![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
நாக நந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 11. செம்பியன் கோட்டம் மாமன்னர் சென்னியின் சிந்தனை விசாலமானது. கவிஞர் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் தனிமையிலும் அரச மாதேவியுடனும், அமைச்சர் முதல் அதிகாரிகளுடனும் பேசியும் வாதம் புரிந்தும் ஒருவித முடிவுக்கு வந்த மறுதினமே காவல் வீரர்களைக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு அனுப்பி வைத்தார். உபதலைவன் அங்கதனை வரவழைத்து உலைக் களங்களைப் பெருக்கும்படியும், ஆயுதச்சாலைகளில் துரும்பேறிப் போயிருக்கும் போர்க் கருவிகளையெல்லாம் புதுப்பிக்கும்படியும் உத்தரவிட்டு அனுப்பினார். நகரக் காவல் தலைவனான எயிற்றியனை அழைத்துப் புதிய பொறுப்புகளை ஒப்படைத்தார். இவன் வேறு யாருமல்ல; சங்கமத் துறையிலே முக்கண்ணனைக் கண்டு மிரட்டியவன்! இவ்விதமாகப் பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உறையூர் தலைநகர மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். அல்லும் பகலும் கவசமணிந்த வீரர்கள் நகரைச் சுற்றி வருவதையும், ஆங்காங்கு உலைக்களங்கள் திறக்கப்பட்டுக் களக்கருவிகள் தயாராவதையும் காணக் காண பொதுமக்களிடம் மகிழ்ச்சியும் மருட்சியும் இரட்டைக் குழந்தைகளாக ஜனித்தன. இதுவரையில் இளஞ்சேட்சென்னி மாறுவேடம் புனைந்து நகருக்குள் போனதில்லை. ஆனால் கவிஞரின் வருகைக்குப் பிறகு மூன்று முறை வெளியில் சென்று வந்துவிட்டார். ஒரு தடவை அழுந்தூர் மாளிகைக்கும், இரண்டு முறை காவிரிப்பூம்பட்டினத்துக்கும் சென்று வந்தார். களப்பாட்டு கேட்பதற்கும் இரத்தக் குளம் காண்பதற்கும் அவர் உள்ளத்தில் உதித்து வழியும் உற்சாக நதிகளை அவரைத் தவிர வேறு யாரால் அறிந்து கொள்ள முடியும்? முகத்திலே கோபக்குறி; அகத்திலே விரைவில் களம் காணப் போகிறோமென்ற குளிர்ச்சி... விழிகளிலே நெருப்பு; பரந்த மார்பிலே வீரப் பெருமிதம்; நடையிலே புலிப்பாய்ச்சல்... இப்படி, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மன்னரைக் கண்ட அத்தனை பேரும் வெவ்வேறு விதமாக அவரைப் பற்றி எண்ணினர். இதற்குக் காரணம் நகர மக்களுக்குத் தம்முடைய ஏற்பாட்டுக்குரிய அடிப்படை நோக்கத்தை விவரித்துச் சொல்லாததுதான்! “அடிப்படைக் காரணத்தை யாருக்கும் யாரும் சொல்லக் கூடாது!” என்ற மன்னரின் கடுமையான கட்டளையை யாரால் புறக்கணித்து நடந்து கொள்ள முடியும்? இரவும் பகலுமாக எரிந்தது எரிந்தபடி இருக்கும் உலைக் கூடங்களையும், அங்கிருந்து எழுகின்ற வேல்வடிக்கும் சத்தத்தையும் கண்டு கேட்ட நகரவாசிகள், ஏககாலத்தில் ஒரு யூகத்துக்கு வந்தார்கள். “நெருக்கத்தில் களம் நோக்கி நம் மன்னர் புறப்பட