![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 9. மூடுபனி விலகியது! வேங்கடத்துக்கு வடக்கில் இருப்பது வடுக நாடு. அங்கு வாழ்பவரை, ‘வடுகர்’ என்று அழைப்பது பழைய மரபு. நல்ல உயரமும், படர்ந்த முகமும், வாளிப்பான தேகமும், கொடூரமான தோற்றமும் உள்ள அவர்களைக் காணும் எவரும் அச்சப்படாமல் இருக்க முடியாது. முரட்டுத்தனமான சுபாவமுள்ள அவர்களை, ‘காட்டு மனிதர்கள்!’ என்று கூடச் சொல்வார்கள். அப்படிப்பட்ட மூர்க்கத்தனமான மனிதர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு விரைவாக, மிகமிக மூர்க்கமாக வந்து கொண்டிருந்தான் சோழர் படைத்தலைவன். எந்த வழியாகப் போகிறோமென்பதைப் பற்றிச் சிறுதுளியும் பொருட்படுத்தவில்லை அவன். வழி எதுவாய் இருந்தாலென்ன! தப்பித்ததே போதுமென்ற நினைப்போடு குதிரையைச் செலுத்தி வரலானான். அடிக்கொரு தடவை திரும்பிப் பார்க்கத் தவறவில்லை. பின் தொடர்ந்து யாரேனும் வருகிறார்களா என்ற மன அரிப்பின் காரணமாக அப்படிப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். குன்றுகளென்ன, மலைச்சரிவுகளென்ன, பயங்கரமான பள்ளத்தாக்குகளென்ன- எல்லாவற்றையுமே துச்சமாக எண்ணி வந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னே அதாவது, கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் சிவிகை ஒன்று பளிச்சிட்டது. மேற்கு வானிலே சரிந்து சாய்ந்து கொண்டிருக்கும் தேய் நிலவின் சூட்சம வெளிச்சத்தில் சிவிகையைப் பார்த்த திதியன், அப்போது ஏற்பட்ட ஒருவித சந்தேகத்தின் காரணமாக குதிரையை நிறுத்திய வேகத்தில் கீழே குதித்தான். தான் இறங்கிய இடத்துக்குப் பக்கமாய் அடர்ந்து செறிந்து கிடக்கும் ஆலவிருட்சத்தை நோக்கிச் சென்று, அதன் நிழலில் நின்று, வரும் சிவிகையை உற்றுக் கவனித்தான். ‘மனித நடமாட்டத்துக்குச் சிறிதும் இடமில்லாத பாதையில், அதுவும் இந்த வேளையில் சிவிகையில் வருவது யாராய் இருக்கும்? வடுகருக்கு வேண்டியவர் வருகிறாரா அல்லது வம்ப மோரியரைச் சேர்ந்த முக்கியஸ்தர் யாரேனும் அதில் அமர்ந்து வருவதாய் இருக்குமா?’ கற்பனைக் கணக்கு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சிவிகை நெருங்கி வரவர திதியனின் பார்வையில் கவனிப்பு கூடியது. சிவிகைக்கு முன்னும் பின்னுமாக வரும் மனிதர்களைக் கண்டான். அவர்கள் கைகளில் ஈட்டிகளும், இடையில் உடைவாளும் இருப்பதைப் பார்த்த திதியனின் உள்ளத்தில் வம்ப மோரியரே வலுத்தனர். ‘வருபவர் வேறு யாருமல்லர்; வம்ப மோரியரைச் சேர்ந்தவர்களே’ என்றும் தனக்குள்ளே தானே செய்து கொண்ட முடிவின் காரணமாக மேலும் பின்னுக்குப் போகலானான். தன் குதிரையையும் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். கண்களை நாலாப் பக்கங்களிலும் சுழலவிட்டான். எங்கு பார்த்தாலும் ஒரே விதமான காட்சி. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தென்னை மரங்கள். காற்றின் உத்வேகத்தால் ‘உஸ்’ என்னும் சப்தம். முன்பின் அறியாத இடம்! மனிதத் தலைகளுக்குச் சுற்றுப்புறங்களில் கொஞ்சமும் இடமில்லை. அப்படியென்றால் மரநிழலில், அதுவும், கும்மிருட்டில் இருக்கும் திதியன் பயப்படாமல் என்ன செய்ய முடியும்? எதிர்நோக்கி வரும் எந்தத் தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை அவனுக்கு உண்டு. அதற்குத் துளியும் இடமில்லாத வனாந்தரப் பாதையில் நடுங்கித்தானே ஆக வேண்டும்? மெய்சிலிர்க்க, தான் இருக்கும் இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் ஆட்களையும் சிவிகையையும் திரும்பிப் பார்த்து நிம்மதிப் பெருமூச்செறிந்தான். ஏதோ ஒரு பயங்கரத்திலிருந்து தான் தப்பிவிட்டதாக எண்ணி தனக்குப் பக்கமாய் இருந்த புரவியை இலேசாகத் தடவிக் கொடுத்தான். குதிரையின் கனைப்பொலி... அதுவும் தொடர்ந்தாற்போல மூன்று முறை