![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 14. வெற்றித் திருநகரில்... சொன்ன சொல்லைக் காப்பதில், அதற்காக உயிரை தத்தம் பண்ணுவதில் வல்லவரான கோசர் துளுவ நாட்டையும், அதன் தலைநகரான பாழியையும் துவம்சம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு உடந்தையாக வந்திருந்த வடுக வீரர்கள் முரட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்திப் பாழியை வளைத்துக் கொண்டனர்; அந்நாட்டு மன்னனான நன்னனை நகரைவிட்டுத் துரத்திவிட்டனர். குன்றொத்த சேனை குப்புறக் கவிழ்ந்துவிட்ட காட்சியைப் பார்த்து இரசித்த வண்ணம் கிளம்பிய கோசர் படையினர், துளுவ நாட்டுக்குப் பக்கமாய் இருந்த முதிர மலையின் மேல் பாய்ந்தனர். அம்மலைக்குத் தலைவனாய் இருந்த பிட்டங்கொற்றனோடு போர் புரிந்தனர். அவன் கொஞ்சமும் சளைக்கவில்லை. மௌரிய மன்னனின் தூண்டுதலால் வந்திருப்பவர் என்பதை ஏற்கெனவே அவன் அறிந்து வைத்திருந்ததால், தான் திரட்டி வைத்திருந்த சேனையுடன் எதிர்த் தாக்குதல் நடத்தினான். கோசர் படை பின் வாங்கியது. பிட்டங்கொற்றனின் கோபத்தீ கொஞ்சமும் அடங்கவில்லை. நெறி கெட்டு வந்தவர் படைகளைத் தறிகெட்டு ஓடச் செய்தான். அந்தத் தோல்வியுடன் ‘வாட்டாறு’ என்னும் ஊருக்குள் நுழைந்த படையினர் அதற்கு அருகாமையில் இருந்த செல்லூருக்குத் தீ மூட்டினர். குடியினர் கோவெனக் கதறியபடி திசை மாறி ஓடினர். கோசர் விடவில்லை. கிடைத்தவர் தலைகளை வெட்டி படிக்கற்களாக்கிக் கொண்டு, அவ்வூர்களுக்கு அதிபதியாய் இருந்த எழினி ஆதனை எதிர்த்துப் போர் புரிந்தனர். எழினி ஆதன் பின் வாங்கவில்லை. வலிய வந்த கோசர் படையினரோடு வீரம் கொப்புளிக்க எதிர்த்துப் போராடினான். என்ன செய்வது? தனி மரம் தோப்பாக முடியுமா? படை பலமும் பக்க பலமும் இல்லாதவன் முடிவில் பாழ்பட்டுத்தானே ஆகவேண்டும்? செல்லூர்க்கு நேர் கிழக்கே நின்று சமர் புரிந்து கொண்டிருந்த ஆதவன் மேற்றிசை நோக்கிச் சரிந்து விழுந்தான். ஆம்; எங்கிருந்தோ வந்த வேலானது அவனது மார்பில் பாய்ந்த மாத்திரத்தில் குபுகுபுவென்று இரத்தம் கொப்புளித்துக் கொண்டு வழிய ஆரம்பித்தது. அதைக் கண்டு எக்களித்த கோசர் படையினர், அங்கிருந்து நேராக அழுந்தூரை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தனர். இந்தத் தருணத்தில்தான் தமிழகத்தை நோக்கி மௌரியர் படை வந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான தேர்கள்- ஆயிரக்கணக்கான யானைகள்- பல்லாயிரக்கணக்கான அரபுக் குதிரைகள் - இலட்சக்கணக்கான வேல் வீரர்கள்! ‘சேனையா அல்லது சேனா சமுத்திரமா?’ நேரில் பார்த்த சிங்கமுகனின் நெஞ்சில் பிறந்த அச்சக்கணை இது. இப்போது சிங்கமுகன் அழுந்தூரை நோக்கி வேகவேகமாக வரலானான். மன்னர் கட்டளையை - மாதேவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் ஆவலோடு அழுந்தூர் அரண்மனைக்கு வந்த அன்றே அதற்கான பணிகளில் தன்னைத்தானே முழுக்க முழுக்க ஒப்படைத்துக் கொண்டான் திதியன். ஒருவார காலத்துக்குள் அழுந்தூர் முழுவதிலும் போர்க்கள வீரர்கள். திரும்பும் பக்கமெல்லாம் மௌரியரைத் தீர்த்துக் கட்டத் துடித்திடும் யானைகளும் குதிரைகளும்! செம்பியன் காலத்துக்குப் பிறகு உதயமாகி இருக்கும் முதல் களமல்லவா! அழுந்தூர் மாளிகையின் மேன்மாடக் கூடத்தில் அங்குமிங்குமாகத் திதியன் உலவிக் கொண்டிருந்தான். நால்வகைப் படைகளையும் உருவாக்கி விட்டோம் என்பதிலே அவனுக்குள் எத்துணை உற்சாகம்! மேன்மாடத்தில் இருந்த வண்ணம் அடிக்கொரு தடவை கீழ் நோக்கிப் பார்க்க அவன் தவறவில்லை! அணி தேர்ப் புரவி ஆட்பெரும் படையைத் தன் சிறு விழிகளுக்குள் தேக்கி அழகு பார்த்துக் கொண்டிருந்த அதே வேளையில், ‘நந்தினி’யாக நடித்த நாகநந்தினியை நினைத்துக் கொள்ளாமலில்லை. உடனே, தன் இடைப்பட்டையில் செருகி வைத்திருந்த சின்னஞ்சிறு பேழையை எடுத்துப் பார்த்தான். அழகிய பேழை... ஆனால்...? கொஞ்சமும் பதறாமல் மூடியைத் திறந்து பார்த்தான். பூநாகம் செத்துவிட்டிருந்தது! இந்த நாகத்தைப் பார்த்த அதே இரவில்தானே நாகநந்தினியை அவன் முதன் முதலாகச் சந்திக்க நேர்ந்தது! திதியனின் நினைவுத் தடம் புரண்டு சங்கமத்துறையை நோக்கிச் செல்கிறது! சிற்றலையும் பேரலையும் கை கோர்த்து விளையாடும் கரை ஓரத்திலே முக்கண்ணன் போகிறான். அவன் பின்னால் திதியன் செல்கிறான். தட்டுப்பட்ட பேழையைக் கையில் எடுத்துப் பார்க்கிறான். நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பேழையைத் திறந்து பார்க்கிறான். இப்போது பூநாகத்துக்குப் பதிலாக பூவையின் முகம் பளிச்சிடுகிறது. காதல் போதை ஊட்டி, அதன் மூலமாகச் சோழ சாம்ராஜ்யத்தைச் சுக்கு நூறாக்க எண்ணியிருந்த அவள் சிரிப்பது போல் ஒரு தோற்றம்! பட்டென்று மூடியைத் திறந்துவிட்டு விழியை நிமிர்த்தியவன் எதிரில் வந்து நிற்கும் சிங்கமுகனைக் கண்டதும் திணறிப் போனான். “சிங்கமுகா! நீ இங்கு வந்து வெகுநேரம் ஆகிவிட்டதா?” சிங்கமுகன் பதில் ஏதும் சொல்லாமல் திதியனையும் அவனது கையிலிருக்கும் அழகிய பேழையையும் மாறி மாறிப் பார்த்தான். சிங்கமுகன் பார்வையிலிருக்கும் கலவரத்தைப் புரிந்து கொண்ட திதியன் சோகப் பெருமூச்செறிந்த வண்ணம் சொன்னான். “சிங்கமுகா! இது வெறும் பேழையல்ல; மௌரிய முகத்தைக் காட்டும் கண்ணாடி...” என்று ஆரம்பித்தவன் நடந்து முடிந்துவிட்ட அத்தனை சம்பவத்தையும் சுருக்கமாகச் சொல்லி முடித்தான்: “அப்படியா!” என்றான் சிங்கமுகன். “இது நடந்த கதை! முடிய வேண்டிய கதைக்குரிய அசல் எங்கே?” என்று திருப்பிக் கேட்டான் திதியன். திடீரென்றுதானே பூகம்பம் ஏற்படுகிறது! கடல் பிரளயத்தின் சங்கதியும் அப்படித்தானே! இப்போது அவன் இரண்டுக்குமிடையே நின்று பேசினான். “படைத்தலைவரே! பாழியை வடுகர் வளைத்துக் கொண்டனர்.” “அப்படியென்றால் நன்னன் எங்கே?” “நாட்டைவிட்டு விரட்டிவிட்டனர்!” “அங்கேயே நீ சேந்தன் கொற்றனாரைப் பார்க்கவில்லையா?” “நான் அங்கு யாரையுமே பார்க்க முடியவில்லை” என்று சிலேடையாகச் சொன்னான். “சரி... கோசர் படையின் அடுத்த