![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 10. போர்க்களப் பதிகம்! தமிழகத்தின் பெருநிலப் பரப்பை மூன்றாகப் பிரித்து, முக்கொடியாக வகுத்து, முறை செய்து வாழ்ந்த மூவேந்தருள் சோழர் பெற்றிருந்த அருமை - பெருமைகளை ஓர் அளவுக்குள் அடக்கி விட முடியாது. நெருப்பாகி, நீராகி, நிலமாகி, சீராகி சிறப்பு பெற்ற பழங்காலத்திலிருந்து நாகரிகத் தொட்டிலில் முறையாக வாழத் தொடங்கிய நாளிலிருந்து உருப்பெற்ற சோழ வம்சத்துச் சுந்தர மன்னர்கள் பலர்; அவர்களைப் பற்றி எடுத்துக் கூறப்படும் விஷயங்களும் பலப்பல! அக்கால நிலையில் பாண்டியருக்குக் கடல் அரணாக இருந்தது; சேரருக்கு மலை அரணாக விளங்கியது. ஆனால் சோழர் குடிக்கு அப்படிப்பட்ட சிறந்த அரண் இருந்ததில்லை. இதனால் கண்ணைக் கடலாக்கி மனத்தை மலையாக்கி வாழ்ந்த வம்சம் அது. சோழ நாட்டு எல்லைக்குள் பகைவன் ஒருவன் புகுந்தான் என்பதற்குப் பழங்கால வரலாற்றில் ஆதாரம் ஏதுமில்லை. ஆனால் இவனாகச் சென்றான்; பிறரைக் கொன்றான்; வென்றான் என்பதற்கு இலக்கியங்களில் கூட நிரம்ப எடுத்துக்காட்டுகள் உண்டு. தானாகச் செல்வதில்லை; வந்தாலும் விடுவதில்லை என்ற இலக்கணத்தை ஒவ்வொரு தமிழரும் கற்று இருந்தனர்; கடைப்பிடித்தும் வந்தனர். அடைக்கலப்பட்டவரை ஆதரிப்பதும், அலட்சியப்படுத்துபவரை அடக்கி ஒடுக்குவதும் தமிழர் மரபு. நியாயங்களை வளர்த்து நெறி முறைகளைத் தழைக்கவிட்டு அவற்றின் மூலம் அறவழிகளை உண்டாக்கிய சோழர் மரபில் சிபியும், முசுகுந்தனும், காந்தனும் பெற்றிருந்த செல்வாக்கும், அவர்கள் நடந்து கொண்ட முறைகளும் நெஞ்சைவிட்டு நீங்காதவனாகும். அம்மாமன்னர்களின் வழிமுறையில் சோழ சாம்ராஜ்யத்தைப் பக்குவப்படுத்தி ஆளவந்த செம்பியன், தூங்கெயில் எறிந்தவன். அயலவர் அரண்களை அழித்து அவர்களது கொடிகளை மிதித்து சோழர் குலப் பெருமைக்கு மகுடம் சமைத்தான். தன் நகருக்கு இந்திரனை வரவழைத்து, இந்திர விழாவை ஒரு நாளல்ல; இருபத்தெட்டு நாட்கள் வரையிலும் கொண்டாடினான். ஓராண்டல்ல... தான் சாகும் காலம் வரையில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி, இந்திரனைத் தொழுதேத்தினான். அப்படியென்றால் அவன் மகன் அந்த வழியைப் பின்பற்றாமல் இருக்க முடியுமா? நல்ல உயரமும், எடுப்பான தோற்றமும், பரந்த மார்பும், விரிந்த தோள்களும், படர்ந்த முகமும், அகன்ற நெற்றியும், அடர்த்தியான புருவங்களும், அக்கினிக் கண்களும் கொண்ட அவன் மகன் இளஞ்சேட்சென்னியினிடம் சோழ மண்டலத்தின் முழு உரிமையையும் செம்பியன் ஒப்படைக்கும் போது, “செம்பியன் செல்வா! உன்னிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். நாட்டில் அறம் வளரவும், அன்பு தவழவும், பண்பு மேலோங்கவும் நீ ஆள வேண்டும். நான் நடத்தி வந்த இந்திர விழாவை நீ தொடர்ந்து நடத்தி வரவேண்டும். அதனால் பல நன்மைகள் உண்டு” என்று சொல்லி முடிசூட்டிவிட்டு விழிகளை மூடிவிட்டார். செம்பியன் வாழ்வு முடிந்து பன்னெடுங் காலாமாகிவிட்டது! அவர் சொல்லிப் போன இந்த வார்த்தைகளில் ஒன்றைக்கூட