நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

3. சிங்கமுகன் வருகை!

     “ஆ...! நீயா?” என்னும் திதியனின் கேள்வி, கவிஞரின் உள்ளத்தைத் தடுமாறச் செய்தது.

     திதியனைக் கண்டதுமே புதிய தெம்பையும் வலுவையும் பெற்ற நந்தினியின் முகத்தில் நாணத்திரை விழுந்தது.

     கறுப்பு மனிதனின் கையிலிருந்த கட்டாரி, நடுக்கத்தின் காரணமாக நழுவிக் கீழே விழுந்தது.

     “ஏன் இங்கு வந்தாய்?” என்ற திதியனின் இரண்டாவது கேள்விக்கும் அவன் பதிலிறுக்காமல் தலை கவிழ்ந்த வண்ணம் நின்றிருந்தான்.

     குடிலின் ஓரத்தில் சன்னமாக எரிந்து கொண்டிருந்த அன்ன விளக்கின் தூரல் வெளிச்சத்தில் அவன் யார், இங்கு அவன் வந்ததற்கு அடிப்படைக் காரணமென்ன என்பதை யூகித்துக் கொண்ட சோழர் படைத்தலைவன், “அடையாளம் தெரிந்து அறுவடை செய்ய வேண்டும்” என்று சொன்னதும் அவன் மறுமொழி கூறினான்.

     “அடைக்கலமென்று அறியாமல் செய்த தவறு!”

     “இந்தத் தவறு தொடர் காவியமாகக் கூடாது. போய் வா!” - உத்தரவிட்ட வண்ணம் உருவிய வாளை உறையிலிட்டான், திதியன்.

     அங்கிருந்து அவன் நகர்ந்தான். இப்போதுதான் கவிஞருக்கு உண்மை புரிந்தது. நெடுமூச்செறிந்த வண்ணம் நந்தினியைப் பார்த்த விழிகளாலேயே திதியனைப் பார்த்தார். திதியனின் கண்கள் தேமொழியாளின் விற்புருவ விழிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பியதைப் பார்த்தும் பார்க்காத தோரணையில், “திதியா! வந்து போன கொலையாளியை நீ அறிவாயா?” என்று பயத்திலிருந்து நீங்காத அடிக்குரலில் கேட்டார்.

     அதற்கு அவன் சிரித்தபடி, “ஐயனே! அவன் கொலையாளியல்ல. என் விழியசைவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஏவலாட்களுள் ஒருவன்” என்ற வண்ணம் குடிலைவிட்டு வெளியில் வந்தான்.

     “நல்ல சமயத்துக்கு நீ வந்தாய். இல்லையென்றால் இருவருமே அவனது கட்டாரிக்கு இரையாகிவிட்டிருப்போம்!” - சொல்லிக் கொண்டே அவனைத் தொடர்ந்தாற்போல் கவிஞர் மட்டுமல்ல, இனம்புரியாத இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நந்தினியும் வெளியில் வந்தாள்.

     கவிஞர் சொன்னதைக் கேட்ட திதியன், சிரித்துக் கொண்டதோடு சரி. இருவரையும் திரும்பிப் பார்க்கவில்லை. புரவியில் செல்லும் மனிதனை நோக்கித் திதியன் விரைந்தான். இப்போதுதான் அவ்வளவு அவசரமாகத் திதியன் வெளியில் வந்ததற்குரிய காரணம் அவர்களுக்குப் புரிந்தது.

     திதியனின் கையொலி கேட்டும் திரும்பாத அன்னவன், முன்னிலும் தன் வெண்ணிறக் குதிரையைத் தட்டிவிட்டு அழுந்தூர்ப் பாதையை நோக்கி விரையலானான்.

     திதியனின் கையொலியும் குரலொலியும் கனத்தன. இரண்டும் இணைந்து எழுப்பிய பெருஞ்சத்தத்தால் வெருட்டென்று திரும்பிய அன்னவன், தன்னை நோக்கி வருவது யாரென்பது தெரியாததால் முதலில் ஒருவித அலட்சியமுடன் பார்த்தான். பிறகு பால்நிலா வெளிச்சத்தில் தன்னை நாடி வருபவன் தான் தேடிச் செல்லும் திதியன்தான் என்பது புரிந்தும் சடக்கென்று குதிரையைவிட்டு இறங்கினான்.