கனைப்புக் குரல் கொடுத்தது. அதனுடைய இந்தச் செயல் அவனைப் பெரிதும் கதிகலங்க வைத்தது. சிவிகையைக் கீழே இறக்கி வைத்த சுமை தாங்கி ஆட்களுடன் திரும்பி வரும் வீரர்களைப் பார்த்துப் பதறிப் போனான். அந்தப் பதறலிலும் ஒரு விதமான வறட்டுத் துணிச்சல் தாண்டவமாடாமல் இல்லை. வருகின்ற வீரர்களைக் காணும் கண்களாலேயே சிவிகையை உற்றுக் கவனித்தான். திரைச்சீலையால் முழுக்க முழுக்க மூடப்பட்டிருந்த சிவிகையிலிருந்து யாருமே வெளிப்படவில்லை. இது அவனுக்கு வியப்பாகவே இருந்தது. வீரர்கள் நெருங்கிவிட்டனர். அவர்களது வருகை நெருக்கமானதும் அவனது நெஞ்சில் ஒருவிதமான கிலி புகுந்தது. குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்த வண்ணம் மேலும் மரநிழலில் ஒதுங்கலானான். சடை முடிகளாய்த் தொங்கும் ஆலம் விழுதுகளுக்குள் அவன் ஒதுங்கி இருந்ததால் அங்கு வந்த வீரர்கள் உதட்டினைப் பிதுக்கியவாறு சிவிகையை நோக்கித் திரும்பி நடக்கலானார்கள். அப்போது அவர்கள் பேசிக் கொண்டு போவது அவன் காதுகளில் தெளிவாகவே விழுந்தது. “மாயமாய் இருக்கிறதே! கனைப்பொலி கேட்ட அளவுக்குக் குதிரையைக் காண முடியவில்லையே! இதற்குள் அது எங்கு போய் இருக்கும்? இல்லை; அதன் மேல் வந்தவன் இதற்குள் எங்கு மறைந்துவிட்டிருப்பான்?” - இது ஒருவனின் சந்தேகக் கணை. “நம்முடைய நினைப்பே நமது பிழைப்பைக் கெடுக்கிறது. உன்னுடைய காதுகளில் கேட்ட சத்தம் நிஜமாயிருக்குமானால் நம் கண்களுக்கு அந்தச் சத்தத்துக்குரிய குதிரை தெரியாமல் இருக்க முடியாது. வா சீக்கிரம்! பொழுது புலர்வதற்குள் வடுகர் இருக்கைக்குப் போயாக வேண்டும்.” - அவனுக்கு உதவியாக வந்தவன் வகுத்த வார்த்தைகள். நால்வரில் இருவர் பேசியதையும், சிவிகைக்கு முன்னும் பின்னுமாக அவர்கள் போவதையும் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்த திதியன், அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த பலத்த பெருமூச்சை இலேசாக விட்ட வண்ணம் ‘ஊம்’ கூட்டினான். திதியனின் பார்வை திரும்பவில்லை. அவனது சிந்தனையும் சிவிகையின் மீதே பொருந்தி இருந்தது. மங்கிய நிலா வெளிச்சத்தில் மறையும் சிவிகையைக் கவனிக்கும் அதே வேளையில் தன் குதிரை கனைக்கும் சத்தத்தையும் கேட்டான். இப்போது அதன் சத்தத்தைக் கேட்கும் அளவுக்கு அவர்கள் அருகில் இல்லை. நீண்ட தூரம் போய்விட்டார்கள். மிகப் பெரிய விம்மலுடன் பார்வையை இறக்கித் திருப்பிய திதியன், தன் குதிரையைச் செல்லமாகத் தடவிக் கொடுத்த வண்ணம், “என்னை நீ எதிரிக்குக் காட்டிக் கொடுக்கப் பார்த்தாயே! உன்னை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?” என்று கூறிக் கொண்டே வெளிச்சத்துக்கு அழைத்து வந்தவன், அதன் மீது ஏறி உட்கார்ந்தபடி, “இப்படித்தான் உன்னை வேலை வாங்க வேண்டும். புறப்படு!” என்றபடி கடிவாளத்தை உலுக்கிவிட்டான். குதிரை சளைக்கவில்லை. நாலுகால் பாய்ச்சலில் நிலத்தை மிதித்துத் துவைத்த வண்ணம் புறப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஒரே சூன்யம்! கண்ணுக்குப் படுவதெல்லாம் மொட்டை மரங்கள் - வெட்ட வெளிகள் - வானத்தைத் தொட்டும் தொடாமல் இருக்கும் சிறிய, பெரிய குன்றுகள் - அங்கொன்று இங்கொன்றாக சப்பாத்திப் புதர்கள்; இவை தவிர வேறு எதுவும் அவனது விழிகளுக்குப் பிரத்யட்சமாகவில்லை. திதியனுக்குப் பாதையைக் கடந்து செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவித அச்சம் குடியேறியது. துணை என்பது எவ்வளவு தூரத்துக்குப் பின் தொடர்ந்து வரும்? தேய்நிலவின் மிகமிகச் சன்னமான வெளிச்சத்தில் யாருடைய துணையுமின்றிப் பிரயாணத்தை நடத்துவதென்பது அவ்வளவு சுலபமான விஷயமல்லவே! அதுவும் ஒரு எதிரியின் நாட்டை வேவு பார்க்கும் நோக்கத்தோடு வந்து கொண்டிருக்கும் போது தேவையில்லாத பயமும் அர்த்தமில்லாத கற்பனையும் பிறப்பது இயற்கைதானே! தனக்குள் ஏற்பட்ட