நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

கலவைக் குழந்தை

     நிகழ்கால நண்பனே!

     இறந்த கால அடிச்சுவடைக் காண உன்னை நான் அழைக்கிறேன்.

     ஏன் சிரிக்கிறாய்?

     என்னுடைய அழைப்பு உனக்கு வெறும் கேலிக் கூத்தாகத் தெரிகிறதா?

     விதையில்லாமல் செடியா? மரமா, பூவா, காயா, கனியா?

     கருவில்லையென்றால் உருவமேது?

     ஏன் அப்படி விழிக்கிறாய்?

     என்னை ஒரு பழங்காலப் பேர்வழியாக எண்ணி அப்படிப் பார்க்கிறாயா?

     உன்னை நான் கேட்கிறேன். பதில் சொல்!

     பஞ்ச பூதங்களும் சீலங்களும் பழமையானவைதான். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு நம்மால் வாழ முடிகிறதா?

     ஏன் முகத்தைச் சுளிக்கிறாய்?

     கண்ணாடியைப் பார்க்கிறோம்...

     எதற்காக?

     நம்மை நாம் சீர்படுத்திக் கொள்வதற்காக!

     உன்னைப் போல் நானும் மாற்றத்தைக் காண விரும்புபவன்தான். அதற்காக ஏமாற்றத்தை அடைய நான் தயாராயில்லை.

     நிகழ்கால மனிதராகிய நாம், எதிர்காலத்தை நல்ல முறையில் சமைக்க வேண்டுமென்றால் நிச்சயம் இறந்த காலத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.

     ஏன் என்னை அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கிறாய்?

     அசலுக்காக வாதாடுகிறேன்; அதன் நகல் மீது கருத்து செலுத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.

     இது தவறா?

     ‘எவர்சில்வர்’ ஏற்றம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் வெள்ளியின் மதிப்பு குறைவுதான். நான் மறுக்கவில்லை.

     ஆனால் என் நண்பனே!

     ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒரு வெள்ளி தரும் வெளிச்சத்துக்கு ஈடாக முடியுமா?

     வெறும் கவர்ச்சி வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைய முடியாது என்பதை நீ மறுக்கிறாயா?

     நடைமுறை நண்பனே!

     எடை போட்டுப் பார்க்கவே உன்னை நான் அழைக்கிறேன்.

     நீதான் அசலைக் காண அடியோடு மறந்துவிட்டாயே!

     மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

     பழமையில் புதுமையும், புதுமையில் பழமையும் கலக்க வேண்டும்.

     இந்தக் கலவையின் மூலம் பிறக்கின்ற குழந்தைதான் எந்த ஒரு பலவீனத்துக்கும் பாய் விரிப்பதில்லை.

     அந்த அடிப்படையில் அந்தக் கலவைக் குழந்தையைச் சிருஷ்டித்து இருக்கிறேன்.

     குழந்தையின் பெயர்தான் உனக்குத் தெரியுமே!

     என்றாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டல்லவா!

     அந்த முறையில் சொல்கிறேன்...

     நாக நந்தினி!

     பெற்ற குழந்தையை உன்னிடம் தவழவிட்ட பெருமைக்குரிய நாதன் பதிப்பக உரிமையாளர் அவர்கட்கு என் இதய பூர்வமான நன்றியைச் செலுத்தி உன்னிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

     வணக்கம்.

அன்புள்ள,
வே. கபிலன்