![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 13. நிம்மதிப் பெருமூச்சு! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்க ஆரம்பித்தது. பொழுது புலர்கிறது என்பதற்கு அடையாளமாகப் பொற்கோழியின் கரகரப்பான குரல் தொடர்ந்தாற்போல் எழுந்தது. பாவம்! வான விளிம்பை வளைத்துக் கொண்டிருந்த மோன இருட்டு குப்புறக் கவிழும் போது அதன் வலுவில் அங்கொன்று இங்கொன்றுமாய் ஒட்டிக் கிடக்கும் நட்சத்திரப் பூக்கள் பூமியை நோக்கி விழுந்துதானே ஆகவேண்டும்? அடிவானம் அக்கினி சொரூபம் பெற்றது! உதய சூரியனின் ஒளிப்பார்வையில் கண் விழித்த மண்மகள், உயிர்களின் நடமாட்டத்தைக் கண்டு உவகைப்பூ உதிர்த்தாள். ஆனால்... உறையூர் அரண்மனையின் நெடுமாடக்கூடத்தின் ஓரத்தில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த கவிஞரின் மனம் மட்டும் கொதியாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. முன்னிரவுக் காட்சியை மறந்து உறங்குவதற்காக அவர் பட்டபாடு கொஞ்சமல்ல. இளஞ்சேட்சென்னியின் இதமான ஆறுதல் கிடைத்திருந்தும் அவரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இப்போது கவிஞருக்கு ஐம்பது வயது ஆகிறது. இது வரையில் அவர் எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற்றம் கண்டது கிடையாது. நம்பி மோசம் போனது இதுதான் முதல் தடவை. என்றாலும் அவர் மனம் அவரை உலுக்கிவிடாமல் இல்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வராத காரணத்தால் பொழுது விடிவதற்கு முன்பே அவர் விழித்துவிட்டார். மனச் சஞ்சலத்தோடு நித்திய கடமைகளை முடித்துக் கொண்டு, தமக்கென்று மன்னரால் பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கும் விசாலமான அறைக்குத் திரும்பி வந்து மீண்டும் அதே சிந்தனையில் ஆழ்ந்தார். ‘என்னால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவம் என் துணை பெற்று வாழ்ந்து விட்டதே! என்னையும் அறியாமல் இந்நாட்டுக்கு எவ்வளவு பெரிய தவறைச் செய்ய இருந்தேன்! நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறதே! நந்தினி பேச்சில் நயவஞ்சகியா?’ - இதற்கு மேல் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இருக்கையிலிருந்து வெருட்டென்று எழுந்து கொண்ட கவிஞர் வாயிலை நோக்கி வந்தார். அப்போது அங்கு வந்த அரசர், “ஐயனே! முன்னிரவுக் காட்சியை இன்னமும் தங்களால் மறக்க முடியவில்லையா?” எனக் கேட்டுத் தடுத்து நிறுத்தி உள்ளே அழைத்து வந்தவர், “இதற்காகவா... இப்படி நொடித்துப் போவது? தாங்கள் என்ன செய்ய முடியும்? நந்தர் மகளாகத் தெரிந்ததால் நம்பிவிட்டீர்கள். இல்லையென்றால் அவளுக்கு அடைக்கலம் தந்திருப்பீர்களா?” என்றபடி அவரை உட்கார வைத்து ஆசனத்துக்கு எதிரில் அமர்ந்தார். அவர் தொங்கப் போட்ட தலையைத் தூக்கவில்லை. மன்னர் மேலும் தொடர்ந்தார்: “சாணக்கியனின் இராஜதந்திரம் சோழ சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்திருக்குமென்று தாங்கள் அறியாதது குற்றமல்ல. தகுந்த நேரத்தில் மாமூலனாரின் ஓலை வந்தது. இல்லையென்றால் நானும்தான் ஏமாந்து போயிருப்பேன்” என்றதுமே கவிஞரின் தலை