![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 12. நாகநந்தினி அரண்மனைக்கு வடகிழக்கில், மூன்று கல் தூரத்தில் அடைக்கலக் கோட்டம் இருந்தது! கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அந்தக் கோட்டத்தைச் சுற்றிலும் நீண்ட நெடிய அரண்கள்! கோட்டத்தின் மேலும் கீழும் பலத்த காவல் வீரர்கள்! அங்கதனின் சீரிய ஏற்பாட்டின்படி நூற்றுக்கணக்கான வேல் வீரர்கள் கோட்டம் முழுவதிலும் நின்றிருந்தார்கள். கோட்டத்துக்கு உள்ளே, விசாலமாக அமைக்கப்பட்டிருந்த நெடுங்கூடத்தில் வீற்றிருந்த நந்தினிக்கு எந்தவிதக் குறையும் வைக்கவில்லை. வேளைக்கு உணவு, நாளுக்கொரு ஆடை, பாதுகாப்பான இருக்கை! இவற்றுக்கு மேல் வேறென்ன வேண்டும்? இம்மூன்றும் முறையாகக் கிடைக்காத போது தானே மும்முனைப் போராட்டம்! ஆனால் அவள் மனத்தில் எத்தனையோ விதமான கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீவர்த்தி வெளிச்சத்தை விழியால் அளவெடுத்த வண்ணம் பூட்டப்பட்டிருக்கும் வெளிவாசல் கதவைக் கண்டு விம்மினாள். தனிமையில் இருக்கும் போது தகிக்கும் மன எரிச்சலை ஒடுக்குவது எப்படி? ஏதோ தான் ஏற்று வந்த பணி முடியாதது போலவும், எதிலேயோ பலத்த ஏமாற்றம் அடைந்துவிட்டது போலவும் அவள் முகம் காணப்பட்டது. அதனால் படுக்கையில் படுக்கவோ, எழுந்து நடக்கவோ முடியாத தவிப்புணர்ச்சியோடு ஒரு தூணில் சாய்ந்த வண்ணம் இருந்தாள். கால முள் நகர நகர அசுரத்தனமான எண்ணங்கள் அவள் மனத்தடாகத்தில் பூத்தன. ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு பூநாகம் நெளிந்து கொண்டிருந்தது. மன்னரைச் சந்தித்து, அவரது அன்பைப் பெற்ற மறுகணமே அந்தப்புரத்தை எட்டிப் பிடித்து, அங்கிருந்த வண்ணம் செய்து முடிக்க இருந்த அத்தனை காரியங்களும் கெட்டுவிட்டதாக எண்ணிக் குமுறிக் கொண்டிருந்த அவளை எதிர்நோக்கி அன்றைய மறுநாள் இரவு ஒரு சந்தர்ப்பம் வந்தது. முதல் ஜாமம் முடிந்து, இரண்டாவது ஜாமம் கடை போட்டுக் கொண்டிருந்த அகால வேளையில் அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் தூக்கத்திலும் விழிப்புடைய நந்தினி, யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்ட நேரத்தில் இமைகளைத் திறந்து பார்த்தாள். கறுப்புப் போர்வையால் உடல் முழுவதையும் மூடிக்கொண்டு வந்து கதவுக்கு அருகாமையில் நிற்பதை அங்கிருக்கும் தீவர்த்தி வெளிச்சத்தில் கண்ட மாத்திரத்தில் பதறிப் போனாள். ‘ஓ...!’ வெனக் கத்திவிட வேண்டும் போல் ஓர் உணர்வு அவள் உள்ளத்தில் எழுந்து துரிதத்தில் மறைந்தது! பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருபவனைக் காணக் காண நாக்கில் இருந்த ஒரு துளி நீரும் வற்றிப் போய்விட்டது. ‘யார் நீ?’ என்று கேட்க வாய் வராத நிலையில் தூங்குவது போல் பாவனை புரிந்தாள். ‘நூற்றுக்கணக்கான காவல் வீரர்களைக் கடந்து வந்திருக்கும் இவன் யாராக இருப்பான்? இவன் ஒருவனே வழியில் இருந்தவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டானா? வாயிற்கதவுக்கு முன்னே நின்றிருக்கக் கூடிய வீரர்களில் ஒருவரைக் கூட இப்போது காணோமே! இவன் யார் என்பதே தெரியவில்லையே! இவ்வளவு துணிச்சலாக பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டானே! ஒருவேளை... பேயாக இருக்குமோ! ஐயகோ!’ இப்படி மனத்தால் எண்ணிக் கதறிய அதே தருணத்தில், “நந்தினி... நந்தினி” என்று ஒருமுறைக்கு இருமுறை பெயரிட்டு அழைத்த வண்ணம் அருகில் வந்துவிட்ட அவனைப் பார்த்தும் பார்க்காத தோரணையில் படுக்கையில் கிடந்தாள். அவன் தன் போர்வையை விலக்காமல், “நந்தினி! சீக்கிரம் எழுந்திரு... நான் யார் என்பதைப் பார்!” என்று சத்தமற்ற குரலில் சொன்னான். உடனே நந்தினியின் நெஞ்சில் வறட்டுத்தனமான துணிச்சல் பிறந்தது. இப்போதுதான் குரல் கேட்டது மாதிரி இமைகளைக் கசக்கிய வண்ணம் விழிகளைத் திறந்தவள், “யாரது?” என்றபடி வெடுக்கென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். “சூ... சத்தம் போட்டுக் கேட்காதே!” என்றபடி தன் கை விரலிலிருந்த கணையாழியை அவளது கண்களுக்கு முன்னே நீட்டிக் காண்பித்தான். மோதிரத்தைக் கண்டு மேலும் துணுக்குற்ற நந்தினி, அவனை ஏற இறங்கப் பார்த்த வண்ணம், “நீ... நீ...” என்று தடுமாறிய குரலில் இருமுறை வினவினாள். அதற்கு அவன், “அச்சப்படத் தேவையில்லை. மௌரியச் சக்கரவர்த்தியின் ஏவலாள் நான்” என்றதுமே இரத்தமற்ற குரலில் சீறினாள். “நந்தர் வம்சத்தை நாசமாக்கிய நச்சுப்பாம்பின் பிரதி பிம்பமா! மரியாதையாக இங்கிருந்து போய்விடு. இல்லையென்றால் நீ உன் உயிரை இழப்பது திண்ணம்.” அதற்கு அவன் அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு, “நந்தினி! உயிர் எனக்குப் பெரிதல்ல; உண்மையை அறிவதும், அதன்படி நடப்பதுமே எனக்குப் பெரிது. அதற்காக எப்படிப்பட்ட ஆபத்து ஏற்பட்டாலும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாய் இருப்பவன். மாமன்னர் என்னை இங்கு அனுப்பி வைக்கும் போது, நம்முடைய எதிரியைப் போல் நடிப்பாள். நீ மருண்டுவிடாதே! இருக்கிற இடத்துக்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்வதில் வல்லவள் அவள்” என்று சொன்னார். அவர் சொன்னது பழுதாகவில்லை” என்றான். நந்தினியின் பார்வையில் மேலும் கவனிப்பு கூடியது. அவனது தோற்றத்தையும், பேச்சுத் தோரணையையும் நடை - உடை - பாவனைகளையும் அலசி ஆராய்ந்த அந்தக் கணத்திலேயே வந்திருப்பவன் மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவன்தான் என்பதை மனப்பூர்வமாக நம்பினாள். உடனே, “நான் இங்கிருப்பது உனக்கு எப்படித் தெரிய வந்தது?” என்று பயமும் பரபரப்பும் இழையோடிய குரலில் கேட்டாள். “நந்தினி! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்தானே! சரி! சரி! நான் இங்கிருந்து சீக்கிரம் வெளியேறியாக வேண்டும். நீ அறிந்த விஷயம் ஏதேனும் இருந்தால் சொல்!” என்று அடிக்கொரு தடவை வெளிவாயிலை உற்றுக் கவனித்த வண்ணம் கேட்டான். அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “மௌரிய வீரனே! என்னை இந்த நாடு முழுக்க நம்பிவிட்டதென்று சொல்வதற்கில்லை. இந்நாட்டின் படைத்தலைவனோ கவிஞரோ என்னைக் கொஞ்சமும் சந்தேகிக்கவில்லை. ஆனால் சோழ நாட்டுச் சக்கரவர்த்தி