நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

6. முதல் காதல்!

     மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவளால் முழுமையான ஒரு தெளிவைப் பெற முடியவில்லை. திணறல் அடங்கிய அளவுக்குத் திகைப்பும் தீக்கிரையாகி விட்டிருக்குமானால் பழைய உற்சாகத்தை எப்போதோ பெற்றுவிட்டிருப்பாள். அதுதான் சிறுதுளியும் இல்லையே!

     மணித் தமிழால் மணிக்கு நூறு பாக்கள் புனையும் ஆற்றலை இறைவனின் அருளால் இயற்கையிலேயே பெற்றிருந்த பெருங்குன்றூர்க் கிழாரும், காவிரிப்பூம்பட்டினத்துக்கு காவலர்களில் சிலரும் அவள் படுக்கையைச் சூழ்ந்து கொண்டு நிற்பது போல் அவளது அழகிய விழிகளுக்குப் புலப்பட்டன.

     இந்தத் தோற்றம் உண்மைதானா? இல்லை என்பது அவள் கண்களுக்குத் தெரியும்; ஆனால் பாழும் நினைப்புக்கு அப்படி ஓர் உணர்வு இல்லையே!

     வட்டக் கருவிழிகளால் ஒரு சுழற்று சுழற்றிய நந்தினி, ஆத்மார்த்தமாகப் பெருமூச்செறிந்து கொண்டாள்.

     “அம்மா நந்தினி! இப்போது எப்படியம்மா... இருக்கிறது?” - அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த பெருங்குன்றூர்க் கிழார் கனிவோடு வினவினார்.

     அவள் பதிலிறுக்கவில்லை; கண்களில் கண்ணீர் சிந்தியது.

     அதைக் கண்ட அருங்கவிஞர், “அழாதே, அம்மா! நீ இவ்வளவு கோழையாக இருப்பாயென்று நான் கடுகளவும் எதிர்பார்க்கவில்லை. மகத மண்ணில் பிறந்த எந்த ஒரு ஜீவனுக்கும் வீரமுண்டு என்று நான் கேள்விப்பட்டிருந்தது, இன்றைக்குப் பொய்யாகிவிட்டது. ஊம்...” என்றவாறு தமக்கு எதிரும் புதிருமாக நின்றிருக்கும் காவலர்களைப் பார்க்கலானார்.

     அவர்களிலே ஒருவன் அஞ்சும் குரலில், “அப்போ நாங்கள் புறப்படட்டுமா?” என்று குழைவோடு முன் வந்து கை பொத்திக் கேட்டான்.

     அவனை நேர் செய்து பார்த்த பெரும்புலவர், “சரி! இப்போதே புறப்படுங்கள். நான் சொன்னதெல்லாம் கவனமிருக்கட்டும்!” என்று சொன்னதுமே, ஒவ்வொருவராக அவரிடம் விடை கேட்டுக் கொண்டு திரும்பலானார்கள். அங்கிருந்து அனைவரும் நகர்ந்த பின்னர் திரும்பிய பெருங்குன்றூர்க் கிழார், தம் மனத்திலிருக்கும் சலனத்தைப் போக்கிக் கொள்ள முற்படலானார்.

     “நந்தினி! இப்போதாவது சொல்லம்மா! இங்கு என்ன நடந்தது? நீ பயத்தால் சுருண்டு படுக்கக்கூடிய அளவுக்கு இங்கு நிகழ்ந்த பாதகம்தான் என்ன?”

     ஏதோ ஒன்றைச் சொல்லும் ஆவலோடு சற்றே படுக்கையை விட்டு எழுந்திருப்பவள் போல் கழுத்தை மட்டும் தூக்கிய வேகத்தில் மீண்டும் படுக்கையில் சாய்ந்தவள், “ஐயா! என்னை எதுவும் கேட்காதீர்கள். இங்கு சோழர் படைத்தலைவர் வந்தாரானால் அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!” என்று அவசரக் குரலில் கூறிவிட்டுப் பெருமூச்செறிந்தாள்.

     “ஏன், நீ சொல்லக் கூடாதா? அவர் வந்த பிறகுதான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா?”

     “ஆமாம் ஐயா! நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சைத் திடுக்கிடச் செய்யும் அந்தக் காட்சியை என்னால் வாய்விட்டுச் சொல்ல முடியாது ஐயா!”

     இப்படி ஒரு முடிவாக நந்தினி சொன்னதுமே தமக்குள்ளிருக்கும் ஆவலை அடக்கிக் கொண்ட பெருமழைப்புலவர், “சரியம்மா! நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்! ஏதேனும் வேண்டுமானால் கூப்பிடு! நான் வெளியில்தான் இருப்பேன்” என்று அழுத்தமாகச் சொல்லி அங்கிருந்து வெளியில் வந்தார்.

     அவரையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வை ஒன்று நினைப்பு மற்றொன்று! இரண்டுமே இரு வேறு முறையில் இயங்கிக் கொண்டிருந்தன.