நிமிர்ந்தது. அவரது பார்வையிலுள்ள எண்ணத்தைப் புரிந்து கொண்ட சென்னி, “ஆம் ஐயனே! நான் நாகநந்தினியைச் சந்திப்பதற்கு முன்பே மாமூலனாரின் ஓலையைப் பார்த்து விட்டேன். அவர் குறிப்பிட்டிருந்தபடி பரிசோதிக்கவே மாறுவேடம் பூண்டு, தங்களை அழைத்துக் கொண்டு அடைக்கலக் கோட்டத்துக்குள் பிரவேசித்தேன். அவர் சொல்லி இருந்த அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது. உறையூரும் பிழைத்துவிட்டது” என்பதற்குள் இடைமறித்த கவிஞர், “இறைவா! உண்மையிலேயே என்னை மன்னித்து விட்டீர்களா?” என்றார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் புரண்டு நின்றது. “ஐயனே! நான் தங்களிடம் பயின்ற தமிழ் மீது ஆணை; போதுமா?” “அப்படியென்றால் இந்தக் கவிஞனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவீர்களா?” “நிச்சயமாக... கேளுங்கள்!” “வேறொன்றுமில்லை.. எழுத்தாணியை ஏந்திப் பழக்கப்பட்ட இந்தக் கரம் கட்டாரியை ஏந்த இப்போது துடிக்கிறது.” “ஏன்... இனி கத்தியின் முனையிலேயே கவிதையை எழுதுவதாக உத்தேசமா?” “ஆம்... கொடியவளைக் குத்தி, அவள் உடம்பிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் பச்சை இரத்தத்தில் அதே கட்டாரியை நனைத்து அதன் மூலமாக ஒரே ஒரு கவிதையை உருவாக்க வேண்டுமென்று ஓர் ஆசை. அப்போதுதான் எனக்கு முழுமையாக அமைதி கிடைக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த அழுந்தூர் வேள் திதியன், “ஐயனே! தங்களுக்குத் தேவையில்லாதது. அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டியது என் கடமை” என்று கூறிய வண்ணம் இருவரையும் பார்த்துக் கை குவித்து வணங்கினான். ஆம், வரும் வழியில் சோழர் படை உபதலைவனைத் தற்செயலாகச் சந்தித்த போது அவன் சொன்ன உண்மை இது. திதியனைக் கண்டதும் புதியதொரு தெம்பைப் பெற்ற இளஞ்சேட்சென்னி, “வரவேண்டும் திதியா! உன்னுடைய இந்த வருகை, களத்துக்கு ஏற்ற உத்தரமாக அமையுமென்று எதிர்பார்க்கின்றேன்!” என்று பெருமிதக் குரலில் கூறினார். “சோழர் குலச் செம்மலே, வடுகரும் கோசரும் துளுவ நாட்டை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாகச் செய்தி!” “உண்மையாகவா?” “நம்முடைய தலையாய ஒற்றன் சிங்கமுகன் வெளியிட்ட கருத்து!” “சிங்கமுகன் வந்துவிட்டானா?” “இங்கு வரவில்லை; வரும் வழியில் சந்தித்தேன். இப்போது துளுவ நாட்டை நோக்கிப் போயுள்ளான்!” “அங்கு போக வேண்டிய அவசியம்?” - இந்தக் கேள்வி அவனைத் திணறச் செய்துவிட்டது. திதியன் பெற்ற தடுமாற்றத்தைக் கண்ட கவிஞர், “கொடியவர் கூடாரத்தின் அடுத்த நடவடிக்கையைக் கண்டறிவதற்காக இருக்குமோ?” என்றார். இப்போது இளஞ்சேட்சென்னியின் இரு விழிகளும் நான்கு விழிகளைச் சந்தித்துவிட்டு மீண்டும். ‘உம்’ கூட்டியவாறு மென்முறுவல் பூத்த மன்னரை இமைக்காமல் பார்த்த திதியனின் மனத்தை திகில் மூட்டம் கவ்விக் கொண்டது. நம்முடைய இரகசிய நடவடிக்கையை யார் மூலமாவது தெரிந்து கொண்டிருப்பாரோ! இல்லையென்றால் மௌனப் புன்னகை புரிய வேண்டிய அவசியமில்லையே! அவரை நிமிர்ந்து பார்க்காமல் பளிங்குத் தரையைக் கால் விரலால் கீறலானான். அவனது இந்தச் செயலைக் கண்ட