உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 2. விகார மனிதன் தேய்பிறைக் கணக்கில் மூன்றாம் நாளாகையால் போதுமான சுக வெளிச்சம் சுற்றிலும் இருந்தது. புன்னையும் வாகையும் பொன்னுருக் கொண்டு திகழும் காட்சிக்கு மாட்சி கூட்டும் வகையிலே மங்கை நல்லாள் மெத்தென்றிருக்கும் மணல் பூ மெத்தையின் மேல் ஒய்யாரமாக நடந்து வந்தாள். சதங்கையின் சத்தம் கேட்டதுமே சட்டென்று சற்றே கழுத்தைத் திருப்பி, பார்வையை உயர்த்திய பெருங்குன்றூர்க் கிழார், “என்னம்மா?” என்று கேட்ட வண்ணம் அவளுக்கு அருகே வந்து நின்றார். “ஒன்றுமில்லை ஐயா! குடிலுக்குள் ஒரே புழுக்கமாக இருக்கிறது. அதற்காகத்தான் வெளியில் வந்தேன். அதுவும் இது போன்ற இயற்கை அழகைக் கண்டு நெடுங்காலமாகி விட்டதல்லவா?” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவரது இரண்டு கண்களும் நீரூற்றுகளாகி விட்டன. நிர்வாண நிலா வெளிச்சமானாலும் அதன் பூரண ஒளியை மரங்களும் செடிகளும் கொடிகளும் மறைத்து வைத்திருந்தன. ஆனாலும் காற்றின் கருணைக் கரங்களால் கிளையும் இலையும் ஒசிந்து ஒதுங்கக் கிடைத்த திட்டுத் திட்டான குறைந்த வெளிச்சத்தாலும் இலை நிழலாலும் அவரது இதய ரூபத்தை அவள் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவள் மேலும் தொடர்ந்தாள். “ஐயா!” அவர் தம் துக்கம் தோய்ந்த குரலை அமுத்திவிட்டுக் கொண்டு, “என்னம்மா, என்ன வேண்டும்?” என்று கலக்கம் நிறைந்த அடித் தொண்டையில் கேட்டார். “இப்படிப்பட்ட சீதளப்பூஞ் சோலையை, ஓடையை, குமுதப்பூ சொரியும் குளத்தை இந்த இரண்டு கண்களால் பார்த்துப் பருகி எத்துணை காலமாகிறது?” என்று சொல்லிய வண்ணம், பூரிப்பால் பிஞ்சு மார்பகங்கள் விம்மி அடங்க, அபூர்வ விழிகளால் ஒரு சுற்று சுற்றி மீண்டும் தன் பார்வையை அவர் மீது நிலை நிறுத்தினாள். இப்போது அவர் மௌனம் சாதிக்கவில்லை. தமக்கே உரிய கம்பீரக் குரலில், “நந்தினி! நீ சொல்வதை என்னால் மறக்க முடியுமா? பாடலிபுரமும் அதன் பக்க பலமும் நந்தர் பக்கத்தில் இருந்த காலத்தில் நீ இங்கே வந்திருக்கிறாய்; அப்போது சின்னஞ் சிறியவள்; ஏதும் அறியாதவள்; தனநந்தனுக்கு இருந்த நல்ல மனத்தால் தமிழ்க்கல்வி பெறுவதற்கு இங்கு வந்தாய். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சூழ்ச்சியாலும் சுயநல வெறியாலும் சூன்யத்தைப் பெற்றிருந்தாய். ஆனால் என் செல்வமே! இனி உனக்கு எந்த ஒரு குறையும் இந்த மண்ணில் ஏற்படாது. கங்கையில் கரைபுரண்டு ஓடும் நீரிலே நாளும் நீந்தித் திளைத்தது போலவே நாளை முதல் நீ இங்குள்ள காவிரித்தாயின் மடியிலே கவலையின்றி நீந்தித் திளைக்கலாம். எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. புறப்பகை இல்லாத நாடு இது. பகை மேகங்களைக் காணாத பூமி இது!” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். அவர் சொன்னதையெல்லாம் பயபக்தியோடு கேட்ட நந்தினி நெட்டுயிர்த்தாள்! மீன் விழியைப் பாதுகாக்கும் இமைக்கதவின் ஓரத்தில் ஒட்டி நின்ற நீர்த்துளிகளை முன்றானையின் முனையில் ஒற்றி எடுத்தாள். அதைப் பார்த்து துணுக்குற்ற கவிஞர், “நந்தினி! இப்போது உனக்கு என்ன நிகழ்ந்துவிட்டது? ஏன் கண்ணீர் வடிக்கிறாய்?” என்று படபடக்க வினவினார். அதற்கு அவள், “ஐயனே! இனத்தால், மொழியால் ஏன், நாகரிகத்தால் கூட மாறுபட்ட என்னை அந்தகார இருட்டிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றிய உங்கள் வெள்ளை உள்ளத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். என்னையும் அறியாமல்...” என்று அரை குறையோடு நிறுத்தினாள். அவர் உதட்டோரப் புன்னகையை உதாரமாகச் சிந்திவிட்டுச் சொன்னார்: “மகளே! இந்த மண்ணுக்குள்ள பண்பு இது. ஒன்றை எதிர்பார்த்து உதவி செய்யும் கயமைக்கு மாறுபட்ட மனிதர் உள்ள பூமி இது. நீ வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன். என்னால் மலைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இன்று நீ பெற்றிருக்கும் கோலத்தைக் காணும் போது...” என்ற போது எழுந்த துக்கத்தால் அரை குறையாக நிறுத்திவிட்டுக் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டார். இப்போது அவள் தன் குமுறல் நிறைந்த உள்ளத்தின் பிரதிபலிப்பை கமறல் இழையோடிய அடிக் குரலில் தெரிவிக்கத் தலைப்பட்டாள். “வடதிசை முழுவதிலும் தென்திசை தீபத்தை ஏற்றி வைத்த பெருமைக்குரிய பெருமானே! இனியும் எனக்காக வருந்த வேண்டாமென்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மதிக்கும் விதிக்குமிடையே நடந்த போரில் பின்னது வெற்றி பெற்ற பிறகு நானும், எங்கள் கோமகனை நம்பி வாழ்ந்த நாடும் நகரமும் என்ன செய்ய முடியும்? எல்லாவிதமான செல்வங்களைக் காட்டிலும் மேலான ஓர் அன்புச் செல்வத்தை எனக்கு நீங்கள் வழங்கிவிட்டு இருக்கும் போது, அதற்கு அருகில் கூட வரமுடியாத மற்ற சீலங்களைப் பற்றி இனிமேல் எனக்கென்ன கவலை இருக்கிறது?” என்றதுமே, அவளது பூங்கரத்தைப் பிடித்து, “நந்தினி! நீ உன் அன்பால் அருந்தமிழால் என்னை வென்று விட்டாயம்மா!” என்ற வண்ணம் அவளது கரத்தை மேலுக்கு உயர்த்தியவர், தம்முடைய நதிக்கண்களுக்கு அணையாக்கிக் கொண்டார். திதியன் கொஞ்சமும் அசையவில்லை. அவனது இமைகள் இரண்டும் செயலிழந்து வெறித்து நின்றன. நந்தினிக்கும் பெருங்குன்றூர்கக் கிழாருக்குமிடையே இருக்கும் நெருக்கத்தை நெஞ்சால் எண்ணி எண்ணிக் குமைந்தான். அப்போது எங்கிருந்தோ வந்த கருநாகமொன்று அவனது பாதத்தின் மீது ஏறிய சீக்கிரத்தில் உண்டான விழிப்பால் திடுக்குற்றுப் பார்வையைக் கீழே இறக்கியவன், வெறித்துப் பார்த்து வெலவெலத்துப் போனான். முதலில் ‘ஓ...!’