     இப்போது திதியனுக்கும் அவன் யார் என்பது விளங்கிடவே, “சிங்கமுகா!” என்றான்.

     “தலைவரே!” என்று அழைத்த வண்ணம் விரைந்து வந்த சிங்கமுகன் திதியனின் திருவடியைத் தொழுது எழுந்தான்.

     “வரவேண்டும், சிங்கமுகா! வரவேண்டும்!” என்று உற்சாகக் குரலில் உதிர்த்த வண்ணம் அவனது தோள்பட்டையைச் செல்லமாக உலுக்கிவிட்ட திதியன், “ஏன் இந்த நள்ளிரவில் இப்படி வேக வேகமாக வரவேண்டும்? எங்கேனும் தங்கியிருந்துவிட்டுக் காலையில் வந்திருக்கலாமே!” என்றான்.

     “தலைவரே! என்ன செய்வேன்? உளவறியச் சென்றவன், தான் அறிந்த விஷயத்தைச் சொல்ல வேண்டியவரிடம் வந்து சொல்லிவிட்டால்தானே அவனுக்கு நிம்மதி பிறக்க முடியும்?” என்றதும் புன்னகைத்த திதியன், “அப்படியா! என்ன விஷயம்?” என்று ஆவலுடன் திருப்பிக் கேட்டான்.

     அதற்குப் பதில் சொல்ல வாயெடுத்த சிங்கமுகன், எதிரில் வந்து நிற்கும் கவிஞரையும் நந்தினியையும் பார்த்த மாத்திரத்தில் சொல்ல வந்ததை நிறுத்தி, கவிஞருக்குத் தன் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான்.

     “ஓகோ..! சிங்கமுகனா! வரவேண்டும் ஒற்றரே, வரவேண்டும். தூரத்திலிருந்து பார்க்கும் போது உன்னுடைய உருவமே வேறு மாதிரியாகத் தெரிந்தது” என்றார் கவிஞர்.

     “கவிதை இளமை; வயது முதுமையல்லவா?” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.

     அவரும் பதிலுக்குச் சிரித்துவிட்டு, “ஏன் இந்த அகால வேளையில் வரவேண்டும்? எந்த ஒரு எதிரியின் கண்ணிலாவது பட்டுவிட்டால் என்னாவது?” என்று அடுக்கிக் கொண்டே போனவரைத் தடுத்துச் சொன்னான் அவன்:

     “பெருமானே! ஒற்றன் நான்! சந்தர்ப்ப சூழ்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? அதுவும் வட திசையிலிருந்து வரும் ஒருவனுக்கு வழியில் தங்கக்கூட இடம் இருக்கிறதா?”

     இதற்குக் கவிஞர் பதில் சொல்ல வாயசைப்பதற்குள் திதியன் குறுக்கிட்டு மொழிந்தான்.

     “சிங்கமுகா! இப்போது நீ கொண்டு வந்த செய்தி?”

     “சொல்கிறேன்!” என்றபடி விழிகளைச் செலுத்தி நந்தினியை ஊடுருவினான்.

     சிங்கமுகன் தயங்குவதற்குரிய காரணத்தைப் புரிந்து கொண்ட திதியன், “சிங்கமுகா! சந்தேகப்படத் தேவையில்லை. நந்த வம்சத்தைச் சேர்ந்த நங்கைதான்! தாராளமாகச் சொல்லலாம்!” என்று தைரியம் ஊட்டியதும் கொஞ்சமும் தயங்காமல் ஏந்தி வந்த செய்தியை ஒப்படைத்தான்.

     சிங்கமுகன் சொன்னதைக் கேட்டுச் சீறும் சிறுத்தையாகிவிட்ட திதியன், “என்ன! புலிநகம் பதிந்த பொன்னாசனத்தின் மேல் புறப் பகைவரின் கழுகுப் பார்வையா? காரணம்?” எனப் படபடப்புடன் கேட்டான்.

