(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 2

     புலர் காலைப் பொழுது மறைந்து, காலைக் கதிரவன் தன் பொன்னிறக் கதிர்களை எங்கும் பரப்ப, காஞ்சியின் மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் அந்த வெளிச்சத்தில் பார்ப்பதற்குப் பெரு விருந்தாக அமைந்திருந்தன.

     கயிலாசநாதர் கோவில் விமானத்தில் அரும்பியிருந்த பனித் துளிகள், தம் நீர் முத்துக்களால், அதன் கலைநயத்தைக் கண்டு இரசித்து, அதற்கு மேலும் மெருகூட்ட தன் பங்குக்கு, முத்துக்களால் உண்டான ஆடையை அதன் மேலே போட்டு அழகு பார்ப்பது போல ஆயிரக் கணக்கில் அரும்பி நின்று, அக்காலைக் கதிரொளியில் ஒளிர்ந்த காட்சி, மனதிற்குப் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.

     உன் பங்குக்கு நீ மட்டும் செய்தால் போதுமா? என் பங்குக்கு என்று தன் பொன்னிறக் கதிர்களை அவ்விமானத்தின் மீது பரப்பி, அதனால் ஏற்பட்ட வர்ண ஜாலத்தைக் காண மேலும் அதிகக் கதிர்கள் ஊடுருவ அந்த நிகழ்ச்சியைக் கண்டு களி கூர்வதற்காகவே பறவைகள் பல, அங்கே வந்து அமர்ந்தன.

     இந்த அற்புதத்தைக் காணக் கொடுத்து வைக்காத சாம்பன், மிக வேகமாக நடந்து கொண்டிருந்தான். போகப் போகப் பெரிய மாளிகைகளும், சிறிய வீடுகளும் குறைந்து அடர்த்தியான தென்னந்தோப்பு ஒன்று அவனுக்குத் தென்பட்டது.

     சுற்றும் முற்றும் கவனித்துவிட்டுச் சாம்பன், அத்தோப்பிற்குள் நுழைந்தான்.

     மிக நெருக்கமான மரங்கள்... அதற்கு நடுவே இடிந்தும், சிதைந்தும் ஒரு மண்டபம் தெரிந்தது.

     சாம்பன், அருகே சென்றதும் நின்றான். சுற்றிலும் மீண்டும் பார்வையைச் சுழலவிட்டான். யாரும் இல்லை என்று அவனுக்குத் தீர்மானமானதும், சிதைந்து கிடந்த அந்த இடிபாடுகளுக் கிடையே சாக்கிரதையாகக் காலை வைத்து மண்டபத்தை நெருங்கினான்.

     அப்போது-

     மனித அரவம் கேட்டு, மேற்புறத்தில் இரைக்காக வந்த நல்ல பாம்பு ஒன்று வேகமாக இடுக்கில் புகுந்து மறைய முயற்சித்தது.

     சாம்பன், அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. “சூ!” என்று அதை அதட்டிவிட்டு எச்சரிக்கையுடன் காலைத் தூக்கி வைத்து, மண்டபத்திற்குப் போகச் சரியான பாதையில்லாததால், இப்படியும் அப்படியும் சமாளித்து உள்ளே நுழைந்தான்.

     தூரத்தில் குயில் கூவியது; பறவைகள் ‘கீச் கீச்‘ என்று கத்திக் கொண்டிருந்தன.

     மனிதன் வாழ்வதற்கே அருகதையில்லாத அந்த மண்டபத்திற்குள் ஏன் சாம்பன் நுழைகின்றான்?

     வெளவால் ஒன்று, இப்படியும் அப்படியும் பறந்து கொண்டிருந்தது.

     “சனியன்!” என்று அதை விரட்டிய சாம்பன், மண்டபத்தை ஒட்டியிருந்த அறையின் கதவைத் தள்ளித் திறந்தான்.

     உள்ளே புகுந்து, திரும்பி அதே வேகத்தில் அவன் வெளிவந்த போது கையில் மணிப்புறா ஒன்று இருந்தது.

     ‘உக்கூர் உக்கூர்’ என்று சப்தித்து, இங்கும் அங்கும் கண்களை ஓட்டி, கீழே விழாதிருக்க அவன் கையைத் தன் கால்களால் கெட்டியாகப் பற்றிக் கொண்டு நின்றது.

     அவன், இடிபாடுகளைக் கடந்து, சிறிது தள்ளியிருந்த சுமை தாங்கிக் கல் மீது மணிப்புறாவை விட்டான். அருகேயிருந்த புதர்ப் பக்கம் சென்று இலையைப் பறித்தான். அதைச் சுமை தாங்கிக் கல்லிலிருந்த பள்ளத்தில் சாறாகப் பிழிந்துவிட்டான். கொஞ்சம் சாறு பள்ளத்தில் சேர்ந்ததும் இடுப்பில் தயாராகச் செருகி வைத்திருந்த பட்டுத் துணியை எடுத்து விரித்தான்.

     சிறு குச்சியை எடுத்துக் கல்லில் தேய்த்துக் கூராக்கிச் சாறில் தொட்டு, மணிமொழி சொன்ன செய்தியை அதில் எழுதினான். முடிந்ததும் அதை அப்படியே சிறிது நேரம் உலரட்டும் என்று விரித்து வைத்திருந்து, காற்றில் காய்ந்ததும் அதை எடுத்துப் புறாவின் கழுத்தில் மெதுவாகச் சுற்றினான். அப்படிச் சுற்றும் போது துணியால் கழுத்து இறுகிப் போகாமலிருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டான். பிறகு மணிப்புறாவை மெல்லக் கையால் தடவிவிட்டு வானில் உயரத் தூக்கிப் பறக்கவிட்டான் சாம்பன்.

     புறா படபடவென்று சிறகடித்து வானோக்கிப் பறந்தது. மிக உயரத்தில் சென்று வேகமாகப் பறக்கத் துவங்கியதும், சாம்பன் திரும்பி மண்டபத்திற்குள் நுழைந்து மறைந்தான்.



மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19