பயத்தை தானே போக்கிக் கொள்வதற்காக வலிய எதை எதையோ வருவித்துக் கொள்ளலானான். எதனாலும் வழிப்பயம் போகாததால் நந்தினியை வலிய வரவழைத்துப் பார்க்கலானான். காதல் பயமறியாதது மட்டுமல்ல, பயத்தைப் போக்க வல்லதும் கூட! இந்தச் சூட்சம யுக்தியின் காரணமாக அவளை முதன் முதலாகக் கண்டது முதற்கொண்டு விடை கொடுத்து அனுப்பியது வரையில் முறையாக நினைத்துப் பார்த்த மாத்திரத்தில் பயத்தீ அணைந்தது. பிறகு வடுகர் இருக்கையில் சந்தித்த தமிழணங்கை நினைத்துக் கொண்டான். இதனால் ஏற்பட்ட புதிய சங்கடத்துக்கு பரிகாரம் காண முடியாதவனாகி மனக் குழப்பம் அடைந்தான். அதே சமயத்தில் அந்தக் குழப்பத்தைப் போக்கி அதிர்ச்சியை உண்டாக்கும் சத்தமொன்று அவனது செவியைத் தீண்டியது. குதிரையை நிதானப்படுத்திய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தான். மேற்றிசையில் நிலவு சாய்ந்து விட்டிருந்ததால் காணும் திசையெங்கும் காரிருள் கவ்விக் கொண்டிருந்தது. அவனது பார்வையில் யாருமே சிக்கவில்லை. ‘உஸ்’ என்று வந்து காதளவில் அலைமோதிக் கொண்டிருந்த காற்றினூடே வந்த சொற்கள் அவனை குதிரையை நிறுத்திக் கவனிக்கச் செய்துவிட்டன. திதியன் பார்த்துக் கொண்டிருந்த நேர் வடக்கில், ஒரு கல் தூரத்தில் ஒரு பாழடைந்த மாளிகையிலிருந்து அந்தச் சொற்கள் அக்கினி ரூபத்தில் வந்து கொண்டிருந்தன. “கொடியவனே! கொடும் பாம்பும் நெஞ்சிரங்கும். புலவர் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவா... முகமூடி அணிந்து கொண்டிருக்கிறாய்? காவிரிப்பூம்பட்டினத்துக் கவிஞருக்கு, கங்கைக் கரையில் வாழ்பவர் முடிவு கட்டப் பார்ப்பதா? அதை நான் அறிந்த பிறகும் பேசாமல் இருப்பதா? ஊம்... சீக்கிரம் சொல்! அவரை எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்?” இந்த வார்த்தைகள் முழுமையாக அல்ல; அரை குறையாகத்தான் அவனது செவிகளில் விழுந்தன. உடனே, அவனது சிந்தனை, வழியில் கண்ட சிவிகையின் மீதும், அதோடு போன வீரர்கள் மீதும் பாய்ந்தது. ‘அடடா! தயங்கி நின்றது தவறாகிவிட்டதே! இல்லையென்றால் தமிழ்நாட்டுக் கவிஞரை அவர்களிடமிருந்து மிகச் சுலபமாக மீட்டுவிட்டிருக்கலாமே!’ என்று வருந்திய வண்ணம் அங்கேயே நின்றிருக்கவில்லை. குரல் கேட்கும் திசையின் பக்கமாகக் குதிரையைத் திருப்பி வேக வேகமாகச் செலுத்தினான். “கதறிப் பயனில்லை... உண்மையைச் சொல்ல மறுப்பாயானால் உன் உயிரை நீ இழப்பது திண்ணம். இன்னமும் இரக்கம் காட்டுகிறேன். என் இதயத்தைப் புரிந்து கொண்டு இப்போதாவது சொல். ஊம்!” இந்த அதட்டல் குரலைக் கேட்டுக் கொண்டே குதிரையைச் செலுத்தி வந்ததால் வழியில் இருக்கும் சரிவுகளைக் காணாதது போலவே பயங்கரப் பள்ளத்தையும் அவன் காணவில்லை. ஆனால் அவன் காணாததைக் குதிரை கண்டுவிட்டதால் இறக்கிய முன்னங்கால்களை மேலுக்கு உயர்த்திய அதே துரிதத்தில் தாவியது. இதனால் உண்டான திடீர் சிலிர்ப்பால் நினைவைத் திருப்பிய திதியன், தன் பார்வையைச் சற்றே பின்னுக்குத் திருப்பித் தாழ்த்திப் பார்த்தான். ‘அடேயப்பா! எவ்வளவு பெரிய பள்ளம். இந்தப் பள்ளத்தில் விழுந்துவிட்டிருந்தால் எலும்புகூட கிடைத்திருக்க முடியாதே! கணநேரத்துக்குள் எத்துணை பெரிய ஆபத்திலிருந்து தெய்வாதீனமாகப் பிழைத்து விட்டிருக்கிறோம்!’ நினைவைப் புரட்டிய அதே கணத்தில் விழிகளைத் திருப்பினான். தன் குதிரையைப் பார்த்தான். அது தன் வேகத்திலிருந்து சிறிதளவும் பின் வாங்கவில்லை. அதன் திறனை மனத்தால் வியந்து, தனக்குள் தானாகப் புன் முறுவலித்தான். அதே சமயத்தில்... கொஞ்ச நேரத்துக்கு முன்னதாக அதைப் பற்றித் தான் சொன்னதை நினைத்து வருந்தினான். இதனால் அவன் மாளிகையைக் கடந்து ஒரு பத்தடி முன்னோக்கிப் போய்விட்டான். நல்லவேளையாக மனிதச் சத்தம் பெரிதாகக் கேட்கவே விழிப்பைப் பெற்ற துரிதத்தில் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் பின்னுக்கு வரலானான். அதுவரையில் மாளிகையின் முன் வாசலில் நின்றிருந்த ஒருவர் இப்போது திரும்பி வருபவனை முன்னிலும் பன்மடங்கு அக்கறைத் தன்மையுடன் கவனிக்கலானார். ‘போர்வையால் உடம்பு முழுவதையும் மூடிக் கொண்டு இருட்டோடு இருட்டாக நிற்பவர் இவர் யார்?’ குதிரையிலிருந்து சரேலெனக் குதித்து வந்த திதியனின் தடுமாற்ற நினைப்பு இதுதான். உறையிலிருந்து வாளை உருவிக் கொண்டே, “யார் நீ?” என்பதற்குள், “திதியா!” என்றார் அவர். அவன் வெலவெலத்துப் போனான். இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. எடுத்த வாளை தொப்பென்று உறைக்குள் போட்டுவிட்டுக் கைகளைக் குவித்தவாறு, “தெய்வமே! என்னை மன்னித்துவிடுங்கள்” என்று நடுங்கிய குரலில் தெரிவித்துக் கொண்டான். அவனது தோள்களைப் பற்றி அன்னவர். “திதியா! உன் திறமையைப் பாராட்டுகிறேன். எங்கே என் குரலைக் கண்டுபிடிக்காமல் தலை சீவிவிடுவாயோ என்று பயந்தேன். பரவாயில்லை.. இன்னமும் என் ஆயுளுக்கு அழிவுக்காலம் வரவில்லை” என்று சத்தமற்ற குரலில் சொல்லிவிட்டு அடங்கிச் சிரித்தார். “அழிவா! அதுவும் என் கையாலா! அது இந்த யுகத்தில் மட்டுமல்ல, எந்த யுகத்திலுமே ஏற்பட முடியாத ஒன்று!” என்று கொஞ்சம் கனத்த குரலில் சொன்ன திதியனின் வாயைப் பொத்தி, “ஆ...! சத்தம் போடாதே! மெதுவாக நடந்து சென்று மேலே நடப்பதைக் கவனி!” என்று அவர் சொன்னதும், “உங்களைத் தனிமையில் விட்டுவிட்டா?” என்று இடைமறித்தான் திதியன். அதற்கு அவர் சிரித்தபடி, “திதியா! அந்தக் கவலை உனக்கு வேண்டாம். தனிமை என்பது எனக்கு நிலாச்சோறு போன்றது. தெரிகிறதா? எந்தக் காரணத்தை முன்னிட்டும் நான் இங்கு இருப்பதை மேலே தெரிவிக்க வேண்டாம். நீ திரும்பி வந்ததும் விவரமாகச் சொல்கிறேன். போய் வா!” என்று மீண்டும் அவனது தோள்களைச் செல்லமாக உலுக்கிவிட்டார். “சரி, வருகிறேன்!” என்றபடி மேல் மாடியை நோக்கிப் படிகளில் ஏறினான்; இரண்டொரு படிகளில் தடுக்கி விழப் பார்த்தான். அந்த இருட்டில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உள்ளம் பதைபதைத்தது. ‘பார்த்துப் போ!’ என்று சொல்ல வாயெடுத்தவர் சட்டென்று ஊமையானார். எந்தக் காலத்துக் கட்டடமோ? யார் கட்டி வைத்ததோ! ஆள் அரவம் இல்லாத இந்த வனாந்தரப் பாதையில் இப்படியொரு கட்டடத்தை ஒருவன் கட்டி வைத்திருக்கிறானென்றால் விஷயம் ஏதும் இல்லாமல் இருக்க முடியுமா? வம்ப வடுகர் கோலோச்சிய காலத்தில் அவர்களால் எழுப்பப்பட்ட மாளிகை இது. நெருக்கடி காலத்திலோ, அவசரம் ஏற்படுகின்ற சமயத்திலோ இங்கு வந்து அடைக்கலப்படுவது அவர்களது வழக்கம். ஆனால் முழு நிலவு தேய் பிறையானதும் சோழர்களின் குடியிருப்பானது. இதை அவர்கள் வடுகரைப் போல் பயன்படுத்தவில்லை. வரும் எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் ஆறலைக் கள்வரைப் போல் இங்கிருந்து கொண்டு எதிரியைத் தாக்கவே உபயோகித்தனர். அவர்கள் வாழ்வு சரிந்து அஸ்தமனத்தைப் பெற்றதும் கோரிக்கையற்றுப் போன மாளிகையில் கோட்டான்களும் வௌவால்களும் கொடிச்சிப் பறவைகளும் குத்தகை எடுத்துக் கொண்டன. இதனால் யாருடைய கவனிப்புமின்றி வெய்யிலில் வதங்கி, மழையில் நனைந்து காற்றில் சிதைந்து பாழடைந்து இருந்ததால் மிகவும் எச்சரிக்கையுடன் மேலே செல்ல வேண்டி இருந்தது. முன் காலையும் பின் காலையும் மெதுவாகத் தூக்கி வைத்து மேலே வந்த திதியன், நன்றாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவுக்குப் பின்னால் நின்றான். அடிப்பவனோ, அடிபடுபவனோ அவனைக் காணவில்லை. மங்கலாக எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு தீவர்த்தி வெளிச்சத்தில் நடப்பதைக் கவனித்தான். “நீ சொல்லமாட்டாய்... நானும் உன்னைவிடப் போவதில்லை” என்று சொல்லிக் கொண்டே சாட்டையை நோக்கிய சோழ நாட்டு