![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 9 கயல்விழியின் வேகம் குதிரை பாய்ந்து செல்ல வேண்டும் என்பதிலேயே இருந்தது. கனமழை, அத்துடன் இடிமுழக்கம் அத்தோடு ‘பளிச் பளிச்‘சென்று மின்னல்... இவை எதைப் பற்றியும் அவள் கவலைப்படாது புரவியை விரைந்து செலுத்திக் கொண்டிருந்தாள். இதுவரை ராஜபாட்டையில் ஓடிக் கொண்டிருந்த குதிரை, திரும்பி அடர்ந்த தென்னந்தோப்புக்குள் நுழைந்தது. அவ்விடத்தில் மழைத் தண்ணீர் அங்கங்கே குட்டை குட்டையாக தேங்கி நின்று கொண்டிருந்தது. ஆள்மட்டும் செல்லக் கூடிய அந்த ஒற்றையடிப் பாதையில் அப்புரவி காற்றிலும் கடிதாய் ஓடிக் கொண்டிருந்தது. அவள் மன வேகத்திற்கு அந்த அசுவம் போகும் வேகம் திருப்தியைத் தராததால், வாரினால் ஓங்கி அடித்தாள். ஏற்கனவே அதிவேகத்திலிருந்த அக்குதிரை அந்த அடி தாளமாட்டாது சீறிப் பறந்தது. எதிரே, பாதைக்குச் சிறிது தள்ளி மழைத் தண்ணீர் குட்டையாய்த் தேங்கியிருக்க, ஓடிவந்த வேகத்தில் அம்மழைத் தண்ணீர் குளம்பில்பட்டுத் தெறிக்க, அசுவம் அதே வேகத்துடன் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது, நானும் இருக்கேன் என்று சிறிய கல் ஒன்று தடுக்கியது. அதனால் குதிரையின் முன்னங்கால் இடற, அதே வேகத்தில் அக் கால் தரையில் பலமாக மோதி பளக்கென்று முறிந்தது. குதிரையும் கீழே விழுந்தது. கயல்விழி ஒருக்களித்து வீழ்ந்தாள். அந்த வீழ்தலிலும் பல்லவமல்லனுக்கு ஒன்றும் நேரக் கூடாதென்று மார்புற நன்கு அணைத்துக் கொண்டாள். அவள் விழுந்த இடம் மணற்பகுதியாக இருந்ததால் முழங்கை உராய்வுடன் நின்றது. அதே சமயத்தில் நெற்றியில் பலமான அடி, சதை பிளந்து குருதி வழிய ஆரம்பித்தது. எழுந்து நின்றாள். அடிபட்ட இடம் விண் விண் என்று வலித்தது. மல்லனுக்கு ஒன்றும் நேரவில்லையே என்று அவனைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். சிறிது அசைந்து கொடுத்து, மூலிகையின் மயக்கம் தெளிய இன்னும் நேரமிருந்ததால், மறுபடியும் அவளின் அழகிய தோள்களில் நன்கு சாய்ந்து கொண்டான் சிறுவன். குதிரைகள் குளம்பொலி தன்னைத் துரத்தி வருவது போன்று மனப்பிரமை. சீக்கிரம் போக வேண்டும் என்று புரவியின் பக்கம் அவசரமாகத் திரும்பினாள். குதிரை இருந்த நிலையைக் கண்டதும் அவளுக்குப் பகீரென்றது. விழுந்த குதிரை எழுந்துவிட்டிருக்க வேண்டும்! ஆனால் எழவில்லை. படுத்தபடியே எழுந்து நிற்க முயற்சி செய்து, முடியாமல் போனதால் அதைக் காண அவளுக்குச் சகிக்கவில்லை. அருகில் சென்ற போதுதான் அதன் முன்னங்கால்களில் ஒன்று முறிந்துவிட்டது அவளுக்குத் தெரிந்தது. என்ன செய்வது? சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அதே நேரம் தூரத்தில் கேட்ட புரவிகளின் குளம்பொலி அருகில் கேட்பது போலிருந்தது. என்ன செய்யலாம்...? என்ன செய்வது? திகைத்து இறுதியில் எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள் கயல்விழி. இன்னும் அந்த இடத்திற்குப் போய்ச் சேர வேண்டுமென்றால் குறைந்தது இரு காத தூரமாவது போக வேண்டும். எப்படிப் போவது? கைகளைப் பிசைந்தபடி இடுப்பில் செருகியிருந்த குத்துவாளை எடுத்துக் கொண்டாள். இதுதான் அப்போதைய