இருக்கிறார்” என்ற யூகம்தான் அது. அதைக்கூட அவர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள அச்சப்பட்டார்கள். சந்தேகப்பட்டவரை சிறையிலடைத்துக் காவலில் வைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கும் அவர்களால் நகர வீதிகளில் - பொது மன்றங்களில் - அங்காடிகளில் நின்று வாய்விட்டுப் பேசும் துணிச்சல் எப்படி வரும்? சூரியக் கதிர்கள் எங்கும் வியாபித்திருந்தன. அது மாசி மாதமாகையால் வெயிலின் கொடுமை அதிகமாகவே இருந்தது. வெப்பக் காற்றின் கொடூரம் வேறு. நெற்றி வியர்வையை நிலத்தில் வழித்துவிட்ட வண்ணம் நடமாடிக் கொண்டிருந்த நகர மாந்தருக்கு மத்தியிலே திடீரென்று ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. ஆம்; காவல் வீரர்கள் புடைசூழ அழுந்தூர் மாளிகையிலிருந்து சோழர் படை உபதலைவன் அங்கதன் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் புலி உருவம் பொறிக்கப்பட்ட சிவிகையில் நந்தினி வந்து கொண்டிருந்தாள். இப்போது அவள் மனத்தில் ஏகப்பட்ட திகில் மூட்டம். இனங்கண்டு கொள்ள முடியாத கலவரம். சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியைக் காணப் போகிறோமென்ற மகிழ்ச்சி எந்த அளவுக்கு அவள் உள்ளத்தில் இருந்ததோ, அதே அளவுக்கு ஒருவித கிலியும் குடிகொண்டிருந்தது. “தங்களை மாமன்னர் அழைத்து வரும்படியாக உத்தரவிட்டுள்ளார்!” என்று சொல்லித்தான் அங்கதன் அழைத்தான். அப்போது அவன் வேறொன்றையும் தெரிவிக்கவில்லை. என்றாலும் அவள் மனத்தை அச்சம் வாட்டி எடுக்கவே செய்தது. அடிக்கொரு தடவை திரைச்சீலையை சற்றே விலக்கி வழியைப் பார்த்து வரலானாள்! கொளுத்தும் வெயிலிலும் வறண்டு போகாமல் இருக்கும் நிலத்தையும், கண்ணைப் பறிக்கும் வண்ணம் காட்சியளிக்கும் பச்சைப் பயிர்களையும், மா, பலா, வாழை மரங்களையும் இமைக்காமல் பார்க்கப் பார்க்க அவள் நெஞ்சில் ஒருவித போதை ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் சிவிகைக்கு முன்னே குதிரை மேல் சென்று கொண்டிருக்கும் அங்கதனை அவளது அழகிய விழிகள் காணத் தப்பவில்லை. அவனது கடமை உணர்ச்சியை எண்ணிப் பெரிதும் வியந்தாள். அதே வேளையில் இறைவனைப் பழித்தாள். “உனக்குப் படைக்கவே தெரியவில்லையே! நல்லுணர்வு கொண்டவர்களை அசிங்கமாகவும், கொடியவர்களை அழகாகவும் படைத்து, நாட்டில் உலவவிட்டிருக்கும் உன்னை நான் நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், ‘இன்று முதல் நீ உன் படைப்புத் தொழிலை விட்டுவிடு!’ என்றுதான் சொல்வேன். இதற்காக நீ எனக்கு எப்படிப்பட்ட தண்டனையை வழங்கினாலும் தாராளமாக ஏற்றுக் கொண்டுவிடுவேன்” என்ற முணுமுணுப்போடு அவனது புறத்தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டாள். ஆம்; அவள் வருந்தும் நிலையில்தான் அங்கதனின் உடலமைப்பு இருந்தது. ஒல்லியான தேகமும், நீட்டு முகமும், தடித்த உதடுகளும், இடுக்குப் பற்களும், குட்டையான கைகளும் கொண்ட அவன் பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்தான். இப்படிப் படைத்துவிட்டதற்காகத்தான் கள்ளங்கபடமில்லாத உள்ளத்தையும், விசாலமான புத்தியையும் அவனுக்கு இறைவன் தாராளமாகக் கொடுத்துவிட்டிருக்கிறானோ? இவ்விதமாகவும் அவனை நினைத்துப் பார்க்கத் தப்பவில்லை. ஆனால் அவன் மனத்தில் எந்தவிதமான எண்ணமும் உண்டாகவில்லை. சுடும் வெய்யிலால் முகமெங்கும் வியர்த்துக் கொட்ட அவன் கோட்டையின் வாயிலுக்குள் நுழைந்தான். உபதலைவனையும் சிவிகையையும் கண்டவர்கள் மனத்தில் ஏதேதோ சிந்தனைகள்! அங்கதனைக் கண்டதும் கையெடுத்து வணங்கிய அனைவருமே, சிவிகைக்குள் இருப்பவர் யார் என்பது தெரியாததால் தூக்கிய கைகளைத் தொங்கப் போட்டுப் போகும் சிவிகையை வெறித்துப் பார்த்தார்கள். அந்தச் சிவிகைக்குள் நந்தர் வமிசத்து மங்கை அமர்ந்திருப்பதை அவர்களால் எப்படிக் கண்டு கொள்ள முடியும்? இருந்தாற் போலிருந்து சடசடவென மழைத் தூறல்கள் விழுந்தன. இலேசாக மின்னல் காற்றோடுங்கூடிய இடி முழக்கம் வேறு. வெய்யில் காய்கிறது; மழையும் பெய்கிறது. ஆகாயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திட்டு திட்டாகச் சிறு மேகங்கள்! சூரியனை மறைக்காத அந்த மேக முகடுகளின் தூறல் விளையாட்டு! இந்தத் தூறல் அங்கதனுக்கும் சிவிகை தூக்கிகளுக்கும் இதமாகவே தெரிந்தது! சூட்டைக் குறைத்து, குளிர்ச்சியைத் தேடித் தந்த மழையை, நகரில் போவோர் வருவோரில் ஒருவர், “இதுதான் மாசிக் காலத்து மஞ்சள் மழை!” என்று சொல்லிப் போவது உபதலைவனின் காதில் தெளிவாகவே விழுந்தது. யாராவது எப்படியாவது சொல்லிப் போகட்டும். நெருப்பை அணைக்கும் சக்தி நீருக்கு நிரம்ப இருக்கிறது என்பதை நீக்கமறத் தெரிந்து கொண்ட திருப்தி அவனது உடலெங்கும் அப்போது வியாபித்திருந்தது. என்னவோ தெரியவில்லை. யாரோ சொல்லி வைத்தது போல் அரண்மனை வாயிலை நெருங்குவதற்குள் மழைத்தூறல் நின்றுவிட்டது. அவனது உடம்பின் மேல் இருந்த ஈரக்கசிவும் அவ்வளவு சீக்கிரத்தில் உலர்ந்துவிட்டது. அங்கதன் குதிரையிலிருந்து தொபக்கென்று குதித்தான். சிவிகை தூக்கி வந்தவர்கள், தாம் சுமந்து வந்த சிவிகையை மெதுவாகக் கீழே இறக்கி வைத்தனர். அதிலிருந்து திரைச் சீலையை ஒரு கையால் விலக்கி, மறு கையால் சிவிகையின் மேல் விதானத்தைத் தாங்கிப் பிடித்த வண்ணம் வெளியில் வந்து நின்றாள். கதிரொளி படர்ந்த சீக்கிரத்தில் அவள் முகம் கோவைப் பழமாகிவிட்டது. பொன்போல் ஜொலித்த உடம்பு, அதில் பதிக்கப்பட்ட மாணிக்கம் போல் சிவந்துவிட்டதைக் கண்ட அங்கதன் மனத்தால் வருந்தியது மட்டுமல்ல, “இந்தக் கொடூரமான