நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

1. பூவிரியும் காவிரியில்...

     இரவுத் தேவதையின் இதயப்பண் எழுந்து வெகுநேரமாகிவிட்டது.

     அவள் எழுப்பிக் கொண்டிருந்த இன்ப நாதத்தைக் கேட்டுக் கேட்டு ஒரு விதமான கிறக்கத்தை - அதாவது போதையைப் பெற்ற பரதவர் தூங்கி விட்டனர்.

     உண்மையில் அவள் தாலாட்டுப் பாடல் பாடுவதில் வல்லவளாகத்தான் இருக்க வேண்டும்.

     ஆனால் அந்தப் பாடல் காதில் விழுந்தும் விழாதது போல சங்கமத் துறை இயங்கிக் கொண்டிருந்தது.

     தேடி வரும் காவிரியை ஓடிச் சென்று வாரி அணைத்து மகிழும் சமுத்திர ராசனுக்கு முன்னே அந்தப் பாடல் என்ன செய்ய முடியும்?

     சிற்றலைக்கும் பேரலைக்கும் ஓய்வு ஏது? பெண் அலையும் ஆண் அலையும் யாருடைய சாபத்துக்கோ உள்ளாகித்தான் இப்படி அலைந்து கொண்டிருக்கின்றன!

     யுகம் தோன்றிய போது உண்டான இரைச்சலுக்கு இது வரையிலும் விமோசனம் ஏற்படவில்லையே!

     சமுத்திர ராசன் பெற்றெடுத்த குழந்தைகள் போலவே சங்கமத் துறையில் சிலர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தனர்.

     கடற்கரை முழுவதிலும் முத்துப்பல் வெளிச்சம். வெள்ளி நிலா விரித்துப் போட்ட பாயிலே கள்ளமில்லா ஞாழல் மரப் பூக்களும் புன்னை மரப் பூக்களும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நிறம் கண்டு இனங்கண்டு கொள்ளும் சக்தியை இயற்கையாகவே பெற்றிருக்கும் அந்த மணல் வெளியில் எங்குப் பார்த்தாலும் முத்துக் குவியல்!

     நீர் பிரித்துப் பால் அருந்தும் அன்னமும், தேன் தேடித் திரியும் வண்டினமும், பிரிந்து வாழ்ந்து பழக்கமில்லாத அன்றில் பறவைகளும், பால் நிலவைப் பட்டப் பகலாக எண்ணி, பல்வேறு நயனங்களில் சிறிதும் பயமின்றி போவதும் வருவதுமாய் இருந்தன.

     கடல் நீரில் ஜனித்து வாழும் மீன்களுக்காக உறங்குவது போல் விழித்துக் கொண்டிருக்கும் நாரைகள் வேறு அங்கு இருந்தன. கரையோர மணலில் தவழும் நண்டுகள் வண்டு போல் மணலைத் துளைத்து வீடு கட்டிக் கொண்டிருந்தன.

     இப்படி பறப்பன, தவழ்வன, ஊர்வன அனைத்துமே அங்கு கண்விழித்துக் கொண்டிருக்கும் போது அமைதிக்கு வழி ஏது?

     அகன்ற காவிரியின் அறுபத்து நான்கு கைகளையும் ஒரு சேர இணைத்து மகிழும் சமுத்திர ராசனின் சந்நிதானத்துக்கு முன்னே, அவன் புகழ் பரப்பும் கலங்கள் அவனது அலைக்கரங்களால் இப்படியும் அப்படியுமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன.

     நிலவுக்கு மாறான நெருப்பொளியை ‘மினுக் மினுக்’கென்று தந்து கொண்டிருந்த கலங்கரை விளக்கின் கருணைக் கடாட்சத்தோடு எத்தனையோ கலங்கள் சங்கமத் துறையை நோக்கி, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து கொண்டிருந்தன.

     சங்கமத் துறை அதிகாரிகள் வரும் கலங்களையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     அந்தத் தருணத்தில்...

     முன் வைத்த காலை பின் வைத்துப் பழக்கமில்லாத முக்கண்ணன், அதாவது காவிரிப்பூம்பட்டினத்துக் காவலர் தலைவன் அதே சங்கமத் துறையை நோக்கி வேகவேகமாக வந்து கொண்டிருக்கிறான்.

     யாருடைய துணையுமின்றி, கரையோர மணலில் கால்கள் புதையப் புதைய வந்து கொண்டிருக்கும் அவனுக்குள் இப்போது மூண்டிருக்கும் விருப்பமென்ன?