ஆயுதம். எதிரிகள் எத்தனைபேர் இருப்பார்கள். திடீரென்று அவர்களைத் தாக்க வேண்டுமென்றால் இந்தக் குத்துவாளை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்? குறைந்தது இருவர் உயிரைப் போக்க முடியும் இதனால்! இதற்குள் அவர்கள் தன்னைப் பிடித்துவிட்டால்... உயிருடன் பிடிக்க முடியுமா? என் பிணத்தைத்தான் அவர்கள் தொட முடியும். அதற்குள் எதிரிக் கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று தலைகள் சாய வேண்டும். பல்லவமல்லன் உயிரையும் போக்கிக் கடைசியில் இதே குறுவாளால் தன் மார்பையும் பிளந்து கொண்டு... சே! என்ன பைத்தியக்காரத்தனமான கற்பனை? ஏன் தப்ப முடியாது அவர்களிடமிருந்து? முயன்று பார்ப்பது என்று குறுக்கு வழியில் வேகமாக ஓடலானாள் கயல்விழி! மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாக ஓடிக் கொண்டிருந்த சோமன் பின்னால் குதிரைகள் வரும் சப்தம் கேட்டுத் திகைத்தான். இனி ஓடுவதில் பயனில்லை என்று நின்றான். என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது, பளிச்சென்று ஒரு எண்ணம் தோன்றியது. சாலை ஓரமாக மிகத் தாழ்வாக இறங்கிப் பரவலாக கிளைவிட்டு வளர்ந்து நின்ற வேப்பமரத்தைப் பற்றி மடமடவென ஏறி மறைந்து கொண்டான். குதிரைகள் வரும் ஒலி பெரிதாகிச் சோமனுக்கு இதயம் படபடவென்று அடித்தது. ‘பைரவா, என்னைக் காப்பாற்று! இந்தப் பாவிகளிடம் சிக்கி என் உயிர் போக வேண்டாம்! அதைவிட உன் சந்நிதானத்திலேயே என் தலையை அறுத்துக் கொண்டு உயிர்விடுகின்றேன்! பைரவா என்னைக் காப்பாற்று!’ என்று அவன் வேண்டிக் கொண்டிருக்கும் போதே, நான்கு குதிரைகள் கரிய இருளில் வேகமாக வந்து கொண்டிருந்தன. மரத்தோடு மரமாகத் தன் உடலை மறைத்துக் கொண்டு, எங்கே மூச்சுவிட்டால், அதன் மூலம் தான் மறைந்திருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் சுவாசத்தைக் கூட அடக்கிக் கொண்டான் சோமன். குதிரைகள் நெருங்க நெருங்கச் சோமனின் இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. நான்கு குதிரைகளும் மரத்தைக் கடந்து சிறிது தூரம் சென்று ஒரு திருப்பத்தைக் கடந்த பிறகுதான் சோமனுக்கு நிம்மதி வந்தது. பைரவனுக்கு நன்றி சொல்லிவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் கீழே இறங்கினான். அப்படிச் சந்தோஷத்துடன் இறங்கிய சோமனின் சந்தோஷம், நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கயல்விழியைத் தேடி வந்தது ஏறக்குறையப் பத்து பேர் இருக்கும். நான்கு பேர் தன்னைத் தேடிப் போகும் போது, மீதி ஆறுபேர் சல்லடை போட்டுத் தேட வேறுபக்கம் நிச்சயம் போயிருப்பார்கள்! இப்படி மூலைக்கு மூலை ஆட்கள் குதிரைகளில் போகும் போது கயல்விழியும் நம் ஆட்களும் நிச்சயம் கண்டு பிடிக்கப்பட்டு விடுவார்கள்! அதனால் முதலில் இந்தச் செய்தியைக் கயல்விழியிடம் சொல்லி எச்சரிக்கை பண்ண வேண்டும் என்று எண்ணிய சோமன், தன்னைப் பற்றிய கவலையல்லாமல் குறுக்கு வழியில் அந்த இடத்திற்குப் போக முடிவு செய்து இருளில் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இல்லை... ஓட ஆரம்பித்தான். அதே சமயம், மிகுந்த ஆக்ரோஷத்துடன் விஜயவர்மனின் புரவி