நாக நந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

8. தீப்பொறி கிளம்பியது!

     அந்திம மூட்டம் முடிந்து, முதலிரவின் சந்நிதானம் வெளிப்பட்டது. எங்கு பார்த்தாலும் தீவர்த்திகளின் சிரிப்புச் சத்தம்! தூரத்திலிருந்து யாரேனும் பார்ப்பார்களானால் அவர்களுக்கு ஓர் ஊரே தீப்பிடித்து எரிவது போன்ற உணர்வுதான் மேலெழும்.

     பகல் நேரம் முழுவதிலும் குடியானவரைப் போல் தெரிந்த ஒவ்வொருவரும் இப்போது வடுக வீரராகி வலம் வருவதைக் கண்ட திதியனின் நெஞ்சில் பகைப்புகை எழுந்தது.

     ‘தென்திசை மீது வடுகருக்கும் கோபமா? இந்தக் கோபத்தை உண்டாக்கியவர் யாராக இருப்பர்?’ என்று மேலெழுந்த வாரியாக நினைத்தானே தவிர, அதற்கு அவன் முக்கியத்துவம் கொடுத்துவிடவில்லை. எதிரில் தான் ஏறி வந்த புரவியைக் கட்டிப் போட்டுவிட்டு இருக்கும் போது வேறு யோசனைக்கு அவனால் எப்படிப் போக முடியும்?

     முன்னவனும் பின்னவனும் முறையாக உள்ளிருந்து வெளியில் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சாது ரூபத்தில் உட்கார்ந்தான் அவன்.

     “என்ன யாத்ரீகரே! இந்த இடம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” - கேட்டுக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான் முன்னவன்.

     இதைக் கேட்டு அலட்சியமாகச் சிரித்த திதியன், “ஊராளும் வேந்தனுக்கு உரியவனா நான்? எந்த இடமும் என் போன்றவர்க்குச் சிறந்த இடமே” என்றபடி இடது பக்கத்தில் வந்தமரும் பின்னவனைக் கண்டான். விடுவானா அவன்?

     “ஊம்... ராஜ மரியாதை பெற்ற யாத்ரீகராக இருந்தால் இப்படிப்பட்ட இடம் பிடிக்காதல்லவா, அதற்காகத்தான் என் நண்பர் கேட்டார். இல்லையா?”

     “எனக்கு இல்லாத அனுபவம்!”

     “அது சரி! இருக்கிற அனுபவத்தையாவது சொல்லலாம் அல்லவா?”

     “வீறு கொண்ட தமிழகத்தின் வெற்றித் திருமுகத்தைப் பேர் சிறக்கச் சொல்லவா?”

     “பொழுது கழிய வேண்டுமல்லவா! எதையாவது சொல், கேட்கிறோம்!” என்று எதிரில் இருக்கும் வெண் புரவியைப் பார்த்துக் கொண்டே சொன்னான் முன்னவன்.

     “நிலமளந்த பாண்டியனும், குலம் விளங்க முறை வகுத்து வாழும் சோழனும் தென்திசைக்கு இரண்டு விழிகள். வாழ்வளித்து வஞ்சிக்கும் வஞ்சம் அந்த இருவருக்கு இல்லை என்பது மட்டுமல்ல, அவன் கொற்றத்தின் கீழ் வாழும் குடியினரும் அறியாத ஒன்று!” என்றதுமே தடுத்து நிறுத்தினான் பின்னவன்.

     “போதும் உன் புகழாரம்.. இதைக் கேட்டுப் பொழுது போக்குவதைவிட படுக்கையில் படுத்துத் தூங்குவதே மேல்!”

     “ஏன், உங்களுக்கு நல்லதைக் கேட்டுப் பழக்கமில்லையா?” - குத்தலாகக் கேட்டான்.

     திதியனுக்குப் பதில் சொல்வதற்காக வாயெடுத்த முன்னவன், குதிரை வரும் ஓசை காதில் விழவே, சடக்கென்று எழுந்து வடதிசைப் பக்கமாக விழிகளைத் திருப்பினான்.

     அவனைப் போலவே பார்த்த பின்னவன், “வா, போவோம்!” என்று தன் சக வீரனுக்குச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு வேகவேகமாக நடக்கலானான்.

     திதியனின் நெஞ்சம் தடுமாறியது! தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக வலிய தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு, “அங்கயற்கண்ணி!” என்று ஒருமுறைக்கு இருமுறை அவசர அவசரமாக அழைத்தான்.

     அவன் அழைப்புக்குரிய அடிப்படைக் காரணத்தை யூகித்துக் கொண்ட அங்கயற்கண்ணி, குடிலுக்கு வெளியில் வந்து. “என்ன?” என்றாள்.