     ‘ஐயையோ! அடைக்கலம் கொடுத்த அருங்கவிப் புலவர் மனம் வேதனைப் படும்படியாகப் பேசிவிட்டோமே!’ என்று அவளது உள் மனம் எண்ணிக் கசிந்தது. அப்போது வெளியிலிருந்து கேட்ட புதுக்குரலால் தன்னுடைய மனச் சலனத்தை அமுக்கிவிட்டுக் கொண்டாள்.

     “அப்படியா? இப்போது அவன் எங்கிருக்கிறான்?” - கவிஞர் கேட்டார்.

     “பாதாளச் சிறையில்.”

     “இவ்வளவு சீக்கிரத்தில் அழுந்தூருக்கு அழைத்துப் போகப்பட்டு விட்டதா?”

     “இல்லை, பெரும! இழுத்துப் போகப்பட்டது. அவன் இதயத்தை நொதுமலராக்கி இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது!” -செவ்வரளிப் பூவைப் போல் சொற்களை இறைத்தான்.

     ‘ஊம்’ கூட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்த கவிஞர் “சாது ரூபத்தில் சதிகாரன்! சமணர் கோலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் சத்ருவின் சங்காரம்! இல்லையா?” என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தார்.

     “ஆம் பெரும! செம்பியன் குணம் புரியாத செந்நாயின் வாலாட்டம்! சென்னியின் திறன் காணாத ஒருவனின் முரட்டுச் செயல். அதுவும் எதற்காக- யாருக்காக? நந்த வம்சத்து நங்கையைக் காக்கும் பொறுப்பை ஏற்ற ஒரே ஒரு குற்றத்துக்காக! அதர்மம் தர்மத்தை அழித்துவிடக் கூடாது என்ற பெருந்தன்மைக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் அபசகுனக் காட்சி. இல்லையா?”

     “நீ சொல்வது அத்தனையும் உண்மை. எதையுமே மறுத்துச் சொல்வதற்கு இல்லை. அப்படியென்றால் இனிமேலும் இந்த இடத்தில் நந்தினி இருப்பது நல்லதில்லை அல்லவா?”

     “அப்படித்தான் கருதுகிறேன். எந்த ஓர் ஒற்றனாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக நம் நாட்டு எல்லைக்குள் அடியெடுத்து வைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அந்த உண்மையைப் பொய்யாக்கும் வகையிலே வந்துள்ள இந்த ஒருவனே சிறந்த எடுத்துக்காட்டு. எனவே உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு இங்கிருக்கும் நங்கையை அனுப்பி வைப்பதுதான் நல்லது.”

     “உபதலைவனே! நீ என்ன நினைக்கிறாயோ அதையேதான் நானும் இப்போது நினைக்கிறேன். சரி, இன்றிரவு நீ இங்கு வந்து நந்தினியை அழைத்துச் செல். ஒருவார காலத்துக்குள் நான் அங்கு வந்து விடுகிறேன்” என்றதுமே இடைமறிப்பது போல அவன் கேட்டான்.

     “ஐயனே! இப்போது படைத்தலைவர் எங்கு போயிருக்கிறார் என்பது தெரியுமா?”

     “அதுதான் எனக்கும் தெரியவில்லை. யார் யாரையோ கேட்டுப் பார்க்கிறேன். ஒருவரிடமிருந்தும் ஒழுங்கான பதிலைப் பெற முடியவில்லை. ஏன், அழுந்தூருக்கு வரவில்லையா?”

     “இல்லை... ஒற்றனைத்தான் ஏவலாட்களுடன் அனுப்பி வைத்திருக்கிறார். அநேகமாக இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தில்தான் அவர் இருக்க வேண்டும்!”

     உபதலைவன் சொன்னதை ஆமோதிப்பது போல் தலையசைத்த கவிஞர், “சரி, இனி நீ செய்ய இருப்பது என்ன?” என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் மிதப்பவர் போல் கேட்டார்.

     “சங்கமத்துறைக்குச் சென்று வடதிசைக் கலம் எப்போது வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டு வந்துவிட்டால் வேறு பணி இல்லை...”

     “அப்படியானால் உடன் புறப்படு! இன்றைய இரவுக்குள் இங்கிருந்து நந்தினியை அழைத்துச் செல். நான் ஒருவார காலத்துக்குள் அழுந்தூருக்கு வந்து விடுகிறேன்!” என்றதுமே அவன் விடைபெற்றுத் திரும்பி நடக்கலானான்.

     காலணியின் மிடுக்கான ஓசை, காரிகையின் காதுகளில் சிறிது நேரமே ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஓசையின் அடிச்சுவடு குறையக் குறைய ஏதோ ஒரு கிலியிலிருந்து தான் விடுபட்டுவிட்டது போன்ற மெல்லிய உணர்வு மனத்தடாகத்தில் எழுந்து அமுங்கியது.