ஒற்றன், “நிறுத்து” என்று குரல் கேட்ட மாத்திரத்தில், “யாரது?” என்று திரும்பினான். அப்படித் திரும்பிய சீக்கிரத்தில் வந்திருப்பவர் யாரென்பதை உணர்ந்து கொண்ட அன்னவன், ஏதோ சொல்ல வாயசைப்பதற்குள் அவனுக்குக் கண் ஜாடை புரிந்த திதியன், “உனக்கு என்ன நெஞ்சத் துணிவு? ஒருவனைக் கம்பத்தில் கட்டிப் போட்டுவிட்டு அடிப்பது வெட்கமாய் இல்லை?” என்று அடிப்பவன் மேல் அனுதாபம் காட்டுவது போல் பேசியதும், சோழ நாட்டு ஒற்றன், தன்னுடைய தானைத் தலைவனின் மாறுபட்ட பேச்சைப் புரிந்து கொண்டு தலை கவிழ்ந்தான். ஏதோ பயவுணர்ச்சி வந்துவிட்டவன் போல், “என்னை மன்னித்து விட்டுவிடுங்கள். ஓடிப் போகிறேன். மீண்டும் இந்தத் திசைப் பக்கம் திரும்பவே மாட்டேன்!” என்று நடுங்கிய குரலில் தெரிவித்தான். “ஒழிந்துபோ! அடைக்கலம் கேட்பவனின் ஆவியைப் போக்கும் வாள் என்னிடமில்லை. ஓடிப்போ!” என்று அதே முடுக்கான குரலில் திதியன் சொன்னதும் அவன் ஓடுவது போல் வெளியேறி கதவின் ஓரமாய் ஒளிந்து கொண்டான். “அடடா! எப்படி நொறுக்கித் தள்ளி இருக்கிறான்!” என்று சொல்லிக் கொண்டே கயிறை அவிழ்த்து விட்டான். புத்துயிர் பெற்றவன் போல் விழித்த அவன், திதியனை ஏற இறங்கப் பார்த்த வண்ணம், “நல்ல சமயத்தில் வந்து என் உயிரைக் காப்பாற்றிய நீங்கள் யார்?” என்று அடிக்குரலில் வினவினான். “நானா! உங்களுக்குப் பாதுகாப்புக் கேடயமாய் வந்து கொண்டிருந்தவன். அதிருக்கட்டும் எதிரியினிடத்தில் எப்படிச் சிக்கினாய்? சிவிகையிலிருந்து ஆள் தப்பவில்லையே!” - மிகவும் கனிவோடு கேட்ட வண்ணம் அவனது தோள்பட்டையைத் தடவினான் திதியன். திதியனின் சொல்லையும் செயலையும் நம்பிவிட்ட அவன், “அப்படியா! சிவிகைக்கு ஒன்றும் நேரவில்லை. இந்நேரமெல்லாம் வடுகர் இருப்பிடத்துக்கு நெருக்கமாகப் போய்க் கொண்டிருக்கும். அவர்களுக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த என்னைத்தான் எதிரி வளைத்துப் பிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டான்!” என்றான். “அவனிடத்தில் நம்முடைய இரகசியம் ஏதேனும் சொல்லிவிட்டாயா?” “சொல்லி இருந்தால் இந்த மரண அவஸ்தை எனக்கு ஏன் நேரிடப் போகிறது? ஒன்றும் சொல்லவில்லை. பொழுது விடிவதற்குள் தமிழ்நாட்டுக் கவிஞரான சேந்தன் கொற்றனாரின் பொழுது முடிந்துவிடும்” என்று சொல்லிச் சிரிக்க முடியாமல் சிரித்தான். புலவரின் பெயரைச் சொன்னதும் திதியனுக்குத் தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது. காரணம், மாளிகை வாசலில் கண்டது அவரைத்தான்! இதனால் தடுமாற்றமடைந்த மறுகணமே வலிய மேலுக்குச் சிரித்த திதியன், “சபாஷ்! உன்னைப் போல் நன்றியுடன் பாடுபடும் வீரரைத்தான் நாடு எதிர்பார்க்கிறது. சரி, இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்றான். அவன் தன் கை- கால்களை உதறிவிட்டுக் கொண்டே, “சிவிகை போன திசையை நோக்கிப் போகத்தான் நினைக்கிறேன்...” என்பதற்குள் மேலே வந்துவிட்ட கவிஞர், “நினைப்பை மாற்றிக் கொள்!” என்றபடி அவனுக்கு எதிரே வந்து நின்றார். கவிஞரைக் கண்டதும் கதிகலங்கிப் போனான் அவன். இப்போது நாம் பார்ப்பது சிவிகையில் அடைபட்டு இருந்தவரையா அல்லது வேறு யாரையாவதா? திதியன் கடகடவென்று நகைத்தான். அந்த நகைப்பொலியில் பங்கேற்றபடி அங்கு வந்த ஒற்றன், தன் எதிரியைப் பார்த்த விழிகளை அப்படியே திருப்பித் திதியனைக் கண்டவன், “எங்கள் தலைவரே! முள்ளை - முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். இன்று அந்த உண்மைப் பொருளை நேராகவே கண்டுவிட்டேன்!” என்றபடி மீண்டும் அவன் பக்கமாய் திரும்பி, “கொஞ்சு தமிழ்ப் புலவரைக் கொத்த நினைத்த கொடும் பாம்பே! இனியும் உன்னை விட்டு வைப்பதில் இலாபமில்லை” என்றபடி அவனது கழுத்தை நெரிக்கப் போனவன் கவிஞரின் குரல் கேட்ட மாத்திரத்தில் சற்றே விலகி வந்தான். “ஒற்றரே! அவனை