மாமன்னர், “யாரோ செய்யக்கூடிய காரியத்தை இப்போது நீ செய்து கொண்டிருக்கிறாய். போகட்டும்! இவ்வளவு காலம் நீ எங்கே போயிருந்தாய்? அழுந்தூர் அரண்மனையில் கூட நீ இல்லையாமே! பொறுப்புள்ள நீ பொறுப்பற்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் உண்மைக்கு வெளிச்சம் கிடைத்துவிடுமா? நாகத்தை இங்கே நுழைய விட்டுவிட்டு நாடு சுற்றப் போய்விட்டாய்! பரிவு காட்டுவது புலவர்க்கு இயற்கை. உன் பார்வைக்குமா... அவள் யார் என்பது புரியாமல் போய்விட்டது! படைத்தலைவன் நீ... இந்நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் உனக்கும் பங்குண்டு. கண்ணோட்டம் என்பது காவலனுக்கு மட்டுமல்ல; வழி காத்து நிற்கும் வேல் வீரனுக்கும் தேவை. ஆனால் நீ தவறிவிட்டாய். இந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?” எனச் சீறினார். அவன் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. ஒரு குற்றவாளியைப் போல் ஒடுங்கி நின்றான். அவனது நிலையைக் கண்ட கவிஞரால் பரிதாபப்படத்தான் முடிந்ததே தவிர, பரிகாரம் ஏதும் காண முடியவில்லை. காரணம் அப்போது சென்னியின் முகத்தில் அனல் வீசிக் கொண்டிருந்ததுதான். ஒருகணம் கூடம் முழுவதிலும் அமைதி நிலவியது. மறுகணமே அந்த அமைதியை விரட்டியடித்தார் இளஞ்சேட்சென்னி. “திதியா! ஊம்... சொல்! இப்போது எங்கிருந்து வருகிறாய்?” இந்தக் கேள்விக்கணை பிறந்ததும் சற்றே பார்வையை மேலுக்கு உயர்த்திய திதியன் தன்னடக்கத்தோடு தான் கண்டதையும் கேட்டதையும் விளக்கினான். எல்லாவற்றுக்கும் ‘ஊம்’ கூட்டிக் கேட்டுக் கொண்டிருந்த சென்னி, “அப்படியென்றால் நன்னன் மகளை மீட்பதற்காகத்தான் சேந்தன் கொற்றனார் வடுகர் இருப்பிடத்துக்குப் போயிருக்கிறாரா?” என்று ஓரவிழியால் அவனைப் பார்த்து வினவினார். “ஆமாம்... அப்படித்தான் அவர் சொல்லிவிட்டுப் போனார்!” ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் பலமாகத் தலையாட்டிவிட்டு, “இருக்கட்டும். தமிழகத்தை நோக்கி மௌரியர் வரப்போவது உறுதிதானே?” என்று கேட்டார். “பிந்துசாரன் நெஞ்சிலே ஊட்டப்பட்டிருக்கும் பேராசை அப்படிப்பட்டது. நந்தர்களை ஆதரித்து வந்ததற்காகவே இந்தப் படையெடுப்பு.” “ஆதரிப்பது, அன்பு காட்டுவது, பண்போடு நடப்பதென்பது தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் நடைமுறைப் பழக்கங்கள். அவற்றுக்கு ஆபத்து வருகிறதென்றால், அந்த ஆபத்திலிருந்து தாய்த் திருநாட்டுப் பொன்மணிகளைக் காத்துத் தீர வேண்டியது நமது கடமை. தூங்கும் புலியை இடறிப் பார்க்கும் தீயவர் உதிரத்தைக் குடிக்க உறையூர் தயாராகிவிட்டது. நீ இப்போதே புறப்படு! அழுந்தூர் அரண்மனையிலிருந்த வண்ணம் சேனா சமுத்திரத்தை உண்டாக்கு. எதற்கும் எதிலும் விழிப்பு தேவை” என்று சரளமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது இரண்டு காவலாளிகள் உள்ளே நுழைந்தனர். ‘அவர்கள் காவலாளிகளா... இல்லை; நிச்சயம் இருக்க முடியாது. எதைச் செய்யவும் தயங்காத கொலையாளிகள்!’ இப்படித்தான் கவிஞரின் மனம் எண்ணிப் பதைபதைத்தது. மாமன்னரின் அவசரக் கட்டளைப்படி நந்தினியின் கழுத்தை வெட்டி ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்திருந்த அவர்களைப் பார்ப்பது போல் நந்தினியின் முகத்தைக் கவனித்தான் திதியன். பூவானது செடியில் பூத்திருக்கும் போது பார்ப்பதற்கு இரம்மியமாகத்தான் இருக்கிறது. அதையே பறித்துக் கையில் வைத்துப் பார்க்கும் போது அதன் அழகு குறைந்துதானே காணப்படுகிறது! தலை மயங்க வைக்கும் தலையைக் கண்டதும் கொதித்தெழுந்த திதியன், “நல்ல அறுவடை! நாசக்காரியின் மாவஞ்சகப் பேச்சுக்கும் செயலுக்கும் ஏற்ற தண்டனை!” என்று வெறிச் சத்தமிட்டான். அந்தத் தலையைக் கண்டு ஆத்திரத்துக்கும் அருவருப்புக்கும் இலக்கான கவிஞர், “அழகைவிடக் கொடிய ஆலகால விஷம் எதுவும் உலகில் இருக்க முடியாது” என்றார். எல்லாவற்றையும் அரைகுறையாகக் கேட்டுக் கொண்டே நந்தினியின் தலையைப் பார்த்துக் கொண்டிருந்த சென்னி, அசட்டுத்தனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னார்: “ஊம்... எடுத்துச் செல்லுங்கள். தமிழகத்தின் கீர்த்தியைத் தரைமட்டமாக்க வந்த தலையை வடதிசை நோக்கி வீசி எறியுங்கள்” என்று சொல்லி, அங்கிருந்து அவர்களை அனுப்பிவிட்டுத் திரும்பிய சென்னி மீண்டும் திதியனைப் பார்த்துப் பேசலானார்: “திதியா! உன்னை நான் அறியாதவனல்ல. என்னை ஏமாற்றி நெடுங்காலமாக இங்கு இருந்த முக்கண்ணனையும், அவனை நம்பி இங்கு வந்து இருந்தவர்களையும் நீ வீழ்த்தி இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இவ்விரண்டும் உன் திறமைக்கும், இந்த நாட்டின் மேல் உனக்குள்ள அக்கறைத் தன்மைக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகள். ஏனோ தெரியவில்லை! நந்தினி விஷயத்தில்தான் கொஞ்சம் தடுமாறிவிட்டாய். பரவாயில்லை. இதற்கு முன்பு நான் சொன்னதை நினைவில் வைத்துச் செயல்படு. போய்வா!” விடை கிடைத்த மறுகணமே கவிஞரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திரும்பிய திதியன், நேராக அரண்மனையைச் சேர்ந்தாற்போல் அமைந்திருக்கும் அந்தப்புரத்துக்கு வந்தான். தன் அன்புச் சகோதரியான அமுதவல்லியைச் சந்தித்தான். தன் தம்பியைக் கண்டு பரவசமடைந்த அமுதவல்லி, “திதியா! இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்? ஏன் இவ்வளவு களைத்தும் மெலிந்தும் காணப்படுகிறாய்?” என்று உருக்கமுடன் விசாரித்தாள். அதற்கு அவன் சோகப் பெருமூச்செறிந்த வண்ணம், சொன்னான்: “அக்கா! உளவறியச் செல்பவன் ஒழுங்காக இருந்துவிட முடியுமா? எடை போட்டுப் பார்க்காமல் ஏமாற்றம் பெற்றதால் மன்னரின் தாக்குதலுக்கு இரையானேன்.” “நானும்தான் கேள்விப்பட்டேன். நந்தர் வம்சத்து நங்கையைப் போல் நடித்து உன்னையும் கவிஞரையும் ஒருத்தி ஏமாற்றி விட்டாளாம். நம்முடைய அவைக்களப் புலவர் மாமூலனாரின் மடல் வரவில்லையென்றால் நாடே நாசமாகிவிட்டிருக்குமென்று மன்னர் பிரான் வந்து சொன்னார். எப்படியோ... நான் புத்துயிர் பெற்றுவிட்டேன். இந்த நாடும் சாகச வலையிலிருந்து தப்பிவிட்டது இல்லையா?” அன்புச் சகோதரியின் வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணீர் உகுத்தான் திதியன். தன் தம்பியின் விழிகளிலிருந்து புரண்டு வரும் துக்கத்தைத் தடுத்து நிறுத்திய