     “ஒன்றுமில்லை! யாரோ வரும் சத்தம் கேட்டதும் என்னைக் கூட பொருட்படுத்தாமல் விரைந்து போய்விட்டார்களே, வருவது யார்?”

     அதற்கு அவள், “உங்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருக்கிறது? வடுக வீரர்கள்தான் உங்களைச் சுற்றி இருக்கிறார்களே! அந்தத் தைரியத்தில்தான் தமக்குரிய தலைவரை நோக்கிப் போயிருக்கிறார்கள். போதுமா?” என்று குறும்புச் சிரிப்புடன் சொன்னாள்.

     அவன் எரிச்சலோடு, “நான் இதையெல்லாம் கேட்கவில்லை. வருபவன் யாரென்றுதான் கேட்டேன்” என்றான்.

     திதியனின் முகத்தில் கோபம் கொப்புளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அங்கயற்கண்ணி, தன் குரலைத் தாழ்த்தி, “அவன்தான் என்னை இங்கு அழைத்து வந்தவன். கோசர் தளபதியென்று கேள்வி!” என்றாள்.

     “அப்படியா! அவனா வருவது? சரி... இப்போதே அவனையும் இவர்களையும் தீர்த்துக் கட்டிவிட்டு வந்துவிடுகிறேன்” - சொல்லிக் கொண்டே வெருட்டென்று எழுந்து போகத் துணிந்தவனின் கையைப் பிடித்திழுத்த அங்கயற்கண்ணி, “அவசரப்படாதீர்கள்! இங்குள்ள ஒருவரைக்கூட உங்களால் கடந்து போக முடியாது. நிராயுதபாணியாக இருக்கின்ற நீங்கள், எரியீட்டிகளோடு நின்றிருக்கும் கொடியவர்களைக் கடந்து எப்படிப் போக முடியும்? ஆத்திரப்படாதீர்கள். இவர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். முதல் ஜாமம் வரும் வரையிலும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!” என்று கேட்டுக் கொண்டு அவனது கையைத் தளரவிட்ட சீக்கிரத்தில் உள்ளே போய்விட்டாள்.

     திதியனின் விழிகள் கொழுந்து விட்டெரியும் தீவர்த்திகளைப் பார்த்தன. பின்னர் திரும்பி வரும் இருவரையும் பார்த்தான். தன் இடைப்பட்டைக்குள் மறைந்திருக்கும் கட்டாரியை ஒருமுறை தடவிவிட்டுக் கொண்டான்.

     நெருங்கி வந்த இருவரில் முன்னவன் “என்ன, யாத்ரீகரே! ஏன் எழுந்து கொண்டீர்கள்? இன்னமும் பொழுது விடியவில்லையே!” என்று அலட்சியச் சிரிப்புடன் கேட்டபடி எதிரில் வந்து நின்றான்.

     அப்போது தன்னையும் மீறி பீறிட்டெழுந்த கோபத்தை அங்கயற்கண்ணி சொல்லிவிட்டுப் போனதை நினைத்து அமுக்கிவிட்டுக் கொண்டவன், “ஊம்... எவ்வளவு நேரமாகத்தான் உட்கார்ந்து கொண்டே இருக்க முடியும்?” என்று சொல்லிய வண்ணம் கைகளை உதறிவிட்டுக் கொண்டான்.

     “ஓகோ...! அப்படியா?” என்று சற்று அசட்டையாகச் சொல்லிக் கொண்டே குடிசைக்குள் நுழைந்த முன்னவனோடு பின்னவனும் அகங்காரச் சிரிப்போடு நுழைந்தான்.

     அலட்சியத்தையும் ஆணவத்தையும் கண்டு கேட்ட திதியன் தன்னை மறந்தானென்றே கூறவேண்டும். தனக்குள் ஏற்பட்ட திடீர் வேகத்தால் சடக்கென்று ஒளித்து வைத்திருந்த கட்டாரியைக் கையில் எடுத்துக் கொண்ட துரிதத்தில், எதிரில் கட்டிப் போடப்பட்டிருந்த புரவியை அவிழ்த்து, அதன் மீது சட்டென்று எறி உட்கார்ந்தான்.

     அப்போது உள்ளிருந்த இருவரும், “பிடியுங்கள்... பிடியுங்கள்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே ஓடி வந்தனர்.

     அந்தக் கூக்குரலைக் கேட்டுச் சுற்றிலுமிருந்த அனைவருமே எரியீட்டிகள் சகிதமாய் விரைந்து வருவதற்குள் மின்னல் வேகத்தில் புரவியைச் செலுத்தினான்.