சென்னி மறந்து விடவில்லை. சொல்லைச் செயலாக்கும் பக்குவத்தை இளமையிலேயே பெற்றிருந்த சென்னி, தான் விரும்பிய அழுந்தூர்வேள் மகள் அமுதாவை மணந்து, அவள் தம்பியான திதியனைத் தானைத் தலைவனாக்கி, நாடு காவல் புரிந்து வந்தார். இதுவரையில் சென்னியின் செவியில் செருபகைச் செய்தி விழவில்லை. இந்திர விழாவை நடத்த அவர் இது வரையில் மறந்ததில்லை. தம்முடைய தந்தையைக் காட்டிலும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி, குடிமக்களை வாழவைத்து வரும் அவர் வாழ்வில் இதுவரையில் உடைவாளுக்கோ, ஆயுதச் சாலையில் முடங்கிக் கிடக்கும் போர்க் கருவிகளுக்கோ வேலை இருந்ததில்லை. இதனால் அவர் இதயத்தில் மிகப் பெரிய கவலை இருந்து வந்தது. வானவீதியில் அசைந்தாடிக் கொண்டிருந்த பகைவர் அரணைப் பந்தாடிய பார்த்திபன் வழியில் வந்த எனக்கும் என் வாளுக்கும் ஏன் இன்னும் வேலை தரவில்லை? வழக்கம் போலவே இதே கேள்வியோடு வீற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் முன்னே பட்டத்தரசி அமுதவல்லி வந்து நின்றாள். அவள் வந்ததைக் கூடப் பார்க்காமல் முணுமுணுத்துக் கொண்டிருந்த இளஞ்சேட்சென்னி ‘ஊம்’ கூட்டும் சத்தம் கேட்டுச் சிந்தனை கலைந்தவராய்த் திரும்பிப் பார்த்தார். தொங்கவிட்ட கரிய நிறக் கூந்தல் காற்றில் கலைந்தாட - முத்துநகை முகத்திலே நெற்றித் திலகம் நின்றாட வந்து நிற்கும் நேரிழையாளை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம், “அமுதா! நீ என் அருகில் வந்து வெகுநேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டுக் கொண்டே அவளது வளைக்கரத்தைப் பற்றினார். அவள் செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே, “நான் வந்தது கூடத் தெரியாத அளவுக்கு அப்படிப்பட்ட சிந்தனை என்னவோ?” என்றாள். “அமுதா! நான் அவதரித்த போது ஆகாயத்தைப் பார்த்தேன்; தவழ்ந்த போது தாய் தந்தையைக் கண்டேன்; நடைபயில ஆரம்பித்த போது நல்லாசிரியரின் முகம் பார்த்தேன். இளமை திரும்பிய போது அரச இலக்கணத்துக்கு ஏற்றபடி போர்க் கருவிகளோடு புழங்கினேன். அந்த இளமைத் தென்றல் பருவமடைந்த போது உன்னைத் தீண்டினேன். அதன் தொடராக ஆயிரமாயிரம் சிந்தனைகள். அவற்றின் முடிவாக நீ எனக்குச் சொந்தமானாய். அதன் பிறகு முடிபுனைந்தேன். சிந்தனை தொடர்ந்தது...” என்று அடுக்கிக் கொண்டே போனவரைத் தடுத்துக் கேட்டாள் அவள்: “எல்லாம் இருக்கட்டும். என் கேள்விக்குப் பதில் இல்லையே!” - கேட்டுக் கொண்டே முகம் சுளிக்க முறுவலித்தாள். அதற்கு அவர், “முடிவு சொல்வதற்குள் முற்றுப் புள்ளி வைக்கிறாயே! ஒவ்வொரு காலத்தில் உண்டாகும் சிந்தனையை ஒப்படைத்தேன். இப்போது புவியாளும் மன்னனாகிவிட்டேன். ஆனால் களம் நோக்கிச் செல்ல இதுவரையிலும் என்னை எதிர்நோக்கி ஒரு சந்தர்ப்பம் வரவில்லை. இது எனக்கு எவ்வளவு பெரிய சங்கடமாக இருக்கிறது தெரியுமா? விழா எடுப்பதும், உலா போவதும், மக்கள் குறைகளைப் போக்கி நிறைவு செய்வதும் மட்டும் ஒரு மன்னனுக்குப் பெருமை தேடித் தரவல்லதாய் இருந்துவிட