![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 8 விஜயவர்மன் நிலைகண்டு மேகத்துக்கு இரக்கம் வந்துவிட்டது போலும்! இதுவரை பெரு மழையாய்ப் பெய்த மழை தூறலாய் மாறிய அதே சமயம், அத்தூறல் கடற்கரைக்கு மூன்று காததூரம் தள்ளிப் பெருமழையாகப் பொழிந்துக் கொண்டிருந்தது. இனிமேல் குதிரையை மழையில் செலுத்த முடியாது என்ற நிலைக்கு வந்து அதனால் எங்கேயாவது தங்க இடம் கிடைக்குமா என்று பல்லவமல்லனுடன் சுற்றும் முற்றும் பார்த்த அந்த உருவத்துக்கு அந்த இருளில் பாதையின் ஒதுக்குப்புறமாக ஓங்கி வளர்ந்த அரசமரத்தின் பக்கத்திலிருந்த பாழடைந்த மண்டபம் தென்பட்டது. வேகமாக புரவியை அங்கே செலுத்தி, அதை மரத்தின் கீழே நிறுத்தித் தோளில் மயக்க நிலையுடன் சாய்ந்திருந்த சிறுவன் பல்லவமல்லனுடன் அவ்வுருவம் மண்டபத்திற்குள் நுழைந்த போது மண்டபமே அதிர்வது போன்று பெரிய இடி இடித்தது. மயக்க நிலையிலிருந்த சிறுவன்கூட இலேசாய் உடலைக் குறுக்கி அந்த இடியில் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவைக் காண்பித்தான். தோளில் இருந்து அவனைக் கீழிறக்கிச் சுவர் ஓரமாகச் சாய்த்த பின்பு, பெருமூச்சுவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது அவ்வுருவம். மழையில் நனைந்துவிட்ட தன் உடைகளைப் பிழிவதற்காக களைந்த போதுதான் அந்த உருவத்திற்குரியவள் கயல்விழி என்பது வெளிச்சமாகியது. ஏறக்குறைய மேலாடைகளைக் களைந்து, உள்ளாடைகளுடன் நின்ற அவள் எழிலுக்கு எழிலரசியாய்த் தோன்றினாள். இத்தகையவளிடமா சிறுவனைக் கடத்தும் அளவுக்குத் துணிவு இருக்கிறது? பௌர்ணமி சமயம் பூரண சந்திரன் எத்தகைய ஜொலிப்புடன் இருக்குமோ, அத்தகைய ஜொலிப்பு அவள் மேனியில் இருந்தது. கரிய மேகம் நிலவை மறைத்தால்கூட, அந்த மறைப்பிலும் அதன் ஜொலிப்பு தனி அழகுடன்தான் இருக்கும். அதுபோன்று அவளின் அழகிய மேனி அந்த மண்டபத்தில் சூழ்ந்து நின்ற இரவின் இருளிலும் பூரணப் பொலிவுடன் இருந்தது. அவள் கண்கள் மின்னலாய்ப் பளிச்சிட்டன. புருவம் வானவில்லாய்க் காட்சியளித்தது. சிவந்த அந்த இதழ்கள் அடிவானத்துச் சிவப்பாய்ப் பளிச்சிட்டன. பற்கள், காட்டு மல்லிகை அரும்புகளாய் இருந்தன. அந்த வலை கழுத்திலும் அதற்கும் கீழே அழகாய்ச் சரிந்த தோள்களிலும் எவ்வித மறைப்பும் இல்லை என்று வருந்திய மழைத்துளிகள், முத்து முத்தாய்த் துணியைப் போர்த்தது போல் அவற்றின் மேல் அரும்பி நின்றன. மிகுந்த ஈரமாயிருந்ததால் மார்க்கச்சையை அவள் நீக்கிப் பிழிய முயல, இதற்காகவே இதுவரை காத்திருந்தது போல் வானமும் தன் மின்னலாகிய ஒளியின் மூலம் அவள் அழகை இரசிக்க விரும்பிப் பளிச்சென்று வெளிச்சம் போட, அப்போதுதான் கயல்விழிக்கும் தெரிந்தது அந்தப் பாழ்மண்டபத்தில் இன்னொரு