     கெட்ட கனவில் நல்ல நினைவு! கொஞ்சம் கொஞ்சமாகத் தன் எண்ணத்தை வடதிசைப் பக்கம் திருப்பி வைத்தாள். கங்கைக் கரையிலே கொலு வீற்றிருக்கும் கொற்றவன் குடியிருப்பை அவளது கனவுலகம் முதன் முதலாகச் சந்தித்தது.

     பாடலிபுரத்தில் ஆழப் பதிந்திருக்கும் சாணக்கியனைச் சந்திப்பதற்கு முன்னதாக அவன் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தை நினைவுக்குக் கொண்டு வந்தாள். மாணிக்கக் கற்களால் உருவாக்கப்பட்ட புலிக்கண் சிம்மாசனத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கப் பார்க்க மெய் சிலிர்க்கப் பெற்றாள்.

     அந்த ஆசனத்தில் ஆதிகாலம் முதற்கொண்டு வீற்றிருந்த நந்தர்களையும், அவர்களது வீரப்பிரதாபங்களையும் அகரவரிசைப்படி எண்ணிப் பார்த்த மாத்திரத்தில் பளிச்சிட்ட புன்னகை, அந்தப் புகழ்மிக்க வரிசைக்குத் தொடர்ந்தாற்போல் கிடைத்து விட்ட தோல்வியை நினைத்துக் கொண்ட வேகத்தில் வெறுமையாக உருவெடுத்துக் கடுமையானது. சாணக்கியனின் இராஜதந்திரம், நந்த வம்சத்தை மட்டுமா அழித்தது? இல்லையே! முழுக்க முழுக்க சமண சமயத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனையுமல்லவா... தனக்கும் தன் கொள்கைக்கும் இரையாகச் செய்தது? அவன் கிழட்டு நரியாகி விட்டான். ஆனால் அவன் கிழித்த கோட்டை அவன் மகன் பிந்துசாரனும்தானே தாண்ட மறுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறான்!

     ‘பெண் பாவம் பொல்லாதது என்பதை வேதாகமம் உணராததா? இதற்கு நேர்மாறான சமணமும் கூட உயிரைக் கொல்லுதல் அல்லது சித்ரவதை புரிதல் கூடாதென்று அறிவிக்கிறதே! அப்படி இருந்தும் இப்படி ஏன் என்னையும் கூட உயிரோடு உலவவிட மறுக்கிறான்? நந்தர்களை ஆதரித்த நல்லவர் கூட பூமியில் நடமாடக் கூடாதென்று நினைக்கத் தலைப்பட்டு விட்டானா! இதனால்தான் தென்திசை மீதும் போர் தொடுக்கும் வேகம் பிறந்திருக்கிறதா?’ என்ற கேள்விக் குறியோடு திரும்பிவள், எதிரில் வந்து நிற்கும் திதியனைக் கண்டதும் சட்டென்று எழுந்திருக்கப் பார்த்தவள். அப்படி எழுந்து கொள்ள முடியாத பதைப்போடு மீண்டும் படுக்கையில் உடம்பைக் கிடத்தினாள்.

     நந்தினியை உற்றுக் கவனித்த திதியன், “இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்று உருக்கமுடன் கேட்டான்.

     அவள் பதில் சொல்ல மறுப்பது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

     “ஏன் நந்தினி! முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாய்? என் மீது கோபமா?”

     அவள் திரும்பவும் இல்லை; பேசவும் இல்லை; ஒயிலாக நெளிந்து, சரிந்திருந்த மேலாடையை சற்றே மூடிய வண்ணம் ஒடுங்கிப் படுத்தாள்.

     “நந்தினி! என்னைப் பார்ப்பதே தவறென்று கருதிவிட்டாயா அல்லது கவிஞரின் சொற்படி நடக்க முற்பட்டு விட்டாயா?” என்று கொஞ்சம் இரக்கம் தோய்ந்த தொனியில் கேட்டதும் முகத்தை சற்றே திருப்பிய நந்தினி, ஏதோ ஓர் உரிமையைத்தான் பெற்றிருப்பது போன்ற குரலில், “இத்தனை நாட்கள் எங்கு போயிருந்தீர்கள்?!” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

     “ஓகோ!” என்ற வண்ணம் களுக்கென்று நகைத்தபடி அவளுக்கு நெருக்கமாய் வந்த திதியன், “நந்தினி! சோழ வளநாட்டுக்கு சுமை தாங்கிக் கல்லாக இருப்பவன் நான். நேர்முக - எதிர்முக - மறைமுக எதிரிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டுமல்ல, உன் போன்றவர்க்கு வரும் இடையூறையும் களைந்தெறியும் கடமையை ஏற்றுக் கொண்டிருப்பவன். செருபகை உண்டாவதைச் செம்பியன் மாத்திரமல்ல, அவன் வழித் தோன்றல் சென்னியனும் விரும்புவதில்லை. அதனால்தான் உன்னிடம் எதையுமே சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டேன். இனி போவதாய் இருந்தால் உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் போவேன். சரிதானே!”

