நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

5. சங்கமத் துறையில்...

     கிழக்கு முகம் வெளுத்தது! சங்கமத்துறை முழுவதிலும் சந்தனக் கோலம்? காவிரித்தாய் கடலோடு கலக்கின்ற இடத்திலே எத்தனை விதமான கலங்கள்! நலம் கருதி நிலம் கடந்து வந்திருந்த அயலக வாணிபச் சீலர்கள், சுங்கம் செலுத்திவிட்டுச் சங்கமத் துறையின் கரையை நோக்கி வருகின்ற பாங்கைப் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்த முக்கண்ணன், “வணக்கம் தலைவனே!” என்னும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

     அடையாளம் தெரியாததால் முறுக்கான குரலில், “யார் நீ?” என்றான், எதிரில் வந்து நின்ற இளைஞனைப் பார்த்து.

     பத்தொன்பது வயது பூர்த்தியாகாத அரும்பு மீசையுள்ள அன்னவன், குறும்பாக அவனை ஊடுருவிய வண்ணம், “ஏன்... என்னைத் தெரியவில்லையா?” என்றான்.

     முக்கண்ணனுக்கு இந்தக் கேள்வி எறும்பு கடித்தது போல் இருக்கவே, சற்றே சினத்துடன் கேட்டான்:

     “நான் தெரிந்திருக்கக் கூடிய அளவுக்கு நீ என் தம்பியா அல்லது அண்ணனா?”

     இளைஞனின் முகம் சட்டென்று கறுத்தது. அவனது மனத்திரையில் கோபப் புகை கிளம்பியது. அந்தப் புகையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் குழைவை இழைத்துப் பணிவோடு கேட்டான்.

     “ஆமாம்!” என்று அசட்டையாகச் சொல்லிவிட்டு அடியெடுத்து வைத்த முக்கண்ணன், “நில்” என்ற சொல்லைக் கேட்டுத் திடுக்கிட்ட வேகத்தில் கோபம் மூளத் திரும்பியவன் எதையுமே சொல்ல முடியாதவனாகித் திக்குமுக்காடிப் போனான்.

     “முக்கண்ணனாரே! இப்போது புரிகிறதா? அல்லது இன்னமும் புரியவில்லையா?” - இளைஞனின் சாத்வீகக் கணை இது.

     முக்கண்ணனின் முகத்தில் நூற்றுக்கணக்கான முத்துகள். அதனை வழித்துவிடக் கூட மறந்தவனாய் கை குவித்து வணங்கிய வண்ணம், “என்னை மன்னித்துவிடு; ஆமாம்.. என்னை மனப்பூர்வமாக மன்னித்துவிடு” என்று ஒரு குற்றவாளியைப் போல் நா தடுமாறச் சொன்னான்.

     அவன் நகைத்த வண்ணம் சொன்னான்: “வயதில் மூத்த உங்களை நான் மன்னிப்பதா? இதென்ன கொடுமை. அருள் கூர்ந்து இனியொரு தடவை அப்படிச் சொல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். சரி, இவ்வளவு அதிகாலையில் இங்கு வரவேண்டிய அவசியம்?”

     இது வெறும் கேள்வி மாதிரி முக்கண்ணனுக்குத் தெரியவில்லை; ஏதோ ஓர் அழுத்தமான கட்டளையாகவே புலப்பட்டது. அப்போது அங்கிருக்கும் புன்னை மரக் கிளையிலிருந்து ஆந்தை ஒன்று ஒரு குரல் கொடுத்த வண்ணம் அங்கிருந்து சென்றது. இது அபசகுனத்துக்கு அடையாளமல்லவா! அப்படியென்றால் இப்போது முக்கண்ணனின் எதிரில் நிற்பவனும் ஆபத்தான பேர் வழிதானா?

     முக்கண்ணன் திடசித்தம் உள்ளவன்! தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் காலம் முதல் பட்டினப்பாக்கத்துக்குப் பதிகத் தலைவனாக இருந்து வருபவன்! அவனுக்குள்ள திறமைக்கு முன்னே நேரிடையாக நின்றிருக்கும் இளைஞன் எம்மாத்திரம்? இது அவனுக்குத் தெரியும். ஆனால் ஒரு மாதத்துக்கு முன்னே நடந்த அந்த நிகழ்ச்சியில் இளைஞன் வகித்த பாகம் சாதாரணமானதல்ல என்ற உணர்வை இன்னமும் மறக்காமல் இருந்ததால் தயங்கிய குரலில் பதிலிறுக்கலானான்:

     “நம்முடைய ஆஸ்தானக் கவிஞர் வடதிசையில் இருக்கிறாரல்லவா! அவர் வருவதாகத் தகவல் எனக்குக் கிடைத்ததால் வந்தேன்!”