ஒன்றும் செய்ய வேண்டாம். நேராக சோழ நாட்டுக்கு இழுத்துச் செல்லுங்கள். இவன் அங்கிருக்கட்டும். நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்!” சேந்தன் கொற்றனாரின் சொற்களுக்குச் செவிமடுத்த ஒற்றன், சோழவள நாட்டுப் படைத்தலைவனின் உத்தரவை எதிர்பார்ப்பது போல் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவனது பார்வை உணர்த்தும் கருத்தைப் புரிந்து கொண்ட திதியன், “ஒற்றரே! அவரது விருப்பப்படியே இவனை இழுத்துச் செல்லுங்கள். என்னைக் கண்டதாக யாரிடமும் சொல்ல வேண்டாம். போய் வா!” என்றதுமே இருவரையும் பார்த்து வணங்கிய மறுகணமே ஒடுங்கி நின்றிருந்த எதிரியின் கையைப் பிடித்து இழுத்துச் செல்லலானான். அப்போது திதியன் அவனது பயணத்தைத் தடுத்து நிறுத்துவது போல் கேட்டான். “ஆமாம்... நீ போக குதிரை இருக்கிறதா?” அவன் திரும்பி வந்து, “இவன் ஏறி வந்த குதிரை இருக்கிறது” என்றான். “அப்படியென்றால் சரி!” என்று கூறி அனுப்பிவிட்டுப் புலவரின் பக்கமாய் விழிகளைச் சாய்த்தவன், “ஐயனே! தாங்கள் சிவிகையிலிருந்து எப்படித் தப்பினீர்கள்? நான் வரும் வழியில் அந்தச் சிவிகையைக் கண்டேன். அதென்னவோ தெரியவில்லை. இடைமறித்துப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் துளியும் வரவில்லை!” என்றதும் சொன்னார் அவர். “நல்லவேலை செய்தாய். சிவிகைக்கு முன்னும் பின்னுமாகச் செல்பவர்கள், கோசர் மரபைச் சேர்ந்தவர்கள். முரடர்கள். எதைச் செய்யவும் தயங்காதவர்கள்.” “அப்படிப்பட்ட முரடர்களிடம் தாங்கள் தப்பித்த விதம்?” “அதிருக்கட்டும். நீ எங்கு இவ்வழியாக வந்திருக்கிறாய்? மாமன்னர் எப்படி இருக்கிறார்?” - கேட்டுக் கொண்டே சரிந்து சாய்ந்திருந்த ஒரு தூணின் மேல் சென்று உட்கார்ந்தார். “மாமன்னர் நலமுடன் இருக்கிறார். மோரியர் நிலையை அறியவும், அவர்களது சூழ்ச்சி முறைகளைக் கண்டறிந்து வரவும் புறப்பட்டு வந்தேன்.” “நீ போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?” “பாடலிபுரத்தின் புதிய நடவடிக்கை எதுவும் புரியாததால் வந்தேன். தாங்கள் அறிந்ததைச் சொன்னால் இப்படியே திரும்பிவிட நான் தயார்!” இவ்விதமாக அவன் உறுதி பளிச்சிடும் குரலில் அழுத்தமாகச் சொன்னதும், அங்கு எரிந்து கொண்டிருக்கும் தீவர்த்தியின் சன்னமான வெளிச்சத்தில் அவனது முகத்தை ஊடுருவிய வண்ணம் அவர் சொன்னார்: “சோழர் படைத்தலைவனே! தென்னகத்தின் மீது படையெடுப்பதற்கான முடிவு அங்கு உதயமாகிவிட்டது. அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன் வீசிய ஆசை வலையில் சிக்கிவிட்ட பிந்துசாரன், தன்னுடைய படைகளைத் திரட்டுவதற்கும், அதற்கான வழியைச் செப்பனிடுவதற்கும் ஆயத்தமாகிவிட்டான்.” “அப்படியா?” “ஆம் திதியா! ஆனால் உடனடியாக அவன் தென்திசை நோக்கி வந்துவிட முடியாது. தடுக்கும் குன்றுகளைத் தரை மட்டமாக்க வேண்டும். மறைக்கும் கணவாய்களைப் புதைத்துத் தீர வேண்டும். மேடு - பள்ளங்களைச் சரி செய்ய வேண்டும். அதன் பிறகு தான் அவன் தன் படைகளைக் கிளப்ப முடியும். இதற்கான பணிகளில் பல்லாயிரக் கணக்கான மோரியர்கள் இறங்கி விட்டார்கள். வடுகரையும் கோசரையும் வளைத்துவிட்ட மமதையோடு பிந்துசாரன் அலைந்து கொண்டிருக்கிறான். சூது - வாது தெரியாத பிந்துசாரன் சூறாவளிக் காற்றில் சிக்கிவிட்டான். பாடலிபுரத்தின் நெடுங்கதவு மூடப்பட்டுவிட்டது. பாடலிபுரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு. சந்தேகப்பட்டவரை விசாரிப்பது கூடக் கிடையாது; தீர்த்துக் கட்டிவிடுவதே தன் வேலையாக இருக்கிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமை அங்கு இருப்பதால்தான் நீ போக வேண்டாம் என்கிறேன்” என்றதும் அவசரக் குரலில் குறுக்கிட்டுக் கேட்டான் திதியன்: “அப்படியென்றால் அங்கிருக்கும் மாமூலனார் கதி?” “அவரைப் பொருத்தவரையில் எந்தவித