     “ஊம்.. நான் சொல்ல என்ன இருக்கிறது? இங்கு நானொரு அடைக்கலப் பொருள்தானே?”

     “இல்லை நந்தினி! அப்படியில்லை. அருங்கவிப் புலவருக்கு அன்புப் பொருளாக - ஆட்சிக்கு மாட்சி சேர்க்கும் பணியை மேற்கொண்டிருக்கும் எனக்கு ஆராதனைப் பொருளாக - ஊராள் வேந்தனின் உள்ளத்துக்கு இரக்கப் பொருளாக இருப்பவள் நீ.”

     “வர்ணனை வளர்கிறதே!”

     “உன் வதனத்தைப் பார்த்த போதே நானும் ஒரு கவிஞனாகிவிட்டேன் நந்தினி! முன்பொரு தடவை பாடலிபுர முற்றத்திலே உன்னை முற்றுகையிட்டேன். அன்றே நீ என்னை வென்றுவிட்டாய். நன்றாக நினைவிருக்கிறது... ஆமாம்... காரிருட்டை விரட்டும் தீப்பிழம்புகளுக்கு மையத்தில் ஒளிப்பிழம்பான உன்னை நான் சந்தித்தேன். அதுவும் நேர்முகமாக அல்ல; மறைமுகமாக! இரக்கமில்லாத அரக்கர்கள் உன்னை இழுத்துச் செல்லும் கொடுமையையும், கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்ல முடியாமல் கோவெனக் கதறி அழுத அந்தக் கதறலையும் இந்தத் திதியன் என்றுமே மறக்கமாட்டான். ‘நந்தினியா நீ! தனநந்தனின் தவப்புதல்வியா நீ? இந்தச் சொந்த பந்தமெல்லாம் இன்னும் ஓரிரு நாழிகை வரையிலும்தான்!’ என்று சொல்லி அவர்கள் சிரித்த சிரிப்பு இப்போது கூட என் மானசீக மனமேடையில் கேட்கிறது. அதன் பிறகுதான் நீ யார் என்பதைப் புரிந்து கொண்டேன். உன்னை எப்படியாவது அரக்கர்களிடமிருந்து காப்பாற்றித் தீர வேண்டுமென்ற முடிவோடு அவர்களோடு போராடினேன். உனக்கு நினைவிருக்கிறதா?”

     “அந்த நினைவு இல்லையென்றால் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேனே! உங்களைச் சந்திப்பதற்கு முன்பு சாகும் முடிவுக்கு வந்திருந்தவள் நான். நானாகத்தான் அவர்களிடம் சிக்கினேன். இனி நாம் யாருக்காக ஒளிந்து வாழ வேண்டுமென்று என்னை நானே கேட்டுக் கொண்ட போது ஏற்பட்ட சூன்யத்தால்தான் வலிய சென்ற அரசாங்க ஏவலாளரிடம் என்னை நானே ஒப்பைடைத்துக் கொண்டேன். ஆனால் அந்தக் காட்டுப் பாதையில் உங்களைச் சந்தித்துவிட்ட பிறகு, ஏனோ தெரியவில்லை. வாழும் ஆசை வளர்ந்துவிட்டது! எப்படியாவது என் உயிரை நானே காப்பாற்றி உங்கள் திருவடிகளில் ஒப்படைக்க வேண்டுமென்று உறுதி பூண்டேன். அதற்காக நான் ஏற்ற சோதனை கொஞ்சமா? அனுபவித்த சித்ரவதை அளவிட்டுக் கூறக் கூடியதா?”

     “என்னால் மறுக்க முடியுமா? அந்த நாளை மறக்க முடியுமா? உன்னை நினைத்ததால் என்னையும் என் நிலைமையையும் நானே மறந்து நாற்பது பேர்களை எதிர்த்துப் போராடிய அந்த இரவை மறக்க முடியுமா?” என்றதுமே சத்தமற்ற கண்ணீரைக் கன்னத்தின் வழியாக ஓடவிடலானாள்.

     இதைக் கண்டு துணுக்குற்ற திதியன், “நந்தினி! எதற்காக இப்போது அழுகிறாய்?” என்று கலவரக் குரலில் துரிதமுடன் வினவினான்.

     அவள் அழுகுரலில் நிறுத்தி நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்:

     “தெய்வமே! அந்தக் கொடியவர் அனைவரும் உங்களைப் பிடித்து இழுத்துச் சென்ற காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதனால்தான்!” என்றதுமே குபுக்கென்று சிரித்துவிட்டான். அவனது அலட்சியச் சிரிப்பைக் கேட்டு வெட்கமுற்ற நந்தினி, “எதற்கு இந்த நகையொலி?” என்றாள்.

