(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 19

     காஞ்சி நகரமே சோகத்தில் ஆழ்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக ஆண்ட மன்னன் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறந்துபட்டான்.

     கடிகையர், மூலப்பிரகிருதியார், தரணி கொண்ட போசர் முதலியோர் அடுத்து யார்? என்று கேள்விக் குறியுடன் பார்க்க, சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் வழிவந்த இரணியவர்மன்தான் அவர்களுக்குத் தென்பட்டான்.

     இறந்த மன்னன் மகன் சித்திரமாயனைப் பற்றி நாட்டு மக்களிடையே நல்ல அபிப்பிராயம் இல்லை. அத்துடன் அவன் பல்லவ நாட்டைப் பிடிக்கத் தக்க நேரத்தை எதிர்ப்பார்த்திருந்த பாண்டியனிடம் சரண் அடைந்திருந்தான்.

     அதனால் -

     காஞ்சி ஆட்சி பீடம் ஏற எல்லாவற்றுக்கும் தகுதியானவன் இரணியவர்மன் என்றே அனைவரும் ஒரு முகமாக முடிவுக்கு வந்தனர். எனவே அவனைப் பார்த்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கேட்க, அவன் மறுத்துவிட்டான்.

     “பின் யாரிடம் இந்த ஆட்சிப் பொறுப்பைத் தருவது?” என்று தரணி கொண்ட போசர் கேட்க, “என் மகன் நால்வரில் யாருக்காவது முடிசூடுங்கள்!” என்றான்.

     முதல் மூவரும் அதற்கு மறுக்க நான்காவதாகப் பல்லவமல்லன், தன் பன்னிரண்டு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முன்வந்தான்.

     மிகச் சிறிய வயதில் நாட்டுப் பொறுப்பை ஏற்க வந்த அவன் நெஞ்சுரத்தை அனைவரும் பாராட்டினர்.

     நல்ல முகூர்த்தத்தில் - பட்டத்து யானை அலங்கரிக்கப்பட, வாத்தியங்கள் முழங்கப் பல்லவடி அரையன், தன் பெருஞ் சேனையுடன் பல்லவமல்லனை எதிர்கொண்டழைக்க, ஆன்றோர்கள், அந்தணர்கள் வாழ்த்தக் காஞ்சியில், மன்னனாக பல்லவமல்லன், இரண்டாம் நந்திவர்மன் என்ற பட்டப் பெயருடன் முடிசூடிக் கொண்டான்.

முற்றும்


மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19