உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 4. கொதிப்பும் குமுறலும்! அம்பைக் கண்டு அதிர்ச்சி பெற்ற நால்வருமே திசைக்கு ஒருவராகத் திரும்பிப் பார்த்தனர். சாயும் நிலவின் மங்கலான வெளிச்சத்தில் ஊடுருவிப் பார்த்தனர். நெற்குன்றமல்லவா அது! எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கும் நெல்மணிகளே முதலில் அவர்களது கண்களுக்குத் தெரிந்தன. பிறகு அடிக்கொன்றாய் இருக்கும் தென்னை மரங்களும் மாமரங்களும் வாழை மரங்களும் பளிச்சிட்டன. ஒளியைவிட இருள் அதிகமாகத் தெரியும் அந்த மரங்களுக்கிடையே விழிகளைச் சுழற்றிய பெருங்குன்றூர்கக் கிழாரும், திதியனும், சிங்கமுகனும் பெற்ற ஏமாற்றத்தை நந்தினி பெறவில்லை. காரணம் அவளது பார்வை வேறு திசையில் இருந்ததுதான்! வெற்றிக்களை தெறிக்க வெருட்டென்று திரும்பிய நந்தினி, தான் கண்டு பிடித்துவிட்ட உருவத்தைச் செங்காந்தள் விரலால் சுட்டிக்காட்டிய வண்ணம், “அதோ, ஓடுகிறான் பாருங்கள்!” என்று பெண்ணுக்குரிய மென்மைக் குரலில் கூறினாள். “எங்கே, எங்கே?” என்று திரும்பிய சிங்கமுகனின் கண்களுக்கு மட்டும் ஓடும் மனிதன் தெரிந்தான். உடனே தான் வந்த குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்த சீக்கிரத்தில் அவனை நோக்கி விரைந்தான். திதியனும் கவிஞரும் சிங்கமுகன் செல்லும் பாதையைப் பார்த்தனர்! மூன்று கல் தூரத்தை இமைப் பொழுதில் கடந்து வந்துவிட்ட சிங்கமுகன், கோணல் மாணலாக ஓடும் மனிதனைப் பார்த்து, “நில்! அப்படியே நில்! இல்லையென்றால் நீ உன் உயிரை இழப்பது உறுதி” என்று உரக்கக் கத்தினான். விதியை வெல்லும் மனிதன் எங்கு இருக்கிறான்? அவன் மேலும் ஓடிக் கொண்டிருந்தான். நெருங்கிவிட்ட புரவியைப் பார்த்து மருண்ட வண்ணம் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடியபடியே இருந்தான். அவனது செயலைக் கண்டு கொதிப்படைந்த சிங்கமுகன் தன்னுடைய இடைப்பட்டையிலிருந்த கட்டாரியை வெடுக்கென்று எடுத்துக் குறிபார்த்து வீசினான். குத்துப்பட்ட மனிதன் ‘ஓ...!’வென அலறித் துடித்த வண்ணம் அடியற்ற மரம் போல் தரையில் விழுந்தான். அவனது புறக் கழுத்திலிருந்து இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. யாரோ ஒரு எதிரியை வீழ்த்திவிட்ட எக்காளத்தோடு.. குதிரையிலிருந்து தொபுக்கென்று குதித்த சிங்கமுகன், “ஓடிய கால்கள் எங்கே?” என்று கேட்ட வண்ணம் அவனுக்கு எதிரே வந்து நின்று, தன் கால் விரலால் அவனது உடம்பை அலட்சியமாகப் புரட்டினான். இமைகளைத் திறப்பதும் மூடுவதுமாய் இருந்த அவன், தனக்கு எதிரே வந்து நிற்பவனைப் பார்த்த மாத்திரத்தில் “அண்ணா!” எனக் கத்திவிட்டான். அந்தக் குரலைக் கேட்டதுமே அவனது முகத்தை உற்றுப் பார்த்த சிங்கமுகன், “தம்பி! நீயா?” எனக் கேட்டுக் கதறிவிட்டான். உயிர் பிரியப் போகும் வேளையில் உரக்கப் பேசும் வலிமை யாருக்குத்தான் உண்டு! “அண்ணா! வீணாக என்னைக் கொன்றுவிட்டீர்களே!” என்று அடிக் குரலில் அரைகுறையாக உதிர்த்தான் அவன். “தம்பி, தார்வீகா! உனக்கு நானா எமனாக வரவேண்டும்? ஐயகோ!” என்றபடி