என்னைச் சந்தேகிப்பதாகக் கருதுகிறேன். அந்தச் சந்தேகம் வலுவடைவதற்குள் நான் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். சோழர் படைத்தலைவன் நன்றாக ஏமாந்துவிட்டான். இப்போது அவன் பாடலிபுரத்துக்குத்தான் வந்திருக்கிறான். அவன் சாதாரணமாக அங்கு வரவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வந்த நம் ஒற்றரான முக்கண்ணனை ஒழித்துவிட்டு அங்கு வந்திருக்கிறான். அவனை அங்கு தீர்த்துக் கட்டுவதற்கான ஓலை ஒன்றை நம் ஆள் வசம் அவனுக்குப் பின்னாலேயே கொடுத்து அனுப்பிவிட்டேன். அவனுக்கு முன்னே பாடலியை நோக்கிச் சிங்கமுகன் வந்திருக்கிறான். துப்பறிவதில் வல்லவன் போல் தெரிகிறான். நம்முடைய மாமன்னரும் நல்லமைச்சரும் போட்டிருக்கும் திட்டங்களையெல்லாம் தெரிந்து வந்து திதியனிடம் ஒப்படைக்கும் போது நானும் உடனிருந்தேன். அப்போது அவன் பேசிய பேச்சுக்கள் இன்னமும் என் செவிகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன” என்றதும் அவன் இடைமறித்தான். “நந்தினி! எல்லாம் சரி... நீ இந்த அறிவாளிகளை ஏமாற்றிவிட்டதுதான் எனக்குப் பெரிய வியப்பாக இருக்கிறது.” அவள் சத்தமற்ற சிரிப்பை உதிர்த்துவிட்டு எக்களிப்போடு சொன்னாள்: “வீரரே! அந்தத் திறமை எனக்கு இல்லையென்று தெரிந்திருந்தால் என்னை இங்கு சாணக்கியர் அனுப்பி வைக்க முன் வந்திருப்பாரா?” “அப்படியென்றால் உன்னை இங்கு அனுப்பி வைத்தவர் அவர்தானா?” “மன்னரும்தான்! தனநந்தனின் காதற்கிழத்தியின் மகளான நந்தினியை நம்மவர்கள் சிறை செய்த போது சோழர் படைத்தலைவன் பார்த்துக் கொண்டிருந்தானாம். இது ஒரு காரணம். தமிழ்நாட்டுக் கவிஞர் பெருங்குன்றூர்கக் கிழார் நந்தினிக்குக் கொஞ்ச காலம் குருவாக இருந்து தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். இது இரண்டாவது காரணம். இந்த இரண்டு காரணங்களையும் மூலாதாரமாகக் கொண்ட நமது இராஜதந்திரி, என்னை இங்கு அனுப்பி வைப்பதற்கு முன்னதாக மௌரிய ஒற்றர்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் என்னைவிடத் திறமைசாலிகள் என்றே கூற வேண்டும். கவிஞர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவரிடத்தில் சோழ நாட்டைச் சேர்ந்த வணிகர்களாக நடித்திருக்கின்றனர். அப்பாவிப் புலவர் அவர்கள் சொற்களை நம்பிவிட்டிருக்கிறார்.” “அப்படியா! கேட்பதற்குச் சுவையாக இருக்கிறதே!” “ஆமாம்... அவர்கள் தாம் வடதிசை நோக்கி வாணிப நிமித்தமாகப் போனதாகவும், அங்கே நந்தினிக்கு நேரிட்டிருக்கும் ஆபத்தை நேரில் கண்டதாகவும் கூறி, ‘உங்கள் உத்தரவு கிடைத்தால் நாங்கள் அவளை இங்கு அழைத்து வந்துவிட முடியும். காரணம், அவளைக் கொண்டு போயுள்ள இடத்தை நாங்கள் அறிவோம்’ என்றதும், ‘அப்படியா! தனநந்தனின் மகளுக்கு ஆபத்தா? இப்போதே அவளை அழைத்து வந்துவிடுங்கள். நலிந்துவிட்டவர்களை ஆதரிப்பது தமிழர் கடமை’ எனக்கூறி அவர்களை அனுப்பித்தாராம். இந்த நல்ல சூழ்நிலையை உருவாக்கிவிட்டுத் திரும்பி வந்தவர்கள், மௌரிய மன்னர் கட்டளைப்படியும், நல்லமைச்சர் சாணக்கியரின் உபதேசப்படியும் நாகநந்தினியாகிய