![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 12 பஞ்சணையில் மிகச் சோர்வுடன் படுத்திருந்தான் இராசசிம்மன். அமைச்சர் பிரம்மராயர், பிற்காலப் பல்லவ அரசு நிறுவக் காரணமான சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் வழி வந்த இரணியவர்மன் - பல்லவமல்லனின் தந்தை - தளபதி ‘பல்லவடி அரையன்’ போசர் முதலானோர் நின்று கொண்டிருந்தனர். அரண்மனை மருத்துவர், “பூரண ஓய்வு தேவை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிரம்மராயரை அருகில் அழைத்த இராசசிம்மன் அனைவரையும் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். மிகவும் மெல்லிய குரலில் அவன் பேச ஆரம்பித்த போது, வேண்டாம் என்று அமைச்சர் பணிவுடன் குறிப்புக் காட்டினார். ஆனால் இராசசிம்மன், அதை ஏற்கமாட்டேன் என்று கண்களை இருபுறமும் ஓட்டி அசைத்து, “சில செய்திகளை நான் சொல்லித்தான் தீரவேண்டும்!” என்றான். பிறகு கனைத்துவிட்டுப் பஞ்சணையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அதைக் கவனித்த பிரம்மராயர், “வேண்டாம் அரசே, படுத்த நிலையிலே சொல்லுங்கள்!” என்றார். “அமைச்சர் என்னை நிரந்தர நோயாளியாக்க விரும்புகின்றார் போலிருக்கு. ஆனால் நான் அப்படியல்ல!” என்று சிரித்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தான். அனைவரும் மன்னர் என்ன சொல்லப் போகின்றார் என்பதிலேயே கவனமாக இருந்தனர். “அமைச்சரே, கொஞ்ச நாட்களாகவே பல்லவ ஆட்சிக்கு நல்ல நேரமில்லை என்றுதான் எனக்குப் படுகிறது! உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல என் மகன் வயிற்றில் பிறந்த சித்திரமாயன், நாட்டுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு, நமக்கு விரோதியான பாண்டியர்களிடமும், சாளுக்கியர்களிடமும் நட்பு வைத்துக் கொண்டிருக்கின்றான். அவனை அரசகுடும்பத்தைச் சேர்ந்தவன் என்றே மக்கள் மதித்ததாகத் தெரியவில்லை. அதைப் பற்றி அவனும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த காபாலிகர்களுடன் கைகோத்துத் திரிந்த வண்ணம் இருக்கின்றான். இதற்கு நடுவில் ஒற்றர்கள் மூலம் நமக்குத் தெரிந்த செய்தி என்னவென்றால் பாண்டியர்கள் சித்திரமாயனுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம்! என்ன வாக்குறுதி என்று பார்த்தால் சித்திரமாயனுக்குப் பல்லவ ஆட்சியைத் தருவதாக வாக்குறுதியாம்! இவர்கள் யார் வாக்குறுதி தருவதற்கு? ஆட்சிப் பொறுப்பைச் சித்திரமாயனுக்குக் கொடுப்பதும் கொடுக்காததும் யார் முடிவு செய்ய வேண்டும்? இவர்கள் என்ன நமக்குப் பங்காளிகளா? அல்லது பல்லவ நாட்டு மக்களா? ஒருவர் விவகாரத்தில் ஒருவர் குறுக்கிடுவது எவ்வளவு தவறு என்று அவர்களுக்குப் புரியவில்லையா? என்ன செய்வது? நம் கையே நமக்குச் சரியில்லை. யாரை நோவது? மிகவும் இக்கட்டான இந்நிலையில் பல்லவமல்லன் கடத்தப்பட்டுவிட்டான்! அவனைத் தேடிச் சென்ற விஜயவர்மனைப் பற்றித் தகவல் இல்லை. அவனுடன் சென்ற பத்து வீரர்களில் ஏழு பேர்தான் திரும்பியிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணமாகக் காபாலிகக் கும்பல் ஒன்றே பின்னால் செயல்படுவதாக எனக்குப் படுகிறது. யாரை நம்புவது யாரை நம்பாதிருப்பது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பேர்ப்பட்ட கொடிய பஞ்சம் வந்த போது கூடக் காஞ்சி நகரையே மக்கள் காலி செய்த போது கூட, நான் மனம் தளராது