     “நந்த வம்சத்துக்கு நமது நாடும் நாயகனும் தந்து வந்திருக்கும் நல்லுதவிதான்!”

     “அதற்காக சந்திரகுப்த சாம்ராஜ்யத்துக்கு நாம் என்றுமே சத்ருவாக இருந்ததில்லையே!”

     “மௌரியர் மறுக்கவில்லை! ஆனால் நந்த வம்சத்தை நாம் ஆதரித்து வருவதை அவர்கள் விரும்பவில்லை. தப்பிவிட்ட நவநந்தர் வாரிசுக்குத் தமிழகம் அடைக்கலம் தருவதாக பாடலிபுரம் அரண்மனையிலே குற்றச்சாட்டு!”

     “குற்றம் சுமத்தியவன் யார்?”

     “சாதாரண மனிதனல்ல. மோரியருக்கு முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்கிவரும் கௌடில்யர்” என்றதுமே கோபத்தோடு இடைமறித்தாள் நந்தினி.

     “எங்கள் வாழ்வுக்கு எமனாக வந்த சாணக்கியனா? நந்தர் குலத்தை நாசப்படுத்திவிட்ட நயவஞ்சகனா?”

     நந்தினியின் தொடர் கேள்விக்குச் சிங்கமுகன் ஒன்றும் விடையிறுக்கவில்லை. அவனுக்குப் பதிலாக பெருங்குன்றூர்கக் கிழார் பேசினார்.

     “மோரியர் வம்சத்தை மூளியாக்கவில்லையே அவன். சந்திரகுப்தனும் அவன் மகன் பிந்துசாரனும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் அதற்குப் புறம்பான சமயத்தைச் சேர்ந்த சாணக்கியனைத்தானே இன்னமும் தலைமையமைச்சனாகக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் இயக்குகிறார்கள்? போகட்டுமம்மா! அதர்மத்துக்கு அதிக நாள் வாழ்வு இருப்பதில்லை!” என்று ஆறுதல் சொல்வது போல பேசிவிட்டு, அதற்கு மேல் தமக்கு நின்று பேசும் சக்தி இல்லாதவர் போல் பசும்புல் தரையில் ‘ஊம்’ கூட்டியவாறு உட்கார்ந்தார். அவரது வற்புறுத்தலுக் கிணங்க நந்தினி தரையில் உட்கார்ந்தது போல் எதிரும் புதிருமாகச் சிங்கமுகனும் திதியனும் மணல் மெத்தையில் உட்கார்ந்தனர். நந்தினியின் செவ்விதழ்கள் மீண்டும் மலர்ந்தன.

     “நந்த வம்சத்தை மண் கவ்வச் செய்துவிட்டானே! அந்த மண்ணில் புல் - பூண்டு கூட முளைக்க விடாதபடி இருந்து வந்த ஓரிரு நந்தர்களைக் கூட எரித்துச் சாம்பலாக்கி விட்டானே!” என்றதுமே இடைமறித்த திதியன் குறும்பும் குத்தலுமாக வினவினான்.

     “அப்படியென்றால் நீங்கள் வேறு சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களோ?”

     திதியனின் துரிதக் கணை, சிங்கமுகனைக் கடகடவெனச் சிரிக்கச் செய்துவிட்டது.

     நந்தினியின் முகம் மூன்று கோணலானது. தன்னையும் மீறி தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடுவது போல் வெட்கித் தலைகுனிந்தாள். அவளது பொன் முகத்தில் கலந்திருக்கும் கருமையோட்டத்தைக் கண்டு தன்னை வருத்திக் கொண்ட திதியன், “விளையாட்டுக்குச் சொன்னேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!” என்று அவள் முகத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல் சொன்னான். அப்போது திடீரென்று கவிஞர் கேட்ட கேள்வி திதியனைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. சிங்கமுகனின் நிமிர்ந்த பார்வை திதியனின் கண்களை ஊடுருவியது.

     “தெரியும்” - நிறுத்தி நிதானமாக மொழிந்தான் திதியன்.

     “அம்மா, நந்தினி! உண்மைதானா?” - நந்தினியின் முகத்தை நோக்கி விழுந்த முல்லைப்பூ இது.