என்னை, வெறும் நந்தினியாகப் புலவரிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் நந்தினிக்கு இருந்த தோற்றம் எனக்கிருப்பதாக நமது ஞானகுரு முடிவு கட்டியதால் கங்கைக்கரையிலிருந்து காவிரிக்கரைக்கு வந்துள்ளேன்” என்று சரளமாகச் சொல்லி வந்தவள், இருந்தாற் போலிருந்து தனக்குள் ஏற்பட்ட திடீர் சந்தேகத்தால், “ஆமாம்! என்னை நீ பார்த்ததே இல்லையா? உன்னை அனுப்பித்தவர்கள் என்னைப் பற்றிச் சொல்லாமலா... இங்கு அனுப்பி வைத்தார்கள்?” எனக் கேட்டாள். அதற்கு அவன் கொஞ்சமும் தயங்காமல், “நாகநந்தினியாக அங்கு இரண்டொரு தடவை பார்த்த ஞாபகம். ஆனால் தனநந்தனின் மகளாகச் சந்திப்பது இதுதான் முதல் தடவை” என்று சொல்லிச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் பங்கேற்ற பாவை, “இப்போதே புறப்படுவதாக உத்தேசமா?” என்று குழைவோடு வினவினாள். “நான் புறப்படுவது இருக்கட்டும். உன்னுடைய அடுத்த நடவடிக்கை என்ன?” என்று அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவன் போல் கேட்டதும், அவள் பதில் சொல்வதற்கு மாறாகத் தான் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு பெட்டியை வெளியில் எடுத்து, அதைத் திறந்து காண்பித்தாள். “என்ன இது?” - பெட்டிக்குள் இருக்கும் பூநாகத்தைக் கவனித்த வண்ணம் கேட்டான். “இதுவா! நந்தினியைச் சாகடித்த நாகம். இப்போது சோழ நாட்டுக் காவலனைத் தீண்ட என் வசம் இருக்கிறது. மீண்டும் ஒரு தடவை மன்னனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்குமானால் அவனை எப்படியாவது என் வழிக்கு வரவழைத்துவிடுவேன். அதன் பிறகு கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பூநாகத்தின் பசியைப் போக்கிவிடுவேன். என்னை அலட்சியப்படுத்திய இளஞ்சேட்சென்னியைக் கொல்லாமல் இங்கிருந்து வரமாட்டேன்.” “நான் கொண்டு செல்ல வேண்டிய விஷயம் இதுதானா?” “இதைவிட இனிப்பான செய்தி வேறென்ன இருக்க முடியும்?” “வாஸ்தவம்தான்! மௌரிய மன்னர் எப்படியோ! நம்முடைய இராஜகுருவுக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம்!” “அவரால்தானே பாடலிபுர அரண்மனையில் நாட்டியக்காரியாக இருந்து வருகிறேன்! இல்லையென்றால் என் வாழ்வு குடத்துக்குள் இருக்கும் விளக்குதானே!” என்று ஆரம்பித்த நாகநந்தினி, சாணக்கியனால் தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்கையும் விவரித்தாள். எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டே வந்த ஏவலாள், “சரி, சரி! எனக்கு நேரமாகிறது. இதற்கு மேல் இங்கிருப்பது கூடாது. என்னால் விரட்டியடிக்கப்பட்ட காவல் வீரர்கள் திரும்பி வந்தாலும் வரக்கூடும். என்ன சொல்கிறாய்?” என்றான். “சொல்வதற்கு என்ன இருக்கிறது! இதுவரையில் நான் சொன்னதில் ஒன்றைக் கூட மறந்துவிடாமல் சொன்னாலே போதுமானது!” “இவ்வளவு தானே! அப்போது நான் புறப்படட்டுமா?” அவள் வாய் திறந்து சொல்லாமல் தன் சம்மதத்தை தலையசைப்பின் மூலமாகத் தெரிவித்தாள். அவன் திரும்பி வந்து, வாயிற்கதவைப் பூட்டிவிட்டு நந்தினியைப் பார்த்தபடி கடகடவெனச் சிரித்தான். அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு நடுங்கிப் போன