மழையையும் பொருட்படுத்தாது வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. அவனைத் தொடர்ந்து இரு வீரர்களும் அதே வேகத்தில் புரவிகளைச் செலுத்த மிகவும் சிரமப்பட்டனர். மேகங்கள் மழையைப் பலத்துப் பொழிய, இடையிடையே மின்னல் வெளிச்சம் காட்ட, அடிக்கடி இரவின் இருள் அவர்களை அசர வைக்க, எதையும் பொருட்படுத்தாது அவர்கள் மிகத் தீவிரத்துடன் புரவிகளைச் செலுத்திக் கொண்டிருந்த போது சாலையிலிருந்து சிறிய பாதை ஒன்று பிரிந்து தென்னந்தோப்புக்குள் செல்வதைப் பளிச்சென்று மின்னிய மின்னல் மூலம் கவனித்தான் விஜயவர்மன். குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். பின்னால் வந்த இரு வீரர்களும், “என்ன சேனாதிபதி?” என்றனர் பதட்டத்துடன். “சாலையிலிருந்து ஒரு பக்கமாகச் சிறிய வழி பிரிகிறது! அதில் எதிரி எந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்பான் என்று பார்க்கவே நிறுத்தினேன்!” என்றான். கூட வந்த இரு வீரர்களும் மழையில் நனைந்து விட்டிருந்தனர். வீசிய காற்று சில்லென்று அவர்கள் உடலைத் தழுவ, “அப்படியா?” என்று இறங்கிக் கொண்டனர். கை கால்கள் நடுங்கின. விஜயவர்மனும் அவ்விதமே நனைந்திருந்ததால் அந்த நடுக்கம் அவனுக்கும் இருந்தது. ஆனால் அதை வெளியில் காட்டாது இறங்கினான். “இந்த மழை நம்மைவிடாது போலிருக்கிறதே!” என்று தலையிலிருந்து வழிந்த நீரை வழித்துவிட்டு வானத்தைப் பார்த்தான். அவன் சொன்னதற்கு மதிப்பளித்தது போலச் சடக்கென்று பெருமழையின் வேகம் குறைந்து தூறலாகப் பூமியில் விழ ஆரம்பித்தது. “சேனாதிபதி!” என்றான் ஒரு வீரன். “என்ன?” “இதோ பாருங்கள்!” அவன் காட்டிய திசையில் குதிரையின் சுவடுகள் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வழியில் தென்பட்டன. “அப்படியென்றால் இப்படித்தான் போயிருக்க வேண்டும்!” என்று மற்றொரு வீரன் மகிழ்ச்சியால் குதிக்க, விஜயவர்மன், ‘பேசாதிரு!’ என்று அவனுக்குச் சாடை காட்டினான். அனைவரும் நிசப்தமாயினர். விஜயவர்மன் செவிகளைக் கூர்மையாக்கி, “என்னமோ முனகும் ஒலி போல் கேட்கிறதே!” என்று அது என்ன என்று அறிவதற்காக இன்னும் தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தான். காற்றின் வேகம் குறைந்து, மழையும் பிசு பிசுத்தது. “சேனாதிபதி, இந்தச் சிறிய பாதை போகிற அந்தத் தென்னந்தோப்பிலிருந்துதான் முனகல் சப்தம் கேட்கிறது?” அதை ஆமோதித்துவிட்டு விஜயவர்மன், புரவியேறினான். இரு வீரர்களும் குதிரையில் அமர்ந்தனர். பாதை வலப்பக்கமாகத் திரும்பியது. அனைவரும் அதில் குதிரையைச் செலுத்தினர். முனகல் சப்தம் கூப்பிடு தூரத்தில் கேட்பது போலிருந்தது. “இந்தப் பக்கம்தான் கேட்கிறது!” என்று விஜயவர்மன் குதிரையைத் தட்ட, அது ஜிவ்வென்று பறக்கத் துவங்கியது. நெருங்க, நெருங்க அந்த ஒலி பெரியதாய்க் கேட்கத் துவங்கியது. முனகல் ஒலி போல அது இல்லாதிருக்கவே விஜயவர்மன் திகைத்துக் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். “அதோ பாருங்கள் சேனாதிபதி!” - ஒரு வீரன், பரபரப்புடன் இருளில் கருங்குன்று போல் தெரிந்த ஒன்றைக் காட்டினான். விஜயவர்மன் கவனித்தான். ஏதோ ஒன்று, பலத்த அடிபட்டு வீழ்ந்திருக்க வேண்டும். அந்த அதிர்ச்சியில் அது முனகிக் கொண்டிருந்தது. யானையா அல்லது குதிரையா? எது...? அருகில் சென்று பார்த்தான். உயர்ந்த ஜாதிக் குதிரை ஒன்று முன்னங்கால் உடைந்து எழுவதற்கு முயற்சிக்க முடியாமல், வேதனை தாளமாட்டாமல் முனகிக் கொண்டிருந்தது. “அருமையான குதிரை... எப்படியோ கால் உடைந்துவிட்டிருக்கிறது” என்று ஒரு வீரன் அனுதாபப்பட, இந்தக் குதிரையில்தான் பல்லவமல்லனைக் கடத்தியிருப்பார்களோ? மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு வந்ததினால் பாதையில் இருந்த கல்லோ அல்லது எதனாலோ தடுக்கப்பட்டு அதனால் வழுக்கிக் கீழே விழுந்து முன்னங்கால் முறிந்துவிட்டிருக்க வேண்டும். வேறுவழியல்லாது மல்லனுடன் ஒன்று குதிரையிலாவது, அல்லது கால்நடையாகவாவது அவனைக் கடத்தியவன் தப்பி இருக்க வேண்டும்! என்று விஜயவர்மன் முடிவுகட்டி நிமிர்ந்தான். “என்ன சேனாதிபதி?” தனக்குத் தோன்றியதைச் சொன்னான். இருவரும், “இருக்கலாம்!” என்று தலையாட்டினர். இப்போது என்ன செய்யலாம்? என்று சுற்றும் முற்றும் பார்த்தான் விஜயவர்மன். அப்போது தொலைவில் ஒருவன் ஓடி வருவது தெரிந்தது. “யாரோ ஒருவன் ஓடி வரானே?” “ஆமாம் சேனாதிபதி!” மிக நிதானித்துக் கண்களை கூர்மையாக்கிப் பார்க்கும் போது அவன் மிக நெருங்கி வந்து கொண்டிருந்தான். “கால் ஒடிந்திருக்கும் குதிரைக்குச் சொந்தகாரனோ?” “இருக்கலாங்க!” மூச்சிரைக்க மிக வேகமாக வந்து அவன் சட்டென்று நின்றான். நின்றவன் யார் என்று பார்ப்பதற்குள் திரும்பி வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்தான். “பைத்தியக்காரன்? ஏன் திரும்பி ஓடுகிறான்?” “சத்திரத்தில் பார்த்த கபாலிகன் மாதிரி தெரியவில்லை?” “ஆமாம்! அப்படித்தான் தெரிகிறது சேனாதிபதி!” கண்ணிமைக்கும் நேரத்தில் புரவியின் மேல் தாவி அதைத் தட்டிவிட்டான் விஜயவர்மன். என்னதான் வேகமாக ஓடினாலும் அசுவத்தின் வேகத்திற்கு ஈடாக முடியுமா? அவனை விஜயவர்மன் குதிரை நெருங்க, ஓடிக் கொண்டிருந்த சோமன் திடீரென நின்றான். குனிந்து மடியிலிருந்து எதையோ எடுக்கிறானே? என்னவென்று நிதானிப்பதற்குள் விஜயவர்மனை நோக்கிக் கத்தி ஒன்று பாய்ந்து வந்தது. விஜயவர்மன் இதைச் சிறிதும் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்படும் அவனின் அறிவாற்றலால் தக்க நேரத்தில் குனிந்து கொண்டான். அவனை நோக்கி வந்த கத்தி, அவன் மீது பாய முடியாமல் தலைக்கு மேல் பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் விஜயவர்மனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு வீரனின் கழுத்தை அது பதம்பார்க்க, ‘ஹா’வென்று புரவியிலிருந்து கீழே விழுந்தான். எல்லாம் ஒரு நொடியில் நடந்துவிட்டது. தன்னுடன் கூட வந்த வீரன் வீழ்த்தப்பட்டுவிட்டான் என்பதை அறிந்த விஜயவர்மன், எவ்விதப் பதட்டத்துக்கும் இடம் தராமல் காபாலிகனைப் பிடிப்பதற்காக அவன் மேல் பாய்ந்தான். கத்தியை வீசிவிட்டதால் தனக்கு வந்த ஆபத்து நீங்கவில்லை என்பதை உணர்ந்து அவனும் ஓட முயன்று அது பலனளிக்காமல் போகத் தன் மேல் பாய்ந்த விஜயவர்மனை எதிர்த்துத் தாக்க