     “இன்றைக்கு வருவதாகவா?”

     “அப்படியொன்றுமில்லை... ஒரு வாரத்துக்கு முன்பே வருவதாகச் செய்தி. ஆனால் ஏனோ தெரியவில்லை. இன்னமும் வரவில்லை.”

     “ஏன்... உங்களுக்குத் தெரிந்திருக்குமே!” என்று ஒரு போக்காகச் சொன்னதும் முக்கண்ணனின் முகம் சாம்பிவிட்டது; இடையிலிருந்த உறையிலிருந்து சரேலென வாளை உருவியவன், “இதோ... இந்த வாளால் என்னைக் கொன்றுவிடு. இப்படி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்ரவதை செய்யாதே!”

     இளைஞன் வெகுளித்தனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னான்:

     “முக்கண்ணா! நான் கொலையாளியல்ல. கொலையாளிகளைக் காட்டிலும் கொடிய நயவஞ்சகரைக் காணும் போதெல்லாம் இப்படிக் கேட்டுத் திருத்த நினைப்பவன். அன்றைக்குச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்லப் போகிறேன். இது எனக்கு மட்டுமல்ல; உங்களுக்கும்தான் தாய்நாடு. வருகிறேன்!”

     இப்படிச் சொல்லிய சீக்கிரத்தில் இடப் பெயர்ச்சியானான் அவன். அதுவரையிலும் பேயறைந்தவன் போல் நின்றிருந்த முக்கண்ணன் இப்போது தன்னைத்தானே சோதித்துக் கொள்வது போல கை- கால்களை உதறிக் கொண்டான். முகத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த வியர்வையைத் துடைத்தபடி திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவனைக் கண்டவரெல்லாம் கை குவித்து வணங்கினர். ஆனால் அவன் யாரையுமே ஏறெடுத்துப் பார்க்கவில்லை. திடீரென்று தன் முன் தோன்றி மறைந்த இளைஞனைப் பற்றிய சிந்தனையிலேயே வழியைக் கடந்து கொண்டிருந்தான்.

     கதிர் தூவும் வெளிச்சத்தில் கரை தழுவிச் செல்கின்ற கடலலைக்கு முன்னே கலத்தைச் சோதனையிடும் தலைவனும் சுங்கத் தலைவனும் நின்றிருந்தனர். நேற்றைய முன்னிரவு வரையிலும் வந்து தங்கியிருந்த கலங்கள் அனைத்தையும் ஒரு நாழிகைக்குள் பரிசீலித்துவிட்ட அவர்கள், வடதிசையிலிருந்து வந்து கொண்டிருக்கும் மோரியர் கலத்துக்காகக் காத்திருந்தனர்.

     முன்னிரவே வந்திருக்க வேண்டிய கலம் இது. ஆனால் நடுக்கடலில் திடீரென்று உண்டான சூறாவளிக் காற்றின் தாக்குதலால் பின்தங்கி வரவேண்டியதாகிவிட்டது. இவ்வுண்மையை இரவு வீசிய கடலலையின் மூலமாக உணர்ந்தவர்களாதலால் கால் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் வரும் கலத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டு சங்கமத் துறைக்கு வந்த முக்கண்ணன், கடலையும் வரும் கலத்தையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் இருவரையும் நோக்கி, “வருவது வடதிசைக் கலமா?” என்றபடி அவர்களுக்கு அருகில் வந்து நின்றான்.

     முக்கண்ணனின் குரல் கேட்டுத் திரும்பிய இருவரும் முறையாக வணங்கிவிட்டு, “ஆம் தலைவா! மௌரிய மண்டலத்திலிருந்து வருகின்ற கலம்தான்!” என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டனர்.

     ஏதோ ஆவல் நிறைவேறிவிட்டது போல் பெருமூச்செறிந்து கொண்ட முக்கண்ணன், “இந்தக் கலம் இவ்வளவு தாமதமாக வருவதற்குரிய காரணம் தெரியுமா?” என்றான்.

     “நேற்றிரவு நடுக்கடலில் ஏற்பட்ட சூறாவளிதான்!” - இருவரில் ஒருவன் பணிவுடன் தெரிவித்தான். இன்னொருவன் முக்கண்ணனின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

     “ஓகோ!” என்று தலையாட்டியபடி வரும் கலத்தைப் பார்க்கலானான்.