ஆபத்தும் ஏற்படுத்துவதற்கு வழி கிடையாது. பிந்துசாரன் இதயத்திலே தமிழறிவை ஏற்றி வைத்தவர் அவர்.” “இருக்கலாம். அந்த நல்லுறவை வேரறுக்கும் விஷநாகம் பக்கத்திலேயே இருக்கிறதே!” “அந்த ஆலகால விஷத்தையும் அமுதாக மாற்றும் வல்லமை அவருக்கு உண்டு. கிழட்டு நரியின் விஷப்பற்கள் ஒன்றும் செய்துவிட முடியாது. கௌடில்யனின் முதுமைக் காலம் முடிவடையப் போகும் தருணம். எனவே அவனது கடைசிக்கால உளறலை நாம் பெரிதுபடுத்திப் பார்க்கத் தேவையில்லை. என்றாலும் பிந்துசாரனின் அவசர நடவடிக்கைகளை மாமன்னருக்குத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இப்போதே இப்படியே புறப்படு!” என்றதும், அதுவரையிலும் அவர் சொன்னதையெல்லாம் உன்னிப்போடு கேட்டுக் கொண்டிருந்த திதியன், தான் புறப்பட்டு வந்ததற்கான அடிப்படைக் காரணங்களையும், வழியில் நேரிட்ட விபத்துகளையும், அங்கயற்கண்ணியைப் பற்றியும் முறையாக ஒப்படைத்துவிட்டு அவரது கருத்தை அறியும் நோக்கத்தோடு அவரது முகத்தைப் பார்த்தான். எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்செறிந்த பெருமழைப் புலவர், “சரி, இந்த விஷயமெல்லாம் மாமன்னருக்குத் தெரியுமா?” என்றார். “பெருங்குன்றூர்க் கிழார் ஒருவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அவர் இருக்கையில்தான் இப்போது நந்தினி இருக்கிறாள்.” “ஊம்... நந்த வம்சத்து கடைசி நங்கை. பூநாகம் தீண்டப்பெற்று இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது அவள் என்னைப் போன்ற ஒரு கவிஞரின் இருக்கையில் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வடநாட்டு யாத்திரையை முடித்துவிட்ட நான், தற்போது வடுகரின் இருப்பிடத்தைச் சந்திக்கப் புறப்படுகிறேன்” என்றதும் குறுக்கிட்டான் திதியன்: “என்ன, என்ன! வடுகர் இருக்கையை நோக்கியா? வேண்டாம். தங்களைக் கண்டால் தீர்த்துக் கட்டிவிடுவார்கள்!” இதைக் கேட்டுக் கலகலவென்று நகைத்த சேந்தன் கொற்றனார், “என்னை அவர்கள் தீர்த்துக் கட்டுவதா? திதியா! அந்தக் கவலை உனக்குத் தேவை இல்லை. நீ சொன்ன நங்கையை மீட்கவே அங்கு நான் செல்கிறேன். மேலும் அவள் அங்கு இருப்பாளானால் அவளது உயிருக்கு ஆபத்து வந்தாலும் வரலாம். துளுவ நாட்டு மன்னன் நன்னன் என்ன பாடுபடுகிறானோ! ஊடுருவலில் கைதேர்ந்த வடுகரால் அவன் தன் மகளைப் பிரிந்து எப்படியெல்லாம் அலைமோதிக் கொண்டிருக்கிறானோ! அவன் துயரை முதலில் துடைத்தாக வேண்டும். அதற்காக மாறுவேடத்தில் அங்கு செல்ல இருக்கிறேன். தமிழ் மண்ணை நேசிக்கிறவரைக் கொண்டே தமிழர்களைச் சாய்க்கும் புத்தியைப் பெற்றிருக்கும் வடுகரையும் கோசரையும் முதலில் வீழ்த்தியாக வேண்டும்...” என்று சொல்லிக் கொண்டே பாழடைந்து கிடக்கும் பலகணியின் மூலமாக வெட்டவெளியைப் பார்த்தார். வைகறைப் பொழுதுக்கு வெற்றி மாலை சூடும் கீழ்த்திசை வானத்தை வெறிக்கப் பார்த்துவிட்டு, “திதியா! பொழுது புலரும் தருணம் வந்துவிட்டது. நான் கொஞ்ச தூரம் வரையிலும் உன்னோடு வருகிறேன். நீ நம் நாட்டை அடைந்து, வருமுன் காக்கும் வழியை உண்டாக்கி வை. நான் சொன்னவற்றில் ஒன்றைக் கூட மறக்காமல் இளஞ்சேட்சென்னியிடம் சொல்லிவிடு. உன்னுடைய நேர்ப்பார்வையில் நந்தினி இருக்கட்டும். சோழ நாட்டுக்கு அவள் வந்திருக்கும் செய்தியை அங்குள்ள எதிரி நாட்டு ஒற்றர்கள் அறிந்து இருக்கலாம். அதனால் கூட படையெடுக்கும் நோக்கும் அவன் மனத்தில் ஏற்பட்டிருக்கலாம். எதற்கும் நாம் இருக்க வேண்டிய எச்சரிக்கையிலிருந்து மாறிவிடக் கூடாது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் பலத்த காவலும் கண்காணிப்பும் இருக்க வேண்டும். சந்தேகப்பட்டவரைச் சிறையில் அடைப்பது தவறொன்றுமில்லை” என்ற வண்ணம் எழுந்தவர், “திதியா! ஏன் ஒன்றுமே சொல்லாமல் உம்மென்று இருக்கிறாய்? என்னுடைய