உருவமும் இருக்கிறதென்று! விரைந்து செயல்பட்ட அவள் கைகள் மேலழகை மறைக்க முயன்றன. அது முடியாது என்பது போன்று அவளின் கமல மொட்டுகள் அந்த மறைப்பிற்குள் அடங்க முடியாது மேலும் எழில் கூட்ட, தன்னையும் மீறி இன்னொருவனா என்று அச்சமயம் பொறுமைப்பட்ட வானமும் சடக்கென்று தன் ஒளியினை மறைத்துக் கொண்டது. அந்த ஒரு நொடி! அதற்குள் ஆயிரம் ஜாலம் காட்டிவிட்டதே அவளின் மேலழகுகள்! மூலைப்பக்கம் இருந்த அவ்வுருவமும் அந்த ஜாலங்களையெல்லாம் பார்த்துவிட்டேன் என்பது போல அர்த்த புஷ்டியுடன் சிரித்தது. இன்னொரு ஆண்மகன் அம்மண்டபத்தில் இருப்பது தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று இதுவரை வருத்தமுற்றபடி இருந்த கயல்விழி, அச்சிரிப்பினைக் கேட்டு கோபமுற்றாள். “பெண்கள் ஆடை மாற்றும்போது ஆண் மகன் இருக்கின்றேன் என்று சொன்னால் குறைந்துவிடுமோ!” என்றாள். அதற்கு அந்த மூலையிலிருந்த உருவம் பலமாகச் சிரித்து, “எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை இழப்பதற்கு நான் தயாராக இல்லை கயல்விழி!” “நல்ல சந்தர்ப்பம் என்று கண்களைத் திறந்து கொண்டிருந்தாயாக்கும்!” அவன் சொன்னான்: “இங்கு நிலவும் இருளை ஊடுருவும் சக்தி என் கண்களுக்கில்லை கயல்விழி. ஆனால் இயற்கையே அம்மாதிரி ஒரு சூழ்நிலையை எனக்கு அமைத்துத் தரும்போது அதை நழுவவிட நான் என்ன அறிவிலியா” “உயரத்தில் கொம்புத்தேன் இருக்கிறது அதை அடையலாம் என்று ஆசைப்பட்ட முடவன் கதை தெரியுமா உனக்கு?” “நான் நிச்சயம் அம்முடவன் இல்லை. எனக்குக் கயல்விழியைக் கடிமணம் புரிய அருகதையுண்டு! உரிமையும் உண்டு!” “அந்த அருகதையும் உரிமையும் என்னால் மறுக்கப்பட்டுவிட்டது!” “நீ பெண்பிள்ளை... உன்னை சிறையெடுத்து மணமுடிக்க நீண்ட நாள் ஆகாது!” “அவ்வளவுதான் இந்தக் கயல்விழியை நீ எடை போட்டது! சிறையெடுக்க உனக்கு வலிமை இருந்தால், எனக்கு உன்னைச் சிறைபிடிக்க வலிமை இருக்கிறது!” “எதனால், கண்களால்தானே?” அவளுக்கு ஆத்திரம் மிகப் பற்களைக் கடித்தாள். “என் குத்துவாளால்தான் உன் வாழ்வே மூடியப் போகிறது!” “இருக்கட்டுமே, உன்னால் வாழ்வு கிடைக்காத எனக்கு, என் மாமன் மகளின் வாளே அந்தப் புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் என் பாக்கியம்தான்!” “மூடு வாயை!” “மூடிவிட்டேன் கயல்விழி உனக்காக!” கயல்விழி ஆடையைத் திருத்திக் கொண்டாள். இடையில் சொருகியிருந்த வாளை உருவி அவனை நோக்கி நெருங்கினாள். அவன் அதற்காகக் கவலைப்படவில்லை. “இந்த வாளின் கூர்மையும், உன் விழிகளின் கூர்மையும் எனக்கு ஒன்றுதான்! இது என் உடலைத்தான் காயப்படுத்தும்! ஆனால் அந்த விழிகளோ... அப்பப்பா! அதைவிட இந்த வாளையே நான் ஏற்றுக் கொள்கின்றேன்!” என்று நெஞ்சை நிமிர்ந்தினான். அப்போது