     அவள் வாய் திறந்து பதிலிறுக்கவில்லை. தரையைப் பார்ப்பது போல் திதியனின் விழிகளைச் சந்தித்துவிட்டு நிமிர்ந்த நந்தினி, நாணம் கலந்த புன்னகையுடன் முகத்தைத் தொங்கப் போட்டாள்.

     ‘இந்தக் காதல் ஆரம்பமான இடம் எதுவாக இருக்கும்?’ என்று தமக்குள் தாமே கேட்டுக் கொண்டார். விடை கிடைக்காத ஏமாற்றத்தோடு சற்றே நிமிர்ந்த கவிஞர், திதியனின் சொல்லாடலைக் கவனிக்க முற்பட்டார்.

     “சிங்கமுகா! குற்றம் சுமத்துவதும் குறையைச் சொல்வதும் அவர்களுக்குப் பொழுது போக்காக இருக்கலாம். அப்படிப்பட்ட விளையாட்டுப் பிள்ளைகளின் அர்த்தமற்ற அரசியல் சொற்களுக்கு ஒன்றும் ஜீவசக்தி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.”

     சிங்கமுகன் இடைமறித்துச் சீறினான்:

     “படைத்தலைவரே! சாணக்கியன் வீற்றிருக்கும் சப்ரமஞ்சம் அப்படிப்பட்டதல்ல; அங்கிருந்து கிளம்பும் எந்த ஒரு சொல்லுக்கும் ஜீவசக்தி உண்டு. அது மட்டுமல்ல. கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் நெஞ்சில் குடிகொண்டிருந்த நப்பாசை, இப்போது, நாசக்காரர்களின் நெஞ்சிலே குடிகொண்டிருக்கிறது. மூண்டெழுந்த ஆசையின் காரணமாக அறிவுக்கு இரண்டாவது இடம் அங்கு தரப்பட்டுள்ளது. மனிதத் தலைகளைப் பந்தாக்கி மகிழும் வெறித்தனம் வேந்தனுக்கு மட்டுமல்ல, அவனுக்கு நிகராக அங்கிருக்கும் அத்தனை பேருக்குமே உண்டு” என்றதுமே துரித கதியில் கேட்டான் திதியன்.

     “ஆசையா! அதுவும் அலெக்சாண்டரின் ஆசையா? என்ன அது?”

     “ஆம் தலைவரே! வடதிசை நோக்கிப் படையெடுத்து வந்த கிரேக்க மன்னனின் நெஞ்சில் போரஸ் மன்னன் விதைத்த ஆசை!”

     “புரியவில்லையே!”

     “புரியும்படி சொல்கிறேன். கிரேக்க மன்னனுக்கு போரஸ் காவலன் விருந்தொன்று வைத்தானாம். அந்த விருந்தில் தமிழகத்து முக்கனிகளும் இடம் பெற்றிருந்ததாம்! கனிகளைச் சுவைத்து வியந்த அலெக்சாண்டர், ‘அற்புதமான கனிகள்! அபாரமான சுவை! இப்படிப்பட்ட கனிகளை நான் கண்டதுமில்லை, சுவைத்ததுமில்லை’ என்று அளவு கடந்து புகழ்ந்தானாம்! அதற்கு அவன் ‘கிரேக்க வேந்தரே! இவை யாவும் இந்நாட்டுக் கனிகளல்ல; தென்திசைப் பழங்கள். பொன்னும் மணியும் பொருளும் நிறைந்த ஒரு நிலத்தின் வளத்தை எடுத்துக் காட்டும் முக்கனிகள்!’ என்று அவனுக்குப் போதை ஊட்டினானாம். அவன் சொன்னதைக் கேட்டு ஒருவித மயக்கத்தைப் பெற்ற அலெக்சாண்டர், ‘அப்படியா! இயற்கை வளம் நிறைந்த பூமியா! அப்படியென்றால் அடுத்த முறை வரும்போது தென்திசையில் கிரேக்க தீபத்தை ஏற்றி வைப்பேன். எல்லா வளங்களையும் எனக்குரியதாக்கிக் கொண்டு நாடு திரும்புவேன்!’ எனச் சூளுரைத்துவிட்டு வடதிசையைவிட்டுச் சென்றானாம். அப்படிச் சொல்லிச் சென்றவன் மீளவில்லையல்லவா!”