வென அலறிவிட வேண்டுமென்னும் உத்வேகமே மேலோங்கியது. நல்லவேளையாக அந்தத் தவறை அவன் செய்யவில்லை. சிலைக்கும் தனக்கும் அதிகம் வித்தியாசம் இல்லாதது போல அப்படியே அசையாமல் நின்றுவிட்டான். அது அவனைக் கடந்து, நெருக்கத்தில் இருந்த ஒரு புற்றுக்குள் புகுந்து கொண்டது. கருநாகத்தை உற்று நோக்கிய விழிகளைச் சற்றே நிமிர்த்திய போது தான் புது மூச்சொன்று அவனுள்ளிருந்து மார்பு விம்ம வெளிப்பட்டுக் காற்றோடு காற்றாகப் பின்னலிட்டது. முகமெங்கும் குப்பென்று வியர்த்துக் கொட்டிய வியர்வைத் துளிகளைக் கை விரலால் நீவிவிட்ட வண்ணம் மீண்டும் அவர்களைக் கவனிக்கலானான். அந்தத் தருணத்தில் அவள் தன்னிடமிருந்த பேழை ஒன்றைக் கவிஞரிடம் தந்தாள். அதை உன்னிப்பாகக் கவனித்து விட்ட திதியன் பதறிவிட்டான். தன்னிடமிருக்கும் பேழையைப் போல் அதுவும் இருந்ததால் மனப் பீதி பெற்ற துரிதத்தில், ‘ஐயையோ! அதைக் கீழே போட்டுவிடுங்கள். அது பேழையல்ல; பூநாகம்!’ என்று சொல்ல வேண்டும் போல் ஒருவித வேகம் மின்னலிட்டது. ஆனால் அப்படிச் சொல்லித் தான் திரும்பி வந்துவிட்டதைக் கவிஞருக்கு உணர்த்த விருப்பமில்லாததால் தனக்குள் சொல்லிக் கொண்டு மேலும் கவனிக்க முற்பட்டான். பேழையை வாங்கிய புலவர், அது பெற்றுள்ள பெருமையை எண்ணி உள்ளூற வியந்தார். இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு, “ஆகா! அற்புதமான பேழை! கையளவுப் பேழையானாலும் கவர்ச்சியோடு இருக்கிறது. ஏது இது?” என வியப்பு மங்காத தொனியில் உற்சாகத்தைக் குழைத்துக் கேட்டதும் அவள் பதிலிறுத்தாள்: “ஐயனே! எந்த ஒரு மனிதனையும் கவிழ்ப்பது கவர்ச்சிதானே?” “ஏனம்மா... இந்தக் கணையை விடுக்கிறாய்?” “இல்லை... தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையால்தான்!” “உண்மைதான்! கவர்ச்சிதான் நம்மையெல்லாம் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அது சரி! இது ஏது உனக்கு?” “ஐயா! இதைப் பற்றி பிறகு சொல்கிறேன். முதலில் எனக்குள்ள சந்தேகத்தைப் போக்குங்கள்!” “சரி! என்ன உனக்குள்ள சந்தேகம்?” “ஒன்றுமில்லை. மனித உயிருக்கு முடிவைத் தேடித் தருவதும் இந்தக் கவர்ச்சிதானே?” “ஆம் நந்தினி! கவர்ச்சிதான் இந்த உலகை உற்பத்தி செய்கிறது. கடைசியில் அதுவே உடம்பை அழிய வைக்கிறது. இது உலக நியதி!” “அப்படியென்றால் இதுவும் அந்த அழிவின் தொடக்க அடையாளம்தான்!” இப்படி அவள் சொன்னதுமே நெற்றிக் கோடுகள் நான்காக விரிய, புருவங்கள் சுருங்க மேலும் பேழையை உன்னிப்புடன் கவனித்த வண்ணம் அவளை ஏறெடுத்துப் பார்த்தார். நந்தினி நகைத்தாள். அந்த நகைப்பிலிருந்து புகை கிளம்புவதைப் பார்த்த புலவர், “நந்தினி! இந்தச் சிரிப்புக்கு என்ன காரணம்?” என்று நெஞ்சத் தடுமாற்றத்துடன் வினவினார். இப்போது அவள் முகம் நெருப்பானது. திடீரென்று கிளம்பிய ஆவேசத்தை