     “பகைவர் நெஞ்சை வண்டு போல் துளைத்துக் கொண்டு வெளியில் வந்த வேகத்தை எண்ணிப் பார்த்ததால் என்னையும் மீறி சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு உன்னைத் தேடி அலைந்தேனே. அந்த நாட்களை வெறும் நாட்களாக என்னால் நினைக்க முடியவில்லை நந்தினி! உன்னை மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையை முழுக்க முழுக்க இழந்து விட்டிருந்தேன்” என்று பழைய நினைவலையில் மிதந்து கொண்டிருந்த திதியன், இருந்தாற் போலிருந்து கவிஞர் நினைவு மேலெழவே, “அது சரி நந்தினி! கவிஞர் எங்கே?” என்றான். அப்போதுதான் அவளுக்கும் கவிஞருடைய ஞாபகம் வந்தது.

     “இங்குதானே இருந்தார்! ஏன், நீங்கள் வரும் போது வெளியில் இல்லையா?”

     “யாருமே இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே திகிலடைந்த மனத்தோடு வெளியில் வந்தவன், “ஐயா, ஐயா!” என்று அழைத்த வண்ணம் சுற்றும் முற்றும் பார்க்கலானான்.

     “வெளியில் நின்று யாருடனோ... பேசிக்கொண்டிருந்தாரே!” என்று கூறியவாறே உள்ளிருந்து வெளியில் வந்தாள் நந்தினி.

     “யாரது? நீ பார்த்தாயா?” - அவள் பக்கமாகத் திரும்பிக் கேட்ட முதல் கேள்வி இது.

     “இருவரும் பேசிக் கொண்டிருந்த பேச்சிலிருந்து வந்தவர் உபதலைவரென்று தெரிகிறது. அவர்கூட எனக்குள்ள சூழ்நிலையைப் பற்றித்தான் கவிஞரிடம் பேசினார். எப்படியாவது இன்றிரவே என்னை அழுந்தூருக்கு அழைத்துப் போகப் போவதாகவும் கூறினார்” என்றதுமே இடைமறித்துக் கேட்டான் அவன்:

     “எதற்காகவாம்?”

     “இங்கு வடநாட்டு ஒற்றர்களின் ஊடுருவல் அதிகமாக இருப்பது போல் கவிஞர் சொன்னதுதான் காரணம்!”

     “நீ சொல்வது உண்மையானால் இங்கு அவன் இருக்க வேண்டுமே!”

     “அதென்னவோ எனக்குத் தெரியாது. அவர்கள் பேசியது அரைகுறையாகத்தான் எனக்குக் கேட்டது!” என்று அவள் சொன்னதும், ‘ஊம்’ கூட்டியவாறு திரும்பிய திதியன் நிமிர்ந்து பார்த்தான்.

     திருநீற்றுப் பதிகத்தோடு கவிஞர் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே தன் மனத்தில் எரிந்து கொண்டிருந்த பயத்தீ அமுங்கிவிட்டது போன்ற பெருமிதத்தோடு அவரை உற்றுப் பார்க்கலானான்.

     “என்ன திதியா! சொல்லாமல் செய்வது பெரியோர்க்கு அழகு என்பார்கள். உனக்கும் அதுதான் இலக்கணமோ?” - குத்தலாகக் கேட்ட வண்ணம் அவனுக்கு அருகில் வந்தவர் நந்தினியைப் பார்க்காமல் பார்த்தார்.

     இதற்கு அவன், “மன்னிக்க வேண்டும். சங்கமத் துறையை நோக்கி அவசரமாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால்தான் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டேன்” என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டான். இந்தப் பதிலையும் நந்தினியின் கயல்விழி இரண்டையும் பார்த்தவாறுதான் மொழிந்தான்.

     மயக்கும் விழிகளால் மதுவுண்ட வண்டு போல் கிடக்கும் திதியனின் மனக்கிடக்கையைப் புரிந்து கொண்டும் புரியாதவர் போல், “திதியா! நீ சொல்லிக் கொள்ளாமல் போனது பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஆனால் பயங்கரச் சூழ்நிலையில் எங்கள் இருவரையும் அனாதைகளாக்கிவிட்டுப் போனாயே, அது பற்றி நினைக்கும் போது தான் வருத்தம் மேலிடுகிறது. போகட்டும். இனி நீ நந்தினியை என்ன செய்யப் போவதாக விருப்பம்?” என்று சிலேடையாகப் கேட்டார்.

     இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதிலிறுக்க முடியாமல் தடுமாறினான். மடக்கல் அலங்கார இலக்கணத்தில் மேதையல்லவா அவர். அவருடைய கருத்துக்குப் பதில் கூறுவதென்பது அவ்வளவு எளிதான காரியமா, என்ன?

     “ஏன், தடுமாறுகிறாய் திதியா! உன்னைத் திகைக்க வைக்கும் கேள்வி ஒன்றும் நான் கேட்டுவிடவில்லையே! அவளுக்குரிய பாதுகாப்பான இடத்துக்கு என்ன செய்யப் போகிறாய் என்றுதானே கேட்டேன்...” என்று நீட்டி முழக்கிப் பெருங்குன்றூர்க் கிழார் சொன்னதும், அவரது புதிரை அவரே விடுவித்துக் காட்டும் பாங்கை நினைத்த வண்ணம் அவரது நெற்றிச் சுருக்கங்களை அளவிட்டவாறு நெட்டுயிர்த்துப் பேசினான்:

     “தமிழ்த் தெய்வமே! பாதுகாப்புக்கு இங்குள்ள உபதலைவன் படையிலிட்ட பிறகு என்னை ஏன் வீணாகச் சோதனைக்கு ஆளாக்குகிறீர்கள்?” என்று அவன் திருப்பிக் கேட்டதுமே கவிஞரின் பார்வை காரிகையின் மீது விழுந்து எழுந்து வந்தது.