     இப்போது அவன் மனத்தில் எத்தனையோ விதமான கனவுக் குமிழ்கள்! அவற்றின் விளைவாகத் தன் கால் விரலில் தட்டுப்பட்ட சின்னஞ்சிறு பேழையை நின்று பார்த்த அளவுக்குக் குனிந்து எடுக்க முற்படவில்லை. ஒருவேளை, அவன் கண்களுக்குக் கரை மணலில் தவழும் கிளிஞ்சலாகத் தென்பட்டதோ!

     கிளிஞ்சலுக்கும் பேழைக்கும் இருக்கும் வித்தியாசத்தைக்கூட அறிய முடியாத அளவுக்கு அவனை மயக்கி இழுத்துச் செல்லும் ஆசை என்ன?

     நடையில் மேலும் துரிதம் கூடியது! அவனுக்குப் பின்னால் அரைக்கல் தூரத்தில் கட்டிளங்காளை ஒருவன் வந்து கொண்டிருக்கிறான்.

     அவன் வேறு யாருமல்ல; சோழ மண்டல பூபதிக்குச் சொந்தக்காரன். அழுந்தூர்வேள் திதியன் என்றாலுமே அனைவருக்கும் புரிந்துவிடும்.

     படர்ந்த முகமும், பரந்த மார்பும், திரண்ட தோள்களும், சராசரி உயரமும் உடைய அவனுக்கு இப்போது இருபத்து மூன்று வயது ஆகிறது. இந்தக் குறுகிய வயதுக்குள் இவன் ஏற்காத பணிகள், பார்க்காத இடங்கள், பெறாத பட்டங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

     எல்லாம் சரி! இந்த நேரத்தில் இவன் இங்கே வரவேண்டிய அவசியம்?

     முக்கண்ணனின் கால் விரலில் தட்டுப்பட்ட அதே பேழை, இவனது கால் விரலிலும் தட்டுப்படுகிறது! தட்டுப்பட்ட மாத்திரத்தில் சற்றே விழிகளை இறக்கியவன், மகர யாழ் ரூபத்தில் பளிச்சிடும் பெட்டியைப் பார்த்த அந்தக் கணமே குனிந்து எடுத்தான். உள்ளங்கை அளவில் இருக்கும் பேழையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். நவமணிகள் பதிக்கப்பட்டிருக்கும் பொற்பேழையைக் காணக் காண அதன் மீது ஒருவித கவர்ச்சியும் சந்தேகமும் அவனுள் பரிணமித்தன.

     “ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது. இதைச் செய்தவன் ஒரு பெரிய கலைஞனாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம்... விலையுயர்ந்த இந்தப் பேழை இங்கு எப்படி வந்தது? அலை கொண்டு வந்து சேர்த்த அற்புதப் பொருளா? அல்லது யாராவது கைதவறி விட்டுவிட்டார்களா?” இப்படி முணுமுணுத்த வண்ணம் கை விரல் நகத்தால் அதன் மூடியைத் திறந்த மறுவிநாடியே வெறுப்புற்றான்.

     ஆம்; அந்தப் பெட்டிக்குள் வெள்ளிக் கம்பியைப் போல் ஒரு வித சின்னஞ்சிறு புழு சுருண்டு கிடந்தது.

     ‘புழுவுக்கு ஒரு பொற்பேழையா?’ இப்படி நினைக்க வைத்த அதே மனம், மறுகணமே வேறு வித கோணத்துக்கு அவனை அழைத்துச் சென்றது.

     எப்போதோ, எங்கேயோ தாழை மடலில் கண்ட பூநாகம், இப்போது, அவனுடைய மனக்கண்ணின் முன்னே மின்னியது.

     இந்த நினைப்பு வந்ததுமே சடக்கென்று பேழையை மூடிவிட்டான்.

     ‘சங்கமத் துறையில் சந்தேகத்துக்குரிய பேழையா?’ திடுக்கிட்ட நெஞ்சத்தால் உடம்புகூடச் சற்றே நடுங்கிச் சிலிர்த்தது. இலேசாக வியர்வைப் பூக்கள் முகத்தில் பூத்து உதிர்ந்தன.

     திதியனின் விழிகள் நிமிர்ந்தன. இதற்கு முன் வரையிலும் அவனுடைய கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த முக்கண்ணன் இப்போது எங்கே?