குதிரைகளின் குளம்பொலிகள் கேட்கத் துவங்கின. என்ன அது? - கணநேரத்தில் சடக்கென்று வாளை இடையில் செருகி மண்டபச் சுவரில் இருந்த பல்லவமல்லனைத் தோளில் சாய்த்துக் கொண்டு, “சாக்கிரதை! அவர்கள் வந்து கேட்டால் என்னைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது” என்று குதிரையில் தாவி இருளில் மறைந்தாள். அவள் போன திக்கையே அவன் அசையாது பார்த்துவிட்டுத் திரும்பவும் மூலையில் சாய்ந்து கொண்டான். அப்போது குலம்பொலி மிக நெருக்கத்தில் கேட்க ஆரம்பித்தது. சாய்ந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இருளில் சரியாகப் புலப்படாததால் கண்களை இடுக்கிப் பார்க்க, அச்சமயம் பார்த்து வானத்தில் மின்னல் ஒன்று தோன்றியது. புரவிகளின் எண்ணிக்கை ஆறு ஏழுக்கு மேலிருக்கலாம். மழையும் கனத்துப் பெய்யவே அவர்களும் ஒதுங்குவதற்காக இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். கயல்விழி ஏன் ஓட வேண்டும்? அது அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது. தோளில் யாரோ ஒரு சிறுவனைக் கொண்டு போகிறாள்... பார்த்தால் அந்தச் சிறுவன் அரச குடும்பத்தைச் சேர்த்தவன் போன்று இருக்கின்றான்... எதற்காக? பைரவருக்குப் பலி தரவா...? இதெல்லாம் மாமன் நாகபைரவன் ஏற்பாடா? வருகிறவர்கள் இச்சிறுவனைத்தான் தேடி வருகின்றார்களா? இவர்கள் கேட்டால் என்ன சொல்வது? பைரவா, என்னை இவர்களிடமிருந்து காப்பாற்று! கயல்விழியை அவர்கள் கண்டு பிடிக்காத அளவுக்கு அவளைத் தப்பியோடச் செய்துவிடு! என்று கபாலிக சமயத்துக்குரிய இறைவனான பைரவரை அவன் வருத்திக் கொண்டிருந்த போது... விஜயவர்மனும் மற்ற வீரர்களும் அந்த மண்டபத்தை அடைந்தனர். புரவிகளை அடர்த்தியான அந்த அரசமரத்தின் கீழ் நிறுத்திவிட்டு அனைவரும் அப்பெரு மழைக்காக மண்டபத்திற்குள் ஒதுங்கி நின்றார்கள். “அப்பா! மழையின் பயங்கரம் மிக கடுமையாக இருக்கிறதே!” என்று ஒரு வீரன் நடுங்கியபடி சொல்ல, இன்னொரு வீரன் “சேனாதிபதி, இந்த மழையில் எப்படி அவரைக் கடத்திக் கொண்டு போக முடியும்? அங்கேயே எங்கேயாவதுதான் மறைந்திருக்க வேண்டும்!” என்று தனக்குத் தோன்றியதைச் சொன்னான். பல்லவமல்லனைப் பற்றி எந்தவிதத் தகவலும் கிடைக்காத நிலையில், குழப்பத்துடனிருந்த விஜயவர்மனுக்கு அவ்வீரன் சொன்னது சரி என்றே பட்டது. அதுதான் உண்மையோ! நாம்தான் உணர்ச்சி வசத்தில் அவசரப்பட்டு விட்டோமோ! இதுவரை மூன்று காத தூரம் வரை வந்துவிட்டோம். ஒன்றும் மல்லனைப் பற்றி அறிய முடியவில்லை... அங்கேயோ எங்கேயாவது ஒரு வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தால்...? இப்படிப் பெய்கின்ற மழையில் யார்தான் மல்லனை வெளியே கடத்த முடியும்? இந்த விஷயத்தில் மிகவும் அவசரப்பட்டு விட்டதாகவே