     மடிப்பலையையும், அது கரையை நோக்கிச் சீற்றத்தோடு வந்த வேகத்தில் நொப்பு நுரையைக் கக்கிவிட்டு வந்த வழியை நோக்கித் துரிதகதியில் செல்வதையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த முக்கண்ணன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தொடங்கியது. அதைப் பிறர் காணாத வகையில் அமுக்கிவிட்டுக் கொண்டவன் ஏதோ ஓர் ஆறுதல் தன்னைத் தேடி வருவது போல் எண்ணி மனத்தை வலிய தேறுதல் படுத்திக் கொண்டான்.

     கரையை நெருங்கி வந்து கொண்டிருக்கும் மௌரியர் கலத்தை நோக்கி இருவரும் விரைவாகச் சென்றனர். அவர்களது கடமை உணர்ச்சியை மனதுக்குள் பாராட்டிய வண்ணம் அங்கேயே நின்றிருக்கவில்லை; அவனும் கலத்தை நோக்கி அடியெடுத்து வைக்கலானான்.

     காவிரிப்பூம்பட்டினத்தில் கலகலப்பு கூடியது! பல்வேறு நாடுகளிலிருந்தும் தீவுகளிலிருந்தும் வந்திருந்த வாணிபச் சீலர்களின் கூட்டுக்குரல் எங்கும் சங்கமித்துக் கொண்டிருந்தது.

     யவனத்திலிருந்து வந்திருந்த கலம் இரண்டாகையால், அவர்கள் கொண்டு வந்திருந்த பாவை விளக்குகள் சங்கமத்துறை முழுவதிலும் நிரம்பி இருந்தன.

     பாண்டிய நாட்டுக் கொற்கைத் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த முத்துகளும், சேர நாட்டு வஞ்சியிலிருந்து எடுத்து விடப்பட்டிருந்த அகில் - தேக்கு - மிளகு மூட்டைகளும் முறையாக முத்திரை பெற்று வெளியில் வருவதைப் பார்த்த வண்ணம் துறைக்கடுத்த அகன்ற வாயிலுக்குள் நுழைந்த முக்கண்ணன், கரைக்கு வந்து சேர்ந்த மௌரியர் கலத்திலிருந்து இறங்கும் வடதிசை வணிகரைப் பார்த்து ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றான்.

     அவனது விழிகளில் கூர்மை குடியேறியது. பட்டுச் சால்வையும் கம்பளமும் கொண்ட மூட்டைகளை முதுகில் சுமந்த வண்ணம் கலத்திலிருந்து வடதிசை வணிகர் வந்து கொண்டிருந்தனர்.

     வெளுத்த முகமும், விறைத்த புருவமும், மெல்லிய துணியாலான தலைப்பாகையும் கொண்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு ரூபத்தில் காட்சி அளித்தனர். அவர்களிலே ஒரு சிலர் அவனைக் காணத் தவறவில்லை. போர்க்களத்து வீரனைப் போல் கவசம் அணிந்திருந்த முக்கண்ணனின் தோற்றம் பலருடைய எண்ணங்களைப் பிரமிக்க வைத்தது. சிலருடைய பார்வைக்குப் பிரகாசப் பொருள் போல் தோன்றியது. ஆனாலும் அவன் யாரையுமே பொருட்படுத்தாமல் அங்கிருந்து கலத்திலிருந்து இறங்கி வரும் மற்ற பயணிகளைப் பார்க்கலானான். அவனது பார்வையிலிருக்கும் கூர்மையைக் கண்ட ஒருவன், தனக்கு முன்னே கூட்டமாகச் செல்பவர்களுக்குப் பின்னால், அதாவது, அவர்களது முதுகுப்புறத்தைப் பாதுகாப்புக் கேடயமாக உபயோகித்துக் கொண்டு ஒளிந்து வரலானான்.

     தூரத்தில் இருப்பவர்களையெல்லாம் நொடிப் பொழுதுக்குள் இனங்கண்டு கொள்ளும் திறமையை இயற்கையாகவே பெற்றிருந்த முக்கண்ணன், தன்னைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லும் ஒருவனைக் கண்டுபிடிக்காமல் போனது விந்தையிலும் விந்தைதானே!