நடவடிக்கை?” “நடவடிக்கையா! செல்லூர் ஆண்ட எழினி ஆதனை வீழ்த்திய கொடியவர்கள் அழுந்தூர் தலைநகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.” “அப்படியா?” “அது மட்டுமல்ல... மௌரியர் சேனையும் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது” என்றதுமே இடியெனச் சிரித்துவிட்டுச் சொன்னான் திதியன்: “இதை நீ சொல்லாமல் ஊமை ரூபத்தில் ஏன் நின்றிருந்தாய்? சரி! இப்போதே உறையூருக்குச் செல்; மன்னரைக் கண்டு உண்மையைச் சொல். நான் நாளை காலையில் படைக்குத் தலைமை ஏற்றுச் செல்கிறேன். மௌரியர் படையை முறியடித்துவிட்டுத் திரும்பி வருகிறேன். புறப்படு” என்று கனிவும் கடுகடுப்பும் இழையோடிய குரலில் உத்தரவிட்டு அவனை அனுப்பிய அதே சமயத்தில் கையிலிருந்த பேழையைத் தூக்கி எறிந்த வண்ணம், “மௌரியர் படை தூள், தூள்!” என்ற வீர முழக்கத்துடன் கீழ்நோக்கி வரலானான். போருக்குத் தயாராய் இருக்கும் படை வீரர்களுக்கு நடுவிலே வந்து நின்ற திதியன், அவர்களுக்குத் தெம்பூட்டும் செய்தியைக் கம்பீரக் குரலில் வெளிப்படுத்தினான். திதியனின் வார்த்தைகளைக் கேட்டுப் புதிய உற்சாகத்தைப் பெற்ற சேனா வீரர்கள் நிலம் அதிர ஆரவாரம் செய்து அவன் சொன்ன கருத்துக்கு வாகைப் பூ மாலை சூட்டினர். மறுநாள் காலை! அடிவானம் வெளுப்பதற்கு முன்பே அழுந்தூர் அரண்மனையிலிருந்து போர் முரசம் அதிரத் தொடங்கிவிட்டது! கதிரவன் இன்னும் கிளம்பவில்லை; ஆனால் கவசம் தாங்கிய திதியன் மட்டும் அழுந்தூர் மாளிகையைவிட்டு வெளியில் வந்துவிட்டான். “ஊம்... புறப்படுவோம்!” என்று சொல்லிக் கொண்டே வெண்புரவியில் ஏறி அமர்ந்தான் சோழர் படைத்தலைவன். மண் அதிர, விண்ணிலே புழுதி மேகம் புடைசூழ, வார்க்கழல் வீரர்கள் வெற்றிக் கீதம் முழங்க மௌரியர் படையை எதிர்நோக்கிக் கிளம்பினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்த்துக் கூறக் கிளம்பிய படையினர் திமுதிமுவென்று சென்று கொண்டே இருந்தனர். அழுந்தூர் மறைய, அதன் சுற்றுப்புறக் காட்சிகள் கண்ணைவிட்டுப் பெயர, குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்த திதியன், கண்களுக்குப் பளிச்சிட்ட மௌரியர் - கோசர் படைகளைக் கண்டதும் சீறும் சிறுத்தையானான். “ஊம்... வெட்டுங்கள்.. குத்துங்கள்... வீழ்த்துங்கள்” எனக் கூச்சலிட்டபடி மோரியர் படையைத் தாக்க ஆரம்பித்தான் திதியன். வேல்முனைத் தாக்குதல், வாள் முனைச் சந்திப்பு, தேர்முனைத் திருப்பம் அத்தனைக்கும் ஒரே சீராகக் கிளம்பிய அம்புகள் வெடிப்புச் சத்தங்களைக் கிளப்பின. பனங்காய்களைச் சாய்ப்பது போல் வந்த பகைவர்களின் தலைகளை வெட்டி ஆகாயத்தை நோக்கி வீசிய வண்ணம் இருந்தனர். இரவு - பகல் இரண்டையும் இருபெரும் சேனைகளும் பயன்படுத்தத் தவறவில்லை. முறையற்ற செயல்தான்! அந்தச் செயலை மோரிய முரடர்கள் விரும்பும் போது தமிழகத்தின் மரபைக் கொஞ்சம் தளர்த்தித்தானே தீரவேண்டும்? காவிரியை நோக்கி வந்த கங்கைக்கரை வீரர்கள், ஒருவார