறையிட்டனர். அவன் தன் மகனான பல்லவமல்லன் என்பவனுக்கு முடிசூட்டுமாறு கருத்துத் தெரிவித்தான். அவ்விதமே அமைச்சர், கடிகையர், மூலப்பிரகிருதியார் முதலானோர் இரண்டாம் நந்திவர்மன் என்ற சிறப்புப் பெயரிட்டு முடிசூட்டினர். பல்லவமல்லன் அரசுப் பொறுப்பேற்கும் போது வயது பன்னிரண்டு. மிகச் சிறிய வயதிலேயே அரசுப் பொறுப்பேற்ற அவன், ஏறக்குறைய அறுபத்தைந்து ஆண்டு காலம் வெகு சிறப்புடன் ஆட்சி செய்தான். இவ்விதம் அவன் பட்டமேற்கும்வரை நடக்கும் நிகழ்ச்சிகளை விவரிப்பதே இந்நாவல். வாசகர்கள் இனித் தொடர்ந்து படிக்கலாம்.



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19