வெய்யிலில் தங்களை அழைத்து வந்ததற்குப் பொறுத்தருளுங்கள்!” என்று மிக்க பணிவோடு கேட்டுக் கொள்ளவும் செய்தான். அதற்கு அவள், “அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நான் நிழலில், எந்தவித சிரமமும் தெரியாதவாறு வந்தவள். தாங்கள் அப்படியா? தங்களின் முகத்திலிருந்து வழிந்த வியர்வையைப் பல தடவை பார்த்து விட்டேன். அத்துணை சிரமத்தை என் பொருட்டுத் தாங்கிய தங்களிடம் நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்ற வண்ணம் நிமிர்ந்தவள் அரண்மனையின் முகப்பு வாயிலைக் கண்டதும் கதிகலங்கிப் போனாள். வாயைப் பிளந்து கொண்டு பாயவரும் புலியைப் போல் செதுக்கப்பட்டிருக்கும் வாயில் தோற்றத்தைக் கண்டு பதறிப் போன நந்தினி, தன் கால்களைச் சற்றே பின்னுக்கு இழுத்து வைத்தபடி உற்றுக் கவனித்தாள். பிறகுதான் பொய்த் தோற்றம் என்பது அவளுக்குப் புலப்பட்டது. அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. நந்தினியின் திடீர் முகமாற்றத்துக்குரிய காரணத்தை அங்கதன் முதலில் புரிந்து கொள்ளவில்லை. அவள் தலைவாயிலை பயத்துடன் பார்ப்பதைக் கவனித்த பிறகுதான் அவனுக்கு உண்மை நிலை புரிய வந்தது. களுக்கென்று வந்த சிரிப்பை அடக்கிய வண்ணம், “வாருங்கள்” என்றபடி திரும்பி நடந்தான். அவள் தனக்குள் ஏற்பட்ட அச்சத்தால் முகமெங்கும் உண்டான வியர்வைக் கொப்புளங்களைச் செங்காந்தள் விரல்களால் வழித்து நிலத்தில் எறிந்தவாறு அவனைப் பின் தொடர்ந்தாள். அரண்மனைக் காவல் வீரர்கள் அங்கதனைக் கண்டு வணங்கியவாறு வழிவிட்டு ஒதுங்கினர். அவள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் வேல் கம்போடு நின்றிருந்த அத்தனை பேரும் அவனைப் பார்த்த விழிகளாலேயே அவளைப் பார்த்தனர். ஒருவருக்கொருவர் கண் ஜாடையின் மூலமாக இரகசியம் பேசிக் கொண்டனர். ‘இவள் யாரென்றே தெரியவில்லையே? இவளது ஆடை அணிகலன்களைப் பார்த்தால் வேறு தேசத்தைச் சேர்ந்தவள் போல் தெரிகிறாளே! இவள் எப்படி இங்கு வந்தாள்? உருவத்தைப் பார்த்தால் பாம்பின் தலையை ஞாபகத்துக்குக் கொண்டு வருவது போல் இருக்கிறதே!’ உயிரில்லாத இந்த ஊமைச் சொற்களை அவள் கேட்கவில்லை. முகப்பு வாயிலின் தோற்றமே இதுவென்றால் முடி மன்னரின் குணம் எப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டு போகிறவர்களுக்கு முன்னே அவர்களின் நினைப்புக் கீறல்கள் உதிரிப் பூக்கள்தானே! அரண்மனை முன்வாயிலைக் கடந்து உள்ளே போனதும் அங்கிருக்கும் பளிங்கு மண்டபத்தைச் சுற்றிலும் கவசம் தாங்கிய வீரர்கள் விறைப்புடன் நின்றிருப்பதைக் கண்ட அவள் மனத்தில் மௌரிய முரடர்களே பளிச்சிட்டனர். ‘இங்கு அவர்கள் வந்திருக்கிறார்களோ! அதனால்தான் அரசர் நம்மை அழைத்து வருமாறு உபதலைவனை அனுப்பி வைத்திருந்தாரோ?’ என்ற அவள் நினைப்பு சடக்கென்று சரிந்து விழுந்து நொறுங்கியது. உள்ளுக்குள் ஒருவிதப் பெருமிதச் சிரிப்பொலி! அவள் யாரைக் கண்டு விபரீதமான கற்பனைக்கு இடம் கொடுத்தாளோ, அவர்கள் அத்தனை பேரும் தலைதாழ்த்தி உபதலைவனை வணங்கியதைக் கண்டு தேறுதல் பெற்றபடி அவனைத் தொடர்ந்தாள். அப்போது கண்ணுக்குத் தெரியும் தூரத்திலல்ல, காதுக்குக் கேட்கும் அளவில் யாரோ யாருடனோ பேசிக் கொண்டிருப்பது விழுந்தது. “கவிஞர் பெருமானே! வெற்றிக் கொடி பறக்க - வீரப்புகழ் சிறக்க - நெற்றிக்குத் திலகமிட்டுக் கொள்ளும் நாளை விரைவாக, அதிவிரைவாக நான் எதிர்பார்க்கிறேன். துடிப்பேறி நிற்கும் என் தோள்களின் அசைவிலேயே மெளரியர் தூண்கள் பொடிப் பொடியாகிவிடும். வேலை வெல்லும் சக்தி என் விழிகளுக்கு உண்டு. திதியனின் வருகைக்காக இவ்வளவு பொறுமையாக இருக்கிறேன். இல்லையென்றால் பிந்துசாரனையும் அவனை நம்பி வரும் பட்டாளத்தையும் ஒரு நொடிக்குள் இரைதேடி அலையும் கழுகுக்கு விருந்தாக்கும் முயற்சியில் இறங்கி விட்டிருப்பேன்” எனப் புலியெனச் சீறினார் புவியாள் மன்னர். “அறிவேன் நான்” என்று சொல்லிக் கொண்டே திரும்பிய பெருங்குன்றூர்கக் கிழார், “உபதலைவரை இன்னமும் காணோமே!” என்றார். வெஞ்சினம் தணிந்த வேந்தன், “வரவேண்டாமா? அதுவும் அழுந்தூர் மாளிகையிலிருந்து வரவேண்டுமே!” என்று கவிஞருக்கு பதிலிறுத்தார். “அதுவும் வாஸ்தவம்தான்!” என்று கவிஞர் சொல்லி வாய் மூடுவதற்குள் அங்கதன் அங்கு வந்தான். அவனுக்குப் பின்னே பதுமை ரூபத்தில் வந்து நின்ற நந்தினி, தன் இரு கரங்களையும் குவித்து கவிஞரையும் மன்னரையும் பார்த்து வணங்கினாள். அங்கதனைப் பார்த்த விழிகளாலேயே நந்தினியைக் கண்ட இளஞ்சேட்சென்னி, “பெருமானே! தாங்கள் குறிப்பிட்டது...” என்று அரைகுறையோடு நிறுத்திவிட்டுக் கவிஞரைக் கண்டார். “ஆம் அரசே! இவள்தான்... நந்தினி என்பது பெயர். தனநந்தனின் காதற்கிழத்தியின் கடைசி மகள்!” கவிஞரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே நந்தினியின் உருவத்தை எடை போட்ட சோழச் சக்கரவர்த்தி, “அப்படியா! உண்மையாகவா?” எனத் திருப்பிக் கேட்டார். அங்கதன் விழித்தான். நந்தினியின் இரு விழிகள் மேலேறிக் கீழிறங்கின. இப்போது அவள் சொன்னாள்: “மாமன்னரே! உண்மைதான்... அங்கிருந்து கொண்டு கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். எப்படியோ என்னை அந்த எதிரிகளிடமிருந்து நம்முடைய கவிஞர் மீட்டுக் கொண்டு வந்துவிட்டார். தாங்கள் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்க வேண்டுகிறேன்” என்று அடக்கமுடன் தெரிவித்துக் கொண்டாள். அதற்கு அவர், “அம்மையே! அடைக்கலம் கேட்டு வந்த புறாவிற்காகத் தன் தசையையே அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் வழித் தோன்றல் நான். அஞ்சத் தேவையில்லை” என்றபடி விழிகளைப் புரட்டியவர், “உபதலைவரே! இந்தப் பெண்மணியை நம்முடைய அடைக்கலக் கோட்டத்துக்கு அழைத்துச் செல். எதற்கும் பலமான பாதுகாப்பு இருக்கட்டும்!” என்றார். “அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லித் திரும்பிய அங்கதன், அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து பெயர்ந்தான். அப்போது ஏதோ சொல்ல வாயெடுத்த நந்தினி சடக்கென்று வாய்மூடிய வண்ணம் திரும்பினாள். கவிஞர் தடுமாறிக் கொண்டிருந்தார். நந்தினியை இளஞ்சேட்சென்னி முழுமையாக நம்பவில்லையென்பதை அவரது வார்த்தையிலிருந்தும் முகமாற்றத்திலிருந்தும் புரிந்து கொண்ட கவிஞர், “மன்னா! ஒரு சிறு சந்தேகம்!” என்று தயங்கிய குரலில் கேட்டார். “பெருமானே! சொல்லுங்கள்... தங்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.” “நந்தினியின் மீது தங்களுக்கு பூரண திருப்தி உண்டாகவில்லை என்று கருதுகிறேன். சரிதானா?” இப்போது இளஞ்சேட்சென்னி தயங்கியவாறு கேட்டார்: “பெரும! ஏன் அப்படி நினைத்துவிட்டீர்கள்?” “மன்னா! தங்களின் நடவடிக்கை அப்படி எண்ணும்படியாகச் செய்துவிட்டது. வந்த சீக்கிரத்தில் அவளை அனுப்பி வைத்துவிட்ட ஒன்றே என் சந்தேகத்துக்குப் போதிய சான்றாகாதா?” “அடைக்கலப்படுத்துவது அரசர் கடமையல்லவா?” “மறுக்கவில்லை, மன்னா! அதற்காக அவ்வளவு அவசரமாக அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லையே!” கவிஞர் மனத்தில் இருக்கும் கொதிப்பையும் குமுறலையும் சூசகமாகப் புரிந்து கொண்ட சென்னி, தமக்குள் இருக்கும் கருத்தை வெளிப்படுத்தாமல், “பெருமானே! தங்களின் மூலமாக நந்தினியைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டிருக்கும் போது அவளிடம் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? அதனாலேயே உடனடியாக அனுப்பி வைத்தேன். இதற்காகத் தாங்கள் இவ்வளவு வருத்தப்படுவீர்களென்று தெரிந்திருந்தால் இன்றைய பொழுதெல்லாம் கூட அவளை இங்கு நிறுத்தி விசாரித்துக் கொண்டு இருந்திருப்பேன். என்னையும் அறியாமல் ஏதேனும் தவறு செய்துவிட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். முறை செய்து காக்க வேண்டிய கடமையின்படி தான், இப்போது நடந்து கொண்டிருக்கிறேன்” என்று கனிவுடன் தெரிவித்துக் கொண்டார். கவிஞரின் உள்ளத்தில் சந்தேகத் தீ வலுத்தது. என்றாலும் அதைப் பற்றி மேலும் தொடர தாம் தயாராய் இல்லாதது போல் விஷயத்தை மாற்றிப் பேசலானார். சென்னி மறுத்து ஒன்றும் கேட்கவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் தான் தங்கியிருந்த போது நடந்த சம்பவங்களைப் பற்றி அவர் விரிவாகச் சொல்வதை அக்கறைத் தன்மையுடன் கேட்டு