விஜயவர்மன் அச்சமயம் உணர்ந்தான். பெய்து கொண்டிருந்த மழைக் கிடையே பெரிய இடி ஒன்று அப்பகுதியே அதிர்வது போன்று இடித்தது. அதைத் தொடர்ந்து மின்னல்... அந்த வெளிச்சத்தில் மூலைப்பக்கம் சாய்ந்திருந்தவனைக் கவனித்துவிட்டான் ஒரு வீரன். “யாரோ ஒருவன் மண்டபத்தில் இருக்கின்றான்!” என்று அவன் சொல்ல, “யாரடா அவன்?” என்று இன்னொரு வீரன் அதட்டினான். இனிமேல் சும்மா இருக்க முடியாது என்பதை உணர்ந்து, “நான் கபாலிக சமயத்தைச் சேர்ந்தவனுங்க! என் பெயர் சோமன்!” என்றான். “ஓ... கபாலிக சமயத்தவனா...” என்று இகழ்ச்சித் தொனிக்கச் சொன்ன அவ்வீரன், “நேராக சுவர்க்கம் போகும் உத்தமர்கள்!” என்று முணுமுணுத்தான். “பேசாமல் இரு. நமக்கு எல்லாச் சமயமும் ஒன்றுதான்!” என்று அந்த வீரனை அடக்கிய விஜயவர்மன், இவனைக் கேட்டால் ஏதாவது செய்தியாவது தெரியாதா என்ற எண்ணத்துடன், “நாங்கள் வருவதற்கு முன் இந்தப் பக்கம் யாராவது மழைக்கு வந்து ஒதுங்கினார்களா?” என்று கேட்டான். சோமன், மூலையில் சாய்ந்தவாறே “இல்லீங்க!” என்றான் மெல்லிய குரலில். அதில் எங்கே கயல்விழியைப் பற்றிக் கேட்டுத் தொலைப்பார்களோ என்ற பயம் இழைந்திருந்தது. அச்சத்தினூடே மெல்லிய குரலில் மனமின்றி அவன் சொன்ன அப்பதில் விஜயவர்மனுக்குப் பெருமழையின் ஓசையினால் கேட்காததால், “என்ன சொல்கிறாய்?” என்று திரும்பவும் உரக்கக் கேட்டான். இங்கு வந்தது பற்றி இவர்களுக்கு ஏதாவது தெரியுமோ என்று விஜயவர்மன் கேட்ட விதத்திலிருந்து இலேசான கலக்கமுற்ற சோமன், திரும்பவும், “இல்லீங்க!” என்றான். ஆனால் அந்த வார்த்தையும் மெலிதாகவே ஒலித்தது. “என்னப்பா, உரக்கப் பேச வராதா உனக்கு?” என்று விஜயவர்மன் உரக்கக் கேட்க, இதுதான் சமயம் என்று, “என்னடா திமிராக அங்கேயே உட்கார்ந்து கொண்டு பதில் சொல்கிறாய்? எழுந்திரு” என்று அதட்டினான் ஒரு வீரன். உடனே இன்னொரு வீரனும், “நானும் வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்! நீ ரொம்பவும் திமிராய்த்தான் இருக்கிறாய்!” என்று அவனும் அந்த அதட்டலில் சேர்ந்து “எழுந்திருடா!” என்று கத்த, “நீ கபாலிகனா? அல்லது கள்ளனா?” என்று கேட்டபடி மூலையில் சாய்ந்திருந்த அவனின் அருகில் சென்றான் மற்றொருவன். “மன்னிக்கனும், எனக்கு உடல் நலமில்லை! அதனால்தான்..” என்று சோமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அருகில் சென்றவன் அவன் தலைமயிரைப் பிடித்துக் தூக்கி நிறுத்தினான். “நான் கள்வனல்ல. கபாலிக சமயத்தைச் சேர்ந்தவன்! எல்லாம் வல்ல அந்த பைரவர் மீது சத்தியம். எனக்கு உடல் நலமில்லை. அதனால்தான் மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன்! பொறுத்தருளவும்” என்றான். “ஏய் திருட்டுப் பயலே! நீதானே பல்லவமல்லரைக் கடத்தியவன்..” என்று