     புதிய ஏமாற்றம்! ஆனாலும் கானலுக்கு வந்த போது உண்டான எண்ணத்திலிருந்து அவன் சிறிதும் விலகவில்லை. மூடிய பேழையை இடைப்பட்டைக்குள் செருகிக் கொண்டு தன் பயணத்தை ஆரம்பித்தான். அவனது சிந்தனை சிறகடித்துப் பறந்தது.

     ‘ஊம்.. ஒன்றுமே புரியவில்லையே! தலை மயங்க வைத்துவிட்ட கரையிலே - உறையில் பதுங்கிக் கிடக்கும் வாள் போல விஷநாகம் உள்ளடங்கி இருக்கிறதே! இங்கு இதைப் பத்திரப்படுத்திக் கொண்டு வந்திருக்கும் மனிதன் யாராக இருக்கக் கூடும்? ஒருவேளை, முக்கண்ணனின் சொந்தச் சரக்காக இருக்குமா? சேச்சே! நகரக் காவலர் தலைவனைச் சந்தேகிப்பது எவ்வளவு பெரிய குற்றம்! அதுவும் இந்த மாதிரியான ஒரு பேழையை இதுவரையிலும் நாம் இங்கு கண்டதில்லையே! இது எங்கிருந்தோ இறக்குமதியாகி இருக்க வேண்டும்.’

     திடீரென்று சிந்தனைக் கபாலம் மூடப்பட்டது. யாரோ தனக்குப் பின்னே ஓடுவது போன்ற சத்தம் காதில் விழவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

     ஒரே சூன்யம்!

     மிகப் பெரிய ஏமாற்றத்தோடும் பொருமலோடும் மீண்டும் திரும்பி நடக்கலானான்.

     அவனது தலைக்கு மேலே கூட்டம் கூட்டமாக நாரைகள் பறந்து போய்க் கொண்டிருந்தன.

     பேழையைப் பற்றிய சிந்தனையிலிருந்து துளியும் அவன் விடுபடவில்லை. இதனால் திரும்பி வந்து கொண்டிருக்கும் முக்கண்ணனை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.

     இது போலவே வந்து கொண்டிருக்கும் திதியனை அவன் பார்க்கவில்லை. எதிலோ ஏமாற்றம் பெற்றவன் போல் வந்து கொண்டிருந்த அன்னவனின் தோள்பட்டை திதியனின் முன்கையைத் தீண்டியது.

     சட்டென்று நிமிர்ந்து தெளிந்த திதியன், “ஓ..! முக்கண்ணனா?” என்று எழுத்துகளை இழுத்து நிறுத்திய வண்ணம் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.

     தடுமாற்றத்திலிருந்து விடுபட்டு நிமிர்ந்த முக்கண்ணன், “ஆ..! நீங்களா! நான் யாரோ என்றல்லவா பார்த்தேன். காவிரிப்பூம் பட்டினத்துக்கு எப்போது வந்தீர்கள்? இங்கு இந்த வேளையில் வரவேண்டிய காரணம்?” எனத் தொடர்க் கணை விடுத்தான்.

     இதற்கு அவன் பதிலிறுக்கவில்லை. மாறாக, “அது சரி! உங்களுக்கு முக்கண்ணன் என்று பெயரிட்ட பெரிய மனிதர் யார்?” என்று எரிச்சலும் வெறுப்பும் கலந்த குரலில் திதியன் வினவினான்.

     இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும் முக்கண்ணன் புருவங்கள் மேலேறிக் கீழிறங்கின. அவன் சோழர் படைத்தலைவன் என்பதை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால் கனிவுடன் திருப்பிக் கேட்டான்:

     “ஏன்... எதற்கு இந்தச் சந்தேகம்?”

     “பெயருக்குத் தகுந்த மாதிரி பார்வையில் ஒளி இல்லையே, அதனால்தான்!”

     “ஏதோ ஒரு சிந்தனையில் வந்ததால் இடித்துவிட்டேன். அதற்காகவா... இந்தக் கணை?” - முக்கண்ணனின் குரலில் மட்டுமல்ல, பார்வையிலும்தான் பரிதாபம் நிழலாடியது.

     “இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இரவுக் காலங்களில் இப்படித்தான்...” என்பதற்குள் காட்டுத் தீயெனக் குபீரென்று சிரித்தபடி குறுக்கிட்டு வினவினான்:

     “ஏன், வேறு யாரையாவது இதற்கு முன் இடித்திருப்பதாக உங்களிடம் புகார் வந்திருக்கிறதா?”