     அரசவைக் கவிஞரைத் தேடி வந்த இடத்திலே அவசியமற்றவர்களை அலசிப் பார்க்க வேண்டிய அவசரம் அவனுக்கு ஏற்பட வேண்டிய அளவுக்கு என்ன காரணம் இருக்கிறது? இப்படியும் அப்படியுமாக விழிகளைப் புரட்டி எடுத்து துரிதத்தில் ஏற்பட்ட ஏக்கத்தோடு அவன் திரும்புவதற்கும், “தலைவா! இங்கு வந்து பாருங்கள்” என்று கலவரக்குரல் செவியில் நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

     திடுக்கிட்ட நெஞ்சோடு பார்வையை உயர்த்திப் பார்த்தான். சுங்கத் தலைவனின் கைக்குள் சிக்குண்டு துடிக்கும் கட்டையான மனிதனைக் கண்டளவில் அனைவரையும் தள்ளிக் கொண்டு வந்த முக்கண்ணன், “யார் நீ?” என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.

     குள்ள மனிதனின் உடம்பு நடுங்கியது! பயத்தால் புருவங்கள் நெளிந்து மேலேற குண்டு விழிகளால் முக்கண்ணனைப் பார்த்தான்.

     “ஏன் அப்படி முறைத்துப் பார்க்கிறாய்? கேட்ட கேள்விக்குப் பதில் எங்கே?”

     விழிகள் சுருங்கிக் கீழிறங்கின. தனக்குப் பக்கமாக நின்றிருக்கும் இருவரையும் நோட்டமிட்ட வண்ணம் கைவிரல் மோதிரத்தை நாசுக்காக முக்கண்ணனுக்குக் காண்பித்தான். அதைக் கண்ட காவிரிப்பூம்பட்டினத்துக் காவல்துறைத் தலைவன் உள்ளூற அச்சப்பட்டானே தவிர வெளிக்குச் சிறிதும் காண்பித்துக் கொள்ளவில்லை.

     சுங்கத் தலைவர்கள் இருவரும் நம்பத்தக்க குரலில் ஓர் அதட்டு அதட்டிய முக்கண்ணன், “நீ இங்கு சொல்லமாட்டாய். உன்னைக் கொண்டு போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போனால் தானாகச் சொல்லி விடுவாய். ஊம்... நட!” என்றான்.

     “அதுதான் சரி... இழுத்துச் செல்லுங்கள் தலைவரே! ஊடுருவல் நடத்த வந்த இவனை விடாதீர்கள். இந்தாருங்கள். இவன் எடுத்து வந்திருந்த ஓலைச்சுருள்!” என்ற வண்ணம் அவனிடமிருந்து பறித்த ஓலையை முக்கண்ணனிடம் ஒப்படைத்தான், அந்த இருவருள் ஒருவன்.

     “இவனை விடுவதா? இவனது இருதயத்தை எடுத்து இமயத்தை நோக்கி வீசி எறிந்துவிட்ட பிறகு தானே எனக்கு வேறு வேலை. ஊம்... புலவரை அழைத்துப் போக வந்த எனக்குப் புதிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது. சரி, அடுத்த கலம் எப்போது வரும் என்பது தெரியுமா?” என்றான் முக்கண்ணன்.

     “குறிப்பிட்டுச் சொல்வதற்கு இல்லை. எப்படியும் இன்னும் இரண்டொரு நாளில் வரலாம்!” என்றான், இருவரில் ஒருவன்.

     “ஓகோ..! அப்படியா?” என்று விளித்தவாறு தான் கையகப்படுத்தியவனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான். கொஞ்ச தூரம் வரையிலும் அந்த அழுத்தமும் ஆவேசமும் இருக்கவே செய்தன. அந்த இருவரில் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்பதை அடிக்கொரு தடவை நோட்டமிடத் தவறவில்லை அவன்.

     யாரும் தன்னைக் கவனிக்கவில்லையென்று திடமாகத் தெரிந்ததுமே, தன் பிடிக்குள் இருப்பவன் செவியில் மட்டும் விழும்படியாக, “வா, வா! சீக்கிரமாக வா!” என்று துரிதப்படுத்தியபடி வேகவேகமாக இருக்கையை நோக்கி வரலானான்.

     காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் அவனுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும். அந்த அளவுக்கு அவனுக்கு செம்பியன் உரிமை வழங்கி இருக்கிறான். ஆனால் அப்படிப்பட்ட உரிமையை இழந்துவிட்டவன் மாதிரி ஒரு குற்றவாளியைப் போல் வருவோர் போவோரைப் பார்த்துப் பார்த்து வரவேண்டிய அவசியமென்ன?

     சங்கமத் துறையைக் கடந்து, தான் தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்ததுமே, வாயிற்கதவைத் திறந்த வேகத்தில் மூடினான். அப்போதுதான் முக்கண்ணனின் பிடிக்குள் இருந்த குள்ளனுக்கு விடுதலை கிடைத்தது.