முடியாது. அவன் களத்தைச் சந்திக்க வேண்டும். இரத்தக் குளத்தை அடிக்கொரு தடவை பார்க்க வேண்டும். வீரத் தழும்புகளைப் பெற வேண்டும். அந்நியர் பொருளும் நிலமும் நம்முடைய கோட்டைக்குள் நுழைய வேண்டும். அந்தக் காட்சியைக் கவிஞர் பெருமக்கள் கண்டு பூரித்துப் பொன்னெழுத்துகளால் புலிக்கொடிக்கும் அதன் மரபுக்கும் மகுடம் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கீர்த்தி இதுவரையிலும் உண்டாகாமல் இருப்பது துர்ப்பாக்கியமல்லவா! அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்; நீ வந்துவிட்டாய்!” என்றபடி சோகப் பெருமூச்செறிந்து, அவளது கரத்தை நழுவவிட்டார். மாமன்னரின் நியாயமான கவலையை உணர்ந்து நெகிழ்ந்த அமுதவல்லி, “தெய்வமே! அதற்காக வருந்த வேண்டியதில்லை. தங்களை அணுகி வரும் தைரியம் இந்தத் தரணியில் யாருக்குண்டு? தங்கள் தந்தையாரால் அந்நியர் பெற்ற அபகீர்த்தி சாதாரணமானதல்லவே! அதை நினைத்துப் பார்க்கும் எந்த மன்னரும் இந்த நாட்டின் மீது படையெடுக்கவோ, பகைப் புகையைக் கக்கவோ முற்படமாட்டார் இல்லையா?” “எப்படி?” “புலிக்குப் பிறந்தது பூனையாக முடியாதே! இந்த உணர்வு இல்லாதவர்கள் தானே தங்கள் மீது படையெடுக்கத் துணிய வேண்டும். என் தம்பி திதியனுக்கும் இப்படிப்பட்ட கவலை நெடுநாட்களாகவே உண்டு. இதற்காகவே ஒற்றனைப் போல் ஒவ்வொரு நாட்டுக்கும் போய் வருகிறான். இப்போது கூட அவன் அழுந்தூரில் இல்லையென்று கேள்வி.” அமுதவல்லியின் சொற்களைக் கேட்டுப் பூரித்துப் போன இளஞ்சேட்சென்னி, “அமுதா! நீ வேள் மகள் மட்டுமல்ல; தமிழ் மகளும் ஆவாய். என் தந்தையின் வீரத்தை நினைவுபடுத்தி, அதன் மூலமாக என் இதயத்தை இதமாக்கிவிட்டாய். ஆனாலும் அமுதா! உன்னோடு விளையாடி மகிழ்வதைப் போல் களத்தில் விளையாடிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு என்னை நோக்கி வரும் வரையிலும் எனக்கு நிம்மதி என்பது இல்லை” என்று தம்முடைய வலுவான முடிவை அழுத்தமாகச் சொல்லிய வண்ணம் முன் கைகளை உதறிவிட்டுக் கொண்டு நிமிர்ந்தவர், எதிரில் வந்து வணங்கி நிற்கும் வாயிற் காவலனைப் பார்த்து, “என்ன?” என்று கேட்டார். “இறைவா! காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பெருங்குன்றூர்கக் கிழார் வந்து கொண்டிருக்கிறார்.” இதைக் கேட்டதுமே முகமலர்ச்சி பெற்ற இளஞ்சேட்சென்னி ஒரு துள்ளு துள்ளியவாறு எழுந்து, “கவிஞர் வருகிறாரா! நான் நொந்திருக்கும் வேளையைப் புரிந்து கொண்டு வந்துவிட்டாரா?” என்றபடி அமுதாவின் பக்கம் சற்றே விழிகளைச் சாய்த்தவர், “அமுதா! எனக்கேற்ற மருந்து என்னைத் தேடி வந்துவிட்டது!” என்ற உற்சாக வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தவள், “ஊம்... அப்படியென்றால் இனி நீ எனக்கு அவசியமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறீர்களா?” எனக் குறுநகையுடன் வினவினாள். “அமுதா! எந்த ஒரு மருந்துக்கும் தேன் அவசியமாயிற்றே! நீ இரு... நான் போய் அவரை அழைத்து வந்துவிடுகிறேன்” எனக் கூறிவிட்டு வீரநடை போட்ட