     “காரணம்?” - குறுக்கிட்டுக் கேட்டார் கவிஞர்.

     “சாவின் சந்நிதானத்தை வழியிலேயே சந்தித்துவிட்டதுதான்!”

     “ஊம்... அப்புறம்?”

     “உங்களுக்குத் தெரியாததா? சாணக்கியனின் சாகச வலையில் எல்லா மன்னர்களும் சாய்ந்து சமாதியாகி விட்டார்களல்லவா? அவனது ஆழமான நெஞ்சுக்குள் உருவாகியிருந்த பூநாக முடிவு பூமாலை சூடிக்கொண்டதல்லவா?”

     “உண்மைதான்! அதற்காக...!”

     “தக்கணத்தின் ஒரு பகுதி வரையிலும் தன் குடையின் கீழ் சந்திரகுப்தன் கொண்டு வருவதற்கு உறுதுணை புரிந்தவன் அவன்தானே?”

     “ஆமாம்...”

     “அது போலவே அவன் மகன் பிந்துசாரனையும் தென்திசையின் மீது போர் தொடுக்கும்படி தூபம் போட்டுக் கொண்டிருக்கிறான்.”

     “சிங்கமுகா! தூபமெல்லாம் போர்க்களத்துக்குத் தோரண வாயிலாக அமைவதில்லை. தெரியுமா உனக்கு?”

     “தெரியும் தலைவரே! ஆனால் அலெக்சாண்டரை முன்னிறுத்தி ஒவ்வொரு சமயத்திலும் மிகச் சாதுர்ய புத்தியோடு சாணக்கியன் சொன்னதையும், அவன் சொல்வதையெல்லாம் ஆமோதிப்பது போல் பிந்துசாரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்ததையும் நேரில் பார்த்தேன். அதனாலேயே அவனது அமைதியை அலட்சியமாக என்னால் நினைக்க முடியவில்லை.”

     “நீ ஒரு கோழை!” -திதியனின் கோபக் கணை.

     “வடதிசை மண்ணிலே கொஞ்ச காலம் தங்கி இருந்தேன் அல்லவா! அதனால் பயங்கொள்ளித்தனமான மனப்போக்கு எனக்குள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தலைவரே! குமுறும் எரிமலையை நான் பார்த்தவனல்ல; ஆனால் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றதுமே மீண்டும் சீறினான் திதியன்.

     “சிங்கமுகா! வெடிக்கும் என்பதைத்தானே! நானும் அறிவேன்; இந்த நாடும் அறியும். பொன் கொழிக்கும் நாட்டுக்குள் பகைவர் நுழைவார்களா? சோழர் வரலாற்றில் இதுவரையிலும் நேராதது! இது வரையில் வடதிசைக்கும் தென்திசைக்குமிடையே போர் நிகழ்ந்ததில்லை. இனியும் மூள்வதற்கு வழியில்லை. நீ சொன்னது போல் தீ நாக்கின் தூண்டுதலுக்கு இரையாகி பிந்துசாரன் திசைமாறி வருவானானால் அவன் தான் வரும் வழியிலுள்ள ஒவ்வொரு மலைக்கும் பெரிய பள்ளத்தாக்கிற்கும் முதலில் பதில் சொல்லி ஆகவேண்டும். அதன் பிறகு...” என்பதற்குள் அதுவரையிலும் சாது ரூபத்தில் இருந்த கவிஞர் இடைமறித்துச் சொன்னார்.