இரசித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த சோழ நாட்டு ஒற்றனையும், அவன் தன் கையகப்படுத்தி இருக்கும் வேற்று மனிதனையும் மாறி மாறிப் பார்த்த நிலையில், “வரவேண்டும் ஒற்றரே! யார் இவன்?” என்றபடி தடித்த மீசையைத் திருகிவிட்டார். பெருங்குன்றூர்கக் கிழாரும் அவர்களைப் பார்க்கத் தப்பவில்லை. தான் இழுத்து வந்தவன் யார் என்பதைப் பற்றியும், சேந்தன் கொற்றனாருக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றியும், அவர் சொல்லச் சொன்னதையும் முறையாகக் கூறிவிட்டு, சென்னியின் அடுத்த உத்தரவை எதிர்பார்த்து நின்றான். வெறித்தனமாகச் சிரித்த இளஞ்சேட்சென்னி, “அருந்தமிழ்ப் புலவரின் ஆவிக்கு உலை வைத்த உதிரிப் பூவா?” என்று கடுஞ்சினத்தோடு கேட்டுக் கொண்டே எதிரில் நின்றிருந்த காவலாளியை அழைத்து, “இவனை இழுத்துச் சென்று பாதாளச் சிறையில் அடையுங்கள். நாளைய அந்திம நேரத்துக்குள் இவனது தலையை அறுத்து ஆகாயப் பந்தலில் இளநீர்க் காய்க்குப் பதிலாகத் தொங்கவிடுங்கள். ஊம்...” எனக் கூறிச் சீறிய மறுகணமே காவலர் அவனை இழுத்துச் சென்றனர். “ஒற்றரே! வேறு ஏதேனும் விசேஷம் உண்டா?” என்றார் சென்னி. அந்தக் குரலில் கொடூரம் தாண்டவமாடியது. அவன் தயங்கினான். அவனது தயக்கத்துக்குரிய காரணத்தை வேறு விதமாகப் புரிந்து கொண்ட பெருங் குன்றூர்க் கிழார் அவனைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னார்: “ஒற்றரே! நான் இருப்பது தடையாக இருந்தால் சொல்லுங்கள். இப்போதே இங்கிருந்து போய்விடுகிறேன்!” என்றதுமே, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என மறுத்துச் சொன்ன ஒற்றன், தான் நேரில் கண்டதையும் கேட்டதையும் வெளிப்படையாகச் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டுப் பதறிப் போன புலவர், “அப்படியா! அழிவுக்கான வேலையை ஆரம்பித்து விட்டார்களா?” எனப் பரபரப்புடன் கேட்டார். “ஆம் ஐயா! மலைகளைப் பிளக்கிறார்கள்; பள்ளங்களை மேடுகளாக்குகிறார்கள்; கரடுமுரடாய் இருக்கும் பாதைகளைச் செப்பனிடுகிறார்கள்...” என்று சரளமாகச் சொல்லிக் கொண்டிருந்த அவனை இடைமறித்துக் கேட்டார் சென்னி: “ஒற்றரே! நம்முடைய அவைக்களப் புலவர் மாமூலனாரைச் சந்தித்தீரா?” “இல்லை!” “என்ன இல்லையா?” “ஆம் மன்னா! அங்கிருந்து அவர் புறப்பட்டு வந்துவிட்டதாகச் செய்தி.” இதைக் கேட்டு அதிர்ச்சியுற்றது போல் நடித்த சென்னி, “என்ன, என்ன! மாமூலனார் புறப்பட்டு வந்துவிட்டாரா? அப்படியென்றால் பாடலிபுரத்தில் அவர் இல்லையா?” என்று திரும்பக் கேட்டார். அவன் மெதுவாகத் தலையசைத்து, ‘இல்லை’ என்பதைச் சொல்லாமல் சொன்னான். இளஞ்சேட்சென்னியைப் போல் இயற்றமிழ்க் கவிஞரும் இனம்புரியாத கவலைக்கு இலக்கானார். ஒரே நிசப்தம்! |