வண்ணம் அரண்மனை வாயிலுக்கு வந்தார். முதலில் அவர் கண்களுக்குப் புலவர் வருகைக்கான அடிச்சுவடு கூடத் தெரியவில்லை. அவரது பார்வையில் இருக்கும் ஆவலைப் புரிந்து கொண்ட உடன் வந்த காவலன், “அதோ... அதோ” என்று தான் கண்ட சிவிகையைச் சுட்டிக் காண்பித்தான். பிறர் உணர்வைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை இலாவகமாகப் பெற்றிருக்கும் காவலனைப் பார்த்த கண்களாலேயே வரும் சிவிகையை உற்றுக் கவனித்தார். சென்னியின் காலத்தில் வாழ்ந்த கவிஞர்களெல்லாம் வெறும் பாக்களைப் புனைபவர்களாக மட்டுமில்லை; சமயம் நேர்ந்தால் வாள் தூக்கவும் தயங்காதவர்களாக இருந்தார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வதும், ஆங்காங்குள்ள விவரங்களைச் சேகரிப்பதும், பிற தேசங்களில் தமிழ் மொழியை - தமிழர் நாகரிகத்தைப் பரப்புவதும் கடமையாகக் கொண்டிருந்தார்கள். மன்னரைச் சந்தோஷப்படுத்துவது, மன்னருக்கும் மாதேவிக்கும் ஏற்படும் மனக்கசப்பைப் போக்குவது, ஆலோசனை கூறுவது, அவசியம் ஏற்பட்டால் அமைச்சரோடு இருந்து அவசர காரியங்களைக் கவனிப்பது போன்ற வேலைகளை ஏற்றுச் செய்து வந்த பெருமை அவர்களுக்கு உண்டு. என்ன செய்வது? சென்னி முடியேற்ற கொஞ்ச காலத்துக்கெல்லாம் உறையூர் அரண்மனையிலிருந்து மாமூலனார் கிளம்பிவிட்டார். அவரைத் தொடர்ந்தாற்போல அவையில் இருந்த அத்தனை புலவர்களும் ஒவ்வொரு காரணத்தைக் காட்டிப் போய்விட்டார்கள். கடைசியாக, “காவிரிப்பூம்பட்டினம் வரையிலும் போய்விட்டு விரைவில் திரும்பிவிடுகிறேன்!” என்று போன பெருங்குன்றூர்கக் கிழார் இப்போதுதானே திரும்பி இருக்கிறார். கடந்த நான்கைந்து மாதங்களாக அவர் அங்கிருந்து செய்ததென்ன? ‘வரவர இந்தத் திதியனும் மோசமாகிவிட்டான். வெளிநாடுகளுக்குப் போய்த் திரும்பினால் கூட வந்து பார்ப்பது கிடையாது. ஊம்... இந்த உபதலைவன் அங்கதனுக்குத்தான் என்ன துணிச்சல்? ஒரு வார காலமாக அவன்கூட இந்த அரண்மனைப் பக்கம் தலைகாட்டவில்லையே!’ சென்னியின் நினைவு மாலை பட்டென்று அறுந்தது. சிவிகையைத் தூக்கி வந்தவர்கள் கீழே இறக்கி வைத்து, இருந்த திரைச் சீலையை மெதுவாக விலக்கினார்கள். அதிலிருந்து மெள்ள வெளியில் வந்த கவிஞரை, எதிர்நோக்கிச் சென்ற சென்னி இருகரம் நீட்டி வரவேற்றுத் தழுவினார். “என்னை விட்டு ஏன் சென்றீர்கள்? என்னோடு இருப்பதற்குத் தங்களுக்கு விருப்பமில்லையா! இதோ வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற தாங்கள் இப்போது வருவது முறையா?” - கேட்டுக் கொண்டே கண் கலங்கிவிட்டார் சென்னி. காவலனின் கண்களைத் துடைத்த கவிஞர், “மன்னா! நான் அப்படிச் சொல்லிப் போனது தவறுதான். என்ன செய்வேன்? போன இடத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அப்படிப்பட்டவை. வாருங்கள்! நிதானமாகப் பேசலாம்!” என்றதும் சென்னியின் நெஞ்சில் சந்தேகம் முளைத்தது. புலவர் இருக்கையில் புதிய சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டுவிட்டிருக்குமா? அவரைப் பொறுத்த வரையில் அப்படியொரு