பல்லவ ஆட்சியைக் காப்பாற்றி, மறுபடியும் இக்காஞ்சியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றேன்! இன்று...?” சிறிது மௌனம் சாதித்தான் மன்னன். பிறகு கனைத்துவிட்டு மீண்டும் பேசத் துவங்கினான்: “மல்லன் கடத்தப்பட்டுவிட்டான்! நாட்டில் ஒற்றர் படை செயல்படுவதில் பலவீனம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் அரண்மனைக் காவலை மீறி அந்தப் பெண் மல்லனைக் கடத்தியிருக்கிறாள் என்றால்...? அத்துடன் சிறந்த வீரனை இழந்துவிட்டிருக்கிறோம். இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ? இதற்கெல்லாம் மாற்று நடவடிக்கையாக என்ன வைத்திருக்கிறாரோ அமைச்சர்! இவ்வளவு படைபலம் இருந்தென்ன? சிறப்பு இருந்தென்ன? எல்லாவற்றையும் ஏப்பம்விடுவது போல் ஒரு சிறிய கும்பல் செயல்படுகிறது! எனவே நான் உங்களுக்குக் கட்டளையிடுவது என்னவென்றால் பல்லவமல்லன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்! அவனைத் தேடிச் சென்ற விஜயவர்மனைப் பற்றித் தகவல் தெரிய வேண்டும்! காஞ்சியில் காபாலிக உருவில் நடமாடுகின்ற வஞ்சகக் கூட்டத்தை ஒழிக்க வேண்டும்! பாண்டியர்களின் ஆணவத்தை அடக்க வேண்டும்! இதற்கு யார் முன் நின்று இதையெல்லாம் செய்யப் போகிறீர்கள்? இதைச் செய்யாதவரை பல்லவ ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை... ஏன், என்னையும் சேர்த்துத்தான்...!” என்று அதற்கு மேல் மன்னனால் பேச முடியாததால் மௌனமானான். இரணியவர்மன் இராசசிம்மன் அருகில் வந்தான். “என்ன இரணியவர்மா?” “உங்களிடம் ஒரு முக்கியச் செய்தியைச் சொல்லப் போகின்றேன்!” “என்ன செய்தி?” “பல்லவமல்லன் காணாமற் போனதைப் பற்றி நீங்கள் அளவு கடந்த மனக்கவலையடைந்ததாகத் தெரிகிறது! ஆனால் நான் அவனைப் பெற்றவன்... அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை! அத்துடன் ஒரு செய்தி” என்று குனிந்து மன்னன் செவியில் எதையோ இரகசியமாகச் சொன்னான். “இந்தச் செய்தி இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்! நாட்டின் நன்மைக்காக இதை மறைத்தே வைக்க விரும்புகின்றேன்!” என்றான். மன்னன் முகம் அதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியில் நிலவியது. “எல்லோரும் சேர்ந்து இவ்வளவு கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுவதைக் கண்டு எனக்குப் பெருமைதான்! இவ்வளவு இரகசியமாக வைத்திருப்பதை நானும் இரகசியமாகவே வைத்துக் கொள்கின்றேன்! நான் உடனே அவனைப் பார்க்க வேண்டுமே!” “அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது... இன்று இரவு அரண்மனை உறக்கத்தில் ஆழ்ந்ததும் உங்கள் அறையில் அவன் இருப்பான்!” என்றான் இரணியவர்மன். “நல்லது. இப்போதுதான் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது! விஜயவர்மன் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?” அமைச்சர் குறுக்கிட்டார். “ஆட்களை அனுப்பியிருக்கிறோம் மன்னா! விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று நினைக்கின்றேன்!” என்றார். “எனக்கு மிகக் களைப்பாக இருக்கிறது! அத்துடன் இதுவரை மனதில் இருந்த துக்கம் போன இடம் தெரியவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிய அந்த ஈசன்தான் கருணை வைக்க வேண்டும்?” என்று பஞ்சணையில் சாய்ந்தான். அனைவரும் மன்னன் ஓய்வுக் கொள்ளட்டுமென்று அந்த அறையைவிட்டு வெளியே வந்தனர். |