     அவள் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்ன கால் நகத்தால் பூமாதேவியின் பூதவுடலைக் கீறிக் கொண்டிருந்தாள். இருவரது ஆற்றல் திறனுக்கும் அறிவுத் திறனுக்குமிடையே பளிச்சிடும் நம்பிக்கை ஒளியை மானசீகமாகக் கண்டு வழிபட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

     திதியனின் திரண்ட தோள்களை உற்சாகத்தோடு உலுக்கிவிட்ட கவிஞர், “ஊம்... நீ சோழர் படைத்தலைவனல்லவா! உன்னிடத்தில் யார்தான் பேசி ஜெயிக்க முடியும்? நீ சொன்னது உண்மைதான். இன்றிரவு வந்து நந்தினியை அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டுச் சங்கமத் துறைக்குச் சென்றிருக்கிறார் உபதலைவர்! காற்று வேகத்தில் வந்து, மின்னல் வேகத்தில் மறைந்துவிட்ட உபதலைவன் தந்து சென்ற உறுதியின் பேரில்தான் நந்தினியை இங்கு தனிமையில் விட்டுச் செல்லும் தைரியம் எனக்குள் பூத்தது. சரிதானே!” என்று சொல்லிவிட்டு அவனது படர்ந்த முகத்தை ஊடுருவினார். இப்போது அவன் எந்தவித தயக்கத்துக்கும் இடமின்றி சரளமாகப் பேசத் துவங்கினான்.

     “ஐயனே! சரியான முடிவுதான்... அங்கதன் என் தேகத்தில் ஓர் அங்கம் போன்றவன். அவன் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நன்மைக்கு முடிசூட்டுவதாகவே இருக்கும். அவனோடு நந்தினியை அனுப்பி வைப்பதில் அட்டியில்லை. ஆனால் இங்கு நடந்து முடிந்த சம்பவங்களில் ஒன்றுகூட மன்னர் மன்னருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே அவர் அனைத்தையும் அறிந்து கொள்ளவும், நந்தினியை அடையாளம் தெரிந்து கொள்ளவும் செய்வதற்கு ஒருவர் தேவையல்லவா!” என்றதுமே குறுக்கிட்ட கவிஞர், “சுற்றி வளைப்பது எதற்கு? நந்தினியோடு என்னையும் போகச் சொல்கிறாய்! அவ்வளவுதானே?” என்றதும் பயச் சிரிப்பொன்று திதியனின் முகத்தில் மலர்ந்த வேகத்தில் மறைந்தது. இப்போது அவனுக்குப் பேச வாய் வரவில்லை. என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறிய நிலையில் கைகளைப் பிசைந்து கொள்ளலானான்.

     இதுவரையில் குளத்துப் பூவாக இருந்த நந்தினி, இப்போது, உவகைப் பூவாகி மணம் வீச ஆரம்பித்தாள்.

     “ஆம் ஐயனே! பாதுகாப்புக்கும் ஒரு பாதுகாப்பு தேவையென்று கருதுகிறாரோ என்னவோ!”

     நந்தினியின் கேள்வி ரூபத்தில் அடங்கி இருந்த விடையை வெகுவாக இரசித்த பெருங்குன்றூர்க் கிழார், “பரவாயில்லையே! உனக்கு இருக்கும் தைரியம் கூடத் திதியனுக்கு இல்லையே!” என்று நமட்டுச் சிரிப்புடன் சொல்லிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம், “சரி, நானும் இன்றே அழுந்தூருக்குப் புறப்படுகிறேன்!” என்றார்.

     அதற்கு அவன், “அப்படி நான் உங்களுக்குக் கட்டளையிடும் அளவுக்குத் தகுதிமிக்கவனல்ல. ஆனால் உங்களைவிடச் சிறந்த பாதுகாப்பு நந்தினிக்குக் கிடையாது. மௌரியர் மனக்குகைக்குள் அடைபட்டிருக்கும் செய்தியை யார் மூலம் அறிந்தீர்களோ? அது எனக்குத் தெரியாது. அப்படிக் கிடைத்த மாத்திரத்தில் இங்கிருக்கும் வீரர்களை அங்கு அனுப்பி வைத்து மீட்டுக் கொண்டு வரச் செய்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு நந்தினியின் மீது அளவு கடந்த பற்று வைத்திருக்கும் உங்களோடு அவள் இருப்பதுதான் சரி. நான் இன்றைக்கே கங்கைக் கரையை நோக்கிச் செல்லத் தீர்மானித்து விட்டேன்” என்றதுமே இடை மறித்தார் கவிஞர்.