அடக்கிக் கொள்ளும் வகையறியாதலால் நெருப்புத் துண்டுகளைக் கக்கும் எரிமலை போல் வார்த்தைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். “சிரிப்பல்ல ஐயனே! பட்டுப் போன நந்த வம்சத்தின் சீற்றம்! முழுமதி இழந்த மூராவால் மூண்ட நெடுங்காலப் பகையின் வெடிப்புச் சத்தம்.” திதியனின் இரண்டு தோள்களும் விம்மிப் புடைத்து எழுந்து அடங்கின. நந்தினியின் நெஞ்சுக்குள் இருக்கும் கோபத்தைக் கண்ட கவிஞரும் மறுத்து ஒன்றும் சொல்ல முடியாமல் சிலையுருவில் அப்படியே நின்றார். ஆடாமல் - அசையாமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கும், தன் தாய்க்கும், நந்த வம்சத்துக்கும் சந்திரகுப்தனால் உண்டான சங்கடங்களை - அவன் மகன் பிந்துசாரனால் தற்போது ஏற்பட்டு வரும் தீமைகளை ஒன்றன் பின் ஒன்றாக - ஒரே சீராக ஒப்படைத்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்த பெருங்குன்றூர்கக் கிழார், இப்போது குறும்புப் புன்னகையுடன் வினவினார்: “நந்தினி! கோபம் அடங்கிவிட்டதா அல்லது...” என்பதற்குள் இடைமறித்துச் சொன்னாள்: “இல்லை... இதுதான் தொடக்கம்!” “காரணம்?” “உங்கள் கரங்களில் தவழ்வது வெறும் பேழையாக இல்லாமல் இருப்பதுதான்!” “அப்படியானால்...?” என்று திருப்பிக் கேட்டுக் கொண்டே மீண்டும் பேழையை உற்றுக் கவனிக்கத் தலைப்பட்டார். நந்தினி தொடர்ந்தாள். “பேழையா இது? பெருமானே! என்னைக் கொல்ல வந்த பூநாகம் அதனுள்ளே இருக்கிறது. பாதாளச் சிறைக்குள் எனக்கு அளிக்கப்பட்ட கடைசிப் பரிசு” என்று சொன்னதுமே அவர் மனம் கொதித்தது. கண்கள் இரண்டும் கோவைப் பழங்களாயின. “பேழைக்குள் பூநாகமா? பிந்துசாரனுக்கும் புத்தி தடுமாறிவிட்டதா?” “ஆம் ஐயனே! சதியாலோசனையில் சமர்த்தனான சாணக்கியன் அமைச்சனாக இருக்கும் வரையிலும் இப்படிப்பட்ட புத்தியின்றி வேறு எப்படிப்பட்ட புத்தி உருவாக முடியும்?” “இருக்காது நந்தினி! அகில உலகத்துக்கும் பயன்படத்தக்க அர்த்த சாஸ்திரத்தை அளித்திருக்கும் சாணக்கியர், இந்தச் சதிச் செயலுக்குச் சாந்துப் பொட்டு வைத்திருப்பாரென்று நான் நம்பவில்லை.” “நீங்கள் நம்ப வேண்டுமென்பதற்காக நான் கூறவில்லை. என் மனச்சாட்சி அறிந்து தெளிந்த ஒன்றைத்தான் உங்கள் முன் அர்ப்பணித்தேன்” என்றதுமே அவர் தம் மனத்தில் திடீரென்று பூத்த கேள்விக்கு விடை காணும் வேகத்தில் கேட்கலானார். “அப்படியென்றால் உன் அன்னையும் இப்படிப்பட்ட ஒரு பூநாகத்துக்குத்தான் பலியானாளா?” என்று விழி பிதுங்கக் கேட்டதும் விசித்து விசித்து அழுதாள் அவள். பெருங்குன்றூர்கக் கிழார் நெட்டுயிர்த்தார். தமக்குத் தாமே ஒரு முடிவை உண்டாக்கிக் கொண்ட பின்னர், அவளது கண்களைத் துடைத்து விட்டுச் சொல்லத் துவங்கினார்: “அழாதே அம்மா! ஊழ் வந்து உறுத்தும் என்பது பொய்யல்ல. ஆடி