எண்ணம் உனக்குக் கசப்பாகத் தெரிகிறதா?” என்று குறுஞ்சிரிப்புடன் மொழிந்தார். “ஐயனே! கசப்பில் இருக்கும் நன்மை இனிப்பில் இருப்பதில்லை என்பதை நான் அறிவேன். அழுந்தூர் அரண்மனையில் தங்கியிருந்து எனக்கு அருந்தமிழ் கற்றுத் தந்த தங்களிடம் குறை காண முடியாதே! தங்களின் திருவுள்ளபடியே நடந்து கொள்வேன்!” “திதியா! நான் சொன்னதற்காக நீ உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. பாடலியில் நான் கண்டதை - கேட்டதைத்தான் நீயும் அறியப் போகிறாய். அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டுமல்ல, நீ அனுப்பியுள்ள சிங்கமுகனைத் தற்செயலாகச் சந்தித்தேன். அவன் ஒருவனே போதும் என்பதற்காகத்தான் உன்னைத் திரும்புமாறு கேட்டுக் கொண்டேன்!” என்றதும் அவன் இடைமறித்தான்: “சிங்கமுகனைக் கண்டீர்களா? என்ன சொன்னான்?” “அவன் சொல்ல என்ன இருக்கிறது! காவிரிப்பூம்பட்டினத்தின் கதையைத்தான் விளக்கமாகச் சொன்னான். விரைவில் திரும்பி விடுவதாகச் சொல்லிப் போனான்!” என்றபடி வெளிவாசலை நோக்கி நடக்கலானார். கவிஞர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொண்ட திதியன், அவர் சொன்ன விஷயங்களால் தனக்குள் ஏற்பட்டிருந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் பின்னே நடந்து வரலானான். கவிஞர் படிகளைக் கடப்பதில் கொஞ்சமும் தடுமாறவில்லை. பலமுறை ஏறி இறங்கிப் பழக்கப்பட்டிருந்தவரைப் போல் காணப்பட்ட அவரைக் கண்ட அவன் கேட்ட புதுக்கேள்வி இதுதான்: “ஐயா! இந்த மாளிகைக்கு ஏற்கெனவே தாங்கள் வந்திருக்கிறீர்களா என்ன?” அவர் தம் நடையை நிறுத்திச் சற்றே திரும்பிப் பார்த்து, “ஏன் இந்தத் திடீர் சந்தேகம்?” என்று கேட்டபடி திரும்பி நடக்கலானார். “தங்கள் நடையில் இருக்கும் தெளிவால்தான் அறிந்து கொள்ளக் கேட்டேன்!” “ஓகோ...! அப்படியா! பலமுறை வந்து இந்த மாளிகையில் தங்கியிருக்கிறேன். முதன் முதல் மோரியரால் அறிமுகப்படுத்தப்பட்ட மாளிகை இது. நான் வந்து பார்த்த போது இங்கே பாம்புகளும் பயங்கரப் பறவைகளும் வசித்துக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் அவர்களே அழித்து, இடத்தைச் சுத்தப்படுத்தி என்னிடம் ஒப்படைத்தார்கள். வம்ப மோரியர் பலருக்கு இங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்தேன். ஊம்... அது ஒரு காலத்தின் வளர்பிறை வெளிச்சம். அவசியம் ஏற்படும் போது அடியைத் தொழுவதும், அவசியம் நேராத போது முடியைப் பிடித்து உலுக்கி விடுவதும் சில மனிதர்களிடத்தில் இருக்கும் பிறவிக்குணம். அந்தக் குணத்தைப் பற்றி இப்போது நினைத்துப் பலன் என்ன?” என்று சோகப் பெருமூச்செறிய அவர் சொன்னதைக் கேட்டுப் பொருமினான் அவன். ‘நாட்டைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக நல்லவர்களையெல்லாம் பகைத்துக் கொள்ள முற்படுவதா? மனிதனை நோக்கி அழிவு வரும் போது அவன் மனம் எப்படியெல்லாம் மாறிவிடுகிறது!’ திதியனின் பிஞ்சு நெஞ்சிலே பூத்த இந்த மலர்கள் கவிஞரின் குரல் கேட்ட துரிதத்தில் உதிர்ந்து காற்றோடு காற்றாகப் பறந்து போய்விட்டன. “ஐயனே!” என்றபடி அவர் பக்கமாக வந்தான். அவர் கையில் இருக்கும் மூட்டையைக் கண்டு, “இதென்ன ஐயா?” என்றான். அப்போது அவனது விழிகள் அதிசயத்தால் மேலுக்கு உயர்ந்திருந்தன. அதற்குள் அவர் சிரித்துக் கொண்டே, “நாய் வேஷம் போட்டால் குரைத்துத் தானே ஆக வேண்டும். குதிரையைப் போல் கனைக்க முடியுமா என்ன?” என்றார். “அப்படியென்றால்...” “இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வடுகனாகிவிடுவேன். வா, போவோம்!” என்று அவனது கரத்தைப் பற்றினார். அப்போது அவனது சிறு விழிகளுக்கு அவர் ஒரு கவிஞராக மட்டும் தெரியவில்லை; மிகப் பெரிய ஆற்றலையெல்லாம் அடக்கி வைத்திருக்கும் மகா புருஷராகவே தென்பட்டார். இந்த அதிசய உணர்வோடு அவரைத் தொடர்ந்து நடக்கலானான். |