     “ஏன்... எதற்கு இந்த அவசரப் பயணம்?”

     “அங்கே கூடும் பகை மேகத்தை அலைக்கழிக்க; அருந்தமிழ் நாட்டின் அறவழியை, அகம்புறம் மூலமாக ஆணவக்காரர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு வர, வீணான ஆசையால் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கத் துணிந்து விட்ட பாடலிபுரத்துப் பைத்தியக்காரர்களுக்குப் பாடம் புகட்டி வர, சாணக்கியனின் சூட்சமத்துக்குச் சமாதி எழுப்பிட; பிந்துசாரனின் நெஞ்சிலே உருவாகி இருக்கும் கருவைப் புலிநகத்தால் சிதைத்துப் புதியதொரு சரிதையை அங்கு தெறிக்கும் இரத்தத்தால் இற்று விழும் எலும்புத் துண்டால் உருவாக்க!” என்று, இதுவரையிலும் தனக்குள் தேக்கி வைத்திருந்த குமுறலை வெடிப்புறச் செய்தான்.

     திதியனின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுப் பூரித்துப் போன கவிஞர், “வீரனே! என் விழி நிறைந்தவனே! உன் களப்பாட்டு கேட்டு மலைத்துப் போனேன். வீரத்தை விலை கேட்டுப் பெற முடியுமா என்ன? அழுந்தூர்வேள் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வனே! காரணம் அறியக் கவிஞன் நான் ஆசைப்படுகிறேன். பகை முகத்தைப் பந்தாக்கி, நகை முழக்கத்தை நெருப்புக்கு இரையாக்கி, உறையூர் உறைவிடத்துக்கு மேலும் புகழ் சேர்க்கத் துணிந்திருக்கும் உனது எண்ணத்துக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!” என்றதும் அவன் வடதிசையைப் பார்த்துச் சொன்னான்:

     “விஷநாகத்தின் வேலை ஆரம்பமாகிவிட்டது. ஐயனே! சோணை நதிக் கரையிலே சுருண்டு கிடக்கும் பிந்துசாரன், தென் திசையை நோக்கித் திரும்பி இருப்பதாகச் செய்தி. கிழட்டு நரியின் உளறல் மொழிக்கு உத்தரம் சமைத்து விட்டிருக்கும் பிந்துசாரன் நம் மீது படையெடுக்கும் நினைப்போடு ஒவ்வொரு காரியத்தையும் நிகழ்த்தி வருகிறானாம்!”

     “திதியா! நீ நம்புகிறாயா?”

     “வடதிசை ஒற்றரின் நடமாட்டம் ஒன்று போதாதா? திசை மாறி வந்து, என்னைத் தீர்த்துக் கட்ட முடியாமல் போகவே சிங்கமுகன் தம்பியின் ஆவியைத் துறக்கச் செய்த துரோகியின் வேலை எதைக் காட்டுகிறது? அதுதான் போகட்டும். அடுத்து நிகழ்ந்ததென்ன? நந்தினியைத் தீர்த்துக் கட்டும் வேலை! அதுவும் பொழுது புலர்ந்த மறுநாழிகையிலேயே இந்தக் கொடுமை. இது மட்டுமல்ல ஐயனே! இதனைத் தொடர்ந்தாற் போல் எத்தனையோ விஷமத்தனங்கள் கண்ணுக்கு மறைவாக கருத்துக்குப் புறம்பாக நடந்துவிட்டிருக்கின்றன. ஆகவே இத்தனைக்கும் மூலகாரணமாக விளங்குபவர் யாரென்பதை அறிந்து வரும் பணியை இப்போது மேற்கொண்டிருக்கிறேன். நீங்கள் அழுந்தூருக்குச் சென்றதும் இறைவனைச் சந்தித்து என் இதயத்தைச் சொல்லுங்கள்; அன்புச் சகோதரி அமுதவல்லியைக் கண்டு நான் சென்றிருப்பதற்கான அடிப்படைக் காரணத்தைக் கூறுங்கள். சீக்கிரமே திரும்பி விடுகிறேன்” என்று குழைவோடு கூறிவிட்டுக் கனிவுடன் அவர் முகத்தைப் பார்த்தான்.

     எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கவிஞர். “புலிப்பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தும் வலிமை எனக்கில்லை. போய் வா! ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் எச்சரிக்கையாக இரு. மணித்தமிழர் மாமூலனாரைச் சந்திக்க மறந்துவிடாதே! உணர்ச்சிவயப்பட்டு அவர்களிடம் சிக்கிக் கொள்ளாதே! இப்போது உன்னிடம் நான் வழங்குவது சசிப்புத்தன்மை என்ற ஆயுதம் ஒன்றைத்தான். அந்த ஆயுதத்தின் மூலம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திரும்பி வா! சரி! சரி! நந்தினியோடு பேசிக் கொண்டிரு! இதோ வந்து விடுகிறேன்!” என்று ஒரு போக்காகச் சொல்லிவிட்டுக் குடிலுக்குள் நுழைந்தார்.