அடங்கும் வாழ்க்கையில் உண்டாகும் ஆசாபாசங்களுக்கு அடிமையாகும் எந்த ஒரு மனிதனுக்கும் விசாலமான அறிவு - பரந்த மனப்போக்கு இருப்பதில்லை. இதற்குச் சான்றாக சந்திரகுப்தன் ஒருவன்தான் இருந்தானென்று இருந்தேன். இப்போது அவன் மகன் பிந்துசாரனும் அப்படித்தான் இருக்கிறான் என்பது விளங்கிவிட்டது. ஊம்... வாழைக்கு வாழை என்றாகிவிட்டது. உன்னைப் பற்றிய முழு விவரத்தையும் பொழுது புலர்ந்ததும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று இருந்தேன். இந்தப் பாழும் பேழையால் தூக்கம் கலைந்து துன்பம் பொங்கி வழிந்துவிட்டது. போகட்டும். இது என்னிடமே இருக்கட்டும்! நீ சென்று கொஞ்சம் படுத்து உறங்கம்மா. மற்ற விஷயங்களைக் காலையில் பேசிக் கொள்ளலாம்!” என்றபடி பேழையைத் தம் மடியில் வைத்து இறுக்கிக் கொண்டார். அவள் அதைக் கண்டும் காணாதவள் போல் பேசினாள்: “பெருமானே! எனக்கு உறக்கமா? அந்த உறக்கத்தை இழந்து எத்தனையோ மாதங்களாகின்றன! மாதாவின் மடியைவிட்டுப் பிரியும் துர்ப்பாக்கியம் என்றைய தினம் ஏற்பட்டதோ, அன்றைய தினமே அந்தச் சுகத்தையும் இழந்து விட்டேன். பூரண சுகத்தையும் இழந்து விடுவோமென்ற எண்ணம் துளிர்விட்ட போது தான் உங்கள் துணை எனக்குக் கிடைத்தது.” - களிப்பும் கலக்கமும் சங்கமம் பெற்ற குரலில் கூறிய வண்ணம் முன்றானையால் மீண்டும் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டாள். அந்தத் தருணத்தில் வடமேற்குத் திசையிலிருந்து தீப்பிழம்போடு யாரோ குதிரையில் வருவதைக் கண்டுவிட்ட திதியனின் நினைப்பு, அண்மைக் காட்சியிலிருந்து ஒரே தாவாகத் தாவிச் சென்றது. அழுந்தூர் பெற்றெடுத்த ஆணிப் பொன் முத்தல்லவா! சுடர் விழி மூலம் சொர்ண பூமியைக் காத்து வரும் இளஞ்சேட்சென்னியின் கண்ணின் கருவிழியல்லவா! அவனது கண்ணோட்டம் ஒரே ஒரு வட்டத்துக்குள் மட்டும் பதிந்திருக்க முடியுமா என்ன? ஆனால் ஏதோ ஒரு பெரிய சாதனையைச் சாதித்துவிட்டது போன்ற தெம்பை வலிய பெற்றிருந்த கவிஞர் மட்டும் நந்தினிக்கு ஆறுதல் அளித்த வண்ணம் குடிலுக்குள் நுழைந்தார். அவரைப் பின்பற்றி நந்தினி சென்றாள். வேங்கை மரத்தை விட்டு விலகி வந்த திதியன், தீவர்த்தியின் துணையோடு விரைந்து வந்து கொண்டிருக்கும் மனிதனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இதனால் கவிஞரின் இருக்கையிலிருந்து கிளம்பிய கதறல் சத்தத்தை அவனால் கவனிக்க முடியவில்லை. இரண்டாவது முறையாக எழுந்த அழுகுரல் அவனது கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கூடக் கவர்ந்துவிட்டது! உடனே உருவிய வாளோடு கவிஞரின் இல்லத்துக்குள் நுழைந்தவன், கவிஞருக்கும் நந்தினிக்கும் நடுவிலே நின்றிருக்கும் விகார- ஆனால் தனக்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த கறுப்பு மனிதனைக் கண்டதும் விகர்சித்துப் போனான். |