தொப்பென்று அவன் மேல் விழுந்தான். “அம்பு எறிந்தவன் நானல்ல அண்ணா!” என்று உயிரோடு போராடிய வண்ணம் தார்வீகன் சொன்னான். அதே வேளையில் அங்கு வந்த திதியனும் கவிஞரும் நந்தினியும் பதறிப் போனார்கள். தனக்குப் பின்னால் வந்து நிற்பவர்களைக் கவனிக்காத சிங்கமுகன், “தம்பி! உன்னையா கொன்றேன். இல்லை! என்னை நானே அழித்துக் கொண்டேன்” என்று தன் நெஞ்சம் பதை பதைக்கச் சொன்னான். தார்வீகனின் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாகச் செருகத் துவங்கின. ஆனாலும் எதிரில் வந்து நிற்கும் மூவரையும் அவன் பார்க்காமலில்லை. சோழர் படைத்தலைவனை அடையாளம் கண்டு கொண்டதும் ஏதோ ஒன்றைச் சொல்லும் ஆவலில் துடித்தான். அவனுக்குப் பக்கமாய் வந்து அமர்ந்த திதியனின் விழிகளில் நீர் சுரந்தது. “தார்வீகா! நீயா என்னைத் தாக்க முயன்றாய்?” என்று அவன் கேட்டதுமே ஒரு நெம்பு நெம்பி அவனது கையைப் பிடித்த தார்வீகன், “பிரபு! நான் வீசிய கணையல்ல; என்னை நோக்கி எதிரி வீசிய அம்பு, எப்படியோ தவறி உங்களைத் தீண்டிவிட்டது. அவன் வேறு யாருமல்ல... அவன்... அவன்” என்று உளறிய வண்ணம் உதட்டினை மட்டுமல்ல; விழிகளையும் மூடிக் கொண்டான். “தார்வீகா! ஏன் நிறுத்திவிட்டாய்? யார் அவன்? சொல்... சொல்” என்று துரிதக் குரலில் கேட்ட வண்ணம் அவனது உடம்பை இலேசாக உலுக்கினான் திதியன். அந்த உலுக்கலால் தார்வீகனின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் குபுகுபுவென்று இரத்தம் கொப்புளித்துக் கொண்டு வந்தன. “தார்வீகா! தார்வீகா!” என்று ஒரு முறைக்கு இருமுறை அழைத்த திதியனுக்குச் சிங்கமுகன் பதிலிறுத்தான். “தலைவரே! இனி அவன் நம்மிடம் பேசமாட்டான். பேசும் உயிர் அவனிடமில்லை.” -சொல்லிவிட்டு ‘ஓ...!’வெனக் கதறினான். அந்தக் கதறலில் இரண்டறக் கலந்த நந்தினி விசித்து விசித்து அழுதாள். பிறகு பதுமை ரூபத்தில் எழுந்து, அசையாமல் நின்ற சிங்கமுகன் அருகில் வந்தாள். அவன் உயிரிழந்த தன் தம்பியின் முகத்தைக் கூர்ந்து கவனிக்கலானான். இப்போது அவன் தார்வீகனைத்தான் பார்க்கிறானா? அவனது மனத்திரையில் இப்போது நடந்து கொண்டு இருப்பதென்ன? சிங்கமுகன் இங்குதான் இருக்கிறானென்று கருதிக் கொண்ட திதியன் ஏதேதோ சொன்னான். ஆனால் அவனுடைய செவியில் எந்த ஒரு சொல்லும் விழவில்லை. “அவன் வேறு யாருமல்ல என்றானே! அப்படியென்றால் அவன் யார்? உடனிருந்து உயிர்வதை புரியும் அந்த உன்மத்தன் எவன்? இங்குள்ளவனா அல்லது எதிரியின் கையாளா? பாதியைச் சொன்னவன் மீதியைச் சொல்லாமல் விழிகளை மூடிவிட்டானே!” என்ற வேதனைப் பொருமலோடு அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். திதியனின் தொடர் அழைப்புக்குப் பிறகு திரும்பிய சிங்கமுகன் துக்கம் பொங்கிய குரலில், “என்ன தலைவரே!” என்று விளித்தான். இப்போது திதியனின் கண்களிலிருந்து மட்டுமல்ல; நெஞ்சிலிருந்தும் தீப்பொறி கிளம்பியது. “சிங்கமுகா! உன் தம்பி சொன்னதை நினைக்க நினைக்க யார் யார் மீதோ சந்தேகம் வருகிறது; சலனம் உண்டாகிறது. அவன் யார் என்பதை அடையாளம் காட்டிவிட்டிருந்தால் கூடப் போதுமானதாய் இருந்திருக்கும்! என்ன செய்வது? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இல்லையென்றால் அந்தக் கொடியவனைக் கொன்று, அவனது உடம்பைக் காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கி இருக்கலாம். அதற்கு வழி செய்யாமல் இறப்புலகை நோக்கிப் போய்விட்டான்” என்றபடி சோகப் பெருமூச்செறிந்தான். அதற்கு அவன், “தலைவரே! என் நினைப்பும் அதுதான். முழுமையாக சொல்லாமல் முடிவை நோக்கி அவ்வளவு சீக்கிரமாகப் போய்விட்டான்” என்று சொன்னதும் திதியன் கூறினான்: “உண்மைதான்! ஆனால் நீ கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாய். இல்லையென்றால் தார்வீகனின் உயிர் பிரிய வழி ஏற்பட்டிருக்காது. இல்லையா?” “தலைவரே! நடந்துவிட்ட ஒன்றை நினைவு படுத்தாதீர்கள். அற்ப ஆயுள் படைத்திருக்கும் ஒருவனைத் தம்பியாகப் பெற்றிருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்? விடுகதை எதுவும் தொடர்கதையாவதில்லையே! ஊம்... நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!” எனச் சொல்லிக் கொண்டே கண்களைக் கசக்கிக் கொண்டவன் மேலும் சொல்லலானான்: “தலைவரே! நேரம் ஆகிறது; பொழுதும் விடியப் போகிறது. நான் என் தம்பியை அடக்கம் செய்துவிட்டுக் கவிஞரின் விருப்பப்படியே இப்போதே புறப்படுகிறேன். அம்பு வீசிய அநியாயக்காரன் யார் என்பதைக் கண்டு பிடிப்பதில் அலட்சியம் வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே இறங்கிய சிங்கமுகன், தன் தம்பியின் இரத்தம் தோய்ந்த உடம்பைத் தோளின் மேல் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். அப்போது அவன் போட்ட அழுகைச் சத்தத்தைக் கேட்ட மூவரின் கண்களிலிருந்தும் அர்த்தமுள்ள கண்ணீர் பீறிட்டெழுந்தது. சிங்கமுகன் திரும்பவில்லை; கேவிக் கேவி அழுத வண்ணம் போய்க் கொண்டிருந்தான். கவிஞரின் அவல ஒலியையோ, நந்தினியின் விம்மலையோ, சோழர் படைத்தலைவனின் கண்ணீரையோ அவன் பொருட்படுத்தவில்லை. தன்னோடு பிறந்து, தன்னிடமே வளர்ந்த தார்வீகனைத் தழுவிய வண்ணம் வானத்தில் நழுவிச் செல்லும் நிலா வெளிச்சத்தில் போய்க் கொண்டே இருந்தான். திதியன் திரும்பினான்! இப்போது அவனுடைய நடையில் முதுமை கலந்திருந்தது. நந்தினியும் கவிஞரும் அவனைப் பின் தொடர்ந்து வரலானார்கள். தேக்கம் பெற்றிருந்த இருள் நீக்கம் பெறுவதற்குள் புலவர் இருக்கைக்கு வந்தனர். “சோழர் படைத்தலைவா!” என்றார் பெருங்குன்றூர்க் கிழார். “ஐயனே!” என்றபடி விழிகளைத் திரும்பிய திதியன், “சொல்லுங்கள்!” என்றான். “ஒன்றுமில்லை... நான் காவிரியில் நீராடிவிட்டு வரும் வரையிலும் இங்கு இருக்க முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்டேன்.” “இருக்கச் சொன்னால் இருக்கிறேன்!” “இருப்பீர்களென்பது எனக்குத் தெரியும். உங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்காகவே அப்படிக் கேட்டேன்” என்றபடி நந்தினியின் பக்கமாக விழிகளைப் புரட்டிய பெருங்குன்றூர்கக் கிழார், “அம்மா! நீ சென்று படுத்துக் கொள். கண்விழிப்பு