ஒரு வீரன் அதட்டிக் கேட்டான் அப்போது! எல்லாம் தெரிந்துவிட்டதோ என்று நடுநடுங்கி, “இல்லை.. இல்லை.. எனக்கு ஒன்றும் தெரியாது! உடல் நலமில்லாததால் மழைக்காக இம்மண்டபத்தில் ஒதுங்கியிருக்கிறேன்!” என்றான். நீண்ட நெடுங் கோடாக வானத்தில் அப்பகுதியெங்கும் பகலாக்குவது போல மின்னியது. அந்த வெளிச்சத்தில் சோமனைக் கவனித்த விஜயவர்மன் கண்களுக்கு அந்த மரத்தின் கீழ்ப் புரவிகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ஏதோ மினுக் மினுக்கென்பது போல் ஒன்று ஒளிரவே, என்னவென்று அதைக் கூர்ந்து கவனிப்பதற்குள் மின்னல் மறைந்து மறுபடியும் இருளில் மூழ்கியது அவ்விடம். “சேனாதிபதி! இந்தப் பயல் நிச்சயம் திருட்டுப் பயல்தான்? இவன் விழிக்கிற விழியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது!” என்றான் ஒரு வீரன். அப்போதைக்கு அவன் சொன்னதை விஜயவர்மன் ஏற்கவில்லை. மினுக்கென்று மின்னியது என்னவாக இருக்கும் என்பதிலேயே அவன் கருத்து இருந்தது. பலமாகப் பெய்த மழையின் வேகமும் மெல்லக் குறைய, விஜயவர்மன், அந்தப் பொருள் தெரிந்த இடத்தை நோக்கி ஓடினான். “சேனாதிபதி, எங்கே போறிங்க? இந்த மழையில்!” என்று சோமனைப் பிடித்திருந்த பிடியைவிட்டு மண்டபத்திலிருந்து இறங்க, இதுதான் சமயம் என்று சோமன் தனக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு வீரனைப் பலமாகக் கீழே தள்ளிவிட்டு, மழையையும் பொருட்படுத்தாமல், மண்டபத்திலிருந்து குதித்துத் தெற்குப் பக்கமாக ஓட்டமெடுத்தான். “ஏய் பிடி! பிடி!” என்று வீரர்கள் அவனைத் துரத்தி ஓட அப்பகுதி முழுவதும் சோமனுக்கு மிகவும் பழக்கமான இடமானதால் அருகிலுள்ள மாந்தோப்புக்குள் புகுந்து மறைந்தான். அந்த இடம் துரத்தின வீரர்களுக்குப் புதிதானதாலும், அத்துடன் அடர்ந்திருந்த இருள் அவர்களுக்கு எவ்வித வழியையும் காட்டாது குழப்பத்தையே தந்ததாலும் வீரர்கள் சோமனைத் தொடர்ந்து செல்ல முடியாமல் திகைத்து நின்றுவிட்டனர். மினுக் மினுக்கென்று மின்னொளியில் தெரிந்த அப்பொருள் இருக்கும் இடத்தை நோக்கி இறங்கிய விஜயவர்மன், திடீரென்று ஏற்பட்ட பிடி பிடியென்ற ஆரவாரத்தைக் கேட்டு “அவன் தப்பித்துவிட்டானா?” என்று சோமனால் கீழே தள்ளப்பட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற வீரனைப் பார்த்துக் கேட்டான். “ஆமாம்!” என்று சொல்வதற்கு அவனால் முடியாமல், இடுப்பைப் பிடித்தபடி, “மகா கள்ளப் பயல்!” என்றான் கோபத்தோடு. அந்தப் பதிலால் எரிச்சலுற்ற விஜயவர்மன், “என்ன நடந்தது?” என்றான். சோமனைத் தொடர்ந்து சென்ற வீரர்கள் மிக வேகத்துடன் திரும்பி வந்தனர். “என்ன ஆயிற்று?” என்று அவர்களிடம் கோபமும் எரிச்சலும் இழையக் கேட்ட விஜயவர்மனிடம், “சேனாதிபதி, இந்த