நந்தினி, “யார்?” என்ற கேள்விக் கணையை விழியின் மூலமாக வீசினாள். மீண்டும் ஒரே சிரிப்பு! அந்தப் பேய்ச் சிரிப்பைக் கேட்டு மேலும் வெலவெலத்துப் போய் விரைந்து வந்த நந்தினி, இமைகள் படபடக்க - இதயம் துடிக்க உற்றுக் கவனித்தாள். ‘அவன்’ ‘அவராக’ மாறிடும் விந்தை! “யாரென்று பார்க்கிறாயா? நன்றாகப் பார்! முத்து நிகர் தமிழகத்தின் கீர்த்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த விஷப் பாம்பே! அடைக்கலம் கேட்ட அன்றே நீ ஆலகால விஷம் என்பதை அறிவேன். தெய்வத்தின் மனம் நோகக் கூடாது என்பதற்காகவே எனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தை அடக்கிக் கொண்டு உன்னை இங்கு அனுப்பி வைத்தேன். சாகசத்தைச் சாம்பல் மேடாக்கி மகிழும் சாம்ராஜ்யத்தில் உன் சதிச் செயலா? நம்பிவிட்ட நாவலரை - நல்லுணர்வு காட்டிய படைத்தலைவனைக் கொல்ல வந்த கொடிய பாம்பே! என்னை நீ ஏவலனென்று நம்பி ஏமாந்துவிட்டாய் அல்லவா? இப்போது பார்!” - சொல்லிக் கொண்டே இடியெனச் சிரித்தபடி மேலே போர்த்தி இருந்த போர்வையை - தலைப் பாகையை எடுத்து வீசி எறிந்தார். அதுவரையிலும் அநியாயத்தைத் தாங்கிக் கொண்டிருந்த இளஞ்சேட்சென்னி. “ஆ...! சோழ மன்னர்” என்று விழி பிதுங்க முணுமுணுத்த வண்ணம் தொப்பென்று சரிந்து கீழே விழுந்தாள். சிவந்துவிட்ட கண்களைச் சொத்தாகப் பெற்றுவிட்ட சோழ மன்னர், “யாரங்கே?” என்று இரைச்சலிட்டார். ஓடி வந்த வேல் வீரர்கள், சென்னியின் முன்னே ஒடுங்கி நின்றனர். “ஊம்... இவளை இழுத்துச் சென்று இருட்டறையில் தள்ளுங்கள்!” எனக் கட்டளையிட்ட வண்ணம் தம்மிடமிருந்த சாவியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பினார். அதுவரையிலும் கருங்கற் சுவரின் மறைவில் மன்னரின் அன்புக் கட்டளைக்கிணங்க நின்று கொண்டிருந்த பெருங்குன்றூர்கக் கிழார் இதய வேதனையோடு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கறுப்பு இருட்டில் கரிப்புக் கண்ணீரைச் சிந்திக் கொண்டிருக்கும் செந்தமிழ்ப் புலவரைக் கண்டதும் சீற்றக் கொதிப்பை அடக்கிக் கொண்டு இளஞ்சேட்சென்னி பதறிப் போனார். “ஐயனே! என்ன இது?” என்று சென்னி கேட்ட கேள்விக்கு அவரால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது போல் விசித்து விசித்து அழுதார். கவிஞரின் இதயக் குமுறலைக் கண்டு கதிகலங்கிப் போன சென்னி, “பெரும! ஏன் இந்தக் குமுறல்?” என்றபடி விழிகளைத் துடைத்தார். “இறைவா! என்னை மன்னித்துவிடுங்கள். பூவையெனக் கருதிப் புகலிடம் தந்தேன். அவள் பூநாகமாக இருப்பாளென்று ஒரு துளியும் எதிர்பார்க்கவில்லை. இதற்காக எப்படிப்பட்ட தண்டனையை வழங்கினாலும் ஏற்று அனுபவிக்கச் சித்தமாய் இருக்கிறேன்!” எனக் கோவெனக் கதறினார் கவிஞர். அவரது கைகளைப் பிடித்துக் கொண்ட சென்னி, “ஐயனே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நந்தினி யார் என்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நடுநிசியில் அழைத்து வந்தேன்; ஆறுதல் பெறுங்கள். வாருங்கள், போவோம்” எனக் கனிவோடு அவரை அழைத்துக் கொண்டு அடைக்கலக் கோட்டைத்தைவிட்டு வெளியேறினார். |