உடம்புக்கு ஆகாது. எப்படியோ இரவெல்லாம் விழித்துக் கொண்டு இருந்துவிட்டாய். ஒரே அசதியாக இருக்கும். போ! போய்ப் படுத்துக் கொள்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். அவர் போனதுமே அங்கிருந்த ஒரு பெரிய பாறையின் மேல் அமர்ந்து கொண்ட திதியன், சுற்றுப் புறங்களிலிருக்கும் செடி- கொடிகளில் பூத்திருக்கும் பூக்களைப் பார்ப்பது போல நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான். திதியனைப் பார்க்காமல் தீந்தமிழ்க் கவிஞரின் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி வெருட்டென்று அண்ணாந்து பார்த்துவிட்டுச் சொன்னாள்: “அடடே! இங்கு பொழுது புலரும் விதமே விநோதமாகத்தான் இருக்கிறது!” நந்தினியின் இந்தக் கருத்தைக் கேட்ட திதியன் பேசாமல் இருக்கவில்லை, அவளைக் குறும்புடன் பார்த்தான். “ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவள். “நீ இங்கு வந்திருப்பது வினோதமாகத் தெரிவதால்தான் அப்படிப் பார்த்தேன்!” “ஏன்... நான் வந்ததில்...” என்று அரைகுறையாக நிறுத்திவிட்டு அவனது முகத்தை ஊடுருவினாள். “தவறில்லை... பூவைத் தேடிப் பொன்வண்டு போவதுதான் வழக்கம். ஆனால் பொன்வண்டை நாடிப் பூ வந்திருப்பதை நினைக்கும் போது என்னுள் ஒருவித மயக்கம் மலர்கிறது.” “வந்ததில் தவறில்லையே!” “நிச்சயம் இல்லை நந்தினி! நீ இங்கு எப்படி வந்தாய் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.” அவள் களுக்கென்று நகைத்தாள். உடனே எழுந்து கொண்ட திதியன் விழிகளைத் தரையில் சாய்த்து ஏதோ ஒன்றைத் தேடுவது போல் பாவனை புரிந்தான். திதியனின் திடீர் நடவடிக்கையைப் பார்த்து மருட்சி அடைந்த மங்கை, “என்ன தேடுகிறீர்கள்?” என்றதும், “நீ உதிர்த்த முத்துகளை!” என்றபடி நிமிர்ந்தான். நந்தினியின் முகம் நாணத்தால் கவிழ்ந்தது! கவிஞரை மானசீகமாக வாழ்த்தியபடி அவளுக்கு அருகில் வந்த திதியன், “நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லவில்லையே!” என்றான், தடுமாற்றக் குரலில். அவள் இறக்கிய தலையைத் தூக்காமல், “ஓ..! அதுவா... வந்து... வந்து... அது ஒரு கதை!” எனச் சொல்லிப் புன்னகைத்தாள். “அப்படியென்றால் ஓய்ந்து உட்கார்ந்திருக்கும் வயோதிகரைப் பார்த்துச் சொல். அவரால்தான் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருக்க முடியும்.” “ஏன், எனக்காகக் கேட்கக் கூடாதா?” அதற்கு அவன் வருத்தக் குரலில் மொழிந்தான்: “நந்தினி! மலைத்தேனைச் சுவைக்க மறுக்கும் நாவுண்டா? முடிந்த இரவில் மூண்ட சம்பவங்கள் நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கும் போது சுவைக்கும் நினைப்பு குறைவாகத்தானே இருக்க முடியும்?” “சாதுர்யமாகப் பேசுகிறீர்கள்.” “இல்லையென்றால் சந்திரகுப்த சாம்ராஜ்யத்திலிருந்து என்னால் தப்பித்து வந்திருக்க முடியுமா?” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் பாறையை நோக்கிப் போனான். அப்போது எதிரில் வந்து நின்ற மனிதனைக் கண்ட நந்தினி ‘வீல்’ என்று கதறியவாறு தொப்பென்று கீழே விழுந்தாள். |