காலத்துக்குள் தாம் பெற்ற வீழ்ச்சியின் காரணமாக பகற்பொழுது ஒன்றே களத்துக்குப் போதுமென்று வாய் கூசாமல் சொல்லிவிட்டனர். ஏற்றுக் கொண்ட திதியன் ஏமாறவில்லை... செம்பியன் கோட்டத்துச் செயல் மறவர்கள் காற்றெனச் சுழன்று, கங்கைக்கரை வீரர்களின் கழுத்தை அறுத்து, கண்ணைக் குத்தி மார்பைப் பிளந்து, கழலணிந்து வந்த கால்களை வெட்டி ஓடிக் கொண்டிருக்கும் இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டார்கள். கோசர் எங்கே? வடுகரின் விழிகள் எங்கே? இரு வகைச் சேனைகளையும் முன்னிறுத்திச் சதுராட வந்த மோரியர் படைகள் எங்கே? இந்தக் கட்டத்தில் மிகப் பெரிய சேனையுடன் கிளம்பி வந்த சோழ குல முதல்வன் இளஞ்சேட்சென்னியைக் கண்டதும் மோரியர் படை பின் வாங்கத் துவங்கியது. ஏற்கெனவே வலுக்குன்றிப் போயிருந்த வடுகரும் கோசரும் செஞ்சோற்றுக் கடனுக்காக எதிர்த்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். சென்னியின் கரம் அசைந்தது. எஞ்சி இருந்த படைகள் நொறுங்கின... வெட்டுப்பட்ட யானைகளும், குத்துப்பட்ட குதிரைகளும் ஆங்காங்கு துடிதுடித்துக் கொண்டிருந்தன. குப்புறக் கவிழ்ந்திருந்த பகைவரின் இரதங்களை அலட்சியப் பார்வையில் பார்த்துக் கொண்டே ஆவேசமுடன் போரிட்டுக் கொண்டிருந்த சென்னியின் முன்னே, விதவைக் கோலம் பெற்ற மோரியர் வாளையும் வேலையும் வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓட ஆரம்பித்தனர். சென்னியின் சிரிப்பு சீற்ற ரூபம் பெற்றது. ‘விடாதீர்கள்... பிடியுங்கள்’ என்ற கூக்குரல் கேட்டுக் கதிகலங்கிப் போன கோசரும் வடுகரும் முன்னவர் வழியைப் பின்பற்றி ஓடினர். சென்னியோ, திதியனோ, படை நடத்தி வந்த அங்கதனோ அவர்கள் மீது அனுதாபப்படவில்லை. அவர்களது கடந்த காலச் செயல்களை நினைத்துப் பார்க்கப் பார்க்க, துரத்திச் செல்லும் நெஞ்சமே ஒவ்வொருவரிடமும் மேலோங்கி நின்றது. “முன்னேறுங்கள் - முறியடியுங்கள்” என்னும் சொற்களைக் கேட்டதும் சற்றே துவண்டிருந்த தோள்களைத் தூக்கி நிறுத்திய சோழ நாட்டு வீரர்கள் ஓடும் பகைவரைப் பின் தொடர்ந்தனர். எறிந்த வேலுக்கு - தொடுத்த அம்புக்கு - விடுத்த வாளுக்கு இரையான பகைவர் போக எஞ்சியிருந்த வடுகர் தலைகளை அறுத்து வானவீதியில் தூக்கி எறிந்தனர். சென்னியின் கண்கள் குளிர்ந்தன. திதியனின் நெஞ்சில் தென்றல் தவழ ஆரம்பித்தது. ஒடுங்கி அடங்கிவிட்ட கோசரை மன்னித்த அதே வேளையில் வடுகர் வம்சத்தை மண்மேடாக்கிவிட்டு நிமிர்ந்த இளஞ்சேட்சென்னி, பாழிக்கோட்டையின் மேல் பறக்கும் புலிக்கொடியைப் பார்த்துப் பூரித்துப் போனார். தம்முடைய நெடுங்காலக் கனவு நனவாகிவிட்ட பெருமிதத்தோடு திரும்பியவர், “அடைக்கலம் கேட்கிறேன்; ஆதரிக்க வேண்டுகிறேன்!” என்று நெஞ்சுருகச் சொல்லி நிற்கும் நன்னனைக் கண்ட விழிகளாலேயே அழிந்து போன நாகநந்தினியைப் பார்த்தார். அவள் நாகம்; ஆனால் நன்னன் அப்படியா? சிந்தனையை மாற்றி, சீதளப்பூ சந்தோஷத்தைப் பெற்ற சென்னி, அவனது தோள்களைப் பற்றிச் செல்லமாக உலுக்கிவிட்டு, “நன்னா! நீ வாழ்க! அடைக்கலப்பட்டு வாழ வேண்டிய அவசியம் உனக்குத் தேவையில்லை. மீண்டும் நீ இந்த நகருக்கும் துளுவ நாட்டுக்கும் தலைவனாகி வாழ்வாயாக!” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அப்போது எதிர்நோக்கி வரும் கவிஞர் சேந்தன் கொற்றனாரைக் கண்ட கண்களாலேயே அவருக்குப் பின்னால் அடிமேல் அடியெடுத்து வைத்து வரும் நன்னன் மகளையும் கண்டார். “புலவர் பெருமானே! வரவேண்டும். ‘யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே’ என்பார்கள்” எனச் சொல்லி சென்னி சிரித்ததும் கவிஞரின் முகத்தில் அசடு வழிந்தது. ஆனாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல், “அப்படியென்றால்...” என எழுத்துகளை இழுத்தார். “வேறொன்றுமில்லை. முதலில் நன்னனை அனுப்பித்து வைத்தீர்கள். அதன் பிறகு தாங்கள் வந்தீர்கள். சரிதானா?” என்று மேலும் சிரித்த வண்ணம் கேட்டார் சென்னி. அவர் மறுக்கவில்லை. பிட்டங்கொற்றனின் பாதுகாப்பில் இருவரையும் வைத்திருந்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். அதே தருணத்தில் அழுந்தூர்வேள் திதியனுக்கும் நன்னன் மகள் அங்கயற்கண்ணிக்கும் ஏற்பட்ட சந்திப்பைச் சூசகமாகச் சொல்லி, இருவரையும் ஒருவராக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். கவிஞருடைய அன்புக் கட்டளையை உவகையுடன் ஏற்றுக் கொண்ட சென்னி ஒடுங்கி நின்ற திதியனையும் ஒதுங்கி நின்ற அங்கயற்கண்ணியையும் ஒன்றாக்கி, “இன்று போல் என்றும் வாழ்க!” எனக்கூற, அங்கிருந்த அனைவருமே, “வாழ்க! வாழ்க!” என்று மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர். “நீங்கள் மட்டும் வாழ்த்தினால் எப்படி? நான் வாழ்த்த வேண்டாமா?” என்ற சொற்களைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிய சென்னி, சிவிகையிலிருந்து இறங்கி வரும் மாமூலனாரைக் கண்டதுமே பூரித்துப் போனார். உடனே எதிர்நோக்கிச் சென்று, அவரது திருவடியைத் தொழுதெழுந்த நிலையில், “மோரியரை முறியடிக்க மூலகாரணமாய் இருந்த தங்களை விட்டுப் புதிதாக ஒன்று நடந்துவிடுமா? வாருங்கள்!” எனக்கூறி கரங்குவித்து வணங்கினார். மூதறிஞர் மாமூலனாரைக் கண்ட அத்தனை பேரும், “தமிழறிஞர் வாழ்க!” எனச் சொல்லி வாழ்த்தொலி கிளப்பினர். அகம் குளிர, முகமலர்ச்சியோடு முடிமன்னனைக் கண்ட மாமூலனார், “சோழர் குலச் செல்வா! இன்று முதல் நீ வெறும் சென்னியல்ல; செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி!” என்றவாறு அவரது கரம் பிடித்து உலுக்கிவிட்டார். பிறகு சென்னியின் அன்புப் பிடியோடு மணமக்களுக்கு அருகில் வந்த மாமூலனார், “தமிழ் மண் சிறக்க நீடூழி வாழுங்கள்!” என்று சொல்லி வாழ்த்தினார். வாழ்த்துப் பெற்ற இருவரும் மாமூலனாரின் அடி தொழுது எழுந்த போது மீண்டும் ஆரவாரம் எழுந்தது. ஆம்; வெற்றி பெற்ற படையினர், வாகை சூடிய மன்னரோடு தமிழகத்தை நோக்கித் திரும்பிவிட்டதற்கான அடையாளம் அது. நிறைவு |