முனைந்தான். இருவரும் தரையில் புரண்டனர். மான் போன்று துள்ளிப் புலி போல் பின்னோக்கிச் செல்வது போலப் பாவனை காட்டி உடல் வலிமையத்தனையும் காலில் திரட்டி, விஜயவர்மன் விலாவைக் குறிவைத்து உதைத்தான் சோமன். கீழே அவனுடன் புரண்டதுமே ஆள் சாதாரண ஆளல்ல என்பதை ஏற்கனவே புரிந்து கொண்டிருந்த விஜயவர்மன், தன் பிடியிலிருந்து விலகியவன் தன்னைத் தாக்க வருவதைக் கண்டு எச்சரிக்கை பெற்று மிகக் கவனத்துடன் ஒதுங்கிக் கொண்டான். தாக்க வந்த கபாலிகனுக்கு விஜயவர்மன் விலாப்பகுதி கிடைக்காததால், வலிமை முழுதுவதும் வீணாகத் தரையில் தலை குப்பற விழுந்தான். இதை எதிர்பார்த்தே ஒதுங்கிய விஜயவர்மன், அந்த நல்ல சந்தர்ப்பத்தைக் கோட்டைவிடாமல், அப்படியே அவனை அழுத்திப் பிடித்தான். ஏற்கனவே ஓடிவந்த களைப்பு, அத்துடன் தன்னைப் போன்று மற்போர் நுணுக்கங்களை தெரிந்த சிறந்த வீரனின் அறிவுடன் கூடிய ஆற்றல். இரு காரணங்களினால் சோமன் ஒன்றும் செய்ய முடியாது செயலற்றித் தலை குனிந்தான். தலைமுடியைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்துவிட்டான். குத்து விழுந்த இடம், மனிதனை நிலைகுலையச் செய்கின்ற நரம்பு மண்டலம் ஓடுகின்ற இடமாக இருந்ததால், சோமன் திகைப்புண்டு செயலற்று நின்றான். அருகில் வந்த வீரனிடம் அவன் கைகளைப் பிணைக்கச் சொல்லிக் கீழே விழுந்தவன் என்ன நிலையில் இருக்கின்றான் என்பதை அறிவதற்காக அவனை நோக்கி ஓடினான். கழுத்தின் நடு மையத்தில் கத்தி பாய்ந்து கழுத்து ஓரமாக அதன் முனை வெளி வந்திருந்தது. அவனை மல்லாத்துவதற்காகப் புரட்டக் கண்கள் செருகி, வாயில் நுரைதள்ளிக் கொண்டிருந்தது. நாடியைப் பார்த்தான். முடிந்துவிட்ட கதை என்பது தெரிந்தது. ஏதோ சொன்னான். அந்த இறுதி மரணப் போராட்டத்தில் வார்த்தையாக அவன் வாயிலிருந்து வராது தொண்டையிலே தங்கிவிட்டது. தலை சரிந்தது. கைகள் துவண்டன. துயரத்துடன் எழுந்து நின்றான் விஜயவர்மன். “என்ன சேனாதிபதி!” “இவனை இழந்துவிட்டோம்.” “அப்படியா?” -திகைத்துத் திரும்பிய அந்த சந்தர்ப்பத்தை சோமன் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான். சுழலும் சக்கரம் போல் தலைகுப்புறச் சுழன்று கீழே விழுத்தான் அவனைப் பிடித்திருந்த வீரன். அத்துடன் நிற்கவில்லை சோமன், ஒரே பாய்ச்சலாக அந்த வீரனின் குதிரையில் பாயக் காற்றைக் கிழித்துக் கொண்டு அது பறக்க ஆரம்பித்தது. விஜயவர்மனுக்குத் திகைப்பு. ஆனால் அதற்கே முற்றிலும் மனதில் இடம் தராமல் இனி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நொடியில் தீர்மானித்து, வீரனின் கழுத்தில் பாய்ந்திருந்த கத்தியைப் பிடுங்கிப் பலம் கொண்ட மட்டும் சோமனை குறிபார்த்து பிடுங்கி எறிந்தான். அச்சமயம் நேராகப் போன குதிரை இடப் பக்கமாகத் திரும்பிவிட, அந்தத் திருப்பமே சோமனுக்குப் பாதுகாப்பைத் தந்தது. பாய்ந்து சென்ற கத்தி ‘ணங்’கென்று வெறுந்தரையில் விழுந்தது. தன் கண் முன்னே தன் முயற்சி தோல்வியுற்றுவிடவே, அவனைத் தப்பிவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன், சோமனால் தாக்குண்டு கீழே விழுந்த வீரனிடம் “பின் தொடர்ந்து வா!” என்று கட்டளையிட்டுவிட்டு அவனும் புரவியில் பாய்ந்தான். |