     முக்கண்ணனின் விகாரச் சிரிப்பு அவனுக்கு என்னவோ போல் தெரிந்தது. ஆனாலும் அதை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாமல், “ஊம்... இளமைக் காலத்துச் சேஷ்டைகள் முதுமைப் பிராயத்தில் பளிச்சிடும் போது இப்படிப்பட்ட வார்த்தைகள் வெடித்துச் சிதறுவது சகஜம்தானே!” என்று குத்தலாகக் கேட்டுக் குறுநகை புரிந்தான்.

     முக்கண்ணனின் முகம் சிவந்து சுருங்கியது. அவன் மேலும் தொடர்ந்தான்:

     “போகட்டும்... சங்கமத் துறையிலிருந்து இவ்வளவு சீக்கிரமாகத் திரும்பிவிட்டீர்களே, ஏன்?”

     இப்போதுதான் திதியனின் மறைமுக ஊடுருவலை அவனால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. உடனே, நெஞ்சில் உதித்த வெறுப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்ளாமல் தடுமாற்றக் குரலில் பதிலிறுத்தான்:

     “ஆமாம்... இன்றிரவு வடதிசையிலிருந்து கலமொன்று வருவதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதைக் காணவே இங்கு வந்தேன்.”

     “ஏன்... இன்னும் கரைக்கு வந்து சேரவில்லையா?”

     “இல்லை... அதிகாலையில்தான் கரைக்கு வந்து சேருமென்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தார்கள்” என்றதுமே, கிழக்குப் பக்கமாய்த் திரும்பி, கடல் நடுவில் நின்றிருக்கும் மூன்று கலங்களைப் பார்த்த திதியன், “முக்கண்ணா! கடல் நடுவே முறையாக மூன்று கலங்கள் நிற்பதைப் பார்!” என்று அவனுக்குச் சுட்டிக்காட்டினான்.

     திதியன் காட்டிய திசைப் பக்கமாக அவசர அவசரமாக விழிகளைத் திருப்பிக் கலத்தைப் பார்த்த முக்கண்ணன், வெறுப்பிலிருந்து தெளியாத அதே குரலில், “உண்மைதான்! ஆனால் அந்தக் கலங்களில் ஒன்றுகூட வடதிசைக் கலம் மாதிரி தெரியவில்லையே” என்றபடி நெடுமூச்செறிந்தான்.

     திதியனின் முகம் கறுத்தது. அவனது பார்வை மட்டும் கலங்களின் மீது ஆழப் பதிந்திருந்தது.

     “ஏன், மௌனமாய் இருக்கிறீர்கள்?” என்றான் அவன்.

     “மௌனம் - சம்மதத்துக்கு அடையாளம் தானே! வாருங்கள், போவோம்” என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடக்கலானான் திதியன்.

     முக்கண்ணனின் விழிகளில் கலவரம் புகுந்தது. அவனது நெஞ்சில் சந்தேகமென்னும் வடு மேலும் சற்றுப் பெரிதாகியது.

     உடனே- “அது சரி! நான் முதலில் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்குக்கூட இன்னமும் பதிலிறுக்கவில்லையே?” - கேட்டுக் கொண்டே திதியனைப் பின் தொடர்ந்தான்.

     “ஓ...! என்னைப் பற்றிக் கேட்கிறீர்களா!” என்னும் பீடிகையோடு பேச்சைத் தொடங்கியவன், மழுப்பலான அடிக்குரலில், “காவிரிப்பூம்பட்டினத்துக்குள் காலடி எடுத்து வைத்தால் இப்படிச் சங்கமத் துறையை நோக்கி வருவது சகஜம்தான்!” என்றான்.

     இதற்கு மறுமொழியாக அவன் ஏதும் சொல்லவில்லை. அதோடு, அவன் சொன்ன வார்த்தைகளை அவனால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. திதியனின் திடீர் பிரவேசத்துக்கு ஏதேனும் ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டுமென்று திடமாக நம்பினான். அந்தப் புதிரான நம்பிக்கையோடு அவனது அடிச்சுவடைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தான்.

     சோழர் படைத்தலைவனின் சிந்தனையும் சஞ்சலத் தீ எழுப்பிய புகை மூட்டத்தைக் கண்டு கொண்டு இருந்தது. இடைப்பட்டைக்குள் இருக்கும் பேழையைப் பற்றிய ஆராய்ச்சியிலேயே அவனது மனம் சுழன்று கொண்டிருந்தது. இருந்தாலும் இருவருமே சங்கமத் துறையை நோக்கி வந்ததற்குரிய அடிப்படைக் காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

     வடதிசைக் கலத்தில் மௌரிய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஒற்றன் வருவதாகக் கிடைத்த செய்தியை நம்பி அழுந்தூர் மாளிகையிலிருந்து திதியன் வந்தான்.