     நந்தினியின் பக்கமாக விழிகளைத் திருப்பிய திதியன் “போய் வரட்டுமா?” என்று முற்றிலும் மாறுபட்ட தொனியில் விடை கேட்டான்.

     அவள் கொஞ்சமும் தயங்காமல், “ஊம்... தொடக்கத்துக்கு முடிவுண்டு; அது போல் முடிவுக்குத் தொடக்கம் உண்டாவதில்லையே, நான் என்ன செய்ய?” என்று திருப்பிக் கேட்டாள்.

     அதன் உட்பொருளைப் புரிந்து கொண்ட திதியன். “நந்தினி! நாட்டுக்கு ஒரு கேடு வருகிறதென்று தெரிந்துவிட்ட பிறகு எந்த வீரனும் வாய் பொத்தி மௌனமாய் இருப்பதில்லை என்பதை நீ அறியமாட்டாயா? நவநந்தர்களின் வம்சத்தைப் பூண்டோடு அழித்து விட்டோமென்ற பூரிப்பில், தென்னகத்தின் மீது படையெடுத்து வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் அங்கு நடந்து வருகிறதாமே. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட எந்த மனம்தான் அமைதியாக இருக்க முடியும்?” என்று அவள் முகத்தை நேர் செய்து பார்த்துக் கேட்டான்.

     “அப்படியே இருந்தாலும் நீங்கள் அங்கு தனிமையில் சென்று என்ன செய்யப் போகிறீர்கள்?”

     “செய்யப் போவது ஒன்றுமில்லை; ஆனால் அவர்கள் செய்து வரும் சூழ்ச்சி என்னென்னவென்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமல்லவா!”

     “இதற்கு நீங்கள் போக வேண்டிய அவசியமொன்றும் இல்லையே! அங்கு சென்றிருக்கும் சிங்கமுகன் ஒருவரே போதுமே!”

     “மறுக்கவில்லை நந்தினி! ஆனால் பாடலிபுர அரண்மனைக்குள் இருப்பவர்களில் ஒரு சிலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். அவர்களை நேரில் கண்டு விசாரித்தால்தான் உண்மை என்னவென்பது தெளிவாகத் தெரிய முடியும். அதற்காகத்தான் நானே புறப்பட்டுப் போகத் தீர்மானித்தேன்!” என்றதும் கயல் விழிக் குளத்தில் நீர் நிறைந்தது.

     அதைக் கண்டு பதைத்துப் போன திதியன், “நந்தினி, விழியைக் குளமாக்கி நான் செல்லப் போகும் வழியை இருட்டாக்கிக் காண்பிக்காதே! கயல் விழியைக் கலங்கரை விளக்காக்கி என் பயணத்தில் வெற்றி கிடைக்க வழி செய். நான் காதலிப்பது உன்னை மட்டுமல்ல, இந்த மண்ணையும்தான்! இதற்கொரு களங்கம் ஏற்படுமென்றால் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க என்னால் முடியாது. ஆனால் ஒன்று. நான் கேள்விப்பட்டது அத்தனையும் உண்மையாக இருக்குமானால் மௌரிய சாம்ராஜ்யம் மண்மேடாவது திண்ணம். வரட்டுமா?”

     அவள் தடுமாறிய குரலில், “போய் வாருங்கள்!” என்று சொல்லி முடிப்பதற்குள் உள்ளிருந்து வெருட்டென்று வெளியில் வந்த கவிஞர், தாம் கொண்டு வந்த ஓலைச் சுருளொன்றை அவன் முன் நீட்டி, “திதியா! இதை மாமூலனாரிடம் சேர்த்துவிடு, புறப்படு!” என்றார்.

     அதை வாங்கிய மறுகணமே தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்ட திதியன் கவிஞரிடமும், அவருக்குக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த நந்தினியிடமும் விடைபெற்றுக் கொண்டு வெண்ணிறப் புரவியின் மீது ஏறி வடதிசை நோக்கிப் புறப்பட்டான்.

     வெகுநேரமாகியும் அவன் போன திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியை அழைத்த கவிஞர், அவள் வந்த புதிதில் தம்மிடம் தந்திருந்த பூநாகப் பேழையை எடுத்துக் காட்டி, “இதற்கொரு முடிவு ஏற்பட வேண்டாமா? அதற்காகத்தான் கங்கைக் கரையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். வா, உள்ளே வா!” என்றார்.

     ஊம்... முற்றிய காதலாய் இருந்தால் பரவாயில்லை; இது முதல் காதல்தானே! ஏக்கமும் துக்கமும் இரண்டறக் கலந்து புரள்வது சகஜம்தானே! எனவே அவர் வற்புறுத்தி அழைத்தும் அவள்தான் விழிகளைத் திருப்பாமல் அவன் போன வழியையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள்.