     “அப்பாடா!” என்றபடி கைகளை உதறிவிட்டான் அவன்.

     ‘ஊம்’ கூட்டியவாறு அறைக்குள் இருந்த ஆசனத்தில் அமர்ந்த முக்கண்ணன், “உன்னை யார் இங்கு அனுப்பி வைத்தது?” என்று எரிச்சலுடன் கேட்டான்.

     “ஏன்?”

     “இதில் கேள்வி வேறு கேட்கிறாயா? நீ செய்த தவறு உனக்கே புரியவில்லையா? நான் அங்கு இல்லாமல் போயிருந்தால் அப்போது தெரிந்திருக்கும். போகட்டும்... ஓலையைப் பிரித்துப் பார்த்தீர்களா?”

     “இல்லை” அடக்கமுடன் தெரிவித்துக் கொண்டான் அவன்.

     “ஊம்... அதுவரையில் தப்பித்தேன்” என்றபடி இடுப்பில் செருகியிருந்த ஓலையை எடுத்துப் பிரித்து வாசிக்கத் தொடங்கினான்.

     ‘மண்டலேஸ்வரனுக்கு,

     பிந்துசாரனின் பிரதிபலிப்பு. இவ்வோலையைக் கொண்டு வருபவன் என் நம்பிக்கைக்கு உரியவன். உனக்கு உறுதுணைக்கு வேண்டுமானால் அங்கு நிறுத்திக் கொள். இல்லையென்றால் நல்ல தகவலுடன் அவனை இங்கு அனுப்பி வை! தெக்கணம் மட்டுமல்ல, தென்திசை முழுவதுமே என் சுட்டு விரலுக்குள் சுழன்றாட வேண்டும். இந்த என் முடிவை மனதில் வைத்துக் கொண்டு காரியமாற்று. உனக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஓலையில் வரைய முடியாத சில விஷயங்களை வருபவனுடைய மனக்கல்லில் பொறித்து அனுப்பியுள்ளேன். படிக்கச் சொல்லிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். உனக்கு ஏதேனும் ஆபத்து நேருவது போல் தெரிந்தால் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிடு!’

     இப்படிக்கு,
     மௌரிய மன்னன்.

     ஓலையைச் சுருட்டிய வண்ணம் விழிகளை மேலுக்கு உயர்த்திய முக்கண்ணன், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “ஆமாம்... இந்தக் கலத்தில் மாமூலனார் ஏன் வரவில்லை?” என்றான்.

     அவன் திருதிருவென விழித்துவிட்டுக் கேட்டான்.

     “என்ன, என்ன! மாமூலனாரா... பெயரே எனக்குப் புதிதாக இருக்கிறதே!”

     “அப்படியென்றால் நீ பாடலிபுரத்துக்குப் புதியவனோ?” - குத்தலாகக் கேட்டான் முக்கண்ணன்.

     “ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”

     “இல்லையென்றால் மாமூலனாரை அறியாமல் இருக்க முடியாதே!”

     “அவர் நமது விசுவாசியா?”

     “ஓரளவுக்கு அப்படித்தான். இந்தத் தரணியில் பிறந்தவர்; தமிழறிவால் தமிழகத்தை ஆள்பவர்; பொது அறிவால் உலகின் எல்லாப் பாகங்களிலும் பொதுநடம் புரிபவர். அது கிடக்கட்டும்; உன்னிடம் ஏதோ சொல்லி அனுப்பி உள்ளதாக ஓலையில் குறிப்பிட்டுள்ளதே, என்ன விஷயம்?” என்று கேட்டதும் அவனுக்குப் பக்கமாக வந்து நின்றவன் காதோடு காதாகச் சொன்னான்.

     அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியுற்ற முக்கண்ணன், “அப்படியா! உண்மையாகவா?” என்று பதைபதைக்கக் கேட்டான்.

     “ஆமாம்... இப்போது நான் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!” - சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் அடிக்குரலில் சொன்னான்.

     ஒருகணம்.. ஒரே கணம்தான் அங்கு அமைதியை நிலவவிட்டான். மறுகணமே மனத் தளர்ச்சியிலிருந்து விடுபட்ட முக்கண்ணன், “அப்படியா! சரி, புறப்படு!” என்று சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு வந்து வெளி வாசல் கதவைத் திறந்தவன், அங்கு சுருங்கி விரிந்த முகத்தோடு நின்றிருக்கும் ஒரு நெடிய உருவத்தைக் கண்டதும் பதறிப் போனான்.