     அதே கலத்தில் தமிழகத்துக் கவிஞரான மாமூலனார் வருவதாகவும், அவரை அழைத்துக் கொண்டு உறையூருக்கு வரும்படியும் வந்த அரச கட்டளையை ஏற்றுக் கானலுக்கு வந்தவன் முக்கண்ணன். இந்தப் பொறுப்புச் சுமையோடு சங்கமத் துறைக்கு வந்தவன் அவன் என்பதைத் திதியன் புரிந்து கொள்ளாததற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.

     ‘வேள்’ குலத்தில் பிறந்து வளர்ந்த திதியனுக்கு அழுந்தூரில் மட்டும் வேலையல்ல. தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலங்களிலும் வேலை உள்ளவன். சமீபத்தில்தான் மேற்றிசையிலிருந்து திரும்பி வந்தான். இதனால் உறையூர் விஷயம் அவனுக்குப் புரியாத புதிர்தானே!

     கடற்கரைப் பகுதியைவிட்டு, காவிரியின் சதங்கை ஒலி கேட்கும் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ குதிரை கனைக்கும் சத்தம் இருவர் செவிகளிலும் விழுந்தது. அதைக் கேட்டுத் திதியன் துணுக்குற்ற அளவுக்கு முக்கண்ணன் மிரளவில்லை. காரணம், தான் ஏறி வந்த புரவியின் கனைப்பொலி என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்ததால் திகைப்புற்றுச் சுற்றுமுற்றும் பார்க்கும் திதியனைப் பார்த்துச் சாதாரணமாகக் கேட்டான்:

     “ஏன், கனைப்புச் சத்தம் கேட்டுப் பதட்டம் அடைந்துவிட்டீர்களா?”

     அதற்கு அவன், “நான் ஒன்றும் மனிதக் குரலுக்கும் மிருகத்தின் குரலுக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவனல்ல. இந்த நடுநிசியில் குதிரை கனைக்கும் சத்தத்தைக் கேட்டே அப்படிப் பார்த்தேன். ஆமாம்... உங்கள் புரவியா?” என்று சொல்லியவாறு அவனைத் திரும்பிப் பார்த்தான்.

     “ஆமாம்!” என்ற சொல்லோடு நெடுந்தூரத்தில் தெரிந்து கொண்டிருக்கும் தன் புரவியைப் பார்த்தான்.

     மருத மரங்கள் தலைசாய்த்துப் படுத்துக் கிடக்கும் பாதையில், எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி தரையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் புரவியை, வெள்ளி நிலா வெளிச்சத்தின் மூலம் பார்த்த வண்ணம் திரும்பிய திதியன், அதுவரையிலும் உள்ளடக்கி வைத்திருந்த ஓர் எண்ணத்தை வெளிப்படுத்த முற்பட்டான்.

     “ஆமாம்... ஒரு சந்தேகம்!”

     “தாராளமாகக் கேட்கலாம்... சோழர் படைத்தலைவர் எதைக் கேட்டாலும் - எந்த ரூபத்தில் கேட்டாலும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!” - முக்கண்ணனின் முடுக்கான பதில் இது.

     “இந்த இரவில் வடதிசைக் கலத்தை எதிர்பார்த்து வரவேண்டிய அவசியம்?”

     “அழுந்தூரிலிருந்து வந்திருக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாதே!”

     “உண்மைதான்! என்ன செய்வது? மூன்று நாட்களுக்கு முன்பே இங்கு நான் வந்துவிட்டேன். அதனால்தான்...” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த முக்கண்ணன், “மாமன்னரின் கட்டளைக்கிணங்க சங்கமத் துறைக்கு வந்தேன்” என்றான்.

     “அப்படியா?”

     “ஆமாம்” என்று தொடங்கிய முக்கண்ணன் அடிப்படைக் காரணத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

     இவ்விதம் அவன் சொன்னதுமே எல்லாவற்றையும் மறந்து பூரித்துப் போன திதியன், “என்ன, என்ன! அரசவைக் கவிஞர் மாமூலனார் வருகிறாரா?” என்று புருவங்கள் மேலேற, உதடுகள் அவசர அவசரமாக உராயக் கேட்டான்.