     அவனை அழைத்து வந்த இருவரில் பின்னவன், கொப்புளித்து வந்த வெறியால் உறையிலிருந்த வாளை உருவிய வேகத்தில் திதியனை நோக்கி வீசினான். அது திதியனை நோக்கிச் சென்றதே தவிர, அவனைக் குத்தவில்லை. அதைத் தொடர்ந்தாற்போல் சரமாரியாக வந்து கொண்டே இருந்த எரியீட்டிகள் கணக்கிலடங்காது. ஒன்றுக்குக் கூட அவனோ அல்லது புரவியோ சேதமடையவில்லை.

     முன்னவனும் பின்னவனும் ஒருவரையொருவர் ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டனர். “எல்லாமே உன்னால்தான்?” என்று கறுவினான் பின்னவன்.

     “எங்கேயோ அவன் விட்டுவிட்டு வந்திருந்த குதிரையைப் பிடித்து வந்து அவனுக்கு எதிரில் கட்டிப் போட்டது நீயா- நானா?” முன்னவன் வார்த்தைகள் நெருப்புருவில் வெளியில் வந்து விழுந்தன.

     “என் மீது பழி சுமத்துகிறாயா? அவனைப் பற்றி நீ சொன்னதையெல்லாம் மறந்துவிட்டாயா? அவன் நல்லவனென்றும் யாத்ரீகனென்றும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தது யார்?”

     “அப்படிச் சொன்னதற்காக நீ ஒன்றும் அவனை விட்டுவிடவில்லையே! உன் திட்டத்துக்குக் குந்தகமாக இருக்கவில்லையே. அவனைத் தனிமையில் இருக்கச் செய்த நீ, இப்போது என் மீது வீண் பழி சுமத்துகிறாயே!”

     பின்னவன் பதிலிறுக்கவில்லை. ஓடிப்போன வேல் வீரர்கள் அனைவருமே ஒவ்வொருவராக வெறுங்கையோடு திரும்பி வருவதை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

     “ஏமாற்றத்தைக் காண்பதற்கு இத்தனை எடுபிடிகளா?” என்று தனக்குத் தானாக சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவன், எதிரில் வந்து நிற்பவரை உற்றுப் பார்த்து, “வெறுங்கையோடு திரும்பி வருவதற்குத்தான் அவ்வளவு ஆக்ரோஷத்தோடு விரைந்து போனீர்களா? சொத்தைகள்!” என்றான்.

     அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் எல்லோரையும் தள்ளிக் கொண்டு அவனுக்கு முன்னே வந்து நின்று, “இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர்கள்?” என்று சற்றே கோபக் குரலில் உதிர்த்தான்.

     “எதிர்த்தா... பேசுகிறாய்?” என்றபடி முன்கை பிடித்து ஆவேசத்தோடு முன்னே இழுத்துக் கொண்ட பின்னவன், மற்றொரு கையால் அவனை ஓங்கி அறைந்துவிட்டான்.

     அந்த அறை விழுந்த மறுகணமே அவனது சட்டையை ஆத்திரத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொண்ட அன்னவன், “என்னையா அடிக்கத் துணிந்துவிட்டாய்?” என்று கேட்டுக் கொண்டே அவனது குரல்வளையைப் பிடித்து அழுத்தலானான்.

     பின்னவன் படும் துயரைக் கண்ட முன்னவனும், அங்கிருந்த கூட்டத்தாரும் அழுத்தும் கைகளை விலக்கிவிட்டு அமைதிப்படுத்தினர்.

     “கொடியவனே! என்னைக் கொல்லவும் துணிந்துவிட்டாயா?” என்று அவனைப் பார்த்துச் சொன்னபடி சுற்றிலுமிருப்பவரைக் கண்டவன், “இதோ வருகிறேன்; இவனைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புயலுருவில் குடிலுக்குப் பக்கமாக இருக்கும் ஓர் இருட்டறைக்குள் புகுந்தான்.

     “நீ எதிர்த்துப் பேசலாமா? அவன் நமக்குப் பெரியவன் அல்லவா!” என்று ஒருவன் மட்டுமல்ல, அங்கிருந்த அத்தனை பேருமே இப்படித்தான் சொன்னார்கள். முன்னவன் ஒன்றும் மூச்சுவிடவில்லை. அவன் செய்தது சரி என்பது போலவே மௌனமாகக் கிடந்தான்.