இருளை அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான்” என்றனர். “எனக்கு அப்பவே தெரியும்! அவன் விழித்த விழியிலிருந்து” என்றான் அவர்களில் ஒருவன். “பேசாமலிருங்கள்!” என்று அதட்டிவிட்டு, அவன் ஓடிய பக்கம் கவனித்தான். மழைத் தூறலுடன் பெரிய கருப்புத்திரை தொங்கவிட்டதைப் போன்று கனத்த இருள், கேலியாகச் சிரித்தது. அத்துடன் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. “நான்கு பேர் குதிரைகளில் சென்று தேடிப்பாருங்கள்! எங்கே சென்றாலும் திரும்பவும் இம்மண்டபத்துக்கே வந்து சேருங்கள்!” என்றான். தலையாட்டிய வீரர்கள், புரவிகளை அவன் ஓடின பக்கம் செலுத்தினர். மழைத்தூறல் வலுத்தது. காற்றும் பலமாய் வீசியது. குதிரைகள் செல்லச் சிரமப்பட்டன. “கள்ளப் பயல் மட்டும் கிடைக்கட்டும் அவன்! தலையைச் சீவி உடலைத் துண்டு துண்டாக வெட்டி..” என்று ஒருவன் கோபத்துடன் சொல்ல “ஆகட்டும்டா! ஆளை விட்டுவிட்டு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?” என்றான் இன்னொருவன். பெரிய இடி இடித்தது. கருமேகத்தை இரண்டாய்ப் பிளந்தது போல நீண்ட மின்னல் வானத்தில் வளைந்து வளைந்து கீழ் வானம் வரை வெண் கோடிடத் தூரத்தில் ஒருவன் ஓடுவது, அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. “அதோ... கள்ளப் பயல் ஓடுகிறான்! பிடியுங்கள்!” என்று கூவியபடி நால்வரும் குதிரையை வேகமாகச் செலுத்தினர். அதே சமயம் அந்த ஒளிக்காகவே காத்து நின்ற விஜயவர்மன் சட்டென்று தரையில் அப்பொருளைத் தேடத் துவங்கினான். அவன் நின்ற வெகு சமீபத்தில்தான் அதுவும் மினுக் மினுக்கென்று மின்னியபடி தரையில் கிடந்தது. எடுத்துக் கொண்டான் மகிழ்ச்சியுடன். அந்த மகிழ்ச்சி அந்தப் பொருள் என்ன என்றுப் பார்த்த போது மறைந்தது. திடுக்கிட்டுப் போனான். “யாரப்பா அங்கே, இங்கே வாருங்கள்!” என்று ஒரு வீரனைக் கூவி அழைத்தான். “என்ன சேனாதிபதி?” என்று ஒருவன் பதறிவர, தன் கையிலிருந்ததை அவனிடம் கொடுத்து “இது பல்லவமல்லன் காதில் உள்ள குண்டலம் அல்லவா?” என்றான் பதட்டத்தோடு. அவன் அதை உற்றுப் பார்த்துத் தொட்டுத் தடவி “ஆமாம் சேனாதிபதி. காபலிகர்கள் கூட்டம்தான் அவனைக் கடத்தியிருக்கிறது!” “சீக்கிரம்” என்று அதை வாங்கித் தன் கச்சையில் பத்திரப்படுத்திப் புரவியில் அமர்ந்தான் விஜயவர்மன். “என்னுடன் இருவர் வாருங்கள்! மீதி நான்குபேர் இந்தப் பக்கமாக போய்த் தேடுங்கள்? அப்படி அவன் கிடைத்தாலோ அல்லது வேறு எந்த முக்கியச் செய்தியிருந்தாலோ இம்மண்டபத்துக்கே வாருங்கள்! இதுதான் நாம் சந்திக்க வேண்டிய இடம்! சாக்கிரதை!” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு இருளில் புரவியை வேகமாகச் செலுத்த, இருவீரர்கள் அவனைத் தொடர்ந்தனர். |