     “சிங்கமுகா! உன்னுடைய எச்சரிக்கை வார்த்தைகளை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால் நீ தெரிந்து கொள்ள வேண்டியதை இப்போது சொல்கிறேன். அவர்கள் கோசருடன் கைகோர்த்துக் கொண்டு வரலாம். ஏன், வடுகரைக்கூட வளைத்துக் கொண்டு கிளம்பலாம். ஆனால் அவர்கள் எப்படிப் புறப்பட்டு வந்தாலும் வெறுங்கையோடு திரும்பித்தான் போக வேண்டும். காரணம் என்ன தெரியுமா? துளுவ நாட்டு மன்னனை - சேர நாட்டுப் பிட்டங்கொற்றனை - அதியன் மரபு ஆதன் எழினியை - மோகூர்த் தலைவனை - இதோ இங்கே வீற்றிருக்கும் இந்த அழுந்தூர்வேள் திதியனை வெல்லும் திறமை வடதிசைக்கு மட்டுமல்ல, எந்தத் திசைக்குமே இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. இந்தக் குன்றுகளையெல்லாம் கடந்து வந்தால் தானே மாமலை மன்னனைச் சந்திக்கும் சங்கற்பம் அவர்களுக்குக் கிடைக்க முடியும்? இந்த உண்மை பிந்துசாரனுக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் சாணக்கியருக்குப் புரியாததல்ல. நான் சுட்டிக்காட்டிய ஒவ்வொருவரும் மேருமலை போன்றவர்கள். இவர்களில் ஒருவரைக் கூடப் பிந்துசாரனால் வெல்ல முடியாது. ஆகவே உன் தானைத் தலைவனின் கட்டளையை ஏற்று மீண்டும் மோரியர் முகாமை நோக்கிப் புறப்படு! சோணை நதிக்குத் தென்மேற்கில் நமது பெருங்கவிஞர் மாமூலனார் தங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்து அவர் மூலமாக உனக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொள்” என்று சரளமாகச் சொல்லி நெட்டுயிர்த்தார்.

     “இல்லை, ஐயனே, இல்லை! மாமூலனார் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அநேகமாக இன்றோ நாளையோ வந்துவிடுவார்!” என்று சொல்லும் நோக்கோடு நிமிர்ந்த திதியன், அதே தருணத்தில் தனக்குள் முளைத்த சிறு சந்தேகத்தால் அப்படிச் சொல்ல வந்த விஷயத்தை மாற்றி இருவரையும் பார்த்துக் கேட்டான்:

     “என்ன இது! வந்ததுமே புறப்பாடா? வேண்டாம்! இரண்டொரு நாள் இங்கிருந்துவிட்டுப் போகலாம்.”

     உடனே திதியனைப் பார்த்த சிங்கமுகன், “இல்லை தலைவரே! கவிஞர் சொன்னதுதான் சரி! இன்றுள்ள சூழ்நிலையில் இப்போதே புறப்படுவதுதான் நல்லதென்று எனக்குப் படுகிறது. கிடைத்த செய்தியை - நேரில் கண்டு கேட்ட விஷயத்தைக் கொண்டு வந்தேன். இது போல், கிடைக்க வேண்டிய செய்திக்கு உடனடியாகப் போய்த்தானே தீரவேண்டும்? என்ன சொல்கிறீர்கள்?” என்று ஆவலுடன் கேட்டான்.

     ஒரு கணம் மௌனம் சாதித்த திதியன் மறுகணமே கம்பீரமாய்ச் சொன்னான்:

     “சிங்கமுகா! உன் விருப்பப்படியே புறப்படு! உனக்குப் பின்னால் நானும் புறப்பட்டு விடுகிறேன்!”

     இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே நந்தினியின் நெஞ்சில் துயரத்தீ பற்றிக் கொண்டது. ஆனாலும் அவள் பேசாமடந்தை போலவே இருந்தாள். நந்தினியைப் பார்த்த விழிகளாலேயே சிங்கமுகனைப் பார்த்த கவிஞர், “ஒற்றரே! இந்தப் பெண் யார் என்பது இதற்கு முன் தெரியுமா?” என்றார்.

     அவன் அவளை ஏற இறங்கப் பார்த்த வண்ணம், “இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்” என்றான்.

     “அப்படியா, நல்லது! இவள் இங்கிருக்கும் விஷயத்தை அங்கு யாரிடமும் தெரிவித்துவிட வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொள்வதற்கும், எங்கிருந்தோ வந்த அம்பு, திதியனின் தோள்பட்டையை உரசிக் கொண்டு கீழே விழுவதற்கும் சரியாய் இருந்தது.