     பதினெட்டு வயதுக்கேற்ற தோற்றம். கொஞ்சம் மாநிறம். ஆனாலும் வசீகரத்துக்கு குறைவில்லாத முகம். மடிப்பு கலையாத சுருள்மேக முடியழகு. இளமைப் பூங்காவில் பூத்த புத்தம் புதிய அரும்பு மீசை! போர்க்களப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தோள்கள். அவன் விழிகள் இரண்டும் வேல்கள். அந்த அசுரத்தனமான குண்டு விழிகளால் உபதேசம் செய்தவர்களை உதாசீனமாகப் பார்த்தவன், “நானென்ன அடங்கிக் கிடக்கும் ஆமையா? ஒடுங்கிக் கிடக்கக் கூடிய முயலா? தலைக்கனத்தால் தன் தவறுகளை உணர மறுக்கும் ஒருவனை நான் பெரியவனாகக் கொள்ளத் தயாராயில்லை. இதனால் இந்த இடத்திலேயே என் உயிர் பிரிவதாய் இருந்தாலும் கவலைப்படவில்லை. அவன் தன் தவறை - சொத்தை என்று சொன்ன சொல்லிலுள்ள பெருந்தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது அதனைக் கேட்டுக் கொண்டே வந்த பின்னவன், தான் கொண்டு வந்த சாட்டையை அவன் மீது வேகமாக வீசினான். அதைக் கண்டதும் சற்றே வளைந்து குனிந்த துரிதத்தில் சாட்டையை ஒரு கையில் தாவிப் பிடித்ததுமே அவனைச் சூழ்ந்திருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியுற்று விலகிக் கொண்டனர்.

     “பிடித்துக் கொள்ளுங்கள் இவனை!” என்று சொன்ன பின்னவனை அதே சாட்டையால் வளைத்துக் கொண்ட இளைஞன், “யாரேனும் என் அருகில் வருவீர்களானால் மண்ணுக்கு இரையாகிப் போய்விடுவீர்கள்!” என்று திரும்பிச் சொல்லிவிட்டு அவனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

     அப்போது இருவருக்கும் நடுவே புகுந்த முன்னவன். “என்னைக் கொன்றுவிட்டுப் பிறகு உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்!” என்றான்.

     “நீ சற்றே விலகி நில்! இவன் நம் ஆளல்ல; இத்தனை நாள் நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்த எதிரி!” என்று வெஞ்சினத்தோடு சொன்னான் பின்னவன்.

     “இருக்கலாம். அப்படியே இருந்தால் கூட இவனை அழிக்கும் சக்தியை நாம் பெறவில்லை. இவனைப் பாதுகாப்புச் சிறையில் அடைத்து வைத்து, இதே வேலைக்கு நம்மை நாடி வரும் நம் தலைவரிடம் விவரம் சொல்லி ஒப்படைத்து விடுவதுதான் நல்லது!” முன்னவனின் அறிவுரை இது.

     இப்போது பின்னவனின் மனம் தலைகீழாக மாறியது. முன்னவன் கருத்தை ஏற்றுக் கொண்டவன் போல், “அப்படியானால் நீயே இவனைக் கைது செய்து வை!” என்று கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

     “நீங்கள் போகலாம்!” என்று எதிரில் நின்றிருந்த வீரர் முகாமுக்கு விடையிறுத்து அனுப்பிவிட்டுத் தன் முன்னே நின்றிருக்கும் இளைஞனை நேர் செய்து பார்த்தான்.

     அவனும் அவனைப் பார்த்துவிட்டு, “ஊம்... நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்! கடமை தவறிய குற்றம் உங்களை வந்து சேர வேண்டாம்!” என்று கனிவோடு விண்ணப்பித்தான்.

     அவன் சொன்னதைக் கேட்டுப் பூரித்துப் போன முன்னவன் சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் அவனது காதருகில் சென்று முணுமுணுத்தான்.

     அதைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி பெற்ற இளைஞன், “ஆ...! அப்படியா! இப்போது நீங்கள் சொல்வது உண்மைதானா?” என்று கனத்த குரலில் வியப்போடு கேட்கவே அவனது வாயைப் பொத்திய முன்னவன், “சூ! சத்தம் போடாதே! நீ பழையபடி இரு! நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றான்.

     இளைஞனின் விழிகளில் இன்ப ரேகை நெளிந்தது. “வருகிறேன், ஐயா!” என்று சொல்லிய வண்ணம் அவனது கைகளைப் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டான்.

     அவனும் வாஞ்சையுடன் தோள்களைத் தடவி அனுப்பிவிட்டு அவனையே உற்றுப் பார்க்கலானான். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த அன்னவனைக் குடிலின் முன்வாயிலில் நின்று அங்கயற்கண்ணி இனம் புரியாத மனச்சுமையோடு கவனித்துக் கொண்டிருக்கலானாள்.