சிக்கல் நேரிடுவதற்கில்லை. அவருக்குக் குடும்பம் இல்லை. இருந்த மனைவியையும் இறப்புக்கு அவர் பறிகொடுத்துப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவருக்கு உற்றார் - உறவினர் என்பது ஊர் மக்கள்தான். அப்படி இருக்க இப்படியொரு புதிர் போட்டால் எண்ணாததையெல்லாம் எண்ணித்தானே ஆகவேண்டும்? அரண்மனையின் முன் கூடத்தில் வீற்றிருந்த அமுதவல்லி, வரும் கவிஞரைக் கண்டதும் சடக்கென எழுந்து கரங்குவித்து வணங்கினாள். “வணக்கம் தேவி! நலமெல்லாம் எப்படி?” என்ற வண்ணம் இளஞ்சேட்சென்னி இழுத்துப் போட்ட ஆசனத்தில் அமர்ந்தார் அவர். “நாவலரும் பாவலரும் இல்லாத அரண்மனையில் நலமிருக்க வழியுண்டா?” என்று அவள் கனிவாகக் கேட்டதும் பதில் சொல்வதற்கு மாறாகப் புன்முறுவலித்த கவிஞர், “தேவி! தமிழ்க் கவிஞர்கள் மீது தங்களுக்கும் மாமன்னருக்கும் உள்ள அன்பையும் அளவு கடந்த ஆவலையும் பாராட்டுகிறேன். உங்களில் ஒருவனாக நான் இருக்கவே விரும்புகிறேன். அந்த விருப்பத்தை விதி வென்று தன் வசமாக்கிக் கொள்ளும் போது நான் தங்களைப் பிரிந்து வாழ வேண்டியவனாகி விடுகிறேன்!” என்றார். சந்தேகத்திலிருந்து மீளத் துடித்த சென்னி அமுதவல்லியை அங்கிருந்து அனுப்பி வைத்த மறுகணமே, “ஐயனே! தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலென்ன? இப்போதே சொல்லுங்கள்; அப்போதுதான் என் மனம் சாந்தியடையும்” என்று அவசரக் குரலில் உதிர்த்தவாறு அவரை உற்றுப் பார்த்தார். “செம்பியன் செல்வா! உனக்குள் நெடுங்காலமாக இருந்து வந்த குறைபாடு ஒழியும் காலம் நெருங்கி வந்துவிட்டது.” “அப்படியென்றால்...?” “என் வாளுக்கும் வேலுக்கும் வேலையில்லாமல் இருக்கின்றனவென்று எத்தனையோ முறை என்னிடம் சொல்லி வந்திருக்கிறாயல்லவா! அந்த முனகல் சத்தத்துக்கு முடிவுக் காலம் வந்துவிட்டது.” “இப்போது என்ன சொல்கிறீர்கள் ஐயா!” “களம் நோக்கி நீ செல்லும் காலம் வந்துவிட்டது.” இதைச் சொன்னதும் இளஞ்சேட்சென்னியால் இன்பத்தைத் தாங்க முடியவில்லை. இருக்கையிலிருந்து ஒரு நெம்பு நெம்பி ஒழுங்காக அமர்ந்த சென்னி, “கவிஞர் பெருமானே! களிப்பான செய்தி! களமின்றி எங்கே காலம் வீணாகிவிடுமோ என்ற என் ஏக்கத்துக்கு எல்லைக்கோடு போட்டுவிட்ட தங்களுக்கு என் முதல் வாழ்த்துகள். யாரவன்? புலியை இடறப் பார்க்கும் புதுப்பகைவன் யார்?” என்று துடிப்பும் கொதிப்பும் இழையோடிய குரலில் வினவினார். இளஞ்சேட்சென்னியின் இதழோரப் புன்னகையில் இழையோடி நிற்கும் வீரத்தைக் கண்டு பெருமிதமடைந்த கவிஞர், “மன்னர் மன்னா! வடதிசையில் விஷம் தயாராகிக் கொண்டிருக்கிறது!” என்றதுமே அந்தக் கூடம் அதிரும்படியாகக் கடகடவென்று சிரித்த சிரிப்பில் சினத்தீயை மிதக்கவிட்ட சென்னி, “விண்ணவர் வணங்கும் விஷமுண்ட கண்டனைத் தலைவனாக ஏற்றிருக்கும் எனக்கு விஷம் தயாராகிறது! அதுவும் வடதிசையிலா? அதிசயமாக இருக்கிறதே!” என்றார். “இதிலே அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை... நதிப் பாய்ச்சலைப் பார்த்தவர்கள் புலிப் பாய்ச்சலைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.” “பாவம்! எனக்குள்ளே