     “அப்படித்தான் அரச கட்டளையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரி! திடீரென்று நீங்கள் இங்கு வந்ததற்கான காரணத்தை இன்னமும் எனக்குத் தெரிவிக்கவில்லையே!” - முக்கண்ணனின் எதிர்க்கணை இது.

     இப்போது முக்கண்ணனை முழுக்க முழுக்க நம்பிவிட்ட திதியன், வெளிப்படையாகவே தான் வந்த விஷயத்தைச் சொன்னான்.

     திதியன் சொன்னதைக் கேட்டுத் துணுக்குற்ற முக்கண்ணன், “என்ன, என்ன! வடதிசையிலிருந்து ஒற்றனா?” என்று படபடப்புடன் வினவினான்.

     “ஆமாம்... மௌரிய சாம்ராஜ்யத்துக்கு மகுடமாய் இருந்து வரும் பாடலிபுத்திரத்திலிருந்து வருவதாக அங்கிருந்து வந்துள்ள நமது ஒற்றன் தந்த தகவல்.”

     “அப்படியா!” என்று தீனக்குரலில் கேட்டதுமே, அதற்கு அவன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை. நடையை நிறுத்தி, விடையாக விழியைத் திருப்பி, இடையில் இரண்டு கைகளையும் செருகிவிட்டவாறு அவனை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.

     திதியனின் பார்வையிலுள்ள நெளிவைக் கண்டு களுக்கென்று நகைத்த முக்கண்ணன், “ஏன் என்னை விழுங்கி விடுவது போல் பார்க்கிறீர்கள். அதற்குரிய காரணத்தைச் சொல்லித் தீர வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. விருப்பமிருந்தால் சொல்லலாம்...” என்று ஒரு போக்காகச் சொன்னான்.

     “முக்கண்ணா! சொல்கிறேன்... இப்போதல்ல, அடுத்த முறை உங்களைச் சந்திக்க நேர்ந்தால் சொல்கிறேன். சரிதானே!”

     “உங்கள் சித்தம்... ஆமாம்... கடந்த மூன்று நாட்களாக எங்கு தங்கியிருக்கிறீர்கள்?”

     “இந்தப் பூவிரியும் காவிரியில்தான். ஏன்?”

     “என் கண்ணில் ஒருநாள் கூடத் தட்டுப்படவில்லையே! அதனால்தான்...”

     “ஓ...! அதற்காகவா!” என்று களுக்கெனச் சிரித்துவிட்டு மேலும் சொன்னான்:

     “வேறொன்றுமில்லை... காவிரிப்பூம்பட்டினத்துக்குப் பக்கமாய் இருக்கும் நெற்குன்றத்தில், பெருங்குன்றூர்கக் கிழார் இல்லத்தில் தங்கியுள்ளேன். எதற்கும் உறையூருக்குப் போவதாய் இருந்தால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறீர்களா?”

     “ஒரு வார்த்தை என்ன! ஒன்பது வார்த்தைகளோடு விடைபெற்றுச் செல்கிறேன். வரட்டுமா?” என்றான் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டு.

     “போய் வாருங்கள்!” எனச் சொல்லி அவனை அனுப்பிவிட்டு நெற்குன்றத்தை நோக்கிப் புறப்பட்டான். அப்பேழையின் மீது கவனம் வரவே சட்டென்று இடைப்பட்டையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். மீண்டும் சிந்தனைப் புகை எழுந்தது!

     அந்தக் கலவரத்தோடு கவிஞரின் இருக்கைக்கு நெருக்கமாய் வந்தவன், வெளி முற்றத்தில் புறங்கை கட்டிக் கொண்டு இப்படியும் அப்படியுமாய் உலவிக் கொண்டிருக்கும் அவரைக் கண்டான். உடனே முன்னே வைத்த கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

     ‘இவர் ஏன் இந்த நடுநிசியில் உலவிக் கொண்டிருக்கிறார். புதிய பாக்களுக்கு வேண்டிய சிந்தனைப் பூக்களைத் தேடிக் கொண்டிருக்கிறாரா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அதே வேளையில் தன் காதில் விழுந்த பெண் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டான்.

     ‘இதென்ன புதிய குரல்! அதுவும் எங்கேயோ எப்போதோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே...’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு நிமிர்ந்தவன், புலவரின் இருக்கையிலிருந்து வெளிவரும் பொற்பாவையை உற்றுக் கவனித்த மறுகணமே அங்கிருந்த ஒரு வேங்கை மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருவரையும் மாறிமாறிப் பார்க்கலானான்.