அமுதவல்லி. “தம்பி! கண்ணீர்விட்டு என்னைக் கலங்க வைக்காதே! சோழ நாட்டுக்கென்று ஏற்பட்டிருக்கும் புதிய சோதனை. இதற்கு நீ என்ன செய்ய முடியும்?” என்று ஆறுதல் படுத்திவிட்டு, “ஆமாம்.. விரைவில் யுத்தம் வந்தாலும் வரலாமென்று கேள்விப்பட்டேன். நிஜந்தானா?” என்று வினவினாள். “ஆமாம்... அதிசீக்கிரத்தில் தென்திசைக்கும் வடதிசைக்குமிடையே போர் நடைபெறப் போவது உறுதியாகிவிட்டது. அதற்காக முன்கூட்டியே தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றுப் போகவே இங்கு வந்தேன்.” அமுதவல்லியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இப்போது அவள் மெய்சிலிர்க்கச் சொன்னாள்: “தம்பி! இப்படியொரு யுத்தம் வரவில்லையே என்பதற்காகவே உன் அத்தான் எப்படியெல்லாம் துயரப்பட்டுக் கொண்டிருந்தார் தெரியுமா? அப்பாடா! கொஞ்ச நாட்களாக அந்தக் கவலை அவர் முகத்தில் இல்லை. அதற்குப் பதிலாக, எப்போது பார்த்தாலும் யுத்த சிந்தனையிலேயே இருக்கிறார். அவரால் எங்குமே பொருந்தி இருக்க முடியவில்லை. படை முகாமிலிருந்து கிளம்பிச் செல்லும் யானைகளையும், குதிரைகளையும், பட்டாளப் படை வீரர்களையும் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயும் அடிக்கொரு தடவை மந்திராலோசனை நடத்துவதிலேயும் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார். இங்கே கூட இப்போது அதிகமாக வருவதில்லை. ஏதோ தப்பித் தவறி இன்றுதான் இங்கு வந்து போனார். ஊம்... எப்படியோ... அவரது இலட்சியம் நிறைவேறினால் போதும். நீ இந்த யுத்தத்தின் மூலம் புதுக் கீர்த்தி பெற வேண்டும். அதைக் கண்டு நான் ஆனந்த சாகரத்தில் மூழ்க வேண்டும். உன் சகோதரி எதிர்பார்ப்பது அதுதான்!” திதியன் பூரித்துப் போனான். தன் உள்ளத்திலிருந்து பொங்கியெழுந்த உற்சாகத்தோடு, “அக்கா! அத்தானின் நெடுங்காலச் சிந்தனை எதுவோ, அதுவேதான் எனக்கும். களம் இல்லாத நாடு காளான் பூத்துக் கிடக்கும் வீடு மாதிரி! போர் முரசம் அதிர வேண்டும். இரத்தக் களம் தெரிய வேண்டும்; வெற்றிப்பண் கேட்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பு இருக்க முடியும். இன்று அதற்கு வழி பிறந்துவிட்டது. அத்தானின் கட்டளைப்படி அழுந்தூர் மாளிகைக்குச் செல்கிறேன். அங்கிருந்த வண்ணம் எதிரியைச் சந்திப்பேன். வேல்பட்டுக் கீழே விழும் யானையின் பிளிறலை - கால் உடைந்து கீழே விழும் குதிரையின் கனைப்பை - குத்துயிரும் கொலையுயிருமாய் மடியப்போகும் மௌரியப் படை வீரர்களின் கதறலைத் தாங்கள் கேட்கச் செய்வேன். விடை கொடுங்கள்!” என்றபடி எழுந்தான். திதியனைக் காணாத போது அவனிடம் என்னென்னவோ சொல்ல வேண்டுமென்று இருந்தாள். அவனைக் கண்டுவிட்ட இந்த நேரத்தில் அத்தனையும் மறந்து, “என் செல்வமே! போய் வா. வெற்றிக்களை பிறக்க - வீரக்கொடி பறக்க மீண்டும் நீ வந்து சந்திக்க வேண்டும். நான் எதிர்பார்ப்பது அதுதான்!” என்று கூறினாள். “இது என் அன்புச் சகோதரியின் ஆவலாகக் கருதவில்லை; சோழ மாதேவியின் கட்டளையாகவே ஏற்றுச் செல்கிறேன். வருகிறேன்!” என்று திரும்பிய திதியன், வாயிலில் நின்றிருந்த வெண்புரவியின் மேல் ஏறி அழுந்தூர் மாளிகையை நோக்கிப் பயணமானான். |