இருந்து வரும் ஆசையைப் புரிந்து கொள்ளாதவர்கள். பெருமானே! விளக்கமாகச் சொல்லுங்கள். தும்பைப்பூ நாட்டின் மேல் அம்பை வீசத் துடிக்கும் அநியாயக்காரன் யார்? அதற்கு அடிப்படைக் காரணம் என்ன?” இப்படி அவர் அடுக்கிக் கொண்டே போனதும் தடுத்து நிறுத்துவது போல் குறுக்கிட்டுச் சொன்னார் கவிஞர். தாம் கண்ட - கேட்ட, ஏன், அனுபவித்த அனைத்தையும் மிகவும் பொறுமையுடன் சொன்னார். எல்லாவற்றுக்கும் ‘ஊம்’ கூட்டியவாறு இருந்த சென்னி திடுதிப்பென்று கேட்டார். “ஆதரவு கேட்டு வருபவர்களுக்கு அடைக்கலம் தருவது தவறா?” “இல்லை... நம்முடைய பண்பு. அனாதையாக வந்தவரை வரவேற்று ஆதரிப்பது நமது மரபு. இது புரியாதவர்கள் ஊதிவிடும் புகைக்கு உயிரூட்டம் தரத்தானே செய்வார்கள்?” “அப்படியென்றால் அங்கிருந்து ஊதிவிடுபவன் யார்?” “நந்த வம்சத்தை முறியடித்து, மௌரிய வம்சத்துக்கு முடிசூட்டி மகிழ்ந்த கௌடில்யன்.” “அர்த்த சாஸ்திரம் எழுதிய மூளையிலிருந்தா இப்படியொரு விபரீத ஆசை கிளம்பி இருக்கிறது! என்னால் நம்ப முடியவில்லையே!” “நான் கூட அப்படித்தான் எண்ணி இருந்தேன். ஆனால் சிங்கமுகன் வந்து சொன்னதைக் கேட்டுவிட்ட பிறகு அவனை ஒரு விவேகியாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ள, கிடைப்பவரை வைத்து பகடை ஆடும் சூத்ரதாரியாகவே தென்படுகிறான்.” “அப்படியென்றால்...?” “முன்பு நந்த வம்சத்தை அழித்தானல்லவா!” “ஆமாம்!” “இப்போது அந்த வம்சத்துக்கு ஆதரவு தந்தவரை அழிக்க முற்பட்டிருக்கிறான். இது அவனது கடைசி ஆசை!” “பெருமானே! என்னுடைய முதல் ஆசை என்ன தெரியுமா?” “என்ன, என்ன?” - ஆவலோடு கேட்டார் பெருங் குன்றூர்க் கிழார். “சாணக்கியனுக்கென்று அமைக்கும் சமாதியின் மேல் புதிய சாம்ராஜ்யத்தை நிர்ணயிப்பது!” பெருங்குன்றூர்கக் கிழாரின் முகத்திலே புதிய உற்சாகம் பூத்தது. “சூரிய குல முதல்வா! நீ சொல்வதைச் செய்வாய் என்பதை நான் அறிவேன். எதற்கும் நம் தானைத் தலைவர் வந்தால்தான் முழு விவரமும் தெரியும். அவர் வரும் வரையில் காவிரிப்பூம்பட்டினம் முழுவதிலும் பலத்த காவல் போட வேண்டும். மோரியர் வம்சத்துக்குக் கைப்பாவையாகியிருக்கும் வடுகரும் கோசரும் மாறுவேடத்தில் இங்கு வந்தாலும் வரலாம்.” அதற்கு அவர், “தெய்வமே! அந்தக் கவலை தங்களுக்குத் தேவையில்லை. முக்கண்ணன் ஒருவனே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வான்” என்றார். “அவர் மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். சுடர் விளக்காயினும் அடிக்கொரு தடவை அதைத் தூண்டிவிட ஆளில்லையென்றால் அதன் ஒளி மங்கிப்போகும். இல்லையா?” “வாஸ்தவம்தான்! இன்றைக்கே அதற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். வாருங்கள் - உணவருந்திய பின் பேசலாம்” என்று எழுந்தார் சென்னி. கவிஞர் ஒன்றும் பேசவில்லை. பலத்த பெருமூச்செறிந்தபடி எழுந்த பெருங்குன்றூர்கக் கிழார் மன்னருக்குப் பின்னால் அடிமேல் அடியெடுத்து வைத்து நடக்கலானார். |